emv8b

emv8b

எனை மீட்க வருவாயா! – 8B

 

என்றாவது கேண்டீன் வந்து செல்பவள்தான் கயல். ஆனாலும், தான் பேசப் போவதை எண்ணியபடியே வந்தவளுக்கு தடுமாற்றம்.  சுதாரித்து, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, நேராகச் சென்று டீயை வாங்கியவள், கிருபாவின் அருகே எதேச்சையாகச் செல்வதுபோல அவன் அமர்ந்திருந்த டேபிளின் முன்னே சென்று அமர்ந்தாள்.

இரண்டு மிடறு தேனீரை அருந்தியவள் யாருக்கும் சந்தேகம் எழாதபடி, இயல்பாக, “சண்டே ஈவினிங்.. அதான் நேத்து எங்க போயிருந்த கிருபா?”

“…”

“என்னடா திடுதிப்புனு வந்து இப்டிக் கேக்கறாளேன்னு யோசிக்கிறியா. இப்போ நேரமும் அதிகமில்லை.  சோ, கேட்டதுக்கு சீக்கிரமாப் பதில் சொல்லு”

“எதுக்குக் கேக்கற” முறைப்பாய் கேட்டான்.

“சொல்லுவேன்! சும்மா தெரிஞ்சிக்கத்தான்!” சிரிக்க முயன்றாள்.

“வீட்லதான்!” அசால்டாக உரைத்தான்.

”பொய் சொல்ற” சட்டெனக் கூறினாள்.

“எல்லாந் தெரிஞ்சவ! நான் வேற எங்க போயிருந்தேன்னு  நீயே சொல்லுவேன் பாக்கலாம்!” இளக்காரமாய் வந்தது.

“நீதான **** அக்காவை, உன்னோட பைக்ல நேத்து ஏத்தீட்டுப் போன!”

“..?!”

“சொல்லு,  அது நீதான” விடாமல் துளைத்தாள்.

“யாரு ****” உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளியில் காட்டாமல் இருக்க முயன்றபடியே கேட்டான்.

“ஏய்… உன்னோட பைக் நம்பர் எனக்குத் தெரியும்.  நீ ஹெல்மெட் போட்டிருந்தா, உன்னை அடையாளம் தெரியாமப் போயிருமா?  நீதான் அது.  எனக்கு நல்லாத் தெரியும்.  அந்த அக்காவை இப்ப எங்க கொண்டு போயி மறைச்சி வச்சிருக்க?”

“லூசு மாதிரி எதாவது வந்து பேசுவியா?  ஒழுங்கா பாத்தியா?  அதுதான் என் வண்டினா, என் வண்டி நம்பரச் சொல்லு”

விழித்தவள், நம்பரைக் கூறி “அது உன்னோட வண்டிதான்… நீதான் பின்னாடி டபுள் ஹார்ட் ஸ்டிக்கர், ஃபேண்டா கலர்ல டிஃரண்டா சின்னதா ஒட்டியிருந்த.  அது உன்னோட பைக்தான்.  காலேஜ்கு வண்டியெடுத்துட்டு வந்தல்ல.. அப்ப நான் பாத்திருக்கேன்.  அதுல வந்ததும் நீதான்.  ஹெல்மெட் போட்டிருந்ததால மத்தவங்களுக்குத்தான் உன்னை அடையாளம் தெரிச்சிருக்காது.  ஆனா எனக்கு நீதான் அதுன்னு நிச்சயமாத் தெரியும்” உறுதியாகச் சொன்னாள்.

“…” கயலின் பேச்சை எதிர்பாரா கிருபாவின் மனம் தொய்ந்தாலும், வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான்.

“இப்ப அந்த அக்காவைத் தேடிட்டு இருக்காங்க.  எங்க ஊருலயே அந்த அக்காவைப் பத்தித் தெரிஞ்ச ஒரே ஆளு, இப்ப நா ஒருத்திதான்”

“வாயிக்கு வந்ததை பேசாத கயல்.  தேவையில்லாம எதாவது பேசினா, நல்லாருக்காது பாத்துக்கோ.  பொண்ணுனு அமைதியா இருக்கேன்.  இதுவே, இந்த எடத்துல பசங்கன்னா இன்னேரம் நடந்திருக்கறதே வேற” கையை பெண்ணுக்கு எதிரே பத்திரம் காட்டி, சிலிர்த்துக் கொண்டு வந்த சிம்மக் குரலில், அசராமல் கிருபாவின் வலக்கையில் இருந்த காப்பையே பார்த்திருந்தாள் கயல்.

