emv18B

எனை மீட்க வருவாயா! – 18B

 

“அத்தை, எம்புள்ளைக்கு இந்தக் காடு கரைக்கு போயி பழக்கமில்லை.  படிச்சிட்டு இருந்ததோட கட்டிக் குடுக்கறேன்.  அதனால நீங்கதான் அவளுக்கு எல்லாம் சொல்லிக் குடுக்கணும்னு சொல்லித்தான, கட்டிக் குடுத்தேன்” என காளியிடம் ஈஸ்வரி நேரடியாக விசயத்தைப் பற்றிப் பேசத் துவங்க

“இப்ப உம்மகளுக்கு இங்க என்னத்தை குறையா வச்சிட்டோம்.  எல்லாம் நல்லாத்தானே பாத்துக்கறேன்”

“நல்லா வச்சிக்கிட்டா உங்களுக்குத்தான நல்லது அத்தை.  தப்பு பண்ணா வாயால கண்டிங்க. வந்த ரெண்டரை மாசமாச்சு.  இன்னுந்தான் வந்த புள்ளைக்கு அவசரத்துக்கு வெளிய அனுப்புறீங்க.  இதுக்கு எம்புட்டுச் செலவாகிரும்.  நானும் ரெண்டு தடவை சொல்லிட்டேன்.  சரி இதையெல்லாம் அனுசரிச்சி நடந்துக்கோனு சொல்லியாச்சு.  ஆனா இன்னைக்கு காலையில எங்கூட பேசிக்கிட்டு இருந்த புள்ளைய  எதுக்கு அடிச்சீங்க?”

“நா எங்கடீ அவளை அடிச்சேன்”

“அத்தை, நான் அவளோட பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் நீங்க அடிச்சது எனக்கே கேட்டுச்சே. இடையிலே மாமா சத்தமும் கேட்டுச்சு.  நீங்க என்ன இப்டிச் சொல்றீங்க?”

“இது அந்த ஆண்டவனுக்கே அடுக்காதுடீ ஈஸ்வரி.  உம்மக பேச்சைக் கேட்டுட்டு இப்டிப் பெரியவுகளை அபாண்டமாப் பேசுவியா” என ஓவெனக் காளி மறுத்துக் கத்த

“அத்தை, இது எனக்குத் தெரிஞ்சதால நீங்க சொன்னது தப்புனு எனக்குத் தெரியுது.  இல்லைனா பெரியவங்க உங்க பேச்சைக் கேட்டுட்டு, எம்மகளைத்தான் நானும் நாலு சாத்து சாத்தியிருப்பேன்.  ஆனா நான் உங்கமேல வச்ச அந்த நம்பிக்கை எல்லாம் வேஸ்டுனு இப்பத்தான் தெரியுது.  எம்மகளை நீங்க நல்லா வச்சிக்குவீங்கங்கற நம்பிக்கையிலதான் உங்க மகனுக்கு கட்டிக் குடுத்தேன். இப்டி பேசுனதை, செஞ்சதை, செய்யவே இல்லைனு நீங்க அழிச்சாட்டியமா மறுத்தா, உங்களை நம்பி எப்டி இங்க எம்மகளை விட்டுட்டுப் போறது?” என முகத்திற்கு நேரே அவரைப்பற்றிய அனுமானத்தை வெளிப்படுத்தியதோடு, தனது மகளை விட்டுச்செல்லும் எண்ணம் இனியும் தனக்கில்லை என்பதையும் கூற

“ஊருக்கில்லாத புள்ளையப் பெத்துட்டேன்னு ரொம்பப் பேசாதடீ ஈஸ்வரி.  புள்ளையா வளர்த்து வச்சிருக்க.  வெசமா இருக்கு.  நான் வச்சிருந்த கரித்துணிய அவவுட்டு துணிங்கறா. இட்லித் துணிய அவவுட்டுங்கறா.  பாவாடைய எம்புட்டுங்கறா. இதையெல்லாம் வாங்க வக்கத்துப் போயா நான் குடும்பத்தைப் பாத்துகிட்டு இருந்தேன்.  இப்ப ஒரு சேலைய எடுத்துப் பாத்ததுக்கே இப்டி வீ வினு வந்தான்னா, நாளப்பின்ன இந்தப் புள்ளை என்னையப் பாக்குமா?”

