NNA13

நீயும் நானும் அன்பே

அன்பு-13

 

சங்கர், தாய் சசியிடம் தனது திருமணத்தை நடத்த ஒப்புதல் கூறியதும், சசி அன்னம்மாளிடம் நவீனாவை  பெண் கேட்கப் போகும் விடயத்தைப் பகிர்ந்திருந்தார். 

 

அன்னம்மாளுக்கு பேரன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

 

“நல்ல நாளு பாத்து, நீயும், நம்ம தாஸும் மருமயன் வந்திருக்கும்போது போயி பேசிட்டு வாங்க!, என்று கூறியவர் 

 

“புஷ்பா ரொம்ப சந்தோசப்படுவா!  அவளுக்கு சின்ன வயசுல இருந்தே தாஸூன்னா உசிரு!  இப்ப தாஸு மயனுக்கு அவ பொண்ணைக் குடுக்கறதுன்னா கசக்கவா செய்யும்!, என்று அவர் தன் மன உணர்வுகளை மடைதிறந்த வெள்ளமாக மருமகளிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

 

அந்தஸ்து, கல்வி பற்றிய தற்கால மக்களின் மனத்தை அறிந்திராத அந்த காலத்து கள்ளங் கபடமறியாத அன்னம்மாள், மருமகளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறியிருந்தார்.

 

சசிகலாவிற்கும், தனது மாமியாரின் பேச்சில் மிகுந்த சந்தோசம் வந்திருந்தது. 

 

மோனிகா இருந்தவரை வீட்டில் இருந்த கலகலப்பு, அவள் திருமணமாகிப் போனபிறகு முற்றிலும் போயிருந்தது.

 

மோனிகா பெரும்பாலும் கலகலப்பாக பேசி, சிரித்திராதபோதும், எதையாவது கற்றுத் தரும்படியோ, அல்லது தனது ஆர்வம் காரணமாக சமையல் கட்டில் சசிகலாவிற்கு வந்து உதவியவாறோ இருப்பாள்.

 

மோனிகா திருமணமாகிச் சென்றபிறகு, யாருமில்லாத வெறுமையான உணர்வு வீட்டிலுள்ள மூவருக்குமே தோன்றத் துவங்கியிருந்தது.

 

சங்கர் வாரமொருமுறை ஊருக்கு வந்தாலும், பெரும்பாலும் பண்ணையில் அவனது பொழுதுகள் போய்விடும்.

 

பேரன், பேத்தி என்று புதுவரவுகள் வரும்வரை வீட்டின் நிலை இதுதான் என்று புரிந்தாலும், ஏனோ மனது வெறுமையாக உணர்ந்தது.

 

எவ்வளவு நேரம் மூவருமாக பேசியவாறு இருக்க முடியும்.  வேலைகள் பெரிதளவு இல்லாதபோதும், தாஸ் பண்ணைக்குச் சென்று பொழுதைப் போக்கி மனதை இளைப்பாறச் செய்துவிடுகிறார்.

 

ஆனால் பெண்கள் இருவரும் வீட்டிற்குள் இருப்பதால், தனிமையாகவே உணர்ந்தனர்.

 

மருமகள் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனக்கோட்டையை கட்டியவாறு மகிழ்வோடு வலம் வந்தார் சசிகலா.

 

நல்ல நாள் பார்த்து, அதே சமயம் வெற்றி காரைக்குடி வரும்நாளை விசாரித்து தெரிந்து கொண்டு, நேரடியாகவே நவீனாவின் வீட்டிற்கு இருவருமாகச் சென்றிருந்தனர்.

//////////////

 

நவீனாவிடம், தன் தாய் வசம் தங்களது திருமணம் பற்றிப் பேசுமாறு கூறிய விடயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தான் சங்கர்.

 

நவீனாவிற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் படிப்பு இருந்ததால், அதை உத்தேசித்த நவீனா,

 

“அப்ப சீக்கிரமா வீடு பாருங்க…! மேரேஜ் முடிஞ்ச கையோட நாம அங்கே போயிரலாம்!, என ஆவலோடு அன்வான்ஸாக சங்கரிடம் ஆலோசனை கூறியிருந்தாள் பெண்.

 

பெண், விடுதியை விட்டு வர காண்பித்த ஆவலைக் கண்டவன், “உங்க ஹாஸ்டல அன்கம்ஃபர்ட்டபிளா  ஃபீல் பண்றியா வீனா”, என பெண்ணின் ஆர்வத்தைக் கவனித்து நாகரிமாகக் கேட்டிருந்தான்.

 

அநாகரிமாக கேட்க வேண்டும் என்ற நினைத்திருந்தால், “மச்சான் மேல அவ்வளவு ஆசையாடீ, என்று வீனாவிடம் சங்கர் வில்லங்கமாக வினவியிருப்பானோ என்னவோ!

 

காதலர்களின் பாசை நாகரீகம், அநாகரீகம் பற்றிய எல்லை அறியாதது.

 

“என்ன இப்டி கேக்குறீங்க!  ஹாஸ்டல் எப்டி, வீடு மாதிரியாக முடியும்?”, என்று கேட்டவளைப் பார்த்துச் சிரித்தவன்

 

“அப்டியில்ல…! இவ்வளவு நாளா அப்டி எதுவும் சொல்லலையேனுதான் கேட்டேன்!”, என்றான்.

 

அதன்பின், “நான், நீ வேற எதாவது சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்!, என்று தனது குறும்பான சிரிப்பை இதழ்களில் பரவவிட்டிருந்தான் சங்கர்.

