ENV-21A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 21(1):

 அவளின் முதல் முத்தம். கண்கள் விரித்து அவளைப் பார்த்தான்.

அவனைப் பார்த்துக் கலங்கிய கண்களுடன், போலியாகக் கோபித்துக்கொண்டு “இது வர ஒருதடவ கவின்னு கூப்டுருப்ப? எப்போப்பாரு பேபி ஸ்வீட்டி தான்”

“ஹாஹாஹா இப்போ என்ன கவி’ன்னு கூப்பிடணுமா?” அவன் கேட்க… “வேணாம். பேபி’னே கூப்பிடு” ஆசையாகச் சொன்னாள்.

“யாரோ சண்டை பெட்’லாம் காட்டினாங்க. பேபி’ன்னு கூப்பிடாதன்னு சொல்லிட்டு” அவளை அவன் சீண்ட… “அதான் தோத்துட்டேனே. உங்கிட்ட” இரட்டை பொருள் கொண்டு பதில் பேசினாள்.

கொஞ்சம் அழுகை நின்றிருக்க… கவிதா, “சரி சொல்லு. எதுக்கு அவளோ அவசரமா நீ துபாய் கிளம்பின? நான் ரொம்ப ஏமாந்து போய்ட்டேன்” கேட்டாள் அவனிடம்.

“தெரியல பேபி. எனக்கு என் மேலயே கோவம். நீ ‘யு ஆர் ஹர்டிங் மீ’ன்னு சொன்ன பாரேன். அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு. உன்ன வேற யாராச்சும் ஹர்ட் பண்ணலே தாங்கமாட்டேன். ஆனா நானே, எதையெதையோ நினச்சு உன்ன கஷ்ட படுத்திட்டேன்.

என்னோட லவ், பாசம்லாம் உன்மேல திணிக்கற மாதிரி தோணுச்சு. எங்க நான் அங்கேயே இருந்தா உனக்கு இன்னும் கஷ்டம் குடுத்துருவேனோன்னு கிளம்பினேன்.

ஆனா நான்… நீ துபாய் வந்தப்பறம் சென்னை போனேன். லயா சொல்லிருப்பாளே. என்கூட ஏர்போர்ட் வர வந்தா லயா. நான் வீட்டுக்கு போனப்ப நீ வேல விஷயமா ஹைதெராபாத் போயிருக்கன்னு அம்மா சொன்னாங்க. நான் பண்ணின தப்புனால தான் என்கிட்டே சொல்லாம கிளம்பி போய்ட்டயோன்னு நினச்சேன்.

அப்புறம் உன்ன துபாய்ல அஜய் கூடப் பார்த்த உடனே, நீ அஜய் கூடத் தான் வந்துருக்கன்னு நினச்சேன்” அவன் சொல்ல… அவள் முறைத்துக்கொண்டு அவனிடம்,

“நம்ம சண்டை வீட்ல தெரியாது. அப்போ நான் எப்படி துபாய் போறேன்னு சொல்லிட்டு வர முடியும்? அதான் ஹைதெராபாத்’ன்னு சொன்னேன். நீ மட்டும் அவசரப்பட்டுக் கிளம்பாம இருந்திருந்தா இவ்ளோ நடந்துருக்கவே இருக்காது. இதுல நான் அஜய் கூட வந்தேன்ன்னு வேற நெனப்பு” கோபப்பட்டாலும் அவன் கைவளைவிற்குள்ளேயே இருந்து கோபப்பட்டாள்.

“சரி. சாரி. தப்பு தான். ஆமா அங்க எப்படி அஜய்?” மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டான்.

“அவன் ஃப்ரெண்ட் கூட டின்னருக்கு வந்திருந்தான் போல. தற்செயலா மீட் பண்ணேன். நான் இருந்த மனநிலைல அன்னைக்கு அவன் கிட்ட சரியா பேசக்கூட முடியல. ஆனா அதுக்கு முன்னாடி நான் அஜய்யப் பாத்தேன். பேசினேன். நீ இங்க கிளம்பி வந்த அன்னைக்கு”

அகிலன் ஆர்வமாக அவளைப் பார்த்தான். அஜய்யை சந்தித்தபோது நடந்ததையெல்லாம் அவள் சொன்னாள்.

