ENV-4B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 4(2):

அரங்கமே “AJ”…”AJ” என்று கத்திக்கொண்டிருந்தது. சண்டையிட்டுக்கொண்டிருந்த அஜயை பார்த்த கவிதா அதிர்ந்தாள். அவள் வகுப்புத்தோழி அவளை அழைத்துக்கொண்டு முன்னேறிச் சென்றுச் முன் வரிசையில் நின்றார்கள்.

அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்துக்கொண்டு ‘அவன்கிட்டயே போய்… உனக்கு வாய் தான்டி கவி’ தன்னையே திட்டிகொண்டவள், ‘அவன் ஏன் எதுவுமே என்ன சொல்லாம விட்டுட்டான்?’ என்று யோசிக்கும்போது

அவன் இவளிடம் ‘ஃபிரன்ட்’டா கேர்ள் ஃபிரன்ட்’டா’ எனக் கேட்டது நினைவிற்கு வர சின்னதாகப் புன்னகை எட்டிப்பார்த்தது.

‘மொதல்ல ஸாரி கேளு கவி… என்ன நினைப்பான்’ என்று அவளுக்குள் பேசி, ஒரு முடிவுக்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு நிமிர்ந்துப் பார்க்க

அந்த நொடி அரங்கமே அமைதியாய் இருந்தது. அஜய்’க்கு அடி பட்டதால் பிரேக் விடப்பட்டிருந்தது.

அவனுக்கு அடிபட்டிருக்க, அனைவரும் சோகத்தில் மௌனமாய் இருக்க அந்த நேரம் அவளும் யோசனையில் இருந்து நிமிர்ந்துப் பார்க்க, அவன் வாயோரத்தில் இருந்து ரத்தம் அதிகமாய் வெளியேறியதைப் பார்த்து…

பதறிக்கொண்டு “ஐயோ” என நன்றாகவே கத்திவிட்டாள். அவளைப் பார்த்து முறைத்தான் அஜய். அவன் மட்டுமல்ல அங்கிருந்த சிலர் சத்தம் கேட்டு அவளைப் பார்த்தனர்.

அதைவிட அவனுடைய நண்பர்கள் அவளை ஒருவிதமாகப் பார்க்க, எச்சிலை விழுங்கிக்கொண்டு, திரும்பி அஜயிடம் கண்களால் ‘ஸாரி’ என்றாள் கெஞ்சலாக…

உடனே அவன் பார்வையை, பயிற்சியாளரிடம் திருப்பிக்கொண்டான்.

சில நொடிகளில் அவனுக்கு அவர் முதல் உதவி அழித்தப்பின், அவன் ஏதோ அவரிடம் சொன்னான். உடனே அவர் அவனையும் கவிதாவையும் பார்த்தபின், கவிதாவிடம் வந்தார்.

அவளிடம் ஏதோ அவர் சொல்ல அதிர்ச்சியுடன் அஜயை பார்த்தாள் கவிதா.

அவன் கண்களால் ‘இந்த இடத்தை விட்டு செல்’ என்பதுபோல் சொல்ல, அவள் அதிர்ந்தாள். கண்கள் கலங்கப்பார்த்தது. அவனைப் பார்த்து முறைத்துவிட்டு வெளியேறினாள்.

மனம் பொறுக்கவில்லை. அவன் செய்தது அவமானமாக இருந்தது. ‘எதுக்காக என்ன வெளிய போ சொன்னான். அவ்வளோ திமிர். பெரிய இவன்…’ மனதில் அர்ச்சனை செய்துகொண்டு ஸ்டேடியம் எதிரில் இருந்த நூலகத்திற்கு வந்தாள்.

வந்த சிறிது நேரத்தில், காதைக்கிழிக்கும் சத்தம் ‘AJ AJ’ என்று… அதைத் தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் கரகோஷம்… விசில் சத்தங்கள்… காதை இறுக்கமாக மூடிக்கொண்டாள். எனோ அந்தச் சத்தத்தை அவளின் அவமானத்துடன் இணைத்துப்பார்த்தாள்.

வகுப்பறைக்குச் செல்லப் பிடிக்காமல் அங்கேயே மாலை வரை இருந்துவிட்டாள்.

அடுத்த நாள் காலைப் பொழுது… முந்தைய தினம் நடந்தது அவளால் மறக்க முடியவில்லை.

ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்குச் செல்ல விருப்பமுமில்லை. சென்றால் அவனைப் பார்க்க நேரிடுமோ… பார்த்தால் அவன் முன் எப்படி நிற்பது… அசிங்கமாக இருக்குமே… என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாள்.

