EUTV 12

12

சிவராமன் சம்மதித்ததை இன்னுமே அவளால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பே தந்தை என்றால் உயிரை விடுபவளுக்கு இப்பொழுது தந்தையை மிகவும் பிடித்து போய்விட்டது.

இருக்கும் எல்லா சமூகவலைதளங்களிலும் பாடுவதற்கும் ஆடுவதற்காகவுமே ஒரு கணக்கு ஆரம்பித்தவள் அனைத்திலும் பாடியும் ஆடியும் காணொளி போட ஆரம்பித்தாள்.

சிறுவயதில் அவளுக்கு நாட்டியம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை சந்தித்து மீண்டும் விட்டதிலிருந்து பழகினாள். இப்படி பரப்பரப்பான சூழலில் கணிதன் என்று ஒருவன் இருந்ததையே மலர்விழி மறந்து போயிருந்தாள்.

சுற்றுப்புறத்தார் அனைவரும் இவளது சித்திகள் மற்றும் அத்தைகளின் வாய்களுக்கு பயந்து இவளிடம் வம்பு வைத்துக்கொள்ளவில்லை.

ஏற்கனவே தன்னுடைய பதினான்கு வயது வரை நடனம் பழகி இருந்ததால் ஒரு வருட கடுமையான பயற்சிக்கு பிறகு தன்னுடைய மற்றும் தன் தாயின் கனவான அரங்கேற்றத்தை செய்தாள் மலர்விழி.

தன் தாய் தன்னை பார்த்து சந்தோஷப்படுவார் என்று நினைத்து இவளும் மிகவும் சந்தோஷப்பட்டாள். அடுத்து அந்த வருடத்திற்கான பிரபல தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சி ஆரம்பிக்க அதற்கு நடந்த தேர்வில் கலந்துக்கொண்டு டாப் 50தில் தேர்வானாள்.

தன்னுடைய குறும்பு செயல்களாலும் அடப்பாவி குணத்தாலும் எக்ஸ்ட்ரா கியூட்னெஸ் மற்றும் தனது கிச் கிச் குரலாலும் பயங்கர பிரபலமடைந்தாள் மலர்விழி.

அங்கு உடன் போட்டி போடும் கார்த்திக் என்பவனுடன் இவளுக்கு ஒரு ரொமாண்டிக் ட்ராக் விட அது தமிழ்நாட்டையே கலக்கியது.

எங்கு திரும்பினாலும் மலர்விழி கார்த்திக் தான். இன்ஸ்டா விற்குள் நுழைந்தால் இவர்களது ராஜ்ஜியம் தான்.

இப்படி வாழ்க்கையே வண்ணமயமாக சென்று கொண்டிருந்த பொழுது தான் ஒரு நாள் நடு இரவில் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

எடுத்து காதில் வைத்தவளுக்கு ஏன்டா இந்த அழைப்பை எடுத்தோம் என்று ஆகியது.

“ஹலோ… யாருங்க?”

“உனக்கு நிம்மதியான தூக்கம் வருதா டி? நான் தூங்கி முழுசா ஒரு வருசம் ஆச்சு டி.” என்ற குரலில் அவளுக்கு யாரென்று தெரிய இதயம் வேகமாக துடித்தது. தனதறையில் இருந்த நாள்காட்டியை பார்த்த பொழுது தான் தெரிந்தது.

அது போன வருடம் இவளுக்கும் கணிதனுக்கும் திருமணம் நடக்கவிருந்த நாள் இன்று. அதை இவள் மறந்தே போயிருந்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். அவளால் அழைப்பை அணைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

“பதில் சொல்லு டி. நான் உனக்கு என்ன பாவம் டி பண்ணேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு சாபத்தை கொடுத்த? வாழ்க்கையே நெருப்புன்ற கடலுல நீந்துற மாதிரி இருக்கு டி… யுவர் வாய்ஸ்….” என்று எதுவோ கூற வந்தவன் பாதியிலேயே அழைப்பை அணைத்திருந்தான்.

