mp8b

மது பிரியன் 8B

 

மதுராவிற்கு விசயம் தெரிந்ததுமே, விஜய் தமக்கை பாரியிடம் அதைப்பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்தான்.

“நம்ம சொல்ற கடமைக்கு அவங்க அத்தைகிட்ட எதையும் மறைக்காமச் சொல்லியாச்சு தம்பி.  அவங்க அத்தை மதுகிட்ட மறைச்சதுக்கு, நாம எப்டிப் பொறுப்பாக முடிவும். அதனால, இதைப்பத்தி எதுவும் கேக்கணும்னா அவங்க அத்தைகிட்டேயே மதுவைக் கேட்டுக்கச் சொல்லிரு” ஒற்றை வார்த்தையில் அதற்கான வழிமுறையைக் கூறி முடித்திருந்தார் பாரி.

மதுரா நன்றாக விஜய்யுடன் பேசினாலும், அவ்வப்போது இலகுவாக பழகினாலும், ஒரு எல்லைக்குள் தன்னை இருத்திக் கொண்டு, அதனைவிட்டு வெளிவரத் தயங்கினாள்.

அன்று இரவு இருவருமே நன்றாகச் சிரித்துப் பேசியபடியே உண்டு, சிறிது நேரம் தொலைக்காட்சியில் நேரத்தைச் செலவிட்டவர்கள், படுக்கைக்குச் சென்றனர்.

படுக்கையில் படுத்தவன், தனதருகே முதுகுகாட்டிப் படுத்திருந்தவளை பின்னோடு அணைத்து, காதோரம், “மதுஉஉ”

“ம்”

“உன்னை இன்னைக்குத் தொட்டுக்கவா?”

தொட்டுக்கவா என்ற வார்த்தையில், சரியென்று ஆமோதித்தவளை, தனக்கு ஏதுவாக மல்லார்ந்த நிலையில் திருப்பியவன், அவள் மீது ஆவலோடு ஆக்ரமிக்க, கணவனின் திடீர் செயலில், அவனின் முதல் தார விசயங்கள் சோதனையாக அந்நேரத்தில் அவளின் நினைவில் எழ, அவனது இதழ் முத்தம் அவளின் சித்தம் எட்டாமல் போனது.

ஆனாலும் ஆழ்ந்த முத்தத்தை அவன் முடிக்க, அவள் இன்னும் நெகிழாது மரக்கட்டையாகக் கிடக்க, மனைவியின் செயலில், அவளின் மனநிலையை உணர்ந்தவன், அதற்குமேல் முன்னேறாது, அமைதியாக படுக்கையில் இறங்கிப் படுத்துவிட்டான்.

அதன்பின்பும் அவளை கோபமாகவோ, எரிச்சலாகவோ நடத்தாதவனை எண்ணி, மதுவிற்கே வருத்தமாகப் போனது.

“ஏன் மது?  என்ன பிரச்சனை?  என்னை உனக்குப் பிடிக்கலையா?” தனிமையான சூழலில் மனைவியிடம் கேட்டான் விஜய்.

அழுகையோடு, “பிடிச்சிருக்கு.  ஆனா பயமா இருக்கு” என்றவளை, தன்னோடு அரவணைத்துக் கொண்டவன், “எதுக்கு பயம்?” எனக் கேட்டான்.

“அவங்க திரும்ப வந்துட்டா, அப்போ என்னைய விட்ருவீங்களா?” சிறுபிள்ளைத்தனமான மதுவின் கேள்வியில் சிரிப்போடு வருத்தமும் வந்தது விஜய்யிக்கு.  குனிந்தவாறே, தரையில் கண்ணீர் சிந்தக் கூறியவளைக் கண்டவனுக்கு என்ன கூறி தன்னவளைத் தேற்றுவது என்று புரியாமல் இருந்தான்.

“அவ திரும்பிலாம் வரமாட்டா மது.  என்னை நம்பு” விஜய் கூற

“வந்துட்டா” கண்களில் பதைபதைப்போடு மது கேட்டாள்.

“வரமாட்டாம்மா!” அவனும் தன்னால் இயன்றவரையில், புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினான்.

விஜய்யின் வார்த்தைகளைக் கேட்டு, அதில் நம்பிக்கை எழுந்தாலும், மதுராவால் விஜய்யோடு ஒத்துழைக்க முயலாதபடி, அவளின் மனஅழுத்தம் அவளைத் தடை செய்தது.

