EUTV 8

8

“டேய் நாச்சிமுத்து மவனே…!”

“டேய் ஜோசப் மவனே…!” என்று ஒருவரையொருவர் பார்த்து கூவியவாறு ஒடி வந்து இறுக கட்டிக்கொண்டனர் ஆகாஷிம் வீரும்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… வந்ததே நண்பனே…நண்பனே என்று பாட்டு பாடாதது ஒன்று தான் குறை.

“என்ன டா ஆகாஷ் இந்த பக்கம்?”

“அதை நான் கேட்கனும் டா… அமெரிக்கா சிட்டிஷன் என்ன இந்த பக்கம்?”

“அது ஒரு பெரிய கதை டா. அதை அப்புறம் சொல்றேன். உன்னோட முதல் படம் பார்த்தேன். நீ என் பிரண்ட்னு ரேச் கிட்ட சொன்னேன். அவ நம்பவே இல்லை தெரியுமா? அப்புறம் இன்ஸ்டால மெசேஜ் போட்டேன் ஒன் இயர் ஆகிட்டு நீ இன்னும் பார்க்கவே இல்லை. அப்படியே நானும் விட்டுட்டேன்.” என்று ஆகாஷ் வீரை குறைப்பட்டுக்கொண்டான்.

“அது நான் இன்ஸ்டால எல்லாம் அவ்வளவு ஆக்டிவா இருக்குறது இல்லை டா. சரி வீட்டுக்கு வா பேசலாம்.” என்று கையோடு அழைக்க, அந்த ஆகாஷோ ஒரு கர்டசிக்கு கூட மலரிடம் கேட்காமல் கணிதனின் காரில் ஏறப்போக மலர்விழி நொந்தே விட்டாள்.

‘ஒரு பார்வையாச்சும் பார்க்குறானா பாரு தடி மாடு…பிளார் தொட்டின்னு வருவில்ல டா அப்ப இருக்கு இவனுக்கு… உனக்கு ஒகேவா போகலாமா அப்படின்னு ஒரு கேள்வி கேட்குறானா பாரு? ச்சை இந்த ஆம்பிளைங்களே இப்படி தான் போல…’ என்று ஆகாஷை திட்டிக்கொண்டே அவர்களை பார்த்தவாறு நிற்க,

இதை வீரேந்திரனும் எதிர்பார்க்கவில்லை மலர்விழியை விட்டுவிட்டு இவன் மட்டும் வருவான் என்று நினைத்தால் இப்படி செய்கிறானே என்று அவனைப்பார்க்க,

“நாங்களே தங்க இடம் இல்லாம தான் யோசிக்கிட்டு இருந்தோம். நீயூஸ் பார்த்தியா? நாளையில இருந்து லாக் டவுன் அண்ட் சைக்லோன் வேற. இருந்த ஹோட்டல்ல இருந்தும் லீவ் பண்ண சொல்லிட்டாங்க.” என்று வீரிடம் கூறிய ஆகாஷ், தங்களை பார்த்தவாறு நின்றிருந்த மலர்விழியை அழைத்தான்.

“பிளார்… கம் கேர்ள்… ஹீ இஸ் மை குளோஸ் ப்ரெண்ட் இன் மை ஸ்கூல் டேய்ஸ். நேம் வீரேந்திரன் ஜோசப். இப்ப ஆக்ட் பண்ணிட்டு இருக்கான். தமிழ்ல கூட இப்ப ஒரு படம் போய்க்கிட்டு இருக்கு அப்படி தானே டா.”

“ஹே இது பிளார்… ச்சை… மலர்விழி மை ஸ்வீட் ஹார்ட். இவள் தான் இப்ப தமிழ்நாடு ட்ரெண்ட்…” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்த வீர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

இந்த கூத்தை எல்லாம் காரினுள் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த கணிதனுக்கு வீரை அடித்து துவைக்கலாம் போன்று ஒரு எண்ணம். இந்த ஆகாஷை இவனுக்குமே தெரியும். இவர்கள் அனைவரும் ஊட்டி கான்வென்ட்டில் படித்த போது வீரேந்திரன் மற்றும் விஜயேந்திரனின் கிளாஸ் மேட். வீரின் உயிர் நண்பன். இவர்கள் இருவரும் சேர்ந்து பண்ணாத சேட்டைகளே இல்லை. ஹாஸ்டலிலும் ஒரே அறை என்பதால் அவ்வளவு அட்டுழியங்கள் செய்வர்.

