EVA10

EVA10
10
தான் ஈவாவின் மேல் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்தவன், மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து ஈவாவை பொறுமையாக ஆராய்ந்து பழுதடைந்த பாகங்களை மாற்றி, சில திருத்தங்களைச் செய்தான்.
அவசரக் காலத்தில் தாக்குதல் செய்யும் பாதுகாப்பு அம்சமான ‘டிஸ்ட்ரக்ஷன் மோடை’ தற்காலிகமாக முடக்கினான்.
நாள் முழுவதும் லேபுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தவன், இரவு ஏழுமணி அளவில் சோம்பல் முறித்தபடி இளைப்பாற மொட்டைமாடிக்குச் செல்ல அங்கே அவன் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.
மீனாட்சி, “அப்பாடி வந்துட்டியா? இரு உனக்கு சாப்பிட கொண்டுவரேன்” என்று எழ,
பசியில்லை என்று மறுத்தவன் உலவத் துவங்கினான்.
“திருந்திட்டியோன்னு நினைச்சேன். மறுபடி கம்ப்யூட்டர் சாமியாரா மாறிட்டியா?”
மௌனமான யோசனையுடன் மீனாக்ஷியின் பேச்சைக்கூடக் காதில் வாங்காது, நடந்துகொண்டிருக்கும் மகனின் முகத்தில் தெரிந்த குழப்பம் ரகுநாத்தை உறுத்த,
“என்ன பா ஏதாவது பிரச்சனையா? ஏதாவது உதவி வேணுமா?” சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தவர் நிமிர்ந்து அமர்ந்தார்.
“இல்லப்பா ஆல்மோஸ்ட் டன். பிக்ஸ் பண்ணிருக்கேன். அதான் பிஸியா… ” என்றவன் அவரை நோக்கித் திரும்ப,
ஆதிரா “நடுவுல என்னையும் பார்க்கலாம்” என்றாள்.
“உனக்கென்னடி?”
“எனக்கென்னவா? ஏன் கேக்கமாட்டே, நேத்து தங்கை தன் காதலை சொல்ல போனாளே, என்ன நடந்ததோன்னு ஒரு சின்ன ஆர்வம் வேணா?” குறைபட்டுக்கொள்ள ஆதன் நெற்றியில் தட்டிக்கொண்டான்.
“ஸ்ஸ்ஸ் ஏதோ டென்க்ஷன்ல…சுத்தமா மறந்துட்டேன் சாரிமா. ஆமா பையன் பேரென்ன சொன்ன?”
“பத்ரி! பத்ரிநாத்!” ஓடிவந்து வந்து அவன் நெஞ்சில் குத்தியவள், “என்மேல அக்கறையே இல்லைல?” முகம் வாட,
“என்னடி இப்படிலாம் பேசற?” என்று அவள் கன்னத்தைப் பற்ற அவள் முகம் திருப்பிக்கொண்டாள்.
“சாரி சாரி” சிரித்துச் சமாளித்தபடி, “சரி என்ன சொன்னான்?” என்று கேட்க,
“அப்போ நீ ஈவாவையும் கேக்கல அப்படித்தானே?” மீண்டும் அவனை மொத்த துவங்கினாள்.
“சாரிடி!” சிரித்தவன், “செல்லம்ல சொல்லேன், என்ன ஆச்சு?”
“இதான் உங்க ஊர்ல டக்கா? ஈவாவ கேட்டு நேத்து ராத்திரியே ஓடிவந்து வாழ்த்து சொல்லுவேன்னு நினைச்சேன், ஆனா நீ…” அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவன்,
“ஹை! அப்போ ஓகேவா? சூப்பர்! சரி சரி சொல்லு நீ என்ன சொன்ன அவன் என்ன சொன்னான்?”
மேலும் சில பல குத்துக்களைத் தந்தவள், “சொல்லமாட்டேன் போ! அப்படி என்ன என்னைவிட உனக்கு பெரிய பிஸி வேண்டிகெடக்கு” உதட்டைப் பிதுக்க,
ஆதிரா சொல்ல மாட்டேனென்று வீம்பு செய்ய, ஆதன் உதவிக்குப் பெற்றோரைப் பார்க்க அவர்களோ புன்னகையுடன் மறுக்க, நீண்ட கெஞ்சலுக்குப் பிறகு,
ஆதிரா இளகி,
“நான் என் மனசுல இருக்கிரத நேரடியா சொன்னேனா… அவன் எனக்கு காதல் பத்திலாம் யோசிக்க தோணினதே இல்ல…அப்படி உங்களுக்கு நிஜமாவே என்னை பிடிக்கும் கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னா, பெரியவங்களை பேச சொல்லுவோம் அவங்க சரி சம்மதிச்சா எனக்கும் ஓகேன்னு சொல்லிட்டான்!” அப்பாவியாகச் சொன்னவள்,
“இதுக்கு நான் நேரா அவன் அப்பா அம்மா கிட்டயே போயிருப்பேன்” என்றதில் ஆதன் சிரித்துவிட்டான்.
