emv11b
emv11b
எனை மீட்க வருவாயா! – 11B
ஈஸ்வரி அறியாமலேயே, அவனது மிரட்டலில், சிறிது சிறிதாய் மாறிப் போனாள். அடுத்தடுத்து அதே செயலைக் கொண்டு, அவனது காதலை ஏற்கச் செய்ததோடு, அவளிடம் நெருங்கியிருந்தான் முரளி.
ஈஸ்வரிக்குள்ளும், முரளியின் அடாவடித்தனமான ஆதிக்கம், அன்பாய் பிரவாகமெடுத்திருந்தது.
‘முரட்டுப் பயலா இருக்கான்’ என முரளியின் எண்ணங்களினூடே தன்னை மூழ்கடித்துக் கொண்டவள், தனது கொள்கைகள் அனைத்தையும் விட்டு, வெகுதூரம் போயிருந்தாள்.
விசயம் வீடு வரை தெரியவே, பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவளுக்கு உடனே திருமணம் என பேசி முடித்திருந்தனர்.
திருமணத்திற்கு முந்தைய நாள், தனது வீட்டிலிருந்து கிளம்பி, முரளியிடம் தஞ்சம் புக, உடனே கோவிலில் வைத்து, நண்பர்கள் துணையோடு தாலி கட்டிவிட்டான்.
தாலி கட்டியதோடு, தனது வீட்டிற்கு ஈஸ்வரியை அழைத்துச் செல்ல, “கண்ட பிச்சைக்காரிக்கெல்லாம் இந்த வீட்ல இடங் கிடையாது” என வாசலோடு மகனையும் சேர்த்து விரட்டியிருந்தார் முரளியின் தந்தை.
அதுவரை பணத்தில் புரண்டவன், கையிலிருந்த தொகையில், தங்களுக்கு வீடு மட்டுமே பார்த்துக் குடியேற முடிந்தது.
அதன்பின் வேலை செய்யும் எண்ணமே இல்லாமல் திரிந்தவனுக்கு, அவனுடையே பணத்திற்காகவே உடன் இருந்த நண்பர்கள் ஓரளவு இயன்ற உதவி செய்ய, அதில் திருப்தியில்லாமல் இருந்தான் முரளி.
வீட்டின் செலவிற்காக எத்தனை நாள்கள் பிறரை எதிர்பார்த்திருக்க இயலும். ஈஸ்வரி, “நீ வேலைக்குப் போயி சம்பாத்தியம் பண்ற வழியப் பாரு. இல்லைனா, நான் எதாவது வேலைக்குப் போறேன்”
“என்ன வேலைக்குடீ போவ”
“ம்ஹ்ம்… கலெக்டர் வேல காலியா இருக்காம். அங்கதான் போகப் போறேன்”
இப்படி நையாண்டித்தனமான பேச்சுகள் நடந்ததே அன்றி, முரளி வேலைக்குச் செல்லத் தயாராக இல்லை.
ஈஸ்வரிதான், வேலை கேட்டு அலைந்தாள். பத்தாம் வகுப்பை நிறைவு செய்யாதவளை, எடுபிடி வேலைக்குத்தான் கேட்டனர். அத்தோடு சரியென்று செல்லத் துவங்கியிருந்தாள்.
ஊரைச் சுற்றி வந்தவனுக்கு, முன்பைப்போல செலவளிக்க முடியாமல், ஈஸ்வரியை கொடுமை செய்யத் துவங்கினான் முரளி.
இலட்சாதிபதியாக வாழ்ந்த குடும்பம். முரளி பிறந்த பிறகே, அவர்கள் குடும்பம் சட்டென கோடீஸ்வர குடும்பமாக மாறியிருந்தது.
தற்போது முரளி தனிக்குடித்தனம் துவங்கியிருக்க, அதேநேரம், அவனது தந்தையின் மேற்பார்வையில் நடந்த அனைத்து தொழில்களிலும் தொடர்சரிவு ஏற்பட்டது.
மூன்று மாதங்கள் செல்ல, சமாளிக்க முடியாமல் இழப்புகள் தொடர்ந்தது. அதைக் கண்ட முரளியின் தந்தை, முரளியையும், மருமகளையும் வீட்டோடு அழைத்துக் கொள்ள முன்வந்தார்.
ஈஸ்வரி, முரளி இருவரும் குடியிருந்த வீட்டிலேயே வந்து அழைத்த பெரியவரை, மறுக்க முடியாமல் ஈஸ்வரியும் கிளம்பியிருந்தாள்.
