emv8a

எனை மீட்க வருவாயா! – 8A

 

“வாடிவாசல் காளையாகத் திரிந்தவனின்

திமிரும் திமிலைத் தொடாது,

மூக்கணாங்கயிறின்றி விழிச்சுடரால்

எனை அடக்கியாளும் பாவையே!

ஆழ்கடலான உனது நினைவுகளில் மூழ்கி

மூச்சுக்கு திணறுபவனை,

மலையளவு தடைகள் தாண்டி,

இதயத்தோடு இணைய வேண்டி,

பிராணனாய் உயிர் தீண்டி,

உணர்வாய் இளமை தூண்டி,

அலையும், கரையுமாய் வாழவேண்டி,

இருகரம் கோர்த்து மீட்பாயா!

காதலெனும் கரை சேர்ப்பாயா!”

 

 

தம்பி அழைப்பான் எனக் காத்திருந்தவன், அழைப்பு வராமல் இருக்கவே, ஜெகனே அழைத்திருந்தான். நலவிசாரிப்புகளுக்குப்பின், மாதந்தோறும் பெற்றோருக்கு பணம் அனுப்புவது சார்ந்த கேள்விகளை இதமாய் முன்வைத்தான்.

தான் மாதமாதம் பணம் அனுப்புவதில்லை என அருண் கூறியதும், “என்ன தம்பி இப்டிச் சொல்ற? வயசானவுகளுக்கு நாமதானடா செய்யணும்.  என்னால முடிஞ்சத நான் அனுப்புறேன்.  கடன்வேற இன்னும் கட்டி முடிக்காம இருக்கு.  அவுக கைச் செலவுக்கு பணமில்லாம திண்டாடிறக் கூடாதில்லடா! நீ அனுப்பறேனு நானும், நான் அனுப்பறேனு நீயும் விட்டா, அவங்க நிலைமையக் கொஞ்சம் யோசிக்க வேணாமடா!” தனக்குத் தோன்றியதை ஜெகன் கேட்க

“மாசம், மாசம் ரெண்டு பேருக்கு எம்புட்டு செலவு ஆகும்னு நீ நினைக்கிற? சாப்பாட்டுக்கு வேணுங்கற, அரிசி, எண்ணெய், புளி, மிளகாய்க்கு, வருசத்துக்கு எந்தக் குறையுமில்ல.. எல்லாம் நம்ம காடு கரையில விளையறதே மிஞ்சந்தேன். சொந்த வீடுதான்.  தண்ணிச் செலவில்ல.  காவிரித் தண்ணி வந்தா புடிச்சிக் குடிப்பாக, குளிக்க ஊரணியில தண்ணி கிடக்கு.  புழக்கத்துக்கு போயி கம்மாயி(கண்மாய்)ல எடுத்துக்கறலாம்.  மளிகை, காய்கறி, மேச்செலவுக்கு, நீ ஒரு மாசத்துக்கு அனுப்பறதே, அவுக ரெண்டுபேத்துக்கும், நாலு மாசத்துக்குப் போதும்”

“அப்டியா சொல்ற!”

“ரெண்டு பேரும் காடு கரைன்னு விதைக்கவோ, அறுவடை வேலைக்கோன்னு பணங் கேட்டா, நான் குடுக்கத்தான் செய்றேன்.  அதையும் கேட்டவுடனே அப்டியே தூக்கிக் குடுக்க முடியாதுல்லண்ணே.  என்ன ஏதுன்னு கேட்டுட்டு, நியாயமான செலவுன்னா குடுப்பேன்”

“என்னடா சொல்ற?” 

“ஆடு, கோழி, வாத்துன்னு வளர்க்கிறாங்கள்லண்ணே! அது விக்கிற காசெல்லாம் இருக்குமுல்ல. அதையெல்லாம் என்ன, ஏதுன்னா, நாம கேக்கறோம்”

“…” இடையுறாமல் கேட்டுக் கொண்டிருந்தான் ஜெகன்.

