EUTV 10

10

தனக்கு ஒதுக்கப்பட்ட அறையினுள் அமர்ந்திருந்தவளுக்கு மூச்சு முட்டும் போன்று இருந்தது. அவளது கடந்த கால நினைவுகளே அவளை ஆழம்பார்த்துக்கொண்டிருந்தது. இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நின்ற நாளை அவளது மூளை நினைவு மீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது.

“மலர்…”

“என்னங்க சித்தி?”

“விடிஞ்சா கல்யாணம்… இன்னும் தூங்காம இங்கே என்ன செய்யுற? போய் தூங்கு ஒடு…” என்று மணமகள் அறையிலிருந்த பால்கனியில் நின்று இருண்ட வானத்தை வெறித்துக்கொண்டிருந்தவளை பார்த்து அதட்டினார் அவளது சித்தி கண்ணகி.

“சரிங்க சித்தி…” என்றவள் அறையினுள் நுழைய, அங்கிருந்த கட்டிலில் ஒருவருக்கொருவரை இறுக்கமாக கட்டிக்கொண்டு உறங்கிய கார்த்திகா, ஈஸ்வரி, ஷிவானியை பார்த்து சிரித்தவள் கீழே விரித்திருந்த பாயில் படுத்துக்கொண்டாள். அவளுக்கு அருகில் வந்து அவளது சித்தியும் படுத்துக்கொண்டார்.

சில வினாடிகளில் அவர் உறங்கியும் போய்விட மலருக்கு உறக்கம் வருவேனா என்றது. அவளுக்கு இந்த திருமணத்தில் துளிக்கூட விருப்பம் இல்லை. அவளுக்கான லட்சியம் கனவு என்று நிறைய இருக்கிறது. அதை அடைய வேண்டும் மலர்விழி சிவராமனாக.

கணிதன் தனது கனவுக்கு துணை நிற்பானா மாட்டானா என்பதெல்லாம் அவளுக்கு தேவையில்லாத ஆணி. அவன் எதற்கு துணை நிற்கவேண்டும். என் கனவு என்னை சார்ந்தது தானே அதை தான் தானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அவன் யார் என்பது போன்று தான் அவளது எண்ணப்போக்கு இருந்தது. அதனால் தான் தன் கனவை அடையும்வரை திருமணம் வேண்டாம் என்று இருந்திருந்தாள்.

திருமணத்திற்கு பிறகு சாதித்துக்கொள்ளாலாமே என்றால் அப்பொழுது அவளது வெற்றிக்கு காரணம் ஒரு ஆண் என்று ஆகிவிடும். அதுவும் கணிதன் குடும்பம் மாதிரி ஒரு குடும்பத்தில் இருந்துக்கொண்டு சாதித்தால் ஜோசப் குடும்பத்து பெண் என்ற அளவில் மட்டுமே முடிந்துவிடும். அங்கு அவளோ அவளது அப்பாவோ ஏன் அவளது குடும்பமே இரண்டாம் பட்சமாகி விடும்.

பிறந்ததிலிருந்து வளர்ந்த தந்தையை விட தான் வாழ்க்கையில் வரப்போகிற கணவன் பெரிய இடத்தை பிடித்துவிடுவான். அந்தப்பெண் சாதித்தற்க்கே அவன் தான் காரணம். அவன் பெரிய தியாகி அது இது என்று அவன் புகழப்படுவர். தனது திறமையிலோ தனது இத்தனை வருட வளர்ப்பிலோ சம்மந்தமில்லாத ஒருவன் பெயர் வாங்குவதை அவள் விரும்பவில்லை.

 

இவ்வாறு மலர்விழி நினைத்திருக்க அவளது தந்தை அவளிடம் ஒரு வார்த்தை கேட்காமலே இந்த திருமணத்திற்கு சரியென்றுவிட மலர்விழி மனதளவில் மிகவும் அடிப்பட்டு போனாள்.

இத்தனைக்கு பிறகும் தன் தந்தையிடமும் பேச முயற்சித்தவளை எப்பொழுதும் போன்று அவளை பேசவிடாமலே அவரே மலர்விழிக்கு இதுதான் பிரச்சினை என்று ஊகித்து அதற்கு தீர்வும் கொடுத்து அனுப்பி விட ச்சீ என்றாகிபோனது. அந்த நொடிகளில் நிஜமாகவே தனது தந்தையை கொல்லும் ஆத்திரமே மலர்விழிக்கு வந்துவிட்டது.