வந்த மருமகள்கள் அனைவரும் வசதியான வீட்டிலிருந்து வந்தவர்கள். ஆகையினால் யாரும் ஈஸ்வரியை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நாத்தானார்கள் மூவர். அதில் ஒருவருக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது. இருவர் இன்னும் வீட்டில் இருந்தனர்.
நாத்தனார்கள் இருவரும் இணைந்து, அவளின் மாமியாரைக் காட்டிலும் ஈஸ்வரியைக் கொடுமை செய்தனர்.
முரளி என்னதான் ஈஸ்வரியின் மீது பிரியமாய் நடந்து கொண்டாலும், தங்கைகள் மீதும், தாயின் மீதும் அளவற்ற அன்பினனாய் இருந்தான்.
அதைக்காட்டிலும், ஈஸ்வரி தன்னை செருப்பால் அடித்ததை சொல்லிக் காட்டி, “ஜான்சி, நீயெல்லாம் பேருலதான் ஜான்சி. நம்ம ஆளு.. எப்டினு நினைக்கிற. ஒரு லவ் லெட்டருக்கே.. பெரிய அலும்புனா பாத்துக்கோவேன். என்ன… அவ செருப்பால ரெண்டு கன்னத்துலயும் வீசிப்புட்டா… வீசி… எம்புட்டு வீரம்னு இப்பத் தெரியுதா? ஆனா அந்தத் திமிரெல்லாம் இப்பக் காணாமப் போயிருச்சே” என தனது தங்கையிடம் கூறி வெடிச் சிரிப்பு சிரித்தான் முரளி.
“அப்டியே வாங்கிட்டா வந்த? நீயெல்லாம் என் அண்ணன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு. அடச்சீ. நீயெல்லாம் என்ன மனுசன்” என தனது தமையனைத் திட்டிவிட்டு, அதற்கான தண்டனையை தானே குடுக்கத் துவங்கியிருந்தாள் ஜான்சி.
அதனால் துணிச்சலாய் கொடுமைகள்.. தொடர்ந்தது.
உணவிருந்தும், பசியின்போது நேரத்திற்கு உண்ண முடியாத கொடுமை. ஆடைகள், ஆபரணங்களுக்கு குறைவின்றி இருந்தாலும், அந்த வீட்டில் ஏழையாக, சம்பளம் இல்லாத வேலைக்காரியாக, நல்ல ஆடையின்றி, குண்டு மணியளவு தங்கமும் இன்றி இருந்தாள் ஈஸ்வரி.
அதனைக் கண்டு வெகுண்ட அவளின் மாமனார், அவளுக்கு வேண்டிய அணிமணிகள், ஆடைகளை வாங்க ஏற்பாடு செய்திட, அதைப் பொறுக்காத நாத்தனார்கள் முன்பைக் காட்டிலும், கொடுமை செய்தனர்.
ஆண்கள் எப்போதும் வீட்டிலிருக்கும் வாய்ப்பில்லாத நிலையைப் பயன்படுத்தி, அவளின் மாமனார் இருக்கும்போது மரியாதையாகவும், பிற நேரங்களில் துச்சமாகவும் நடத்தினர்.
இளைய வயதினை உடையவள் என்பதையும் மீறி, அனைத்து வேலைகளையும் அவளின்மேல் திணித்தனர்.
முரளி, குடி, சூதாட்டம் என பணத்தை தண்ணீராய் செலவளித்தான். தந்தை பணம் தந்தாலும், அது போதாத குறைக்கு மனைவியை துன்புறுத்தி வாங்கிச் சென்றான். அதைக் கண்டாலும், கண்டிப்பார் அங்கு யாரும் இல்லை.
ஈஸ்வரியின் துன்பங்களைக் கண்டு பொழுதுபோக்கிய கல்நெஞ்சங்கள் நிறைந்திருந்த வீடு அது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண், பெண் என இருபிள்ளைகள் பிறந்திருந்தனர்.
பிள்ளை பிறந்து இருந்தவளை, தனது காமப்பசி தீர்க்க ஆட்கொண்டவனை தடுக்க இயலாமல் போராடியவள், “அத்தை, உங்க மகனைக் கொஞ்சம் கூப்பிடுங்க. இப்போ என்னால முடியலைத்தை… ஐயோ… ம்மா…. ஏங்க நீங்களாவது கொஞ்சம் என்னைப் புரிஞ்சிக்கங்கங்க… வலி தாங்க முடியலை… சொன்னாக் கேளுங்கங்க… கடவுளே… ம்ஹ்ம்..” என வலியோடு கதறி அழைத்தவளின் குரலைக் கேட்க யாரும் முன்வரவில்லை. அதைத் தடுக்கவோ, முரளியைக் கண்டிக்கவோ எவரும் முன்வரவில்லை.