“அது நீங்க நடந்துக்கறதைப் பொறுத்துதான் அத்தை”

“அப்ப தப்பு பண்ணுன உம்மகளைத் தட்டிக் கேக்காம, எம்மேல பழியத் தூக்கிப்போடன்னு ஊருல இருந்து எல்லாத்தையும் கூட்டிகிட்டு வெக்கமில்லாம என் வீட்டு வாசலுக்கு வந்துட்ட”

“கல்யாணமாகி மூனு மாசம் முடியப் போகுது.  இவ்ளோ நாளு உங்களையும், உங்க பேச்சையும் நம்பியிருந்தேன்.  ஆனா எப்ப செஞ்சதை நீங்க இல்லைனு மறுத்துச் சொல்லிட்டீங்களோ, இதுக்குமேல உங்களை நம்புறது வேஸ்ட்”

“நம்பாட்டா உம்மகளைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு.  யாரு இங்க கூட்டிட்டுப் போக வேணாம்னு உங்கையப் புடிச்சு நிறுத்துனது” என காளி மிகவும் வீராப்பாய் பேசிட

“யாருக்கோ வந்த விதியேங்கிற மாதிரி என்னம்மா இப்டிப் பேசுறீங்க.  ரெண்டு பேரு தப்பையும் புரிஞ்சு, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து, ஒத்தாசையா இருப்போம்னு சொல்லாம, எடுத்தோம், கவுத்தோம்னு என்ன பேச்சு இது” என ஈஸ்வரியுடன் வந்திருந்த அவளின் மூத்த மச்சான் பேச

அதேநேரம் ஈஸ்வரியின் தாய், “நாங்களும் மருமகளை வீட்டுக்கு கொண்டு வந்துருக்கோம்.  அதுக வயசுக்கு உடுத்தற உடுப்பு, அதுக போடுற சோப்பு, சாம்பூ, பவுடர்னு எதையும் நாங்க திரும்பிக்கூட பாக்க மாட்டோம்.  நீங்க என்னடான்னா, அவ பவுடர் டப்பாவைத் தூக்கி வச்சிகிட்டு, நல்லா வாசமா இருக்கே.  எங்கே வாங்கினேனு கேட்டியாம். சின்னஞ்சிறுசுக என்னத்தையோ பண்ணிட்டுப் போகுதுகுகன்னு விடாம, அது என் மயன் வாங்கிக் குடுத்ததுன்னுதான் நான் எடுத்தேன்னு சொன்னியாம். இதெல்லாம் கேக்க நல்லாவா இருக்கு” என காளியிடம் நேரில் வினவியதோடு

“ஆம்பளைப் புள்ளைகளைப் பெத்தாலும், பொம்பளைப் புள்ளையப் பெத்தாலும், பெரிய மனுசராகப்பட்டவுக, வந்த புள்ளைகளுக்கு வாங்கிக் குடுத்து, சாப்பிடக் குடுத்து,  அதுக சந்தோசமா இருக்கறதைப் பாத்து, பூரிச்சுப் போறதைத்தான் கேள்விப்பட்டிருக்கோம்.  வந்தவ எடுத்துட்டு வந்ததை எடுத்துக் கட்டுறது, பவுடர் பூசுறதுன்னு பட்டினத்துல இருக்கற நாங்களே சல்லிசா நடக்க மாட்டோம்.  வழக்கம் பழக்கம்னு ஒன்னு இருக்கு.  வயசுக்கு தக்கன நடக்கலைனா இந்தப் பேச்சு எல்லாம் வாங்கத்தான் காளியம்மா செய்யணும்” என அவரது கருத்தை உரைக்க

“அது எல்லாம் சும்மா சொல்லுது அந்தப் புள்ளை.  உங்களுக்குத் தெரியாதா என்னைப்பத்தி”, என்ற காளி, “இன்னொன்னு நான் எதுக்கு யாருகிட்டயும் விட்டுக் குடுத்துப் போகணும்னு கேக்கறேன்.  என் வீடு, வாசல்.  யாரு என்னை அண்டி வந்தாங்களோ அவுகதான் என்னை அனுசரிச்சுப் போகணுமே தவிர, நான் எதுக்கு அப்டி இருக்கணும்? நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.  இங்க என்ன வக்கத்துப் போயா, வந்தவகிட்ட வாங்கிக் கட்டணும்னு இருக்கோம்” என காளி தனது செயல்களை மறைத்து நியாயம் பேச

வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோருக்குத் தெரிந்தது.  காளி தற்போது உடுத்தியிருப்பதுகூட அவரின் மருமகளுடைய ஆடை என்று.  ஆனால் அதைக் கூறினால் இன்னும் வம்பு வளரும்.  ஆகையால் அதைப்பற்றி பேசாமல் அமைதி காத்தனர்.

