ENV-9B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 9(2):

அடுத்தநாள் காலை. இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தவள் நன்றாகத் தூங்கினாள். மணி எட்டாகியும் அவள் எழவில்லை. பின் பொறுமையாக எழுந்து சுற்றியும் பார்க்க அகிலன் இல்லை.

எழுந்து குளித்துவிட்டு, என்னசெய்வது என தெரியாமல் உள்ளேயே இருந்தாள்.

நெற்றிக்காயம் வேறு… வலி ஒருபக்கம்… கோவம் ஒரு பக்கம்… இயலாமை ஒரு பக்கம். புது இடம். என்ன செய்வது என தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்…

‘அவள் இன்னமும் எழவில்லையோ?’ என நினைத்துக்கொண்டு, அகிலன் உள்ளே வர, அவள் உள்ளே இருந்ததைப் பார்த்து “இங்க என்ன பண்ணிட்டு இருக்க ஸ்வீட்டி. வா..” என சொல்ல, அவனைத் தடுத்து…

“நேத்தே சொன்னேன் ஸ்வீட்டி பேபி’ன்னு சொல்லாதன்னு. சத்தியமா எரிச்சலா இருக்கு… நீ எனக்கு ஜஸ்ட் ஒரு acquaintance… தேர்ட் பெர்சன். அவ்வளவு தான். கல்யாணம் பண்ணிட்டோம்ன்னு ரொம்ப உரிமை எடுத்துக்க வேணாம்” அழுத்தமாகச் சொல்லிவிட்டு, மறுபடியும் தலை வலிக்க, அதைப் பிடித்துக்கொண்டாள்

“நான் உனக்கு acquaintance’ஸா இருக்கலாம். பட் எனக்கு நீ…” ஏதோ நினைத்து நிறுத்திவிட்டு “ப்ச்… வா. மொதல்ல ஐஸ் பேக் வெக்கலாம்” என்றான்.

அவள் எடுத்தெறிந்து பேசுவது அவனுக்கு வருத்தமாக இருந்தாலும்… அது மனதில் வலியைத் தந்தாலும்… அவள் வலியால் முகம் சுளிக்கும்போது அனைத்தும் மறைந்தவனாய் அவளுக்கு உதவ அவன் மனம் துடித்தது.

அவள் நகராமல் அங்கேயே இருக்க”ரூம் உள்ளேயே இருக்க முடியாது பேபி. அம்மா உன்ன வரச்சொன்னாங்க” என சொல்லிவிட்டு வெளியேறினான், அவள் எப்படியும் வெளியே வருவாள் என…

அதே போல், அவள் படியிறங்கி வரும்போது கீழே ஐஸ் பேக்குடன் அவன்.

அவன் அம்மா லட்சுமி சமயலறையில் இருந்து வெளியே வந்தவர், அவன் கையில் ஐஸ் பேக்கை பார்த்துவிட்டு, இவள் நெற்றி வீங்கியிருந்ததைப் பார்த்து, என்ன ஆயிற்று என வினவினார்.

அவள் ‘என்ன சொல்ல என முழிக்க, “தூக்கத்துல பாத்ரூம் கதவை திறக்கும்போது வால்’ல (wall) முட்டிடா மா” என சமாளித்தான். வெறுமனே “ஓ” என்று சொல்லிவிட்டு, சமையலறை உள்ளே சென்றுவிட்டார்.

சில நிமிடங்கள் கழித்து, அவள் காயத்தில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, சமயலறையில் இருந்து லட்சுமி, கவிதாவை அழைத்தார். அவளும் உள்ளே சென்றாள்.

“வலி பரவால்லயா?” அவர் கேட்க, மண்டையை மட்டும் ஆட்டினாள் பரவாயில்லை என்று.

“இனி காலைல கொஞ்சம் சீக்கரம் எழுத்துரு. நாங்க எல்லாரும் ஆறு… ஆறரை மணிக்குள்ள எழுந்துருச்சுடுவோம். நீயும் அத பழகிக்கோ” என்றவர் அவள் கையில் காபியைக் கொடுத்தார்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை கவிதாவிற்கு. அவர்கள் வீட்டில் விடிந்த முதல் காலை… முதல் கட்டளை. சரி என்பது போல் தலையசைத்தாள்.