இவர்களின் சேட்டைகள் சில சமயங்கள் எல்லைமீறி இருவரையும் பள்ளியிலிருந்தே துரத்தியடிக்கும் நிலையெல்லாம் வந்திருக்கிறது. எப்படியோ இரு பெற்றோர்களின் பணபலம் மற்றும் இவர்களது அறிவு கூர்மையால் தப்பித்து பள்ளி காலத்தை முழுமையும் முடித்துவிட்டே வெளியேறினர். கல்லூரி படிப்புக்கு ஆகாஷ் ஸ்டேட்ஸ் சென்று விட அப்படியே அவர்களது நட்பு நின்றுவிட்டது. இப்பொழுதும் சில சமயம் வீர் ஆகாஷை ஞாபகப்படுத்தி மிஸ் செய்வதாக கூறுவான்.

வீருக்கோ ஊரடங்கு முடியும் வரை தன் வீட்டில் தான் இவர்கள் டேரா போடப்போகிறார்கள் என்று புரிந்துவிட கணிதனை பரிதாபமாக பார்த்தான். ஏற்கனவே கணிதன் இவனை முறைத்துக்கொண்டிருந்தான் வேறு.

“ஸாரி…” என்று வாயசைக்க, கணிதன் குனிந்து தனது செருப்பை பார்க்க அங்கு ஒரு பகவதி பட சீன் ஒடிக்கொண்டிருந்தது.

அடுத்து ஆகாஷ் கணிதனை பார்த்துவிட

“கணி ப்ரோ… நீங்களா இது? எப்படி இருக்கீங்க? யூ லுக் டாம்ன் ஹாட் மேன்.” என்று அவனுடன் ஒரு கட்டிபிடி வைத்தியத்தை போட்டுவிட்டு, மலர்விழியை கைப்பிடித்து காரின் அருகில் அழைத்து வந்தவன், கணிதனிடமும் அறிமுகப்படுத்தியவன் யாருடைய முகமாற்றத்தையும் கவனிக்காமல் அந்த கேப்பிலிருந்த தங்களது உடைமைகளை எடுத்தவாறு  கேப் ஒட்டுநருக்கு பணத்தை கொடுத்துவிட்டு காரில் பின்சீட்டில் மலர்விழியை அமரவைத்துவிட்டு தானும் அமர்ந்தான்.

வீரேந்திரன் வண்டியோட்ட அவனுக்கு அருகில் கணிதன் அமர்ந்திருந்தான்.

மலர்விழிக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. இப்பொழுது என்ன செய்வதன்றே தெரியவில்லை. வண்டியை நிற்பாட்டி இறங்கி செல்லலாம் என்றால் எங்கு செல்வது? இவளுடன் வந்தவர்கள் எல்லாம் நேற்றே கிளம்பி சென்றிருக்க இன்றைக்கு காலையில் தான் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு மற்றும் வலுவான புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும் தெரிய வந்தது.

சரி தாங்கள் இருந்த ஹோட்டலிலே தங்கி கொள்ளலாம் என்று பார்த்தால் ஒரு வேளை மழை மிகவும் அதிகமாகிவிட்டால் அந்த இடத்தில் இருப்பது ரிஸ்க்காகிவிடும் என்று விடுதி உரிமையாளர்களே அனைவரையும் வெளி அனுப்பி விட்டனர். தற்பொழுது அவளது தோழி கூறியதன் பேரில் ஆழப்புழாவில் இருக்கும் ஒரு விடுதிக்கு தான் சென்று கொண்டிருந்தனர். அங்கும் எந்த பாதிப்பு இல்லையா என்றால் அது அவளுக்கு தெரியாது. இங்கு மாதிரியே அங்கு சொல்லவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

 அதற்குள் இந்த ஆகாஷ் இவனுங்களை பார்த்துவிட்டு இவனுகளுடன் ஒட்டிக்கொள்ள போகிறான்.

