Enge En Punnagai–EPI 3

Enge En Punnagai–EPI 3
அத்தியாயம் 3
அன்றிரவு வீட்டுக்கு வந்தவன், கடுகடுவென இருந்தான். அவன் வசம் கொடுக்கப் பட்டிருந்த புது ப்ராஜெக்டுக்கு இவன் போட்டிருந்த பட்ஜேட் மேலிடத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இன்னும் குறைந்த விலையில் முடித்துக் கொடுக்கும்படி ஸ்ட்ரீக்டாக சொல்லி விட்டார்கள். அவுட்சோர்ஸ் செய்திருந்த வேலைகளை எல்லாம் மீண்டும் இவன் டீம் மெம்பர்களிடம் கொடுத்தால் மட்டுமே செலவைக் குறைக்க முடியும். ஏற்கனவே வேலை பளுவில் லேட்டாக வீட்டுக்குப் போய் கொண்டு இருப்பவர்களிடம் இன்னும் எப்படி சுமையைச் சேர்ப்பது என முழிப் பிதுங்கிப் போனது இவனுக்கு.
குளித்து விட்டு சாப்பிட அமர்ந்தவனுக்கு, சுட சுட தோசை வார்த்து வெங்காய சட்னி வைத்து பரிமாறினாள் காமினி. அமைதியாக சாப்பிட்டவன்,
“மினி ஒரு கப் காபி குடு” என கேட்டான்.
“தூங்கற டைம்ல காபி குடிச்சா தூக்கம் வராது கிரு! சூடா பால் தரவா?” என அக்கறையாக கேட்டாள் காமினி.
“ப்ளேடி ஹெல்! கேட்டத செஞ்சுக் குடுக்கறதுல உனக்கு என்னடி கஸ்டம்? இப்போ காபி குடிச்சா என்ன நன்மை தீமை வரும்னு உன்னோட ஒப்பினியன் கேட்டேனா? காபி குடுன்னா குடு! அது தான் உன் வேலை! வெளியில வேலைக்குப் போயிட்டு வரவனுக்கு ஆயிரம் டென்ஷன். தலை வலிக்குதேன்னு ஒரு காபி கேட்டா அதப் போட்டுத் தர உடம்பு வளையல! சும்மா வீட்டுல சாப்பிட்டு தூங்கி முழு நேர சோம்பேறியாவே ஆகிட்ட நீ” என கத்தினான் கிருபாகர்.
கை விரல்களை மடக்கி அழுத்தமாய் பிடித்து, கீழ் உதட்டை உள்ளிழுத்துக் கடித்து சுனாமியாய் கரை கடக்க முயன்ற கோபத்தைக் கட்டுப் படுத்த போராடினாள் காமினி.
“வேலை இடத்துல தான் நிம்மதி இல்லைன்னா, வீட்டுலயும் நிம்மதி இல்ல! நான் வெளிய போயே காபி குடிச்சிக்கிறேன்! நீ ஹாயா அப்படியே போய் படு” என இரைந்தவன், வாலட்டையும் போனையும் எடுத்துக் கொண்டு கதவை நோக்கி விரைந்தான்.
கதவைத் திறக்க முயன்றவனின் முன் பத்ரகாளியாய் வந்து நின்றாள் காமினி. கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க, முகம் செக்க செவேல் என சிவந்திருக்க, உதடுகள் துடிக்க, உடல் கோபத்தில் நடுங்கியவாறு இருக்க அவன் முன்னே நின்றிருந்தாள் அவள். திருமணமான நாளிலிருந்து அப்படி ஒரு கோலத்தில் அவளைப் பார்த்திராதவன், கொஞ்சமாய் அதிர்ந்துப் போனான்.
குரலை செறுமி சரி செய்தவள்,
“என்னைப் பொண்ணு பார்க வந்தப்போ என்ன சொன்னாங்க உங்க அம்மா?” என கேட்டாள்.
“எ..என்ன சொன்னாங்க?”
“வேலைக்குப் போகிற பொண்ணு எங்களுக்கு வேணா! அதான் உங்கப் பொண்ண பார்க்க வந்தோம். என் பையன் கை நிறைய சம்பாரிக்கறான்! இவ வீட்டுல இருந்து அவன கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டா போதும்னு சொன்னாங்களா இல்லையா?” என குரலை உயர்த்திக் கேட்டாள் காமினி.
