EUTV 19

19

இதழ்முத்தத்தில் கரைந்து உருகிக்கொண்டிருந்த மலர்விழியும் கணிதனும் கதவுதிறக்கின்ற சத்தம் நிதானமாக மண்டையில் உறைத்து இருவரும் விலகினர்.

மலர்விழிக்கு தான் செய்து இருக்கிற காரியத்தை நினைத்து தலையை கூட நிமிர்க்க முடியவில்லை. கணிதனோ ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துவிட்டு இடக்கரத்தால் தனது தலையைக் கோதியவன் தன்னுள் எழும் உணர்வுகளை அடக்க பெரும்பாடுப்பட்டு போனான்.

“சாரி… மலர்விழி… நீ இப்ப எங்க்கிட்ட பேசுனவுடனே தான் எனக்கு ஒரு நிம்மதி கிடைச்சிருக்கு. நீ எதுக்காக என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு நம்ம மேரேஜ்ல இருந்து போனேனு… ஆனால் நீ பண்ணது எல்லாமே முட்டாள் தனம் தான் மலர். நீயா ஒன்றை நினைச்சு அதுக்கு விடையா நீயே ஒன்றை பண்ணதுனால உன்னைவிட அதிகமா பாதிக்கப்பட்டவன் நான் தான். இதெல்லாம் தான் உன் பயம்னு எங்க்கிட்ட சொல்லிருந்தா அதுக்கு நான் பதில் சொல்லியிருப்பேன்.”

“ம்ம்ம்ம்ம்… இனி பேசி என்ன பயன்? காலம் கடந்து வந்த காதல் எப்பயுமே வேஸ்ட் தான் மலர்விழி. நீ எனக்கு பண்ணதை நான் ரேஷ்மாக்கு பண்ண விரும்பலை… சாரி…” என்றவாறு கணிதன் ஆகாஷை தாண்டிச்சென்றான்.

மலர்விழியோ ஒன்றும் சொல்லாமல் குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டாள்.

அவளது மனமோ உனக்கு இது தேவைதான் என்று இடித்துரைக்க ஐயோடா என்றவாறு கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கியவாறு உட்கார்ந்திருந்தாள்.

ஆகாஷிற்கு இங்கு நடக்கும் குளறுபடியெல்லாம் பார்த்து நாளை மறுநாள் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையே விட்டுப்போயிருந்தது.

‘அங்கே என்னன்னா கல்யாண பொண்ணு யாரையோ லிப் லாக் அடிச்சிட்டு இருக்கு. இங்கே என்னன்னா கல்யாண மாப்பிள்ளை இவளோட லிப் லாக் அடிச்சிட்டு இருக்கான். இந்த கருமமெல்லாம் என் கண்ணுல தான் மாட்டனுமா? இதைப்போய் ஆதி அண்ணாக்கிட்ட சொல்வோமா? இல்லை கண்டுக்காத மாதிரியே விட்டுருவோமா? நாமப்போய் சொல்லி தான் இந்த மேரேஜ் நின்னுச்சுன்னா வேணாம். என்ன நடக்குதோ நடக்கட்டும்.’ என்று ஒரு முடிவை எடுத்து தன் மனதை சமன்செய்வதற்குள் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க ஆகாஷிற்கு மீண்டும் கணிதனா என்று நினைத்தவாறு கதவை மெதுவாக திறக்க அவனை தள்ளிக்கொண்டு ரிஷிபன் உள்ளே நுழைந்தான்.

“என்ன டா வேணூம் உனக்கு?” என்று ரிஷிபனை முறைத்தவாறு ஆகாஷ் கேட்க

“கிளி எங்க? ஏய் கிளி?” என்ற அழைப்பில் தண்ணீரில் மூஞ்சியை அடித்து கழுவிவிட்டு வெளியே வந்தவள், ரிஷிபனை பார்த்து சிரிக்க முயல முடியாமல் ஒடி வந்து அவனை அணைத்துக்கொண்டு அழுது தீர்த்தாள்.

ரிஷிபன் அவளுக்கு பத்திரிக்கை அனுப்பியதே சும்மா மலர்விழியை வம்பிழுப்போம் என்று தான். ஆனால் அதை வைத்துக்கொண்டு அவள் இங்கே வந்ததை அவனால் நம்பவே முடியவில்லை.

