ENV-10A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 10(1):

‘உன் அன்பு எனக்கு மருந்தானால், வலி கூட சுகமே

உன் அரவணைப்பு எனக்குக் கிடைக்குமானால், சோகம் கூட சந்தோஷமே!’

காலை எழுந்தபோது, கவிதாவின் உடம்பு சுட்டது. தரையில் படுத்திருந்தவள், கதவு தட்டும் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து கதவைத் திறந்தாள் கவிதா.

வெளியே தாமஸ். “கவிதா. என்னாச்சு ம்மா. இவளோ நேரம் ஆச்சு எந்திரிக்காம” என்றவுடன் தான் மணி பார்த்தாள். காலை ஒன்பது மணி .

“முடிலண்ணா. ஆஃபீஸ் போகல இன்னைக்கு. பத்து நிமிஷம் வரேன்” என்றுவிட்டு ஃபிரெஷ் ஆகி வெளியே வந்தாள்.

“என்ன கவிதா… முகமே சரியிலேயே” என தாமஸ் கேட்க “தெரியலண்ணா. காய்ச்சல் மாதிரி இருக்கு” என்றவுடன் “அச்சோ இரு நான் சூட சூப் போடறேன்” என்று அவசரமாக உள்ளே சென்றார்.

அவரின் இந்தக் கனிவு, அப்பாவின் ஞாபகத்தை வேறு வரச்செய்தது. பெரிதாக அப்பாவுடன் நேரம் கழிக்காவிட்டாலும், அவளின் குரலை வைத்தே சரியில்லை என்று புரிந்துகொள்வார்.

அஜயை அளவுக்கதிகமாகப் பிடித்ததன் காரணம் கூட, தந்தையின் கனிவை அவனிடம் அதிகம் கண்டதால்…

முந்தததினம் அவன் அவனுடைய நண்பனுடன் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தபோது, தற்செலயாக அவனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது கூட அவளுடைய முகமாற்றத்தை உடனே கண்டுகொண்டானே.

தாமஸ் அவளுக்கு சூப் வைத்ததுமட்டுமில்லாமல் இட்லியும் தட்டில் வைத்தார், இரவு அவள் சாப்பிடாமல் படுத்துவிட்டாள் என்றறிந்து…

“அண்ணா எனக்கு சாப்பாடு வேணாம்ணா. வயிறு பிரட்ற மாதிரி இருக்கு” முடியாமல் அவள் பேச “நேத்துல இருந்து சாப்பிடலன்னு நினைக்கறேன். சாப்பிடு மா. பசி எடுக்கும்” என வற்புறுத்தி அவளைச் சாப்பிட வைத்தார்.

“லயா கிளம்பிட்டாளா?” கவிதா கேட்க “ஆமாம்மா. கிளம்பிட்டா” என்றுவிட்டு உள்ளே சென்றார்.

என்ன முயன்றாலும், அகிலனின் நினைவு அவளை விட்டு விலகுவேனா என்றது. இன்று தாமஸ் செய்தது போல அவன் செய்ததே நினைவிற்கு வந்தது.

வெறும் மூன்று நாட்கள் மட்டுமே அவனுடன் கடந்திருந்தது. இருந்தாலும் அவளைப் புரிந்துகொண்டனே. அது இன்னமும் புரியாத புதிர் அவளுக்கு…

———அன்று———

அன்றைய இரவு உணவுக்காக அனைவரும் தயாராக, அகிலன் அவன் அம்மாவிடம் “அம்மா… இன்னிக்கி ஏன் தோசை செஞ்சுட்டு எல்லாரும் சேர்ந்து சாப்பிடக்கூடாது?” என காதைக் கடிக்க… அவன் அம்மாவுக்கா தெரியாது? ஏன் அவன் சொல்கிறானென.

கவிதாவை மட்டும் எங்கு செய்யச் சொல்லிவிடுவாரோ என்று நினைத்துத்தான் அவன் கேட்டது.