இரத்த வெள்ளத்தில் சிதைந்து, அயர்ந்து எழ முடியாமல் கிடந்தபடியே அரற்றியவளை, வேலைக்காரி பார்த்துவிட்டு, “ம்மா.. அங்க ரொம்ப நேரமா புள்ளை அழுகுதேனு, ஈஸ்வரி என்ன செய்யுதுனு எட்டிப் பாத்தேன். முனகிக்கிட்டு எழுந்துக்க முடியாம அப்டியே கிடக்கு. கண்ணு திறக்காம, பாக்கவே பயமா இருக்கு. ஒரே ரத்தக்காடா கிடக்கு. ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிட்டா, ரெண்டு உசிரும் போயிரும். அதான் வந்து சொல்றேன்” என அவள் வந்து கூறியபின்பு, மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
வேலைக்காரிகூட மதிக்காத நிலையில் அவ்வீட்டில் வாழ்ந்தாள் ஈஸ்வரி.
வேதனையில் இருந்த ஈஸ்வரியைக் கண்ட மருத்துவரோ, “ஏம்மா உனக்கு அறிவில்லை. பிள்ளை பிறந்து இன்னும் ஒரு வாரங்கூட ஆகலை. மூனாவது நாளே, போட்ட தையலை கிழிச்சிட்டு வந்து நிக்கிறியே. நீயெல்லாம் ஒரு பொம்பிளையா. அப்டியென்ன அவசரம் உனக்கு. ஒரு மாசம் பொறுக்கற அளவுக்குகூட பொறுமை இல்லாம, எப்டித்தான் இப்டியெல்லாம் அலையறீங்களோ!” என வார்த்தைகளால் வதைத்திருந்தார்.
“அடுத்தாவது ஒழுங்கா இருங்க. ஒட்டுப்போட்டுத்தான் தையல் போட்ருக்கு. இனியும் வந்தா… ஒன்னும் செய்ய முடியாது. ஒழுங்கா இருக்கற வழியப் பாரு” என ஆலோசனையையே, அருவருப்பாய் கூறிவிட்டு, ‘என்னதான் சொன்னாலும், இப்டியா அறிவில்லாம இருக்குங்க… இந்த நேரத்திலகூட தள்ளியிருக்க முடியாம, அப்டியென்ன அவசரம். கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாம! ஆம்பிளை கூப்பிட்டா, பொம்பிளைக்கு புத்தி வேணா. அலைஞ்சான் கேசுங்க” என்றபடிச் சென்ற மருத்துவரை கண்ணில் நீர் நிறைந்திருக்க, கலக்கத்தோடு பார்த்திருந்தாள் ஈஸ்வரி.
ஈஸ்வரியுடன் சேர்த்து, குழந்தைகளையும் ஒதுக்கினர் அவ்வீட்டில். பணக்கார வீட்டில், பஞ்சம் இவர்கள் மூவருக்கும் விதிக்கப்பட்டு, விதியோடு நரகத்தில் அல்லோலகப்பட்டனர்.
மாமனாரின் தலையிடல் இருக்கும்போது மட்டுமே ஈஸ்வரிக்கும், அவளது பிள்ளைகளுக்கும் எதாவது கிடைத்தது. மற்ற நேரங்களிலெல்லாம் மிகுந்த சிரமத்தோடு வாழ வேண்டிய நிலை.
மனைவியையோ, குழந்தைகளையோ கவனிக்கும் நிலையில் முரளி இல்லை.
அந்நிலையில், முரளியின் தந்தை வயோதிகம் காரணமாக இறந்துவிட, ஈஸ்வரிக்கும், அவளது குழந்தைகளுக்கும், மேலும் கொடுமைகள் கூடிப்போனது.
வயிற்றில் மூன்றாவது குழந்தை. தனக்காய் சிந்திக்க முடியாத நிலையில் ஆரவாரமான வாழ்வோடு ஒன்றி, தன்னை மறந்து லயித்திருக்கும் கணவன். பசியால் கதறும் குழந்தைகள்.