“டாக்டர்கிட்ட போயிட்டு வரலாமா?” விஜய் வினவ

“இதுக்கெல்லாமா டாக்டர்கிட்ட போவாங்க” சங்கோஜமாக கேட்டாள்.

“ஏதோ ஒரு டிஸ்ட்ரப்பென்ஸ் இருக்குல்ல.  அதை சொன்னா டாக்டர், மெடிசனோ, இல்லைனா எதாவது சொலுயூசன் தருவாங்க.  மெடிடேசன் மாதிரிகூட பிராக்டிஸ் பண்ணச் சொல்லுவாங்க.  இல்லைனா பிராணாயாமம் சொல்லித் தருவாங்க” விஜய் விளக்கினான்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?” சந்தேகத் தொனியில் கேட்டாள் மது.

தனக்குத் தெரிந்த வகையில் மனைவிக்கு விளக்க முற்பட்டான். மதுவின் பேச்சில், மருத்துவரிடம் செல்வதை மனைவி விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவளை அவளின் ஒரே ஆதரவான பிரேமாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று வரும் முடிவுக்கு வந்தான் விஜய்.

வாரயிறுதியில் பிரேமா அத்தையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான் விஜய்.  மணமக்களை வரவேற்று உபசரித்தவர், மதுவை தனியே அழைத்து, “என்னம்மா, நல்லா சந்தோசமா இருக்கியா?” என்று கேட்டதுமே, முதல் தார விசயத்தைப் பற்றிக் கூறி, “இதை உங்க மூலமா எங்கிட்ட சொல்ல நினைச்சித்தான் இங்க கூட்டிட்டு வரதா இருந்தாராம் அத்தை.  ஆனா அதுக்கு முன்னாடியே எனக்குத் தெரிஞ்சிருச்சினு சொன்னாரு.  உண்மைதானா அத்தை” கணவனை நம்பினாலும், அவன்கூறிய வார்த்தைகளின் மெய்தன்மை அறிய எண்ணி பிரேமாவிடம் கேட்டாள் மது.

“அவங்க அக்காதான் பேசினாங்க.  எனக்குமே ரொம்ப ஷாக்.  ஆனா, இப்ப எப்டிப் போகுது லைப்ஃ”

“அப்டியேதான் போகுது அத்தை” வருத்தமாகக் கூறினாள் மது.

“அப்டிச் சொன்னா, என்னானு நான் எடுத்துக்க மது.  உங்களுக்குள்ள இன்னும் எல்லாம் சரியா வரலையா?”

“அவர் என்னை எதுனாலும் கேட்டுத்தான் செய்யறார் அத்தை.  வீட்டுச் செலவுக்கு, மற்ற எல்லாத்தையும் கலந்து கேட்டு, வேண்டியதை குடுத்தாலும் என்னால நிம்மதியா அவருகூட குடும்பம் நடத்த முடியலை அத்தை” தனது இயலாமையை பிரேமாவிடம் எடுத்துக் கூறினாள் மது.

பிரேமா, “இதுக்குமேல உங்களுக்குள்ள எல்லாம் நடந்துச்சா இல்லையா?”

இல்லையென தலைகுனிந்தவாறே மறுத்துத் தலையசைத்து தனது பதிலைக் கூறினாள் மதுரா.

“ஏன்? என்ன பிரச்சனை?” பிரேமா விடாமல் வினவினார்.

“அந்த முத தாரம் ஏன் இவரை விட்டுப் போச்சுனு தெரியலை அத்தை.  அதனால அவரு என்னை நெருங்கி வந்தாலும், என்னால அவருகூட கோவாப்ரேட் பண்ண முடியாம, நாந்தான் வேண்டானு சொல்லிறேன் அத்தை” மனதில் உள்ள கலக்கத்தை பிரேமாவிடம் உள்ளபடி பகிர்ந்து கொண்டாள் மது.

“நான் அவங்க அக்காகிட்ட பேசினேன் மது.  அந்தப் பொண்ணுக்கு வேற ஒரு பையனோட லவ் அஃபையர் இருந்ததை மறைச்சு, உம்மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுத்திருக்காங்கபோல.  ஆனா அந்தப் பொண்ணு இவருகூட வாழ மாட்டேனு, அவனையே கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டதாத்தான் அவங்க சொன்னாங்க”

பிரேமாவின் வார்த்தையைக் கேட்டவள், “அப்ப அவங்க சாமான் சட்டு எல்லாம் எதுக்கு இன்னும் இங்கேயே போட்டுட்டுப் போகணும்” தனது மனதில் தோன்றியதைக் கேட்டாள் மது.