புரிந்தவர்களோடு, விவாதித்தால் அதற்குரிய தீர்வு கிட்டும்.  தெரிந்தாலும் தெரியாததுபோல சில செயல்களைச் செய்துவிட்டு, இல்லையென சாதிக்கும் நபரிடம் விவாதிப்பதே நேரத்தின் அருமை உணராமை என விட்டுவிட்டனர்.

“உங்க மகனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, வந்த புள்ளைய நீங்கதான நல்லாப் பாத்துக்கணும்.  இது யாரோவா.  உங்க மருமகதான” என ஈஸ்வரியின் சார்பில் ஒருவர் கேட்க

“அதுக்கு… அவ வச்சதுதான் சட்டம்னு எல்லாம் இங்க என் வீட்டுல இருக்க முடியாது.  அதுமாதிரி இங்க நான் வச்சதுதான் சட்டம்.  அதைக் கேட்டு இருக்க முடியும்னா இங்க இருக்கட்டும்.”

இப்படிப் பேச்சுகள் முடிவுக்கு வராமல் நீளவே, இடையில் ஜெகனும் தனது தரப்பு எதிர்பார்ப்பையோ, நடந்ததைப் பற்றி வருத்தம் தெரிவிக்கவோ முன்வராமல் போகவே, திவ்யா மட்டுமல்லாது ஈஸ்வரிக்குமே வருத்தம்.

“சின்னஞ் சிறுசுகள தனியா வச்சிருங்களேன். அதுக உண்டு அதுக சோலி உண்டுன்னு இருக்குங்கள்ல” என ஈஸ்வரியின் தரப்பிலிருந்து பேச

“அதெல்லாம் முடியாது.  இருந்தா அவ இங்க இருந்து எம்மகனோட வாழட்டும்.  இல்லைனா உங்க பிரியம்” என முடித்துக் கொண்டனர் காளியும், வீரமும்.

கெஞ்சினால், அவருடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும் என அனைவருமே அதற்குமேல் காளியிடம் இரங்கிப் பேச முனையவில்லை.

பெண்ணைப் பெற்றவள் என்பதால் அடாவடியாய் எதுவும் பேசக்கூடாது என அத்தோடு பேச்சை வளர்க்க பிரியப்படவில்லை ஈஸ்வரி.

அதற்குமேல் அங்கு திவ்யாவை விட்டுச் செல்ல மனதில்லாது, அவளையும் அழைத்துக் கொண்டு திரும்பியிருந்தது நகரத்துக் கூட்டம்.

நடந்த விசயங்கள் மூலம், தனது எதிர்காலத்தினைக் கணித்தவளுக்கு, எதிர்காலமே சூன்யமாகத் தெரிந்தது திவ்யாவிற்கு.

……………………………………….

முது அறிவியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட திவ்யாவிற்கு, இடம் கிடைத்திட, சும்மா வீட்டில் இருந்தால் கண்டதையும் நினைத்து கலங்கக்கூடும் என எண்ணி, கல்லூரியில் சேர்த்திருந்தார் ஈஸ்வரி.

“இதத்தானம்மா ஆரம்பத்திலேயே உங்கிட்ட சொன்னேன்.  இப்டி என்னை பீஜி படிக்க வைக்குறேன்னு நீ அப்பவே முன்வந்திருந்தா, இத்தனை கஷ்டம் யாருக்குமே இல்லை”

“புத்தி சொல்லற அளவுக்கு பெரிய்ய.. ஆளா ஆகிட்டீகளாக்கும்.  தேவையில்லாம பேசாம, போயி உருப்படற வேலைய மட்டும் பாரு.  ஒழுங்கா இருந்திருந்து படிக்கிறேன்னு கேட்டிருந்தா ஒருவேளை சரின்னுதான் சொல்லிருப்பேனா இருக்கும்.  அத்தோட கூடவே ஒரு இக்குனு நீ புள்ளி வச்சே.  நானும் கோலம் போட்டுட்டேன்” என ஈஸ்வரியும், கிருபாவுடனான மகளின் காதலை குத்திக் காட்டிவிட்டு, மகளை கல்லூரி விடுதியில் விட்டு வந்திருந்தார்.

………………………

மனைவியை அழைத்துச் சென்றவர்களிடம், தனக்காய் வீட்டில் யாரும் பேச முன்வராதது ஏமாற்றமே.

தாய் தகப்பன் நியாயமாய் நடக்கவில்லை என்பது தெரிந்தாலும், அவனால் ஒன்றும் செய்ய இயலாத நிலை.

ஜெகனுக்கோ கைக்கு கிட்டியது வாய்க்கு கிட்டவில்லையே என்கிற வருத்தம்.  அது பெற்றோரிடம் காட்டத் தெரியவில்லை.  இதுவரை அப்படிப் பழகியிராதவனுக்கு, தனது எதிர்காலமே இருளடைந்ததாய் எண்ணி, அவர்களிடமிருந்து ஒதுங்கத் துவங்கியிருந்தான்.

