EUTV 13

EUTV 13

13

மழையின் அடர்த்தியான சத்தத்தில் கண்விழித்தாள் மலர்விழி. இன்னும் மழை நிற்கவில்லை. நேற்றை விட இன்று மிகவும் உக்கிரமாக இருந்தது. நல்லவேளை இவர்கள் இப்பொழுது இருக்கும் வீடு பெரிய மேட்டில் தான் இருந்தது.

ஆண்கள் உறங்கிய இடத்தை பார்க்க அங்கு படுக்கையெல்லாம் எடுக்கப்பட்டு இடம் சுத்தமாக இருந்தது. சமையலறையினுள் இருந்து சத்தம் வந்துக்கொண்டிருந்தது.

‘இவனுங்க கூட இருக்கது எதோ பாய்ஸ் ஹாஸ்டலுக்குள்ள போன மாதிரி இருக்கு… முருகா…’ என்று புலம்பியவாறு எழுந்தவள் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று முகம் கழுவி பல் துலக்கிவிட்டு  காலை கடன்களை முடித்துக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

நுழைவுவாயிலில் இருந்து எட்டிபார்க்க கணிதன் ஒரு அடுப்பில் தோசை ஊற்றிக்கொண்டிருக்க ஆதித்யன் ஒரு அடுப்பில் இட்லி ஊத்திக்கொண்டிருந்தான். ஆகாஷ் வெங்காயத்தை கண்ணீருடன் உரித்துக்கொண்டிருக்க கத்தரிக்காய், தக்காளியை அரிந்து கொண்டிருந்தான் வீரேந்திரன். கணிதன் சுட்டு வைத்திருந்த தோசையை எடுத்து ஹாட் பாக்ஸிற்குள் வைத்துக்கொண்டிருந்தான் ரிஷிபன். சிங்கில் பாத்திரங்களை விளக்கி கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

அவர்கள் ஆறு பேரும் சமைத்துக்கொண்டிருப்பதை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது மலர்விழிக்கு. நேற்றும் கூட இவர்கள் தான் சமைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ஜோசப் பிரதர்ஸின் லாவகத்தை பார்க்கும் பொழுது அவர்கள் இதை மட்டுமே வேலையாக செய்து கொண்டிருப்பார்கள் போன்று இருந்தது.

ஆம் அவர்கள் ஐவரும் தனிதனியாக தங்களின் உத்தியோகத்தை பொருட்டு இருப்பதனால் அவர்களுக்கு இது பழக்கமே. அவர்கள் ஜோசப் குடும்பத்தை பொறுத்தவரை வேலையாட்கள் வைத்துகொள்வது குற்றம் போன்று பாவிக்கப்படும். எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருப்பினும் அவரவர் வேலையை அவர்களே தான் செய்து கொள்ளவேண்டும்.

அவளது வருகையை கவனித்த ஆகாஷ், “ஹே வா வா ப்ளார்… காபி குடிக்கீறியா?” என்று கேட்டவாறு வெங்காயம் வெட்டுவதில் இருந்து தப்பிக்க பார்க்க அதை ஒரக்கண்ணால் கவனித்த ஆதித்யன்,

“அவளுக்கு காபி போட்டு குடிக்க தெரியும். நீ அமைதியா வெங்காயத்தை உறிடா வெண்ணெய்…” என்று ஆகாஷை அதட்டியவன் மலரிடம் திரும்பி,

“அங்க பால் பவுடர் இருக்கு பார். ரொம்ப மழை அதிகமா இருக்குறதால பால்காரன் பால் போடல.  அதை எடுத்துட்டு வந்து இந்தா இன்னொரு அடுப்பு இருக்கு பார் அதுல போட்டுக்கோ… சுகர் காபிபவுடரும் பால்பவுடர் பக்கத்துலயே தான் இருக்கு… ” என்று கூற ஆதித்யன் கூறிய அனைத்திற்கும் சரிசரியென்று தலையை ஆட்டியவள் பொருள்களை எடுத்துவந்து கணிதனுக்கு அருகில் இருந்த மற்றொரு அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சி காபி போட்டுக்கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் “காபி போட்டியா? எக்ஸ்ட்ரா இருந்துச்சுன்னா வீருக்கு கொடு …” என்று ஆதித்யன் கூற அவள் பதில் பேசுவதற்கு முன்பு முந்திக்கொண்ட வீர்

“அண்ணா… எனக்கு வேணாம்…” என்று கூறியவன் மலர்விழியை முறைத்து வைத்தான்.

