emv12b

emv12b

எனை மீட்க வருவாயா! – 12B

 

இரவு உணவு முடிந்தபின், “உனக்கு அந்தப் பையனெல்லாம் ஒத்து வரமாட்டான் திவ்யா.  அதனால, நம்ம காளியம்மா அத்தை மகன் ஜெகனுக்கு, உன்னைக் குடுக்கலாம்னு பேசி முடிவு பண்ணியிருக்கேன்” என்றதுமே தலையை சுழன்று வந்தது திவ்யாவிற்கு.

“யாரு… அந்த ஜெகன் சித்தப்பாவுக்கா…” அசூசையாய் கேட்டாள் திவ்யா.

“அதுக்கென்ன இப்ப?”

“என்னாச்சும்மா உனக்கு, அவங்க எனக்கு சித்தப்பாம்மா”

“அந்தப் பையன் என்ன உங்கப்பன் கூடப் பிறந்தவனா? போடீ லூசு..” அசட்டையாய் கேட்டார்.

“அதுக்காக சித்தப்பானு கூப்பிட்டவங்களைப்போயி, எப்டிம்மா கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

“எல்லாம் பண்ணலாம்” போகிற போக்கில் கூறிவிட்டு அகன்றார் ஈஸ்வரி.

“போம்மா.. என்னால முடியாது”

“ஏன் முடியாது?”

“என்னால கிருபாவைத் தவிர, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” முடிவாய் கூறினாள்.

“முகத்துல ஓங்கி அறைஞ்சேன்னா, என்னாத்துக்கு ஆவேன்னு எனக்கே தெரியாது.  வாயிக்கு வாயி எதித்துப் பேசாம, சொன்னதைக் கேட்டா உனக்கு நல்லது. இல்லைனா உனக்குத்தான் கஷ்டம்”

“ஏம்மா இவ்ளோ கெஞ்சியும், உனக்குப் புரிய மாட்டுது.  நீயெல்லாம் என்னத்தை லவ் பண்ணியோ”

ஓங்கி மகளின் கன்னத்தில் ஒரு அறைவிட, “ஆவ்” என கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீரோடு தாயை ஏறிட்டுப் பார்த்தாள்.

“படிச்சிப் படிச்சு சொல்லியும், போயி பல்ல இளிச்சிட்டு காதல், கருமாந்திரம்னு வந்து சொல்றதுமில்லாம, எங்கிட்டயே என்ன பேச்சுப் பேசற?” என வாயிலேயே தொடர்ச்சியாக அடித்தார்.

வலி தாளாது தடுத்தவள், “அதுக்காக சித்தப்பாவைப்போயி கல்யாணம் பண்ணி வப்பியா?” அப்போதும் வலியோடு கேட்டாள் திவ்யா.

“..எங்க வீட்டு வழியில ஜெகன் சொந்தம். சித்தப்பாங்கிறதுக்காக, அவன், உங்கப்பன் கூடப் பிறந்தவனாகிருவானா.. இல்லைல்ல…”

“…”

“என்னை அவனுக்கு கட்டுற முறை.  நான் பெரியவங்கறதால, எம்புள்ளைய அவனுக்கு, மச்சி இல்லைனா மச்சி வவுத்துப் புள்ளைனு குடுக்க நினைக்கிறேன்.  ஊரே அப்டித்தான் சம்பந்தம் பண்ணுது.  நீயெதுக்கு விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு, எங்கிட்ட அடிவாங்கி சாகற”

“செத்தாலும் சாவேன்.  ஆனா அந்தச் சித்தப்பா எனக்கு வேணாம்”

“…அப்டி ஒவ்வொருத்தனையும் பாத்திட்டு உக்காந்திருந்தா, இங்க ஒருத்தியும், கல்யாணமாகி கரையேறிக்க முடியாது.  இன்னொன்னு, நான் சொன்னதைக் கேக்கலைன்னா நீ சாகறதே மேல்.  ஏன்னா இப்டித் தெரியாமப் போயிதான் எந்தலையில மண்ணள்ளிப் போட்டுட்டு, இப்பத்தான் மீண்டிருக்கேன்.  உனக்கும் அப்டியொரு விதின்னா நீ செத்துப்போறதேமேல்”

“என்னால அவங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது.  நான் கண்டிப்பா கிருபாவைத்தான் பண்ணிக்குவேன்” அடமாய் உரைத்தாள்.

