ENE —epi 14
ENE —epi 14
அத்தியாயம் 14
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பரந்து பரந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால் தான் ரெண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது
“பிரபு, பிரபூ…தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே..பிரபூ…”
“ஏன்டி காலங்காத்தால என் பேர ஏலம் போடுற. ஒரு நாளைக்கு கூட மனுஷன நிம்மதியா தூங்க விட மாட்டியா?” என கேட்டபடியே வெளியே வந்தான் பிரபு.
“உனக்கு ஏன்டா லெச்சும்மா பிரபுனு பேரு வச்சாங்க? அவரு எப்பவும் எவ்வளவு அழகா சிரிச்சிகிட்டே இருக்காரு. நீயும் தான் இருக்கியே சிடுமூஞ்சி” என அவனை வம்பிழுத்தாள் தான்யா.
“இப்ப உனக்கு எதுக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம்? எப்பவும் மாதிரி எகிறி குதிச்சி இங்க வர வேண்டியதுதானே. எதுக்கு மதில் மேல் குரங்கு மாதிரி உட்கார்ந்து கத்திகிட்டு இருக்க?” என கடுப்படித்தான் பிரபு.
அவர்கள் இருவரும் போட்ட சத்தத்தில் விழித்த விபா கைக்கடிகாரத்தைப் பார்த்தான். காலை 8 மணியை காட்டியது அது. வேகமாக எழுந்து ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டான். திரை சீலையை மெதுவாக விலக்கி கீழே நடப்பதை மென் சிரிப்புடன் கவனிக்கலானான்.
“இனிமே உன் வீட்டுல இந்த தானு காலை வைக்க மாட்டா.”
“ஏன்டா திடீர்னு இந்த நல்ல முடிவு?”
“ஓ, இது உனக்கு நல்ல முடிவா? நேத்து வந்த யாரோ ஒரு மச்சான் உனக்கு பெருசா ஆயிட்டான். இந்த பாசமலர் தங்கச்சி வேணாதவ ஆயிட்டேன் இல்ல”
“ஓ அவன் இருக்குறது தான் மேடத்துக்கு இந்த கடுப்போ. அவன் எனக்கு மச்சான் மட்டும் இல்ல, இனிமே எனக்கு கஞ்சி ஊத்தப்போற முதலாளி.”
“அடப்பாவமே, வெறும் கஞ்சி தான் ஊத்துவாறா? அப்போ லெச்சும்மாவ என் வீட்டுக்கு அனுப்பிடு. நான் சோறு போட்டுப் பார்த்துக்குறேன்”
‘ஷப்பா முடியலைப்பா. காலையிலே ஆரம்பிச்சிட்டாளே’ என தலையை உலுக்கிக் கொண்டான் பிரபு.
“லெச்சும்மா! எனக்கு ப்ரெக்பஸ்ட் வேணும்” என குரல் கொடுத்தாள் தானு.
“ஏன் உங்கம்மா சமைக்கலியா?”
“இன்னிக்கு கற்புக்கு என்ன கடுப்போ தெரியல, உப்புமா கிண்டி வெச்சிருக்கு. மனுசன் சாப்பிடுவானா அதை. அதான் என் பங்கை உனக்கு குடுக்க சொல்லிட்டேன்.”
அதற்குள் லெட்சுமி சுட சுட பூரியும் மசாலாவும் ஒரு தட்டில் இட்டு எடுத்து வந்தார்.
“லெச்சும்மான்னா லெச்சும்மா தான். என் வயிற்றை காக்க வந்த தெய்வம்” என சொல்லிக்கொண்டே மதில் மேலேயே அமர்ந்து சாப்பிடலானாள்.
“உள்ள வந்து சாப்பிடேன் தானு குட்டி. உங்கம்மா பார்த்தா திட்ட போறா”
“அதேல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுருவேன். என்ன சொல்லுங்க, உங்க பூரி மாதிரி இந்த ஊருல யாராலயும் செய்ய முடியாது லெச்சு. சூப்பரு. வாய பார்த்து கிட்டு நிக்காம போய் பாப்பாக்கு கோப்பி கலக்கிட்டு வா பிரபு”
“போயேன்டா, போய் கலக்கிட்டு வா. புள்ள கேக்குறால்ல.”
