emv18A
emv18A
எனை மீட்க வருவாயா! – 18A
பிரச்சனை பெரிதாக்கப்பட்டு, பேச்சுகள் வலுக்க இரு குடும்பங்களுக்கு இடையே உருவான அதிருப்தி காரணமாக, ஈஸ்வரி திவ்யாவை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார்.
கிளம்பும்போது, தன்மையாகப் பேசி மகளை வாழவைத்துவிடும் எண்ணத்தில் வந்தவர், அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், தனது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு வந்திருந்தார்.
மகளை தன்னோடு ஊருக்கு அழைத்து வந்து பத்து நாள்கள் கழிந்திருந்தது.
ஆரம்பத்தில் மகள் புகுந்த வீட்டில் நடந்ததாகக் கூறிய செய்திகளை முழுமையாக நம்பாமலேயே இருந்தார் ஈஸ்வரி.
பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து குடுத்ததன் விளைவே, புகுந்த வீடு பற்றிய மகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் என்று நினைத்து அதை சட்டை செய்யாமலும் கடந்திருந்தார்.
சமீபத்தில் மகளுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, காளியம்மாள், வீரப்பெருமாள் இருவரின் இடையூறுப் பேச்சுகளை எதேச்சையாகக் கவனிக்க நேர்ந்தது.
சரி பெரியவர்கள்தானே என அப்போதும், அதனைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தார் ஈஸ்வரி. ஆனால் அவர்கள் பெருந்தன்மை என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்கள் என்பது நாளடைவில்தான் ஈஸ்வரிக்கு தெரியவந்தது.
தன்னை, தனது குடும்பத்தை பற்றிய துவேசமான பேச்சு மற்றும் செயல்களை அவர்களின் வாய்மொழியாகவே அறிந்து கொண்டது முதலே, மகளுக்கு மருமகனுடன் இருந்த ஒட்டாத தன்மையையும் யோசித்து அமைதியாகவே பிரச்சனையை கையாள எண்ணினார்.
ஆனால் வந்த இடத்தில் எழுந்த உடன்படாத பேச்சிகளினால், மகளின் திருமணத்தை ஜெகனுடன் மேற்கொண்ட தனது அவசரத்தனத்தை எண்ணி மனம் நொந்து போனார் ஈஸ்வரி.
‘இந்த அத்தை நல்ல மனுசின்னு நெனைச்சில்ல, எம்புள்ளைய அது மகனுக்குக் கட்டிக் குடுத்தேன். இது என்ன இப்டி சிறு புள்ளையோட வந்து ஒவ்வொன்னுக்கும் மல்லுக்கு நிக்குது’
அப்போதுதான் மற்றொன்றும் நினைவில் வந்தது ஈஸ்வரிக்கு.
சம்பாத்தியம் செய்து தரும் மகனான ஜெகனுக்கு, எதிர்கால பொருள் தேடலுக்காக வெளிநாடு செல்லவேண்டி வட்டிக்குக் கடன் வாங்கும்போது, தன்னிடம் உள்ளதைக் கொடுத்து உதவும் குணம் இல்லாமல் இருந்த தாய் இந்தக் காளி என்பதையும் தனது மனதில் நினைவு கூர்ந்தார்.
சொந்த மகனுக்கே துவேசமாக எண்ணும் தாயாராய் இருந்த காளி, தனது மகளை எதுவும் சொல்வதோ, அடிப்பதோ ஒன்றும் பெரிய விசயமே இல்லை எனத் தோன்றியிருந்தது ஈஸ்வரிக்கு.
நடந்த அனைத்தும் தனது அவசரத்தனத்தினால் உண்டானதே என தனது மகளின் இந்நிலைக்கு தானே காரணம் என அவரே அவரைப் பொறுப்பாக்கிக் கொண்டிருந்தார்.
திவ்யா செய்த தவறை மறைக்க எண்ணியே, தான் அப்போது அனைத்தையும் யோசிக்காமல் அவசரத்தில் முடிவு எடுத்ததை நினைத்து தற்போது வருந்தினார். மகளின் காதலை அறிந்ததும், காளியைப் பற்றி விசாரிக்கத் தோன்றாமல் அவரது மகனுக்கு தனது மகளைத் திருமணம் செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பது காலங்கடந்து புரிய வந்தது ஈஸ்வரிக்கு.