“ஏன் அழுகுற? என்னாச்சு கிளி? சொல்லு?” என்று தனது தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தவளை ரிஷிபன் தன்னிடமிருந்து பிரித்து கேட்க,

“ஐ லவ் கணி சார்…” என்று அழுகையுடனே கூற ரிஷிபனுக்கும் ஆகாஷிற்கும் தலையே சுத்த ஆரம்பித்துவிட்டது.

அவன் பைத்தியகாரனாக இவள் பின்னாடியே லோலோவென்று திரிந்தப்போது கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டு நாளை மறுநாள் அவனுக்கு வேறு ஒருத்தியோடு திருமணம் என்றப்போது இப்படி கூறினால் அவர்களால் என்ன செய்ய முடியும்.

அட்லீஸ்ட் கேரளாவிலிருந்து வந்த பின்பாவது சொல்லியிருந்தால் கூட சரி… ஏதையாவது தகிடுதத்தம் செய்தாவது கணிதனை மலர்விழியுடன் சேர்த்து வைத்திருக்கலாம். இப்பொழுது அனைத்தும் கைமீறி போய்விட்டது. இந்த விளையாட்டில் இப்பொழுது கணிதன் மட்டும் இல்லையே ரேஷ்மாவும் அன்றோ இருக்கிறாள்.

“என்ன இப்ப சொல்லுற கிளி? இப்ப என்ன பண்ண முடியும் சொல்லு?” என்று ரிஷிபன் கேட்க, ஆகாஷோ அழுகும் அவளின் பின்னந்தலையை வருடிவிட்டவாறு தீவிர சிந்தனையில் இருந்தான்.

ரிஷிக்கும் மலர்விழிக்கும் இடையில் நட்பு இருக்கிறது தான். ஆனால் ஆகாஷிற்கு நன்றிக்கடன் இருக்கிறது. அவனை அந்த திருமணத்தில் இருந்து அழைத்து வந்ததெல்லாம் எவ்வளவு பெரிய கடினமான காரியங்கள்…

கடந்த அரைமணிநேரமாக ரிஷிபனும் ஆகாஷீம் என்ன என்னவோ கூறி மலரை சமாதானம் படுத்த முயல அவளோ ‘ஐ லவ் கணி சார்…’ என்ற வார்த்தைக்கு பிறகு எதுவும் பேசாமல் இருந்தவள் அழுதுக்கொண்டே தற்பொழுது ஆகாஷின் தோளில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.

அவளின் நிலையைப் பார்த்த இரு நண்பர்களுக்கும் மனம் பாரமாகி போய் கிடந்தது.

மலர்விழி தூங்கியதை உணர்ந்த ஆகாஷ் மெதுவாக அவளை கைதாங்கலாக நகர்த்திக்கொண்டு போய் அவளின் படுக்கையில் படுக்க வைத்தான்.

அந்த அறையில் இரு சிங்கிள் படுக்கை இருக்க அதில் ஒன்றை அவளை படுக்க வைத்தவன் ரிஷிபனை பார்க்க, அவனும் தீவிர யோசனையுடன் மலர்விழியை பார்த்தவாறு நின்றிருந்தான்.

ஆகாஷ் அவனின் தோளை அழுத்த அதில் யோசனையிலிருந்து வெளியே வந்தவன் ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டான்.

விளக்கை அணைத்தவன் இரவு விளக்கை ஒளிக்க விட்டுவிட்டு தனது படுக்கையில் படுக்க சிறிது நேரத்தில் நித்திரா தேவி அவனை அணைத்துக்கொள்ள தூங்க ஆரம்பித்தான்.

தனதறையில் வந்து அமர்ந்த கணிதனுக்கோ தலையே வெடிக்கும் போன்று இருந்தது. மலர்விழியின் காரணத்தை கேட்டவனுக்கு ஒருப்புறம் பாவமாக இருந்தாலும், இன்னொரு புறம் பயங்கர எரிச்சலாக வந்தது. இதெல்லாம் ஒரு காரணம் என்று இருவரது வாழ்க்கையும் இப்படி கேள்விக்குறியாக ஆக்கிவிட்டு நிற்கிறாளே வந்த ஆத்திரத்திற்கு கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என்றுக்கூட அப்பொழுது தோன்றியது.

