என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 7(1):
———இன்று———
‘நீ இல்லாத நிகழ்வுகளைக் கழிக்கிறேன் உன் நினைவுகளோடு!’
தொடர்ந்து அலறிக்கொண்டிருந்த அலாரத்தின் சத்தம், பழைய நினைவுகள் சுமந்த உறக்கத்தைக் கலைத்தது. அதை அணைத்துவிட்டு எழுந்த கவிதாவின் முகத்தில் ஒரு சின்னப் புன்னகை.
அஜய் துபாயில் தான் இன்னமும் இருப்பதாலும்… நேற்று லயா AJ தனது பாய் ஃபிரன்ட் என்று சொன்னதும்… மனதில் ஒரு சந்தோஷத்தை நிரப்பியது.
அஜய் தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டான் என்ற எண்ணம் நிம்மதியைத் தந்தது.
குளித்துத் தயாராகிவந்த கவிதா, லயா இன்னமும் வெளியே வராமல் இருப்பதைப் பார்த்து…
“எப்போண்ணா எந்திரிப்பா… சேர்ந்து டாக்ஸி’ல ஆஃபீஸ்க்கு போலாம்ன்னு நினச்சேன்” என தாமஸ்ஸிடம் கேட்க, அவர் சிரிப்பை அடக்கமுடியாமல் “அந்தப் பொண்ணு எழ இன்னமும் ஒரு மணி நேரம் ஆகும்” என சிரித்தார்.
அவர் சொல்லிமுடிக்கும் போது “ஹலோ ஹலோ… என்ன போட்டுக் குடுக்கறீங்களா… நான்லாம் ரெடி ஆயிட்டேன்” என சொல்லிக்கொண்டே வெளியே வந்தாள் லயா.
“என்னம்மா இன்னிக்கி ரொம்ப சீக்கரம் வந்துட்ட…” தாமஸ் இருவருக்கும் காலை உணவை எடுத்துவைத்துக்கொண்டு கேட்க…
“அதுவாண்ணா… இன்னிக்கி AJ இந்தியாக்குப் போறான்… ஏதோ முக்கியமான வேலையாம்… அதுதான் ஏர்போர்ட் வர போலாம்னு. அவன் வேண்டாம்ன்னு சொன்னான், அத கேட்டுடா நான் லயா இல்லையே” என சொல்லி கண்ணடித்து…
“நான் போயிட்டு வந்துடறேன். எனக்கு சாப்பாடு வேணாம்ண்ணா. நான் வரேன் கவிதா” என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டாள் லயா…
புன்னகையே பூத்தது கவிதாவிற்கு… அஜய் எப்போது துபாயில் இருந்து இந்தியா வருவான் எனக் காத்திருந்தகாலம் போய், எப்போது அகிலனைப் பார்ப்போம் என ஏங்கும் தன் மன மாற்றம் நினைத்துக் கொஞ்சம் சிரிப்பே வந்தது…
*********
“நான் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் AJ மீட் பண்ணேன். இதுவரை ஒரு நாலஞ்சு தடவ மீட் பண்ணிருப்பேன். ரொம்ப கேஷுவல் டைப். அவர் ஆஃபீஸ் இந்த பில்டிங்ல தான் இருக்கு. பட் இந்தியன் டைம்’க்கு வர்க் பண்ணுவாங்க”
“மோஸ்ட்லி ரெக்ரியேஷன் சென்டர்ல பாஸ்கெட் பால், ஷட்டில், இல்லாட்டி டேபில் டென்னிஸ் விளையாடறப்ப பாப்பேன். இன்னமும் சொல்ல போனா நான் தான் பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். அங்க பெருசா எந்த ரியேக்ஷனும் இல்ல… பட் நான் ட்ரை பண்றத நிறுத்தமாட்டேன்” என AJ புராணம் வாசித்துக்கொண்டிருந்தாள் லயா கவிதாவிடம்.
‘அஜயை அவள் விரும்புகிறாள்’ என தெரிந்துகொண்டதுமே லயாவிடம் நன்றாகப் பேசினாள் கவிதா.
“உன் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என கவிதா கிண்டல் செய்ய… “ஹோப்ஃபுலி (hopefully)… அவன் திரும்பி வந்தவுடனே உங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கறேன்” என்றாள்.
“ஏன் AJ’னு சொல்ற… பேரு சொல்லி கூப்பிடவேண்டியதுதானே…” என தனக்கு எழுந்த சந்தேகத்தைத் தவறாமல் கேட்டாள் கவிதா. ஏனென்றால் அஜய்க்கு நெருங்கியவர்கள் அஜய் என்றழைத்தாலே பிடிக்கும். அது கவிதாவிற்குத் தெரியாதா என்ன.
“அதுவா… அவன் பேர் எனக்கு பிடிக்கல” என சாதாரணமாகச் சொன்னாள் லயா. ‘அஜய் பேரே பிடிக்கலையா… இந்தப் பொண்ண…’ என மனதில் சிரித்துக்கொண்டாள் கவிதா.