“அப்ப நீயே குடிச்சிரு… குடிச்சிட்டு நீ யூஸ் பண்ணதை கழுவி வைச்சிடு. கழுவி வைச்சிட்டு ஹாட்பாக்ஸ் அப்புறம் பிளேட் எடுத்துட்டு போய் டைனிங்க் ஹாலுல வைச்சிரு…” என்று வரிசையாக ஆதித்யன் வேலைகளை கூற மலர்விழி இவன் என்ன இப்படி இருக்கிறான் என்பதைப்போன்று ஆவென பார்த்தாள்.

அவளது முகபாவனையை பார்த்த கணிதனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆதித்யன் இப்படி தான். அவனால் எப்பேற்ப்பட்ட கொம்பனையும் வேலை வாங்க முடியும். சட்டு சட்டென்று ஆர்டர் கொடுத்துக்கொண்டே இருப்பான். தான் மட்டுமில்லாது தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பான். தலைமை பண்பில் சிறந்தவன்.

“என்ன பார்வை? காபி ஆற போது பாஸ்ட்…” என்றவன் வெந்த இட்லியை தட்டில் மாற்றிக்கொண்டிருந்தான்.

“கணி இப்பயோட மாவு முடிஞ்சு… மத்தியத்துக்கு ரைஸ் வைச்சு பருப்பு கூட்டு வைச்சுக்குவோம். இருக்குறதை பார்த்து பார்த்து யூஸ் பண்ணனும். பிரிட்ஜ்ஜீம் இல்லாதனால ஒன்னும் பண்ண முடியலை… டேய் எருமைமாடு ஆகாஷ் எவ்வளவு நேரம் டா நாலு வெங்காயத்தை உறிக்குற உறிச்ச வரைக்கும் போதும் கொண்டுவா…” என்று கணிதனிடம் ஆரம்பித்து ஆகாஷிடம் முடித்தான்.

ஆகாஷ் கொண்டு வந்து கொடுத்ததும் குக்கரில் மூன்று விசில் விட்டிருந்த உப்பு சாம்பாரை இறக்கி கடுகு வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற்றி கலக்கியவன் அதை அப்படியே எடுத்து ரிஷிபனின் கரங்களில் கொடுத்து டைனிங்க் டேபிளில் வைக்க பணித்தான்.

அவ்வளவு நேரமுமே மலர்விழி காபியை பருகியவாறு கணிதனின் மீது ஒரு பார்வையையும் ஆதித்யனின் மீது ஒரு பார்வையையும் வைத்திருந்தாள்.

“ஹே கேர்ள் நீ இன்னுமா காபி குடிச்சுக்கிட்டு இருக்க ஒடு சொன்ன வேலையை பாரு… என்ன கணி இந்த பொண்ணு இவ்வளவு ஸ்லோவா இருக்கு…”

“ஆமாம் ஆதி. இவ மட்டும் இல்லை. இவ கேங்கே டெட் ஸ்லோ தான். இதுகளுக்கு கிளாஸ் எடுக்குறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிரும்.” என்று கணிதன் கூற அவனை முறைத்து வைத்தாள் மலர்விழி.

“கணி ப்ரோ… நீங்க இவங்களுக்கு கிளாஸ் எடுத்தீங்களா? அப்ப பாரதியும் உங்களுக்கு தெரியும் தானே?” என்று ஆகாஷ் கேட்டான்.

“ஆமாம் ஆகாஷ்… தெரியுமே… இவ செட் தானே எல்லாம். ஒரே அலும்பு. இவ கூட சேர்ந்தே நல்லா படிக்குற பொண்ணு பாரதி அவளும் கெட்டு போயிட்டா…” என்று கூற மலர்விழி பல்லைக் கடித்தாள்.

“யாரு அவள நான் கெடுத்தேன். என்னை கெட்டு குட்டி சுவராக்குனதே அவ தான் தெரியுமா? முதல் நாள் டிவில பூ படம் பார்த்துட்டு வந்து லவ் பண்ண ஆளு வேணும்னு டார்ச்சர் பண்ணவ அவ… உங்களை சைட் அடிக்குறதுல எனக்கும் அவளுக்கும் தான் போட்டியே…” என்று தன்னை நிருபித்தும் விடும் நோக்கில் அனைத்தையும் உளறிக்கொண்டிருந்தவளுக்கு அப்பொழுது தான் ஆறுபேரும் தன்னை கூர்மையாக பார்ப்பதை உணர்ந்து காபிக்கோப்பையை சிங்கில் போட்டவள் ஹாட்பாக்ஸையும் தட்டுகளையும் எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டாள்.