இவனால் தன்னால் தமிழ்நாடு கூட இப்பொழுது செல்ல முடியாத நிலை. அங்கு இன்றையிலிருந்தே ஊரடங்கு தான். கேப் பிடித்து சென்று விடலாம் தான். தான் சென்றால் இந்த ஆகாஷின் நிலை?

சிறிது நேரம் ஆகாஷ் மட்டுமே எதுவுவோ தோணதோணத்து கொண்டு வர, அனைவரும் அமைதியாய் வந்தனர். பிறகு வீரும் தனது நண்பனுடன் சேர்ந்துகொண்டான்.

கணிதன் மிரரில் தெரிந்த மலர்விழியை முறைத்துக்கொண்டே தான் அமர்ந்திருந்தான். அவனுக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. மலர்விழியை உலுக்கி ‘எதற்கு என்னை விட்டு சென்றாய்?’ என்று கேட்க வேண்டும் போன்று இருந்தது. அனைத்தையும் அடக்கி கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். அவனது உடல்மொழியே மிகவும் இறுக்கமாக இருந்தது.

 

அரை மணி நேர பயணத்தில் அவர்கள் தங்களது வீட்டை அடைந்திருந்தனர். அது ஒரு ஹெஸ்ட் ஹவுஸ் தான். பார்வதி நாயரின் தந்தை வழி சொத்து. ஆழப்புழா வந்தால் அனைவரும் இங்கே தான் தங்குவது. பார்வதி நாயரின் தாய் வீடு திருவனந்தபுரம். இது அவருக்கு சொத்து பிரித்து கொடுக்கும் போது வந்த வீடு.

நல்ல பெரிய வீடு தான். சுற்றி பெரிய தோட்டம். தோட்டத்திற்கு பின்பு ஒடும் நதி. எந்நேரமும் சில்லென்று இருக்கும் கிளைமேட்; என்று அந்த இடமே சொர்க்கம் போல் தான் காட்சியளித்தது.

கார் போர்டிக்கோவில் நுழைவதற்கும் மழை பொழிய ஆரம்பித்தற்கும் சரியாக இருந்தது.

“சைக்லோன் வேலையை காட்ட ஆரம்பிச்சிருச்சு போலயே… தாங்க் காட் உங்களை பார்த்தோம் இல்லாட்டி என்ன ஆகுறது?” ஆகாஷ்

“ஆமாம் ஆகாஷ்…” வீர்

“ஆகாஷ் நான் ஷீலா சொன்ன ஹோட்டலுக்கு போறேன். நீ இங்க இருந்துக்குவ தானே… எதாவதுன்னா கால் பண்ணு டா.”என்று மலர்விழி கூற, கணிதனும் வீரும் ஒரு உதடு சுழிப்புடன் அவளை பார்த்தவாறு நின்றிருந்தனர்.

“பிளார்…! ரொம்ப மழை பெய்து. நின்ன பின்னாடி பேசிக்கலாம் வா. ” என்று அழைத்த ஆகாஷ், வீரை பார்த்தான்.

அவனும் வேறு வழியில்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டு “மழை நின்ன பிறகு ஆகாஷ் போய் உங்களை விட்டுட்டு வருவான். இப்போதைக்கு வாங்க…” என்றழைக்க, அவள் தயக்கத்துடன் கணிதனை பார்த்தாள்.

மலர்விழிக்கு புரிந்து தானிருந்தது. தன்னுடைய இருப்பு அண்ணன் தம்பி இருவருக்கும் பிடிக்கவில்லை என்று. அவர்கள் இடத்தில் தான் இருந்தால் காரிலேயே எற்றிருக்க மாட்டாள் தான். ஆனால் வெளியே மழை அதிகமாக பெய்ய ஆரம்பித்திருந்தது. இதில் முட்டாள் கூட கோவித்துக்கொண்டு வெளியே செல்ல மாட்டான்.