தலையை ஆமென ஆட்டினான் கிருபாகர்.
“உனக்கும் நான் ஹிஸ்டரி படிச்சது, வேலைக்குப் போகாம இருந்தது எல்லாம் அப்போ பெரிசா தெரியல. ஏன்னா காமினி வைட்டு பியூட்டியா இருந்தா! அவ பியூட்டி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிஞ்சது உனக்கு!”
“ஏய் அப்படிலாம் சொல்லாதடி!”
“அப்படித்தான் சொல்லுவேன்! அந்த பியூட்டி இப்போ உனக்கு சலிச்சுட்டா! அதான் மத்த விஷயமெல்லாம் பெருசா பூதக்கண்ணாடி வச்ச மாதிரி தெரியுது!” என சொன்னவளுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“மினி, மினி! என்னமோ கோபத்துல திட்டிட்டேன்டி! அழாதே ப்ளீஸ்” என நெருங்கியவனைத் தடுத்து நிறுத்தினாள் இவள்.
“அதென்னா எதுக்கெடுத்தாலும் வீட்டுல சும்மா இருக்கேன்னு சொல்லுறது? நான் சும்மா இருந்தா வீடு தானா பெருக்கிக்குமா? தானா மாப் போட்டுக்குமா? தூசியெல்லாம் தன்னால துடைச்சிக்குமா? துணி சொந்தமா துவைச்சு, தானா அயர்னாகி கப்போர்ட்ல போய் உட்கார்ந்துக்குமா? காய்கறிலாம் தானா அடுப்புல போய் விழுந்து சொந்தமா சாப்பாடாகிருமா? பாத்திரம்லாம் தன்னைத் தானே தேய்ச்சி பளபளப்பாகிடுமா? சொல்லு கிரு!” என ஆங்காரமாகக் கேட்டவளின் உடல் நடுங்கியது.
“பேபி, பேபி! கூல் டவுன் ப்ளீஸ்” என அவள் முகம் மேலும் மேலும் சிவக்க, பயந்துப் போய் கெஞ்சினான் கிருபாகர்.
மனதில் இத்தனை நாள் அடைந்துக் கிடந்தது எல்லாம் வார்த்தைகளாக வெளியேறியது பாவைக்கு.
“ஆசையா கிப்ட் வாங்கிக் குடுத்தா, என்ன கேள்வி கேட்ட நீ? அப்படியே செருப்பால அடிச்சது போல இருந்தது எனக்கு. நீ குடுத்த பணத்த எல்லாம் எனக்காக என்னென்னவோ வாங்கி இருக்கலாம் நான்! ஆனா அப்படி செய்யாம உனக்காக வாங்கிக் குடுத்தேன். அங்க நீ பார்க்க வேண்டியது பணத்த இல்ல, குடுக்கனும்னு நெனைச்ச என் குணத்த! அன்னைக்கு நக்கலா சிரிச்சல்ல என்னைப் பார்த்து! யூ டோண்ட் டிசர்வ் மை லவ் நோர் மை கிப்ட்! கலட்டிக் குடு, ஹ்ம்ம் குடு” என கத்தியவள், அவன் கையைப் பற்றி அந்தக் கடிகாரத்தை கலட்ட முயன்றாள்.
அழுதுக் கொண்டே செய்ய, கலட்ட வரவில்லை அவளுக்கு.
“குடு, குடு, குடு” என கதறியவளை இறுக்க அணைத்துக் கொண்டான் கிருபாகர்.
“பேபி, சாரிடா பேபி” என விடாமல் ஜெபம் செய்தவனைத் தள்ளி விட்டாள் காமினி.
