Enge En Punnagai–EPI 2

202926025_883159952271340_5635091821604340674_n-9a136313

அத்தியாயம் 2

எத்தனை மணிக்கு படுத்தாலும் காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து கொள்வாள் காமினி. காலை கடன்களை முடித்து விட்டு, ரூமில் இருந்தபடியே சூரிய நமஸ்காரம் செய்வாள். இதெல்லாம் கிருபாகரின் உறக்கத்தைக் கலைக்காமல் இருட்டிலேயே நடக்கும்.

மறுநாள் காலையில் மூன்றாவது செட் சூரிய நமஸ்காரத்தின் அஸ்டபாதாசனத்தில் இருக்கும் போது, கால் தரையில் படாத உணர்வில் கத்தத் தொடங்கினாள் காமினி.

“ஷ்!!!! நான்தான்டி மினி குட்டி!” என அவளை தூக்கி இருந்தான் கிருபாகர்.

“கீழ விடு கிரு!”

“தோ விடறேன்!” என்றவன் கட்டிலின் மேல் விட்டிருந்தான் அவளை.

“காலாங்காத்தால நீ யோகா செய்யறத கும்மிருட்டுல பார்க்கறதே ஒரு கிக்குடி!” என்றவன் அதற்கு மேல் அவளை பேசவிடவில்லை.

மினி, காம், குட்டி, பேபி, வைட்டு பியூட்டி என கொஞ்சித் தீர்த்தவன், தாம் திருப்தியடைந்து அவளையும் திருப்தி படுத்திவிட்டே விலகினான்.

“லவ் யூ மினி குட்டி” என அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டவன், புத்துணர்ச்சியுடன் குளிக்கப் போனான்.

எழுந்து ஆடைகளை அணிந்தவள், களைப்பாய் இருக்க மறுபடியும் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டாள். காலை உணவு தயாரிக்க வேண்டும், காபி கலந்து அவனுக்கு ப்ளாஸ்கில் ஊற்றி வைக்க வேண்டும். மதிய உணவை வேலையிடத்து காபிடேரியாவில் உண்டுக் கொண்டாலும், இவள் கலந்துக் கொடுக்கும் காபியைத் தான் சுட சுட ப்ளாஸ்கில் இருந்து ஊற்றி அருந்திக் கொள்வான். மிசின் காபி என்னவோ இவனுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. வேலைகள் வரிசைக் கட்டி நின்றாலும், எழுந்துக் கொள்ள உடல் ஒத்துழைக்கவில்லை காமினிக்கு.

குளித்து விட்டு வந்தவன், கட்டிலில் இன்னும் படுத்திருந்த மனைவியைப் பார்த்து வலது புருவத்தைத் தூக்கினான்.

“என்ன மேடத்துக்கு எழுந்துக்க முடியலையா?” என கேட்டப்படியே போனை எடுத்துப் பார்த்தவன்,

“ஓ காட்! இன்னிக்கு காலையிலேயே ஒரு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. அத மறந்துட்டு உன்னைக் கொஞ்சிக்கிட்டு இருந்துட்டேன்! இப்போ மணியாச்சு காமினி! எல்லாம் உன்னாலத்தான். உன்னை யாரு இவ்வளவு அழகா பிறக்க சொன்னா? உன்னை யாரு இவ்ளோ செக்சியா யோகா செய்ய சொன்னா?” என கத்தியவாறே அவசர அவசரமாக கபோர்டைத் திறந்தான் உடையைத் தேட.

வரிசையாக துவைத்து அயர்ன் செய்திருந்த சட்டைகளில் பிங்க் வர்ண சட்டையைக் காணவில்லை.

“காமினி!!!!! பிங்க் சட்டை எங்க? இன்னிக்கு டீம்ல எல்லோரும் பிங்க் கலர்ல சட்டை போட்டுட்டு வரனும்னு ப்ளான் பண்ணிருக்கோம்! வேர் இஸ் தே ப்ளேடி ஷேர்ட்? மகாராணி மாதிரி படுத்துட்டு இருக்காம வந்து சட்டையைத் தேடிக் கொடு! குவீக்” என சத்தமிட்டவன், ஜீன்சை அணியத் தொடங்கினான்.