“ஏம்மா, உனக்கு நான் புள்ளயா இல்ல அவ புள்ளயான்னு தெரியல. எல்லாம் என் கிரகம்” என சளித்துக் கொண்டே உள்ளே சென்றான் பிரபு.
‘என்ன ஒரு அழிச்சாட்டியம் பண்ணுறா. சுண்டு விரலில் அனைவரையும் முடிந்து வச்சிருக்கா.’ என மெச்சியவாறே அவளை ரசித்து பார்த்தான் விபா. ராணுவ வீரர்கள் அணியும் பச்சை துணியில் பேன்ட் போட்டிருந்தாள். அது முட்டி வரை தான் இருந்தது. தொள தொள என ஒரு வெள்ளை நிற டீ-சர்ட் அணிந்திருந்தாள். அதில் “பீ மைன்” என்ற வாசகம் சிகப்பு நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. ‘நான் இப்பவே ரெடி செல்லம்’ என மனதிற்குள் சிரித்து கொண்டான் விபா. வலது காதில் ஹார்ட் வடிவ தோடும், இடது காதில் அம்புகுறியும் இருந்தது. ‘ஏற்கனவே விட்ட கண் அம்பே உள்ள போய் குடையுது, அதுக்குள்ள இன்னொரு அம்பா! தாங்காது தானும்மா’ என முனகிகொண்டான் அவன்.
அவள் சாப்பிட்டவுடன் , தட்டிலே கையை கழுவவைத்து உள்ளே எடுத்து சென்றார் லெட்சுமி. அதற்குள் பிரபு கோப்பியுடன் வந்திருந்தான்.
வாங்கி குடித்தவள்,
“சீனி கொஞ்சம் தூக்கலா இருக்கு பிரபு. நெக்ஸ்ட் டைம் கொஞ்சம் குறைச்சிரு. நான் ரொம்ப நாள் வாழனும். அதுக்குள்ள இனிப்பு நீர் வர வச்சிருவ போல” என அவனுக்கு ஒரு நோஸ் கட் குடுத்தாள்.
‘எல்லாம் என் நேரம்’ என முணுமுணுத்தவன்,
“தானு, உன்னோட ட்ரையல் ரிசல்ட் ஒரு கோப்பியும், மத்த சர்டிபிகேட்சும் கேட்டேனே. ரெடி பண்ணிட்டீயா?”
“அதேல்லாம் ரெடியா இருக்கு பிரபு. ஆனா இது சரி வருமா?”
“நீ ஏன் பயப்படுற. சும்மா அப்ளை பண்ணலாம். கிடைச்சா உன் லக். இல்லைனா விட்டுருவோம்”
“இந்தியால மெடிக்கல் படிக்க ரொம்ப செலவு ஆகும்னு என் ப்ரெண்ட்ஸ்லாம் சொல்லுறாங்களே. அவ்வளவு பணத்துக்கு என்ன செய்யறது? பயமா இருக்கு பிரபு”
“பயப்படாதே தானு. அந்த மெடிக்கல் காலேஜ்ல நல்ல ரிசல்ட் வச்சிருக்கிற வெளி நாட்டு மாணவர்களுக்கு ப்புல்லா ஸ்கோலர்ஷிப் குடுப்பாங்களாம். முயற்சி செஞ்சு பார்ப்போம். வந்தா மலை போனா அது.” என சொல்லி சிரித்தான்.
தானுவும் அவனுடன் சேர்ந்து நகைத்தாள்.
அவள் சிரிப்பதை அணு அணுவாக தன் கேமரா கண்களால் சிறை செய்தான் விபாகர். அப்பொழுது கைத்தொலைபேசி வைப்ரேட் செய்து அவனை அழைத்தது. எடுத்து காதில் வைத்தவன்,
“சொல்லுங்க நெல்சன்”
“சார், நீங்க சொன்ன மாதிரி ப்புல்லா ப்ரொடெக்ஷன் போட்டுட்டோம். மேடம் எங்க போனாலும் ஒரு ஆளு அவங்களை ப்போலோ பண்ணுவாங்க. ஆளை மாத்தி மாத்தி போடுவோம் சார். அதனால அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராது”
“ஓகே. நான் சொன்ன மாதிரி ஐபோன் 7 ப்ளஸ் ரோஸ் கலர் வாங்கி ட்ரேக்கிங் டிவைஸ் போட்டுட்டீங்களா?”