அவனின் கோவம் ஆற்றாமை இருந்த இடத்தில் காதலையும் ஆசையும் நிரப்புவதுப்போன்று அவள் கூறிய உங்களை விரும்புகிறேன் என்ற வார்த்தை உயிர் வரை சென்று தாக்கியது. இத்தனை வருடங்களாக அவள் கண்கள் கூறியதை அவளது உதடுகள் சொல்லவும் தான் காதலுக்கும் ஈர்ப்புக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் பைத்தியகாரனைப் போன்று இருந்திருக்கோமே என்று தன்னையே நொந்துக்கொண்டிருந்தவனுக்கு மனம் பேரமைதி அடைந்தது.

அவள் கேரளாவில் கூறிய கிரஷ்க்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னை வதைக்கிறாய் என்று கூறிய வார்த்தை அவனை மிகவும் பாதித்தது.

ஒன்றுமறியா சிறுபெண்ணின் கலங்கமில்லா அன்பை தவறாக உபயோகித்துவிட்டோமோ என்று அவனது மனமே குற்றவுணர்வில் அவனை கலங்கடித்து கொண்டிருந்தது.

அந்த குற்றவுணர்வின் சிறையிலிருந்து விடுவித்த அந்த வார்த்தைகளை கேட்டவுடன் இருக்கும் இடம், காலம், சூழல் மறந்து அவளை ஆவேசமாக முத்தமிட்டிருந்தான்.

அதற்கு அவள் உரைத்த மறுமொழியை இப்பொழுது நினைத்தாலும் உடலெல்லாம் முறுக்கெறுகிறதே…

மலர்விழியின் அறையிலிருந்து வந்ததிலிருந்து பலவாறாக சிந்தித்து பார்த்தவனுக்கு தோன்றிய ஒரே விடை இது தான். இந்த திருமணத்தை நிற்பாட்ட வேண்டும். அதற்கு முன்பு மலர்விழியிடம் பேச வேண்டும். அவள் தான் வேண்டாம் என்றாலும் பராவாயில்லை கட்டாய திருமணமாவது செய்துக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அவளும் தன்னுடன் வாழமாட்டாள். தன்னையும் வாழவிடமாட்டாள் என்று மலர்விழி தற்பொழுது செய்துக்கொண்டிருக்கும் காரியங்களில் அவனுக்கு புரிந்திருந்தது.

அந்த அறையில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தான் மணி ஒன்று எனக் காட்டியது. எப்படி யார்யாரிடம் பேசி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று மனதில் வகுத்துக்கொண்டான். அவனின் எண்ணப்படி முதலில் ரேஷ்மாவுடன் பேச வேண்டும் என்று நினைத்தவாறு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு கதவை திறக்கப்போக அதற்குள் கதவு தட்டும் சத்தம் மிக மெதுவாக கேட்க யாரென்று யோசித்தவாறு கதவை திறந்தான்.

“ஆதி அத்தான் எனக்கு எதுவுமே சரியாப் படலை. கணி அத்தானையும் அந்த பொண்ணையும் நினைச்சாலே கல்யாணம் நடக்கும்ன்ற நம்பிக்கையே இல்லை…” என்று ஆதித்யனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி கொண்டு புலம்பிக்கொண்டிருந்தாள் சக்தி.

“மூடிட்டு தூங்கு டி… தேவையில்லாததை யோசிச்சு என்னையும் டென்ஷன் ஆக்கிட்டு…”

“மூடிட்டு தான் தூங்கப் போறேன். அப்புறம் என்ன திறந்தா இருக்க முடியும். இருந்தாலும் அப்படியே வந்துற மாதிரி தான்…” என்று அவள் முனுமுனுக்க அவளது முனுமுனுப்பு கேட்டாலும் பதில் பேசாமல் அமைதியாக கிடந்தான் ஆதித்யன்.

இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தாள் சக்தி.