மெல்ல எழுந்தவள், அவன் அடிக்கடி உபயோகிக்காத உடைகள் அடுக்கி இருந்த கபோர்ட்டின் கீழ்தட்டில் இருந்து அந்த சட்டையை எடுத்து வேக வேகமாக அயர்ன் செய்துக் கொடுத்தாள். அதை அணிந்துக் கொண்டு தலை சீவி, பவுடர் போட்டு, பெர்பியத்தைப் பூசிக் கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தான் கிருபாகர்.

இட்லி வெந்துக் கொண்டிருக்க, சட்னிக்கு ரெடி செய்துக் கொண்டிருந்தாள் காமினி.

“உன் இட்லி வேகற வரைக்கும் என்னால வேய்ட் பண்ண முடியாது காமினி. ஐ நீட் டூ ரஷ். ரெண்டு நாளா வெளி சாப்பாடு! இன்னிக்காச்சும் பொண்டாட்டி கையால நல்லதா சாப்பிடலாம்னு நெனைச்சா, வேலையைப் பார்க்காம நீ ஹாயா படுத்திருக்க! வீட்டுல சும்மாத்தானே இருக்க, நான் போனதும் நல்லா படுத்து தூங்க வேண்டியது தானே! இப்போ பாரு பட்டினியா ஓடனும் நான்” என்றவன் காபி ப்ளாஸ்கை மட்டும் எடுத்துக் கொண்டு பேக்கை எடுக்க ரூமுக்கு சென்றான்.

‘வீட்டுல சும்மாத்தானே இருக்க!’ எனும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காமினியின் காதில் ஒலித்தன. கண்கள் கண்ணீரில் நிறைந்துப் போனது அவளுக்கு.

“மினி, என் சாக்ஸ் எங்க?” எனும் அவனின் சத்தத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டவள், ரூமுக்கு ஓடினாள். சாக்ஸ் மடித்து வைத்திருக்கும் இடத்தில் இருந்து அதை எடுத்துக் கொடுத்தவள் அமைதியாக வெளியேறிவிட்டாள். வேலைக்கு கிளம்புவதற்குள் வீட்டை ரணகளமாக்கி இருந்தான் கிருபாகர்.

“பாய்டி!” என இரண்டு அடி எடுத்து வைத்தவன், மீண்டும் திரும்பி வந்து அவள் உதட்டில் மெல்லிய முத்தமொன்றை வைத்து,

“லவ் யூ” என சொல்லிவிட்டு அரக்கப் பறக்க ஓடினான்.

அவன் போனதும் புயலடித்து ஓய்ந்ததைப் போல வீடு அமைதியாக இருந்தது. இது வேலை நாட்களில் எப்பொழுதும் நடக்கும் கூத்து தான். கதவைப் பூட்டிவிட்டு, சமயலறைக்குப் போனவள் இட்லியை ஹாட் பேக்கில் போட்டு மூடி வைத்தாள். சட்னியை அரைத்து மூடி வைத்தவள், ஹால் சோபாவில் வந்துப் படுத்துக் கொண்டாள்.

தனிமை!!!!

பலருக்கு இனிமையைக் கொடுக்கும் தனிமை சிலருக்கு கொடுமையாய் இருக்கும். தானாய் தேடிக் கொண்டால் தனிமையையும் சொர்க்கம்தான். நமக்கென விதிக்கப்பட்டால் தனிமை கூட நரகம்தான்.       

கண்களை மூடிப் படுத்திருந்தாலும் என்னென்னவோ நினைவுகள் மனதில் வரிசைக் கட்டி நின்றன.