“இப்டியெல்லாம் பேசினா. நீ இல்லைனு நம்பிருவேன்னு நினைச்சியா.  இன்னைக்குள்ள எப்டியாவது கண்டுபிடிச்சிருவாங்க. அப்டி கண்டுபிடிக்க முடியலைன்னாலும் நான் சொல்லுவேன்” திண்ணக்கமாய் கூறினாள்.

“…” ‘விடமாட்டா போலயே’

“என்னோட சந்தேகத்தை மட்டும், லைட்டா அங்க புள்ளி வச்சா போதும். கோலம் போட, உங்க வீட்டுக்கே நேருல வந்துருவாங்க. அப்பத் தெரிஞ்சிரும் நீ சொன்னது உண்மையா? இல்லை நாஞ்சொன்னது பொய்யானு.  என்ன சொல்லிரட்டா” என நக்கலாய் கேட்டாள்.

கயலை இந்த பண்பேற்றத்தில் கற்பனை செய்திராதவன், சற்று தயங்கி யோசித்தபடி, அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.

வீரதீரமாய் ஆனால் குறைந்த சத்தத்தில் கேட்டவள், “முக்கியமா, இதைப்பத்தி உங்கிட்ட கேக்கணுமின்னுதான் காலேஜ்கே வந்தேன்.  இல்லைனா லீவப் போட்ருப்பேன்.  இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை.  மதியத்துக்குள்ள விசயம் என்னானு சொன்னா தப்பிச்ச.  இல்லைனா நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை” அவனது பதற்றத்தை இவளின் வார்த்தைகள் வழிக் கூட்டும் முயற்சியில் இறங்கினாள்.

பதறாதவன், அமைதியாய் எதிரே இருந்த டீயை எடுத்துப் பருகியவன், “…” பதில் பேசவில்லை.

“எதுனாலும் இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்கு.  யோசிச்சு சொல்லு”

“இதை எதுக்கு இப்ப எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க? என்ன வேணும்.  எங்கிட்ட இருந்து இப்ப என்ன எதிர்பாக்கிற” என்றான் கிருபா. இப்படிக் கேட்டாள் பெண் தயங்கி, பின்தங்குவாள் என நினைத்து அவ்வாறு பேசியிருந்தான் கிருபா.

அதனைக்காட்டிலும், ஒரு பெண் தன்னை மிரட்டிக் கேட்பதற்கு, பயந்துபோய் அனைத்தையும் எப்படிச் சொல்வது.  அகங்காரம் அவனை கீழே இறங்கவிடாமல் தடுத்தது. அதைவிட ஆச்சர்யம்கூட.  கயலை சாதாரணமாக எடை போட்டிருந்தான்.  அவள் அசாதாரணம் என்பதைக் கண்டு கொண்டது வியப்பையும் தந்திருந்தது.

“அப்ப அது நீயில்ல!”

“…” தலையை அசைத்து மறுத்தான்.

“சாரி. ஒன்ன மாதிரி இருந்தது. அதான் வந்து கேட்டேன். தப்புதான்” என்றவள், “இனி யாருகிட்ட இதப்பத்திப் பேசணுமோ அவங்கட்ட பேசிக்கறேன்.” என அங்கிருந்து எழுந்து சென்றிருந்தாள் கயல்.

வகுப்பிற்கு நேரமானபோதும், அங்கேயே அசையாமல் யோசனையோடு அமர்ந்திருந்தான் கிருபா.

முந்தைய நாளின் மாலையில் யாருமறியாமல் தான் செவ்வனே செய்து முடித்ததாய் இறுமாந்திருந்ததை, ஒருத்தி வந்து, நேரில் நின்று இப்படிக் கேட்பாள் என நினைத்திராதவனுக்குள் புயல் போராட்டம் மனதிற்குள்.