“அவனோட பேசினப்ப தான் ஒரு விஷயம் புரிஞ்சது அகில். அவன் உண்மைய சொல்லியிருந்தா, அவனுக்காக நான் ஆயிசு முழுக்க காத்துட்டு இருந்துருப்பேன். ஆனா என்னோட நல்லதுக்காகன்னு சொல்லி என் வாழ்கைய அவன் டிசைட் பண்ணிருக்கான், அதுவும் எனக்கு தெரியாம. அவன் உன்கிட்ட பேசினது, உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னது தப்பு அகில்.

நீ நல்லவனா இருக்க போக, என்ன புரிஞ்சுக்கிட்ட. ஒருவேளை, பழசை குத்தி காமிச்சு, காயப்படுத்துற மாதிரி ஆளா இருந்திருந்தா? என்ன ஆகியிருக்கும்? எல்லாம் முடிஞ்சு இப்போ வந்து நான் நல்லா இருக்கேனான்னு கேட்கறேன். நல்லா இல்லைனா என்ன பண்ணிருப்பான்?

ஆனா ஒன்னு அகில், நீ நெனச்சுருந்தா, கல்யாணம் ஆகிடுச்சு, இனி உன்னோட தான் வாழணும்ன்னு என்கிட்ட சொல்லிருக்கலாம். பட், நீ என்ன முடிவெடுக்க சொன்ன என்னோட உணர்வுகளை மதிச்சு.

இந்த உலகத்துல முக்கால்வாசி ஆண்கள், பெண்களோட முடிவையும் சேர்த்து அவங்க தான் எடுப்பாங்க. ஆனா நீ? பெண்களுக்கும் உணர்வுகள் இருக்கும்ன்னு நினச்சு என்ன டிசைட் பண்ண சொன்ன. அங்க நீ தனியா தெரிஞ்ச” அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.

“இருந்தாலும் அவன் பாவம் அகில். அவன் நிலைமை அவன அந்த முடிவை எடுக்க வெச்சுருக்கு. அவன் இன்னமும் பழசை மறக்காம இருக்கான். அவன்கிட்ட பேசினப்பறம் எனக்கு கொஞ்சம் கில்ட்டி’யா கூட இருந்துச்சு. நான் சந்தோஷமா இருக்கேன். ஆனா அவன்? அவன் எல்லாத்தையும் மறக்கணும் அகில்” இப்போது மறுபடியும் அவள் கண்கள் லேசாகக் கலங்கியது.

அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு “கண்டிப்பா பேபி. அஜய் சந்தோஷமா இருப்பாரு. நீ பாக்க தான் போற. கடவுள் எல்லாருக்கும் எப்பவும் கஷ்டத்தை மட்டும் குடுக்க மாட்டாரு. சந்தோஷமான பாதையையும் காட்டுவார். அஜய் லைப் நல்லா இருக்கும் பாரு” அவன் சமாதானம் சொன்னாலும் அவள் மனநிலை கொஞ்சம் கனமாக இருந்தது.

“ஹ்ம்ம். கடவும் மேல எனக்கு ரொம்பல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை அகில். ஏதோ கும்பிடுவேன் அவ்ளோ தான். கைலாசநாதர் கோவிலுக்குப் போனாலும் எப்பவாச்சும் தான் சாமி கும்பிடுவேன். அவர் மேல கோவம் எனக்கு. என் அம்மாவை அவர் கூப்பிட்டுக்கிட்டாருன்னு.

அம்மா போனதுக்கப்பறம், சித்தி சித்தப்பா பாத்துக்கறேன்ன்னு சொன்னாங்களாம். ஆனா அப்பாக்கு யாரும் உதவி பண்ணா பிடிக்காதுன்னு என்ன ஹாஸ்டல்ல சேர்த்துட்டாரு. அப்பாமேல கோவம் கடவுள் மேல கூடக் கோவம். எதுக்காக அப்பா மனச கடவுள் மாத்தலன்னு. அப்போ சின்னப் பொண்ணு இல்லையா. பத்து வயசு. கடவுள்னால எல்லாம் முடியும் ஆனா எனக்கு மட்டும் அவர் எதுவுமே செய்யலன்னு கோவம் அவர்மேல.

ஹாஸ்டல்ல இருக்கப்ப, மாசம் ரெண்டு தடவ பேரன்ட்ஸ் வந்து பசங்கள பாக்கலாம். நிறைய பசங்க அம்மா அப்பாலாம் வருவாங்க. ஆனா என்ன பாக்க யாரும் வரமாட்டாங்க. அப்பா ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ தான் வருவாரு. வந்தாலும் ஒரு மணி நேரம் இருப்பாரு.