தனது சொந்த ஊரை விட்டே வெளியேறி இருக்காதவளுக்கு பெங்களூர் வாசம் பயத்தையேக் கொடுத்தது. ஆங்கிலம், கன்னடம் என மக்கள் பேசும் பேச்சும் புரிந்துக் கொள்ள கஸ்டமாய் இருந்தது. ஆரம்பத்தில் விடுமுறை கிடைக்கும் தினமெல்லாம் இவளை வெளியே கூட்டிப் போவான் கிருபாகர். வெளியே உணவருந்தி விட்டு நன்றாக சுற்றி விட்டு வருவார்கள்.

இப்பொழுதெல்லாம் ப்ராஜெக்ட் வொர்க் நெட்டி முறிப்பதால் அவன் வீட்டில் இருக்கும் நேரமே குறைந்துப் போனது. அப்படி இருந்தாலும் தூக்கம், உணவு, உடல் தேவை என நேரம் பறந்தது அவனுக்கு. இவள் எதாவது பேச ஆரம்பித்தாலும்,

“மினிம்மா, தலையை வலிக்குதுடா! நீ லொடலொடன்னு பேசறப்போ மண்டைக்குள்ள ட்ரம் வாசிக்கற மாதிரி இருக்கு. வாய்க்கு ஓய்வு கொடுத்துட்டு கைக்கு வேலை குடுக்கறியா?” என கேட்டு அவள் கையைத் தூக்கித் தன் தலையில் வைத்து அழுத்தி விடும்படி கேட்பான்.

இவளும் நெற்றியை அழுத்திக் கொடுப்பதோடு மட்டுமில்லாது, தலைக்கும் மசாஜ் செய்து விடுவாள்.

“ஹ்ம்ம்! சொர்க்க சுகம்டி மினிக்குட்டி! உழைச்சுக் களைச்சு வர புருஷனுக்கு, உன்னை மாதிரி வீட்டுல இருந்து சேவகம் செய்யற வைப் கிடைச்சிட்டா, அவன மாதிரி குடுத்து வச்சவன் யாரும் இல்லைடி” என சொல்லியபடியே அவள் மடியில் சுகமாய் உறங்கிப் போவான் கிருபாகர்.

இவளுக்குத்தான் அவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் குத்தீட்டியாய் குத்தும்.

‘இவன் உழைச்சுக் களைச்சு வரான்னா, நான் என்ன சொகுசா படுத்து படுத்து தூங்கிட்டு இருக்கனா? அதென்னா வார்த்தை, சேவகம்னு? நான் என்ன இவனுக்கு கட்டி வைச்ச பொண்டாட்டியா இல்ல நேர்ந்து விட்ட வேலைக்காரியா?’ என மனதிற்குள்ளேயே சுணங்கிக் கொள்வாள்.  

அப்படித்தான் திருமணம் முடிந்த மூன்றாவது மாதம் கிருபாகருக்குப் பிறந்தநாள் வந்தது. கணவனுக்கு சர்ப்ரைசாக எதாவது பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டாள் காமினி. அவன் வேலைக்குக் கிளம்பியதும், இவளும் வெளியே கிளம்பிப் போனாள். அவனுடன் மட்டுமே வெளியே போய் பழகி இருந்தவளுக்கு, மேனேஜ் செய்ய மிக கஸ்டமாகவே இருந்தது. கேப் எடுத்து, கிருபாகர் ஏற்கனவே இரண்டு தடவை அழைத்து சென்றிருந்த மாலுக்கு சென்றாள். கடகடவென கலந்துக் கட்டி அவர்கள் பேசும் ஆங்கிலத்தை கிரகித்து, இவளும் பேசி ஒரு அழகான கைக்கடிகாரத்தை வாங்கினாள் காமினி.

வீட்டுக்கு வேண்டிய சமையல் பொருட்கள், காய்கறி என எல்லாவற்றையும் அவன் வீட்டில் இருக்கும் நாளில் இருவருமே போய் வாங்கி வந்து அடுக்கி விடுவார்கள். அதனால் ஏதோ ஒரு சமயம், நினைத்துக் கொண்டால் இவள் செலவுக்கென ஒரு தொகையைக் கொடுப்பான் கிருபாகர். மற்றப்படி எதாவது வேண்டுமெனெ இவள் கேட்டால், ஒரு தடவை மறந்து விட்டாலும் மறு தடவை வாங்கி வந்து கொடுத்து விடுவான். அப்படி அவன் கொடுத்திருந்த பணத்தில் தான் அவனுக்குப் பரிசு வாங்கி இருந்தாள்.