 

பெண்ணோ, “என்ன சொல்லுவேன்னு எதிர்பார்த்தீங்கனு நானே சொல்லவா?, என்று சங்கரிடம் ஆவலோடு கேட்டவள்

 

சங்கர் பதில் கூறுமுன், “எதாவது வில்லங்கமா யோசிச்சு வச்சிருப்பீங்க…! நான் கரெக்டா கெஸ் பண்ணிச் சொன்னாலும் இல்லைனுதான சொல்லுவீங்க!, என்று சிரிப்போடு இறுதியில் கேள்வியாக நிறுத்திவிட்டு சங்கரைப் பார்க்க

 

இல்லையென்று மறுத்தவன், “சரி! வீடு எப்டி இருக்கனும்னு சொல்லு…! அதுமாதிரி வீட்டைப் பாப்போம், என்று தனது பேச்சின் திசையை சிரித்தவாறே மாற்றியிருந்தான்.

 

‘சொல்லுங்க என்று பெண் எவ்வளவோ கேட்டும், சங்கர் தான் எதிர்பார்த்ததை என்னவென்று கூறாமல், தக்க சமயம் வரும்போது கூறுவதாகக் கூறியிருந்தான்.

 

பெண்ணும் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே, ஆனா கண்டிப்பா சொல்லணும் என்று சத்தியம் வாங்காமல் விட்டிருந்தாள்.

 

சங்கரும் உடனடியாக, தனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களிடம் வீடு பார்த்துத் தரும்படி கூறியிருந்தான்.

 

இருவருக்கும் அவரவர் கல்லூரியிலிருந்து சம இடைவெளியில் இருக்கும்படியான இடத்தை தெரிவு செய்து, அப்பகுதியில் மட்டும் வீடு இருந்தால் பாருங்கள் என்று நவீனா கூறியிருந்ததைப்போல, வீட்டைப் பார்க்கத் துவங்கியிருந்தான் சங்கர்.

 

முதலில் வீட்டை நேரில் சென்று பார்த்து, தனக்கு பிடித்திருந்தால் உடனே நவீனாவிற்கு அழைத்து தெரிவித்தான்.  அதன்பின் பெண் வந்து பார்த்து அவளது விருப்பத்தைக் கொண்டே முடிவு செய்ய எண்ணியிருந்தான் சங்கர்.

 

சங்கருக்கு சரியென்று தோன்றிய ஐந்து வீடுகளையும், நவீனாவை அழைத்துச் சென்று காண்பித்திருந்தான். பெண்ணுக்கு எதையும் பிடிக்கவில்லை என்றிருந்தாள்.

இன்று ஆறாவதாக ஒரு வீட்டைப் பார்த்து, பெண்ணை… பார்த்திருந்த வீட்டு நிலவரம் அறிய உடன் அழைத்து வந்திருந்தான்.

 

பெண் தனது விருப்பத்தைக் கூறினால் அட்வான்ஸ் தந்துவிடும் எண்ணத்தோடு, அதற்குத் தயாராகவே வந்திருந்தான் சங்கர்.

 

ஆனாலும் பெண்ணிற்கு அந்த வீடு நிறைவாக இல்லாததை அவளது முகமே காட்டிக் கொடுத்திருந்தது.

 

“இதே நிலையில போனா… உனக்கு கோர்ஸ் முடிஞ்சிரும்போல!, என்று கிண்டல் செய்திருந்தான் சங்கர்.

 

“அதுக்காக, பிடிச்சிருந்தாதான இங்க வந்து தங்க முடியும்.  ரெண்டு பேருதான் தங்கப் போறோன்னாலும், என் மனசுக்கு சரின்னு பட்டாதான் ஓகே சொல்லுவேன்!, என்று பிடிவாதமாக நின்றிருந்தாள் நவீனா.

 

“இதைவிட உனக்கு நல்ல வீடு வேணுனா, உன் சர்க்கிள்ல சொல்லி வச்சு பாரு வீனா! என்னால முடியலை!”, என்று சங்கர் பின்வாங்கியிருந்தான்.

 

“ரொம்ப பண்ணாதீங்க!  எனக்கு ஹாஸ்பிடல்… அதைவிட்டா காலேஜ்னு நேரம் போறதே தெரியலை!  எனக்கு முடிஞ்சா எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்!, என்று சங்கரிடமே பொறுப்பைத் தள்ளியிருந்தாள் பெண்.

 

“உன் டேஸ்டுக்கு வாடகை வீடு கிடைக்காது.  வேணா இங்க எதாவது இடம் வந்தா வாங்கி, வீடுதான் கட்டனும்!, என்று விளையாட்டாகக் கூறினான் சங்கர்.

 

“ஓஹ்!  இதுகூட நல்ல ஐடியாவாதான் இருக்கு…! பாருங்களேன்… இடம் அமைஞ்சா வாங்கலாம்!, என்ற ஆர்வமாகக் கூறியவளை

 

“ஏய்…! என்னடி உனக்கு எதுல விளையாட்டுன்னு ஒரு அளவு இல்லையா…! ஊருல அவ்வளவு பெரிய வீடு, பண்ணைனு போட்டுட்டு வந்து… கல்யாணம்வரை சகதர்மினியாகப் போறவளைப் பாத்துட்டு சந்தோசமா கொஞ்சகாலம் இருப்போம்னு வேலைய காரணம்காட்டி மதுரை வந்தா… இங்கேயே டேரா போடவா ஐடியா பண்ற! அதுவும் இடம் வாங்கி வீடு கட்டற பிளான் வேற!, என்று சிரித்தபடியே எகிறியிருந்தான்.