அன்றைய இரவு தூக்கமே போய்விட்டது மலர்விழிக்கு. கணிதன் எப்படிப்பட்ட ஆண்மகன். அவனது குரலில் இருந்தே தெரிகிறது அவன் குடித்திருக்கிறான் என்பது. கணிதன் இப்படியான ஆள் கிடையாதே. தன்னளவில் சரியாக இருந்த விடயம் அவனுக்கு எவ்வளவு பாதகத்தை கொடுத்துள்ளது என்று மலர்விழியின் மனம் அவனுக்காக வாதிட விடியும் வரை அமைதியாக இருந்தவள் விடிந்தவுடன் இரவு வந்த எண்ணிற்கு அழைத்தாள்.

சிம் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வந்தது. சமூக வலைதளங்களில் தேட அத்தனையிலும் அவளை பிளாக் செய்திருக்கிறான் என்பது கார்த்திகாவின் கணக்கில் இருந்து பார்த்த பொழுது தான் தெரிந்தது.

இன்ஸ்டாவில் புதுக்கணக்கு ஆரம்பித்து பாலோ ரிக்வெஸ்ட் கொடுத்துவிட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டு ஒரு செய்தியை தட்டிவிட்டுவிட்டு காத்திருக்க அவன் அதை பார்க்கவும் இல்லை. அவளது ரிக்வெஸ்ட்டை அங்கிகரிக்கவும் இல்லை. நன்றாக உற்று கவனித்துபார்த்தால் அவன் இந்த சமூகவலைத்தளங்களில் புழங்கியே பல மாதங்கள் ஆகியிருந்தது.

மலர்விழியை குற்றவுணர்வு பிய்க்க அவன் வேலைப்பார்த்த கல்லூரிக்கு சென்று பார்த்தால் அவன் வேலையை விட்டு நீங்கி ஒரு வருடம் ஆகிருந்தது. இந்த விசயம் தெரிந்தபொழுது அவளது குற்றவுணர்வு இன்னும் அதிகரிக்க தான் செய்ததை தவிர குறையவில்லை.

இப்படியே ஒரு மாதம் ஒட்டியவளுக்கு அந்த பாடல் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் வர அதில் வெற்றிப்பெற கவனத்தை செலுத்தியவளுக்கு எப்பொழுதும் போன்று கணிதனின் நினைவுகள் பின்னுக்கு சென்றிருந்தது. அதில் அவள் ஜெயிக்க முடியாமல் இரண்டாம் இடம் தான் பெற்றிருக்க அந்த வருத்தமே பெரிய வருத்தமாக இருந்துவிட கணிதனை முற்றிலும் மறந்தே விட்டாள் பெண்.

அடுத்து நான்கைந்து மாதங்கள் அந்த சானலில் நடந்த எல்லா நிகழ்ச்சியிலும் மூஞ்சை காட்டுவது என்ற மாதிரி வாழ்க்கை போய்க்கொண்டிருந்த பொழுது அவளுக்கு ஒரு ஆபர் வீடு தேடி வந்தது.

பிரபல யூட்யூப் சேனலில் ஒளிப்பரப்ப இருக்கும் வெப் சீரிஸில் ஒரு பாடல் இவள் பாட வேண்டும் என்று கேட்க திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் மாதிரி என்ற பழமொழிக்கேற்ப வீடு தேடி வந்த வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று அதில் பாடிக்கொடுத்தாள்.

அந்த வெப்சீரிஸ் சூப்பர் டூப்பர் வெற்றி. இவளது பாடலும் அனைத்து வாட்ஸாப் ஸ்டேடஸ்களிலும் இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் போட்டு தேய்க்கப்பட மலர்விழி ஹாப்பி அண்ணாச்சி…

அதற்கு பிறகு மீண்டும் ஒரு நான்கு மாத இடைவேளை. அதற்கு பிறகு ஒரு வாய்ப்பு அதுவும் பெரிய வாய்ப்பு  இளசுகளின் மனம் கவர்ந்த யாதவ் கிருஷ்ணாவின் மறுதிரை பிரவேச படத்தில் பாடும் வாய்ப்பு. பாடல் மீண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்.

அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. காற்றிலுள்ள போதே தூற்றிக்கொள் என்பதைப்போன்று வந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டாள்.

அப்படியே இரண்டு வருடம் ஒடிவிட ஒரு இசைஜாம்பவானின் இசை நிகழ்ச்சி கேரளாவில் வைக்கப்பட்டிருக்க அதில் பாடல் பாடுவதற்காக மலர்விழியும் இங்கு வந்தாள்.