‘அது பெத்த மயனுக்கே நல்லது நினைக்காதது. அதுகிட்ட நல்ல விசயம் இருக்கும்னு நினைச்சது எந்தப்புதான்’ என உணர்ந்தாலும், எடுத்தோம் கவிழ்த்தோம் என இனியும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தார். அடுத்து என்ன செய்யலாம் என மகளின் வாழ்வை சீர் செய்திடும் நோக்கில் யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அடுத்ததாக சேலைப் பிரச்சனையும் எழவே, ‘இப்டியே இதை விட்டுட்டு இருந்தா, இன்னும் ரொம்பப் பண்ணும்போல’ என நேரில் வந்து பேசி ஒரு முடிவுக்கு வர முனைந்தே, தனது பக்கம் பேச சில சொந்தங்களையும் உடன் அழைத்து வந்திருந்தார் ஈஸ்வரி.
அவசிய வசதிகள் இல்லாமல், பசிக்கு உணவு உண்ணவும் லஜ்ஜையாக உணர்ந்த மகளின் நிலையை கருத்தில் கொண்டு, ஜெகன், திவ்யாவிற்கு தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்க எண்ணியே சில பெரியோர்களையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பி வந்திருந்தார்.
பேச்சுகள் துவங்கி, மகளை இனி இதுபோல நடக்க வேண்டாம் என அறிவுறுத்தினால், தாங்கள் அவளின் விசயங்களில் தேவையில்லாமல் மூக்கு நுழைப்பது போன்ற செயல்களை தவிர்த்துவிட்டால் ஏராளமான பிரச்சனைகள் குறைந்து விடும் எனும் நோக்கில் பேச முனைய, அதை ஏற்றுக் கொள்ளாமல் வந்தவர்களிடம் வேண்டா, வெறுப்பாய் அப்டி தனக்கு ஒரு தேவையில்லை என முகத்திலடித்தாற்போல பேசியிருந்தார் காளி.
ஜெகனும் மனைவிக்காகவோ, அல்லது அவர்களின் எதிர்காலம் கருதியோ, எந்த ஒரு நல்ல முடிவுக்கும் வராமல், தனக்கும் நடக்கும் விசயத்திற்கும் சம்பந்தம் இல்லாததுபோல ஒதுங்கி இருந்ததைக் கண்டவருக்கு, அதற்குமேல் மகளை விட்டு வந்தால், அவளுக்கு எதுவும் நடக்கலாம் என்கிற நிலையில், அங்கு இனியும் விட்டுச் செல்லும் மனமில்லை ஈஸ்வரிக்கு.
சேலை விசயத்தில் உண்டான பிரச்சனையைப் பேசியபோது, பெரியவர்களின் பொறுப்பற்ற பேச்சினைக் கண்டும், தனிக்குடித்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாததாலும் அதற்குமேல் மகளை அங்கு விட்டுவர மனமின்றிக் கையோடு அழைத்து வந்திருந்தார்.
ஈஸ்வரிக்கு மகளை பற்றிய கலக்கமும், அவளின் எதிர்காலத்தை எண்ணிய பயமும் ஆட்கொண்டிருந்தது.
பெற்றவள் என்றுமே பிள்ளைகளைப் பாரமாகக் கருதுவதில்லை. ஆனால் சுற்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சமாளித்து சாதூர்யமாய் பதில் கூறிவிட்டாலும், உண்மைநிலை மிகுந்த மனஉளைச்சலைத் தந்திருந்தது.
பூ தொழில் சிறப்பாக சென்றாலும், அதில் மனம் லயிக்க மறுத்தது. வாழ்க்கையைத் துவங்கு முன்பே, வாழாவெட்டியாய் வந்து வீட்டிலிருக்கும் மகளின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் என நினைத்து சோர்ந்து போனார் ஈஸ்வரி.
ஜெகன், கெட்ட பழக்க வழக்கம் எதுவும் இல்லாதவன் என்பதும், அவனுடன் பெண்பிள்ளைகள் பிறக்காததையும், அவன் நல்ல உழைப்பாளி என்பதையும் மட்டுமே கருத்தில் கொண்டு திருமணம் செய்து கொடுக்கத் துணிந்த ஈஸ்வரிக்கு, காளியம்மாளைப் பற்றி சிந்திக்க அந்நேரத்தில் மறந்து, தனது மகளின் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கியமை, முற்றிலும் தனது தவறு என்பது உறுத்த, காலம் கடந்த ஞானதயத்தால் எந்த பலனும் இல்லை என்பதும் புரிய, மிகுந்த கலக்கம் வந்து குடியேறியிருந்தது.
……………………………..
