ENV-7B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 7(2):

அவர் வருத்தப்படுகிறார் அது அவரின் உடலுக்கு நல்லதல்ல எனப் புரிந்து “நீங்க உடம்ப அலட்டிக்காதீங்க அங்கிள். ஆல்ரெடி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருப்பீங்க” என அகிலன் ஆறுதல் சொல்ல, கவிதாவுக்குச் சங்கடமாக இருந்தது.

தான் செய்த தவறால் அப்பாவுக்கு இந்த நிலைமை. அகிலன் அவரிடம் காட்டும் அக்கறைக்கூடத் தனக்கில்லயா என மனம் குறுகிப்போனாள்.

“அகிலன் பொண்ணு இப்போ தான் எல்லாமே சொன்னா. என்னை மன்னிச்சிடுங்க” பெண்ணைப் பெற்ற அப்பாவாகக் கலங்க, அவர் கையை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தான் அகிலன்.

மகள் புறம் திரும்பியவர் “கவிதா” என்றழைக்க, அந்த அழைப்பே சொன்னது அவருக்கு அவள் செய்த காரியம் பிடிக்கவில்லையென. அன்பான அம்மாடியோ… இல்லை ஆறுதலான கண்ணம்மாவோ இல்லையே…

அவள் நிமிர்ந்து அவரைப் பார்க்க, “நீ சொன்னயே… அவருக்கு போன் பண்ணு. நான் பேசணும்” ஸ்வாமிநாதன் சொல்ல, சட்டென அவள் அகிலனை தான் பார்த்தாள்.

அவள் அழைத்து எடுக்கவில்லை. அவன் எண்ணில் அழைத்தபோது தானே அஜய் எடுத்தான். அகிலன் முகம் பார்க்க, அதில் வருத்தமா? இல்லை வேதனையை? இல்லை கோவமா? இல்லை வெறுப்பா? என அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால் அவள் காலையில் பார்த்த அவன் முகம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது? இவனின் நிலைக்கும் தான் தானே காரணம் என்று நினைக்கும்போது அதுவும் வருத்தியெடுத்தது.

“உன்னத்தான் கேக்கறேன்” என அப்பாவின் கடினக் குரலில், தன்னிலைக்கு வர, அகிலன் அவனுடைய போனில் அஜய் நம்பரை அழைத்து அவளிடம் நீட்டினான்.

புரியாமல் அவள் அப்பா பார்க்க, ‘நன்றி என பார்வையால் சொன்னவள், போனை வாங்கிக் காதில் வைக்க

“சொல்லுங்க அகிலன்” என்றான் அஜய்.

“நான் கவிதா பேசறேன்”

“ஓ சொல்லு கவி. எப்படி இருக்க”

‘நான் எப்படி இருப்பேன்னு உனக்குத் தெரியாதா அஜய்…’ என மனதில் நினைத்தாலும் “அப்பா உன்கிட்ட பேசணுமாம்” என்றாள்.

“எதுக்கு?” ‘எதற்க்கா???’அவனிடம் இவ்வளவு மாற்றத்தை கவிதா எதிர்பார்க்கவில்லை. மனது படபடத்தது. இதுவரை நடந்ததை விட ஏதோ பெரியதாக நடக்கப்போகிறதென்று.

“நான் அவர்கிட்ட நம்ப விஷயத்தை சொல்லிட்டேன்”

“ஓ… நான் தான் சொன்னேனே கவி. என்னால இப்போ எதுவும் செய்யமுடியாதுன்னு. என் வீட்ல இன்னும் ஒத்துக்கல” கவியின் கண்கள் மறுபடியும் கலங்க, அதைக் கண் மூடி நிறுத்தியவள் “இப்போ என்ன சொல்ற அஜய்?” கேட்டாள் அவனிடம்.