அங்கு மாடாய் உழைத்தும், பாதி வயிறு நிரம்ப முடியாத அவர்களின் கொடுமைக்கு நடுவில் இருக்க மனமில்லாத ஈஸ்வரி, தனது இரண்டு குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
மாமியாரிடம் கூற, செல்ல வேண்டாம் என ஈஸ்வரியிடம் மறுக்கவோ, அல்லது வேறு எந்த பேச்சும் இன்றி அமைதியாக இருந்தார்.
மகளின் துன்பமறிந்த, ஈஸ்வரியின் தாய், மகளை தன்னோடு அழைத்துச் சென்று, அருகேயே வீடு பார்த்துக் குடியமர்த்தியிருந்தார். தந்தை காலமாகியிருக்கவே, தாயின் அரவணைப்போடு அருகே இருக்க நினைத்தவளை, முரளி விடாமல் தொந்திரவு செய்தான்.
முரளி, ஈஸ்வரியை தங்களது வீட்டிற்கு அழைக்க, அவள் மறுக்க, போராட்டமாய் இருந்தது.
“நீயும் எங்ககூட வந்திரு. உனக்கும் சேத்து, சோறு போடறேன். இனி அங்க என்னை கூப்பிடாத” என எவ்வளவோ கூறியும், அவளை அடித்துத் துன்புறுத்த, வயிற்றிலிருந்த சிசு, இவர்களின் அலைக்கழைப்பில் கலைந்திருந்தது.
பணத்தாசை பிடித்தவர்கள் மத்தியில், வேலையெதுவும் செய்யாமலேயே செலவழித்துக் கொண்டு திரிந்த, முரளியின் செயல், வீட்டிலுள்ள அனைவருக்கும் வெறுப்பைத் தந்தது.
முரளியை ஒடுக்க எண்ணி, ஒரு குழு செயலில் இறங்கியிருந்தது.
இளவயது, அம்சமாக இருந்தவளைக் கண்டு, நண்பர்களே மோகிக்க எண்ண, பணத் தேவையால், அதற்கும் இசைந்ததோடு, நண்பனை அழைத்துக் கொண்டு வந்த முரளி, மனைவியை அவனுக்கு இசையுமாறு வற்புறுத்திட, வீட்டில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து, முரளியின், காலிலேயே வீசிவிட்டாள்.
காலில் உண்டான காயத்தோடு, கத்தியபடியே விரைந்தவனை விட்டுவிட்டு, வந்தவனை நோக்கியவள், கையில் அரிவாளோடு “அவனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவங்கிட்ட நீ காசு குடுத்தா, அவங்கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லு. அவனால முடியலையா, அவனோட ஆத்தா, அண்ணன்னு பெரிய பட்டாளமே பெரிய வீதியில, நாளு நகைக்கடை, ரெண்டு ஜவுளிக்கடை, ஒரு மளிகைக்கடைனு வச்சிருக்காங்க. அங்க போயி கேளு. அதைவிட்டுட்டு என்னோட வாசலுக்கு வந்தா, இனி நாம்பேச மாட்டேன். இந்த அருவாமனையாலயே உங்குலைய அறுத்து படையல் போட்ருவேன். பாத்துக்கோ” என கையை ஓங்கிக் கொண்டு, சிறு தயக்கம இன்றி முன்னேறியவளைக் கண்டு, பயந்து பின்வாங்கியிருந்தான் வந்தவன்.
அதன்பின் அருகே இருந்த மக்களிடமும், விசயத்தைக் கூறி, முரளியோ, அவனது நண்பர்களோ இந்தப் பக்கமாய் வந்தால், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என தாயைக் கொண்டு பேசச் செய்திருந்தாள்.
ஈஸ்வரி குழந்தை முதலே வளர்ந்த இடமல்லவா அது. அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால் யாரும் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன?
முரளியினால் எழுந்த துன்பங்கள், சுனாமிக்குப் பிறகான கடலலையாய் ஓய்ந்திருந்தது.
முரளியின் பழக்க வழக்கங்கள், குடும்ப உறுப்பினர்களே அருவெறுப்பு கொள்ளும் வகையில் இருக்க, கூடிப் பேசி ஆலோசித்தனர்.
ஒரு வருடம்வரை தானிருந்த வீட்டுப் பக்கமே வராத கணவனை, ஈஸ்வரியும் தேடவில்லை. முரளியின் தொந்திரவு இல்லாமல் இருப்பதை எண்ணி, சந்தோசமே அவளுக்கு. அவளை நம்பியிருந்த இரு பச்சிளம் குழந்தைகளை ஆளாக்க வேண்டி, கிடைத்த வேலையைச் செய்தாள்.