‘இந்த அம்மாவையே நம்பிட்டு இருந்தா, கடைசிவர கல்யாணமாகியும் மொட்டைப் பையனாவே இருந்திட்டுச் சாக வேண்டியதுதான்போல’ என நினைத்தவன், வேலைக்குச் சென்று விட்டு, பெரும்பாலும் வீட்டிற்கு திரும்புவதைக் குறைத்துக் கொண்டான்.

காளி கேட்டால் ஆரம்பத்தில் “இங்க ஓவர்டைம்மா.  நாளைக்கு வரேன்” என்றவன் அடுத்தடுத்தும் வீட்டுப் பக்கமே வராமல் இருக்க, விசாரித்த காளியிடம் “அங்க எனக்குனு யாரு இருக்கா?”

“ஏண்டா இப்டிக் கேக்கற?  பெத்தவங்க நாங்க இல்லையா? அந்த சீமைச் சித்தராங்கி இருந்தாதான் வருவீகளோ?”

“வேற எப்டிக் கேக்கச் சொல்ற?”

“இத்தனை நாளு நாங்கதானடா உனக்கு எல்லாம் பாத்தோம்.  பெத்தவுக உன் கண்ணுக்குத் தெரியலையாடா?”

“நீ பெத்தவதானான்னு உம்மேலதான் எனக்கு சந்தேகம்?”

“இப்டியெல்லாம் எம்புள்ளைக்குப் பேசத் தெரியாதே.  எந்தச் சிறுக்கி இப்டியெல்லாம் சொல்லிக் குடுத்துப் பேசுறான்னு தெரியலையே?” என மறுமுனையில் ஒப்பாரி வைக்க, சட்டென அழைப்பு துண்டித்து விட்டான் ஜெகன்.

கணவனிடம் போய் முறையிட, “இருவத்தாறு வருசத்துக்கு முந்தி நீ என்ன பண்ண? நான் என்ன பண்ணேன்.  எல்லாம் அதுக்குள்ள மறந்திருச்சா” என ஒற்றை வார்த்தையில் பழையதை நினைவுக்கு வரச் செய்து, ஒதுங்கிக் கொண்டிருந்தார்.

காளியம்மாளுக்கு தனது தவறு புரிந்தாலும், யாரிடமும் ஒத்துக்கொள்ள அவர் தயாராய் இல்லை.

நேரங்காலம் தெரியாமல், சம்பாதித்தான். பணத்தை முழுவதும் தனது வங்கிக் கணக்கில் போட்டு வைத்தான். இராசசிங்க மங்கலத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்தவன், திவ்யாவின் சீர் பாத்திரங்களில் தனக்கு வேண்டியதை கிராமத்தில் வந்து எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொண்டான் ஜெகன்.

மற்றவற்றையெல்லாம் ஒரு சாக்கில் இட்டுக் கட்டி, பரணில் தூக்கி வைத்தான்.

மகனது செயலை கன்னத்தில் கைவைத்தபடியே ஆச்சர்யமாக நோக்கிய காளியிடம், “என்ன பயங்கரமா யோசிக்கிற மாதிரித் தெரியுது?”

“உனக்கு என்ன செகனு.  அந்த வெள்ள உலுவைய விட்டா பொண்ணா கிடைக்காது.  அவளுக்காக இப்படி எங்களை விட்டுப்போயி தனியாக் கஷ்டப்படுறியே”

“மனசாட்சியத் தொட்டுச் சொல்லு.  எனக்கு அப்டியே லைன்ல பொண்ணு குடுக்கறேன்னு நின்னானுங்க.   அதனால அவளை இப்ப வேணானு சொல்லிட்டு, வேற பொண்ணு பாக்கணும்னு கேக்கற! அடப்போம்மா உன்னோட பகுசியக்(கேலி) கொண்டுகிட்டு”

“உனக்கென்ன செகனு.  நீ ஆம்பளை..”

“தேவையில்லாம எதுவும் பேசாதம்மா. உனக்கு உன்னோட சவுரியந்தான் பெருசு.  அதான் யோசிக்காம அன்னைக்கு அப்டிப் பேசுன”

“அய்யோ… அப்டி பெத்த புள்ளைக்கு கெடுதி நினைக்கிறவளா நானு”

“தனியா உக்காந்து உன்னை நீயே கேட்டுப்பாரு” என கிளம்பிவிட்டான்.