வந்த இடத்தில் தான் திருநெல்வேலியில் இருந்து ஆகாஷை அங்கிருந்த தன் நண்பர்களின் உதவியுடன் இங்கு அழைத்து வந்தது.

சைக்லோன் மற்றும் கொரானாவின் தீவிர பரவலால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்க ஆகாஷ் அமெரிக்கா செல்லும் வரை அவனுக்கு துணை இருப்பதாக முடிவெடுத்து கேரளாவில் இருக்க முடிவு செய்தாள் மலர்விழி.

இவ்வாறு மலர்விழி நினைத்து முடிப்பதற்கும் கணிதன் அவளது அறைவாயிலில் வந்து நிற்பதற்க்கும் சரியாக இருந்தது.

அறைக்கதவை தட்டிவிட்டு உள்நுழைந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள் மலர்விழி.

தனது கையிலிருந்த தட்டை அவளிடம் நீட்டியவன் “சாப்பிடு…” என்றான்.

அவளோ தட்டை கையில் வாங்காமல் கணிதனை திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எஸ் கியூஸ் மீ… மலர்விழி…” என்று அவளது முகத்திற்கு முன்பு தனது வலக்கரத்தை ஆட்ட மலர்விழி என்னும் சித்திரத்துக்கு உயிர் வந்தது.

“என்ன? என்ன?”

“ம்ம்… சுரைக்காய்க்கு உப்பு இல்லை. பெக்கபெக்கன்னு முழிக்காம சாப்பிடு மா. இங்கே இன்னும் நீ குறைஞ்சது ஒரு வாரமாவது இருக்கனும். அதுவரை இங்கே அன்னம் தண்ணீ குடிக்காம பட்டினியா கிடந்து செத்து உங்க அப்பா எங்க மேல கேஸ் போடவா? தண்ணீர் கூட கொடுக்காம என் மகளை கொல்ல பார்த்தாங்கன்னு?” என்று கணிதன் கோவமாக கேட்க மலர்விழி முழித்தாள்.

“இல்லை… இல்லை… எனக்கு பசிக்கலை…”

“ஏன் பசிக்கலை… ”

“தெ…தெ…தெரியலை சார்…” மலர்விழி சார் என்றழைக்க கணிதனுக்கு இன்னும் கோவம் அதிகமாகியது. அவன் இவளுடன் நல்ல முறையில் பழக வேண்டும் என்று தான் வந்தான். ஆனால் பாழாய்போன அந்த ஆகாஷ் மற்றும் மணநாள் நினைவு வந்துவிட குதற ஆரம்பித்திருந்தான்.

“என்ன சார்? நான் உனக்கு சாரா? உனக்கு எந்த சப்ஜெக்ட் எடுக்குறேன் சார்னு கூப்பிட… சாரா இருந்தபோதே மதிக்காம என்னை கலாய்ச்சிட்டு தானே இருப்ப? இப்ப என்ன?”

“சரி சார்… இனிமேல் அப்படி அப்படி கூப்பிடலை சார்…” என்று மீண்டும் சார் சார் என்றே அழைத்துக்கொண்டிருந்தாள் மலர்.

அவளுக்கு திடிரென்று கணிதன் உணவுடன் வரவும் அவளுக்கு மிகவும் பதட்டமாகி விட்டது. என்ன செய்வது சொல்வது என்று தெரியாமல் உளறினாள்.

“என்ன நக்கலா? அறைஞ்சேன் எட்டு குட்டிகரணம் போட்டு கீழே விழுவ…” என்று கணிதன் திட்ட மலர்விழிக்கு பதட்டம் போய் இப்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள். அவனது அதட்டலில் எங்கிட்டயேவா என்பது போல் பார்த்தவள் அவனை வைச்சு செய்ய ஆரம்பித்திருந்தாள்.

“என்ன என்ன சார்? எத்தனை குட்டிகரணம் சார்?” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க,

“ஓரே ஒரு அறை தான். எட்டு குட்டிகரணம் அடிச்சு போய் கீழே விழுவ… ஒழுங்கா சாப்பிடு. இன்னொரு தடவை சார்னு சொன்ன கொண்ணுட்டேன்…”

“ஏன் ஏன் சார்? நான் உங்களை சார்ன்னு கூப்பிட கூடாது.”