குழந்தைகளை, ஆரம்பத்தில் தனது தங்கையிடமும், அவள் திருமணமாகிச் சென்றபின், தம்பி மனைவியிடமும் விட்டுவிட்டு வேலைக்கு செல்வாள்.
ஓரே ஊருக்குள் இருப்பதால், சில ஆண்டுக்குப்பின், முரளி புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டாள். ஆனால் அவனைத் தேடிச் செல்லவோ, அவன் மீது இரக்கம் கொள்ளவோ ஈஸ்வரிக்கு நேரமில்லை. விருப்பமுமில்லை.
அப்படி வளர்த்த பிள்ளைகள் சற்று பெரியவர்கள் ஆன பின்பே, வங்கியில் லோன் மூலம், பூ மொத்த விற்பனையில் இறங்கினாள்.
ஆரம்பத்தில் மிகுந்த சிரமத்திற்கு இடையிலே இருந்தவள், தற்போது தொழில் புரிய, நல்ல விற்பனை. அதனைக் கொண்டு, இடம் வாங்கி இரண்டு மாடி வீடு எழுப்பியிருக்கிறாள். மகனை பொறியியலிலும், மகளை பட்டப் படிப்பிலும் படிக்க வைக்கும் அளவிற்கு முன்னேறியிருக்கிறாள். உறுதுணையாக, தங்கை, தம்பி, தாய் மூவரும் இருக்க இதுவரை நிம்மதியாய் இருந்தாள். தற்போது மகளின் மூலம் புதிய பிரச்சனை வந்ததை எண்ணியவளுக்கு உறக்கம் நெருங்கவே மறுத்தது.
தனக்கு நேர்ந்த கொடுமைகள் நேரக்கூடாது என எண்ணித்தான், நாத்தனார்களே இல்லாத வீடாக மகளுக்குப் பார்த்திருந்தார் ஈஸ்வரி.
இதையெல்லாம் எண்ணியவருக்கு ஒரு நிலையில் மனமில்லை.
…………………………
காலையில் எழுந்து வந்த மகளை நோக்கிய ஈஸ்வரிக்கு மகளின் நிலை, சொல்லாமல் புரியவே செய்தது.
ஆழ்ந்து உறங்காத விழிகளின் இமைகள் சற்றே தடித்திருக்க, ஓய்வில்லாததை முகமும் காட்டியது.
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து, “இனி எக்ஸாமுன்னு சொன்னே. இன்னிக்கும் காலேஜூக்கு போகணுமா?”
“இன்னைக்குத்தான் ஹால்டிக்கெட் கலெக்ட் பண்ணிக்க வரச் சொன்னாங்க”
“இன்னைக்கு போக வேணாம்”
“…ஏம்மா” தயக்கமும், பயமுமாய் கேட்டாள்.
“சொல்றதைக் கேளு”
“ப்ளீஸ்மா… போயி ஹால்டிக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்திரேனே”
“அந்தப் பையனுக்கு சொல்லிட்டியா?”
“இல்லமா”
“வரச் சொல்லுனு சொன்னேனே”
“போனு நீதாம்மா வச்சிருக்க”
எடுத்து வந்து மகளிடம் நீட்ட, அவளின் அறைக்குள் சென்று திவ்யா, கிருபாவோடு பேசிவிட்டு வந்தாள்.
தாயிடம் திறன்பேசியை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவாறே, “என்ன வரானாமா?”
“ம்… வரேன்னு சொன்னாம்மா”
“சரி.. சரி.. வீட்டப் பாத்துக்கோ. நான் மதியத்துக்கு மேல வரேன்”, என்றவர், நேராய் விக்னேஷிடம் சென்றிருந்தார்.
அவனுக்கு திவ்யாவால் சரியான மண்டகப்படி. பேசாமல் அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், ஈஸ்வரி கேட்ட அனைத்திற்கும் பதில் கூறியிருந்தான். உபயம் கயல்.
“நம்ம மீறி திவ்யா எதுவும் செய்யாதுத்தை.. நீ எதுக்கு இவ்ளோ பயப்படற?”
“அப்பிராணி மாதிரி இருந்துகிட்டு, இம்புட்டு செஞ்சிருக்கா. இனியும் செய்ய என்ன இருக்கு?”
“…”
“சரி, அந்தப் பயலோட அப்பா, அவுக அந்தஸ்து எப்டி என்ன, ஏதுன்னு ரெண்டு நாளுல விசாரிச்சு சொல்லு”
தலையை ஆட்டி ஆமோதித்தவன், கல்லூரிக்கு கிளம்பினான்.