“தோசை சூடு சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். நீங்க எல்லாரும் உட்காருங்க. நான் உங்களுக்கு செஞ்சுட்டு, அப்பறமா சாப்பிடறேன்” என்று சொல்லிவிட்டு…

“கவிதா உனக்கு தோசை போட வருமா?” என கேட்டுக்கொண்டே கிட்சேனுள் அவர் நுழைய, அவர் கேட்ட விதமே சொன்னது ‘உள்ளே வந்து எனக்கு உதவு’ என்பது போல்.

அதுபுரியாதா அவளுக்கு. பெண் பார்க்க வந்தபோதே கேட்டாரே. அகிலன் அவளைப் பார்க்க, அவள் அமைதியாக உள்ளே சென்றாள்.

இருவரும் சேர்ந்து தோசையைச் செய்து மூவருக்கும் பரிமாறினார். ஏனோ முன் இருந்த பசி முற்றிலுமாகப் போயிருந்தது கவிதாவிற்கு.

பின் ப்ரியா அவள் அம்மாவிற்கும் கவிதாவிற்கும் செய்யச் செல்லும்போது அகிலன்…

“குட்டிப்பிசாசு… போ நீ படிக்கற வேலையப்பாரு. நான் போடறேன்” என சொல்லி அவன் அம்மா பேசும்முன் சமயலறைக்குச் சென்றான். இருவருக்கும் அவன் தோசை செய்ய ஆரம்பித்தான்.

கவிதா இரண்டு தோசையுடன் போதும் என சொல்ல “ரெண்டு தான் சாப்பிட்டுருக்க. ஒழுங்கா இன்னும் ரெண்டு சாப்பிடு பேபி. அப்பறம் பசிக்கும்” என்றான் குனிந்து மெதுவாக.

“நான் வேணாம்ன்னு சொன்னேன்… கேக்கல?” என அவளும் மெதுவாக அழுத்தமாகச் சொல்லிவிட்டு எழுந்தாள்.

“விடு அகில். பசிச்சா அவளே கேட்கமாட்டாளா? தொல்லை பண்ணாத” என்றார் லட்சுமி இருவரின் கிசுகிசுப்பைக் கேட்டபின்.

ஏனோ யாருடனும் ஒட்ட முடியாமல் தவித்தாள் கவிதா.

‘இன்னும் ரெண்டு நாள் வீட்ல இருந்தா, ஒன்னு பைத்தியம் ஆவேன்… இல்ல கோவில் குளம்ன்னு போய் சாமியார் ஆவேன்… இல்ல முழு நேர செஃப் (chef) ஆயிடுவேன்’ என நினைத்து…

“ஆண்ட்டி… நான் நாளைலருந்து ஆஃபீஸ் போலாம்ன்னு இருக்கேன்” என்றாள் லட்சுமியிடம்.

உண்டு முடித்து சோபாவில் உட்கார்ந்திருந்தவர் அதைக் கேட்டு முற்றிலும் மாறிப்போன முகத்துடன் “நீ வேலைக்கு போக அவசியம் இல்லனு உன் அப்பாகிட்ட சொன்னமே… நீ சம்பாதிக்கணும்ன்ற தேவ இப்போ இல்ல” என்றார் ‘நீ செல்வதில் எங்களுக்கு விருப்பமில்லை’ என்பதைப் போல்.

“இல்ல எனக்கு… நா… போக…” கவிதா தடுமாறினாள். அவன் கண்கள் தானாகச் சென்றது அகிலனிடம்.

அவள் நிலைமை அவனுக்குப் புரிய… “அம்மா… நான் தான் சொன்னேனே.. அவ முன்னாடியே வேலைக்கு போவேன்னு என்கிட்டே சொல்லிட்டான்னு. அவளுக்கு எது விருப்பமோ அத செய்யட்டுமே… அதுவும் இல்லாம வீட்ல அவளுக்குப் போர் அடிக்கும் ம்மா” என்றான் அவளுக்காக.

அதற்காக அம்மாவிடம் முறைப்பையும் வாங்கிக்கொண்டான்.

“எனக்கென்னமோ சரிப்படல. அப்பறம் உங்க இஷ்டம். இப்போவே என் பேச்சுக்கு இங்க மதிப்பு இல்ல” என லட்சுமி கடிந்துகொள்ள, அவள் நின்றுகொண்டே இருப்பதைப் பார்த்த அகிலன், கண்களால் கவிதாவை உட்காரச்சொன்னான்.