“சாமான் சட்டுலாமா இன்னும் அங்க இருக்கு” ஆச்சர்யமாய் கேட்டார் பிரேமா.

“அதுதான் அத்தை எனக்கும் புரியலை.  தீந்து விட்டா, அவங்க சாமானெல்லாம் எடுத்துட்டுப் போயிருப்பாங்கதான?” மதுராவின் தனது மனதில் தோன்றியதை மறைக்காமல் கூறினாள்.

மதுராவிற்கு, கயிற்றின் மேல் நடப்பதுபோல இருந்தது திருமண வாழ்க்கை.  அதற்கான காரணம், தெளிவாக அஞ்சனாவின் விசயம் தெரியாமல் இருப்பதுதான்.

கேட்டாலும் வாயைத் திறக்காதவனை நம்பி இனிப் பிரயோஜனமில்லை என எண்ணினாள்.  ஆனாலும், அது திருமண முறிவா, அல்லது வேறு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என அவளின் மனம் அவளைப் பிராண்டியது.

அவ்வப்போது, பாரிக்கும், விஜய்யின் தாயுக்கும் அழைத்து, நலம் விசாரிப்பதை சமீபமாக வழக்கமாக்கத் துவங்கியிருந்தாள் மது.  இடையிடையே வசீகரனிடம், எதேச்சையாகக் கேட்பதுபோல சில கேள்விகளை முன்வைத்தாள்.

“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நீ எந்த ஸ்கூல்லடா படிச்ச.  இதுலாம் உனக்கு அந்த ஸ்கூல்ல சொல்லித் தரலையா?  ஞாபக மறதில சொல்லித் தரலைன்னு சொல்லுறியா?” இதுபோல நாசூக்கான கேள்விகளை முன்வைத்தாள்.

அதுபோலத் துவங்கி, அப்பொழுது நடந்த விஜய் பற்றிய விசயங்களை கேட்டு அறிய முனைந்தாள்.  விளையாட்டுப் பிள்ளையாகத் தெரிந்தவனுக்கு, அஞ்சனாவுடனான விஜய்யின் திருமணமே தெளிவாக நினைவில் இல்லை.

அதற்குமேல் அவனிடம் கேட்க விரும்பாதவள், பாரியிடம், “அண்ணி, இங்க பழைய சாமான் சட்டுல்லாம் கிடைக்கே.  இதையெல்லாம் தேவையில்லனா பழைய சாமான் வாங்குறவங்கட்ட எடுத்துப் போட்டுரலாமா”

“விஜய்கிட்ட ஒரு வார்த்தை கேளேன்” பாரி அவ்வாறு பதிலளித்திருந்தார்.

அஞ்சனாவின் சீர் சாமான்கள் பலதும் அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்ததைக் கவனித்திருந்தாள் மதுரா.  அதைக்கொண்டே விடாது அடுத்த வினாவை எழுப்பினாள் பாரியிடம்.

“அவங்க சாமான்லாம நிறைய அடைஞ்சு கிடக்கு.  அதை திருப்பிக் கேட்டா நாம குடுக்கற மாதிரியிருக்குமா அண்ணி.  இல்லை அப்டிக் கேக்க மாட்டாங்கன்னா, போட்டுரலாம்”

“உம் புருசங்கிட்ட கேட்டுட்டு, அவஞ்சொல்ற மாதிரி பண்ணிக்கோ மது” என முடித்துவிட்டார் பாரி.

ஆனால் விஜய், “இல்லை அதுபாட்டுக்கு கிடக்கட்டும்.  அவங்க வீட்டு ஆளுங்க வந்து கேட்டா, அவங்கட்டையே குடுத்திரலாம்.  இல்லைனா அப்டியே கிடக்கட்டும்” என்று கூற, முற்றுப்பெறாத பிரச்சனையாகவே நீண்டது மதுவிற்கு.