அடுத்து அந்த வீணாப்போன கணிதனிடம் பிடிக்கவில்லை என்று சொன்னால் அவனோ அதை கண்டுக்கொள்ளக்கூடவில்லை. என்ன மனிதர்கள் இவர்கள் என்று தான் அவளுக்கு தோன்றியது.

மணி ஒன்று என்று மிகக்குறைந்த ஒலியில் மலர்விழியின் அலைப்பேசி சத்தம் எழுப்பவும் எடுத்து அதை அணைத்தவள் தான் போட்டிருந்த சுடிதாருக்கு மேல் ஒரு துப்பாட்டவை எடுத்து முகம் தெரியாதவாறு பொத்திக்கொண்டவள் தாழ்ப்பாள் போடாமல் இருந்த கதவை திறந்து யாருக்கும் தெரியாமல் மண்டப்பத்திலிருந்து வெளியே வந்திருந்தாள்.

பகலவன் யாருக்கும் காத்திருக்காமல் தனது வேலையை செவ்வனவே செய்ய ஆரம்பித்தான். முகூர்த்தம் பத்துமணிக்கு தான் என்பதால் ஆறு மணிப்போல் தான் அனைவரும் எழுந்திருந்தனர்.

பெண் காணவில்லை என்ற விசயம் ஆறரைக்கு அனைவருக்கும் காட்டுதீயாக பரவியது.

 ஜோசப் வில்லாவிலிருந்து மண்டபம் மிக அருகில் தான் என்பதால் தங்களது வீட்டிலே இருந்த கணிதனின் வீட்டிற்கும் விசயம் சொல்லப்பட மொத்த குடும்பமே அதிர்ந்தது.

ஏன்?எதற்கு? என்ற ஆயிரம் கேள்விகள்… யாருக்கும் விடைத்தான் தெரியவில்லை. அனைவரது பார்வையும் மனம் கவர்ந்த பெண்ணுடன் திருமணம் என்பதில் முகத்தில் லிட்டர் கணக்கில் வெட்கமும், கர்வமும் போட்டிபோட விடிந்ததிலிருந்து கால் ஒயாமல் சுற்றிக்கொண்டிருந்த கணிதன் மீது தான் பதிந்தது.

இந்த செய்தியை கேட்டவுடன் முகமெல்லாம் கோவத்திலும் அவமானத்திலும் சிவந்து அகோரமாக காட்சியளித்தான் கணிதன். அவனது மனநிலை என்ன என்பதை அவனாலே விளக்கமுடியவில்லை.

மலர்விழி வேண்டாம் வேண்டாம் என்றபொழுது கண்டுக்கொள்ளாத தனது மடத்தனத்தை வெறுத்தான்.

அவள் தனக்கில்லை என்ற வலியைவிட  அவள் ஒடிப்போனதால்  தனது பெற்றவர்களும் தனது குடும்பமும் பட்டுக்கொண்டிருக்கும் அவமானம் தான் கணிதனைக் கொன்று தின்றது. பெரிதாக தாக்கியது அப்பொழுது.

அந்த நிமிடம் கணிதனின் மனதிலிருந்த மலர்விழியின் மீதான அத்துணை அன்பும், ஆசையும், விருப்பமும் வெறுப்பாக மாறியது. மலர்விழி செய்த காரியம் அவனின் ஆண் என்ற ஈகோவை பயங்கரமாக சொரிந்து விட்டிருந்தது.

வெளியில் காண்பித்துக்கொள்ளாவிட்டாலும் கணிதனுக்கு தான் என்ற அகங்காரம் அதிகம். படிப்பு, அழகு, திறமை, பணம், குணம், பிறந்த இடம், வம்சம் என்று அனைத்திலும் ஒங்கி உயர்ந்திருக்கும் தன்னை ஒரு பெண் அதிலும் மலர்விழியை போன்ற ஒரு பெண் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும் என்று தான் கணிதன் ஆழமாக நம்பியிருந்தான்.