“அதுபோக ஊருக்குள்ள எதுவும் வேலை இருந்தா, ரெண்டு பேரும் போயிப் பாப்பாங்கள்ல… இது எல்லாத்துலயும் வருமானம் வரும்லண்ணே”

“…” 

“வருசத்துக்குப் போடுற வெள்ளாமையில வரது, வீட்டுக்கு வச்சிக்கிட்டதுபோக மிச்சத்தை, காசாத்தான வச்சிருப்பாங்க.  அதையெல்லாமா நாம வாங்கிக்கறோம்.  அதைவிடு! வருசா, வருசம் வெளைச்சலே இல்லைனு, கவர்மெண்ட்டுல வேற காசு குடுங்கறானுங்க.  அதப்போயி நாம கணக்கா கேட்டுக்கிட்டு இருக்கோம்”

“…” 

“இதையெல்லாம் வச்சி, அவுக செலவை அமோகமாப் பாத்திக்கிருவாங்க.  நாம குடுக்காம, வருமானம் எதுவும் வராமையா, நம்ம காளி, வாங்கி, வாங்கி, கழுத்து நிறைய டிசைன், டிசைனாப் போட்டுருக்கு” எனும் தம்பியின் வார்த்தையைக் கேட்டவனுக்கு சிரிப்பு வந்தாலும், எத்தனை தூரம்  நுணுக்கமாய் கவனித்திருக்கிறான் என ஆச்சர்யமாகவும் இருந்தது.

“போனா, வந்தா, நேருல கொஞ்சம் காசை குடுத்துட்டு பாத்திட்டு வருவேன்.  மாசா மாசம் அனுப்பற சோலியெல்லாம் நமக்கிட்ட நடக்காது” என தனது பணப்பட்டுவாடா பற்றிய செய்தியை, புட்டுப் புட்டு வைத்திருந்தான் சிறியவன்.

இதையெல்லாம்பற்றி,  தான் இதுவரை கேட்டதில்லை என்பதைவிட, யோசித்ததுகூட இல்லை என்பது, தற்போதுதான் நினைவிற்கு வந்தது ஜெகனுக்கு.

தம்பியிடம் பேசியவனுக்குள் நிறைய புதிய சிந்தனைகள். உடன் பணிபுரிபவர்களின் பேச்சுக்களுக்கிடையே அறிந்து கொண்டிருந்த விசயங்கள் என முன்பைக் காட்டிலும் கூடுதல் பக்குவத்தையும், அணுக வேண்டிய வாழ்வியல் முறைமையையும், கடுகளவு கற்றுக் கொள்ளத் துவங்கியிருந்தான்.

திருமணம் என்றதுமே, தன்னை திருத்தம் செய்து கொள்ள ஆர்வத்தோடு முயன்ற ஜெகனை, மகிழ்ச்சியோடு வரவேற்கக் காத்திருந்தது கந்தர்வ காலம்.

…………………

வார விடுமுறைக்குப்பின் அன்று கல்லூரி திறந்திருந்தது.

திடீரெனப் பெய்யத் துவங்கிய பெருமழையில் நனைந்து, ஈரமான ஒட்டிய ஆடையோடு, காரிடரில் நடந்து வந்தவளுக்கு, காற்று வீசியதில் உடலெங்கும் குளிரால் ரோமங்கள்  சிலிர்த்தெழுந்தது. வேகமான நடையை எட்டிப்போட எண்ணியவளுக்கு, ஈரமான ஆடை தடுத்தது. ஒருவழியாய் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தாள்.

அதற்கு முன்பே அங்கிருந்த கிருபா, திவ்யாவைக் கண்டதும் எழுந்து, காலை வணக்கத்தை கூறியபடியே, அவளை நோக்கி வந்தான். அவளின் அங்க அடையாளத்தை, அலங்காரமாய், நனைந்திருந்த ஆடை எடுப்பாய்க் காட்டிட, வாலிபத்தின் உணர்வு விழித்துக்கொள்ள, பார்வையை விலக்காமல், கோவிலுக்குள் நுழைந்த பக்தனாய், பாவையைச் சுற்றி வர ஆயத்தமானான்.