வகுப்பை நோக்கிச் சென்றவளோ, ‘மூஞ்ச பாத்தா, உண்மை சொல்ற மாதிரித் தெரியலை. இங்க திவ்யா, அங்க அந்த அக்காவா? இப்டி இன்னும் எத்தனை பொண்ணுங்களைடா ஒத்த ஆளே மெயின்டெயின் பண்ற ஐடியால இருக்க?  இல்லை வேற யாருகூடவும் கல்யாணம் பண்ணி வைக்கனா, அதை எங்கிட்ட சொல்ல வேண்டியதுதான-  அதவிட்டுட்டு ரொம்பத்தான் பேசுறான்.  ஆம்பளைன்னா என்ன வேணாலும் பண்ணுவியோ! எல்லாத்துக்கும் இன்னைக்கே ஒரு முடிவு கட்டறேன்!  எங்க ஊருல போயி இந்த விசயத்தைப் பத்தி சின்னதா ருது குடுத்தா போதும். உடனே போலீசோட வந்து உன்னை அள்ளிக்கிட்டு வந்திருவாங்க.  அப்பத் தெரியும்டீ. இந்த கயல் யாருன்னு.  பாவமே.. நமக்கு தெரிஞ்ச பயலாச்சேன்னு பக்குவமா வந்து கேட்டா, என்னா தெனாவட்டு!  இருடீ…! இனி நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்ல!  வேடிக்கை மட்டும்பாரு!’ என நினைத்தபடி நடந்தவளின் மனம் நடந்த விசயங்களினால் உண்டான உள்ளத்து வெம்மையில், அவன் செய்த செயலைவிட, பேசிய தெனாவட்டான பேச்சில் எழுந்த எரிச்சலோடுடனான கோபம் எரிமலையாய் பெண்ணை மாறச் செய்திட, மதியமே வீட்டிற்குத் திரும்ப முடிவெடுத்திருந்தவள், அதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள்.

……………………

முந்தைய தின மாலை வேளை..

தள்ளுவண்டியில் ஐந்து குடங்களுடன் நீர் எடுக்கப்போகும் வழியில், நிறுத்தியிருந்த பைக்கின் அருகே, தலையில் மாட்டிய ஹெல்மெட்டோடு முதுகுகாட்டிப் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு, எங்கோ பார்த்த நினைவில், யோசித்தபடி சென்றாள்.

அவளது கிராமத்தில் அப்படித்தான் வீட்டுத் தேவைக்கு நீரை எடுப்பது வழக்கம்.

அப்போது திரும்பிப் பார்த்தவளின் கண்ணில், பைக்கில் இருந்த ஃபேண்டா நிற ஸ்டிக்கர் கண்ணில்பட, அவளுக்கு அது சமீபத்தில் எங்கோ பார்த்ததாய், மிகவும் பரிச்சயமாகத் தோன்றியது.  ஆனால் அது யாருடையது என சட்டென நினைவிற்கு வரவில்லை

வேண்டிய நீரை குடத்தில் சேகரித்து எடுத்துக்கொண்டு திரும்பிய வழியில், அந்த பைக்கில் காத்திருந்தவனுடன் சென்றவளைப் பார்க்க நேர்ந்தது.

‘**** அக்கா பொழுதடைஞ்ச நேரத்தில யாருகூடப் போகுது’ என நினைத்தபடியே, இருவரையும் பார்த்தபடியே கடந்திருந்தாள்.

கயலைவிட மூத்தவள்தான் அந்தப் பெண். இதுவரை சந்தேகப்படும்படியான எந்தச் செயலோ, பேச்சோ அந்தப் பெண்ணைப் பற்றி ஊருக்குள் இல்லாமல் இருக்கவே, கண்ட காட்சியை தவறாக கருத்தில் கொள்ளவில்லை.

அப்போதும், அந்தப் பெண் தனது ஊர், அத்தோடு அவளின் உறவுக்காரர் என்பதால், அந்த பைக்கையும், அந்த நபரையும் பார்த்தபோது, தனக்கு பரிச்சயமாகத் தோன்றியிருக்கிறது என மனதைத் தேற்றியிருந்தாள் கயல். ஆனாலும் அப்டி நமக்குத் தெரியாத உறவுக்காரவங்க யாராயிருக்கும் என நீண்ட அவளின் ஆராய்ச்சியைத் தடுக்க, எதிர்பட்ட, ஒருத்தி “என்ன கயலு, ரொம்ப நாளா இந்தப் பக்கமே பாக்க முடியலையே” என நிறுத்தியிருந்தாள்.

