ENV-14A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 14(1):

“PMS’ஸா… அப்படின்னா?” எனக் கேள்வியாக அவன் பார்க்க, “இப்போதானே சொன்னே கேள்விகேட்டுட்டே இருக்காதன்னு. கண்டதையும் கூகிள்ல சர்ச் பண்ணத் தெரிதுல்ல. இதையும் சர்ச் பண்ணிப் பாறேன்” என்றாள் சிடுசிடுவென.

“ஃஉப்ப்” என்று மூச்சை வெளியிட்டவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கீழே கிடந்த அவள் உடைமைகளை எடுத்து அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, கீழே கிச்சனுக்கு சென்றான்.

இருவருக்கும் காஃபி கலந்துகொண்டே ‘PMS என்றால் என்ன’ என பார்த்தான். மாதவிடாய் நாட்களுக்கு முன் உடலளவும் மனதளவும் ஏற்படும் ஒரு மாற்றம்.

மூட் ஸ்விங்ஸ் (mood swings) அதிகமாக இருக்கும் என போட்டிருந்ததைப் பார்த்தவன் புன்னகைத்துக்கொண்டே மனதில் ‘எப்பவுமே அப்படிதான் சிடுசிடுன்னு இருப்பா. இதுல இதுவேறயா’ என நினைக்கும்போது ‘ஏன் ப்ரியாக்கு இதெல்லாம் வரல?’ என்ற யோசனையுடன் இருவருக்கும் காபி எடுத்துச்சென்றான்.

அவளை எழுப்பிக் கொடுக்க “எனக்கு எதுக்கு காபி? இந்த டைம்ல சூடா குடிக்கவே ஒருமாதிரி இருக்கும். ப்ளீஸ் இப்போ எதுவும் வேணாம்” என்றுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

அதற்கு மேல் வற்புறுத்தாமல் மொபைலை எடுத்துக்கொண்டு பால்கனி சென்றவன் அவன் அம்மாவிற்கு போன் செய்தான்.

ஒருவேளை அவருக்கு இது குறித்து நன்றாகத் தெரியும் என நினைத்து அவரிடம்…

“அம்மா. உங்களுக்கு PMS’னா என்னனு தெரியும்?” எனக் கேட்க “என்னது” என்றார் புரியாமல். அம்மாவும் தன்னைப்போலே என நினைத்தவன்…

“அம்மா ப்ரியாக்கு பீரியட்ஸ் முன்னாடி உடம்பு முடியாம போகுமா??? அவ என்கிட்டே இதெல்லாம் சொன்னதே இல்லையே” என கேட்க…

“உன்கிட்ட ஏன்டா சொல்லணும் அம்மா நான் இருக்கப்ப. அதுவும் இல்லாம அவளுக்கு அந்த டைம்க்கு எதுமாதிரி சாப்பிடணுமோ அதெல்லாம் நான் செஞ்சு குடுப்பேன். ஆமா… இப்போ எதுக்கு இதெல்லாம் அகில்?” என கேட்டார்.

“இல்லமா அவளுக்கு அதுனால கொஞ்சம் உடம்பு முடில” என்றவுடன் “ஓ அத உன்கிட்ட சொன்னாளா?” கேட்டார் லட்சுமி.

“ஹ்ம்ம். எழுந்திரிக்க முடியாம இருக்கா… நீ ப்ரியாக்கு என்ன தருவன்னு சொல்லு. என்னால முடிஞ்சா அத செஞ்சு தரேன்” என்றான் கவிதா மேல் உள்ள அக்கரையில்.

“நீ இதெல்லாம் அவளுக்கு பண்ணி மட்டும் என்ன ஆகப்போகுது அகில்” என்று அவர் புலம்ப ஆரம்பிக்க, அதைத் தடுத்தவன் கேட்க வேண்டிய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

அவர் போன் வைத்தவுடன், அவன் மனதிலோ… ‘ப்ரியாவுக்கு அம்மா இருந்தாங்க… எல்லாம் செஞ்சாங்க. இவளுக்கு யாரு செஞ்சுருப்பா’ என நினைக்கும்போதே தாயில்லாமல் அவள் சில கஷ்டங்கள் அனுபவித்திருப்பாள் எனப் புரிந்தது அவனுக்கு.