திவ்யாவிற்கு இன்னும் அந்த பிரச்சனை நடந்த தினமே வந்து மனதில் நின்று, அவளின் நிம்மதியைக் கெடுத்தது.
திவ்யாவிற்கு அவளின் குணமே மாறிப்போன உணர்வு. வந்தது முதலே அதே நினைவுகளின் அலைக்கழிப்பில் இருந்தாள்.
காளியம்மாள் தனது இருகைகளையும் ஒன்று சேர்த்து முதுகில் அடுத்தடுத்து அடித்ததும், வலிதாளாமல் தான் ஓடியதும், அதன்பின் அன்று நடந்த நிகழ்வுகளுமே நினைவில் வந்தது.
…………….
அன்று குளிக்கச் சென்றிருந்த ஜெகன் வந்ததும், நடந்ததை முற்றிலும் மறைத்து, “இங்க பாத்தியாடா? ஒரு பெரியவுகன்னு மரியாதை இல்லாம இவ பேசறதை… இதையெல்லாம் கேட்டுக்கிட்டு மயன் பொண்டாட்டினு மானங்கெட்டு இப்டியெல்லாம் வாழணும்னு எந்தலையில எழுதியிருக்கு” என மகனிடம் அழத் துவங்க
அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு அழுபவளை விட்டுவிட்டு, தாயிடம் என்னவென விசாரிக்க, “மரியாதை இல்லாம உம்பொண்டாட்டி எங்களைப் பேசுறா. ஒரு சேலைய எடுத்துக் கட்டுனதுக்கு, எத்தனை ஆங்காரமா வந்து, வெளியில நிக்கறாளே பெரிய மனுசினுகூடப் பாக்காம, இந்தத் தெருவே பாக்க, உடுத்தியிருந்த சேலையை உருவி அசிங்கப்படுத்திட்டாளே…” என வராத கண்ணீரோடும், அழுகையோடும் கூறியவர்,
“கழட்டிக் குடுன்னு கேட்டுருந்தா, இந்தான்னு கழட்டி அவ மூஞ்சியிலேயே விட்டெறிஞ்சிருப்பேன். ஆனா இப்டிப் பண்ணுவாளா ஒரு குடும்பத்துப் பொம்பளை. அப்டியே வெளியில நிக்க வச்சு எம் மரியாதை போகற மாதிரி உருவிட்டாளே…” என பெருங் குரலெடுத்து பொய்யாய் கதற
வீரமோ மனைவியின் பேச்சில் இருக்கும் பொய்யை கண்டாலும், கண்டு கொள்ளாமல், “அதுக்குத்தான் உங்கிட்ட அப்பவே சொன்னேன். டவுனுல பிறந்ததுகளுக்கு இங்க இருக்க முடியாம என்னைத்தையாவது குடும்பத்துல சண்டை சச்சரவுனு இழுத்துவிட்டு வேடிக்கை பாக்குங்கனு. கேட்டியா நீ” என அந்நேரத்தில் தன்னுடைய முடிவினை எதிர்த்து செய்ததாலேயே இந்த நிலை உனக்கு என்று கூறாமல் கூறி, அவரின் மனதை ஆசுவாசப்படுத்தினார்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன், வீட்டிற்குள் செல்ல அங்கே கதவை அடைத்துக் கொண்டு அழுபவளை அழைக்க, பத்து நிமிடங்களுக்குப் பின்பே சிவந்த முகத்துடன் வந்து கதவைத் திறந்தவளைப் பார்த்ததும், ஓரளவு நடந்ததன் பாதிப்பு யாருக்கு அதிகம் என்பது திவ்யா கூறாமலேயே ஜெகனுக்குப் புரிந்தது.
இன்னொரு விசயம். இவை அனைத்தும் தனது தாய்க்கு கை வந்த கலை. புதியதாய் வந்த மனைவிக்கு அனைத்தும் புதிது. அதனால் அவளால் ஏற்றுக்கொள்ள இயலாமல் இப்படி அழுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.
ஆனால் தாய், தந்தையரை எதிர்த்துக் கேட்கும் துணிவில்லை அவனுக்கு. துணிவு என்பதைக் காட்டிலும், பெற்றவர்கள். தன்னைக் காட்டிலும் பெரியவர்கள். அவர்கள் செய்வது இழிசெயலாக இருப்பினும் அவர்களை பிறர்போல் எள்ளிநகையாடுவதோ, கேள்வி கேட்பதோ தவறு என்கிற எண்ணம். ஆகையினால் அதனை கண்டுகொள்ளாது கடந்துவிடவே எண்ணினான்.
