ENV-9A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 9(1):

‘ஆர்க்கிடெக்ட் AJ’ என்று அவனுடைய பிஸ்னஸ் வட்டாரத்தில் அழைக்கப்படும் அகிலன் ஜெயராமன்.

படித்தது கட்டிடக்கலை. படித்து முடித்து வெளிநாட்டு வேலையில் முதல் இரண்டு வருடம்…

பின் தானாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் கட்டிடக்கலை சார்ந்த வடிவமைப்பு, மற்றும் சேவை, இன்டீரியர் டிசைனிங், பிம் சேவை, டர்ன்கி இன்டீரியர் கான்ட்ராக்ட்டிங், என பல சேவைகளை செய்து வருகிறான்.

பல குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்கள் இவனின் நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் அரபு நாடுகளில் இருந்து சில ப்ராஜெக்ட்ஸ் எடுத்து செய்துவருகிறேன்.

முதலில் ஐந்து பேர் கொண்டு ஆரம்பித்த தொழில் பல சரிவுகளைச் சந்தித்து, மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பல அடிகளை வாங்கி, இப்போது கிட்டத்தட்ட நூறு பேர் இவன் கீழ் வேலை செய்யும் அளவிற்கு உயர்த்திருக்கிறான்.

என்னதான் ஒரு நிறுவனத்தின் உரிமையாளனாக இருந்தாலும், துளியளவும் தலைக்கனம் இல்லாமல் மிகவும் சகஜமாகப் பழகுவதில் வல்லவன்.

சாதாரணக் குடும்பத்தில் இருந்து உயர்ந்ததாலோ என்னவோ, தேவைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வான். ஒருபோதும் தன்னை உயர்த்திக் கவிதாவிடம் பேசியதில்லை இத்தனை நாட்களில்.

அகிலன் தான் AJ… அதை ஏற்றுக்கொள்ளச் சிலநிமிடங்கள் எடுத்தது கவிதாவுக்கு.

எதிரில் இருக்கும் அகிலனையும் லயாவையும் பார்த்து ஏதேதோ மனதில் தோன்ற, கண்களில் கண்ணீர் கோர்க்க, அவள் இயல்பு அதை வரவிடாமல் தடுத்தது.

“கவிதா என்னாச்சு…?” என்ற அஜயின் குரல் அருகில் கேட்க திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

இந்தக் கூத்தில் இவன் பக்கத்தில் நின்றிருப்பதை மறந்துவிட்ட கவிதா, அவனைப் பார்த்து வராத புன்னகையுடன் ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையசைத்தாள். கண்கள் மட்டும் அகிலனை பட்டு பட்டு மீண்டது.

அஜய்க்கு அவள் சரியில்லை, கண்கள் கலங்கப்பார்க்கிறது எனப் புரிந்து, அதைக் கேட்கவரும்போது, அதேநேரம் லயா கவிதாவைப் பார்த்துவிட்டு, அகிலனை அழைத்துக்கொண்டு அவள் அருகில் வந்தாள்.

“கவிதா… நீங்களும் இங்க தான் இருக்கீங்களா…” என அஜயை பார்த்துக்கொண்டே கேட்டாள், அஜயுடன் வந்திருப்பாள் என நினைத்துக்கொண்டு.

ஆம் என்பது போல் கவிதா மேலும் கீழும் தலையசைக்க, அகிலன் அஜயைப் பார்த்துவிட்டு கவிதாவைப் பார்த்தான்.

“நான் சொன்னேனே… AJ இவர் தான்” என லயா அறிமுகப்படுத்த அவனைப் பார்த்த கவிதா, புன்னகைக்க முயற்சித்தாள்…

“AJ இவங்க கவிதாயினி. என்கூட வேலை பாக்கறாங்க” என்றவுடன் அவளைப் பார்த்த அகிலன் “ஹாய்” என்றுவிட்டு அஜயைப் பார்த்தான். முகத்தில் துளிக்கூடப் புன்னகை இல்லை.

‘அவன் யார்’ என்று தெரிந்துகொள்ள அஜயைப் பார்க்கிறான் எனப் புரிந்துகொண்ட கவிதா “இவர் அஜய்” என்று மட்டுமே சொன்னாள். அகிலனின் புருவங்கள் உயர்ந்தது. அது ஆச்சர்யமா? இல்லை அதிர்ச்சியா? இல்லை அலட்சியமா? கவிதாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

“ஹலோ” என்று அஜய், அகிலனையும் லயாவையும் பார்த்து சொல்லிவிட்டு “கவிதா. நீ பேசிட்டு இரு. ஃபிரன்ட் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன். டூ மினிட்ஸ்” என சொல்ல, கவிதா புன்னகைத்தவுடன் அவன் சென்றான்.