“வீட்டுல சும்மா இருக்கேன், சாப்பிட்டு தூங்கறேன் இப்படிலாம் நீ சொல்ல சொல்ல உன் கிட்ட இருந்து எதையும் வாங்கிக்கவே முடியல என்னால! நீ வாங்கிப் போடற மளிகை வச்சு சமைச்சி சாப்பிடற சாப்பாடு தொண்டையில ஊசியா குத்துது கிரு! நீ வாங்கிக் கொடுத்துப் போடுற இந்த துணிமணி உடம்ப புண்ணாக்குது கிரு! உனக்கு ரியலைஸ் ஆகுதா இல்லையான்னு தெரியல, நானா உன் கிட்ட வந்து அதை வாங்கிக் குடு, இத வாங்கிக் குடுன்னு கேட்டு பல மாசம் ஆச்சு! சேனிடரி நாப்கின் வாங்கிக் குடுன்னு கேக்க கூட ஒரு மாதிரியா இருக்கு கிரு! வெக்கத்த விட்டு சொல்லறேன், நீ என்னை நெருங்கறப்ப மட்டும்தான் மனசு நிம்மதியா இருக்கு! ஏன் தெரியுமா? அந்த வகையிலாவது நீ எனக்கு செய்யறத உனக்குத் திருப்பி செய்ய முடியுதேன்னுதான்” என சொன்னவள் ஓவென கதற ஆரம்பித்தாள்.
அவள் பேசியதைக் கேட்டவனுக்கு மனது சுக்கல் சுக்கலாக ஒடிந்துப் போனது.
“உன் வேலையையும், பணத்தையும் பார்த்துதான் கருப்பா இருந்தாலும் கட்டிக்கிட்டேன்னு சொன்னல்ல! ஆமா, அப்படித்தான்! எங்கப்பா அம்மா ஒரு சொட்டை மண்டையைக் காட்டி இருந்தாலும், தொந்தி தொப்பை வச்சிருக்கறவன காட்டி இருந்தாலும் சத்தியமா கல்யாணம் செஞ்சிருப்பேன். ஏன்னா சின்னதுல இருந்தே காதல் கூடாது, அம்மா அப்பா உனக்கு நல்லதத்தான் செய்வோம்னு என் மனசுல ஆணி அடிச்ச மாதிரி இறக்கி இருக்காங்க! அவங்க சொன்னதுனாலத்தான் உன்னைக் கட்டிக்கிட்டேன்! ஏன் முக்காவாசி பொண்ணுங்க இத்தனை வருஷம் வளத்தவங்க நமக்கு நல்ல வாழ்க்கையையும் அமைச்சிக் குடுப்பாங்கன்ற நம்மிக்கையில தான் கழுத்த நீட்டறோம். பெத்தவங்களுக்காக வாழ ஆரம்பிக்கற் அநாங்க, அவங்களயே மறந்துட்டு உங்க கூட ஒன்றிப்போய் வாழ ஆரம்பிச்சிடறது இல்லையா? உன் மேல கல்யாணத்தப்போ காதல் சத்தியமா இல்ல கிரு! ஆனா இப்போ என் மனசு முழுக்க நீதான் இருக்க! மஞ்ச கயிறு மேஜிக்னு வேணா வச்சிக்க!” என சொல்லித் தேம்பியவள்,
“என்னோட லவ்வ நீ உணர்ந்ததே இல்லையா? உன்னை மாதிரி நான் வாயால அடிக்கடி சொல்லலைனாலும், என்னோட ஒவ்வொரு செயலிலும் காதல காட்டிட்டேத்தான் இருக்கேன்! மூத்த பொண்ணா பொறந்து, தம்பிகளை வளர்த்து, அவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டா இருக்கனும்னு டிசிப்ளினா வளர்ந்த எனக்கு ஜோவியலா இருக்க வரல கிரு! அடிக்கடி கட்டிக்கிட்டு, முத்தம் குடுத்துக்கிட்டு, ஒட்டி உரசிக்கிட்டு இருக்க வரல! ஆனா உனக்கு பார்த்து பார்த்து சமைச்சுக் குடுக்கறதுல என் லவ்வ காட்டறேன்! உனக்கு உடம்பு முடியலைனா நைட்டு முழுக்க விழிச்சுப் பார்த்துக்கறதுல என் லவ்வ காட்டறேன். ராத்திரி கூடி முடிக்கறப்போ, உன் நெஞ்சுல முத்தமிட்டு இறுக்கி அணைச்சிக்கறப்போ என் லவ்வ காட்டறேன்! ஐ லவ் யூ கிரு! லவ் யூ சோ மச்!”
