ENV-15B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 15(2):

 ———இன்று———

சீக்கிரம் தயாராகிக்கொண்டிருக்கும்போது லயாவிடம் இருந்து அழைப்பு…

அ: ஹே லயா… டெல் மீ. மோர்னிங் பிரேக்கா இல்ல லஞ்ச்’க்கு கூட்டிட்டுவரயா கவிதாவ?

ல: ஆர்க்கிடெக்ட் சார். என்ன கொஞ்சம் பேசவிடுங்க…

அ: ஹ்ம்ம் சொல்லுங்க மேடம்

ல: உன் வைஃப் காலைலயே சீக்கிரம் வெளிய கிளம்பிட்டாங்களாம். தாமஸ் சொன்னாரு. எங்க போனாங்கன்னு தெரில. நேரா ஆஃபீஸ் வந்துடுவாங்கன்னு நினைக்கறேன். வந்த உடனே உனக்கு அப்டேட் பண்றேன்.

அ: ‘ஹ்ம்ம் வருத்தமான குரல் வர

ல: ஹலோ என்ன ஃபீலிங்கா… எனக்கு தான் டா ஃபீலிங் என வடிவேலு போல் சொல்ல அவன் சிரித்துவிட்டான்.

இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.

 கொஞ்சம் வருத்தம் அவனுள் இருந்தாலும், அவள் அலுவலகம் வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து குளித்து முடித்து வெளியே வந்தான்…

வந்தவனுக்கு அன்று அவள் அறையில் குளித்துவிட்டு வெளியே வந்தது நினைவிற்கு வர, இருந்த வருத்தமும் போய் புன்னகை மறுபடியும் ஒட்டிக்கொண்டது.

———அன்று———

அவன் குளித்துமுடித்து வெளியே வர, அவள் திரும்பிக்கொண்டு “சட்ட எதுக்கு குடுத்தாங்க? போடவேண்டியதுதானே என்றாள் கடுகடுவென.

குளிச்சிட்டு வந்து போட்டுக்கலாமேன்னு நினச்சேன். நீ தள்ளு. அந்த பக்கம் தான் இருக்கு சட்டை அவள் பக்கத்தில் இருக்க, அவனைப் பார்க்காமல் அவள் நகரும்நேரம், அவன் பின்னே நின்றிருந்தான்.

ஒரு தயக்கத்துடன், நகரச்சென்றவள் நகராமல் நிற்க “என்ன ஆச்சு பேபி… தள்ளு அவன் குரல் பின்னால் மிக அருகில் கேட்டது. “ஆங்…” என்று திரும்பி நடக்க எத்தனிக்க, அவன் மேல் மோதியும் மோதாமல் நின்றாள்.

அவனை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொள்ள அவனுக்குப் புரியவில்லை.

‘என்ன ஆயிற்று இவளுக்கு. ஏதோ ரோபோ போல நடந்துகொள்கிறாள்’ என நினைத்தான்.

தள்ளி நிக்கமாட்டியா?” என்றுவிட்டு அவன் முகம் பாராமல் அவள் நகர, “ஓ நீங்க பாத்து போகமாடீங்களோ வர வர எதுக்கெல்லாம் கோவப்படறதுன்னு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு என அவனும் பதில் பேசினான் ஆனால் மெதுவாக அவளுக்குக் கேட்காமல்.

இருவரும் சிறிதுநேரம் அவள் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவள் ஏதோ பட்டும் படாமல் பேசுகிறாள் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு. ஒருவேளை இரவு எப்படித் தூங்குவது என்று நினைக்கிறாளோ என நினைத்தான்.

பேசிமுடித்து இருவரும் அறைக்குள் வந்தனர். அவள் மெளனமாக நின்றிருந்தாள்.

அவள் மௌனமாக இருப்பதைப் பார்த்து, அவன் முன்னமே யோசித்தபடி “பேபி. எனக்கு கொஞ்சம் ஆஃபீஸ் வேல இருக்கு. நீ படுத்துக்கோ என்றுவிட்டு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

நடு இரவுக்கு மேல் அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதிசெய்துகொண்டு, லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு அவனும் சேரிலேயே உட்கார்ந்தபடி உறங்கிவிட்டான்.