அந்த பேச்சை தாங்கள் யாரும் கேட்காதது போன்று விட்டவர்கள் தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

“உனக்கு எப்படி பாரதியை தெரியும்? மலர் சொல்லி இருக்காளா?” என்று கணிதன் ஆகாஷிடம் கேட்டான்.

“இல்லை… பாரதியால தான் எனக்கு பிளாரையே தெரியும். பாரதி என்னோட அத்தை பொண்ணு கசின்…” என்று ஆகாஷ் கூற தொடர்ந்து வேறு எதுவும் கேட்காமல் ஒரு ஒஒ..வுடன் முடித்துக்கொண்டான் கணிதன்.

அனைவரும் சாப்பாட்டு மேஜைக்கு சென்று தங்களுக்கு வேண்டியதை தாங்களே போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்… கணிதனின் அலைப்பேசியின் உபயத்தால் மலரும் எந்தவித சேட்டையும் செய்யாமல் சாப்பிட்டு விட அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவர் கழுவி வைத்துவிட்டு வந்தனர்.

மலர்விழி உபயோகித்த பொருள்களை கழுவப்போக பிறகு பார்த்துக்கொள்ளாலாம் என்று கூறிவிட்டான் ஆதித்யன்.

ஆளுக்கு ஒருபுறமாக அமர்ந்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தது போரடித்து விட்டது. அலைப்பேசியை தேவைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டிய நிலை. சார்ஜ் தீர்ந்துவிட்டால் வம்பாகிவிடும் இந்த இன்வெட்டரும் எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்குமோ என்று அனைவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.

“ஏதாவது விளையாடலாமா? ரொம்ப போர் அடிக்குது…” என்று ரிஷிபன் கூற அனைவரும் அதையே ஆமோதித்தனர்.

என்ன விளையாடலாம் என்று யோசித்து கொண்டிருந்தனர். அதுவும் ஏழுப்பேர் சேர்ந்தும் மற்றும் வீட்டிற்குள்ளே விளையாடும் விளையாட்டாக வேறு இருக்க வேண்டும் அல்லவா…

என்னென்னமோ விளையாட்டு எல்லாம் கூறி கடைசியில் குளுக்கு சீட்டு விளையாடலாம் என்று முடிவானது. அதாவது ஆளுக்கு ஒரு படத்தை கூற வேண்டும் ஒவ்வொரு படத்தையும் மூன்று சிட்டுகளில் எழுதிக்கொள்ள வேண்டும். அடுத்து அது அத்தனையும் எடுத்து குலுக்கி போட வேண்டும். அதை ஆளுக்கு மூன்று சிட்டாக எடுத்துக்கொண்டு அப்படியே ஒவ்வொரு சீட்டாக மாற்றிவிட வேண்டும். அப்படி மாற்றி விடும் பொழுது யாருக்கு முதலில் மூன்று சீட்டிலும் ஒரே படம் சேர்கிறதோ அவர் ஜூட் வைக்க வேண்டும். அவர் கைக்களுக்கு மேல் அடுத்தடுத்தவர் வேகமாக வைக்க வேண்டும். இறங்குவரிசையில் மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் எழு நபர் விளையாடுகிறார்கள் என்றால் கீழேயிருந்து எழுநூறு, அறநூறு என்று மேலே கை வைத்தவருக்கு நூறு வரும் வரை எண்ண வேண்டும். இதில் சில பல ஆட்டைகள் இவ்வாறு முடிந்தபின்பு வாங்கிருக்கும் மதிப்பெண்களை எண்ண வேண்டும். அதில் யார் அதிகமாக இருக்கிறார்களோ அவர் தான் இந்த விளையாட்டின் வெற்றியாளர் ஆவார்.

கீழே இறங்கி அனைவரும் ஒரு வட்டமாக உட்கார்ந்துக்கொண்டனர். மலர்விழிக்கு இடப்புறம் ரிஷிபனும் வலப்புறம் ஆகாஷீம் அமர்ந்திருந்தனர். முதல் குலுக்கல் ஆரம்பித்திருந்தது. ஆளூக்கு மூன்று மூன்று சீட்டாக எடுத்துக்கொள்ள விளையாட்டு ஆரம்பித்திருந்தது.