சாப்பிட ஆர்டர் செய்த உணவு வந்தவுடன்… அதைப் பற்றியும் ஒரு பெரிய லெக்சர் ஆரம்பிக்க… கவிதா கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்…
‘கண்டிப்பா இந்தக் குட்டி பொண்ணு அஜய்க்கு ஏத்த பொண்ணு தான்… வாய் ஓயாம பேசறாளே… நிமிஷத்துக்கு ஒருதரம் AJ பேரு வராம இல்ல… அவனுக்கும் இந்த மாதிரி நாட்டி’யா இருந்தா ரொம்ப பிடிக்குமே…’
‘எப்படியாச்சும் ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா எவளோ நல்லா இருக்கும்…ரொம்ப அழகாவும் இருக்கா… சுட்டி… என்ன ஹயிட் தான் கொஞ்சம் கம்மி’ என கவிதா தனக்குத் தானே நினைத்துக்கொண்டிருக்க…
“என்னடா இந்த பொண்ணு புது ஆளுன்னு கூடப் பாக்காம லொட லொடன்னு மொக்க போடறாளேன்னு யோசிக்கறீங்களா…” சொல்லிவிட்டுக் கவிதாவை பார்க்க “கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே” என்றாள் கவிதா சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“நான் அப்படித்தான்… பேச பக்கத்துல ஆள் இருந்தா போதும்… மணிக்கணக்கா பேசிட்டே இருப்பேன்…” என்றாள் மிகவும் சாதாரணமாக…
“உங்கள மொதல்ல பாத்தப்ப சிடுமூஞ்சின்னு நினச்சேன். பட் பரவால்ல. நல்லாவே பேசுறீங்க” என கிண்டல் செய்ய, கவிதா அவளின் டிரேட்மார்க் முறைப்பை முறைத்தாள்.
ஏனோ லயாவின் வெகுளித்தனமான பேச்சு அகிலனின் தங்கை இசைப்ப்ரியாவை நினைவுகூர்ந்தது. ஆகையால் நன்றாகவே பேசினாள் லயாவுடன்…
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க… “என் பேரண்ட்ஸ் (parents) எப்படியோ போ’ன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. அவங்க மட்டும் மதுரைல ஹாப்பியா இருக்காங்க என் தொல்லை இல்லாம. உங்க அப்பா அம்மா?” என லயா கேட்க…
“எனக்கு அம்மா இல்ல… அப்பா தான். அப்பறம் தம்பி… காஞ்சிபுரத்துல இருக்காரு” என சொல்லும்போது ஏனோ அப்பாவின் நினைவு இப்போது ஒட்டிக்கொண்டது மனதில்…
இருவரும் வேலைமுடிந்த பின் கெஸ்ட் ஹவுஸ் வந்தனர்… ஏதோ ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் கவிதாவின் எண்ணவோட்டங்கள் அவளின் அப்பாவையே நினைத்தது…
அன்று கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என அகிலன் சொன்ன பின், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, பின் அவர் கண்விழித்தபோது நடந்தவைகள் கண்முன்னே ஓடியது கவிதாவுக்கு…
———அன்று———
அகிலனுக்கு ஏதோ அழைப்பு வர, அப்பாவை பார்க்க சென்ற கவிதா, அவரின் கோலத்தைப் பார்த்து, அழுகை அவளை மீறி வரப்பார்த்தது.
அவர் முன் அழுதால் இன்னமும் நொடிந்து போய்விடுவார் எனத் தன்னை முழுவதும் கட்டுக்கு கொண்டுவந்து அவர் முன் நின்றாள்.
அவளின் சித்தப்பா அப்பாவும் மகளும் தனியாகப் பேசட்டும் என வெளியே சென்று விட, அவள் தம்பி மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தான்.
அவர் கண்கள் கலங்கிருக்க, அருகில் உட்கார்ந்தவள், கைகளைக் கோர்த்துக்கொண்டு “ஒன்னும் இல்லபா. எல்லாம் சரியாகிடும்” என அவரைத் தேற்ற முற்பட,
அவளின் கலங்கிய முகமே அவள் அழுதிருக்கிறாள் என அவருக்குப் புரிந்தது.
“ம்மாடி… கண்ணம்மா… அழுதயா? என்ன மன்னிச்சுடுடா. நான் மாப்பிள்ளைட்ட பேசறேன். அவர் என்னைக் கேட்கறாரோ நான் செய்றேன்டா… நீ சந்தோஷமா இருக்கனும்” என்று ஈனக்குரலில் பேச…
‘அப்பா அகிலனை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் ‘ என புரிந்து பதறிக்கொண்டு “அப்பா… அவர் கல்…யாணத்தை நிறுத்த சொல்லல ப்பா. நா தான்…” எனத் தட்டு தடுமாறி சொல்லிவிட்டாள்.
அவர் அப்பா அதிர்ச்சியில் அவளைப் பார்க்க, அவர் முகம் பாராமல் தலை குனிந்துகொண்டு “நான் காலேஜ் படிக்கிறப்ப அஜய்ன்னு என்னோட சீனியர லவ் பண்ணேன் ப்பா…” வார்த்தைகள் வரமுடியாமல் கலங்கிய கண்களுடன் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னாள் கவிதா.
அவள் முடிக்க, அகிலனும் உள்ளே வர சரியாக இருந்தது.
“எப்படி இருக்கீங்க அங்கிள். இப்போ பரவால்லயா?” என கேட்டுக்கொண்டே அவர் அருகில் வந்தான்.
அவன் முகமும் வாட்டமாக இருப்பதைப் பார்த்தவர் மகளையும் பார்த்தார். அவள் தலையைத் தூக்கவில்லை. “இப்போ கொஞ்சம் பரவால்ல மாப்…” மாப்பிளை என சொல்லவந்தவர் கண்கள் கலங்கி அதைச் சொல்லாமல் பாதியிலேயே நிறுத்தினார்.
மகள் மனதில் வேறொருவன் இருக்கும்போது மாப்பிள்ளை என்று அழைத்தால் தவறாக எடுத்துகொள்வானோ என்று அவர் நிறுத்த…
அவர் அழைக்க வந்ததைப் பாதியிலேயே நிறுத்தியதை புரிந்துகொண்ட அகிலன் மனது ஒரு ஓரம் வலித்தாலும், வெற்றுப்புன்னகை மட்டுமே காட்டினான் அவனின் முகத்தில்!!!