emv18C
emv18C
எனை மீட்க வருவாயா! – 18C
மாங்கல்யத்தின் தாத்பரியம் அது. அது கொடுக்கும் சமூக மதிப்பு. அந்தஸ்து! அதனால் உண்டான தைரியம். அதனின் ஆகர்சனத்தாலேயே இருவரும் ஒருவரையொருவர் விட்டு மற்றொருவர் சட்டென விலக முடியாமல் நினைவில் அன்போடு பிணைந்திருக்கிறோம் எனப் புரியாமலேயே, கணவனின் மீது ஆழ்ந்த நேசம் உருவாகி, அவனின் வருகையை நித்தமும் நிமிடமும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் திவ்யா.
யாருமற்ற தனிமையில் அவ்வப்போது, கழுத்தில் கிடந்த ஜெகன் அணிவித்த தாலியை எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டே, “இதக் கட்டுனதோடு சரி. என்னோட நியாபகமே உங்களுக்கு வரலையாங்க… இல்ல என்னமாதிரி என்னைப்பத்தி நினைச்சிட்டே, நான் உங்களைத் தேடி வருவேன்னு இருக்கீங்களா?” இப்படித் தனது எண்ணத்தை அவ்வப்போது அதனுடன் பேசிப் புலம்பித் தீர்த்தாள்.
ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புகள் தொடர்ந்தது. நீண்டது.
நினைவுகள் கூட சுகமான சுமையாய்ப் போனது.
மகள் விடுதிக்கு செல்லும்போது, புது சிம்மை மாற்றிப் போட்டு அனுப்பி வைத்திருந்தார் ஈஸ்வரி.
திவ்யாவும் சிம் மாற்றியதைப்பற்றி தாயிடம் எதுவும் கேட்கவில்லை. ஜெகனது அலைபேசி எண் திவ்யாவிற்கு தெரியும். அவள் நினைத்தால் பேசலாம். ஆனால் தயக்கம் அவளைப் பேசவிடவில்லை.
தான் கல்லூரிக்கு பயில வந்தது ஜெகனுக்குத் தெரியாது. ஆனாலும் திருமணத்திற்கு முன்பே தன்னுடன் பேசியவன்தானே. அதுபோல தற்போதும் தனது தாயிடம் கேட்டு அலைபேசி எண்ணை வாங்கிப் பேசலாமே என யோசித்தாள்.
ஈஸ்வரி ஜெகன் பேசியதைப் பற்றி மகளோடு பகிர்ந்து கொள்ளவில்லை.
………………………
“ஏண்டா ஒரு நல்ல நாள் பெரிய நாளுக்குகூட வீட்டுக்கு வரமாட்டீங்கற?” கவலையோடு மகனிடம் வினவினார் காளி.
“யாருக்கு நல்ல நாளு!”
“எல்லாருக்குந்தான்!”
“எனக்கெல்லாம் வாழறதே கேடுதான்!” என்றவன் ”…உனக்கும் உன் வீட்டுக்காரருக்குந்தான தினந்தோறும் நல்ல நாளு. நீங்களே சந்தோசமாக் கொண்டாடுங்க!” மகனின் விட்டேற்றியான பேச்சு, செயல் இரண்டும் சேர்ந்து மன உளைச்சலைத் தந்திருந்தது காளிக்கு.
சிறியவன் வேறு, “இப்டித்தான் நீ எல்லாத்தையும் ஊத்தி மூடி கவுத்திருவேன்னு அவங்கிட்ட அப்பவே தனிக்குடித்தனம் போகச் சொன்னேன். எங்க கேட்டான். அதான் அனுபவிக்கிறான்” என்றதுமே இன்னும் கஷ்டமாகிப் போனது காளிக்கு.
ஊரில் உள்ள சொற்ப வீடுகளிலும் ஆரம்பத்தில் திவ்யாவைப் பற்றி விசாரிக்க,
“அவளுக்கு இங்க இருக்கப் பிடிக்கலையாம். அதான் அவ ஆத்தா வீட்டுக்கு போயிருக்கா” என பழியை மருமகள் மீது போட,
அதன்பின் வந்த நாள்களில், நடந்ததைக் கண்ணுற்றிருந்த அருகே உள்ள வீட்டுக்காரரின் வாய்மொழியில் ஊரே உண்மையான காரணத்தை அறிந்து கொண்டிருந்தது.