வீட்டுக்கு வந்தவள், இவளே சொந்தமாக கேக் பேக் செய்து அதற்கு க்ரீமும் பூசி ப்ரிட்ஜில் வைத்தாள். யூடியூபில் தான் ஆயிரத்தெட்டு பேக்கிங் ரெசிபிஸ் இருக்கிறதே! அதில் பலதைப் பார்த்து, ஈசியாக தோன்றிய பட்டர் கேக்கை செய்திருந்தாள் காமினி.         

முதன் முதலாய் கிருபாகரோடு சேர்ந்து கொண்டாடப் போகும் ஒரு மகிழ்ச்சியான தருணம். தனது நினைவுப் பெட்டகத்தில் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடிய இனிமையான நினைவுகள் சேரப் போகும் நாள் எனும் மகிழ்ச்சியில் குளித்து, அலங்கரித்து அவனுக்காக காத்திருந்தாள் காமினி.

இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தவன், அழகாய் நின்றிருந்த மனைவியைப் பார்த்து பெரிதாய் விசில் அடித்தான்.

“காமினி

காமத்தைக் கிளறும் மின்மினி நீ” என வாசலில் வைத்து கவிதை சொன்னவனை பொய் கோபத்துடன் முறைத்தாள் பெண்.

“கிருபாகர்

கிறுக்குப் பிடிக்க வைக்கும் ஆள்தான் இவர்!” என பதில் கவிதை சொன்னவள் அவன் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

“நெஜமா என் மேல கிறுக்கா இருக்கியா மினி?”

பேக்கைத் தூக்கி சோபாவில் வைத்தவன், மனைவியைக் கட்டிக் கொண்டான்.

“ஆமா!” என தலையாட்டியபடியே சொன்னவளை புன்னகையுடன் பார்த்தான் இவன்.

“இந்த மாதிரி நல்ல வேலை, கை நிறைய சம்பளம் எல்லாம் இல்லாம இருந்திருந்தா இவ்ளோ அழகான பொண்ண உங்கப்பா அம்மா எனக்கு கட்டி வச்சிருப்பாங்களா? இல்ல நீயும் தான் இந்த கருப்பன கட்டிக்க சம்மதிச்சிருப்பியா?” என கேட்டவன் சேலை மறைக்க மறந்த இடுப்பின் வளைவைத் தடவியபடி அவள் உதட்டில் முத்தமிட்டான்.

அவ்வளவு சந்தோஷமாக அவன் வரவுக்கு காத்திருந்தவளின் உற்சாகம் சட்டென வடிந்துப் போனது. கண்களை இறுக மூடி மனதை சமநிலைப் படுத்தியவள், தன் தாய் சொன்னதை நினைவுக் கூர்ந்துப் பார்த்தாள்.

“டீ காமினி! கல்யாணம்னா மல்லிப்பூவும் அல்வாவும் மட்டும் இல்லடி, புயல் காத்தும் இடிமழையும் சேர்ந்ததுதான். பொண்ணுங்க மனசு பூவா இருந்தா, புருஷனுங்க குரங்கு கணக்கா அதப் பிச்சுப் பேன் பாத்துடுவாங்க! எப்பவும் நம்ம மனச இரும்பா வச்சிக்கனும்டி! தொட்டதுக்கெல்லாம் தொட்டா சிணுங்கி மாதிரி சிணுங்கனா, வாழ்க்கை சிக்கலாத்தான் போகும். எல்லாத்தையும் பொறுத்துப் போகனும்னு சொல்லல! ஒருத்தர ஒருத்தர் சரிவர புரிஞ்சுக்கற வரைக்கும், சீ இவன் இவ்வளவுதானான்னு முடிவெடுத்தறாதென்னு தான் சொல்லறேன்! புருஷனை நல்லா புரிஞ்சுக்க, உன்னையும் அவருக்குப் புரிய வை! நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?” என கேட்டவரின் அறிவுரைக்குப் பின் இருந்த ‘என்ன சண்டை என்றாலும் பெட்டியைக் கட்டிக் கொண்டு வந்து விடாதே’ எனும் உள்குத்தை நன்றாகவே புரிந்துக் கொண்டாள் காமினி.  

