அத்தியாயம் – 1
‘தடக் தடக்’ என்று தடையில்லாமல் ஓடிகொண்டிருந்த ரயில் ஓசையில் ஸ்ருதியை ரசித்தபடி விழிமூடி அமர்ந்திருந்தான். அதுவரை ஆழ்கடலை போல ஆர்பரித்த மனதில் அமைதி நிலவியது.
“பொழுது விடிய நேரம் ஆகிருச்சு” எங்கோ யாரோ சொல்ல கேட்டு அவன் விழிதிறக்கும் வேலையில் ரயில் விழுப்புரத்தில் நின்றது. வானில் கருப்பு மேகங்கள் மெல்ல கலந்துவிட கிழக்கு வானமே செவ்வானமாக சிவக்க தொடங்கியது.
அதுவரை மரத்தில் அடைந்திருந்த குருவிகள் ஆர்பரித்து கொண்டு வானில் பறப்பதைக் கண்டான். வானில் சூழ்ந்திருந்த இருள் கலைந்துவிட சூரிய வெளிச்சம் பரவியது. தன் வாழ்க்கையில் சூழ்ந்துவிட்ட குழப்ப மேகங்கள் கலைந்து இனிமேலாவது வெளிச்சம் வருமா என்ற கேள்வியுடன் வானத்தையே பார்த்தான்.
ரயில் மீண்டும் வேகமெடுக்க ஆதியின் பார்வை ரயிலின் வேகத்தில் பின்னோக்கி சென்ற மரங்களின் மீது நிலைத்தது. அதைக் கண்டவுடன் ஏனென்றே அறியாமல், ‘இதுவும் கடந்து போகும்’ என்ற எண்ணம் அவனின் மனதிற்குள் நினைத்தான்.
அவனின் அழுத்தமான உதடுகளில் கசந்த புன்னகை தோன்றி மறைந்தது!
அந்த ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
குற்றாலத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்த அவனின் மனதிற்குள் ஆயிரம் ரணங்கள்.
ஜன்னலின் வழியாக பின்னோக்கி சென்ற மரங்களை வேடிக்கைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த ஆதித்யா அதுவரை நடந்த நிகழ்வுகளை மனதிற்குள் போட்டு புதைத்தான்.
அவன் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்ட மஞ்சுளா, “என்ன ஆதி ஒரு மாதிரி இருக்கிற” என்று மகனின் தலையை வருடிவிடவே அவரின் கைவிரல் ஸ்பரிசத்தில் சட்டென்று திரும்பி தாயின் முகத்தைப் பார்த்தான்.
“இல்லம்மா சொந்த ஊரைவிட்டு போவதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப பாரமாக இருக்கும்மா” என்றான் கண்களில் வலியுடன்.
அவனின் குரலில் மறைக்கபட்ட வலி வெளிப்படையாக தெரியவே, “உன்னை சுற்றி பாரு கடிகார முள்ளில் இருந்து, கிழக்கே உதிக்கிற சூரியன் வரை ஓடிட்டே தான் இருக்கு. மலையில் பிறக்கும் நதி அதே இடத்தில் தேங்கி நின்றுவிட்டால் குளமாகி பின்னாடி கெட்டுபோய்விடும். நதி மாதிரி ஓடிட்டே இருந்தாதான் கண்ணா வாழ்க்கை அழகாக இருக்கும்” அவனுக்கு புன்னகையுடன் போதித்தார் மஞ்சுளா.
அவர் கூறிய வார்த்தைகள் அவனின் காயபட்ட மனதிற்கு இதமாக இருக்க, “என் கையில் எதுவும் இல்லம்மா. ஆனாலும் என்னை நம்பி சென்னை வரீங்களே அதன் யோசனையாக இருக்கு” என்றான் மைந்தன் புன்னகைக்க முயன்றபடி.
அவனின் கேசத்தை பாசத்துடன் வருடிய மஞ்சுளா, “இத்தனை நாளும் உங்க அப்பா போட்ட பொய் வேஷத்தை நம்பிட்டு நான் அமைதியாக இருக்க காரணமே உன் படிப்புதான். இப்போ என் மகன் படிப்பை முடிச்சு ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு வேலையும் கிடைச்சிருக்குன்னு நீ வந்து சொல்லும்போது நான் பட்ட கஷ்டம் எல்லாமே மறந்து போச்சுடா” என்றவர் மகனை மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.