சட்டென அவன் அணைப்பில் இருந்து வெளியானவள், வேகமாய் ரூமுக்குள் போய் பூட்டிக் கொண்டாள்.
“காமினி! என்னடி செய்யற? வெளிய வா! எதா இருந்தாலும் பேசிக்கலாம் வாம்மா! ப்ளிஸ்!” என கத்தியவன், ஓடிப் போய் ரூம் சாவியைத் தேடி எடுத்து வந்தான்.
கை நடுங்க துளையில் சாவியை நுழைக்க, கதவு தானாகவே திறந்துக் கொண்டது. அங்கே கையில் பெட்டியுடன் நின்றிருந்தாள் காமினி.
“மினிம்மா!” என பரிதாபமாகப் பார்த்தான் கிருபாகர்.
“நான் போறேன் கிரு! இனிமே என்னால இந்த ஸ்ட்ரெஸ்ச எடுத்துக்க முடியாது! நான் போறேன்” என்றவள் விடுவிடுவென போய் கதவைத் திறந்து செருப்பை மாட்டினாள்.
பின் வீட்டின் கேட்டில் சாய்ந்து நின்றவள், பெட்டியை அப்படியே கீழே விட்டாள்.
ஓடிப்போய் அவளை அள்ளிக் கொண்டான் கிருபாகர்.
“எங்க போவேன் நான்? அம்மா வீட்டுக்குப் போக முடியாதே! கட்டிக் குடுத்த பிள்ளைக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பாம, திரும்பி வந்துடாதேன்னு மட்டும் சொல்லி அனுப்பனவங்க வீட்டுக்கு எப்படி போவேன் நான்? என்னை ஏத்துக்கற அளவுக்கு சொந்தமோ, நட்போ இல்லையே! எங்க போவேன் நான்? சொந்தக் காலுல நிக்கற அளவுக்கு பணம் இல்லையே! எங்க போவேன் நான்? படிச்சு என்ன புண்ணியம், தனியாளா நிக்கத் தெம்பில்லையே! எங்க போவேன் நான்?” என கண்ணீருடன் முனகியவளை கட்டிலில் கிடத்தினான் கிருபாகர்.
தேம்பி தேம்பி அழுதவள் அப்படியே தூங்கிப் போனாள்.
இரவு முழுக்க அவள் முகத்தையேப் பார்த்தப்படி குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான் கிருபாகர்.
(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்த கிரு ஆன்டி ஹீரோ இல்ல..நாம ஒவ்வொருவரும் கட்டி வச்சு மேய்ச்சுக்கிட்டு இருக்கற ரியல் லைப் ஹீரோ(அதாங்க நம்ம ஆத்துக்காரு). இவங்கள பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருக்கலாம். ஐ மீன் பொங்கிகிட்டே இருக்கலாம். ஆனா கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும் நம்ம கதையைப் படிக்கறாங்க. அவங்கள எல்லாம் பயம் காட்டி விடாம, இப்படி ஒரு சிட்டுவேஷன்ல இருந்தா, என்ன செய்யலாம் நம்மள தூக்கி நிறுத்தன்னு என் சின்ன அறிவுக்கு தெரிஞ்ச சொல்யூஷன் சொல்லிருக்கேன். கல்யாணம்னா அல்வா மட்டும் இல்ல, அவ்வா அவ்வா(அழுகை)வும் தான். இதைப் புரிஞ்சு கான்பிடெண்டோட வாழ்க்கைக்குள்ள போங்க சிங்கிள் சிங்கங்களே!!!!! என் மத்த கதை ஹீரோ மாதிரி ரியல் லைப்ல இருக்க மாட்டாங்க.. அதக் காட்டத்தான் இந்த கிருவ உருவாக்கனேன். ஆனா இந்தப் பயபுள்ள லாஸ்ட் மினிட்ல நான் ஆன்டி ஹீரோவா இருக்கமேட்டேன்னு படார்னு மினி காலுல விழுந்துட்டான். என்னே என் ஆன்டி ஹீரோக்கு வந்த சோதனை!!!! இன்னும் ரெண்டு எபிலகதை முடிஞ்சுடும். லவ் யூ ஆல்)