“இன்னும் நான் என்ன சொல்லணும் கவி? நான் இப்போ உன் அப்பாகிட்ட பேசற நிலமைல இல்ல. அவ்ளோதான். உன்னால வெயிட் பண்ணமுடியாதுன்னா……… நான் ஒன்னும் பண்ணமுடியாது. என் முடிவு இதுதான். நான் வெக்கறேன்” சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

வாய்வரை வந்துவிட்டது அஜய்க்கு “உன்னால வெயிட் பண்ணமுடியாதுன்னா … கல்யாணத்த பண்ணிக்கோ” என்று…

அகிலனிடம் அதைச் சொன்னான். ஆனால் ஆசை கொண்ட மனது அதை அவளிடம் சொல்லவிடவில்லை. தன் நிலைமையை நினைத்துக் கூனிக்குறுகிப்போனான்.

கவிதாவுக்கு இதயம் நொறுங்கியது. கண்கள் நிலைக்குத்தியது. பேசியது அஜய்யா என்று நம்பமுடியவில்லை. அவ்வளவு தானா அவர்கள் காதலுடைய வலிமை? இவ்வளவு சீக்கிரம் உடையும் என்று கனவிலும் நினைக்கவில்லையே.

அவள் கண்கள் மெதுவாகச் சொருக, தள்ளாட்டத்துடன் கீழே விழப்போனாள்.

“கவிதா என்னமா ஆச்சு?” என்று எழமுடியாமல் அவள் தந்தை எழ முயற்சிக்க அகிலன் உதவ நெருங்க… தன்னைத் தன்னிலைப்படுத்திக்கொண்டு, அவனுடைய போனை அவனிடம் கொடுத்தாள்.

அவளின் இந்தத் தவிப்பை தந்தையாகப் பார்க்கமுடியவில்லை அவரால்… எதிர்பக்கம் பேசியவன் என்ன சொல்லியிருப்பான் என்று கொஞ்சம் யூகிக்க முடிந்தது அவரால்.

“அம்மாடி. இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” என்று நொந்து கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க, அவர் உடல்நிலை சரியில்லையே என்று பதறிக்கொண்டு அருகில் சென்றாள் கவிதா.

அவரை அவள் சமாதானப்படுத்த, அவர் “நான் ஒரு நல்ல அப்பாவா இல்லையோ? அம்மா இல்லாம சரியா வளர்க்க தெரியாம வளத்துட்டேனோ? முன்னாடியே எல்லாரும் அப்படித் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நான் பெருமயா என் பசங்கனு சொன்னேன்… ஆனா…” என்றார் இன்னமும் உடலை வருத்திக்கொண்டு.

அந்த வாக்கியம் “சரியாய் வளர்க்கலையோ?” அதற்கு அர்த்தம் சட்டென அவளுக்குப் புரிந்தது. ‘தான் செய்ததைத் தவறு என்கிறாரோ? மற்றவர் முன் அவமானம் நேரிடும் என எண்ணுகிறாரோ? தன்னால் அவமானம் நேர்ந்துவிடுமோ’

பல கேள்விகள் அவளுள் தோன்ற, தன்னைச் சமநிலை படுத்திக்கொண்டு “ப்பா. நீங்க தப்பாலாம் வளர்கலப்பா” என்றாள் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல்.

மகளை அப்படியே விட மனமில்லை. அவன் முடியாதென்றால் போகட்டும்… மகளுக்காக யோசிக்கும் அகிலன் போல் ஒருவன் அவள் வாழ்க்கையில் இருந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என நம்பினார்.

“எனக்கு என்ன செய்றதுன்னே தெரில கவி… இந்தக் கல்யாணம் நடக்கணுமா… நடக்க வேணாமான்னு கூட யோசிக்க முடில” என்று அகிலனைப் பார்த்து அவர் சொல்ல…

“எல்லாம் தெரிஞ்ச அவரு இதுக்கு எப்படிப்பா… இது சரிவராது” என சொல்லி அவளும் அகிலனைப் பார்க்க, அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இருவரின் பார்வையும் வெவ்வேறு உணர்வுகளைக் காட்டியது. பெரியவரின் பார்வையில் கெஞ்சல். கவிதாவின் பார்வை இது வேண்டாம் என்றது.