“சொல்றதைக் கேட்டு அமைதியா இரு திவ்யா.  ராத்திரி நேரத்தில எதுக்கு இப்டிக் கத்துற” என மகளின் ஓங்கிய குரலைக் கண்டு அதட்ட

“முடியவே முடியாது.  வேற யாரையும் என்னால அந்த மாதிரி யோசிக்கவே முடியாது.  எனக்கு என்னோட கிருபாதான் வேணும்” என அடமாய்த் தொடர்ந்தவளிடம்

“மெதுவாப் பேசுடீ”

“நான் அப்டித்தான் பேசுவேன்” என குரலைக் குறைக்காமல் பேசியவளுக்கு முதுகில் ஓங்கி ஒன்று வைத்திருந்தார் ஈஸ்வரி.

“ஆஅஅஅ…” வலி தாளாமல், முதுகை கையால் வருடியபடி கத்தியதோடு, கிருபா.. கிருபா என்று பிதற்றியவளின் குரலைக் குறைக்க எண்ணி, “அறிவுகெட்டவளே, யாருக்கும் விசயம் தெரியுமுன்னே அந்தப் பையனுக்கு கட்டிக் குடுத்தரலாம்னு பாத்தா, கத்தியே உன்னை நீயே அசிங்கப்படுத்துறியேடீ… வாயை மூடுறியா இல்லை.. வாயிலேயே சூடு போடவா” எனக் கேட்டபடியே அடுத்தடுத்து அடிக்க, அடிதாளாமல், திவ்யாவும் உடுத்திய ஆடையோடு, அந்நேரத்தில் வெளியே கிளம்பும் எண்ணத்தில் வாயிலை நோக்கி ஓட, பின்னோடு ஓடி வந்தவர், அவளை எட்டிப் பிடிக்க முயன்று முடியாது போகவே, திவ்யாவின் நீண்டிருந்த கூந்தலைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தார் ஈஸ்வரி.

“ம்மா அய்யோ… வலிக்குது விடும்மா” திவ்யா அலறியபடி, அதே இடத்தில் அமர்ந்து கதறினாள்.

“வாய முதல்ல மூடுடி..”

“ம்மா தலையெல்லாம் வலிக்குதும்மா.. முதல்ல முடிய விடும்மா”

“சொன்னதைக் கேட்டா எதுக்குடீ அடிக்கப் போறேன்.  பேசாம அமைதியாப் போயி ரூமுக்குள்ள இரு” என முடியை விடாமல் பிடித்தபடியே, அவளின் அறைக்குள் தள்ளி வெளியில் தாழ்ப்பாள் போட்டிருந்தார் ஈஸ்வரி.

சற்று நேரத்தில் வெளிக்கதவு தட்டப்பட போய் திறந்தவரிடம், ஈஸ்வரியின் தாய், மற்றும் தங்கை இருவரும் வந்து என்னவென விசாரிக்க, “கிரைண்டர் போட்டது கழுவாமக் கிடந்துச்சு.  இப்பப்போயி கழுவறேன்னு கால்ல போட்டுட்டா,  அதான் கத்துனா.. இப்பத்தான் மருந்து போட்டேன்” நம்ப முடியாதபோதும், அப்டியா எனக் கேட்டுவிட்டு இருவரும் நடையைக் கட்ட, வாயிலை அடைத்து, அதன்பின் ஹாலில் உள்ள கதவை அடைத்து அனைத்துச் சாவிகளையும் தனது அறையில் பத்திரப்படுத்திவிட்டு, திவ்யாவின் அறையைத் தட்டினார்.