கஷ்டமாகவும் இருந்தது. உள்ளே எட்டிப்பார்க்க, கால்களை மடித்து முகத்தைக் காலுக்கிடையில் வைத்து உட்கார்ந்திருந்தாள்.

அவன் மனதின் நேற்றிலிருந்து இருந்த சஞ்சலம் முற்றிலுமாகப் போயிருந்தது…

ப்ரியா அம்மாவிடம் சொல்வதுபோல், இவள் தன்னிடம் இதைப்பற்றிக் கூறியுள்ளாள் என்றால், தன்னால் முடிந்தவரை உதவ வேண்டும் என நினைத்து, மறுபடியும் கீழே சென்றான். அங்கே சாத்துக்குடி இருக்க, அதில் ஜூஸ் போட்டு எடுத்துச்சென்றான்.

அவளை வற்புறுத்தி குடிக்கவைத்தான். அவனுக்கும் உடம்பு முடியாமல் இருக்க, இரவு உணவு இருவருக்கும் வெளியில் இருந்து ஆர்டர் செய்தான்.

உண்டு முடித்து அவள் படுக்கையில் படுத்திருக்க… உடம்பு மிகவும் வலித்தது. கால்கள் வலிக்க, அதை மடித்து மடித்துப் புரண்டு படுத்தாள்.

‘என்ன ஆகிறது’ என்று அவன் கேட்க ‘கால் வலி’ என்றாள் சலித்துக்கொண்டே. கொஞ்சமும் யோசிக்காமல் அவள் காலடியில் வந்து அமர்ந்தவன் அவள் பாதங்களைத் தூக்க… திடுக்கிட்டு அதைப் பார்த்தவள், கால்களை இழுக்க முயற்சித்துக்கொண்டு “என்ன பண்ற. விடு” என்றாள் கோபமாக.

“எதுக்கு இப்படி கத்தற பேபி? கால் வலின்னு சொன்னால. அம்மாக்கு பாதத்துல அக்யூபன்சர் பாயிண்ட்ஸ்ல பிடிச்சு விட்டுருக்கேன். வலியெல்லாம் போய்டும்” என்றபடி விடாமல் காலைத் தன் மடிமீது வைத்துக்கொண்டான்.

“ஏய். சொல்றேன்ல வேணாம்ன்னு. விடு. நீ பிடிக்கிறது எனக்கு பிடிக்கல” என மறுபடியும் கத்தினாள்.

“ப்ச் பேபி. ஃபிசியோதெரபிஸ்ட் பண்ணற மாதிரி நினைச்சுக்கோ. ஒரு அஞ்சு நிமிஷம் யு வில் ஃபீல் பெட்டெர். நீ வேணா எனக்கு சர்வீஸ் சார்ஜ் குடுத்துடு” கண்களில் குறும்புடன் புன்னகைத்துக்கொண்டே… அவள் தடுப்பதையும் மீறி விரல் நுனிகளில் பிடித்துவிட்டான்.

முதலில் தடுத்தாள். ஆனால் அவன் பிடிக்க ஆரம்பித்தவுடன், அது இதமாக இருக்க, தன்னுடைய எதிர்ப்பை நிறுத்தினாள்.

அவனின் இந்தச் செயல் அவள் மனதை வெகுவாகத் தாக்கியது. அவனுடைய இந்த அக்கரைக்குத் தான் தகுதியுள்ளவளா என்ற கேள்வி வேறு ஒட்டிக்கொண்டது.

ஒற்றைக் கைக்கொண்டு இரண்டு கண்களின் குறுக்கே வைத்து மூடிக்கொண்டாள்… அவன் செய்வதை நினைத்துக் கண்கள் கலங்கியது.

விவரம் தெரிந்து… வாழ்நாளில் முதல் முறை இதுபோன்ற வலி நிவாரணம் என நினைக்கும்போது, எனோ தொண்டை அடைத்தது.