ஆனாலும் கணிதன் வாவென்று கூப்பிட்டால் தான் அவளால் அந்த வீட்டிற்குள் போக முடியும் என்று தோன்றியது. இது வீம்பு, சுயமரியாதை, ஈகோ என்று எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

“ஏன் மஹாராணிக்கு ஆரத்தி வைச்சு அழைச்சா தான் வருவீங்களோ??? ச்சை உள்ளே வாடி…” என்றவாறு முன்னே நடக்க, ஆகாஷிற்கே என்னவோ போன்று ஆகிவிட கணிதனை எதிர்த்து எதுவோ பேச வாயெடுக்க அவனின் நோக்கம்  புரிந்து அவனது கரத்தை அழுத்தியவள் வேண்டாம் என்பது போன்று தலையசைத்தாள்.

ஆகாஷிற்கு இப்பொழுது தான் கணிதனும் வீரும் அவளை ஒதுக்குவது கண்ணில் பட்டது.

இவர்கள் இப்படியெல்லாம் கிடையாதே. ஏன் மலர்விழியிடம் இப்படி ஒதுக்கம் காட்டுகிறார்கள், அதிலும் கணிதன் இந்த மாதிரி நடந்துக்கொள்பவனே கிடையாதே. இவளும் அப்படி ஒன்றும் அமைதியானவள் கிடையாது. மரியாதை குறைவாய் நடத்திவிட்டால் என்ன ஆட்டம் ஆடுவாள் என்பது இவனே வாங்கி கட்டியிருக்கிறானே. என்னமோ இருக்கிறது ‘சம்தீங்க் ராங்க்…’ என்றவாறு மலர்விழியின் கரங்களை பிடித்தவாறு கணிதன் மற்றும் வீரின் பின் சென்றான் ஆகாஷ்.

கணிதனிடமிருந்த திறவுக்கோலை வாங்கி கதவை திறக்க முயன்றவனுக்கு முடியவில்லை.

“ஹே… உள்ளே லாக் ஆகிருக்குன்னு நினைக்குறேன். யாரோ உள்ளே இருக்காங்க டா…” என்று வீர் கூற, மூவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.

இது பழங்காலத்து வீடு என்பதால் ஆட்டோமெட்டிக் லாக் எல்லாம் கிடையாது. உள்ளிருந்து தாழ்பாள் போட்டிருந்தால் வெளியே இருந்து திறவுகோல் கொண்டு திறக்க முடியாது.

“அந்த மூனு லூசுங்க வந்து இருக்கும்னு நினைக்குறேன்…” என்று சிரித்தவாறு கணிதன் கதவை தட்ட, வீரின் முகமும் நொடியில் புன்னைகையை பூசிக்கொள்ள கணிதனுடன் சேர்ந்து அவனும் சிறுபிள்ளையைப் போன்று கதவை தட்ட,

“ஸர்ப்ரைஸ்…”என்ற இரண்டு ஆண் குரல்களுடன், கதவு திறக்கப்பட்டது.

அங்கு சிரித்த முகத்துடன் விஜயேந்திரன் மற்றும் ரிஷிபன் நின்றிருக்க, ஆதித்யன் கையில் ஒரு காபி கோப்பையுடன் அப்பொழுது தான் சமையலறையிலிருந்து வந்தான்.

ஆகாஷின் கரம் பற்றியிருந்த மங்கையை பார்த்தவுடன் மூவரின் சிரிப்பும் உதட்டிலே உறைந்தது. மூவரும் அதிர்ந்து கணிதனை பார்க்க, கணிதன் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கண்ணைக்காட்ட பிறகு தான் ஆகாஷை நன்றாக பார்த்து அடையாளம் கண்டுக்கொண்டனர்.

“ஆகாஷ்…” என்று ஆதித்யன் இழுக்க,

“யெஸ் சி.எம் அண்ணா… நானே தான்…” என்றவாறு ஆதித்யனை அணைத்துக்கொண்டான் ஆகாஷ்.