ஓய்வு நேரங்களில் திவ்யாவை நினைத்தபடியே இருப்பான். இரண்டு முறை திவ்யாவிற்கு அழைத்தபோது, மறுமுனையில், “என்ன விசயம் கொழுந்தனாரே?” என ஈஸ்வரி கேட்க

“இல்ல.. திவ்யா..?”

“எதுக்கு இனி அவகிட்ட பேசிக்கிட்டு.  நீங்க உங்கம்மா பேச்சைக் கேட்டு நடங்க.  நான் எம்புள்ளைக்கு எதாவது இனி நல்லதா யோசிச்சு முடிவெடுக்கணும்.  இனி திவ்யாகிட்ட பேச்சு வச்சிக்காதீங்க.  தேவையில்லாத ஆசையை வளர்த்தா ரெண்டு பேருக்கும் கஷ்டம்”

“இல்ல அத்தாச்சி, எங்கூட திவ்யாவை என்னை நம்பி அனுப்பி வைங்க.  நான் ஆர்எஸ் மங்கலத்துலகூட தனியா வீடு பாத்து வச்சிக்கறேன்”

“அதுலாம் தப்பு தம்பி.  வீட்ல பெரியவுக அப்டிச் சொன்ன பின்னாடி உங்ககூட அவங்களை கலந்துக்காம எப்டி அனுப்பி வைக்க முடியும்.  அப்டி ஒரு எண்ணமிருந்தா பெரியவுல மொதல்ல வந்து பேசட்டும்.  அப்புறம் பாக்கலாம்” என சட்டென கத்தரித்துப் பேசிவிட்டு வைத்திருந்தார்.

“அவங்க என்னை விட்டுட்டு அவங்கம்மா சொல்ற மாதிரியெல்லாம் கேக்க மாட்டங்கம்மா.  அதுனால கொஞ்ச நாள் பொறுமையா இருப்போம்.  அவரே வந்திருவாரு என்னைத் தேடி” என திவ்யாவின் வார்த்தையை நம்பி

மூன்றாம் மாதம் நிறைவடையப் போகுமுன், மருமகன் அருகில் இல்லாத நிலையிலும் தானே தனது உறவுகளை அழைத்து, தாலியில் உருக்கள் கோர்க்கும் வைபவத்தை மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார் ஈஸ்வரி.

உறவுகள் கேள்வியெழுப்ப, “எல்லாம் சரியாகிரும்னு அவ நம்பறா.  அதான் அவ இஷ்டப்படி செய்திட்டேன்” என்றிருந்தார் ஈஸ்வரி.

அதுவரை மஞ்சள் கயிற்றில் கட்டியிருந்த தாலியை செயினில் மாற்றி, அத்தோடு இன்னும் காசு, குண்டு, கிராம்பு, பவளம், மாங்காய், மணி என அவள் ஆசைப்பட்டதைக் கோர்த்து நிறைவாய் செய்திருந்தார் ஈஸ்வரி.

ஜெகனை, அவனது வரவை அவள் மனம் எதிர்பார்த்தது.  ஆனால் அவன் அவளைத்தேடி வராமல் இருக்க, தானாகவே அவனிடம் சென்று பேச அவளைத் தடுத்தது எதுவோ?

மேலும் ‘எல்லாம் நேருல உருகித்தான் பேசுவாங்கபோல.  ஆளு இல்லைனா இப்டித்தான் எம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான சந்தோசமாத் தெரியுங்கபோல” என மனதைத் தேற்ற முயன்றாள் திவ்யா.

கிருபா என்பவனை காதலிக்காமல், ஜெகனைத் திருமணம் செய்திருந்தால் நிச்சயம் இப்படி அவன் பேசட்டும் எனக் காத்திருந்திருக்க மாட்டாள் திவ்யா.  ஆனால் அனைத்தும் தலைகீழாய் நடந்திருக்க, தானாகச் சென்று வலியப் பேசினால், ஜெகன் தன்னை தவறாய் எண்ணிவிட்டால் என தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் திவ்யா.

கல்வியைத் தவிர அவள் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். ஜெகன் அவனது பேச்சுகள், அவனது தனக்கான கடமைகள், அவனது அன்பு, தன் மீதான அவனின் ஆர்ப்பரியும் நேசம், அவனின் தனக்கான தேடல்… என ஜெகனைப் பற்றிய விசயங்கள் மட்டுமே தற்போது அவளின் மனம் முழுக்க வியாபித்திருந்தது.

அதற்கான காரணம் என்னவென ஆரம்பத்தில் யோசித்தவளுக்கு புரியவில்லை.  போகப்போகப் புரிந்தது திவ்யாவிற்கு. 

…………………………………………….