“எனக்கு என்னமோ இந்த ரேஷ்மா மேலயும் டவுட்டா இருக்கு. இங்கே வரும் போது ஜாலியா வந்தவ நேத்து அவ ப்ரண்ட்ஸ் வந்ததுல இருந்து அவ முகமே சரி இல்லை. ரொம்ப பதட்டமாவே இருக்கா… சம்தீங்க் பிஷி…” என்றுக் கூற சக்தியை தன்னிலிருந்து பிரித்து மெதுவாக தள்ளிவிட்டவன் இப்பொழுது எழுந்து அமர்ந்து முறைத்தான்.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு முறைக்குறீங்க? கணி மலர் பிரச்சினை வராமல் இவ பிரச்சினை வருமோன்னு தோ…” என்று அவள் வார்த்தையை முடிப்பதற்குள் அவளது இதழை தன் இதழுக்குள் அடக்கியிருந்தான். எப்பொழுதும் போன்று அவளது வாயை அடைக்கும் முறையை பின்பற்ற அது நன்றாகவே வேலை செய்ய ஆரம்பித்தது.

கணவனின் கையில் சக்தி உருக ஆரம்பித்திருந்தாள். அடுத்து என்ன நடந்து இருக்குமோ அதற்குள் கதவு தட்டும் ஒலி கேட்க இந்நேரத்தில் யாரென்ற யோசனையுடன் சக்தியிடம் இருந்து விலக அவளோ பயங்கரமான கடுப்பில் இருந்தாள்.

பல மாதங்களுக்கு பிறகு இன்று தான் கணவனின் அருகாமை கிடைத்தது. தான் பிரசவத்திற்கு முன்பும், பொழுதும், பின்பும் அவஸ்தை உற்றதைப்பார்த்து பயந்துப்போய் தனதருகிலே வராதவன் இன்று தான் நெருங்கியிருந்தான் அதற்குள் எந்த பைத்தியத்துக்கோ பொறுக்காமல் கதவை தட்டிவிட்டனர்.

ஆதித்யன் போய் கதவை திறக்க அங்கு மலர்விழி முகம் முழுவதும் தயக்கத்துடன் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.

அவளை தனது வாசலில் பார்த்த ஆதித்யனுக்கோ பக்கென்றிருந்தது. தன் மனைவியின் வாய் முகூர்த்தம் பலிக்கப் போகிறதோ என்று நினைத்தவன் கதவை நன்றாக திறந்து அவள் உள்ளே வருவதற்கு வழிவிட்டு நின்றான்.

மலர்விழி உள்ளே வருவதைப்பார்த்த சக்தி நக்கல் சிரிப்புடன் தனது கணவனை நோக்க, அவளது நக்கல் பார்வையை பார்த்தவன் கண்களாலேயே எரித்துக்கொண்டிருந்தான்.

“என்ன வேணும் மலர்? எதாச்சும் பிரச்சினையா?” என்று ஆதிக்கேட்க அதற்கு தான் காத்திருந்தவள் போன்று அவனது கால்களில் விழுந்திருந்தாள்.

“ஹேய் பைத்தியம்…” என்று பதறி ஆதித்யன் விலக,

“எனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு சொன்னா தான் நான் எந்திரிப்பேன் ஆதி அண்ணா… ப்ளீஸ்… உங்களை விட்டா எனக்கு வேற யாருமே இல்லை… ப்ளீஸ் அண்ணா… ப்ளீஸ்…” என்று கீழே எப்படி அவன் கால்களில் விழுந்தாளோ அந்த பொஷிசனேனில் இருந்தே ஆதித்யனிடம் மன்றாடிக்கொண்டிருக்க, அவனுக்கு முழி பிதுங்கியது.

தனது கணவனின் நிலைமையை பார்த்த சக்தியால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சிரித்தால் அவ்வளவு தான் தன்னை கொன்றே விடுவான் என்று நினைத்தவாறு வாயை இறுக மூடி நின்றுக்கொண்டிருந்தாள்.

“அம்மா… தெய்வமே எந்திரி மா…” என்றவாறு சட்டென்று குத்துகாலிட்டு மலர்விழியின் அருகில் அமர அப்பொழுது அங்கு அரக்கபரக்க வந்தான் ஆகாஷ்.

“ஆதி அண்ணா…ஆதி அண்ணா…” என்று அறை திறந்திருந்தால் அழைத்துக்கொண்டே நுழைந்தான்.

மலர்விழியும் எந்திரித்து அங்கேயே சம்மணமிட்டு உட்கார, ஆதித்யன் கழுத்தை மட்டும் திருப்பி ஆகாஷை பார்த்தான்.

அங்கு அமர்ந்திருந்த மலரைப் பார்த்து அதிர்ந்தவன்,

“ஹேய் அப்ப அங்கே தூங்கிட்டு இருக்கது யாரு?”