 

“பொய் சொல்லாதீங்க ஃபார்மரூ… நீங்க இங்க வந்தபின்ன நாந்தான் உங்களைத் தேடி மதுரைக்கு வந்தேன்… ஒன் இயர் புரொஜெக்ட் எப்டி ஹார்ட் வர்க் பண்ணி வந்தேன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும், என்றவளை

 

பெண்ணின் வார்த்தைகளில் வந்த கோபத்தை உணர்ந்து, “சரி விடு… நீ மெடிசின் படிக்க வந்தேன்னு நான் நினைச்சேன்.  எனக்காக வந்தேங்கிறதை இவ்வளவு லேட்டா வந்து சொல்ற?, என்று சிரித்தவன்

 

“சொல்லிட்டேன்… இப்ப ஃபார்மரூ என்ன பண்றதா இருக்கீங்க?”, என்று விடாமல் கேட்டிருக்க

 

“என்னத்த பெருசா பண்ணிருப்பேன், என்று யோசித்தவன், “இனியொன்னும் பண்ண முடியாது.  வரதுக்கு முன்ன தெரிஞ்சிருந்தா… புயல் வருதுன்னு பயந்து சிவகங்கை டிஸ்ட்ரிக்க பாத்து ரிட்டன் போயிருந்திருப்பேன், என்று விளையாட்டாகச் சங்கர் கூற

 

“அவ்வளவு கஷ்டமா இருக்கா உங்களுக்கு… நான் இங்க வந்தது?, என்று பொய் அழுகை மாடுலேசனோடு கேட்டவளைக் கண்டு

 

“ஆமா ஒரு சைட்டக்கூட ஃப்ரீயா பாக்க முடியல…! இருக்காதா பின்னே…!, என்று சிரித்தவனை

 

“அப்போ அதுக்காகத்தான் ரெண்டு வருசம் முன்னயே இங்க வந்தீங்களா?, என்று சங்கரைக் கேக்க…

 

“கேம் ஓவர் வீனா…! இனி இப்டியே போனா சீரியசா போயிரும்…! நான் விளையாட்டுக்குப் பேசினாலும் உனக்கு தாங்காது!  அப்டியே யூ டர்ன் போட்டு பழைய இடத்துக்கு வந்திரு…! என்றவன்,

 

“நம்ம ரெண்டு பேருல யாரு யாரைத் தேடி வந்தா என்ன?, என்றவாறே பெண்ணின் கன்னங்களை தனது இரு கைகளால் தாங்கிப் பிடித்தவாறு கேட்டவன், பெண் மூக்கோடு தனது மூக்கை உரசிச் சிரித்தான்.

 

பெண் எந்த ரியாக்சனும் இல்லாது, சங்கரையே பார்த்திருக்க, ‘நீ வேறு நான் வேறு யார் சொன்னது… என் ஜீவன்…, என்ற பாடல் வரியை இதமாகப் பாடத் துவங்க…

 

“ட்ரேக் மாத்துற வேலய நல்லா பாக்குறீங்க, என்று முகத்தைத் தூக்கி வைத்தபடியே, சங்கரிடமிருந்து விலகி, வீட்டை கர்ம சிரத்தையாக ஒவ்வொரு இடமாகச் சென்று நோட்டம் விட்டவளை, பாடியதை பாதியிலேயே விட்டுவிட்டு பெண்ணை நோட்டம் விட்டவாறே பின்னோடு சென்றான் சங்கர்.

 

பெண் இன்னும் தான் பேசியதை மனதில் போட்டு உழட்டுவதை உணர்ந்தவன் தோளோடு அனைத்து, “கூல்… வீனா! நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்!, என்று பெண்ணிடம் சமரசமாகப் பேச முயல 

 

“தப்பா சொன்னீங்கனு சொன்னேனா… சும்மா பேச்சுக்கு நீங்க கேட்டதுக்கு நானும் எனக்கு காரைக்குடியவிட இங்க செட்டாகும்னு மனசுல தோணுனதைச் சொன்னேன்.   நீங்க இப்போபோல வீக்லி ஒன்ஸ் ஊருக்குப் போயிட்டு வருவீங்கனு நினைச்சேன்?, என்று தனது எண்ணத்தை மறையாது கூறியிருந்தாள் நவீனா.

 

“ஆயிரம் நம்பிக்கையான ஆள வச்சுப் பாத்தாலும், உடையவன் இருந்து பாக்கற மாதிரி விவசாயம் வராது வீனா.  உனக்கு உன் கேரியர் எப்டியோ அப்டிதான் எனக்கும்.  நீ படிக்கிறவரை என் கல்யாணப்பேச்சை யாரும் எடுக்க சந்தர்ப்பம் குடுக்கக்  கூடாதுன்னுதான் நான் காலேஜ்கு பிஜி பண்ண வந்தேன்.

 

அப்ப இங்க வேகண்ட் இருந்ததால பிஜி முடிச்சதோட வேலைக்கு சேந்தேன்.  இல்லைனா எனக்கு டீச்சிங்லலாம் இன்ட்ரெஸ்ட் இல்லை, என்று கூறியவனை நம்பிக்கையில்லாத பார்வை பார்த்தவளை 

 

“பிஜியும் முடிச்சு, பிஎச்டி எதுக்கு பண்றேன்னு யோசிக்கிறியா… அது நம்ம பண்ணைய இன்னும் நல்லா டெவலப் பண்ண எனக்கு சில விசயங்கள் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுதான், என்று கூறி முடிந்திருந்தான்.

 

பெண் எதுவும் பேசாமல் சங்கரையே பார்த்திருக்க… “எனக்கு பண்ணை ரொம்ப முக்கியம் வீனா! அதே அளவு நீயும் முக்கியம்!, என்று தனது எண்ணக் கருத்தை மறையாது பகிர்ந்திருந்தான் சங்கர்.

 

அதற்குமேல் தர்க்கம் எதுவும் செய்யாமல், பேசாமல் அமைதியாக யோசனையில் ஆழ்ந்து இருந்தவளைப் பார்த்தவன், “வீனா…, என்று அழைக்க

 

அதே யோசனையோடு சங்கரை நோக்கியவளை நோக்கி அருகில் சென்றவன், “உனக்கு நான் பண்ணை, விவசாயம்னு இருக்கிறது கேவலமா தோணுதா?

