ENV-16B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 16(2):

கவிதா பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தாள். சர்வீஸ் செய்யப்பட்டு வந்த கார், பைக் இரண்டும் எடுத்துச்செல்லவில்லை என்றால் பக்கத்தில் தான் சென்றிருக்கவேண்டும். ‘ப்ளாக் செக்யூரிட்டி’யிடம் கேட்டால் எங்கு சென்றிருப்பான் எனத் தெரியும்’ என்று நினைத்துக்கொண்டு நேராகக் கீழ் தளத்திற்குச் சென்றாள்.

அவர் அவளிடம் அகிலன் க்ளப்’பில் (club) நுழைவதைப் பார்த்தாகச் சொல்ல, அவசரமாக அங்கே சென்றாள்.

அங்கு தான் அவன் வேர்க்க வேர்க்க ஸ்குவாஷ் (squash) தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபின் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது அவளுக்கு.

‘சரியான நட் (nut) கழண்ட கேஸ் தான். இதுவர நான் எவளோ பேசியிருக்கேன். அதுக்கெல்லாம் துளிக்கூடக் கோவம் வரல. ஒரு சின்ன மேட்டர் இதுக்கு இவளோ கோவம். இரு உன்ன பாத்துக்கறேன்’ என்று நினைத்தவள், காலணியைக் கழற்றிவிட்டு, அங்கிருந்த கூடைப்பந்தை கையிலெடுத்து, தரையில் தட்டி விளையாட ஆயத்தமானாள்.

பந்தின் சத்தம் கேட்டு அகிலன் திரும்பிப்பார்க்க, அங்கே கவிதா கூடைபந்துடன்… கண்கள் மின்ன, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் கோபமாவது மண்ணாவது என்று.

துளியும் தயங்காமல் அவளருகே சென்றவன் “பேபி. இங்க என்ன பண்ற?” என சகஜமாகக் கேட்க…

அவளோ அவனைப் பார்க்காமல் பந்தை மட்டுமே பார்த்துக்கொண்டு “என்ன ஒருத்தன் டென்ஷன் பண்ணிட்டான். கோவமா இருக்கேன். அதான்” என்று கூடை பக்கத்தில் சென்றவள் ஒரு எம்பு எம்பி, பந்தைப் போட அது குறி தப்பி வெளியில் விழுந்தது.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “சாரி பேபி. அவளோ கோவ பட்டுருக்கக்கூடாது. அதுவும் பொருளை தூக்கிப்போட்டு. ப்ச். ஐம் சாரி” என்றான் நிஜமாக மன்னிப்பு கேட்கும் தொனியில்.

“என்ன சாரி? உன்ன மன்னிக்கெல்லாம் முடியாது. நான் எவளோ பயந்…” ‘பயந்துட்டேன் தெரியுமா’ என சொல்லவந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு…

“நீ மட்டும் என்ன பேபி ஸ்வீட்டின்னு கூப்பிடுவ. எனக்கு பிடிக்கலன்னு சொன்னாலும் கேட்க மாட்ட… ஆனா உனக்கு கோவம் வருமா” என மறுபடியும் கூடைப்பந்தில் கவனத்தை மாற்றினாள். இம்முறை சரியாகக் கூடையில் பந்து விழுந்தது.

ஆனால் அவள் சுத்தமாக மறந்தது, கொஞ்சகாலமாக அவன் பேபி என்றோ ஸ்வீட்டி என்றோ அழைக்கும்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்று. அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ, ஆனால் பழகிவிட்டது அவளுக்கு.

அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்திருக்க, “சோ… நான் உன்ன இனி அகிலா’ன்னு தான் கூப்பிடுவேன்” என்றுவிட்டு அவன் பக்கத்தில் நின்றுகொண்டு, அவன் முகம் பார்த்து “அகிலா… அகிலா… அகிலா” என்றாள் சிரிப்புடன்.

நியாயமாக அவன் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனோ மர்மமான புன்னகையுடன், அவள் எதிர்பார்க்காத போது, பந்தை அவளிடமிருந்து பறித்து, கூடையில் போட்டான்.