என்ன வேணும்ன்னு கேட்டு கேட்டு வாங்கிக்கொடுப்பாரு. எனக்குக் கோவம் வரும். கத்தணும்ன்னு இருக்கும். எனக்கு இந்த உயிரில்லாத பொருள் எல்லாம் வேணாம். அம்மா தான் இல்ல. உயிரோட இருக்க உங்ககூட இருக்கணும். தம்பிகூட இருக்கணும். எல்லார போல நானும் வீட்ல இருக்கணும்ன்னு. ஆனா எதுவுமே சொல்லமாட்டேன்.

அவர் போனதுக்கப்பறம் ரூம்ல வந்து எவ்ளோ அழுத்துருக்கேன் தெரியுமா. சில பசங்க வீட்டு சாப்பாடுன்னு சாப்பிடுவாங்க. எனக்கு குடுப்பாங்க. அத ஆசையா சாப்பிடுவேன். சாப்டுட்டு அழுவேன். ஏன் அம்மா என்ன விட்டுட்டு போனாங்க? அம்மா தான் போய்ட்டாங்க. அப்பா இருந்தும் இல்லாம போய்ட்டாருன்னு”

அவள் இதை அகிலனிடம் சொல்லும்போது அவள் உடலின் நடுக்கம் அவனால் உணர முடிந்தது. அவளை உச்சி நுகர்ந்து, உச்சியில் முத்தமிட்டான். அந்த அரவணைப்பால் அவனுள் இன்னமும் ஒடுங்கிக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“அப்பாக்கு எங்க மேல ரொம்ப அக்கறை அதிகம். எங்களுக்கு எல்லாம் நல்லதா கிடைக்கணும்னு நெனச்சாரு. ஆனா எங்களுக்கு அந்த வயசுல அவரோட பாசமும் தேவைன்னு புரியல போல. அந்த சமயத்துல ஆரம்பமான கோபம் தான், எல்லாத்துக்கும் கோபப்படுவேன். கோபம் வந்ததாலோ என்னவோ அழுகையெல்லாம் சுத்தமா போய்டுச்சு. எல்லாத்தையும் நானே தான் ஃபேஸ் (face) பண்ணனும். எனக்கு வேற யாருமில்லன்னு இருந்துட்டேன். எனக்கு அது தைரியத்தைக் கொடுத்துச்சு. ஒன்னு வேணாம்னா அது எப்பவுமே வேணாம் அப்படினு கேர் ஃபிரீயா இருந்தேன்.

தனியாவே இருந்து பழகிட்ட எனக்குப் பெரிய வடிகாலா அஜய் வந்தான். லைப் ரொம்ப கலர்ஃபுல்லா இருந்துச்சு. எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தேன். ஊருக்கு போகக்கூட மாட்டேன். போனா சோகமாயிடுவேன்னு.

என்ன பத்தி எல்லாமே தெரிஞ்ச அஜய்… எனக்காக அவன் மட்டும் தாம் இருக்கான்னு தெரிஞ்ச அஜய்… என்ன காரணம்ன்னு சொல்லாம என்ன நிர்கதியா விட்டது, அவ்ளோ வலி தந்துச்சு.

பலவருஷமா அழுகாத நான் அவனால திரும்பவும் அழுதேன். என்ன அழவெச்சுட்டானேன்னு கோவம். என்ன ஏமாத்திட்டானேன்னு கோவம். எனக்குன்னு இருந்த ஒருத்தன் போய்ட்டான்னு கோவம். எனக்குன்னு இனி யாரும் இல்லங்ற கோவம். இதெல்லாம் சேர்ந்து அவன ரொம்ப வெறுத்தேன்.

ஆனா அவனோட நினைவுகளை மறக்கவே முடியல. அது அழுகை தான் தந்துச்சு. எல்லாம் தெரிஞ்ச அஜய் என்ன விட்டுட்டான். என்ன பத்தி ஒன்னுமே தெரியாத நீ எனக்காக ஒன்னொன்னும் பாத்து பாத்து செஞ்ச. மொதல்ல கோவம் வந்துச்சு. நீ எதுக்கு இதெல்லாம் பண்ணனும்னு. ஆனா எந்தப் பிரதிபலனும் இல்லாம நீ பண்றன்னு புரிஞ்சுட்டேன். நான் முழுசா உன்ன உணர்ந்துக்கிட்ட தருணம்… எது தெரியுமா…” என சொல்லி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.