அந்த அகங்காரம் தான் மலர்விழி மறுத்த பொழுது உளறுகிறாள் என்று எடுத்துக்கொள்ள தூண்டியது.

அனைத்து இந்திய சராசரி ஆண்களை போன்று இவனும் திருமணம் முடிந்தால் பெண் அடங்கிவிடுவாள் தன்னிடம் சரணாகதி அடைந்துவிடுவாள் என்று நினைத்திருந்தான்.

    ஆண்கள் கோர்ட் சூட் அணிந்து ஐபோனில் சுவிக்கி ஆப்பில் பீட்சா ஆர்டர் செய்து ஜிபே யில் அதற்கு பணம் செலுத்திவிட்டு நெட்பிளிக்ஸ்ஸில் “ஐ ஆம் ஆல்ரெடி ப்ரோக்கன்” என்று தாமஸ் ஷெல்பி சொல்வதை ரசித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் மனதளவில் இன்னும் ஆடையில்லாமல் விலங்குகளை வேட்டையாடி தின்றுக்கொண்டிருந்த காட்டுவாசிகள் தான்.

 மண்டபத்தில் நிலைமையோ மிகவும் பதட்டமாக இருந்தது. ஒருபுறம் வருபவர்களிடம் திருமணம் நின்றுவிட்டது என்பதைக்கூறி திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர் மலர்விழியின் சித்திமார்கள்.

காணாமல் போயிருந்த மலர்விழியை தேடி  கார்த்திகாவின் அப்பாவும் ஈஸ்வரியின் அப்பா மற்றும் அவளது அண்ணன்களும் சென்றிருக்க சிவராமன் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

ஷிவானியின் தந்தை மண்டபக்கரார்களிடம் எதுவோ பேசிக்கொண்டிருந்தார். ஈஸ்வரி, கார்த்திகா, ஷிவானி மூவரும் மணமகள் அறையிலே அமர்ந்திருந்தனர்.

அவளைப்பற்றி அவளது தோழிகளிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். மலர்விழி அவளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பற்றி அவளது சகாக்களிடம் மூச்சுக்கூட விடவில்லை என்று அவர்களுக்கு புரிந்தது.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அறைக்குள் நுழைந்த ஷிவானியின் தாய் புவனா மூவருக்கும் சட்டுசட்டென்று அடியை கொடுத்துவிட்டு தான் பேசவே ஆரம்பித்தார்.

“சொல்லுங்க டி? உங்களுக்கு தெரியாம அவ எதுவும் பண்ணமாட்டா… நீங்க நாலு பேரும் கூடி கூடி பேசும் போதே எனக்கு தெரியும் டி… குடும்ப மானத்தை இப்படி குழி தோண்டி புதைச்சிட்டீங்களே டி. வாழவேண்டிய வயசுல வாழாம அவ ஒருத்தி தான் உலகம்னு திரிஞ்ச மனுசனை இப்படி ஒய்ஞ்சு உக்கார வைச்சிட்டாலே டி… அவ எல்லாம் நல்லா இருப்பாளா???”

“சொல்லுங்க டி வேற யாரையாச்சும் அவ விரும்புனாளா டி?” என்று கேட்டவர் தன் மகளின் முதுகில் ஒரு பெரிய அடியாக வைத்தார்.

“அம்மா என்னயவே ஏன் மா அடிச்சிட்டு இருக்க? எனக்கு ஒன்னும் தெரியாது. அக்காக்கு கார்த்தியும் ஈஸ்ஸூம் தானே கிளோஸ்… நான் இவளூக பேசும் போது இடையில போனாலும் சின்ன பிள்ளைன்னு பத்திவிட்டுறுவாளுக…” என்று அடிதாங்கமுடியாமல் இருவரையும் கோர்த்துவிட்டாள் ஷிவானி.