உள்ளே இருந்து குடிக்கவேண்டுமா இல்லை… வெளியில் சென்று குடிக்கவேண்டுமா என யோசிக்கும்போது அகிலன் உள்ளே வந்தான்.

“ஏன் நின்னுட்டே குடிக்கற. உட்கார்ந்து குடி போ” என்றான் ஆபத்பாந்தவனாக… எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.

“அம்மா எல்லாமே இன்னிக்கே வேணாமே. போகப் போக அவளுக்கு எது முடியுமோ அத பழகிக்குவா” என்று மெதுவாகச் சொல்ல அவரோ “அகில். நான் எதுவும் தப்பாசெல்லலயே. இதுல நீ தலையிடாத” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

காபி குடித்தபின் மெதுவாகக் கிச்சனுக்குள் சென்ற கவிதாவைப் பார்த்த லட்சுமி “க்ளாஸ் அங்க போட்டுடு. மதி கழிவிடுவா” என்றுவிட்டு “நாம கோவிலுக்குப் போகணும். நீ போய் ரெடி ஆகிட்டு வா… போயிட்டு வரப்ப வழிலேயே சாப்பிடுப்போம்.” என்றார்.

‘ஐயோ மறுபடியும் கோவில் குளமா… அவனுடன் சேர்ந்து சடங்கா சலிப்பாக இருந்தது கவிதாவிற்கு. அவரிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அறைக்குச் சென்றாள்.

அங்கே அகிலன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்க, இவள் உள்ளே சென்றசமயம் பின்னே ஓடிவந்தாள் ப்ரியா.

“அண்ணி… அம்மா உங்கள புடவ கட்டிக்க சொன்னாங்க. என்ன கலர் கட்டப்போறீங்க?” ஆர்வத்துடன் கேட்க…

‘கண்டிப்பாக போகணுமா…’ என்ற யோசனையுடன் கவிதா சோகமயமாக இருந்ததைப் பார்த்த ப்ரியா “டேய் அண்ணா… நீயும் வரலாம்ல. பாரு… அண்ணி நீ வரலனு சோகமாய்ட்டாங்க” என்றாள் அண்ணனைப்பார்த்து.

சட்டென்ன திரும்பிப்பார்த்தான் அகிலன் கவிதாவை. ‘சோகமாக இருக்கிறாளா’ என பார்க்க, அவள் முகம் சோகத்தில் இருந்து பிரகாசமானது.

அவள் மனதிலோ ‘இது தெரியாம போச்சே. இவன் கூட இல்லனா நிம்மதி. அதில்லாம தனியா வீட்ல… இவன் கூடயா…’ என தன்னைக் குலுக்கிக்கொள்ள, அவள் நினைப்பது அவனுக்கும் புரிய, சிரித்துக்கொண்டு “ஏய் குட்டிப்பிசாசு… உன் அண்ணி வருவா. நீ போய் ரெடி ஆகு” என்றான்.

“ஆமா… நான் வரேன் ப்ரியா, டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்” என்றாள் சந்தோஷமாக. இவர்களுக்குள் இருக்கும் அடிதடி தெரியாத சின்னப்பெண் “அண்ணா சொன்னவுடனே கேட்டுடீங்களே” என்று சீண்டிவிட்டு ஓடிவிட்டாள்.

ப்ரியா உடன் இருந்தாலும்,மாமனார் ஓரளவு நன்றாகப் பேசினாலும், தனக்குத் தேவையான ஒவ்வொன்றும் தானே கேட்டபோது கஷ்டமாக இருந்தது. மூன்று நாட்களாக அகிலன் அவளுக்குத் தேவையானதைச் செய்தான் ஆனால் இப்போது…

அவனுடன் இருந்தால் தொல்லை என்று நினைத்தாள்… ஆனால் அவன் இருந்திருந்தால் தெரிந்த யாரோ ஒருவர் உடன் இருப்பதுபோல் இருந்திருக்கும் என எண்ணவும் செய்தாள். ஆனாலும் ‘அவன் வேண்டாம் என்றது மனது.