தலைக்கு மேல் தெரிந்த வானம் சுற்றுவதுபோல் இருந்தது கவிதாவுக்கு. என்ன நடந்தது… நடக்கிறது… நடக்கப்போகிறது… என யோசிக்கமுயற்சித்தாலும் முடியாமல் இதயம் வேகமாகத் துடிக்க,

எங்கே அங்கேயே இருந்தால் ஒன்று அழுது விடுவோம் இல்லை தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம் என்றெண்ணியவள்…

“லயா… யு கேரி ஆன். ஐ ஷல் மேக் எ மூவ். அப்பறம் பாக்கலாம்” என சொல்லிவிட்டு, அகிலனைப் பார்க்காமல், பதில் எதிர்பார்க்காமல் அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள்.

கண்ணாடி முன் அவளைப் பார்க்க அவளுக்கே கூச்சமாக இருந்தது. ‘இப்படித் தயாராகி வந்ததெல்லாம் அவனைப் பார்க்கவல்லவா?’ அழுகைத் தொண்டையை அடைத்தது.

‘முடிந்ததா அனைத்தும்? மறுபடியும் ஏமாற்றமா?’ மனதின் அழுத்தம் அதிகரித்தது. நெஞ்சை கிளிக்கும் வலி.

‘அகில் லயாவை விரும்பிகிறானா?’ என நினைக்கும்போதே அது கசந்தது… என்ன செய்தும் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டு, ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தாள்.

கண்கள் தானாகத் தேடியது அகிலனை. தூரத்தில் ஒருவனுடன் அவன் பேசிக்கொண்டிருந்தான். எப்போதும் இருக்கும் மிடுக்குடன் அதே பொலிவுடன்… கண்கள் நிறையப் பார்த்துக்கொண்டாள்.

அவன் பேசிக்கொண்டிருந்தாலும் ‘அவள் வெளிவருவாளா…?’ என பார்ப்பவன் போல, கண்கள் ரெஸ்ட் ரூம் இருந்த இடத்தைத் தொட்டு தொட்டு மீண்டபோது, கவிதா வெளியில் வந்தாள். அவனும் அவளைப் பார்த்தான்.

அவள் சரியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினாள். அதேநேரம் முகவாட்டத்துடன் செல்பவளைப் பார்த்த அஜய் அவள் பின்னே அவசரமாகச் சென்றான்.

அவள் சென்றதையும், அஜய் அவள் பின் சென்றதையும் பார்த்த அகிலன் முகம் முற்றிலுமாக மாறியது…

அவள் எந்த உணர்வையும் அகிலனிடம் வெளிக்காட்டாமல் இருந்ததாலோ என்னவோ அகிலனுக்குத் தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாள் என்பது தோன்றவில்லை போல.

கெஸ்ட் ஹவுஸ் வந்த கவிதாவுக்கு இப்போது அழுகை வரவில்லை.

கட்டிலில் இருந்த தலையணைகளைத் தூக்கி எறிந்தாள். கோவம், ஏமாற்றம், வேதனை, அழுத்தம், எனப் பலவிதமான உணர்ச்சிகள் ஒன்றாய் தாக்க, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்தாள்.

தொண்டை வறண்டது. பாறை போல் உறைந்திருந்தாள். மனது மிகவும் பாரமானது. அஜய் பிரிந்ததபோது ஏற்பட்ட வலியை விட இது பலமடங்கு வலித்தது.

அகிலனை சத்தியமாக அவள் நினைக்கவில்லை AJ’வாக.

அவன் மீதிருந்த நம்பிக்கையா? தன்னைத் தவிர அவன் மனதில் வேறொருவர் வர வாய்ப்பேயில்லை என்ற தப்பான நினைப்பா? இல்லை அவனை வெளிவட்டாரத்தில் எப்படி அழைப்பார்கள் என்று கூடத் தெரியாத அளவிற்கா அவனுடனான தன்னுடைய வாழ்க்கை இருந்தது? எனப் பல கேள்விகள் மனதில் தோன்ற, அது மனதை இன்னமும் வலிக்கச் செய்தது.

தன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் என தாமஸிடம் சொல்லிவிட்டு வந்திருந்ததால், உள்ளேயே இருந்தாள். தலை பாரமானது. இதயம் வேகமாகத் துடிக்க, என்னசெய்வதென்று தெரியாமல் தூக்க மாத்திரை ஒன்றைப் போட்டுகொண்டு அப்படியே படுத்துவிட்டாள்.