‘குள்ளகுரங்கே…’ என்று அவளை முறைத்தவர்கள் புவனாவிடம் அடி வாங்கமுடியாததாலும் மலர்விழி இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என்ற பயத்திலும் கணிதனை சந்தித்து வேண்டாம் என்றது அதற்கு முன்பே கணிதன் மலர்விழியின் ஆசிரியர் என்பதையும் இவளுக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று அனைத்தையும் ஒப்பிக்க,

இவ்வளவு தெரிந்தும் தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்று மூவருக்கும் நன்றாக அடியை போட்டவர் அத்தனையும் தனது மச்சான் அதாவது மலர்விழியின் தந்தை சிவராமன் மற்றும் இவரது கணவன் அதாவது ஷிவானியின் தந்தை கார்த்திக்கேயனிடமும்  ஒன்றுவிடாமல் ஒப்பித்தார்.

அனைத்தையும் கேட்ட சிவராமன் அமைதியாகவே அமர்ந்திருந்தார் ஒன்றுமே பேசவில்லை. அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று யாருக்குமே புரியவில்லை.

கார்த்திக்கேயன் சும்மாவே மிகவும் கோவக்காரர் மலர்விழி இவ்வளவு செய்திருக்கிறாள் என்று தெரியவுமே அவளை அடித்து நொறுக்கும் ஆத்திரத்துடன் நின்றிருந்தார்.

தன் தமையன் இளமையிலிருந்தே எந்த ஆனந்தத்தையும் அனுப்பவிக்காதவர். படிப்பு மீது அலாதி காதலிருந்தும் தங்களது தந்தை ஒரு விபத்தில் சிவராமனின் பதினைந்தாவது வயதிலே இறந்துவிட தலைமகனாக குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு படிப்பை பாதியிலே விட்டுவிட்டு தனக்கு ஒவ்வாத பலபணிகளை செய்தவர்க்கு குடும்பத்தை முன்னேற்ற வேறு வழியே இல்லாததால் பதினெட்டு வயதில் இந்திய இரானுவத்தில் சேர்ந்து தம்பிகளை படிக்கவைத்து தங்கைக்கு மணம் செய்து வைத்து தனது கடமைகளை முடித்துவிட்டு இருபத்தொன்பது வயதில் மலர்விழியின் தாயை மணம்முடித்தார். அதற்கு பின்பும் அவர் நன்றாக வாழ்ந்தாரா என்றால்? இல்லை. பூஞ்சை உடம்புகாரியான மலர்விழியின் தாயார் சிவகாமிக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாது போய்விடும்.

விடுமுறையில் வந்த பொழுதும் அந்த பெண்ணிற்கு மருத்துவசெலவு பார்க்கவே நேரம் சரியாகி போய்விடும். மருந்துகளின் உபயத்தால் காலத்தை தள்ளிக்கொண்டிருந்தவரும் ஒரு நாள் இறந்துவிட்டார். அடுத்து வேறொரு திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றுஅவர்கள் அனைவரும்  எவ்வளவோ வற்புறுத்தியும் அசைந்துகொடுக்கவில்லையே…

மலர்விழிக்காகவே தனது வாழ்க்கையை கழித்தார். மலர்விழி எவ்வளவு சுட்டிதனம் செய்தாலும் இதுவரை ஒரு அடி கூட அடித்தது இல்லை. மிக நிதானத்துடன் தான் அவளை கையாண்டார். இந்த வரன் அமைந்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்.

தன் காலத்திற்கு பிறகு அவள் சந்தோஷமாக இருப்பாள். அவளது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று இருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் சிவராமன் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாதவர் என்றாலும் இந்த திருமணத்தில் அந்தளவு மகிழ்ச்சி என்பதை தன்னிடமே எத்தனை தடவை கூறினார். இப்படி செய்துவிட்டாளே என்று சிவராமனுக்காக வருந்தினார் கார்த்திக்கேயன்.

“கார்த்தி வாப்பா… அந்த பையன் வீட்டுக்காரங்க இங்கே வந்து சத்தம் போடுறதுக்குள்ள அங்கே போய் நாம பேசிட்டு வருவோம்…” என்று சிவராமன் அழைக்க அதுதான் கார்த்திகேயனிற்கும் சரியென்று பட தனது அண்ணனுடன் கிளம்பினார்.

அவர்கள் அங்கு கிளம்ப போவதை பார்த்த ஷிவானியின் தாயாருக்கு சட்டென்று அவரது மூளையில் ஒரு பல்ப் ஏறிய உடனே அதை மண்டபத்தின் வாசலை அடைந்த கார்த்திக்கேயன் காதிற்குள் போய் சொல்லிவிட்டிருந்தார்.