அவருக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கூட அவளிடம் இல்லாமல் போனதே என்ற எண்ணம் அவனின் நிம்மதி இழக்க செய்தாலும், நிதர்சனம் உணர்ந்து தன் சிந்தனையை மாற்ற முயற்சித்து அதில் வெற்றியும் கண்டான். இந்த ரயில் பயணம் அவனின் வாழ்க்கையை புரட்டி போடுவதாக அமையுமா என்று தெரியாமலே அமைதியை தேடி அலைபாய்ந்தது அவனின் உள்ளம்.
அதுவரை மனதில் இருந்த அவளின் நினைவுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இனிமேல் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவனின் மனதில் தெளிவு பிறந்தது.
ஜெகன்நாதன் – மஞ்சுளாவின் தவப்புதல்வன். எந்த நேரமும் குற்றலத்தை சுற்றி திரியும் அவனுக்கு சிவில் இஞ்சினியரிங் படிப்பு என்றாலே அவ்வளவு இஷ்டம். அவன் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் வேலை தேடுகிறேன் என்று சுற்றி திரிவான்.
அவன் சாதாரணமாக இருக்கிறானே என்று எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் இடைபட்ட நாட்களில் அவனுக்கு நடந்த சில கசப்பான உணர்வுகள் அவனின் மனதை இறுகிவிட காரணமானது. இப்போ இருபத்தி இரண்டு வயதில் அவனின் மனதில் முன்னேற வேண்டும் என்ற விதை ஆழமாக விழுந்தது.
அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்க அவர்களின் பொருட்களை எல்லாம் லாரியில் போட்டு சிவாவை சென்னைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் இப்போது ரயிலில் சென்னை சென்று கொண்டிருக்கிறனர்.
அதற்கே உண்டான பரபரப்புடன் செயல்பட்டது சென்னை ரயில் நிலையம். காலையில் கல்லூரிக்கு போகும் பிள்ளைகள் தொடக்கி தொழிலுக்கு செல்லும் அனைவருமே அதிகம் பயன்படுத்துவது ரயிலை மட்டுமே. அதனால் சென்னை ரயில் நிலையத்தில் கூட்டம் திரளாக நின்றது.
தாயும் மகனும் சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர்.
அவர்கள் கீழே இறங்குவதைக் கண்டு, “ஹாய் ஆதி” என்ற குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் புன்னகையின் சாயல் தோன்றி மறைந்தது.
“நீ ஏன் சிவா இவ்வளவு தூரம் வந்திருக்கிற. நாங்க அனுப்பிய பொருளை எல்லாம் வீட்டில் வைத்துவிட்டு அங்கேயே இருக்க வேண்டியதுதானே” ஆதங்கத்துடன் கூறிய ஆதியை முறைத்தபடி அவர்களின் அருகே வந்தான் சிவா.
“நான் சென்னை வாடான்னு சொல்லும் போதெல்லாம் வராதவனுக்கு இப்போது தான் இங்கே வர வழி தெரிந்ததா” என்று கோபத்துடன் சண்டைக்கு வந்தான்.
சிவா ஆதியின் உயிர் நண்பன். அவர்கள் இருவரும் ஒரே கோர்ஸ் எடுத்து படித்தவர்கள். அவன் படிப்பு முடிந்ததும் சென்னை வந்துவிட்டான்.
அவன் பல முறை சென்னைக்கு அழைத்தபோதும் மறுத்தவன் ஒரு வாரத்திற்கு முன்னே போன் செய்து தனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடும் பண்ணி தருபடி கேட்டது சந்தோசப்பட்ட சிவா அவன் கேட்டதை உடனே செய்தான்.
அவனின் கோபம் புரிந்தாலும், “இப்போதான் வந்துட்டேன் இல்ல. அப்புறம் எதுக்குடா திரும்ப திரும்ப பழசை பேசற” என்ற ஆதியை அவனால் முறைக்க மட்டுமே முடித்தது.