பின் அவளருகில் மிகவும் நெருக்கமாக வந்து, ஹஸ்கி குரலில் “பேபி… இந்தப் பேர இவளோ அழகா யாருமே கூப்பிட்டதில்ல. அகிலான்னு எவளோ ரொமான்டிக்’கா கூப்பிடற” அவன் நெருக்கம் அதிகமாக, அனிச்சையாக அவள் பின்னே நகர்ந்தாள்.

“இனி நீ இப்படியே கூப்பிடு. ஐ ஜஸ்ட் லவ் இட் பேபி” என்று கண்ணடித்துவிட்டு மறுபடியும் விளையாடச் சென்றான்.

“ஆஹ்” என்று தரையில் காலை உதைத்துக் கத்தினாள் கவிதா. “பேபி அ இல்ல… அகிலா’ன்னு ரொமான்டிக்’கா சொல்லு” என அவளைக் கடுப்பேற்றினான்.

கோபத்தில் அவன் அருகில் வந்தவள் “நமக்குள்ள ஒரு பெட் (bet). யாரு மூணு தடவ பால் உள்ள போடறோமோ, அவங்க சொல்றத மத்தவங்க கேட்கணும். மூணு சான்ஸ் தான். எனக்கு பெருசா ஒன்னும் இல்ல. நீ என்ன ஸ்வீட்டி, பேபி’ன்னு கூப்பிடக்கூடாது” என சொன்னவள் அவன் பதிலுக்காகவெல்லாம் காத்திருக்காமல்…

“ஃப்ரஸ்ட் நீயே விளையாடு” என்றுவிட்டி, கண்களால் விளையாடு என்று சொல்ல, அவனும் புன்னகைத்துக்கொண்டே முதல் முறை போட்டான். அவளும்கூட.

இரண்டாவது அவன் தவறவிட்டான். அவள் போட்டுவிட்டாள். அகிலன் ரூல் (rule) படி இங்கேயே தோற்றுவிட்டான்.

மூன்றாவதும் அவன் தவறவிட, “பேபி இது போங்கு. நீ ப்லேயர். நான் சும்மா டைம்பாஸ்க்கு விளையாடறவன்” என்றவன் நிறுத்தி “ஆமா… அஜய் தானே உனக்கு சொல்லிக்குடுத்தது” ஆர்வமாகக் கேட்க, புன்னகைத்துக்கொண்டே ஆம் எனத் தலையசைத்து பந்தை போடத் தயாரானாள்.

“லக்கி” என பெருமூச்சுவிட்டான் அகிலன். “யாரு?” அவனைப் பார்க்காமல் அவள் கேட்க, அஜய் என்றா சொல்லமுடியும். “நீ தான். செம்ம’யா விளையாடறயே” என்றான் சம்மந்தமேயில்லாமல்.

“நம்பிட்டேன்” எனப் புன்னகைத்துக்கொண்டே அவளும் கூடை வரைப் போடச் செல்லும்போது, அவளைத் திசைமாற்ற “பேபி. நீ வின் பண்ணணும்ல? நான் வேணும்னா… உன்ன ஒரே தூக்கு தூக்கிடறேன்… ஈசியா போட்டுடலாம்” என்றான் நமட்டு சிரிப்புடன்.

அவன் சொன்னதை நினைத்து திடுக்கிட்டவளின் குறி தவறியது. தவறவிட்டாள்.

“ஏய். நான் கேட்டேனா? என்ன ஏன் டைவர்ட் பண்ண?” எனச் சண்டைக்கு வர, “பேபி… பேபி” வேண்டுமென்றே அழைத்தவன் “கேம்ல டைவெர்ஷன் நிறைய இருக்கும். நாம தான் கண்டதையும் நினச்சு பாக்காம… ஒழுங்கா விளையாடனும் ஸ்வீட்டி” என விஷமமாகச் சிரிக்க, அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவனும் அவள் பின்னாலேயே சென்றான்.

அவள் கம்யூனிட்டி’யில் இருந்த கடைக்குச் சென்று… ஐஸ் கிரீம் பெட்டியில் இருந்து இரண்டு எடுத்துக்கொள்ள, அவனும் அதிலிருந்து எடுக்கச் சென்றான். அது காலியாகியிருந்தது.