அதை கேட்ட கார்த்திக்கேயன் அவரை பயங்கரமாக முறைத்தார்.

“ஐடியா நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லுங்க… அதுக்கு ஏன் உங்க சொத்தை எழுதிக்கொடுங்கன்னு கேட்ட மாதிரி முறைக்குறீங்க…” என்றவாறு அவர் நகர்ந்துவிட கார்த்திக்கேயன் தன் தலையில் அடித்துக்கொண்டார்.

“என்ன கார்த்தி?”

“ஓன்னுமில்லை அண்ணா… வாங்க…” என்றவர் தன்னுடைய புல்லட்டை எடுத்துவர சிவராமன் அமர கார்த்திக்கேயன் ஜோசப் வில்லாவை நோக்கி வண்டியை விட்டார்.

ஜோசப் வில்லாவிற்குள் நுழைந்தவர்களை யாரும் வாங்கள் என்று அழைக்கவில்லை. இத்தனைக்கும் விஜயேந்திரன் மற்றும் ரிஷிபனை தவிர மொத்த குடும்பமும் வரவேற்பறையில் தான் அமர்ந்திருந்தனர்.

சிவராமனின் பார்வை தன் மகளுக்கு மணமகனாக நினைத்திருந்த கணிதனை நோக்கி சென்றது வீரேந்திரன் தோளில் கைப்போட்டு அணைத்திருக்க இவர்களேயே வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான் அவன்.

அந்த சூழ்நிலை மிகவும் அபாயகரமானதாக தோன்றியது கார்த்திக்கேயனுக்கு. யாராவது தவறாக ஒரு வார்த்தை விட்டாலும் தனது அண்ணனுக்கு எந்த மாதிரி அசிங்கமாகி விடும் என்பதை நினைத்து கார்த்திக்கேயன் ஒரு பயத்துடன் தான் நின்றிருந்தார்.

அந்த பயம் என்பது தான் மதிக்கும் ஒரு நபர் யாரோ மூன்றாம் நபரிடம் தலைகுனியப் போகிறார் என்பதை நினைத்து அதை காண சகியாமல் நெஞ்சில் ஏற்படும் அதிர்வலை.

அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க தனது அண்ணன் அவர்கள் முன்பு நின்றுக்கொண்டிருப்பதே அவருக்கு என்னவோ செய்தது. மிகவும் கோவமாக வந்தது. அனைத்தையும் அடக்கி கொண்டு நின்றிருந்தார்.

வீட்டிற்கு மூத்தவராக தினகரன் ஏதாவது பேசுவார் என்று சுதாகரன் அவரது முகத்தை பார்க்க அவர் எதுவும் பேசாமல் இறுக்கமாக அமர்ந்திருக்க சுதாகரன் பேச ஆரம்பித்தார்.

“சிவராமன் எங்களுக்கு இப்ப எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியலை. எதாவது கோவத்தில தகாத வார்த்தைகள் பேசிருவோமோன்னு எங்களுக்கே பயமாக இருக்கு. ஏற்கனவே எங்க தகுதிக்கு கொஞ்சமும் இணையான இடத்தில பொண்ணு கேட்டு போகாம உங்களை மாதிரி ஆளுங்க கூட சம்மந்தம் பேசப்போய் இப்ப இந்த நிலையில் நிற்குறோம் இதுவே எங்களுக்கு ஒரு சிறந்த பாடம் தான்.” அனைவரும் அவர் பேசுவது சரி என்பதைப்போன்று எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

கார்த்திகேயனிற்கு தான் பத்திக்கொண்டு வந்தது. இவர்களிடம் தாங்களா பொண்னு கட்டி தருகிறோம் என்று கெஞ்சினோம். நீங்கள் பெரிய இது என்றால் அது உங்களுடன் வைத்துக்கொள்ளுங்களேன் டா என்பதை போன்று பார்த்தவர் தனது அண்ணனின் முகத்தைப்பார்த்தார்.

அதில் எந்த உணர்வும் இல்லை. எப்பொழுதும் போன்று தான் இருந்தது.