“அம்மா” என்றவன் அவர் பக்கத்தில் இடித்துக்கொண்டு உட்கார்ந்து, அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “நம்ம ப்ரியா நல்லா படிச்சு முடுச்சப்பறம், கல்யாணம் ஆயிடுச்சேன்னு வீட்ல உட்கார்ந்தா நமக்கு கஷ்டமால்ல இருக்கும்… அது போல…” என அவன் முடிக்கும் முன் அவர் தொடர்ந்தார்.

“கண்டிப்பா கஷ்டமா இருக்காது அகில். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பம் தான் முக்கியம். அப்பறம் தான் மத்ததெல்லாம். அதுயாரா இருந்தாலும் சரி” என்றார் கவிதாவைப் பார்த்து.

“ம்மா… மா. என்னால குடும்பமும் பிஸ்னஸும் பாத்துக்க முடியும்ன்னு நம்பறீங்கல்ல… அதுபோல தான் ம்மா. அவளால முடியும்ன்னு நினைக்கறா. படிச்ச படிப்பு வீணாகக்கூடாது. முடியற வர போகட்டுமே” என்றான் மறுபடியும் அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக.

‘அதென்ன முடியறவரை? என்னால முடியும்’ என மனதில் கூறிக்கொண்டாள் கவிதா.

“நாங்க இங்கயே இருக்க முடியாது அகில். செங்கல்பட்டு போகணும். ப்ரியா’க்கு காலேஜ் இங்க இருந்து ரொம்பத் தூரம். நான் இருக்கேன் இப்போ… சரி. இல்லாட்டி அவ தானே வீட்டை பாத்துக்கணும்”

“கல்யாணத்துக்கு முன்னாடி தான் நீயே சமச்சு சாப்பிட்ட. ஆனா இப்போ…? என்னமோ பண்ணுங்க. இந்த மனுஷன் எதுலயும் தலையிடமாட்டாரு. எப்பப்பாரு மொபைல் தான்” என்று புலம்பிக்கொண்டு அவர் அறைக்குப் போய்விட்டார்.

அவர் சென்றவுடன்… “ஏய்… நான் என்ன உனக்கு சமயக்காரியா? என்னமோ கல்யாணத்துக்கு முன்னாடி நீயே சமச்சயாம். ஏன் சமயக்காரி வெச்சுக்க வேண்டியதுதானே. டூ மச் இதெல்லாம் சொல்லிட்டேன்” என மெதுவாக அவன் கேட்கும் படியாக அவள் சொல்ல, அவன் சிரித்துவிட்டான்.

“சிரிக்காத. காண்டாவுது” என்றவள் திடீரென “அவங்க எப்பவும் இங்க இருக்க மாட்டாங்களா? உன்கூட நான்” என்று ஆரம்பித்து ‘உன்கூட நான் இங்க தனியா இருக்கணுமா’ என சொல்லவந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, யோசனையுடன் அவனைப் பார்க்க…

“ஹாஹாஹா. ப்ரியா காலேஜ் அங்கேயிருந்து தான் பக்கம்.. அப்பறம் நான் என்ன பேயா இல்ல பூதமா. இப்படி யோசிக்கற” என குறும்புடன் கேட்க, “அதெல்லாம் எவ்வளவோ பரவால்ல. உன்னோட கம்பேர் பண்றப்ப” கவிதா சொன்னவுடன்

“அப்படியா பேபி? என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு?” அவன் ஆச்சர்யம் கலந்த குறும்புடன் சிரித்தான்.

அவன் சிரிப்பதே சரியில்லை, மற்றும் பேச்சு மிகவும் சாதாரண முறையில் சென்றுகொண்டிருப்பது ஏதேதோ தோன “எனக்கு தூக்கம் வருது” என்று அவசரமாக மேலே சென்றுவிட்டாள்…

அவள் அவசரமாகச் சென்றதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, சிறிதுநேரத்தில் அவனும் சென்றான் அவர்கள் அறைக்கு!!!