கடையில் இருந்தவன் “சாரி சார். இன்னிக்கு ஒரு பர்த்டே பார்ட்டி. இருந்ததெல்லாம் காலி ஆயிடுச்சு” எனச் சொல்ல, கவிதா கடைக்காரனிடம் “காசு அங்க வாங்கிக்கோங்க” என அகிலனைக் கை காட்டிவிட்டு வெளியில் சென்றாள்.

அவனிடமும் காசு இல்லை. இருப்பினும் “செரனிட்டி ப்ளாக். I2 மார்னிங் வாங்கிக்கோங்க” என்றுவிட்டு அவள் பின்னே சென்றான்.

அவள் அபார்ட்மெண்ட் வெளியே நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவள் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தான். முற்றிலும் இருட்டாக இருக்க… ஆங்காங்கே மெர்குரி விளக்குகள். இருவரும் மனதும் லேசாக இருந்தது. கோபம் கவலை எதுவுமில்லை.

அவள் உண்பதையே அவன் பார்க்க, அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக்கொண்டாள். திருப்பியபக்கம் சென்று அவன் நடக்க, அவள் தலையில் அடித்துக்கொண்டு “எனக்கு வயறு வலிக்கவா? இந்தா”, அவளிடமிருந்த மற்றொரு ஐஸ் கிரீமை நீட்டினாள்.

புன்னகைத்துக்கொண்டே வாங்கிக்கொண்டான். அந்த அமைதியான இரவு தந்த தனிமையை இருவரும் ரசித்தனர்…

அதைத் தடுக்கும் விதமாக, கவிதாவை ஒட்டி ஒரு கார் செல்ல, உள்ளே இருந்தவர்கள் வெளியில் எட்டிப்பார்த்து “ஊஊ” என அவள் அருகில் வரும்போது கத்த, அதில் சட்டெனப் பயந்தவள் ஐஸ் கிரீமை தவறவிட்டாள்.

அதில் கடுப்பானவள்… “டேய் ****…****” வாயில் வந்த வார்த்தைகளைக் கையைக்காட்டி திட்டிவிட்டு திரும்ப, அகிலன் ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

இவள் பார்க்கவும், கையில் இருந்ததை நீட்ட “ச்சி” என முகத்தைச் சுளித்துக்காட்டி “நீ மட்டும் நல்லா தின்னு” கோபத்துடன் விடுவிடுவென முன்னே நடந்தாள்.

சிரித்துக்கொண்டே அவனும் அவளுக்கு ஈடுகொடுத்து நடந்தான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இருவரின் அருகாமையை ரசித்தனர்.

ஒரு வட்டம் அடித்து வீடுவந்து சேரும்போது, கீழே இருந்த செக்யூரிட்டி இவளைப் பார்த்ததும் ஒரு கவரை நீட்டினார்.

அவள் குழப்பமாக அகிலனைப் பார்க்க “சீக்கிரம் வாங்கிட்டு வா பேபி” என்றுவிட்டு லிப்ட் அருகே சென்றான்.

அந்தக் கவரில் ஒரு ஐஸ் கிரீம் டப்பா மற்றும் ஒரு ஸ்வீட் டப்பா இருந்தது. அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டது.

———இன்று———

இருவருக்கிடையில் இருந்த ஒரு தடுப்பு, உடையும் தருவாயில், ஒரு சின்ன மனஸ்தாபத்தால் இதோ இப்போது பிரிந்துள்ளனர்.

‘மதிய இடைவேளை வரை கவிதா ஆஃபீஸிற்கு வரவில்லை’ என்று லயா அகிலனிடம் அப்போதுதான் சொல்லியிருந்தாள்.

‘வெளியே சென்றிருக்கிறாள் என்றால் இந்த ஊரில் யாரை தெரியும் அவளுக்கு? கண்டிப்பாக அஜய் தான்’ என்றது அவன் மூளை.

‘தூரமாக நின்று பார்க்கும் தகுதிகூடத் தனக்கில்லயா’ என்று நினைத்து மனது மிகவும் வருந்தியது…

அஜய் என்று நினைக்கும்போது கோபம் ஒருபக்கம் இயலாமை ஒரு பக்கம் என அகிலனைப் படுத்தியெடுத்தது.

கடைசியாக அவன் துபாய் வரும்முன் கவிதாவிடம் அவன் நடந்துகொண்டது கண் முன்னே ஓடியது.