“டேய் அமெரிக்கன் ஈகிள் கேரளால என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அப்புறம் நான் சி.எம் பதவியில இருந்து ரிலிவ் ஆகி டூ மந்த்ஸ் ஆச்சு மேன்…”

“டேய் ஆகாஷ்… என்ன டா நாங்களே நிமிர்ந்து பார்த்து பேசுற மாதிரி இப்படி வளர்ந்து போய் நிக்குற??” என்று கேட்டவாறு விஜய் அணைக்க அடுத்து ரிஷிபனும் “அண்ணா…” என்ற அழைப்புடன் வந்து அணைத்துக்கொண்டான்.

ஜோ பிரதர்ஸ் உள்ளே சென்று இரண்டு நீண்ட சோபாவில் அமர, வீரேந்திரன் மட்டும் அனைவருக்கும் காபி கலக்க சென்றிருந்தான்.

 ஆகாஷ் எதுவோ புரிந்தவன் போன்று மலர்விழியின் கரங்களை இறுக பிடித்தவாறே இரட்டை சோபாவில் வந்து அமர்ந்தான்.

“உன்னை எப்படி ஷக்தி விட்டா?” வீர்

“அவ எங்கே விட்டா? நானும் வரேன்னு ஒரே அடம். அப்புறம் மம்மீஸ் எல்லாம் இந்த மாதிரி நேரத்துல ரொம்ப தூரம் டிராவல் பண்ண கூடாதுன்னு அவளை அடக்கி வைச்சு ஆதி அண்ணாவை கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகியிருச்சு எங்களுக்கு.” என்றான் ரிஷிபன்.

“இங்கே ரிச் ஆன ஹாப் ஆன் அவர்க்குள்ள நாலு கால் பண்ணிட்டாங்க மேடம். இவங்க லவ்ஸ் தாங்க முடியலை…” என்று விஜய் சிரிப்புடன் கூற அது எதையும் கண்டுக்கொள்ளாமல் ஆதி தனது கையிலிருந்த காபி கோப்பையில் கவனமாக இருந்தான்.

அப்பொழுது தான் எதுவோ ஞாபகம் வந்தவனைப்போன்று தனது பின்னந்தலையில் தட்டிய ஆகாஷ் கணிதனிடம் கேட்ககூடாத கேள்வியை கேட்டு வைத்திருந்தான்.

“கணி ப்ரோ உங்களுக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சு தானே? உங்க வைப் எங்கே?” என்று கேட்க, மலர்விழியின் வருகையால் ஏற்கனவே இறுக்கமாக இருந்த அந்த சூழல் இன்னும் காற்று கூட பம்மி பம்மி வீச கூடிய அளவுக்கு இறுக்கமாகியது.

கணிதனை தவிர மீத மூவரும்  ஒரு குற்றச்சாட்டும்  பார்வையை மலர்விழியை நோக்கி வீச, மலர்விழியோ ஆகாஷை வெட்டவா, குத்தவா என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கணிதன் பிணைத்திருந்த அவர்கள் கரத்தில் ஒரு அழுத்தமான பார்வையை செலுத்தியவன் “அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கலை. அதனால் கல்யாணத்து அன்னைக்கு ஒடி போயிட்டா…” என்று கோணல் சிரிப்புடன் கூற ஆகாஷிற்கு ஒரு மாதிரியாகி விட்டது.

“சாரி ப்ரோ…”

“வொய் யூ சூட் ஆஸ்க் சாரி? சாரி கேட்க வேண்டியவங்களே லைப்பை என்சாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க. முட்டாள் தனமான முடிவு எடுத்த எனக்கு அது தேவையான பாடம் தான் மேன்… லீவ் இட்.” என்று கணிதன் பேசபேச பற்றிக்கொண்டு வந்தது மலர்விழிக்கு.

தான் எதற்கு இவனுக்கு சாரி சொல்லவேண்டும். எவ்வளவு படித்துபடித்து சொன்னேன் இந்த திருமணம் வேண்டாம் என்று, இவனோ காதில் சிறிது கூட போட்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டு வேறுவழியே இல்லாமல் தன்னை அப்படி செய்ய வைத்துவிட்டு இப்பொழுது மொத்த பரிதாப ஒட்டையும் தன்பக்கம் இழுத்துக்கொண்டு என்னையே திட்டுகிறான் இடியட். இதில் இவனுடைய பாண்டவ சகோதரர்கள் வேறு. ரொம்ப ஒவரா பண்னுறீங்க டா.