மதிய நேரம் அவள் வகுப்புத் தோழியிடம் இருந்து அழைப்பு. போன் எடுத்தாள். ‘கவி… இன்னைக்கு ஃப்ரஸ்ட் டே ப்ராக்டிகல்ஸ் (first day practicals). உடம்புக்கு ஒகே’னா வந்துடு…’ என சொல்லிவிட்டு போனை வைத்தாள் தோழி.

என்ன செய்வதென்று யோசிக்க… ‘இவனுக்காக நான் ஏன் போகாம இருக்கனும்?’ என முடிவெடுத்து கல்லூரிக்கு சென்றாள்.

வகுப்பறைக்குள் நுழையும்போது அவள் வருவதை முன்னமே பார்த்த அஜய், கதவின் குறுக்கே நின்றான்.

அவனைப் பார்த்தவுடன், கொஞ்சம் அதிர்ந்தாலும், குறுக்கே நின்றவனைச் சுட்டெரிக்கும் பார்வையில் பார்த்தாள் கவிதா.

“பாஹ்… அப்படிப் பாக்காத. ராட்சஷி மாதிரி இருக்க” போலியாகப் பயந்தவன் போல் அஜய் கிண்டலடிக்க, அதைக் கண்டுகொள்ளாமல் அவனைக் கடந்து செல்ல முற்பட்டாள்.

மறுபடியும் அவள் முன்னே நின்று அவளைத் தடுத்தவன், “என்ன பாக்கக்கூடாதுன்னா காலேஜூக்கு வரல…?” எனக் கேட்க, அவளிடமிருந்து முறைப்பே பதிலாக வந்தது.

“சரி சரி கோவப்படாத. நான் சொல்றத…” என்று அவன் சொல்ல வரும்போது… அவனைக் கடந்து மறுபடியும் முன்னேறி நடந்தாள்.

அதில் கடுப்பானவன் “ஏய்… பேசிட்டு இருக்கேன்ல. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க” சென்றவளின் கையைப் பற்றித் தடுத்தான்.

அவன் கையைப் பற்றிய நொடி அவள் மனம் படபடக்க, ஏனோ அவளால் உடனே தடுக்க முடியாமல், அவன் கையைப் பார்த்தவாறே, அவன் முரட்டுப் பிடியில் லயித்தவள், சட்டென அடுத்த நொடி தன்னிலைக்கு வந்து அவனை முறைத்து “கைய விடு” எனக் கையை விடுவிக்க முயற்சித்தாள்.

அவன் பிடி இறுகியது.

“பேசிட்டு இருக்கேன்… போயிட்டே இருக்க. நேத்து என்னன்னா… என்னோட க்ளோஸ் ஃபிரன்டு’ன்னு என்கிட்டயே சொல்ற. இப்போ இப்படி… என்ன திமிரா? நான் சொல்ல வந்ததை கேட்டுட்டு போ” கத்தவில்லை ஆனால் அதட்டும் குரலில் சொன்னான்.

அதே நேரம், சரியாக ECE மூன்றாம் வருட மாணவர்கள், இவன் இங்கே இவளுக்காகக் காத்திருந்ததைத் தெரிந்துகொண்டு உள்ளே வர இவன் கவிதாவின் கையைப் பிடித்துக்கொண்டு நிற்க, ‘எங்க டிபார்ட்மென்ட் பெண்ணின் கையை எப்படிப் பிடிக்கலாம்’ என்ற சண்டை ஆரம்பித்தது.

கவிதாவோ ‘என்ன நடக்கிறது’ என்று புரிந்துகொள்ளும் நிலைமையில் இல்லவேயில்லை. அவள் கண்களில் அஜய் மட்டுமே தெரிந்தான். ஒருவனாக அத்தனை பேரையும் சமாளித்துக்கொண்டிருந்தான்.

வகுப்புத்தோழி அவளைக் உலுக்கியதும் தன்னிலைக்கு வந்தவள், சுற்றியும் பார்க்க, கவிதாவின் சீனியர் ஒருத்தி “இவன் உன்கிட்ட மிஸ் பிஹேவ் (misbehave) பண்ணான்னு பிரின்ஸிபல்’ட்ட சொல்ற… புரிதா? வா போலாம்” என்று இழுத்துக்கொண்டு சென்றாள் கவிதாவை.