 

இல்லையென மறுத்துத் தலையசைத்தவள், “இந்தக் கேள்விய இங்க வந்த நாலு வருசத்துல நாலாயிரம் தடவை நீங்களும் கேட்டாச்சு, நானும் இல்லைனு பதில் சொல்லியாச்சு, என்று எந்திரத்தனத்தில் பதில் கூறியவளை ஆராய்ச்சிக் கண்ணோடு நோக்கியவன்,

 

“வேறென்ன யோசிக்கற?

 

“ம்… நானும் பிஜி எதாவது பண்ண பின்ன எங்க செட்டில் ஆகலாம்னு யோசிப்போம். அதுக்குள்ள எதுக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கனும்னு யோசிச்சேன், என்றவள் 

 

“இப்ப எதுக்கு அந்தப் பிரச்சனை! வாங்க வந்த வேலையைப் பாப்போம், என்று சங்கரைப் பார்த்து இலகுவாகச் சிரித்தவள்

 

“என்ன சொன்னாங்க அத்தை?”, என்று அவளாகவே பேச்சை மாற்றியிருந்தாள்.

 

“எங்கம்மா என்னத்தை பெருசா சொல்லப் போறாங்க… உங்கப்பா நம்ம விசயத்தைக் கேட்டா என்ன சொல்லுவாருன்னு உன்னால எதாவது கெஸ் பண்ண முடியுமா வீனா, என்று தன்னவளைப் பார்த்துக் கேட்டிருந்தான்.

 

“அவங்க என்ன சொன்னாலும், என் வாழ்க்கை உங்களோடன்னு நான் டிசைட் பண்ணி நாளாச்சு.  பட்… அவங்க சம்மதத்தோடதான் வாழ்க்கைய ஆரம்பிக்கணும்கிறதுல உறுதியா இருக்கேன், என்றவளை

 

“அப்ப வரக்கூடிய முடிவு ஃபிஃப்டி ஃபிஃப்டி தானா, என்றவன்

 

“என் சைட்ல எந்த பிராப்ளமும் இல்லை… இன்னிக்கே மேரேஜ்னாலும் ஓகேதான்.  உன் பக்கம் என்ன மாதிரி ரிப்ளை வரும்னு யோசிக்கவே தயக்கமா இருக்கு, என்று மனதில் உள்ளதை மறையாமல் கூறியிருந்தான் சங்கர்.

 

சங்கரின் சங்கடத்தைக் கண்டு சங்கடத்திற்குள்ளானவள் பேசியவாறு நின்றிருந்தவனின் மார்போடு வந்து சாய்ந்தவாறு, “எப்டி வந்தாலும் வீனா இந்த சங்கருக்குத்தான், என்று வலக்கை ஆட்காட்டி விரலால் சங்கரின் இதயத்தில் தொட்டு காண்பித்தவள்,

 

“சரி அத்தை என்ன சொன்னாங்கனு சொல்லுங்க, என்று பழைய இடத்திற்கே வந்திருந்தாள்.

 

பெண் எதைக் கேட்கிறாள் என்று புரிந்தவன், “உங்கப்பா வரும்போது வீட்ல போயி நேரில் பேசறதா சொன்னாங்க!  அம்மா, ஆத்தா ரெண்டுபேரு முகத்துலயும் ஒரே சந்தோசம். 

 

சங்கர் தன்னை இலகுவாக்க ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டான்.

 

‘இவ்வளவு நாளா பிடிகொடுக்காம இருந்தவன், அவனே வந்து பொண்ணு கேளுங்கனு சொல்றானேன்னு!, என்று சிரித்தபடியே கூறியவனின் சிரிப்பில் மயங்கி நின்றவளை தன்னோடு சேர்த்து இதமாக அணைத்தவன்

 

“என்ன பார்வை… உந்தன் பார்வை…, என்று பாட்டைத் துவங்க…

 

“உங்களுக்கு நல்ல வாய்ஸ், ஏன் நீங்க சிங்கரா ட்ரை பண்ணக் கூடாது?

 

“நாம ரெண்டு பேரும் இருக்கும்போது, அதுவா வாயில வரத நான் பாடறேன்! அதுக்காக ஓவர் கான்ஃபிடன்டோட போயி மைக் மோகன் கணக்கா மேடையில பாடப்போனா… அழுகுன முட்டை, தக்காளியோட வந்து அடிக்கவா!, என்று கூறி சங்கர் சிரிக்க

 

“அவ்ளோலாம் வாய்ஸ் மோசமில்லை!”, சங்கரின் வார்த்தைகளைக் கேட்டு, முகத்தைச் சுருக்கி நவீனா கூற

 

“அப்போ எவ்ளோ மோசமா இருக்கு!”, என்று இடக்காகக் கேட்டிருந்தான் சங்கர்.

 

“நல்லாயிருக்குனுதான் சொன்னேன்”, என்று தனது வார்த்தையில் வந்து மாறாது நின்றிருந்தாள் பெண்.

 

அத்தோடு, “இன்னொரு சாங்க் ‘எந்தப் பெண்ணிலும் இல்லாதனு ஒன்னு அடிக்கடி பாடுவீங்கள்ல..! அது அன்னிக்கு டிவில பாத்தேன். பட்… பாத்ததும் டென்சன் ஆகிட்டேன்!, பெண்ணின் குரலில் வந்த வருத்தத்தைக் கண்டு

 

“ஏன்…?, என்று தன்னருகே நின்றவளின் கண்களைப் பார்த்தவாறு, சிரித்தபடியே கேட்க

 

“நீங்க பாடும்போது நான் இப்டிதான் சீன்ஸ் இருக்கும்னு இமேஜின் பண்ணி வச்சிருந்தேன். ஹாஸ்டல்ல ஓடிப்போயி பாத்தா… அது நல்லாவே இல்லை! அந்தப் பாட்டு கேக்கற மூடே போச்சு!, என்று சோகமாகக் கூறியவளை

 

“ரொம்ப ரேர்ரா சில டைரக்டர்ஸ்தான் சாங்க்ஸூக்கு ஏத்தமாதிரி சீன்ஸ் கொண்டு வந்திருப்பாங்க…! மணிரத்னம், பாலசந்தர், பாலுமகேந்திரா இந்த மாதிரி…! மற்றபடி இப்பலாம் வர மூவிஸ் ரொம்ப நல்லா டைரக்ட் பண்ணிருக்காங்கனு சொல்ல முடியறதில்லை!, என்று சங்கர் கூற

 

“இனி… நீங்க பாடற சாங்க்ஸை நான் டிவில பாக்கமாட்டேன்!, என்று சிறுபிள்ளைபோல கூறினாள்.