சாடையாக, “எத்தனை காலத்துக்குத்தான் நாமளே எல்லாத்தையும் ஆளறது. வந்தவங்க வாழணும்னு எண்ணம் முதல்ல வரணும். சில ஜென்மங்கள் வந்தவளை விரட்டிவிட்டுட்டு இதுங்க இன்னும் புது பொண்ணு மாப்பிள்ளை கணக்கா தெரியுதுங்க” என காதுபடவே பேச மிகவும் தலையிறக்கமாய்ப் போனது காளிக்கு.
வெளியூர் விசேசங்களில் தலைகாட்ட இயலாத நிலை.
“அந்தப் புள்ளை ரொம்ப சாதுவா தெரிஞ்சது. இந்த மாமியாக்காரி என்ன பண்ணி விரட்டி விட்டுச்சோ தெரியலை” என காதுபடவே பேசத் துவங்கியிருந்தனர்.
வீரத்திடம் இதையே வந்து, “இப்டியெல்லாம் என்னையப் பேசுறாளுக. இவளுகள்லாம் ரொம்ப நல்லவளுக மாதிரி”
“…”
“ஏங்க.. நீங்களே சொல்லுங்க.. நான் அப்டியா?”
“வேற எப்டி? என்னால சொல்ல முடியல. அவளுகளால சொல்ல முடியுது” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
அதுவரை வீராப்பாய் வலம் வந்தவருக்கு, கணவரின் பேச்சில், நிதர்சனத்தை எண்ணி, வந்திருந்த சிறிய மகனிடம் பேசி, “எப்டியாவது அவனை இங்க கூட்டிட்டு வாடா தம்பி. நாம்போயி ஈஸ்வரிகிட்ட பேசறேன்”
“உன்னை நம்பி கூட்டிட்டு வந்து இங்கல்லாம் இனியும் குடித்தனம் வைக்க முடியாதும்மா. நீ எப்ப என்ன பண்ணுவன்னு உனக்கே தெரியாது. அதனால உன்னை நம்பி நான் எந்தக் காரியத்திலும் இறங்கத் தயாரா இல்லை. அந்தப் புள்ளை வந்ததும் அந்நியன் கணக்கா, நான் எப்ப அப்டிச் சொன்னேன்னு, நீ கைய விரிச்சிட்டா” அருண்
“அப்டிச் செய்வேனாடா”
“இந்த கண்ணைக் கசக்கிறது எல்லாம் அவன் நம்புவான். நான் நம்பமாட்டேன்”
“என்னடா..” என தாழ்ந்த குரலில் மகனிடம் கெஞ்சிப் பேசி, ஜெகனை வீட்டிற்கு அழைத்து வரச் செய்திருந்தார்.
ஒரு நல்ல நாளில், தாயும் மகனுமாய்ச் சென்று ஈஸ்வரியின் பூக்கடைக்கு சென்று பேச, “வேண்டாந்தை. இனியும் உங்ககூட சேத்து அனுப்ப எனக்கு இஷ்டமில்லை. ஊருல சொல்லி, ரெண்டு பேரையும் அத்துவிட்டுட்டு, அவுகவுகளுக்கு பிடிச்ச மாதிரி இனி பண்ணிக்கலாம்” என ஈஸ்வரி உரைக்க
“அத்தாச்சி, நீங்க திவ்யா நம்பர் மட்டும் குடுங்க. நான் பேசிக்கிறேன்” என ஜெகன் இடையுற
“இல்ல கொழுந்தனாரே… தனிக் குடித்தனம் வச்சாலும், சில விசயங்களைப் பேசிட்டுத்தான் வைக்கணும். இனியும் உங்க அம்மாகூட சேந்து இருக்கறமாதிரி வைக்க முடியாது”
“தனிக் குடித்தனந்தான் அத்தாச்சி”
“அது இப்ப வாய் வார்த்தையாச் சொல்லிட்டு, அப்புறம் எதாவது மாத்திட்டா கஷ்டம் கொழுந்தனாரே. அதனால ரெண்டு பக்க பெரிய ஆளுகளைப் பொதுவுல வச்சிப் பேசி ஒரு முடிவெடுக்கலாம்!”