இந்த நிலையில்தான், பிரேமாவின் வீட்டிற்கு தம்பதியர் சகிதமாய் வந்திருந்தார்கள். நடந்த விசயங்கள் அனைத்தையும் மதுவின் வாயிலாகக் கேட்டுக் கொண்டவர், “தேவையில்லாததைப் போட்டு மனசைக் குழப்பாம, அவர்கூட சந்தோசமா இருக்கப் பாரு மது.  அப்டி அவருகூட வாழ ஆரம்பிச்சாலே, உனக்கு அவர்மேல இன்னும் நம்பிக்கை வர ஆரம்பிச்சிரும்” தனக்குத் தோன்றியதை மதுவிடம் பகிர்ந்துகொண்டார் பிரேமா.

பிரேமாவின் வேண்டுகோளுக்கிணங்க, அன்று அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்தனர்.  அன்று இரவு உணவிற்குப்பின், மசாலா பாலைத் தயார் செய்து, இரண்டு தம்ளர்களில் ஊற்றி மதுவின் கையில் கொடுத்தனுப்பினார் பிரேமா.

“கண்டதையும் போட்டு மனசைக் குழப்பாம, இப்ப இந்த நிமிசம் இருக்கற வாழ்க்கைய நேசிக்கவும், வாழவும் பழகிக்கோ மது.  எப்போவோ ஏதோ வரும்னு… வருமா, வராதான்னு சரியா தெரியாததை நினைச்சு, இப்டி வாழமா நாளைக் கடத்தினா, யாருக்கு நஷ்டம் சொல்லு.  அதனால, இனிமே அவரு என்ன எதிர்பாக்குறாரோ, அந்த மாதிரி உன்னை நீ மாத்திக்க ட்ரை பண்ணு மது.  இப்ப, இன்னைக்கு என்ன செய்யிற.. அத்தை குடுத்துவிட்ட பாலை ரெண்டு பேரும் முதல்ல குடிங்க.  அதுக்குப்பின்ன உன்னை அவர் அப்ரோச் பண்ணா, சந்தோசமா அவரை ஏத்துக்க முயற்சி செய்யணும்.  இன்னும் முரண்டு பிடிச்சனா, அவரு சொன்ன மாதிரி, அடுத்து டாக்டரைத்தான் கன்சல்ட் பண்ணணும்.  பாத்துக்கோ” சிரிப்போடு மிரட்டலாகவே கூறி மதுவை அவர்களின் வீட்டில் மாடியில் இருந்த தனியறைக்கு அனுப்பி வைத்திருந்தார் பிரேமா.

பாலைக் குடித்தவர்கள் கதைகள் பேசியபடியே உறங்க முனைய, குடித்த மசாலா பாலின் தாக்கத்தால், விஜயின் உணர்வுகள் உறக்கத்தை விரட்டி, போட்டி போட்டுக்கொண்டு எழுந்திட, அவனுக்கு மனைவியை நெருங்கத் தயக்கம்.

மரக்கட்டையாக தன்னை எதிர்கொள்பவளை, அந்நிலையில் தனது உணர்வுகளைத் தணித்துக் கொள்ள விரும்பாதவன், பெரும்பாலும் வெளியில் சென்று வருவதை வாடிக்கையாக்கியிருந்தான்.

அதேநிலை இன்றும் தோன்றவே, படுக்கையைவிட்டு எழுந்தவன், “உனக்குத் தூக்கம் வந்தாத் தூங்கு மது.  நான் கொஞ்சநேரம் வெளியிலே நின்னுட்டு வரேன்” அறையிலிருந்து வெளியேற முனைய, மதுவிற்கு சமீபமாக இதுபோன்ற விஜய்யின் செயல்கள் பழக்கமே.  ஆனால் இதுவரை சரியென்றுவிட்டு, படுக்கையில் உறங்க முற்படுபவள், இன்று ஏதோ தோன்ற, கணவனின் பின்னோடு அவளும் அறையிலிருந்து வெளிவந்தாள்.

திறந்த மாடியில் ஒற்றை அறையைத் தவிர, நிறைய இடம் இருந்தது.  சுற்றுச் சுவரில் கைவைத்தபடியே அன்னாந்து வானத்தைப் பார்த்தபடியே, தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முனைந்திருந்தான் விஜய்.

அதேநேரம், அவனருகே வந்தவள், விஜயின் ஒரு பக்க கையைப் பிடித்தபடியே, அவனிது கையில் சாய்ந்தபடியே, “என்ன பாத்திட்டுருக்கீங்க”

“சும்மாதான்.  உனக்குத் தூக்கம் வரலையா?”