 

“எதுக்கு சீனை இமேஜின் பண்ணிட்டே பாட்டு கேக்கற!, என்று சங்கர் வினவியிருந்தான்.

 

“அப்டியே பழகிருச்சு, என்று கூறியவாறு தனது கையில் மணி பார்த்தவள், “சரி எனக்கு நேரமாகுது…! கிளம்புங்க… என்னை ஜிஹச்ல எறக்கிவிட்ருங்க…!, என்று சங்கரிடமிருந்து விலகியவளை,

 

“வீட்டைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே… அது எப்ப சொல்லுவ?, என்று ஊடுருவிய பார்வையோடு கேட்டவனை

 

“ம்… வேற எதாவது இதைவிட பெட்டரா கிடைச்சா பாக்கலாம்.  அதுவரை இதை ரிசர்வ்ல வச்சிப்போம், என்று சிரித்தாள்.

 

“அது கஷ்டம்.  வேற யாராவது வந்து பாத்து அட்வான்ஸ் தந்தா அவங்களுக்கு குடுத்துருவாங்க, என்றவன்

 

“சரி கிளம்பு…, என்றுவிட்டு, நினைவு வந்தவனாக விலகியவளை நிறுத்தி

 

“பெரிய மனசு பண்ணி என்னையும் கவனிச்சா நல்லாயிருக்கும்.  வருசக் கணக்கா கேக்கறேன்.  ஒன்னு தர இவ்வளவு யோசிக்கற…! ஆனா நான் கொடுக்கறதையெல்லாம் கணக்கே இல்லாம வாங்கிக்கற…! எந்த ஊரு நியாயம் இது?, என்று அசையாமல் நின்றவனைக் கண்டு அருகில் வந்தவள்

 

“நான் தரலைன்னாலும் நீங்க தரீங்கள்ல! அப்புறமென்ன?, என்று அடிக்கும் பாவனையில் கையை உயர்த்தியவளைக் கண்டு சிரித்தபடியே பின்வாங்கியவன்

 

“கொடுக்கறது வேற ஃபீல்! வாங்கறது வேற ஃபீல்… வீனா, என்றவனிடம்

 

“எல்லாம் ஒன்னுதான்!, என்று பெண் முரண்ட,

 

“அது எப்படி ஒன்னாகும்?, என்று விவாதத்தை ஆரம்பித்த சங்கரைக் கண்டு,

 

“ஃபார்மரூ… எனக்கு உங்க பள்ளியறை பஞ்சாயத்துல வந்து நிக்க நேரமில்ல…! இப்ப கிளம்பினாதான் அங்க போக சரியா இருக்கும்.  நம்ம பள்ளியறை பஞ்சாயத்தை இன்னொரு நாளுக்கு வச்சிக்கலாம்!, என்று பாவம்போல கூறிவிட்டுக் கிளம்பினாள் பெண்.

 

‘பள்ளியறைக்கு என்னிக்கு வருவன்னு கன்ஃபார்மா சொன்னா நம்பி விடலாம், என்று முனகியவனை

 

“என்ன முனகறீங்க… வரவர இது ஒரு பழக்கமா போச்சு… சொல்லத் தைரியம் இல்லாததை என் காதுல விழற மாதிரி அரைகுறையா எதுக்கு முனகனும், என்று நியாயம் கேட்டவளை

 

“பள்ளியறைக்கு என்னைக்கு வரன்னு சொல்லு, என்று பளிச்சென்று வினவியிருந்தான் சங்கர். 

 

அத்தோடு பெண்ணின் அருகே வந்தவனைக் கண்டவளோ சிரித்தபடியே தள்ளி நிறுத்தியவள், “நீங்க ஃபிரண்ட்ஸ்லாம் என்னைய பாத்தவுடனே கண்டுபிடிக்கற மாதிரி தரீங்க! சோ…, என்று நாணப்பட்டவாறு தலையைக் கவிழ்த்தவளை

 

“சோ… அதுக்குத்தான் உன்னையத் தர சொல்றேன்”, என்று பெண்ணிடமே தனது கோர்ட்டிற்கு வந்த பந்தைத் திருப்பி அனுப்ப முயன்றான்.

 

“திரும்பவும் முதல்ல இருந்தா…, முடியல…!, என்றவள்,

 

“… சேத்து வச்சி மொத்தமா தாரேன்.  கணக்குல வச்சிக்குங்க…, என்றவாறு நகர்ந்தவளை

 

அதற்குமேல் வற்புறுத்தாமல் “இது வேற, அது வேற… ரெண்டையும் போட்டுக் குழப்பக்கூடாது, என்றவன் பெண்ணை இறுக அணைத்து விடுவித்தான்.

 

பெண்ணைத் தனக்குள் கொண்டு வந்துவிடும் வேகம்!  பெண்ணுக்கும் புரிந்தது!

 

பெண் தான் புரிந்ததைக் காட்டாமல், சங்கரிடம் மறைத்துக் கிளம்ப, விறுவிறுவென பெண்ணோடு அங்கிருந்து கிளம்பியிருந்தான் சங்கர்.