“ம்ம்… எங்களுக்கு எல்லாம் புரியுது சார்… உங்களை மாதிரி தகுதி வசதி வாய்ப்பு வாய்ந்த குடும்பம் வந்து மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்ப பெண்ணை கட்டிதாருங்கள் என்று வாசலில் வந்து நிற்பிர்கள் என்று நாங்க கனவு கூட கண்டது இல்லை சார். ஆனால் இன்னைக்கு இப்படி நடந்தது யாருமே எதிர்ப்பார்க்காதது அதனால் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்து இருக்கோம் சார்…” என்று சிவராமன் கூற தன் அண்ணனா கொக்கா என்றாவாறு மின்னிய கண்களுடன் பார்த்தார் கார்த்திக்கேயன்.

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது “அம்மாடி விஜயா…” என்ற வார்த்தையுடன் நுழைந்தார் ஒருவர். அவர் வெள்ளை வேட்டி சட்டை மினுமினுங்க அகல நெற்றியில் பட்டை துளங்க சினிமாக்களில் வரும் ஹை ப்ரொபைல் வில்லன் போன்று இருந்தார்.

அவரை பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ந்து எழுந்து நின்றவாறு ஆதித்யனை பயத்துடன் பார்த்தனர்.

அவனோ நன்றாக சாய்ந்தமர்ந்து அவரை தான் கூர்மையாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தனது சகோதரி விஜயாவிடம் சென்றவர் அவரது கையை பிடித்துக்கொண்டார்.

“அண்ணா நீங்க இங்கே என்ன பண்றீங்க?”

“நான் என்ன பண்றேனா? ஒன்னுக்கு ரெண்டு என் குலதெய்வங்களை இங்கே கட்டி கொடுத்திருக்கேன். என் தங்கச்சி அப்புறம் மகள் வீட்டில பிரச்சினைன்னா இந்த திரவியம் வர மாட்டேனா? ஏதுக்கு வந்து இருக்கன்னு கேட்குற? உன் மகன் மாதிரியே உனக்கும் புத்திக்கெட்டு போச்சு போல…” என்றவர் ஆதித்யனை நக்கலாக பார்த்துவைக்க அவன் அதைவிட நக்கலாக அவரை பார்த்தான்.

“மிஸ்டர் திரவியம் உங்களை இங்கே யாரும் அழைக்கலையே… திறந்து கிடக்க வீட்டுக்குள்ள வரதுக்கு பெயர் என்னன்னு உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்குறேன்.” என்று குரலில் மிதமிஞ்சிய நக்கல் தெறிக்க கூறினான் ஆதித்யன் ஜோசப்.

விஜயா தனது மூத்தமகனை ப்ளீஸ் என்பதைப்போன்று பார்க்க அவன் அமைதியாகிவிட்டான்.

அந்த திரவியமோ எதையும் கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. அப்பொழுது தான் அவர் கார்த்திக்கேயனையும் சிவராமனையும் கவனித்தார்.

அவருக்கு இந்த வீட்டில் நடக்கும் அத்தனையும் தெரிந்துதான் இருந்தது. அதனால் இவர்கள் இருவரும் யாரென தெரிந்திருக்க தகாத வார்த்தைகளை விட ஆரம்பித்தார்.

“என்ன யா நீ பொண்ணு வளர்த்து வைச்சிருக்க? கல்யாணத்தனைக்கு ஒடி போயிருக்கா?”

சிவராமனால் எதை வேணாலும் தாங்கி கொள்ள முடியும். தன் பெண்ணை பேசுவதை எப்பொழுதுமே பொறுத்துக்கொள்ள முடியாது.

“வார்த்தையை அளந்து பேசுங்க… தேவையில்லாதது பேச வேணாம். எங்களால எற்ப்பட்ட நஷ்ட ஈடு எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்போம்.”

“ஓஹ்… எங்களுக்கு காசு கொடுக்குற அளவுக்கு நீ அவ்வளவு பெரிய ஆளா நீ. மாசம் ஐஞ்சுக்கும் பத்துக்கும் அலையுற உனக்கு இவ்வளவு திமிரா? நான் யாருன்னு தெரியும்ல? என் மச்சான்கள் தொழில் என்னனு தெரியும்ல? பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பு இல்லை . எவனையோ இழுத்துட்டு ஒடிட்டா? மனசுக்கு பிடிச்சவன் எவன்னு பார்த்து கட்டிக்கொடுக்க வேண்டியது தானே யா?”