அவன் மேல இருந்த கோபம் அனைத்தும் சுக்குநூறாக உடைந்ததது போல் தோன்றியது. அவன் கைப் பற்றிக்கொண்டு கதறி அழத்தோன்றியது. ஆனால் அதை எதையும் செய்யவில்லை…. துளியும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

அழுகையைக் கட்டுபடுத்தியதுனாலோ, இல்லை அவன் பிடித்துவிடுவதினாலோ என்னவோ… சீக்கிரம் தூங்கியும் விட்டாள்.

அவளிடம் அசைவு நின்றபின், மெதுவாக எழுந்து, அவளுக்கு இரண்டு புறமும் தலையணை வைத்துவிட்டு அவனும் படுத்துகொண்டான்.

நேற்றிருந்த சஞ்சலம் முற்றிலும் போய், தாய் போல இருக்கமுடியாது என்றாலும்… நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றே தோன்றியது அவனுக்கு.

அடுத்த நாள் கொஞ்சம் தெளிவாக எழுந்தாள் கவிதா. இதுவரை அந்த நாட்களில் இல்லாத ஒரு சுறுசுறுப்புடன். அவளுக்கே அது புதிதாக இருந்தது.

இருவருக்கும் உணவு தயார் செய்தாள். அவனைப் பார்க்கும்போது நேற்றிரவு அவன் கால் பிடித்துவிட்டது நினைவிற்கு வர, கொஞ்சமே கொஞ்சம் புன்னகையுடன் “தேங்க்ஸ்” என்றாள்.

அவன் புன்னகைக்கமட்டுமே செய்தான். எப்பொழுதும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு உணவு பரிமாறுவாள். அனால் இன்று அவன் வற்புறுத்த, இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்.

அவனுக்கும் அவளிடம் கொஞ்சம் வித்யாசம் தெரிந்தது. ஆனால் உரிமை எடுத்துக்கொள்ளத் தயக்கமும் இருந்தது.

இருவரும் காராஜ் வந்தடைய இன்று அவள் ரீமோடல் செய்யப்பட்ட புல்லட்’டை காட்டினாள்.

அவனும் தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்தான்…

சீரான வேகத்தில் வண்டி சென்று கொண்டிருக்க… திடீரென ஒரு பைக் இவர்களை ஒட்டி இடிப்பதுபோல் இவர்களைக் கடந்து சென்றது.

அகிலன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தானோ இல்லையோ, இவளிடம் “****” ஆங்கில பீப் வார்த்தை வந்தது. கண்ணாடி வழியே அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அதை அவள் பார்த்தால் தானே. அவள் கவனம் முழுவதும் கடந்துசென்ற பைக்கின் மேல் இருந்தது.

‘இன்று தான் அவள் வண்டியில் அலர்ட்’டாக வந்திருக்கிறாள். அதுவும் இல்லாமல் அவன் முதன் முதலில் பார்த்த கவிதாவாகத் தெரிந்தாள் அவனுக்கு. இத்தனை நாட்களாக இதுதான் அவளிடத்தில் மிஸ்ஸிங்’ என்று நினைத்தான்.

இவர்களைக் கடந்த சென்ற அந்த பைக், ஒரு பெண் வண்டியை மோதுவதுபோல் சென்று, பிரேக் போட்டு அந்தப் பெண்ணைப் பதற்றமடையச் செய்துகொண்டிருந்தனர் அதில் இருந்த இளைஞர்கள்…

அந்தப்பெண்ணும் வண்டியை சீராக ஓடாமல் பயத்துடன் ஆட்டிக்கொண்டே ஓட்ட, இப்படியே சென்றால் அவள் கீழே விழுவது நிச்சயம். இங்க கோபம் தலைக்கேறியது. அகிலனுக்கில்லை… கவிதாவுக்கு…

“*****” திரும்பவும் பீப் வார்த்தைகளைப் பிரயோகித்தவள் “அவங்கள ச்சேஸ் பண்ணு அகில்” என்றாள் கோபத்துடன்.

திகைத்துப் பார்த்தான் அவன். எது அவன் காதில் விழுந்தது? ச்சேஸ் செய்யச்சொன்னதா!!! இல்லை அவள் முதன்முதலாக ‘அகில்’ என்றழைத்ததா!!!!!!