அஜய் அவளயே பார்க்க, அவளும் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே சென்றாள். அடுத்தச் சில நிமிடங்களில் ப்ரின்ஸிபல் அறையில் அவரின் விசாரணை. அஜயை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.

அவளுக்கோ வடிவேல் காமெடி “கைய பிடிச்சு இழுத்தயா…” நினைவிற்கு வர, சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்த, அங்கிருந்த அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

“உனக்கு இவனை தெரியுமா?” என்று மீண்டும் ப்ரின்ஸிபல் அழுத்தமாகக் கேட்க, கவிதா அஜயை பார்த்தாள்.

அவன் அவளைப் பார்க்காமல் ப்ரின்ஸிபலை மட்டுமே பார்த்திருக்க… அங்கிருந்த சீனியர்ஸ் ‘தெரியாதுன்னு சொல்லு’ என்பதுபோல் தலையசைக்க, அவள் ப்ரின்ஸிபலிடம் “தெரியும்” என்றாள்.

சீனியர்ஸ் ‘நம்மள மாட்டிவிட்டுட்டாலே’ என்பது போல் அவளைப் பார்க்க… அவள் அஜயயைப் பார்த்தாள். அவன் கைகளைப் பின்னால் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து ‘தான் தவறே செய்யவில்லை’ என்பது போல் நின்றிருந்தான்.

‘ஹுக்கும்… இந்த சீனுக்கு ஒன்னும் கொறச்சலில்ல’ என மனதில் நினைத்துப் புன்னகைத்தவள், ப்ரின்ஸிபலிடம் திரும்பி…

“சர். எனக்கு அவனைத் தெரியும். எங்களுக்குள்ள ஒரு சின்ன ப்ரோப்லம். அதுதான் அஜய் அப்படிப் பண்ணிட்டான். இது என் சீனியர்ஸ்’க்கு தெரியாது. எனக்கு ஹெல்ப் பண்ண வந்தாங்க. இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்டுங்க ப்ளீஸ்” என்று முடித்தாள் கவிதா.

அதைக் கேட்டு கடுப்பானவர் “இந்த மாதிரி சில்லி ஃபயிட்ஸ்’லாம்(silly fights) என்கிட்டே கொண்டு வராதீங்க” என பொதுவாகச் சொல்லிவிட்டு…

கவிதாவிடம் “உங்க பிரச்சனையெல்லாம் காலேஜ்க்கு வெளிய வெச்சுக்கோங்க” பின் அஜயிடம் திரும்பி “காலேஜீக்குள்ள எப்படி நடந்துக்கனுன்னு உன்னக்கு நான் சொல்லவேண்டியதில்லை. ஜாயிண்ட் செகரட்ரி மறந்துடாத” என்று கடிந்துவிட்டு,

சீனியர்ஸிடம் “எல்லாத்தையும் ஊதி பெருசாக்க நினைக்காதீங்க. இது காலேஜ். மறந்துடவேணாம்” என எச்சரித்தார்.

யாருக்கும் பாதகமில்லால் அந்தச் சண்டையைக் கவிதா முடித்திருந்தாலும்… அஜய் மற்றும் சீனியர்ஸ் அவளை முறைத்தபடி வெளியேறினார்கள்.

******

வகுப்புக்கு வந்தபின் அவள் வகுப்புத் தோழி, “ஏன்டி அப்படிப் பண்ண? அஜய் நேத்து உன்ன ஸ்டேடியம்’ல இருந்து வெளிய போ சொன்னதுக்கு ஸாரி கேக்க வந்தான். நேத்து மதியத்துக்கு மேல ஒரு மூணு தடவ வந்தான்”

“அப்பறம் இன்னைக்கு காலைல இருந்து அவன் க்ளாஸுக்குக் கூடப் போகம, குட்டி போட்ட பூனை மாதிரி இங்கயே சுத்திட்டு இருந்தான். அவன் உன்ன பாக்கணும்னு சொன்னதாலதான்… நான் ப்ராக்டிக்கல்னு பொய் சொல்லி உன்னை வரவெச்சேன்”

“பாவம்டி. என்ன சொல்லவரான்னு கேக்கவே இல்லை நீ…” எனத் திட்டி தீர்த்தாள். ஏன் இந்தப் பெண் இவ்வளவு டென்ஷன் ஆகிறாள் என்றால் ஒருதலையாக அஜயை அவள் பார்ப்பதால்…

‘என்ன பாத்து பேச இவளோ ட்ரை பண்ணிருக்கானா?’ எனக் கவிதா நினைக்கும்போது அவளையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.