“ஹி..ஹி…ஹி.. அது தலகாணி…” என்று கழுத்தில் சுற்றிப் போட்டிருந்த சிவப்பு நிற ஸ்டோலை திருகியவாறு பதில் கூற அவளை முறைக்க மட்டுமே முடிந்தது ஆகாஷால்.

பிறகு அவனும் அவர்கள் அருகில் அமர ஆதித்யனும் சம்மணமிட்டு அமர்ந்து இருவரையும் பார்த்தான்.

இவர்கள் மூவரையும் பார்க்க சக்திக்கு பயங்கர சுவாரசியமாக இருக்க அவள் படுக்கையின் ஒரத்தில் அமர்ந்து மூவரையும் பார்த்தாள்.

“சொல்லுங்க… இரண்டு பேரும்  எதுக்கு வந்திருக்கீங்க அதுவும் இந்த நேரத்தில?” என்று ஆதித்யன் கேட்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

இருவரது பார்வையும் உணர்ந்த ஆதித்யன், “மலர் நீ தானே முதல் வந்த? சொல்லு? நான் உனக்கு என்ன ஹெல்ப் பண்ணனும்?”

“அது வந்து அண்ணா…” என்று சில நொடிகள் ஆகாஷை பார்த்து சங்கடப்பட்டவள் அவன் தாங்கள் முத்தமிட்டதை பார்த்துவிட்டான் தானே என்று நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“அண்ணா ஐ லவ் கணி சார். எனக்கு கணி சார் வேனும். ஐ மீன் அவரை மேரேஜ் பண்ணிக்கனும்…” என்க, சக்தி அவளை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் ரொம்ப தான் தைரியம் என்று…

ஆதித்யனின் கடுகடுத்தப்பார்வையை புரிந்துக்கொண்டு மீண்டும் மலர்விழியை பேச ஆரம்பித்தாள்.

“நான் இந்த மேரேஜ் நிறுத்தனும் என்ற எண்ணத்தோட எல்லாம் இங்கே வரலை அண்ணா. எனக்கு கணி சாரை ரொம்ப பிடிக்கும். காரணமே தெரியாத தோல்வி எப்பயும் நம்மளை அரிச்சுக்கிட்டே இருக்கும் அதான் சார்க்கிட்ட நான் ஏன் அப்படி ஒடிப்போனேன்னு சொல்லிட்டு சாரி கேட்டு எல்லாதையும் முடிச்சுக்கலாம் அப்படின்னு தான் அண்ணா வந்தேன். உங்களுக்கு தோணலாம் அதை எப்பயோ சொல்லி இருக்கலாமேன்னு ஆனால் அதுக்கு முன்னாடி அவரை லவ் பண்ணுறேன்னு எனக்கு தெரியாது அண்ணா. நான் உணர்ந்த பின்னாடி தான் அவரை இத்தனை நாள் கஷ்டப்படுத்தி இருக்கேன்னும் புரிஞ்சுச்சு. தட்ஸ் வொய் நான் இங்கே வந்தேன்.”

“என்னை மறந்து இருப்பார்ன்னு நினைச்சேன். ஆனால் அவர் மறக்கலை. சந்தோஷமாவும் இல்லை. நானும் அவருக்கு மேரேஜ் ஆன பின்னாடி சந்தோஷமா இருக்க போறதில்லை. ரேஷ்மாவுக்கும் இந்த மேரேஜ் நல்லதில்லை. அந்த பொண்ணு பாவம்.” என்று கூறி நிறுத்த ஆதித்யனுக்குமே அது தான் சரியென்றுப் பட்டது.

அவன் தான் கணிதனை பார்த்துக்கொண்டிருக்கிறானே. திருமணம் நிச்சயத்திற்கு முன்பாச்சும் மலர்விழி கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் வெளியே காமிக்காமல் கெத்தாக தான் திரிந்துக்கொண்டிருந்தான். ஆனால் திருமணம் நிச்சயத்திற்கு பின்பு அவனது முகத்தை பார்க்கவே பரிதாபமாக தானே இருக்கிறது. முகம் முழுவதும் எப்பொழுதும் யோசனையும், வலியும் தான் தெரிகிறது. என்று யோசித்தவாறே மலர்விழிக்கு மறுமொழி கூறாமல் ஆகாஷை பார்த்தான்.