ஆனால் தூக்கத்தில் அவனறியாதது… அவன் உறங்கிய சில மணிநேரங்களில் அவள் எழுந்தது… தனக்காக அவன் சேரில் உறங்குவதை நினைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தது… தன்னையும் அறியாமல் கண்ணீர் கண்களில் கரைபுரண்டோடியது… அதற்கு மேல் கொஞ்சம்மும் அவள் உறங்காமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்ததது…

படுத்தால் உறங்கிவிடுவான். உறங்கியபின் எந்தத் தடையும் இல்லையென்றால் காலை எழுவதே அவன் பழக்கம். அதுபோலவே இது எதுவும் தெரியாமல் அவன் காலை விழித்தெழுந்தான்.

இருவரும் அன்று மதியம் வேலைக்குச் செல்லவேண்டும் என முடிவெடுத்திருந்ததால் சீக்கிரம் புறப்பட்டனர்.

அவள் நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றங்கள் தெரிந்தது. ஒருவேளை அவனைப் பிடித்திருக்கிறதோ அவளுக்கு என நினைத்தாலும்… அடுத்தநொடி அவள் முகம் உணர்வுகளைத் துடைத்ததுபோல மாறிவிடும். அவனால் யூகிக்கமுடியவில்லை அவள் மனதை.

அன்றைய மாலை பொழுது அவளை அலுவலகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

சிறுது தூரம் கடந்திருக்க… அவளுக்கு அழைப்பு வந்தது. அலுவலகத்தில் இருந்து. அவன் பைக்கை ஓரமாக நிறுத்த, அவள் பேசினாள்.

‘இப்போ எப்படி முடியும்? நான் கிளம்பிட்டேன்…… திரும்ப ஆபீஸ் வர நேரமாகும்…… எப்படி இன்னும் பத்து நிமிஷத்துல கால் ஜாயின் பண்ண முடியும்…… நான் அப்டேட் பண்றேன்” என வைத்துவிட்டாள்.

“என்ன ஆச்சு ஸ்வீட்டி” அவன் கேட்க… கொஞ்சம் வெறுப்பாக “ரெண்டு வாரமா ஒரு இஷ்யூ போய்ட்டு இருந்துச்சு. ஒரு வழியா சரிபண்ணிட்டோம்னு நினைச்சோம். இப்போ கிளைன்ட் பிரச்சனை இன்னும் இருக்கு. இப்போவே கால் ஜாயின் பண்ண சொல்றாராம். இங்க எப்படி முடியும். ஆஃபீஸ் திரும்பிப்போக ஒரு இருவது நிமிஷம் ஆகும்… வீட்டுக்கு போக அரைமணிநேரம் ஆகும்” என்றாள் யோசனையுடன்.

“உனக்கு ஒகே’னா பக்கத்துல தான் என் ஆஃபீஸ். அங்க வந்து அட்டென்ட் பண்ணு”

போக எவளோ நேரம் ஆகும்?” என அவள் கேட்க “பின்னாடி பிடிச்சுக்கோ… அஞ்சே நிமிஷம்” என்று வண்டியைத் தெறிக்க விட்டான். சொன்னதுபோல ஐந்தே நிமிடத்தில் அவன் அலுவலகம் வந்தது.

அவள் மனதில் ‘அப்போ தினமும் இவன் ஆஃபீஸ் தாண்டி என்ன விட்டுட்டு மறுபடியும் வரானா. கிட்டத்தட்ட நாற்பது நிமிஷம் அவனுக்கு எக்ஸ்ட்ரா வேல’ என நினைக்க “ஹலோ… வந்துடுச்சு இறங்கு” என்றான் அவள் இறங்காமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து.

அதைக்கேட்டு தன்னிலைக்கு வந்தவள், வண்டியை விட்டு இறங்கி அந்தக் கட்டிடத்தைப் பார்த்தாள். இரண்டு தளங்கள் கொண்ட அலுவலகம். சுற்றியும் பசுமை. அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைத்தாள்.

வீடு ஒருவகையில் வடிவைக்கப்பட்டிருக்க… இது வேறு ரகம். ஒவ்வொன்றும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

“மேடம் அப்பறம் ஆஃபீஸ்’ஸ பாக்கலாம். கால் அட்டென்ட் பண்ணனும்னு சொன்னீங்க” என அவன் நியாபகப் படுத்த, அவனை முறைத்தாள்.

அவனறைக்கு அவளை அழைத்துச்சென்றவன், அதனுள்ளே இருந்த காண்ஃபெரென்ஸ் அறையைக் காட்ட அவள் உள்ளே நுழைந்தாள்.

அவனிடத்தில் அவன் உட்கார்ந்து ஏதோ லேப்டாப்’பில் பார்த்துக்கொண்டிருக்க, அவள் அவ்வப்போது அவனறியாமல் அவனைப் பார்த்துக்கொண்டு கால் (call) பேசிக்கொண்டிருந்தாள்.