“என்னாச்சு திவ்யா?”
“…”
“சொன்னாத்தானே தெரியும்? இப்டியே அழுகாத”
“…”
தண்ணீரை எடுத்து வந்து கைகளில் திணித்தவன், “மொதல்ல அழுகைய விட்டுட்டு, இதக் குடி”
வாங்கிப் பருகி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், நடந்ததை அழுகை மற்றும் தேம்பலோடு சுருக்கமாகச் சொன்னாள். தான் பேசியதை எதுவும் கணவனிடம் மறைத்தாளில்லை.
இரண்டரை மாதங்களுக்கும் மேலாக அவளோடு இருப்பவனுக்கு, ஓரளவு திவ்யாவின் பேச்சு முறைமைகள் அத்துப்படியே. அதனால் அவள் பேசுவது எத்தனை உண்மை என்பதும் புரிந்தது.
அதற்குள் எதுவுமே நடவாததுபோல காளியும், வீரமும் திருமணத்திற்கு கிளம்பியிருந்தனர்.
“ஏலே செகனு”
“…” எழுந்து வெளியில் வந்தவன் தாயைப் பார்க்க, காளியம்மாள் கணவரோடு திருமணத்திற்குச் செல்ல கிளம்பி நின்றிருந்தார்.
திவ்யா உருவிவிட்டதாகச் சொன்ன சேலையை இன்னும் காளியம்மாள் அணிந்திருந்தார். ஆனால் அது ஜெகனுக்கோ, வீரத்திற்கோ தெரியவில்லை.
“செகனு, நாங்க கல்யாணத்துக்கு போயிட்டுருக்கோம். அவ வந்தா கூட்டிட்டு வா. இல்லாட்டி இங்கேயே கிடக்கட்டும். நீ எங்க பின்னாடியே வந்து சேரு” என காளி நகர
மனைவியை அழைத்தும் அவள் வராமல் போகவே, ஜெகன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டான்.
இரண்டு மணிநேரம் சென்றிருந்தது.
“இப்டி அழுத முகத்தோட ஈரத்தலையோட இப்டியே இருந்தா நல்லாவா இருக்கு. எழுந்து வா. முகத்தைக் கழுவிட்டு கிளம்பு. கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் வெளிய எங்கையாவது போயிட்டு வரலாம்” அழைத்தவனின் மீதும் அவ்வளவு கோபம் திவ்யாவிற்கு.
மனைவியின் இந்நிலைக்கு வேறு யாரேனும் காரணமாய் இருந்திருந்தால், இந்நேரம் நடப்பதே வேறு. ஆனால் தாய் தந்தையர் என்பதால் மட்டுமே அமைதி காத்தான்.
“எதுக்கு தேவையில்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்து இப்டி வச்சி செய்யறீங்க” திவ்யா
“நான் என்ன பண்ணேன் திவ்யா. எங்கம்மாவைப் பத்திதான் உனக்கே தெரியுமே. அப்புறம் எதுக்கு அதுகிட்டப் போயி வாக்குடுத்த(வாயைக் கொடுத்தாய்)”
“நான் என்ன கேட்டேன். எதுக்கு என்னோட சேலைய எடுத்துக் கட்டுணீங்கனு கேட்டது தப்பா? அதக் கேக்கக் கூடாதுன்னு எந்தச் சட்டத்துல இருக்கு. எனக்கு என்னோட தேவைக்கு, எங்கம்மா பொருள் போக்குவரத்துனு வாங்கிக் குடுத்தது, உங்கம்மா எடுத்து யூஸ் பண்றதுக்கில்ல. எனக்கு யூஸ் பண்றதுக்குத்தான். அதைக் கேட்டாத் தப்பா!”
“…”
“எனக்கு இந்த சேலையைப் பாத்ததும் கட்டணும்னு ஆசையா இருந்ததுடீனு, எங்கிட்ட சொல்லியிருந்தாக்கூட சரினு நான் விட்ருப்பேன். அதுக்கு என்னா பேச்சு. அடி. உங்கப்பாகிட்ட சொன்னா தின்ன சோத்துலயா மண்ணை அள்ளிப் போட்டாங்குறார்”
“என்னாது” அதிர்ச்சியாய் கேட்டான். கேட்டுக் கொள்ள மட்டுமே அவனால் முடிந்தது.