முகமெங்கும் வீங்கியிருக்க கதவைத் திறந்தவளிடம், “ஒழுங்கா நான் சொல்றதைக் கேட்டு நட.  இவ்ளோ நாள் உனக்கு வேணுங்கறதைப் பாத்துப் பாத்து செஞ்ச எனக்கு, உங்கல்யாணத்துக்கு எப்டி மாப்பிள்ளை பாக்கணும்னு தெரியாதா”

“அப்ப நீ மட்டும் அப்பாவை காதலிச்சித்தான கல்யாணம் பண்ணிட்ட”

“அதுனால தாண்டி சொல்றேன்.  இப்டி ஒரு சாக்கடைக்குள்ள விழுந்து கஷ்டப்படாதன்னு, நானே உனக்கு நல்ல இடமாப் பாத்துக் கல்யாணம் பண்றேங்கறேன்”

“அப்பா மாதிரியில்லம்மா, கிருபா ரொம்ப நல்லவன்மா”

“எல்லாப் பயலும் அப்டித்தான்டி வேஷம் போடுவாய்ங்க”

“இல்லம்மா.. மத்தவங்க மாதிரி கிருபா இல்லை” என மீண்டும் துவங்க, மேலும் நான்கு அடிகள் முதுகில் விழுந்தது.

“வாயிக்கு, வாயி பேசறதை முதல்ல நிறுத்து” என்றவர், அங்கிருந்த பாதகமானது எனத் தனக்குத் தோன்றிய பொருள்களை மட்டும் வெளியே எடுத்து வைத்துவிட்டு, இயன்றவரை அனைத்தையும் சரிபார்த்து, அறைக்குள் திவ்யாவை வைத்து பூட்டி சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி விரைந்தார்.

மகள் தற்கொலைக்கு முயன்று விடக்கூடாது எனும் முகாந்திரத்தில் அந்தப் பணிகளை துரிதமாக முடித்துவிட்டு, தனது அறைக்குள் அடைந்து கொண்டார் ஈஸ்வரி.

…………………….

பூட்டிய அறைக்குள் விசும்பியபடியே, கிருபா… கிருபா… என பினாத்தியபடியே, ஜெகனது சமீபத்திய பேச்சுகளை நினைவில் கொண்டு வந்தாள் திவ்யா.

ஆரம்பத்தில், வாத்தா, என்னத்தா எனப் பேசிய பேச்சு, சட்டென, ‘என்ன திவ்யா நல்லாருக்கியா?’ ‘படிப்பெல்லாம் எப்டிப் போகுது’ ‘படிப்பு முடிய இன்னும் எவ்வளவு மாசமிருக்கு?’ ‘மேல படிக்கணும்னு ஆசையிருக்கா?’ ‘உனக்கு எதுவும் வேணுனா சொல்லு,  நான் வரும்போது வாங்கிட்டு வரேன்’ எனும் மாறியிருந்த ஜெகனின் பேச்சுகள் நினைவில் வந்துபோனது. 

தனது எள்ளளவு சந்தேகம் இத்தனை பெரிய ஆழ்கடலில் தன்னைக் கொணர்ந்து தள்ளுமென அறியாமல் இருந்த மடத்தனத்தை நொந்தவள், அடுத்து தோன்றிய யோசனையை செயல்படுத்த, தகுந்த சந்தர்ப்பம் நோக்கிக் காத்திருந்தாள்.

சித்தியின் மகள், மாமாவின் மகள் என அவ்வப்போது வந்தவர்களிடம், “பெரியம்மா போனை எடுத்துத் தரியா”

“அப்ப எனக்கு எவ்வளவு காசு குடுப்ப” என பேரம் பேசியவர்களிடம், தனது உண்டியலில் இருந்த காசை எடுத்துக் கொடுத்தும் பலனெதுவும் இல்லாமல் போயிருந்தது.

திறன்பேசியை கையில் வாங்கும் நேரம், ‘இங்க வச்சிருந்த போனைப் பாத்தியா பொடிசி’ என ஈஸ்வரி கேட்க, இல்லையென சற்று நேரம் பொடிசி தேடுவதுபோல தேடிவிட்டு, திவ்யா பேசுவதற்குள் அவளின் கையிலிருந்ததைப் பிடுங்கி கொண்டு போய் ஈஸ்வரியிடம் சேர்த்த சோகக்கதைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. தொடர்ச்சியாக அரங்கேறியது.