“மாமா தேவையில்லாததை பேசாதீங்க…” என்று அந்த நிலையிலும் மலர்விழியை வேறொருவனுடன் சேர்த்து பேச விடவில்லை கணிதன்.

கார்த்திக்கேயனுக்கு கோவம் எல்லையை கடந்துக்கொண்டிருந்தது. என்ன தான் இருந்தாலும் தங்களது வீட்டு பெண்ணை தனது அண்ணனை இவர்கள் பேசுவது பிடிக்கவில்லை.

“இங்கே பாருங்க… எங்க வீட்டு பொண்ணு உங்க பையன் கிட்ட இந்த கல்யாணம் வேணாம் நிற்பாட்டிருங்கன்னு சொல்லி கேட்டு இருக்கு… அப்படிபட்டதை உங்க பையன் எங்ககிட்ட சொல்லவே இல்லை. அது தெரிஞ்சு இருந்தா கூட நாங்க இந்த கல்யாணத்தை நிற்பாட்டி இருப்போம்…” என்று கார்த்திக்கேயன் கூறிவிட அனைவரது பார்வையும் கணிதனை நோக்கி குவிந்தது.

ஒரே எட்டில் கணிதனை அடைந்த விஜயா “கணி அவங்க சொல்றது எல்லாம் உண்மையா? அந்த பொண்ணு உங்கிட்ட வந்து வேணாம்னு சொல்லுச்சா?”

“அ…ம்மா… நான் ஏதோ விளையாட்டுக்கு…”

“கணி ஆமாம் இல்லைன்னு மட்டும் சொல்லு…”

“ஆஆஆ…மாம் மா….” என்று கணிதன் கூறி முடிக்கும் முன்பு அவனை ஒங்கி அறைந்திருந்தார் விஜயா.

“ச்சீ… உன்னை அப்படியா டா நான் வளர்த்தேன். ஒரு பொண்ணு உங்கிட்ட வேணாம்னு சொல்லியும் நீ இவ்ளோ பண்ணி இருக்க. அவளை ஒடிப்போக தூண்டியிருக்க. அந்த பொண்ணும் அவங்க குடும்பமும் இப்ப அசிங்கப்பட்டு நிற்க நீ மட்டும் தான் காரணம் கணி. உனக்கும் வேணாம்னு சொன்னதுக்காக பொண்ணுங்க முகத்துல ஆசிட் அடிக்குறவனுக்கும் என்ன வித்தியாசம்… ச்சை இனி என் மூஞ்சியில முழிக்காதே. என் கூட பேசாதே… என் வளர்ப்பையே அசிங்க படுத்திட்டேயே டா…ச்சீய்… உன்னை என் பையன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு…” அங்கிருந்த அனைவரும் அவரை அதிர்ந்து போய் பார்த்தனர்.

சிவராமனும் கார்த்திக்கேயனும் கூட இதை எதிர்ப்பார்க்கவில்லை. ஆதித்யன் நிலைமையை சமாளிக்க வர அதற்குள் அவனுக்கு முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது.

திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக வர இருந்தவருக்கு திருமணம் நின்றுவிட்டது என்ற செய்தி அவரின் காரியதரிசி மூலம் கடத்தப்பட அதை விசாரிக்க அழைத்திருந்தார்.

சட்டென்று அவரது அழைப்பை எடுத்தவன் தோட்டம் பக்கம் சென்றிருந்தான்.

தனது பாசமிகு அண்ணன் அவனை பொறுத்த வரை எந்த தவறும் செய்யாத அண்ணன் அடி வாங்கியது வீரேந்திரனுக்கு பயங்கர கோவத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணமான கார்த்திக்கேயனை நோக்கி சென்றிருந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது சட்டையை பிடித்திருந்தான்.

இனி வருங்காலத்தில் அவரது பெண்ணை கட்டுவதற்காக அவரது காலைபிடிக்க வேண்டிய நிலை வரும் என்பது தெரிந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டானோ என்னவோ?