அவளும் முழுவதுமாக வேலையில் மூழ்க, சத்தமில்லாமல் கதவைத் திறந்துகொண்டு வந்தவன் டேபிள் மேல் டீ வைத்துவிட்டு, ‘சீக்கிரம் குடி’ என்று மெதுவாகப் புன்னகைத்துக்கொண்டே சொல்ல, அவளும் புன்னகையுடன் சரி என்றாள்.

அவன் சென்ற சில நிமிடங்களில் இரண்டு பெண்கள் அவனிடம் ஏதோ அவன் லேப்டாப்’பில் காட்டி கேட்க, அவன் அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தான்.

அவளும் சிறிதுநேரத்தில் வேலை முடித்து வெளியே வர, அந்தப் பெண்கள் “ஹெலோ மேம்” என்று புன்னகைத்தனர்.

கவிதாவும் புன்னகைத்துக்கொண்டே மணியைப் பார்த்தாள். அது எட்டரை என்று காட்டியது.

அவனெதிரில் இருக்கையில் உட்கார்ந்தாள். அவனுக்கு ஒரு அழைப்பு வர, அவன், கவிதாவிடம் சொல்லிவிட்டுப் பேசச்சென்றான்.

கவிதா அந்தப் பெண்களிடம் “நீங்க ஏன் இன்னும் கிளம்பாம இருக்கீங்க? ஒன்பது மணி ஆகப்போகுது. அவர் இருக்க சொன்னாரா” எனக் கேட்க…

அவர்கள் பதறிக்கொண்டு “ஐயோ இல்ல மேடம்… சார் சொல்லல.. நாங்க தான் இருக்கோம்”

கவிதா ஏன் எனப் பார்க்க “எங்க ஊரு திருநெல்வேலி. நாங்க வீடு எடுத்து தங்கிருக்கோம். நைட் போய்தான் சமைக்கணும்.  சார் இங்க டின்னர் ப்ரொவைட் பண்ணுவாரு. அதான் சாப்பிட்டு போய்டலாம்னு” என அவர்கள் தயங்க… “அசோ சாரி. எனக்கு இது தெரியாது. நீங்க எப்படி நேரம் கழிச்சு வீட்டுக்கு போவீங்கன்னு யோசிச்சேன்”

“எங்க வீடு இங்க இருந்து ஒரு அஞ்சு நிமிஷம் தான் மேம்” என்றவுடன் கவிதா சரி என்பது போல் புன்னகைத்தாள்.

அவள் கண்கள் தானாக அகிலனிடம் சென்றது. கொஞ்சம் புன்னகையும் ஒட்டிக்கொண்டது.

“பேபி. லேட் ஆயிடுச்சு. இங்கயே சாப்பிட்டு போய்டலாமா?” என அவன் கேட்க, சரி என்றாள்.

அந்தப்பெண்கள் இருவரும் ஒருசேர சின்னதாகப் புன்னகைத்துவிட்டு வெளியேறினர்… கவிதாவும் அகிலனும் என்ன என்பது போல யோசிக்க… அகிலனுக்குப் புரிந்துவிட்டது. அவனும் புன்னகைத்தான்.

அவன் பேன்ட்ரி’க்கு போக, படியை காட்டினான் அவளுக்கு. அவள் முன்னே செல்ல அவன் பின்னோடு சென்றான்.

“அவங்க எதுக்கு சிரிச்சாங்க. நீ எதுக்கு பதிலுக்கு சிரிச்ச” என படியேறிக்கொண்டே கவிதா கேட்க… அவன் மறுபடியும் சிரித்துக்கொண்டு “உன்ன பேபின்னு கூப்டேன்ல அதுக்கு தான் சிரிச்சுருப்பாங்க” என்று சொன்னவுடன் சட்டெனத் திரும்பினாள் அவனைத் திட்ட.

அவள் திரும்பிய வேகத்தில்… சரியாகப் படியில் கால் வைக்காமல் ஏறியதால், தடுமாறி கீழே விழப்போக… அவன் மேலே சாய்ந்தாள்.

அதை எதிர்பார்காதவன் கொஞ்சம் தடுமாறினாலும், ஒரு கையால் கைபிடியையும்… மறுகையால் அவள் விழாமல் தாங்கினான்.

அவளோ பீதியுடன் விழிவிரித்து அவனைப் பார்க்க…. பக்கத்தில் அவள் முகம் பார்த்தவனுக்கு இனம் புரியாத பல எண்ணங்கள் மனதில்!!!