அவளோடு நின்று சற்று நேரம் கதையளந்து, வீடு சேரும்போது அனைத்தையும் மறந்திருந்தாள்.

அடுத்து வந்த இரண்டு மணி நேரத்திற்குபின் ஊரே அல்லோகலப்பட்டது. அப்போதுதான் விசயத்தின் உண்மை வீரியம் உணர்ந்தாள் கயல்.

நீரை தள்ளுவண்டி கொண்டு, ஐந்து குடங்களில் எடுத்துத் திரும்பும்போது, ஊர் எல்லையில் தான் கண்ட பைக்கில், அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்றவனை, மனக்கண்ணில் கொண்ர்ந்தாள் கயல்.

பைக்கை கையாண்டவனது உடல்மொழியினை யோசித்தாள்.

****வைக் காணவில்லை எனும் செய்தி கேட்டபின், மூளையைக் கசக்கி யோசித்தாள். இரவெல்லாம் உறங்காது யோசித்தவளுக்கு, சில மாதங்களுக்குமுன் நடந்த நிகழ்வோடு ஒப்பிட, கிருபாவை ஒத்திருந்தது அந்த உருவம்.  அத்தோடு வண்டி   எண்ணையும் முதல் முறை பார்த்தபோது தோன்றியதோடு ஒப்பிட, அதுவாகத்தான் இருக்கும் என மனம் உறுதி சொன்னது.  அத்தோடு அவனது கையில் இருந்த காப்பு, அதைக் கொண்டே கிருபா என்பதை முடிவு செய்தாள்.

அப்போது முதல் ஒரே மனக்குழப்பம்.  கிருபாவா? அவனைவிட அந்த அக்கா பெரியவர்.  இருவருக்கும் இடையே பழக்கம் எப்படி? இதுபோல எண்ணற்ற கேள்விகள் மனதில்.

சட்டென அவனைக் காட்டிக் குடுக்கவும் தயக்கமாக இருந்தது கயலுக்கு.  அதனால் விடியல்வரை பொறுத்திருந்தவள், கல்லூரிக்கு வந்த அவனிடம் கேட்டிருந்தாள். அவனது முகத்தை கவனித்துப் பார்த்தபோது, மிகக் குறைந்த முகமாற்றம் அவளது ஐயத்தை உறுதி செய்தாலும், அவன் மறுத்தது, கோபத்தை உண்டாக்கியிருந்தது.

மறுத்தவனது மறுப்பு உண்மையாய் இருந்து, தான் யூகித்து தவறாக இருக்குமோ என மீண்டும் முந்தைய நாளை மனதில் நிறுத்தி யோசித்தாள்.

வலக்கையில் போட்டிருக்கும் கிருபாவின் காப்பை முந்தைய தினமும் கவனித்திருந்தாள்.  அதை தற்போது கேண்டினில் கவனித்தவளுக்கு கிருபாதான் அது என மனம் அடித்துச் சொன்னது. இதையேதோன் முந்தைய நாளும் பார்த்து யோசித்தாள்.  ‘இதுபோல யாரோ போட்ருந்ததைப் பாத்திருக்கோமே’ என.  அதனால் தனக்காகவோ, இல்லை பிறருக்கு உதவுவதற்காகவோ கிருபா அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றாலும், அவர்களின் பக்க நியாயம் எதுவும் இருக்குமெனில் அறிந்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடும் எண்ணம்தான் கயலுக்கு.

ஆனால் முகத்தைத் திருப்பி, முரட்டுத்தனமாய் தன்னிடம் பேசியவனை பற்றி எண்ணியபோது, கண்டிப்பாக ஊரில் சென்று பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என ஆத்திரத்தோடு எண்ணினாள்.

ஆனாலும் இடைவேளைக்குள் கிருபா என்ன செய்தான்? கயல் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாளா?

……………….

Leave a Reply

error: Content is protected !!