“எல்லாத்துக்கும் நேரம் காலம்னு ஒன்னு இருக்கு இல்ல. அந்ததந்த நேரம் வந்தால் நடக்க வேண்டிய அனைத்தும் சரியாக நடக்கும்” என்று மகனுக்காக பரிந்துகொண்டு வந்தார் மஞ்சுளா.
அப்போதுதான் அவர் அருகே நிற்பதைக் கவனித்த சிவா,“வாங்கம்மா. எப்படி இருக்கீங்க? நல்ல இருக்கீங்களா?” பாசத்துடன் விசாரித்தான்.
“எனக்கு என்னப்பா நான் நல்ல இருக்கேன்” என்றவர் ஒரு பேட்டியை எடுத்துகொண்டு அவர்களுடன் இணைந்து நடந்தார்.
ஆதியின் தோளில் கைபோட்டவன், “டேய் உனக்கு எங்க சித்தப்பா நிறுவனத்தில் வேலை ஏற்பாடு செய்து இருக்கேன்டா, நீ நாளைக்கு வேலையில் சேரணும்” அவன் சொன்ன விஷயத்தை ஆதி காதில் வாங்கியது போலவே தெரியவில்லை.
அவனின் முகம் எந்தவிதமான ரியாக்ஷணும் இல்லாததை கண்டு புருவம் சுருக்கி நண்பனின் முகத்தை கூர்ந்து கவனித்தான்.
அவனின் முகம் சிந்தனையில் இருப்பதைக் கண்டு,“டேய் நான் பேசுவது காதில் விழுகுதா” என்று கத்தினான் சிவா.
“எனக்கு காது நல்லா கேட்குது..” என்று நண்பனை முதுகில் ஒரு அடிபோட்டு அலற வைத்தவன், “நான் சென்னை வரேன்னு சொன்னதும் தங்குவதற்கு வீடு ஏற்பாடு முதல் வேலைக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரை வாங்கி தந்த உன்னை மறக்கவே முடியாதுடா” என்று விசாரித்த தன் உயிர் நண்பனை விநோதமாக பார்த்தான்.
ஆதியிடம் பழைய துள்ளல் எல்லாம் மறைந்துபோய் ஒரு விதமான இறுக்கம் குடிகொண்டு இருப்பதைக் கண்டு கொண்டான். அவனிடம் வந்திருக்கும் இந்த மாற்றம் எதனால் என்று சிவாவால் கணிக்க முடியாவிட்டாலும், “ம்ம் உன்னோட நன்றியை நீயே வெச்சுக்கோ” என்றவன் இருவரையும் அழைத்துக்கொண்டு டேக்ஸியில் வீட்டிற்கு சென்றனர்.
சிவா ஒரு வீட்டின் முன்னாடி காரை நிறுத்திவிட்டு, “இறங்கு ஆதி இது தான் வீடு” என்றான்.
அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன் வீட்டை சுற்றிக் காட்டினான். இரண்டு படுக்கை அறையும், ஹால் மற்றும் சமையலறையுடன் கூடிய வீட்டை சுற்றி பார்வையை சுழற்றிய மஞ்சுளாவிற்கு அந்த வீடு பிடித்துப்போனது.
அவரின் பார்வைக் கண்ட சிவா, “என்னம்மா வீடு எல்லாம் பிடித்திருக்கிறதா?” என்று விசாரித்தான்.
“அதெல்லாம் நல்லா இருக்குப்பா” என்றார் மஞ்சுளா புன்னகையுடன்.
சிறிதுநேரம் அவர்களுடன் பேசியபடி இருந்தவன் மதியம் போல வீட்டிற்கு கிளம்பிவிட குளித்துவிட்டு வந்து ரெஸ்ட் எடுத்தனர். மறுநாள் வேலைக்கு கிளம்பிய ஆதி தன் நண்பன் சொன்ன இடத்தில் சென்று வேலைக்கு சேர்ந்தான்.
அவனுக்கு இஞ்சினியர் படிப்பில் அவ்வளவு விருப்பம் இருந்ததால் கஷ்டப்பட்டு அந்த படிப்பை படித்தவனுக்கு அந்த வேலைகூட பிடித்துப் போனது. நேரமும், காலமும் யாருக்கு நிற்காமல் ஓடிட மெல்ல மெல்ல அவனும் தனக்கு நடந்த அவமானங்களை மறந்து சென்னை வாழ்க்கைக்கு தகுந்தமாதிரி மாறிப்போனான்.