வாய்ப்பே கிட்டவில்லை.  ஆனாலும், மிகவும் நம்பிக்கையோடு வாய்ப்பிற்காகக் காத்திருந்தாள் திவ்யா.

ஈஸ்வரி வேளைக்கு மகளுக்கு, உணவைக் கொண்டு வந்து தரும் போதெல்லாம், காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கதறினாள்.

திவ்யாவின் கிருபா ஜெபத்தைக் கேட்ட ஈஸ்வரிக்கே மனம் வலித்தது.

அத்தனை அடிகள் வாங்கியபோதும், வலியைப் பொறுத்துக் கொண்டு தன்னைக் காணும்போதெல்லாம், “ம்மா.. ப்ளீஸ்மா.. இந்த ஒரே ஒரு தடவை என்னை மன்னிச்சிரு.  நான் செஞ்சது தப்புதான்.  ஆனா அவனைத்தவிர வேற யாருக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் குடுத்தாலும் நான் செத்துருவேன். என்னால அதை நினைச்சுக்கூடப் பாக்க முடியலைம்மா.  ப்ளீஸ்மா…” என தனது கால்களை இருகக் கட்டிக் கொண்டு அழும் மகளைக் கண்டு, ஈஸ்வரியின் கண்களும் பனித்தது என்னவோ உண்மைதான்.

கல்நெஞ்சமல்ல ஈஸ்வரிக்கு.  தன்னைப்போல மகளும் கஷ்டப்பட வேண்டாம் என்கிற எண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்திருந்தார்.

காதலின் மனம் புரிந்தது.  அவரும் காதலித்தவர்தானே.

திவ்யாவைக் காணும்போது அதில் தன்னைக் கண்டார்.

ஆனால், தன்னைப்போல அவளும் தவறான இடத்தில் மாட்டிக் கொண்டு வாழ்வை இழந்துவிடக்கூடாது என்பதில்தான் மாறுபட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

ஆனால் மகளின் கண்ணீரில், அவரின் மனசும் கரைந்தது.

மகளின் கதறலை தாங்கிக் கொள்ள முடியாதவர், மகளுக்கு கிருபாவைப் பேசி முடித்து, மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தார் ஈஸ்வரி.

விக்னேஷை அழைத்து, “பேசாம.. அந்த கிருபா சொன்ன மாதிரி ரெண்டு வருசம் இவ படிக்கட்டும்.  அவுக வீட்ல போயி, நானே பெரியவுகளைப் பாத்துப் பேசலாம்னு இருக்கேன்.  அவுக வீட்டு நிலவரம் கேட்டு சொல்லு” என்றிருந்தார்.

இதற்கிடையில் காளியம்மாளை எப்படிச் சமாளிக்க என யோசிக்கத் துவங்கியிருந்தார்.

கிருபாவை, திவ்யா காதலிக்கும் விசயம் எதுவும் தெரியாமல் வைத்து, இரண்டாண்டுகளுக்குப்பின் மகளை தான் பார்த்த மாப்பிள்ளையாக அவனுக்கு திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொள்ளும் திட்டம் ஈஸ்வரியின் மனதில் புதிதாய் உருவாகியிருந்தது.

அடுத்து வந்த நாள்களில், காளியம்மாளிடம் பேசும்போது, “இப்ப உங்க பேத்தி, (மேற்கொண்டு)மேக்கொண்டு படிக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறா.. உங்களுக்கு அவசரம்னா வேற இடங்கூட பாருங்கத்தை” என

காளியம்மாளோ விடாமல், “இப்ப பேத்தி மேக்கொண்டு படிக்கணும், அவ்ளோதான.  அதுக்கு ஏன் இவ்ளோ பிரயாசப் படணும்.  கல்யாணத்தைப் பண்ணிட்டு இவ காலேசுக்கு படிக்கப் போகட்டும்.  இவன் இன்னொருவாட்டி வெளிநாடு போயிட்டு வரட்டும்” என கேட்காமலேயே அதற்கான வழிமுறை கூறினார்.