பிறகு தன்னை இந்த ஐவருக்கும் நடுவே மாட்டிவிட்ட கடவுள், பாரதி, ஆகாஷை பயங்கரமாக மனதினுள் வறுத்தெடுத்து கொண்டிருந்தாள்.

ஆகாஷிற்கு இப்பொழுது லைட்டாக சந்தேகம் வர ஆரம்பித்திருந்தது. அந்த கல்யாணம் மேட்டருக்கும் மலர்விழிக்கும் எதுவோ சம்மந்தம் இருக்குமோ என்று?

வீரேந்திரன் காபி கோப்பைகளை கொண்டு வந்து அனைவரிடமும் கொடுக்க அந்த பேச்சு அதோடு முற்று பெற்றது.

மலர்விழி காபி கோப்பையை வாங்கி கைகளில் வைத்திருந்தாளே ஒழிய ஒரு மடக்கு கூட அருந்தவில்லை. அதை கணிதனை தவிர யாருமே கவனிக்கவே இல்லை.

         அந்த வீடு இரண்டு அடுக்கு கொண்டது. முதல் அடுக்கு  மிகப்பெரிய ஹால்; அதற்கு இடதுபுறம் பெரிய டைனிங் ஹால், கொஞ்சம் தள்ளி சமையலறை அதிலிருந்து பின்பக்க வாசல் வழியாக தோட்டத்திற்கு செல்லலாம். அடுத்து சாமியறை அவ்வளவு தான் முதல் அடுக்கு.

இரண்டாம் அடுக்கு செல்வதற்கு வீட்டிற்குள்ளே தான் படி இருந்தது. மேலே ஒரே மாதிரி நான்கு அறைகள் படிக்கு இடதுபுறம் இரண்டு அறைகள், படிக்கு வலதுபுறம் இரண்டு அறைகள் என்று இருந்தது.

மழை இரவு வரைக்குமே நிற்கவே இல்லை. வானத்தை பொத்துக்கொண்டு தண்ணீர் கொட்டியதை போன்று மழை முடிவில்லாமல் பெய்துக்கொண்டே இருந்தது.

இந்த மழையில் வெளியே போகவேண்டுமென்று கேட்டால் அது தேவையில்லாத சீன் போன்று இருக்குமென்று நினைத்த மலர்விழி தனக்கு ஒதுக்கியிருந்த அறையிலே அடைந்துக்கொண்டாள்.

குளித்துவிட்டு உடையை மாற்றியவள் தனது தந்தை சிவராமனுக்கு அழைத்து தான் பத்திரமாக இருப்பதாக கூறியவள் தூங்கிவிட்டாள்.

இரவு உணவிற்கு ஆகாஷ் வந்து உசுப்பவும் தான் எழுந்தாள். இந்த வீட்டில் சாப்பிட கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. வேண்டாவெறுப்பா பிள்ளை பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்த மாதிரி தன்னை குறைவாக நடத்திக்கொண்டிருக்கும் இந்த தடி தாண்டவராயன்கள் வீட்டில் ஒரு துளி தண்ணீர் கூட குடிக்க விருப்பமில்லை தான். அதற்காக உணவு வேண்டாம் அது வேண்டாமென்றால் வெட்டி பந்தா காட்டுவது போலாகும் என்று ஆகாஷிடன் உணவு மேஜைக்கு சென்றாள்.

  அந்த பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய மேஜையில் ஆகாஷிற்கு அருகே அமர்ந்து தட்டை திருப்பி இரண்டு சாப்பாத்தியை எடுத்து வைக்க எதுவோ பயங்கரமாக வெடித்து சத்தம் வந்த அடுத்த நொடி இங்கு மின்சாரம் தடையானது.

‘இதுகளும் சதி பண்ணுதே..!’