எவ்வளவு நேரம் முழித்திருந்தாலோ, நடு இரவில் திடீரென அவள் அறைக்குள் ‘தொம்’ என்ற மெல்லிய சத்தம். தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தாள் கவிதா.

மண்டையில் நல்ல அடி… தேய்த்துக்கொண்டாள். முன் வராத அழுகை இப்போது முட்டிக்கொண்டு வந்தது. உடல் வலி ஒரு பக்கம், மன வலி ஒரு பக்கம்.

‘தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என நினைத்து அழுகை வர, முதன் முதலில் அகிலன் முன் விழுந்தது கண்முன்னே வந்து, அது இன்னமும் அழுகையை அதிகப்படுத்தியது.

———அன்று———

கிழே படுத்து உறங்கிக்கொண்டிருந்த அகிலன், திடீரெனச் சத்தம் கேட்டு, எழுந்தமர்ந்தவன், கவிதாவைப் பார்க்க, அவள் கட்டிலில் இருந்து கிழே விழுந்திருந்தாள்.

இந்தப்பக்கம் படுத்தவள் எதிர்பக்கம் கிழே விழுந்துகிடந்ததை முதலில் பார்த்தவனுக்கு, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவைக்க, கட்டிலுக்கு அந்தப்பக்கம் இருந்த கவிதாவின் கண்கள் மெல்ல கலங்கியது வலியால்.

இவன் சிரிக்கவேறு செய்ததால், அது ஒருவிதமான அசௌகரியத்தைக் கொடுக்க, அவள் கலங்கியதைப் பார்த்த அடுத்தநொடி, பறந்து அவள் அருகில் சென்றான் சிரித்ததற்குத் தன்னைத் திட்டுத் தலையில் அடித்துக்கொண்டு.

“ஹே எப்படி விழுந்த? அடி ஒன்னும் படலயே” எனக் கேட்டுக்கொண்டே அவள் அருகில் செல்ல, அவனை அருகில் வரவிடாமல் கைகாட்டி தடுத்தாள்.

“நான் பாத்துக்கறேன்” என சொல்லிவிட்டு தலையைத் தேய்த்துக்கொண்டு கை முட்டியும் தேய்த்துக்கொண்டே கட்டிலில் ஏறினாள். அப்போது தான் அவனும் கவனித்தான் தலையில் நல்ல காயம்.

வலியை அவள் கண்கள் காட்ட, “எப்படி விழுந்த?” என மறுபடியும் கேட்டான்.

“எல்லாம் தலையெழுத்து. உன்னால தான். நான் தான் பில்லோ கேட்டேனே குடுத்தாயா…?” என தேய்த்துக்கொண்டே அவள் சொல்ல, முதலில் புரியாமல் பார்த்தான்.

அடுத்தநொடி அவசரமாக அவனுடைய தலையணையை அவளுக்குத் தர, அதைப் பிடுங்காத குறையாக வாங்கிகொண்டாள். அவனுக்குச் சிரிப்பு வந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் “எப்பவும் இப்படி விழுவாயா?” என அவளிடம் கேட்க…

“ப்ச், எப்போலாம் ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்’டா இருக்கேனா… அப்போ ரொம்ப புரளுவேன். சைட் பில்லோ இல்லனா விழுந்துடுவேன். ப்ளீஸ் என்ன ஸ்ட்ரெஸ்’னு அடுத்தக் கேள்வி கேட்காத. அதுக்கு காரணம் நீயும் தான்” எரிச்சலுடன் சொல்லி மறுபடியும் தலையைத் தேய்த்துக்கொண்டாள்

முன்னந்தலை சிவந்திருக்க, “நான் ஐஸ் க்யூப் எடுத்துட்டுவரேன்” சொல்லிக்கொண்டே கதவருகே அவன் போகும்போது “அதெல்லாம் வேணாம். ரெண்டு நாள் தூக்கம் சுத்தமா இல்ல. நான் தூங்கறேன்” என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.

படுத்தவுடன் சில நிமிடங்களில் உறங்கியும்விட்டாள். ஆனால் அவனுக்குத் தூக்கம் வந்தால் தானே…? அவள் அருகிலேயே நின்றிருந்தான். அவளைப் பார்த்தவண்ணம்.

அவள் நெற்றி கன்றிப்போய் இருந்தது. அவன் கை அவள் நெற்றி வரை சென்றது… அதை வருடிவிட. ஆனால் செய்யவில்லை. அமைதியாகச் சென்றான் பால்கனிக்கு அமைதியற்ற மனதுடன்…