அவனைக் கண்டதுமே அவள் தயங்க, “ஏய்! என்ன இப்டி நனைஞ்சு வந்திருக்க!” வாய்தான் வாஞ்சையாய் விசாரித்தது. 

வாலிபப் பசி எழ, வாட்டிய உணர்வுகளுக்கு, பார்வை வழியே கிடைத்த மயக்க பானத்தை, விழிகள் வழியே பருகத் துவங்கியிருந்தது.

“அங்கல்லாம் வெயிலு காலையிலேயே மண்டையப் பொளக்குது.  இங்க வந்தா சோனு மழை!  அதுவும் விடாமப் பெய்யுது!” சோகமே இழையோட சோர்ந்து போன குரலில் சொன்னாள்.

“கொஞ்சம் வயிட் பண்ணி வந்திருக்கலாம்ல” அக்கறையைவிட, அவனது ஆர்வமான பார்வைகள் சென்ற இடத்தை கவனித்தவளுக்கு, உள்ளூர உண்டான உணர்வு என்னவென சரியாக வரையறுக்கத் தோன்றவில்லை.

“பஸ் மூவாகும்போது ஒன்னுந் தெரியாது.  நிறுத்தியிருக்க பஸ்ஸுக்குள்ள உக்காந்திருந்தா, மூச்சு முட்டற ஃபீல். கொஞ்ச நேரத்திலேயே மயக்கம் வரும்போல இருந்தது. இப்போதைக்கு மழை நிக்கற மாதிரியுமில்ல.  யாரும் குடையெடுத்திட்டும் வரலை.  சோ, வந்துட்டேன்”

கிருபாவின் ஆவலான பார்வைகள், சந்தோசத்தைத் தந்தாலும், சின்ன சங்கடத்தையும் தந்தது அவளுக்கு.

குட்டிபோட்ட பூனையை அதன் கால்களுக்கிடையே சுற்றித் திரியும், குட்டியைப்போல, தன்னோடு நெருங்கிச் சுற்றியவனை, தவிர்க்க இயலாமல், உள்ளுக்குள் தவித்தபடியே, விரைவாய் சில பணிகளைச் செய்ய முனைந்தாள்.

பேசிக் கொண்டே, தனது பேகில் இருந்த புத்தகம், நோட்டுகளை வெளியில் எடுத்து ஃபேனுக்கு கீழே வைத்தவள், “இதல்லாம் இப்டிக் காயட்டும்” வெளியில் செல்லும் தோரணையோடு செயல்பட்டவளைக் கண்டவன், “எங்க இப்ப போகப்போற”

“ரெஸ்ட் ரூம் போயி, எல்லாம் சரி பண்ணிட்டு வரேன்” உடையின் ஈரத்தைக் காட்டிக் கூறினாள்.

கல்லூரியில் பயில வரும் பெண்களுக்கு, திடீர் சுகவீனம், வேறு எதாவது அவசரமெனில்,  பயன்படுத்துவதற்கு ஏதுவாக வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் ஓய்வு அறையை அவசியத்திற்கு (Rest and Sick Room) உபயோகித்துக் கொள்ளலாம்.

அவனைக் கண்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள். அவனின் ஏக்கமான பார்வையை மீறி, இங்கிருந்து தன்னால் செல்ல இயலாது என்பதை, அவளின் புத்தி, பதமாய் தெரிந்து வைத்திருந்தமையால், இதமாய் செயல்பட எண்ணினாள்.

“இங்கதான் யாருமில்லையே.  இந்த பேன்லயே டிரெஸ்ஸ காய வையி டீடீ(திவ்யதர்ஷினி), ஹேரை(Hair) காய வைக்க நான் ட்ரை பண்ணறேன்” அவளின் அருகாமையை இழக்க, அவனின் ஏக்கம் நிறைந்த உணர்வு தயாராய் இல்லை. அதனால் கெஞ்சலாய் கேட்டான்.