மதிய நேரத்தில் வானம் இருளால் மூடப்பட்டிருக்க திரளான கார் மேகங்கள் காற்றின் வேகத்தில் ஓரிடத்தில் ஒன்று கூடியது. சில்லென்ற தென்றல் வந்து உடலை தழுவி சென்றது. மழை வரும் அறிகுறி அறிந்து மற்றவர்கள் வேகமாக வீட்டை நோக்கி நடந்தனர்.
அன்றுடன் ஸ்கூல் படிப்பு முடிந்துவிட தன் கடைசி தேர்வை எழுதி முடித்துவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாள் அபூர்வா. பள்ளி சீருடையில் இரட்டை ஜடைபின்னலிட்டு மடித்து கருப்பு நிற ரிப்பன் வைத்து கட்டபட்டு இருந்தது.
ஒரு கையில் பேனா, பென்சில், ரப்பர் எல்லாம் வைத்துகொண்டு, மற்றொரு கையில் கொஸ்டின் பேப்பரை வாசித்து சரியான விடையை எழுதி இருக்கிறோமா? என்று தனக்கு தானே கேள்வி கேட்டபடி வந்தாள்.
அவளோடு சில தோழிகளும் நடந்துவர அவளின் கவனமோ எழுதிய தேர்வை பற்றி மட்டுமே இருக்க சாலையின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“அபூர்வா” என்று எங்கிருந்தோ கேட்ட குரலில் சட்டென்று திரும்பி நாலாபுறமும் பார்வையை சுழற்றினாள்.
அப்போது அவளை நோக்கி வேகமாக ஓடி வந்த பிரவீனை கண்டதும், ‘இவன் எதுக்கு இப்போ வருகிறான்’ என்ற சிந்தனையுடன் சிலநிமிடம் அதே இடத்தில் அசையாமல் நின்றாள்.
அவளின் அருகே வந்துவிட்டவன் நின்று மூச்சிரைத்தபடி தன் சர்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து அவளிடம் நீட்டிட அவளோ மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு அவனை கோபத்துடன் பார்த்தாள்.
“அபூர்வா நான் உனக்கு லவ் லெட்டர் கொடுக்க இவ்வளவு வேகமாக வரல” அவளின் பார்வையை புரிந்து அவன் பதில் சொல்ல அவளோ கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.
“இதை உன்னிடம் கொடுக்க சொன்னது..” என்றவன் இழுக்கும்போது ஏதோ தோன்ற அவனிடம் இருந்து லெட்டரை வாங்கி பிரித்தபோது செங்காந்தள் மலர்கள் காய்ந்துபோய் சருகாக அவளின் காலில் விழுந்தது. அதன் அச்சு அந்த பேப்பர் முழுவதும் பிரதிபலிக்க அதன் இடையே அவனின் எழுத்துகளும் தென்படவே வாசிக்க தொடங்கினாள்.
“உன்னை காதலிக்கிறேன்னு உன் பின்னாடி நான் சுற்றியதற்கு நீ எனக்கு நல்ல பாடம் கற்று கொடுத்துட்ட அபூர்வா. என்மேல் நம்பிக்கை இல்லாமல் நீ செய்த காரியம் மனசுக்குள் ரணமாக இருக்கு. இனிமேல் உன்னை நேரில் சந்திக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்துட்டேன்.
உன் காலில் விழுந்த காய்ந்து போன மலர்களின் சருகுகள் போல என் மனசும் காய்ந்து போய்விட்டது. ஆனாலும் காதலிச்ச மனசு உன் நினைவாக ஏதாவது எடுத்துட்டு போடா மடையான்னு சொல்லுது. நல்ல யோசிச்சு பார்த்ததில் உன் மனசு மட்டும் எனக்குன்னு வேணும்னு தோணுச்சு.
அதன் உனக்கே தெரியாமல் உன் இதயத்தை என்னோட எடுத்துட்டு போறேன். இனிமேல் நீ உயிர் மட்டும் இருக்கும் ஒரு கூடுதான். உன் உயிரை வேரோடு பிடுங்கி எடுத்துட்டு போறேன்.