“பண்ணிட்டோம் சார். இன்னைக்கே நீங்க சொன்ன முகவரிக்கு டெலிவர் செஞ்சிருவோம்.”
“ஓகே குட். நாம மோடிபை செஞ்சது தெரியாம, புதுசா வாங்குனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கனும்.”
“கண்டிப்பா சார்”
“எப்போழுதும் போல செக் உங்க ஆபிஸ் தேடி வரும் நெல்சன்”
“உங்கள பற்றி தெரியாதா சார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை”
“தான்யாஸ்ரீயோட பாதுகாப்புல எந்த காம்ப்ரமைசும் இருக்க கூடாது. டூ யூ அன்டர்ஸ்டான்ட்?”
“செர்டன்லி சார்”
“ஓகே நெல்சன், பாய்” என பேச்சை கட் செய்தான் விபாகர்.
வெளியே தானு பைரவாவுடன் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தாள். பைரவா ஒரு சைபேரியன் ஹஸ்கி வகை நாய். வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்தில் பார்க்க ஒரு ஓநாய் போல இருக்கும். எல்லோரையும் பயமுறுத்தும் பைரவா அவளிடம் மட்டும் வாலை ஆட்டிக் கொண்டு விளையாடி கொண்டிருந்தது. தான்யாவின் மேல் அதன் பார்வையே, ஏதோ தேவதையைப் பார்ப்பது போல் இருந்தது. அவள் குனிந்து அதன் மூக்கில் முத்தமிட்டாள். பைரவா குதித்து குதித்து வாலை ஆட்டியது. நாக்கை நீட்டி அவளின் கன்னத்தை நக்கியது.
“டேய், உனக்கு இதுவே பொழப்பா போச்சு” என சிரித்துக் கொண்டே கன்னத்தை துடைத்தவள் பைரவாவை கழுத்தோடு கட்டி கொண்டாள்.
‘இது தான் பப்பி லவ்வோ’ என சிரித்துக்கொண்டே குளிக்க போனான் விபா.
இன்று தான்யாவின் விடுப்பு நாள். கற்பகம் சமைத்த இரவு உணவை வம்பிழுத்தபடியே சாப்பிட்டாள். தருணிடம் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு குளிக்க சென்றாள். பாடியபடியே மெதுவாக குளித்தாள். ஐ போட் டோக்கில் ஐ போட்டை பொருத்தி தனது நிலவு பாடல் கலெக்சனை ஓடவிட்டவள் தலையை துவட்டியபடியே ஜன்னலை திறந்தாள். குளிர்ந்த காற்று முகத்தை தொட்டு விளையாடியது. அவளுக்கு எல்லா காலத்து பாட்டும் பிடிக்கும். பாட்டியுடன் இருந்த போது பழைய பாடல்கள் கேட்டு வளர்ந்தாள். அம்மாவோடு என்பதாம் ஆண்டு பாடல்களும், இப்பொழுது லேட்டஸ்ட் பாடல்கள் என்று எல்லாமே அவளிடம் இருக்கும். ‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே’ பாடலை கேட்டுக் கொண்டே நிலவை பார்த்தபடி நின்றிருந்தாள்.
பாட்டி அந்த பாடலை பாடியபடி தன்னுடன் கைகோர்த்து ஆடிய நினைவுகளை அசை போட்ட படியே கண் மூடினாள். ‘ஐ மிஸ் யூ சோ மச் பாட்டி. நீங்க ஆசைப்பட்ட படியே நான் கண்டிப்பா ஒரு ஓர்த்தோபேடிக் டாக்டரா ஆவேன். ஆனா அத பார்த்து சந்தோஷப்பட நீங்க என் கூட இல்லையே.’ என எண்ணிக்கொண்டாள்.