“இல்ல கிருபா.  அங்கதான் கன்வீனியன்ட்டா இருக்கும்” திடமாய் உரைத்தவள், வெளியில் செல்லக் கிளம்ப, தனது கைக்கு அருகாமையில் வந்திட்ட ஒன்று, கிட்டாது நழுவிய உணர்வு அவனுக்குள்.  அதை இழக்க விரும்பாதவன், அவளின் கைபற்றி தன்னை நோக்கி இழுத்தான். எதிர்பாரா செயலில், இழுத்தவனின்மீது பசை போடாமலேயே ஒட்டியிருந்தாள்.

சின்ன வாய்ப்புகளையும், சிந்தாமல், சிதறாமல், தனக்குள் சேமித்தோ, சேகரித்தோ வைத்துக்கொள்ளும் வல்லமை வாய்ந்தது, காதலின் குழந்தைகளான, காமமும், மோகமும்.

அவனின் கதகதப்பு, குளிரால் சிலிர்த்திருந்த தோலிற்கு இதம் தந்திட, அணைப்பை தடுக்க முனையாமல் பேச்சற்றுப் போயிருந்தாள். அவனது ஆண்வாசம் நாசியில் நிறைந்து, நிச்சலனமாய் மாற்றத் துவங்கியிருந்தது.

இனிமை, இருவரையும் எங்கோ இட்டுச் செல்லத் துவங்கியது.  இனிமை புதிது! இந்த நிலைமையும் புதிது!  இனி இது கிட்டுமா அல்லது கைவிட்டுப் போகுமா எனும் மனநிலை இருவருக்கும்.

உடனே அதனை வாரிச் சுருட்டி, வாகாய் தனக்குள் நிறைத்து, நிறைவடையும் வெறி, பருவ மனங்களுக்குள்.

தன்மீது மோதி நின்றவளை, விழாமல் தாங்கிப் பிடித்த கைகள், அவளின் விழியில் தன்னைப் பார்த்து, மூச்சடைத்துப் போனது.

மூச்சடைத்து, பேச்சடைத்துப் போனலும், இருகை கொண்டு, தனது கரங்களால் பொன்னைத் தாங்குவதுபோல, பெண்ணின் வதனத்தை பதவிசாய்த் தாங்கியிருந்தன கிருபாவின் கைகள்.

அனிச்சையாய் அரங்கேறிய செயலில், யாரும் யாரையும் குற்றம் கூற இயலாதபடி, ஒருவரையொருவர் மறந்திருந்த தருணமது.

அவனது கைகளின் சொரசொரப்பில், அவளின் மென்மை உணரப்பட, உணர்வுகள் உந்திட, மலர்ந்திருந்த அவளின் வதனத்தில், இதழில் தேங்கியிருந்த மதுவை நாடி, வண்டு ரீங்காரத்தோடு முன்னேறத் துவங்கியிருந்தது.

ஆணின் அருகாமை அவளுக்கு புதியது.  இதுவரை தந்தையின் அரவணைப்பை உணர்ந்ததில்லை. 

விக்கி, அவளின் சிறுவயது முதலே நல்ல நட்பாக இருந்தாலும், சமீபமாய் சற்று இடைவெளியோடுதான் நிற்பான்.

திவ்யா தொட்டுப் பேசினாலும், “தொடாம பேசு திவ்யா.  எங்கிட்டனு இல்லை. எந்த ஜென்ட்ஸ்கிட்டனாலும் இதை அவாய்ட் பண்ணு.  டிஸ்டர்ன்ஸ் கீப்அப் பண்ணு”

“ஏண்டா அப்டிச் சொல்ற?”

“சொன்னா கேளு.  தேவையில்லாத ஆராய்ச்சி உனக்கெதுக்கு” காரமாய் கூறிடுவான்.

ஒரே அண்ணனும், அப்படித்தான். ஆழியளவிற்கு, அன்பு மனதிற்குள் இருந்தாலும், எந்த ஆணோடும் ஓரளவிற்குமேல் நெருங்கிப் பழக அனுமதித்திராத கட்டுப்பாடான பழக்கமுறைகள்.