“ஏன்னா நான் உனக்கு ஒன்னும் கிளாஸ் எடுக்கலை. அதனால என்னை அப்படி கூப்பிட வேணாம்.”

“ஹான் அதுவும் சரிதான். அப்புறம் உங்களை வேற எப்படி டாஷ் கூப்பிடனும் டாஷ்…” என்று அப்பாவியாக பார்த்தவாறு கணிதனிடம் கேட்க முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாதவன் பிறகு புரிந்துக்கொண்டு மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்டினான்.

“யோவ் வளர்ந்தமாடு என்னத்துக்கு யா கொட்டுன. ஏற்கனவே குட்டியா தான் இருக்கேன். நீ கொட்டுறதுல இன்னும் குட்டியாயிருவேன்.”

“பாவமே சாப்பிடமா பட்டினி கிடந்து சாகப்போறாளேன்னு சாப்பாடு கொண்டு வந்தா என்னையவே கலாய்க்குறீயா பிச்சிபுடுவேன். எடுத்து சாப்பிடு டி குள்ள குரங்கே…”

“நீங்க ரொம்ப ஒவரா போறீங்க… இதெல்லாம் நல்லதுக்கில்லை. அதெல்லாம் நான் சாப்பிட முடியாது.”

“சாப்பிடுறீயா இல்லை உங்க அப்பன் மூக்கனுக்கு வீடியோ கால் போட்டு நீ எங்கூட உல்லாச பயணம் வந்து இருக்கன்னு போட்டு கொடுக்காவா?”

“உங்க அப்பனை விட உன்னோட குஸ்தி சித்தப்பன் இருக்கான்ல அந்த ஆளுக்கு சொன்னா தான் சரியா இருக்கும்…” என்றவாறு அவன் தனது ட்ராக்சூட்டில் இருந்த அலைபேசியை எடுக்க கணிதனின் இந்த புது அவதாரத்தில் அதிர்ந்தவள் சட்டென்று மேஜையில் இருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்திருந்தாள்.

“உட்கார்ந்து சாப்பிடு டி…” என்க உடனே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள் மலர்விழி.

அவள் உண்டு முடிக்கும் வரை நின்று பார்த்தவன் “போய் தட்டை கழுவி வைச்சிட்டு தலகாணி போர்வையை எடுத்துட்டு இன்னும் சரியா ஐந்து நிமிசத்துல தூங்க வந்துருக்கனும் சரியா… இல்லாட்டி பீரங்கி மூக்கனுக்கும் குஸ்தி வாத்தியாருக்கும் கான்ப்ரென்ஸ் கால் தான்.” என்று கூறிவிட்டு அவளது அறையை விட்டு விறுவிறுவென்று வெளியேறினான் கணிதன்.

அவன் பின்னாலே வெளியேறியவள் தான் உண்ட பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு திரும்பி மேலே வந்து தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.

ஜோசப் பிரதர்ஸூம் ஆகாஷிம் கீழே படுக்கையை போட்டு அடுத்தடுத்து படுத்திருந்தனர். பம்மிபம்மி வந்த மலர்விழி வரவேற்பறையிலிருந்த நீண்ட சோபாவில் படுத்துக்கொண்டாள்.

ஆறுவரும் அவர்களுக்குள் எதுவோ சிரித்து பேசியவாறு படுத்திருந்தனர். அதில் கணிதனின் குரலும் சிரிப்பொலியும் ஒங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த ரீங்காரத்தை காதில் வாங்கியவாறு உறக்கத்திற்கு சென்றாள் மலர்விழி.

அவளுடன் சாதராணமாக பேசிய பின்பு கணிதனுக்கு இரண்டு வருடங்களாக மனதில் அழுத்திக்கொண்டிருந்த சுமை கொஞ்சம் குறைந்திருப்பதாக உணர முடிந்தது.இன்னும் அவளிடம் எதுவும் பேசி சரி செய்யவில்லை என்றாலுமே அவளூடன் இலகுவாக பேசியதே அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆதித்யன் சொன்னது சரிதானோ என்று நினைத்துக்கொண்டான்.