முத்தத்தை விடாமல் தொடர்ந்தவனை, விலக்கி நிறுத்தினாள் காமினி.

“போய் குளிச்சுட்டு வா கிரு!” என மெல்லியப் புன்னகையுடன் சொன்னவள், கிச்சனுக்கு நகர்ந்து விட்டாள்.

விசிலடித்தப்படியே குளிக்க சென்றான் அவன். குளித்து முடித்து வந்தவனுக்கு கட்டிலின் மேல் டீ ஷர்ட்டும் ஜீன்சும் எடுத்து வைத்திருந்தாள் அவன் மனைவி.

“லுங்கிய வைக்காம இத எடுத்து வச்சிருக்கா! சிம்பாலிக்கா வெளிய போகனும்னு சொல்றாளா?” முணுமுணுத்தப்படியே வைத்ததை அணிந்துக் கொண்டு வந்தான்.

“மினி, வெளிய போகனுமாடி? டையர்ட்டா இருக்குடி! வீக்கேன்ட் பார்த்துக்கலாமா?” என கேட்டப்படியே கிச்சனுக்கு வந்தவன், அசந்துப் போனான்.

அங்கே மேசையில் கேக் வீற்றிருக்க, தரையெங்கும் வண்ண வண்ண பலூன்களால் நிரம்பி இருந்தது. பலூனை மிதித்து விடாமல் மெல்ல நடந்து வந்தவனின் முகமெங்கும் ஒரே சிரிப்பு.

“என் பேர்த்டே உனக்கு ஞாபகம் இல்லையோன்னு கடுப்புல இருந்தேன். நடுராத்திரி விஷ் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்! நல்லா தூங்கிட்ட! காலையிலயாச்சும் சொல்லுவியான்னு பார்த்தேன், அப்பவும் ஒரே பிசி நீ” என ஆற்றாமையுடன் குறைப்பட்டுக் கொண்டான் கிருபாகர்.

‘நைட்டுல களைச்சுப் போய் கண்ண தொறக்க முடியாத அளவுக்கு இம்சை பண்ணது நீதான்! காலையிலும் என்னை ஓட ஓட விரட்டி பெர்த்டே விஷ் சொல்லனும்னுங்கறத கூட மறக்க வச்சதும் நீதான்! இதெல்லாம் சொல்லி மூட்ட ஸ்பாயில் பண்ண வேணாம்னு பாக்கறேன்!’ என மனதில் முனகிக் கொண்டவள், வெளியே சிரித்த முகமாக,

“ஹேப்பி பேர்த்டே மை கிரு” என அணைத்து வாழ்த்தினாள்.

அவன் முகம் பூவாய் மலர்ந்துப் போனது.

கேக் வெட்டி, நிறைய செல்பி எடுத்து, ஒருத்தொருக்கொருத்தர் ஊட்டி விட்டு, முகத்தில் அப்பி, அதை நாவால் வழித்து என கொண்டாடி தீர்த்தார்கள்.

அதன் பிறகே, அவன் மடியில் அமர்ந்து தான் வாங்கி வந்திருந்த கைக்கடிகாரத்தைக் கட்டி விட்டாள் இவள்.

“பிடிச்சிருக்கா கிரு?”

திருப்பி திருப்பிப் பார்த்து,

“ரொம்ப நல்லா இருக்குடி!” என கன்னத்தில் முத்தமிட்டவன், குறும்பாய் சிரித்தான்.

“என்ன சிரிக்கற?” என கேட்டாள் காமினி.