மலர்விழி இயல்பிலே மிகவும் குறும்புகாரி மற்றும் விளையாட்டு என்று வந்துவிட்டால் எல்லாவிதமான தில்லாங்கடி வேலையும் பார்க்க கூடியவள். தன்னுடைய தில்லாங்கடி வேலையை இங்கும் காட்ட ஆரம்பித்தாள்.

முதல் தடவையே அதிசயமாக மலர்விழிக்கு சேர்ந்துவிட  ஜூட் வைக்க போகும் போது ரிஷிபனின் தொடையை கிள்ளி  விட்டு ஜூட் வைத்தாள். அவனோ இவள் எதுக்கு இப்படி செய்கிறாள் என்று அவளை குழப்பமாக பார்த்தவாறு மூன்றாவது ஆளாக வைக்க மலர்விழி அவனை முறைத்தாள்.

அடுத்து இரண்டு ஆட்டைக்கு பிறகு மீண்டும் இவளுக்கு சேர ரிஷிபனை கிள்ளிவிட்டு ஜூட் வைக்க அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது இவளுக்கு அடுத்து தன்னை வேகமாக வைக்குமாறு அலார்ட் செய்கிறாள் என்று… சிரிப்புடன் வேகமாக அவளுக்கு அடுத்து வைத்து மதிப்பெண் பெற்றான்.

அடுத்து ரிஷிபனுக்கு சேர்ந்துவிட அவன் இவளை கிள்ளி அலார்ட் செய்து ஜூட் வைக்க அப்படியே ரிஷிபனை தனது வலைக்குள் போட்டவள் அடுத்து அவளுக்கு என்ன சீட்டு வேண்டும் என்று கூறி அதை தனக்கு கொடுக்குமாறு செய்துக்கொண்டிருந்தவள் ஆட்டை பத்தாவது தடவைக்கு மேல் போகும் போது அசால்ட்டாக யாருக்கும் தெரியாமல் அவனுக்கு அடிக்க வேண்டிய சீட்டு தன்னிடம் இருந்தால் அவளுக்கு கொடுக்க, தனக்கு தேவையான சீட்டு அவனிடம் இருந்தால் மாற்ற என்று அழகாக அழுகுணி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் ரிஷிபனும் மலர்விழியும் தான் அதிகமாக ஜூட் வைக்க கணிதன் அவர்களின் மீது கண் வைத்தான்.

அப்பொழுது தான் அவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலை புரிய ஆரம்பிக்க எட்டி வந்து இருவர் மண்டையிலும் நங்கென்று கொட்டி விளையாட்டை முடித்துவைத்தான் கணிதன்.

அந்த விளையாட்டு முடிந்த பொழுது யாருடன் அவ்வளவு எளிதில் ஒட்டியிராத தான் பேசும் அளவிற்கு இவர்கள் எல்லாம் ஒரு ஆளா என்று நினைக்கும் ரிஷிபன் மலர்விழியுடன் ஒட்டியிருந்தான்.

அடுத்து காலை மாதிரியே மதிய உணவும் தயாரித்து முடித்து உண்டு விட்டு உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற வரிகளூக்கேற்ப இரவு உறங்கியதைப்போன்றே ஆளுக்கு ஒரு ஒரமாக உறங்கினர்.

மழை விடாமல் பொழிந்துக்கொண்டே இருந்தது. இந்த வானத்தில் இன்னும் எத்தனை தண்ணீர் இருக்கிறதோ என்று தான் தோன்றியது.

கணிதன், ஆதி, ரிஷிபன் அனைவரும் மலர்விழியுடன் சாதரணமாக பேச ஆரம்பித்திருந்தனர். விஜய் பெரிதாக அப்படி ஒரு மனிதி இருப்பதையே கண்டுக்கொள்வதில்லை. ஆனால் இந்த வீரேந்திரன் தான் அவளை முறைத்துக்கொண்டேயிருந்தான். அவளுடன் பேசும் சகோதரர்களையும் வேறு முறைத்து தள்ளினான். ஏனெனில் அவன் வாங்கிய அடி அப்படி அல்லவா… அதை மறக்க கொஞ்ச நாட்கள் ஆக தான் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!