‘இதை கட் பண்ணி விட நினைச்சா, இது ஒட்டுப்புல்லு கணக்காவுல்ல ஒட்டிக்கிட்டு வரேங்கிது’ எனும் புலம்பலோடு ஈஸ்வரி அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார்.

இந்த அத்தையையே சமாளிக்க முடியலையே.  அந்த ஜெகன்.. அந்தப் பையனை வேற எப்டிச் சமாளிக்க என மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

இரண்டொரு நாளில் தந்தையின் மூலம் கிருபா வீட்டின் நிலவரத்தைக் கேட்டுக் கூறுகிறேன் என்றவன் நாளைக் கடத்தியிருந்தான் விக்னேஷ்.  பத்து நாள்களுக்குப்பின் வந்தவன் அன்றுதான் ஈஸ்வரியைச் சந்தித்துப் பேசியிருந்தான்.

கிருபா குடும்பத்தை நேரில் சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய எண்ணியவர், அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார்.

அன்று, முன்னிரவு வேளையில், ஜெகனிடமிருந்து எதிர்பாரா அழைப்பு வந்திருந்தது.

எடுக்கலாமா, வேண்டாமா என மிகுந்த யோசனைக்குப்பின், எடுத்து பேசினார்.

திவ்யாவிடம் பேச வேண்டுமென்றவனிடம், “அம்மா வீடு வரை போயிருக்கு” என்றார் ஈஸ்வரி.

கிருபாவிற்கு பேச முடிவெடுத்ததும், ஜெகனிடம் தர அவருக்கு பிடிக்கவில்லை.

ஜெகனோ வைக்காமல், வேறு வேறு விசயங்களைப் பேசிவிட்டு, “இப்ப வந்திருச்சா அத்தாச்சி.  இல்லைனா அப்டியே பக்கத்து வீடுதான.  அப்டியே போயி அதுக்கிட்ட குடுங்க” எனக் கூற

சட்டென முகத்திலடித்தாற்போல பேச முடியாத சூழல். அமைதியாய், தன்னைத்தானே நொந்தபடி மகளிடம் கொடுக்க முன்வந்தார்.

‘விடாது கருப்பு’ என நொந்தபடியே, திறன்பேசியை அறைக்குள்ளிருந்த திவ்யாவிடம் நீட்ட, நம்பிக்கையோடு காத்திருந்தவள், தகுந்த சந்தர்ப்பம் வாய்த்த மகிழ்ச்சியில், ஜெகனிடம், தனக்கும் கிருபாவிற்குமான காதலை உரைக்க கிட்டிய சந்தர்ப்பத்தை எண்ணி குதூகலித்தபடியே, அவனிடம் மெதுவாக விசயத்தைக் கூறத் துவங்கியிருந்தாள் திவ்யா.

இதை அறியாத ஈஸ்வரி, மற்ற விசயங்களைப் பார்த்தபடி இருக்க, திவ்யாவைக் கவனிக்க மறந்திருந்தார்.

அடுத்து வந்த பதினைந்து நிமிடங்களுக்குப்பின் “ம்மா உங்கிட்ட சித்தப்பா ஏதோ பேசணுமாம்” என திறன்பேசியை நீட்ட, நீட்டியவளின் முகம் பிரகாசமாய் இருக்க, ஈஸ்வரிக்கு ‘என்ன திடீர்னு இப்டி இருக்கா’ என யோசித்தபடியே

‘இவ்ளோ நேரமா சித்தப்பங்கிட்ட அப்டி என்னத்தைடீ பேசித் தொலைஞ்சே’ எனக் கேட்டவாறு, மகள் கொடுத்ததை வாங்கிக் காதில் வைத்தார்.

திவ்யாவின் விசயத்தைக் கேட்ட ஜெகன் என்ன முடிவெடுத்தான்?

அடுத்த அத்தியாயத்தில்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!