“என் காச எடுத்து எனக்கே கிப்ட் வாங்கி குடுக்கற பாத்தியா! அங்கதான் நீ செம்மையா ஸ்கோர் பண்ணற!” என நகைத்தான் கிருபாகர்.

முகம் வாடி, எவ்வளவு அடக்கியும் கண்ணில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் சட்டென கன்னத்தில் உருண்டு விட்டது இவளுக்கு.

“ஏய்! சும்மா ஜோக்குக்கு சொன்னேன்டி! இதுக்குப் போய் அழுவியா நீ! கமான் காமினி, டோண்ட் பீ சில்லி!”

கெஞ்சலும் கொஞ்சலும் பலனளிக்காததால்,

“என் பேர்த்டே அன்னைக்கு கூட மூஞ்ச தூக்கி வச்சிட்டு என் டேவ ஸ்போயில் பண்ணறல நீ! ச்சை! என்ன வாழ்க்கைடா இது!” என கோபம் காட்டி,

“பிறந்த நாளைக்குக்குக் கூட மனுஷனுக்கு நிம்மதி இல்ல. வைப் கூட எவ்ளோ சந்தோஷமா இருக்கனும்னு வந்தேன்! இங்க என்னன்னா அழுமூஞ்சி அவதாரம் எடுத்தாகுது! போடி போ! எனக்கு ஒன்னும் வேணா! சமைச்சத எல்லாம் கீழ எடுத்துக் கொட்டு! பட்டினியா போய் படுக்கறேன்!” என அவளை குற்ற உணர்ச்சியில் தள்ளி விட்டுப் போய் படுத்து விட்டான்.

கடைசியில் இவள் தான் மனது கேட்காமல், அவனைக் கெஞ்சி, எழுப்பி அமர வைத்து உணவை ஊட்டி விட்டாள். இரவில் அவனாசைக்கு இசைந்துக் கொடுத்தவள் மனதெல்லாம் ஒரே எண்ணம்தான்.

பணம்!!!!

ஈருடல் ஓருயிராய் இருந்தாலும் இந்த மூன்றெழுத்து அரக்கன் நடுவில் வந்தால், வாழ்க்கை குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும் என அன்று புரிந்துக் கொண்டாள் காமினி.

கண்டதையும் எண்ணி மனதை உளப்பிக் கொண்டவள், கண்ணீரோடு சோபாவை விட்டு எழுந்து அமர்ந்தாள். ஹவுஸ் வைப்பாக, வீட்டில் சும்மா இருப்பவளாக, வெட்டி ஆபிசராக சித்தரிக்கப்படும் ஒவ்வொரு இல்லத்தரசியும் தன்னைப் போலத்தான் மனம் நொந்துப் போய் கிடப்பார்களோ எனும் எண்ணம் தோன்ற கசப்பான முறுவல் ஒன்று வந்துப் போனது!

கணவனே ஆனாலும் அவன் கையை எதிர்ப்பார்க்கவும் தானே இவ்வளவு அலட்சியம்! இதே அலட்சியம் நாளை தான் சுமந்து பெற்றெடுத்து சீராட்டும் பிள்ளையும் காட்டினால், தன்னால் தாங்க முடியுமா என மனம் கேள்விக் கேட்டது. கை தானாக வயிற்றின் மேல் படிந்து தடவிக் கொடுத்தது. கண்ணில் மீண்டும் குபுக்கென கண்ணீர் கொட்டியது.

“உன்னோட வரவ கூட என்னால சொல்ல முடியலடா கண்ணா! நேரா சொல்லி ஆனந்த அதிர்ச்சிக் குடுக்கனும்னு எத்தனை நாளா வெய்ட் பண்ணறேன்! உங்கப்பாவுக்கு என் கூட நின்னுப் பேசக் கூட டைம் இல்ல! அப்பா மாதிரியே நீயும் என்னை அலட்சியப் படுத்துவியாடா குட்டி?” என கேவி கேவி அழுதாள் காமினி.