இப்படிக்கு,
உன் இதயம் திருடிச்சென்றவன்” என்று கடிதத்தை முடித்திருந்தான்.
அதை படித்து முடித்த அபூர்வாவின் கண்கள் நிஜமாகவே கலங்கியிருக்க வேண்டும். ஆனால் அவளோ கல்லை முழுங்கி செரிமானம் பண்ணியவள் போல அந்த கடிதத்தில் இருந்த வரிகளை படித்துவிட்டு பெருமூச்சுடன் நிமிர்ந்தாள்.
“தேங்க்ஸ் பிரவீன்” என்றவள் நில்லாமல் வீட்டை நோக்கி நடக்க தொடங்கிவிட்டாள். அவளிடமிருந்து எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லாதைக் கண்டு, ‘இவளுக்கு எல்லாம் அழுகையே வரவே வராதா?’ தனக்குள் குழம்பியபடி நின்றுருந்தான் பிரவீன்.
வானில் திடீரென்று இருள் சூழ்ந்து மின்னல்கள் வெட்டிட வேகமாக பொழிய தொடங்கியது மழை. கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி வீட்டிற்கு வந்த பேத்தியை கண்டு காமாட்சிதான் மனம் பதறினார்.
“உனக்கும் உங்க அம்மாவுக்கும் இதே வேலைதான். மழை வந்தா அங்கே எங்காவது நின்னுட்டு வரலாம் இது என்ன பாப்பா” என்று அபூர்வாவை கடிந்துகொண்டு வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
சின்ன வயதில் இருந்தே அபூர்வாவை அப்படி பழக்கிவிட்ட தன் பேத்தியை மனதிற்கு வைத்தபடி அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் காமாட்சி.
மழையில் முழுவதுமாக நனைந்த நிலையில் வந்து நின்ற பேத்தியைக் கண்டு மனம் பதறிய சிவரத்தினம், “இன்னும் சின்னபிள்ளை என்ற எண்ணமா? இன்னும் சில வருடத்தில் அடுத்த வீட்டுக்கு வாழ போகும் பொண்ணு என்பதை மனதில் வெச்சுக்கோ” என்று மிரட்டிவிட்டு,
“மழை வந்ததும் அங்கே ஏதாவது நிழலில் நின்னுட்டு வராமல் இப்படித்தான் நனைந்துவிட்டு வருவதா?” என்றார்.
“வெயில் அடிக்கும்போது நிழல் வந்தபிறகும் போலாம்னு யாரும் நிற்பதில்லையே தாத்தா. அந்த மாதிரிதான் எனக்கும் மழை வந்தும் நனையாமல் வீடு போகலாம் என்ற எண்ணம் எனக்கும் வரல” என்று இறுகிய குரலில் கூறிய அபூர்வா தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அவள் ஒரு வாக்கியம் பேசினாலும் அதிலிருந்த தெளிவைக் கண்டு வாயடைத்து போய்விட்டார் சிவரத்தினம். அபூர்வாவிடம் இப்போது பழைய துள்ளல் இல்லாமல் போனாலும் இடிந்துபோய் அவள் அமரவில்லை. அவளின் மனதிலிருந்த வைராக்கியம் அவளை நடமாட வைத்தது.
தன்னறைக்கு சென்றவள் உடையை மாற்றிவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்து பின்னாடி இருக்கும் ரோஜா தோட்டத்தை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
ரோஹித் – மதுமிதாவின் முதல் மகள் அபூர்வா. எந்த நேரமும் கலகலப்புடன் காலில் சலங்கை கட்டிக்கொண்டு சுற்றும் பெண்ணவள். இப்போதெல்லாம் படிப்பு படிப்பு என்று புத்தகத்துடன் வலம் வர தொடக்கி இருந்தாள்.
கொள்ளு தாத்தா – பாட்டியின் விருப்பத்திற்காக குற்றாலத்தில் தங்கி பள்ளி படிப்பு முடிந்து விடுமுறை தொடங்கியது. இரண்டு மூன்று நாட்களில் அபூர்வாவை வந்து அழைத்து செல்வதாக ரோஹித் போன் வந்தது.
அன்று தான் அந்த கோர சம்பவம் நடந்தேறியது.