“இல்லை”

சுற்றுச் சுவரில் இருந்த கைகளை எடுத்தவன், அதில் அமர்ந்தபடியே, தனதருகே நின்ற மதுவை மடியில் அமர்த்திக் கொண்டு, அவளை பின்னோடு அணைத்தபடியே, “இவ்ளோ நேரம் தூங்காம இருக்க மாட்டியே.  புது எடம்னால தூக்கம் வரலையா” என்று கேட்டான்.

“அப்டித்தான் இருக்கும்போல” என்று கூறியவளுக்கு, அவனின் உணர்வுநிலை, அவனது உடல்மொழியில் புரிந்தது. அவனது உணர்வுகளின் பாசையை, அவளின் உடலும் புரிந்து கொண்டு, அதற்கான இசைவை அவளின் உடல்மொழி வழியே கூற, அவனுக்கு ஆச்சர்யம்.

“என்னாச்சி மதுக்குட்டிக்கு” காதோடு இதழ் கொண்டு, உராய்ந்தபடியே கேட்டான்.

பிரேமா அத்தையின் வார்த்தைகளைக் கேட்டு, சற்று தன்னை மாற்றிக் கொள்ள முனைந்தவள், கணவனது கைப்பாவையானாள். நெகிழ்ந்து நின்றவளை ஆச்சர்யத்தோடும், ஆசையோடும் இறுக அணைத்துக் கொண்டான்.

இரவிலும் சேலையோடு இருந்தவளின் இடையில், தனது இரு கரங்களால் அழுந்திப் பிடிக்க, அதற்குமேல் தனது நிலையில் நீள முடியாமல் துவண்டு, கணவனின் கரங்களில் சரணாகதியானாள் மது. நடுங்கியவளின் உடலை தனது இறுகிய அணைப்பால் சரி செய்தான்.

விஜய்யுக்கு, அதற்குமேல் எழுந்த தாபம் காரணமாக, பெண்ணை அலேக்காகக் கைகளில் தூக்கிக் கொண்டவன், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான்.

மனைவியை படுக்கையில் விட்டவன், கதவை அடைத்துவிட்டுத் திரும்ப, மதுவும் மதுவுண்ட வண்டாக மயங்கி படுக்கையில் இருக்க, படுக்கைக்கு வந்தவன் சுனாமியாக தன்னவளை தன்னுள் சுருட்டிக் கொண்டான்.

ஆக்ரமித்தவனின் எடையை தாளமுடியாமல் திணறியவளைக் கண்டு, தனது கரங்களில் அவனது எடையைத் தாங்கியபடியே, தன்னவளை ஆகர்சித்தான்.

தான் கூறாமலேயே தன்னைப் புரிந்துகொண்டு செயல்புரிபவனை எண்ணி அந்நேரத்திலும் வியந்தாள் மது.

விஜய்யின் தாம்பத்திய தடுமாற்றங்களை புரிந்து கொள்ளும் நிலையில் மது இல்லை.  உணர்ந்து கொள்ளும் சூதனமும் இருக்கவில்லை.  தாம்பத்தியத்தின் அரிச்சுவடி தெரியாமல், விஜய்யை எதிர்கொண்டிருந்தாள் மது.

முத்தங்களால் தன்னவளை முழுவதுமாக ஆராதித்தவன், இளகி இருந்தவளை இனிமையாக, சிறுகச் சிறுக ஆக்ரமித்து, பூரணமாக எடுத்துக் கொண்டான்.

கலைந்து கிடந்தவளின் தோற்றத்தைக் கண்டவன், “ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா” மனைவியிடம் வினவினான்.

“ப்ச்சு” எனும் பதிலோடு, தன்னவனின் மார்போடு தஞ்சம் புகுந்தாள்.

விலகியவனை, விலக்க முடியாமல் அவனோடு ஒண்டினாள். இரவு முழுவதும் நீண்டிருந்த தாபத்தின் பயணம், விடியலின்போது களைப்பையும், உறக்கத்தையும் இருவருக்குமே பரிசாகத் தந்திருந்தது.

தாமதமாக எழுந்து வந்தவளைக் கண்டதுமே, பிரேமாவிற்கு விசயம் பிடிபட, சந்தோசத்தோடு தோழியின் மகளைக் கண்ணூறு கழித்தார்.

ஆனாலும், இருவருக்கிடையிலான நெருக்கம் நீடித்ததா?

õõõõõ