அவளது மோன நிலை, ஒரு காரின் லைட் வெளிச்சத்தால் கலைக்கபட்டது. கண்ணை திறந்து பார்த்தாள் தான்யா. பிரபு வீட்டின் முன் ஒரு சிகப்பு கலர் ரோல்ஸ் ரோய்ஸ் கார் நின்றது.
‘பார்டா! நம்ம பிரபு வீட்டுக்கு யாருடா இந்த காருல வர அப்பாடக்கரு’ என ஆச்சரியமாக பார்த்தாள். ஓட்டுனர் கதவை திறந்து கொண்டு விபாகர் ஸ்டைலாக இறங்கினான்.
‘ஓ, இந்த லாடு லபக்கு தாஸ் தானா! பிரபு பிஸ்னஸ்னு சொன்னான். ஆனா என்ன பிஸ்னஸ்னு சொல்லலியே. இந்த கார் பயன்படுத்துறான்னா, கண்டிப்பா பெரிய பிஸ்னஸ் தான். ட்ரக் ஏதாச்சும் சப்ளை பண்ணுறானா?’ என மண்டை காய்ந்தவாறே நின்றிருந்தாள் தானு.
மேலே ஜன்னல் அருகே அவள் நிற்பதை கவனித்த விபா, ஹாய் என்பது போல் கை ஆட்டினான். பின்பு காரை ஓட்டி பார்க்கிறியா என்பதை போல் சைகை செய்தான். அவனை முறைத்தவாறே படீரென ஜன்னலை சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தாள் தானு.
‘அன்றைக்கு நான் அவ்வளவு பயங்காட்டி காரை ஓட்டியும், இந்த காரை ஓட்ட குடுக்கிறானே. இவன் என்ன லூசா இல்லை உன் பாச்சா என் கிட்ட பலிக்காதுன்னு சொல்லாம சொல்லுறானா.’ என புலம்பி கொண்டாள்.
அப்பொழுது கைத்தொலைபேசி வாட்ஸ்ஆப் மேசேஜ் வந்ததற்கு அடையாளமாக சத்தம் இட்டது.
டேனி தான் அனுப்பியிருந்தான்.
“சாப்பிட்டாயா டான்யா?”
“யெஸ். நீ?”
“ஆச்சு. பேக்கிங் வேலை எல்லாம் ஆரம்பிச்சிட்டியா?”
“பினாங் ட்ரிப்கு இன்னும் மூன்று நாள் இருக்கு. மெதுவா பண்ணலாம் டேனி.”
“ஆமா, லாஸ்ட் மினிட் செஞ்சு எதையாவது மறந்துவிட்டுருவ”
“சரி, சரி. பண்ணுறேன். நீ லெக்சர் குடுக்காத”
“மறக்காம சன் ஸ்க்ரின் லோசன் எடுத்துக்க.போன தடவை பீச்சுக்கு போன போது கன்னங்கரேல்னு திரும்பி வந்த”
“ஏன் நான் கன்னங்கரேல்னு இருந்தா என் கூட ப்ரண்டா இருக்க மாட்டியா?”
“நீ எந்த கலர்ல இருந்தாலும் உன்னை விட மாட்டேன் டான்யா. ஐ மீன் உன் ப்ரன்ட்ஷிப்ப விடமாட்டேன்”
“சரி சரி ரம்பத்த போடாம போய் படு. நாளைக்கு காலையில எங்கேயே போகனும்னு சொன்ன.”
“ஆமா டான்யா சாயாங். டேடிகூட வெளிய போறேன். ஏன் எதுக்குன்னு இன்னொரு நாள் சொல்லுறேன். ஈவ்னிங் எப்போதும் போல உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன். ஓகேவா? கோ ஸ்லீப் நவ்”
“குட் நைட் டேனி”
“குட் நைட் டான்யா”
படுக்க ஆயத்தமாகும் போது, திரும்பவும் மேசெஜ் வந்தது. ‘இப்ப யாருடா’ என போனை எடுத்து பார்த்தாள் தான்யா. பிரபுவிடம் இருந்து வந்திருந்தது.
“தூங்கிட்டியா தானு?”