பெண் பெரியவள் ஆகுமுன்னேயே கட்டுப்பாடுகள் துவங்கிவிடும். அப்படி வளர்ந்திருந்தவளுக்கு, திடுமென நடந்த செயல், புதுமையோடு, இனிமையைக் கூட்டிக் காட்டியது.

இதழோடு, இதழ் உரசியதும் உண்டான உடலின் மின்னோட்டத்தில் உடலெங்கும் பரவச உணர்வு இருவருக்குள்ளும் வியாபிக்கத் துவங்கியிருந்தது. அதில், ஒருவரையொருவர் மறந்திருக்க, அடுத்த கட்டமாய், தீண்டலில் கிட்டிய இனிமையைக் காட்டிலும், சுவைக்கும் இனிமையை மனம்நாட, அதைத் தேடி முன்னேறியவனை, வகுப்பை நோக்கி நெருங்கிய சரக், சரக்கெனும் காலடிச் சத்தம் தடுத்தது. அவளும் சுயநினைவிற்கு வந்திருக்க, சுதாரித்து, கிருபாவிடமிருந்து வலுக்கட்டாயமாக தன்னை விலக்கிக் கொண்டாள்.

குனிந்தவாறே தனது கையிலிருந்து தவறிய கைகுட்டையை குனிந்து எடுத்தவள், “நான் வரேன்” அவசரமாய் வெளியே கிளம்பினாள்.

‘ச்சேய்’ வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தால் எப்டியிருக்குமோ, அப்டியிருந்தது கிருபாவின் நிலை.

காரிடரில் கடந்தவனை கொல்லும் வெறி வந்தது.  பூஜைக் கரடி என திட்டித் தீர்த்தான். தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, தலையைக் கோதியபடியே சிறிது நேரம் நின்றிருந்தவன், அதன்பின் அவனது இடத்தை நோக்கிச் சென்றமர்ந்தான்.

அனுபவத்தை, அனுபோகமாய் நினைவலையில் மீட்டிப் பார்த்து, இனிமையை நீட்டித்தான்.

வகுப்பறையில் மாணாக்கர் வரத் துவங்கியிருக்க, உள்ளே நுழைந்த கயல் வரும்போதே, யாரையோ எதிர்நோக்கி வந்த பார்வையோடு, பார்வையை வலைவீசியபடி வந்தாள்.

பேகை அவளது இடத்தில் வைத்துவிட்டு, நேராக கிருபாவிடம் சென்று ஏதோ கிசுகிசுக்க, அதுவரை இருந்த இனிமையான அனுபோகத்திலிருந்து விடுபட்டு, விழிப்பு நிலைக்கு வந்திருந்தான்.

“மார்னிங் பிரேக்கப்போ, கேண்டீன்கு வா. உங்கிட்ட ஒரு விசயம் கேக்கணும்” கயல்

“என்னனு சொல்லு”

“பிரேக்கப்ப மறக்காம, கண்டிப்பா வந்திரு, அங்கவச்சு சொல்றேன்” அதற்குமேல் தாமதிக்காமல் அவளது இடத்தில் சென்று அமர்ந்துவிட்டாள்.

இடைவேளைவரை “என்னவாக இருக்கும்” யோசித்து மண்டை காய்ந்திருந்தது கிருபாவிற்கு.

திவ்யாவுடன் அதன்பின் பேசவில்லை. அவளுக்கு சங்கடம்.  அவனை நிமிர்ந்து நோக்கவே நாணம் தடுத்தது.  அத்தோடு தயக்கம் வேறு. ஏதோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள். 

தான், அவனோடு இத்தனை தூரம் நெருக்கமாய் நடந்து கொண்டது வேறு நெருடலைத் தந்திருந்தது. அன்று காலை நிகழ்வுக்குப்பின் திவ்யாவும் ஒரு நிலையில் இல்லை. சங்கடம், சந்தோசம் என மாறி மாறி வந்த மனநிலையோடு இருந்தவளால், கயலைக் கவனிக்க முடியவில்லை.

…………………………………….