/////////////

 

வந்தவர்களை இன்முகமாகவே வரவேற்று உபசரித்திருந்தனர் வெற்றியும், புஷ்பாவும்.  நந்தா பள்ளிக்கு சென்றிருந்தான்.

 

யார் முதலில் பேச்சைத் துவங்குவது என்று கணவன், மனைவி இருவரும் ஒத்திகை பார்த்து முடிவுக்கு வருமுன், வெற்றியே ஆரம்பித்திருந்தார்.

 

“என்னம்மா புஷ்பா?  என்ன விசயம்? வந்ததுல இருந்து ஏதோ எங்கிட்ட சொல்ல வரமாதிரி தெரியுது?, என்று தங்கையின் தயக்கத்தையும், தாஸின் ஊக்குவிக்கும் விதமான செய்கையையும் பார்த்துவிட்டு கேட்டிருந்தார்.

 

இதற்கிடையே அடுக்களைக்கும், ஹாலுக்கும் இடையில் திரிந்த மனைவியை நோக்கி, “வராத அண்ணன் வந்திருக்காரு…, என்று புஷ்பாவிடம் கூறியவர்

 

தாஸின் புறம் திரும்பி, “இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகனும்…, என்று வற்புறுத்தலான வார்த்தைகளை சிரிப்போடு கூறிவிட்டு,

 

மீண்டும் மனைவி நிற்கும் புறத்தே திரும்பி, “… அதனால சீக்கிரமா சமையலை முடி, என்று மனைவியை துரிதப்படுத்தியிருந்தார் வெற்றி.

 

கணவனின் பேச்சைக் கேட்டு, சமையலை ஒரு பக்கம் துவங்கியிருந்தவர், ஹாலில் நடக்கும் சம்பாசனைகளைக் கேட்டவாறே பணிகளைத் தொடர்ந்திருந்தார் புஷ்பா.

 

“அது… நம்ம சங்கருக்கும் வயசாயிட்டே போகுது…, என்று பேச்சை இழுத்த தங்கை சசியிடம்

 

“ஆமா… நானும் உங்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். ஏன் இன்னும் மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணாம வச்சிட்டுருக்க?, என்ற கேள்வியை முன்வைத்திருந்தார் வெற்றி.

 

“அவன் கல்யாண விசயமாத்தான், நம்ம நவீனாவை அவனுக்குக் கேட்டு வந்தோம்னே, என்று ஆரம்பத்தில் தயங்கியவர் அதன்பின் சங்கடமில்லாது கேட்க வந்ததைக் கேட்டிருந்தார்.

 

வெற்றி சிறிதுநேரம் யோசனையில் இருந்தார்.  அவரின் திருப்தியில்லாத முகமே சொன்னது இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பதை…

 

தம்பதியர் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி பார்த்தபடியே, வெற்றியின் பதிலுக்காக காத்திருந்தனர்.  புஷ்பாவோ அமைதியாக அங்கு நடப்பதைப் பார்த்தபடியே சமையல்கட்டிற்கும், ஹாலுக்கும் இடையே வேலையை கவனித்தவாறு இருந்தார்.

 

“சசி… இதுவரை நவீனா கல்யாணத்தைப் பத்தி நாங்க யோசிக்காமதான் இருந்தோம்!  ஆனா புள்ளை டாக்டருக்கு படிக்கிறதால டாக்டர் மாப்பிள்ளைகளா கேட்டு வந்துது!  நாங்களும் டாக்டர் மாப்பிள்ளைக்கே குடுக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். 

 

படிப்பு முடிஞ்சு பாக்கலாம்னு நினைச்சு, கேட்டு வந்தவங்ககிட்ட எல்லாம் ரெண்டு வருசம் போகட்டும்னு சொல்லிட்டே இருந்தோம்.

 

கேட்டு வர்றவங்க… இப்பவே பேசி வச்சிக்கலாம்… படிப்பு முடிஞ்சவொன்ன கல்யாணத்தை வச்சிக்கலாம்னு ஒரே நமுப்பு!, என்று சிரித்தபடியே கூறியவர், அடுத்து சசிகலா, தாஸ் இருவரும் எதிர்பாராத வார்த்தைகளைக் கூறி திணறடித்திருந்தார்.

 

“… அதான் போனமுறை வந்தப்போ… ஒரு சம்பந்தம் கேட்டு வந்தது. வந்த மாப்பிள்ளைக்கு… படிப்பு மத்த எல்லாம் ஒத்து வந்ததால… நவீனாவை அங்க குடுக்கறதா வாக்கு குடுத்துட்டோம், என்று புஷ்பாவைப் பார்த்தபடியே இழுவையாக பேச்சை நிறுத்தியிருந்தார் வெற்றி.

 

புஷ்பாவும் எதையும் பேச முன்வராமல், அமைதியாக இருந்தது சசிகலாவிற்கும், தாஸிற்குமே வருத்தமாக இருந்தது.

 

புஷ்பாவின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண இயலாது, உணர்வுகளைத் துடைத்த முகமாக இருந்தார்.

 

தாமதமாக வந்ததை உணர்ந்து வருத்தமடைந்திருந்தனர் சங்கரின் பெற்றோர் இருவரும்.  ஆனாலும் மனதைத் தளர விடாமல்,

 

“புள்ளைக ரெண்டும் ஆசைப்படறதால மறுக்க வேணாமேனுதான் கேட்டு வந்தோம்னே, என்று நவீனாவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் பேசியிருந்தார் சசி.

 

வெற்றிக்கும், புஷ்பாவிற்கும் இது புதிய செய்தி.