“தம்பி… நான் கேக்கறது தப்பு தான்… எனக்கு தெரிது. ஆனா எனக்கு இதைத் தவிர இப்போ வேற வழி தெரியல…” என்றவர் கைகளைக் கஷ்டப்பட்டுக் கூப்ப முயற்சித்துக்கொண்டு “இந்தக் கல்யாணம் நடக்குமா…?” கேட்டார் அகிலனிடம்.

“அங்கிள்… என்னதிது” என அவன் பதற, அதே நொடி “அப்பா… நீங்க போய்” என அவர் கையைப் பிரித்தாள்.

“நம்ம சைட்ல தப்ப வெச்சுருக்கோம் கவி… இதுவே அவர் வீட்ல இப்படி நடந்திருந்தா நம்ம என்ன பண்ணிருப்போம்? என் பொண்ண ஏத்துப்பீங்களா அகிலன்? நீங்க என்ன முடிவு சொன்னாலும் அத நான் ஏத்துக்கறேன்” என்றார் குனிந்ததலயுடன்.

பணிந்த அவர் கண்களைப் பார்த்தவன் “அங்கிள். என்ன நீங்க… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிப் பேசறீங்க” என சொல்லிவிட்டு கவிதாவை பார்த்தான்.

அவள் கண்கள் ‘வேண்டாம்’ என கெஞ்ச, அஜய் பேசியது மனதில் ஓட…

“எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கறதுல… எந்தப் பிரச்சனையும் இல்ல” என்றான் மூச்சை ஆழ இழுத்துவிட்டு….

சரியாகக் கவிதாவின் தம்பி இளஞ்செழியன் உள்ளே வந்தான். சிறிதுநேரத்தில் சித்தப்பாவும் வந்தார்.

அவரின் உடல்நிலை பற்றித் தெரியவந்தவுடன், அகிலனின் அப்பாவும் அம்மாவும் அன்றிரவே வந்து சேர்ந்தனர். அகிலனின் பெற்றோர் அவனைத் தனியாக அழைத்துச்சென்று தரவேண்டிய அர்ச்சனைகளைச் செவ்வனே செய்தனர்.

ஒரு வாரம் கடந்திருக்க… காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பழம் பெரும் கோவிலில் கவிதாவும் அகிலனும்… பக்கத்துப்பக்கத்தில். கிட்டத்தட்டக் கணவன் மனைவியாக.

சுற்றம் சூழ, சொந்தங்கள் வாழ்த்த, பரமேஸ்வரன் பார்வதியின் சாட்சியாக இனிதே திருமணம் நடைபெற்றது!!!

———இன்று———

கவிதாவின் போன் தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்க… அதன் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவள், போனை எடுத்துப் பார்க்க, அது அகிலனின் நெருங்கிய நண்பன் அரவிந்திடம் இருந்து. அவசரமாக எடுத்தாள்.

“அண்ணா. சொல்லுங்கண்ணா… அப்படியா…… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… ஹ்ம்ம் சரிண்ணா……” என போனை வைத்துவிட்டு குதித்தாள். சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள் கவிதா… காரணம் நாளை மறுநாள் அகிலனை நேரில் சந்திக்கப்போகிறாள்.

ஆனால் அவள் அங்கே சந்திக்கப்போவது அகிலனை மட்டுமா? வேறு யார்?

‘காதலால் ஏற்பட்ட என் மனக்காயத்திற்கு மருந்தானாய் நீ… மாறாக உனக்கு நான் தந்தது அதே காயத்தை…

நானே வருகிறேன் அதற்கு மருந்தாக!’