“இன்னும் இல்ல, சொல்லு”
“நாளைக்கு 2 மணிக்கு மேல ப்ரீயா இருக்கியா?”
“ப்ரீதான். 6 மணிக்கு தான் வேலை”
“அப்போ “ எலெகண்ட்” ஒரு புது பிரான்ச் திறக்குறாங்க. கடை திறப்பு விழாவுக்கு என் கூட வரியா?”
“எலெகண்ட் ஆ. நிஜமாவா? செம்ம கடையாச்சே அது. லேடிஸ் பொருள் எல்லாமே அங்க கிடைக்குமாம். என் ஷ்கூல் மேட் எல்லாம் ஓவரா பேசுங்க அந்த கடையை பத்தி”
“ஏன் நீ போனது இல்லையா?”
“நாம என்னைக்கு இந்த மேக் ஆப் எல்லாம் போட்டுருக்கோம்? அதோட செம்ம விலையாம். நமக்கு சரி பட்டு வராது. ஒரு தடவை வெளிய நின்னு பார்த்ததோட சரி.அதுக்கே அந்த செக்குரிட்டி என்னமோ நான் திருட வந்த மாதிரி பார்க்குறான்”
“ஹாஹாஹா. அந்த கிழிஞ்ச ஜீன்ஸ்சோட போயிருப்ப. அதான் அப்படி பார்த்துருப்பான். சரி சரி, வரியா?”
“வரேன், ஆனா கடைய பார்க்க இல்ல”
“அப்புறம்?”
“இந்த மாதிரி பெரிய கடை திறக்கும் போது, நல்ல புப்பே விருந்து இருக்குமே. அதுக்காக தான்.”
“தீனிவெட்டி. நல்லா தானே கொட்டிக்கிற, அந்த சாப்பாடெல்லாம் எங்கடி போகுது? இப்படி காத்தடிச்சா பறக்குற மாதிரி இருக்க.”
“நாங்களெல்லாம் ரொம்ப நல்லவங்க. அதான் சாப்பிட்டவுடனே செரிச்சிருது. உன்னை மாதிரியா? தொப்பையை பாரு, புள்ள எப்ப பொறக்கும்னு கேக்குற மாதிரி இருக்கு.”
“தொப்பையை பத்தி பேசாதே. டென்ஷன் ஆயிருவேன். நாளைக்கு சாப்பாடு உனக்கு பிடிச்ச ப்புல் மூன் கேட்டரர்ஸ் தான். நல்லா வந்து கொட்டிக்கோ”
“ஐ, ஜாலி ஜாலி. டேனிக்கும் அவங்க சாப்பாடு ரொம்ப பிடிக்கும். அவனையும் கூப்பிடவா?”
“இங்க பாரு தானு, உன்னைய மட்டும் தான் கூப்பிடனும்னு எனக்கு உத்தரவு”
“உத்தரவா?”
“அது வந்து, ஓப்பனிங் டிக்கட் ஒன்னுதான் இருக்கு தானு. அதான்.”
“சரி சரி, நான் மட்டும் வரேன்.”
“நல்லதா ஒரு சேலை கட்டிகிட்டு வா”
“அப்போ நான் வரல போ.”
“இல்லடா, மினிஸ்டர் எல்லாம் வருவாங்க. அதான் என் தங்கச்சி அழகா இருக்கனும்னு சொன்னேன்”
“சேலை எல்லாம் முடியாது. வேணும்னா டிசைனர் சுடி போட்டுட்டு வரேன்”
“சரிம்மா தாயே. நீ வந்தா போதும். ரெண்டு மணிக்கு நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன். அம்மா கிட்ட சொல்லிடு”
“சரி, சரி. பாய்”
“பாய்”
மறுநாள் கார் ஹாரன் சத்தத்தில் வெளியே வந்தாள் தான்யாஸ்ரீ. மஞ்சள் வர்ணத்தில், உடம்பெல்லாம் பிங்க் கலர் பூ விரவியிருந்த சுடிதார் அணிந்திருந்தாள். பேண்ட் பிங்க் கலரில் இருந்தது. சிறு சிறு பிங்க் பூ போட்ட மஞ்சள் துப்பட்டாவை அலட்சியமாக தோளின் மேல் போட்டிருந்தாள். சிறிய வெள்ளை கல் வைத்த போட்டு மட்டும்தான் முகத்தின் அலங்காரம். லிப்ஸ்டிக், பவுடர் என எதுவும் போடவில்லை. காதில் மட்டும் சிறு மஞ்சள் கல் வைத்த தோடு அணிந்திருந்தாள். சுடியின் கழுத்து பகுதியில் ஸ்டோன்வோர்க் செய்யபட்டிருந்ததால் கழுத்துக்கு எந்த ஆரமும் அணியவில்லை அவள். தானுவை பார்க்க அழகிய சூரிய காந்தி பூ ஒன்று நடந்து வருவது போலிருந்தது.