 

ஆனாலும் புஷ்பா, என்றோ தனது மனம் கூறியதை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்தி, சில நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, சசி கூறுவது உண்மைதான் போலும் என்ற முடிவுக்கு சற்று நேர யோசனையின் முடிவில் வந்திருந்தார். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் மௌனமாகவே கணவன் பேசுவதைக் கேட்டிருந்தார்.

 

“வயசுக் கோளாறுல புள்ளைக அப்டி நினைக்கிறது எல்லாம் சகஜம்தான் சசி.  எது சரியா வரும்னு, எடுத்துச் சொல்லி நாமதான் புரிய வைக்கணும், என்று தங்கைக்கு அறிவுரை கூறியவர்

 

“பெரியவங்க நாம பாத்து… செய்யறதுதான சரியா வரும்.  டாக்டருக்கு படிச்ச புள்ளையை… பண்ணையாருக்கு கல்யாணம் பண்ணா… போகப்போக புரிஞ்சு ஒத்துமையா விட்டுக் கொடுத்து நடந்துக்குவாங்களா? அந்தந்த ஃபீல்டுல இருக்கிறவங்களை கல்யாணம் பண்ணிக்கறப்போதான் அதுல இருக்கிற கஷ்ட, நஷ்டம், நெளிவு, சுழிவு புரிஞ்சு நடந்துக்குவாங்க, என்று தங்கையிடம் நியாயம் பேசியவர்

 

“புரியாத வயசு அதுகளுக்கு… ஒரு தடவைக்கு நாலு தடவை அவங்ககிட்ட புரியறமாதிரி எடுத்துச் சொல்லி, சரியான முடிவை அவங்களையும் எடுக்கச் சொல்லி, நாமளும் குறையில்லாம பக்கபலமா நின்னு கல்யாணம் செய்யறதுதான எல்லாருக்கும் நல்லது!”, என்று பேச்சை நிறுத்தியிருந்தார் வெற்றி.

 

அத்தோடு தன்னையே கவனித்துக் கொண்டிருந்த தாஸை நோக்கி, “என்ன மாப்பிள்ளை நான் சொல்றது?, என்று கருத்து கேட்டார்.

 

“நீங்க சொல்றது எல்லாம் வாஸ்தவந்தான் மாப்பிள்ளை!, என்று தனது பேச்சை ஒரு கனம் நிறுத்திய தாஸ்

 

“இப்பதான்… ஃபீல்டு பாத்து கல்யாணம் பண்ற பழக்கமெல்லாம் வந்திருக்குனு இல்லை…!

 

ஒன்னா படிக்கிற இடத்தில புடிச்சுப்போயி கல்யாணம் செய்துக்கறது காலங்காலமா நடக்கிறதுதான்…!

 

இப்ப பெத்தவங்களே… புள்ளைங்க பிரியத்துக்கு ஏத்தமாதிரி… அப்டி பண்ணி வச்சிரலாம்னு யோசிக்கறது அதிகமாயிருச்சு, என்று நிதானித்தவர்

 

“ஒரே ஃபீல்டா இல்லை வேற ஃபீல்டாங்கறதைவிட, வாழப் போறவங்களுக்கு மனசொப்பி சேர்ந்து வாழலாம்னு தோணனும்.  அதனால வாழப்போறவங்ககிட்டயும் ஒரு வார்த்தை அபிப்ராயம் கேட்டுச் செய்தா நல்லாயிருக்கும்னு என் மனசுல படுது, என்று நிறுத்தியவர் 

 

“எங்க பையன் அபிப்ராயப்படி வந்து பெரியவங்க நாங்க முறையாப் பேசனும்னு வந்து கேட்டுட்டோம்.  பொண்ணோட அபிப்ராயத்தையும் கேட்டுகிட்டு… ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க!, என்று தாஸ் முடித்திருந்தார்.

 

தாஸின் நீண்ட பேச்சைக் கேட்டு சற்றுநேரம் அமைதியாக இருந்த வெற்றி,

 

“அது சின்னப் புள்ளை மச்சான்.  அதுக்கு நல்லது கெட்டது என்ன தெரியும்.  நாங்க சொல்றதை அது தட்டாது.  அதனால நீங்க வேற இடம் பாத்துக்கங்க… தப்பா நினைக்காதீங்க…, என்று ஒருவழியாக தனது முடிவைக் கூறியிருந்தார் வெற்றி.

 

“நல்லது கெட்டது தெரியற வயசுலாம் ரெண்டு பேருக்குமே வந்திருச்சு மாப்பிள்ளை.  நம்மை மதிச்சு வந்து கேக்கற புள்ளைகளுக்கு நாம நியாயம் செய்யனும்னுல…, என்று தாஸ் கூற

 

“வாழ்ந்து… வாழ்க்கைய புரிஞ்சுகிட்ட நம்மைவிட அவங்களுக்கு அனுபவம் பத்தாது மச்சான்.  வெளிப்பார்வைக்கு சரினு தோணுறதை வச்சி அவங்க முடிவெடுப்பாங்க… நாம நாலையும் யோசிச்சு முடிவெடுப்போம்…!  நீங்க இதை தப்பா எடுத்துக்காதிங்க… பெத்தவங்களா… எங்களுக்கும் எங்க பொண்ணு இப்டி வாழணும்னு எதிர்பார்ப்பு, ஆசை இருக்கும்ல, என்று வெற்றி தனது பிடியில் இருந்து பேச

 

“இதுல தப்பா நினைக்க ஒன்னுமில்லை மச்சான்.  புள்ளைக சந்தோசம் முக்கியம்னு நான் நினைக்கிறேன்.  நீங்க உங்க சவுகரியத்தைப் பாக்கறமாதிரி தெரியுது.  அதுக்குமேல உங்க விருப்பம் மச்சான், என்றபடியே

 

“ஒத்துப்போன மனசோட இருக்கிற புள்ளைகளை சங்கடப்படுத்திறாதீங்க… வேற என்ன இதுல நாங்க சொல்ல இருக்கு, என்றபடியே மனைவியை நோக்க

 

இனி வெற்றியிடம் பேசுவதில் பயனில்லை என்கிற முடிவோடு, தாஸ் கிளம்ப எத்தனிக்க, அதற்குமேல் அண்ணனிடம் தர்க்கம் செய்யாமல் புஷ்பாவிடமும், வெற்றியிடமும் கூறிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார் சசிகலா.