“ஆமா… முதுகுல நல்லா ரெண்டு கையவும் சேத்து வச்சு மொத்து மொத்துன்னு வேற உங்கம்மா மொத்திட்டாங்க”
“எங்க அம்மாதானடீ திவ்யா. அதனால போகட்டும்னு மன்னிச்சிருடீ”
“உங்க முதுகுல போடச் சொல்லியிருந்தா வலி எப்டியிருந்ததுனு தெரிஞ்சிருக்கும். மன்னிச்சிட்டா எல்லாம் இல்லைனு ஆகிருமா. இதுல அவங்க ரெண்டுபேரும் எல்லாத் தப்பும் என்மேலங்கிற மாதிரிப் பேசறாங்க.”
“சரி பேசிட்டுப் போகட்டும் விடு” என்றவன், “என்னோடது, உன்னோடதுன்னு குடும்பத்துக்குள்ள பேச்சு வரக்கூடாது திவ்யா”
“அப்ப, உங்கம்மா என்னோட ஒவ்வொரு துணியையும் எடுத்து சுருமாடுத் துணியாட்டம் (தலையில் பானை வைத்து எடுத்து வரப் பயன்படும் துணி) போட்டு வைக்கிறதைப் பாத்திட்டு, பேசாம இருக்கச் சொல்றீங்களா?”
“அப்டிச் சொல்லலை. நீ எதுக்கு வெளியில எடுத்து வைச்ச. அதுனாலதான எடுத்துக் கட்டுச்சு”
“இப்டிப்பேச உங்களுக்கே அசிங்கமாத் தெரியலையா? இதுலாம் இன்னைக்கு ஆரம்பிக்கலை. வந்து மூனே நாளுல தலைக்குத் தோட்டிட்டு காயப் போட்டுருந்த புதுத் துண்டைக் காணோம்னு எல்லா இடத்திலயும் தேடித் திரியறேன். உங்கம்மாகிட்டயும் கேட்டேன். எனக்குத் தெரியலைனு சொல்லிட்டாங்க. கடைசியில புடிதுணிக்கு (சமையலின்போது பயன்படுத்தும் துணி) போட்டுருக்காங்க. அப்பவும் என்ன அப்பத்தானு கேட்டேன். அதுக்கு, ஒரு துண்டு காசு நான் பெற மாட்டேனானு கேட்டாங்க. அப்ப சரினுதான் அமைதியாப் போனேன். அப்டி இந்த இரண்டரை மாசத்துல என்னோட புது இன்ஸ்கர்ட், எத்தனை கர்சீஃப், துண்டு, இப்ப சேலைனு வந்துருக்கு. உங்கம்மாகிட்ட இப்பவும் கேக்கலைனா என்னோட எல்லாத்தையும் இருக்கற இடம் தெரியாம ஆக்கிட்டு, நான் எதுவுமே எடுத்துட்டு வரலைன்னு சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்ல”
“இருக்கற இடத்துக்குத் தக்கன மாறிகிட்டா எதுக்குடீ பிரச்சனை வரப்போகுது. தனி வீடுன்னா உன்னோட இஷ்டப்படி நீ இருக்கலாம். இங்க பெரியவுகளோட நாம இருக்கும்போது நீதான் பாத்து சூதனமா இருந்திருக்கணும். அது கையில படற மாதிரி எதுக்கு இதையெல்லாம் வச்ச”
“ஏங்க, அதுக்காக தலைக்கு தோட்டின ஈரத் துண்டை பீரோவுக்குள்ளயா கொண்டு போயி காயப் போட முடியும். குளிச்சிட்டு தோச்சுப்போட்ட பாவடையக் காணோம். அதேதான் கர்ச்சீஃப்ஸ்ஸூம். எதுலயும் ஒரு நியாயம் வேணாமா?”
“…”
“இது எல்லாத்துக்கும் பொதுவான வீடுன்னு, எனக்கோ, என்னோட பொருளுக்கோ பாதுகாப்பு இல்லைனா கண்டுக்காம அப்டியே எப்டி விடறது?”
“சரி சரி. போனதைப் பேசி இனி என்னாகப் போகுது” மனைவியைச் சமாதானம் செய்தவன், மதிய உணவிற்காக, அவனே அடுப்பை பற்ற வைத்து சமையலைத் துவங்கியிருந்தான்.
திவ்யா அசையவே இல்லை. ஆகையால் நேரம் செல்வதை உணர்ந்து, சமையல் வேலையைத் துவங்கியிருந்தான் ஜெகன்.
அதேநேரம் ஈஸ்வரி, தன்னோடு சில பெரிய மனிதர்களையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்தார்.