காளிக்கு உற்றார் உறவினர் அனைவரும் பேசிய பேச்சின் தாக்கத்தால், முன்பைப்போல வந்தா மலை, போனா ம…ரு எனும் ரீதியிலான பேச்சை விட்டுவிட்டு, அமைதி காத்தார் காளி. ஆனால் ஈஸ்வரி ஒரு பெண்ணைப் பெற்றவராக அவசரம் காட்டாமால் நிதானமாய் பேசினார்.
முதல் முறை தாயை அழைத்து வந்தவன், அடுத்த முறை தனியே வந்து “எம்பொண்டாட்டியை எங்கூட அனுப்பி வைங்க”
“திடுதிப்புனு வந்து நீங்க கேட்டதும் அனுப்ப முடியாது. பெரியவங்களை கூட்டிட்டு வாங்க” ஈஸ்வரி
அடுத்து வந்த நாளில், காளியம்மாள், வீரம் இருவர் முன்னிலையில் பெரியவர்களும் அமர்ந்து பேச, “தீபாவளி லீவுக்குத்தான் எம்மக இங்க வரும். அப்ப அவகிட்டயும் பேசிட்டு நல்ல முடிவு சொல்றேன்” என ஈஸ்வரி தனது பக்கப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
ஜெகனுக்கு அப்போதுதான் திவ்யா அங்கில்லை என்பதே தெரிய வந்தது.
ஈஸ்வரியிடம் கேட்டபோது, “இப்ப அது உங்களுக்கெதுக்கு கொழுந்தனாரே” எனக் கேட்டதோடு, “உங்கம்மா அன்னைக்கு அம்புட்டுப் பேசினப்போ யாருக்கோனுதான இருந்தீங்க. இப்ப என்ன திடீர்னு பொண்டாட்டிமேல கரிசனை…” என்றவர், “எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்ததும், திவ்யா எங்கிருக்கானு தெரியத்தானே போகுது” என சமாளித்திருந்தார்.
மாமியாரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை காணச் சகிக்காமல், திவ்யாவைக் காணும் நாளுக்காய் காத்திருந்தான் ஜெகன்.
………………
நினைவலைகளில் நீந்தியவாறு நித்திரையைக் கலைத்து, அவனது நினைவை தன்னுள் டாட்டூபோல பதிய வைத்திருந்தவனின் அருகாமைக்காக மனம் அலைபாய்ந்தாலும், யாரிடமும் கூற முடியாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முயன்றாள் திவ்யா.
காதலன், நண்பன், பெஸ்டி, கிரஷ் எனும் பல பண்பேற்ற உறவுகளோடு வலம் வந்த உடன் பயிலும் தோழிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, கணவனைக் காதலிக்கத் துவங்கி, அவனது வரவிற்காக ஏக்கமாகக் காத்திருந்தவள் அனைவருக்குமே புதுமையானவளாக இருந்தாள்.
“ஏய் திவ்யா… என்னடீ இப்டி மொரட்டு மங்க்ஸ்ஸா இருக்க?”
“எப்டி மங்க்ஸூன்னு சொல்றீங்க?”
“யாரையும் பாக்க மாட்டற. யாருகூடயும் பேச மாட்டற. ஆம்பளைங்களைப் பாத்தாலே ஆறடிக்கு குறையாம தள்ளி நின்னு பேசற?”
“அப்டியெல்லாம் இல்லையே”
“அப்டித்தான். எப்டிடீ இப்டி இந்தக் காலத்தில வித்தியாசமா இருக்க”
இதுவரை யாருக்கும் அவள் திருமணமானவள் என்பதே தெரியாது. ஆகையினால் அவளின் நடவடிக்கைகள் அனைத்தும் மற்றவர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.
காரைக்குடியில் தோழியரோடு வெளியில் செல்வதாக இருந்தாலும், அதற்குமே வரைமுறை வைத்திருந்தாள்.
சீனியர் ஒருவன் அவளையே சுற்றிவர, பதறிப்போனவள், “மேரீட்” என உண்மையைக் கூற, அவன் நம்பவில்லை.
“பொய் சொல்லாதீங்க திவ்யா”
“இதுலபோய் யாராவது பொய் சொல்லுவாங்களா சீனியர்”
“என்னை அவாய்ட் பண்றதுக்காக இப்டிச் சொல்றீங்களா திவ்யா?”