 

அண்ணனின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் வருத்தம் வந்த மனநிலையோடு, ‘மகன் இன்று பேசும்போது கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல், வந்தபோது இருந்த மனநிலை முற்றிலும் மாறிய நிலையில் கிளம்பியிருந்தார் சசி.

 

வெற்றி, ‘இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க என்று எவ்வளவு கூறியும், இருவரும் வேறு வேலை இருப்பதால் அங்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பவேண்டும் என்று கிளம்பியிருந்தனர்.

///////////

தன் மகனின் வாழ்விற்கு தடையாக எது வந்துள்ளது என்பதை அறியாத தாஸ், மனவருத்தத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார்.

 

சசிகலாவிற்கு மனமே சரியில்லாமல், வந்ததும் அறைக்குள் முடங்கியிருந்தார்.

 

இத்தனை ஆண்டுகளாக எதிலும் பற்றில்லாது வளர்ந்த மகன், முதன் முதலாக வளர்த்த ஆசையை நிறைவேற்ற வழிதெரியாத தாயாக கண்ணீர் உகுத்திருந்தார் சசிகலா.

…………

வெற்றி, புஷ்பா இருவரும் நீண்ட நேரம் விவாதித்தும், வெற்றி தனது மகளை சங்கருக்குக் கொடுக்க ஒத்துக்கொள்ளவில்லை.

 

புஷ்பாவிற்கு, பெண் சங்கரை விரும்பும் நிலையில் சங்கருக்கே கொடுக்கலாம் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது.

 

சங்கரைப் போல ஒரு மருமகன் அமைந்தால், பெண் நன்றாக இருப்பாள் என்கிற நம்பிக்கையில் புஷ்பா கணவனிடம் விடாது மகளுக்காக வழக்காடினார்.

 

“யாருக்கு வேணாலும் எம்பொண்ணைக் கட்டிக் கொடுப்பேன்.  ஆனா அந்த வீட்ல எம்பொண்ணைக் கொடுக்க மாட்டேன், என்று பிடிவாதமாக மறுத்தவரை

 

“விவசாயம் பாக்கிறது ஒரு குத்தமாங்க… படிச்சிட்டுத்தான விவசாயம், பண்ணைனு இருக்கு.  வருசத்துக்கு வீட்டுக்கு தேவையானதுபோக லட்ச லட்சா வருமானம் இந்த அஞ்சாறு வருசமா பாக்கறதை நான் என் கண்கூடா பாத்துட்டுதான் இருக்கேன், என்று தானாக ஒரு காரணத்தை யூகித்து அதை நியாயப்படுத்த புஷ்பா குறிப்புகளோடு பேச

 

“விவசாயம் பாக்கறதை தரக்குறைவா நினைக்கற ஆளில்ல நான், என்றவர் ‘என்ன சொல்லி உனக்குப் புரிய வைக்க என்கிற ரீதியில் மனைவியைப் பார்க்க

 

“ராஜு பெரியப்பா வீட்ல ரெண்டு பேரு… அவங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ரெண்டு பயலுக… இங்க சங்கரு ஒத்த ஆளுதான் வாரிசு… பாக்கறதுக்கும் வாட்டசாட்டமா லட்சணமா இருக்கும்.  இங்க தாஸ் அண்ணன் வீட்ல இல்லாதது அங்க அப்டி என்னதான் இருக்கு?  சாந்தனு டாக்டரு அப்டிங்கறதைத் தவிர அங்க ஒன்னும் பெரியளவு சொத்துபத்துனு ஒன்னுமில்லை.

 

பையனும் சங்கரூ அளவுக்கு இல்லை… படிச்சா மட்டும் போதாதுங்க… சாமார்த்தியம், சாதூர்யம் இருக்கணுங்க… அது சாந்தனுகிட்ட கிடையாது.  குடும்பத்தில எல்லாத்தையும் அனுசரிச்சுப் போற பக்குவம் எல்லாம் சங்கரூகிட்டதான் இருக்கு, என்று கணவனிடம் விடாது சங்கருக்காகப் பேச

 

“வேணானா விடேன், என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு, வெளியே கிளம்பியிருந்தார்.

 

“அந்தப் பையன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன்தான்.  ரொம்ப பொறுப்பும்கூட…”, புஷ்பா தனக்குத் தெரிந்த அளவில் சங்கரைப் பற்றி எடுத்துக்கூற முயல

 

“இதோட இந்தப் பேச்சை விட்ரு… என்ன பேசுனாலும் எனக்கு மனசுக்கு பிடிக்காத ஒரு விசயத்தை நான் செய்ய முடியாது, என்று ஸ்திரமான குரலில் பிடிவாதமாகக் கூறியிருந்தார் வெற்றி.

 

“ஏன் பிடிக்கலைன்னு காரணத்தைச் சொல்லுங்க… ஏத்துக்கற மாதிரியான காரணமா இருந்தா நான் எதுக்கு உங்ககிட்ட இவ்ளோ பேசப்போறேன், என்று விடாப்பிடியாக புஷ்பாவும் கேட்டிருந்தார்.

 

ஒருவாராக தன்னை நிலைப்படுத்தி வெற்றி கூற ஆரம்பிக்க, அமைதியாகக் கேட்டிருந்த புஷ்பா, அதை ஏற்றுக் கொண்டாரா?

 

அடுத்த அத்தியாயத்தில்….

————