……………..
கிருபாவிற்கு, திவ்யா முந்தைய தினம் தனது குறுஞ்செய்திகளுக்கு சரியான பதில் கூறாமலேயே ஆஃப் லைன் சென்றதுமே, எதாவது பிரச்சனையோ என யோசித்திருந்தான்.
அடுத்த நாளே, திவ்யா, “கிருபா.. அம்மாக்கு நம்ம விசயம் தெரிஞ்சிருச்சுடா.. உன்னை வீட்டுக்கு வந்து பாக்கச் சொன்னாங்க”
“..”
“கிருபா”
“ம்ஹ்ம் இருக்கேன். சரி ஈவினிங் பாக்கலாம்” என்ற கிருபாவின் வார்த்தையைக் கேட்டபிறகுதான் திவ்யாவிற்கு நிம்மதியாய் உணர்ந்தாள்.
அதற்குமேல் எதுவும் பேசிக் கொள்ளும் நிலை இருவருக்குமே இல்லை.
………………………………..
மாலையில் திவ்யாவின் வீட்டிற்கு வர எண்ணி, நகரப் பேருந்திற்காக காத்திருந்து ஏறியிருந்தான் கிருபா.
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவனின் சிந்தை முழுக்க, திவ்யாவின் தாயார் தன்னை எதற்காக வரச் சொன்னார் என யோசித்தபடி இருந்தது.
தனதருகே காலியாக இருந்த இருக்கையில் வந்தமர்ந்தவனைக் கண்டு, திரும்பி நோக்க, அமர்ந்தவனைக் கண்டு ஆச்சர்யமாய், “அண்ணே… இங்க எங்க நீங்க. சென்னையில இருந்து எப்போ வந்தீங்க” கிருபா
“அடப்போப்பா. நான் வந்து ஒன்ரை மாசமாச்சு” சலிப்பாய் வந்தது பதில்.
“எப்டிப் போகுது?”
“ஏதோ போகுது”
“என்னண்ணே.. ஒரே சோகமாச் சொல்றீங்க.. அண்ணியெல்லாம் எப்டியிருக்காங்க”
“எல்லாம் வேஸ்டாப் போச்சு”
“என்னண்ணே சொல்றீங்க?” அதிர்ந்துபோய் கேட்டான் கிருபா.
தங்களது காதல் வெற்றிபெற்று, திருமணமாகி, ஆறே மாதங்களில் அது தோல்வியைத் தழுவிய கதையை மிகவும் வருத்தத்தோடு சுருக்கமாய் பகிர்ந்து கொண்டிருந்தான், கணேசன்.
“என்ன.. எங்களால நீங்கள்லாம் பட்ட கஷ்டத்தை நினைக்கும்போதுதான் ரொம்ப வருத்தமாயிருக்கு”
“அதைப்போட்டு மனசக் குழப்பாதீங்கண்ணே. இப்ப என்ன செய்யறீங்க” என தற்போதைய நிலையைப் பற்றி விசாரிக்க, அதைப் பற்றிப் பேசியவாறே, இருவரும் இராமநாதபுரத்தை வந்தடைந்திருந்தனர்.
…………………………
மாலையில் வீட்டிலிருந்த ஈஸ்வரியின் திறன்பேசிக்கு அழைப்பு வர, அதை மகளிடம் எடுத்து நீட்ட, கிருபாவிடமிருந்து அழைப்பு. அழைப்பை ஏற்றவள், வீட்டிற்கு வரும் வழி கூறினாள்.
மகளிடமிருந்து திறன்பேசியை வாங்கிக் கொண்ட ஈஸ்வரி, அருகே குடியிருக்கும் தங்கையிடம் மட்டும் பேசிவிட்டு, தனது கடைக்கு கிளம்பினார்.
டூவீலரை எடுத்த தாயை நோக்கி அவசரமாக முன்னே வந்தவள், “ம்மா… இன்னும் பத்து நிமிசத்துல வந்துருவான்மா!” இந்த நேரத்தில் தாய் கிளம்புகிறாரே என்கிற பதற்றத்தோடு வந்து கூறினாள் திவ்யா.
“இப்ப வந்துருவேன்” என ஈஸ்வரி கிளம்பியிருந்தார்.
சரியான நேரத்தில் கிருபா, திவ்யாவின் வீட்டை அடைந்தானா? ஈஸ்வரி என்ன கூறினார்?
………………………….