“இல்லை சீனியர்” என்றவள், “ஹப்பி ஃபாரின்ல இருக்காங்க” என பொய்யை உண்மைபோல கூறிவிட்டுக் கடந்திருந்தாள்.
நம்பாமல் மற்ற தோழியரும் அவளைத் தோண்டித் துருவ, இருவரின் திருமண ஸ்டில் ஒன்றை மட்டும் தனது அலைபேசியில் வைத்திருக்க, அதை எடுத்துக் காட்டினாள்.
“ஏன் திவ்யா நீ டல்லடிக்கிற. ஆன மச்சான் செமையா போஸ் குடுக்கறார்டீ” என அனைவரும் குதூகலிக்க, எதுவும் பதில் கூறாமல் அன்றைய தனது மனநிலையை எண்ணிப் பார்த்தாள்.
மனித மனம் எத்தனை விசித்திரமானது. அன்றைக்கு கிருபாவைத் தேடிய உள்ளத்தோடு. இன்றோ… ஜெகனைத் தேடிக் கொண்டு…
இப்படி ஒரு மாற்றம் தனது வாழ்வில் நிகழுமா என அதிசயித்துப் போயிருந்தாள் திவ்யா.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் நூறு சதவீதம் உண்மைபோலும்!
“சோ ஸ்வீட்” என ஜெகனைப் பார்த்துக் கூறிய தோழி ஒருத்தி, “மச்சான் செமையா இருக்காருடீ. அதான் இங்க எவனுமே நல்லாயில்லைனு பாக்கலையா. இது தெரியாம உன்னைப்போயி அப்பாவின்னு நினைச்சிட்டு இருந்திட்டேனே” என திவ்யாவை கிண்டல் செய்ய
“அய்யே.. கருவாயன் மேல அவ்ளோ கிரேஸெல்லாம் இல்ல” என அவர்களிடம் சமாளித்தாலும், செம்மை பூசிய வதனம் கூறியது, ஜெகனின் மீதான அவளின் அளவற்ற நேசத்தை.
“ஏய் நான் இருக்கேன் மச்சானுக்குப் பேச. அதெப்படி அவரை என் முன்னாலயே கருவாயன்னு சொல்லுவ?” ஒருத்தி ஜெகனுக்காய் போர்க்கொடி உயர்த்த
“கருவாயனை வேற என்ன சொல்லுவாங்களாம்” என்றவளிடம் சண்டைக்கு நின்றது பெருங்கூட்டம். அப்போதுதான் ஜெகனின் மீது கிரஷ்ஷாகிப் போன கூட்டத்தால் துவங்கப்பட்ட ஜெகனின் புதிய ஆர்மி.
அதன்பின் இன்னும் அதிகமாகிப்போன கணவனின் நினைவுகளோடு அல்லாடிப் போனாள் திவ்யா.
‘அந்த அம்மாக்கோண்டு இன்னியாரம் அவங்கம்மா முந்தியைப் பிடிச்சிட்டு எங்க திரியுதோ’ என்பதாக இருந்தது திவ்யாவின் ஜெகனைப் பற்றிய எண்ணம்.
…………………………………
பொடுசியை வெளியில் சந்தித்து, பேசியிருந்தான் ஜெகன்.
“திவ்யா வந்தா எனக்கு இந்த நம்பருக்கு மிஸ்டுகால் குடுப்பியாம்” என கைநீட்டியவளிடம் சிரித்தபடியே இருநூறு ரூபாயைத் திணித்திருந்தான்.
தீபாவளி விடுமுறைக்கு இராமநாதபுரத்திற்கு வந்திருந்தாள். அவள் வந்த செய்தி அறிந்ததுமே, ஜெகன் தன் சார்பாய் சிலரை அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தான்.
பெரியவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, அறைக்குள் இருந்தவளுக்கு அப்போதுதான் விசயம் என்னவென அறிய நேர்ந்தது.
காரசாரமான விவாதங்கள் இருபக்க பெரியோரிடமும் நடந்து கொண்டிருக்க, அவளின் அறை சாளரத்தின் வழியே தோன்றிய நிழலுருவைக் கண்டு திரும்பியவளுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது….
திரும்பியவள் என்ன செய்தாள்?
……………………………………..