அதில் நீ வந்த விசயத்தை சொல்லு என்ற செய்தி இருக்க, அவன் பங்குக்கு அவனும் சிறிது தயங்கிவிட்டு தான் கண்ட காட்சியை கூற ஆதித்யன் அதிர்ந்து ’யாரு டி நீ? உனக்கு எல்லாமே தெரியுது?’ என்று சக்தியை பார்த்தான்.

 அவளோ அந்த கருப்பு நிற நைட்டியில் இல்லாத காலரை தூக்கிவிட்டு அவனை கெத்தாக பார்த்து வைத்தாள்.

சில நிமிடங்கள் கண்களை மூடி தனது தலைமுடியை கோதியவாறு யோசித்தவன் ஒரு சில முடிவுகளை எடுத்துக்கொண்டு  கண்களை திறக்க, அந்த அறையிலிருந்த மூவரும் அவனை தான் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நீங்க இரண்டு பேரும் உங்க ரூமுக்கு போங்க… மார்னிங்க் எல்லாமே சரியாயிருக்கும். என்னை நம்புங்கள்…” என்று தரையிலிருந்து எழுந்து கூறி அவர்களை அனுப்பிவிட்டு கதவை முடியவன் சக்தியின் அருகில் வந்து அவள் மண்டையிலே வலிக்காத மாதிரி இரண்டு கொட்டு வைத்தான்.

“இப்ப என்னை எதுக்கு கொட்டுனீங்க அத்தான்?” என்று சக்தி ஆதித்யனிடம் சண்டைப்பிடிக்க அவளை கண்டுக்கொள்ளாமல் தனது உள் பனியனுக்கு மீது ஒரு டிசர்ட்டை எடுத்து அணிந்துக்கொண்டிருந்தான்.

“யோவ் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதில் பேசாம எங்கே கிளம்பிகிட்டு இருக்கீங்க?”

“ம்ம்ம்ம்… உன் மூளைக்குள்ள இவ்வளவு அறிவான்னு வியந்துப்போய் அதுக்கு பரிசு கொடுத்தேன். ”

“போயா லூசு… சரி இப்ப எங்கே போறீங்க? இந்த நேரத்துல?”

“உங்க அப்பனை பார்க்கப்போறேன்… மூடிட்டு போடி…”

“கணி அத்தானை தானே பார்க்க போற? நானும் வர்றேன்?”

தான் எதுவுமே கூறாமல் கண்டுக்கொண்டவளை நினைத்து உள்ளே பூரித்தவன் வெளியே எப்பொழுதும் போன்று அவளை கடுப்பேத்தினான்.

“நீயும் அங்கே என்ன புடுங்கவா வர? பிள்ளையை பாரு டி… இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்பு குட்டி முழிச்சுருவா…”

“ஏன்யா? உன் தம்பிங்க, உன் தம்பிங்க லவ்வர்ஸ், உன் அப்பா அம்மாங்க கிட்ட மட்டும் அப்படியே நல்லவன் மாதிரி சீன் போடுவ… என்னை பார்த்த மட்டும் உனக்கு எப்படி இருக்கு? நீ இப்படியெல்லாம் பேசுறன்னு வெளிய சொன்னா ஒரு பையன் நம்ப மாட்றான். ” என்று புலம்பிக்கொண்டிருந்தவளின் வார்த்தைகளில் தான் அந்த அலுப்பு இருந்ததே தவிர குரலில் அல்ல…

“ம்ம்.. இனிமேல் ரூம்ல நடக்குறதை வீடியோ எடுத்து போட்டுகாமி… நான் எவ்வளவு பெரிய கொடுமைக்காரன்னு இந்த உலகம் புரிஞ்சுக்கும். போடி வென்று…” என்றவாறு அவள் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு கிளம்பினான்.

“அது ஒன்னு தான் குறைச்சல். நான் ஒரு கிரிமினல் லாயர் அப்படின்றதை மறந்துற யா நீ. நான் வந்தா உனக்கு ஹெல்ப் புல்லா இருக்கும்…” என்று அவன் கதவை நெருங்கும் வரை பின்னாடியே சக்தி பேசிக்கொண்டே செல்ல,

அவளை முறைத்தவன் மூடிட்டு போ என்பதைப்போன்று சைகை செய்து வெளியேறி விட்டான்.