வந்தவர்களை வரவேற்று அமரச் செய்தவனிடம், அவனது பெற்றோரைப் பற்றி வினவ, காரைக்குடி திருமணத்திற்கு சென்றது தெரியவர, உடனே கிளம்பி வருமாறு கூறச் செய்தனர் வந்தவர்கள்.
ஜெகனோ, அவ்வாறு கூறாமல் தற்போது எங்கிருக்கீறீர்கள் எனக் கேட்டவன், விரைவாக வீடு திரும்பும்படி கூறிவிட்டு வந்தவர்களோடு சென்று அமர்ந்துவிட்டான்.
திவ்யா அதன்பின் எழுந்து வந்து, வந்தவர்களுக்கு நீராகரத்தை முதலில் கொடுத்துவிட்டு, அதன்பின் சமையல் செய்து, அனைவருக்கும் மதிய உணவை மிகவும் சாதாரணமாகவே செய்து பரிமாறினாள்.
ஈஸ்வரிக்கு, மகளின் தோற்றத்தில் வருத்தம் தோன்றினாலும், இந்த இடத்திற்கு வந்து இரண்டரை மாதங்களில், அந்த ஊருக்கு ஏற்றபடி, தனது திறமையை சற்று வளர்த்துக் கொண்ட மகளை எண்ணிய பெருமிதம் இருந்தது.
அனைவரும் உண்டு முடித்து இளைப்பாறிய நேரத்தில், ஈஸ்வரி திவ்யாவிடம், “கொஞ்சம் பெரியவுககிட்ட பொறுத்து போனாத்தான் என்னடீ”
“என்னோட பொறுமைனால நல்லது எதுவும் நடந்தா, நான் அப்டியே இருக்கலாம்மா. அப்டி எதுவும் நடக்காத எடத்துல அப்டி எதுக்கு நடக்கணும்?”
“இப்டியெல்லாம் பேசினா, உன்னை நாந்தான் ஒழுங்கா வளக்கலைனு சொல்லுவாங்க”
“இப்பவும் ஒன்னும் இல்ல. இனி எதுவும் வாயத் திறக்காம அமைதியா இருக்கேன். நேரத்துக்கு சோத்தை சாப்பிடக்கூட இங்க முடியலை. நின்னா, உக்காந்தா, படுத்தா, போனுல பேசினா, டீவி பாத்தா இப்டி நான் என்ன செஞ்சாலும் குத்தம். இதுல இந்த அப்பத்தா வயசுக்கு என்னைய சாடை பேசுது. அதையும் இனி கேட்டுக்கறேன். இனி அது குத்திக்கிட்டே இருக்கறதை வாயத் திறக்காம வாங்கிக்கிறேன். ஆனா ஒன்னு, நல்லா கவனிச்சுக்க… ஆறு மாசத்துல என்னை சாகடிச்சிரும் அந்த அப்பத்தா. நான் கொண்டு வந்த ஒரு பொருள்கூட இங்கிருக்காது. அப்ப வந்து ஒப்பாரி வையி” என தாயிடம் பேசியவள் சற்று நிதானித்து
“…ஏம்மா… நீ வேற வந்து வெந்ததுல வேலப் பாச்சுற.. இதச் சொல்லிட்டுப் போகத்தான் இவ்ளோதூரம் இங்க வந்தன்னா கிளம்பிப் போம்மா அங்கிட்டு” என தாயிடம் விட்டேத்தியாய்க் கூறினாள் திவ்யா.
அத்தோடும் விடாமல், “பேசாம வீட்டுலயே இருந்திருப்பேன். இப்டி ஒரு எடத்துல நான் சித்தரவதை படறதுக்குன்னே கட்டிக் குடுத்து பழி வாங்கியிருக்க. உனக்கு எம்மேல அம்புட்டுக் கோவம். அதான் இப்டி பேசுற” என ஒதுங்கி அமர்ந்துவிட்டாள்.
பெரியவர்கள் வந்திட, அங்கு காத்திருந்தவர்களைக் கண்டதும் காளியின் முகம் சிறுத்திட, “எப்ப வந்தீங்க. யாராவது போனைப் போட்டுச் சொல்லிருக்கலாம்ல” என காளி எதுவுமே நடவாததுபோல வந்து விசாரிக்க
சற்றுநேரம் அமைதியாக இருந்த இடம், காலையில் நடந்ததைப் பற்றிப் பேசத் துவங்கியதும் போர்க்களம்போல காட்சி மாறியிருந்தது.
……………………………………..