சுவாமி தரிசனம் முடித்துவிட்டு உண்டபின், வீட்டிற்குத் திரும்பிய கவிதா, அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது…

கட்டில், மெத்தை மாற்றப்பட்டிருந்தது. ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில்… கட்டிலில் இருந்து இறங்கும் இருபுறமும், மென்மையான அதேசமயம் தடிமனான கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. கட்டில் முழுவதும் நிறையத் தலையணைகள்.

அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் அதைப்பார்த்துப் புன்னகைத்தது. அவன் தனக்காக மாற்றியிருந்தது புரிந்தது. அப்போதுதான் சுற்றியும் அந்த அறையைப் பார்த்தாள்.

அழகாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் பூசப்பட்டிருந்தது. ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த முரல் பைண்டிங். சில ஆர்டிஸ்டிக் டிஸ்ப்லே. நடுவில் பெரிய கட்டில். பக்கத்தில் ஒரு சின்ன டேபிள்.

கட்டிலின் எதிர் புறம் ஒரு பெரிய டிவி, ஒரு பக்கத்தில் நீளமும் வெளிர் சாம்பலும் கலந்த நிறத்தில் துணி வைக்கும் அலமாரி மற்றும் அதனுடன் இணைந்திருந்தது ட்ரெஸ்ஸிங் டேபிள்.

அடுத்து அவள் கண்ணில் பட்டது… ஜன்னலுடன் கூடிய இருக்கை (window seat) மற்றும் ஸ்டோரேஜ். அதனுடன் சேர்ந்திருந்த அலமாரியில் பலரகப் புத்தகங்கள். அங்கேயே லேப்டாப் வைக்கப்பட்டிருந்தது. அவன் பெரும்பாலும் அமருமிடம்.

ஜன்னலை மறைக்கத் தொங்கவிடப்பட்டிருந்த மெல்லிய திரை. அதில் கூடக் கலையாற்றல் தெரிந்தது.

அதை விட்டு சற்று தள்ளி இருந்த அழகிய ஒரு பால்கனி கதவு, அதன் வழியே வெளியே பார்க்க, சுற்றியும் பல செடிகள். அதுமட்டுமின்று பெர்கோலா மற்றும் அதன் அடியில் மூங்கிலால் செய்த இருக்கை. ‘ச்ச ஒரு ஊஞ்சல் இருந்தா எப்படி இருக்கும்?’ என மனதில் தோன்றவும் செய்தது அவளுக்கு.

சுருக்கமாக அறையை வர்ணிக்க வேண்டுமென்றால்… கலைநயத்தின் களஞ்சியம்.

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனிக்காமல் அறையை ஆராய்ச்சி செய்ய, “நம்ம ரூம் பிடிச்சிருக்கா பேபி? ஒன்னொன்னும் பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணது.” என்று அவன் பேசியதில், திரும்பி அவனை ஏறிட்டாள்.

“ஹ்ம்ம். நல்லாவே இருக்கு… உன் ரூம்” என நிறுத்தி “ஆனா எனக்கு பிடிக்கல” தோள்களைக் குலுக்கி சொல்லிவிட்டு பால்கனி சென்றாள்..

———இன்று———

“இனி அது நம்ம ரூம் இல்லையா அகில்?” கலங்கிய கண்களுடன், தரையில் படுத்திருந்தாள் கவிதா. கீழே விழுந்த காயம் ஏற்படுத்திய வலியை விட, இன்று லயாவுடன் அகிலனைக் கண்டது வலித்தது.

‘அப்போ தெரில எனக்கு. ஆனா இப்போ புரிது. என் மனசுல ஒரு துளி அளவுக்கு அன்னைக்கே நீ வந்துருப்பயோன்னு. ஆனா காலம் கடந்த புரிதல்…’ மனது உறங்குவேனா என்று ஆடம் பிடிக்க, கண்கள் மட்டும் உறங்கியது.