அவள் வீட்டின் முன் விபாவின் சிகப்பு கார் நின்றிருந்தது. கார் கண்ணாடியை இறக்கி விட்டு கை ஆட்டினான் பிரபு.
“இந்த காருலயா போக போறோம்?”
“ஆமா. விபா காலையிலே கிளம்பிட்டான். இப்போதைக்கு இந்த காருக்கு நான் தான் ஓனர். உள்ள வா. செம்மையா இருக்கு”
குதூகலத்துடன் குதித்து ஓடி பிரபுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் தானு.
சிகப்பு இருக்கை உட்கார்ந்தவுடன் அப்படியே அமுங்கியது. உள்ளே இன்டீரியர் எல்லாம் சிகப்பில் இருந்தது. படம் பார்க்க சிறு ஸ்கிரின் இருந்தது. சில்லென ஏசி வெயிலுக்கு இதமாய் இருந்தது. தான்யா எல்லாவற்றையும் தொட்டு தொட்டு பார்த்தாள். காலை மடக்கி இருக்கையில் சப்பளம் இட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“இது உன் மச்சானோட சொந்த காரா?”
“இல்ல பாப்பா. வாடகைக்கு எடுக்கறது தான்.”
“யப்பா! வாடகைக்கு இவ்வளவு கோஸ்ட்லி காரா? உன் மச்சான் என்னா பெரிய பருப்போ. சாதாரண காரெல்லாம் ஓட்ட மாட்டாரோ?”
“அவன் கிட்ட பணம் இருக்கு, அனுபவிக்கிறான். உனக்கு என்ன காண்டு?”
“எனக்கு என்ன வந்தது. சும்மா கேட்டேன். உன் மச்சான் என்ன தொழில் செய்யுறாரு? இப்படி ஆடம்பரமா செலவு பண்ணுராறே?”
“அதெல்லாம் போக போக தெரிஞ்சுக்குவ தானு”
“ஆமா, இது பெரிய பரமன் ரகசியம். இவரு சொல்லமாட்டாரு.” என்றவள் அதற்கு பிறகு பாடல்களை கேட்டபடியே அமைதியாக வந்தாள்.
“தானு, இந்த கடைதான். நீ இறங்கு. நான் போய் பார்க் பண்ணிட்டு வரேன்”
தனது சிறு கை பையை எடுத்து கொண்டவள் மெதுவாக இறங்கினாள். கூட்டம் அலை மோதியது. பாதுகாப்பு அதிகாரிகள் எல்லோரையும் செக் செய்து உள்ளே அனுப்பி கொண்டிருந்தார்கள். வெளியே கூடாரம் போட்டு சாப்பாடு அழகாக அடுக்கி வைக்க பட்டிருந்தது. சாப்பாடு கூடாரத்தை நோக்கி காலடி எடுத்து வைத்தாள் தான்யா. ‘அதுசரி நமக்கு சோறு தானே முக்கியம்’ என மைன்ட் வோய்ஸ் கேலி பேசியதை புறம் தள்ளி விட்டு வந்த வேலையை கவனிக்க சென்றாள் தானு.
அதற்குள் ஒரு செக்குரிட்டி ஹேட் போலிருந்தவர் அவளருகில் வந்தார்.
‘போச்சுடா, சாப்பிட வந்தோம்னு கண்டுபிடிச்சுட்டாங்களா? இன்விடெஷன் வேற பிரபு கிட்ட இருக்கே’ என முழித்தாள் தான்யா.
“மேடம், நீங்க உள்ள வாங்க மேடம்” என அழைத்தார் அவர்.
“இல்லைங்க, நான் அப்புறமா வரேன்”
“வாங்க மேடம். பாஸ் உங்கள அழைச்சிட்டு வர சொன்னாரு. மினிஸ்டர் வேற வந்துட்டாரு. எல்லோரும் உங்களுக்கு தான் வேய்ட்டிங்”
“நீங்க என்னை வேற யாரோன்னு தப்பா புரிஞ்சுகிட்டீங்க சார்.”
“தான்யா மேடம் தானே நீங்க. வாங்க மேடம். வாங்க” என விட்டால் காலிலே விழுந்து விடுபவர் போல அழைத்து கொண்டிருந்தார் அவர்.
‘என்னடா நடக்குது இங்கே’ பிரபு வருகிறானா என திரும்பி திரும்பி பார்த்த படியே கடை படியை ஏறினாள் தானு. வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லாம் அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
தானுவை நேராக மினிஸ்டர் நின்றிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார் அவர். அவரருகில் சிரித்து பேசியபடி விபாகர் நின்றிருந்தான்.
அந்த செக்குரிட்டி அவனிடம் ஏதோ சொல்ல, மெதுவாக திரும்பி பார்த்தான் விபா. கண்கள் விரிய அவளை பார்த்தவன், உதட்டில் முறுவலுடன் அவளருகில் வந்தான்.
“வெல்கம் டூ யுவர் எலெகண்ட்” என மலர்ந்த புன்னகையுடன் வரவேற்றான்.
எல்லோரும் அவர்களையே குறுகுறுவென பார்த்தனர். கஸ்டபட்டு உதட்டை பிரித்து புன்னகைத்தாள் தான்யா.
‘அடே சதிகாரா பிரபு. சாப்பாட்டு ஆசையை காட்டி, என்னை இவன் கிட்ட இப்படி மாட்டி விட்டுட்டீயே. நீ எனக்கு அண்ணனா இல்லை மாமாவாடா? இன்னிக்கு உன்னை துவைச்சி காய போடல, என் பேரு தான்யாஸ்ரீ இல்லடா’ என மனதில் சபதம் எடுத்தாள்.
அதற்குள் ஒரு பெண்மணி அவளருகில் வந்து, மெழுகுவர்த்தியை கையில் கொடுத்து குத்துவிளக்கை ஏற்ற சொன்னார்.
“நானா?” என திகைத்துபோய் நின்றிருந்தாள் தான்யா.
“போ தானு. உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா? நம்ம கடை நல்லா அமோகமா நடக்கனும்னு வேண்டிகிட்டு விளக்கை ஏத்து.” என அவளின் கை பிடித்து அழைத்து சென்றான் விபாகர்.
இவ்வளவு பேர் முன்னால் எந்த சீனும் கிரியேட் பண்ண வேண்டாம் என முடிவெடுத்த தான்யா, கை நடுங்க விளக்கை ஏற்றினாள். அவள் பக்கத்திலே நின்று கொண்டான் விபா. அழகான அந்த காட்சியை கேமிராக்கள் உள் வாங்கி கொண்டன.
அவள் விளக்கை ஏற்றியவுடன் எல்லோரும் சாப்பிட கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.
தான்யாவின் கன்னத்தை மென்மையாக தடவிய விபா,
“என் மஞ்ச காட்டு மைனா. சாப்பிட போலாமா?” என அழைத்தான்.
அவன் கையை சட்டென தள்ளியவள்,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை ஏமாற்றி இப்படி அழைச்சுகிட்டு வருவ. உன் அல்லக்கை கிட்ட சொல்லி வை. இன்னிக்கு அவன் என் கையில கிடைச்சான், சட்னி தான்” என கோபத்தை உமிழ்ந்தவள், விடுவிடுவென நடந்து வெளியேறி சென்று விட்டாள்.
செல்பவளையே மனதில் வலியுடன் இமைக்காது பார்த்திருந்தான் வேணு விபாகர்.
எட்டி நில்லு…