“பாவம் கொழந்த புள்ளையை போய் காதலிக்கிறேன்னு பயமுறுத்தி வச்சுருக்கே! ஹாஹாஹா”
“போடா போடா. உனக்கும் இப்படியே அசமஞ்சம் பொண்டாட்டியா வரட்டும் அப்போ தெரியும் என் கஷ்டம்”
“அதெல்லாம் அப்புறம். மொதல்ல உன் கல்யாணம். என்னப்பா?” அவன் ரகுநாத்தை பார்க்க,
அவரோ அலட்டிக்கொள்ளாமல் “விசாரிச்ச வரை நல்ல குடும்பம் புகழ் சொன்னான். ம்ம் பேசி பாப்போம் அவங்களுக்கும் பிடிக்கணும். இவளும் படிப்பை முடிக்கணும் அந்த பையனும் படிப்பை முடிச்சு செட்டிலாகனும் அவசர பட முடியாது”
மீனாக்ஷி, “அதுக்காக? எவளோ நாள் தள்ளி போடறது?” அவர் முகத்தில் நொடி நேர ஏமாற்றம்.
பெற்றோர்கள் வாதிடத் துவங்க, ஆதனின் சட்டையைப் பற்றி ஆதிரா ரகசியமாக, “வா கழண்டுப்போம்” என்று இழுக்க
“எங்க ஓடற? பேசுறது உன் கல்யாணத்தை பத்திடி” அவனும் கிசுகிசுக்க,
“அவன்கிட்ட காதல சொன்னேன், உங்ககிட்ட ரிசல்ட்ட சொன்னேன் அத்தோட என் கடமை முடிஞ்சுபோச்சு. மத்தபடி எப்போ எப்படி கல்யாணம் எல்லாம் பெரியவங்க தலைவலி. நீ சாப்பிட வாடா”
“ஆனா…”
“மூடிட்டு வா” அவனை இழுத்துச் சென்றாள் ஆதிரா.
***
வார இறுதியில் காஞ்சிபுரம் வந்துபோகும்படி பெற்றோர் வற்புறுத்த, வேறுவழியின்றி ஒப்புக்கொண்டவள், அவர்கள் கார் அனுப்புவதாகச் சொல்லியும் பிடிவாதமாக வெள்ளிக்கிழமை இரவு இரயிலில் வருவதாகத் தெரிவித்தாள். எப்படியோ அவள் வந்தால் போதுமென்ற மனநிலையிலிருந்தவர்களோ வற்புறுத்தாமல் விட்டுவிட்டனர்.
இரயில் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ பிடிக்க ஹாஸ்டல் வாசலில் நின்று கண்களால் சாலையைத் துழாவினாள்.
“பார்றா! தனியா ராத்திரி ட்ராவல் பண்ணுற அளவுக்கு தைரியசாலியோ நீ?” மிக அருகில் கேட்ட குரலில், கைப்பையைத் தவறவிட்டவள் முன்னே வாயைப்பொத்திச் சிரித்துக்கொண்டிருந்தான் ஆதன்!
எங்கிருந்து வந்தான் என்று குழப்பமாக அவனைப் பார்த்தவள், “நீங்க இங்க எங்க?”
“என் தங்கை தனியா ரயில்ல வரா…துணைக்கு வர முடியுமான்னு பார்கவ் கேட்டான். அதான் பாவம் சின்ன பொண்ணுதானே பொழைச்சு போகட்டும்னு வந்தேன்” என்றான் மிடுக்காக.
ங்கே என்று விழித்தவள், “விளையாடுறீங்களா? நான் சும்மா ஊருக்கு போறேன்னு சொன்னதால தானே வந்து கலாய்க்கிறீங்க?”
“என்னை பார்த்தா எப்படி தெரியுது? உன்னை சும்மா கிண்டல் பண்ண காரையெடுத்துகிட்டு சென்னை ட்ராபிக்ல நீந்தி வருவேனா? அதுவும் வீட்டுக்குப்போன கையோட சாப்பிடாம கொள்ளாம?”
“ஆமால” என்றவள் மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு, “நீங்க சிரமப்படவேண்டாம் நானே மேனேஜ் பண்ணிக்கிறேன் ஆதன். தேங்க்ஸ்” என்றாள்.
“நத்திங் டூயிங்! என்னை நம்பி பார்கவ் கேட்ருக்கான் நானும் வாக்கு கொடுத்திருக்கேன். எனக்கு சிரமமெல்லாம் இல்லை வா. இந்த ஒரு பைதானா? ரெண்டு நாள் தானே அங்க இருக்க போறதா சொன்னான்? இவளோ பெரிசா இருக்கே” கீழே இருந்த பையை எடுத்து, “என்ன மா இந்த கணம்?”
யோசனையிலிருந்தவளோ,”அ அது புக்ஸ் கொஞ்சம் வாங்கினேன், எங்க ஸ்கூல் லைப்ரரிக்கு கேட்டிருந்தாங்க. சேகரிச்சு சேர்த்து எடுத்துட்டு…ஆதன் நான் அவன்கிட்ட சொல்லிக்கறேன் நீங்க கஷ்டப்படாதீங்க” என்றவள் மனதில்,
‘பார்கவா! அறிவுகெட்டவனே!’ திட்டியபடி அவனுக்குக் கால் செய்ய அவனோ அழைப்பைத் துண்டித்து மறுநொடியே மெசேஜ் அனுப்பினான்.
“ஆதன் துணைக்கு வருவார். அவர் கூட வா. ராத்திரி தனியா பிரயாணம் பண்ண வேண்டாம். நீ ஸ்டேஷன் கிட்ட வந்து கால் பண்ணு. சாரி நான் பாட்டியை பிசியோதெரப்பிக்கு கூட்டிகிட்டு வந்துருக்கேன் இங்க ஃபோன் பேச முடியாது”
‘நான் ஃபோன் பண்ணுவேன்னு தெரிஞ்சு டைப் பண்ணி வச்சுருந்தானோ?’ கோவம் ஆதன் மீது திரும்ப, “அவனுக்குத் தான் நட்டு கழன்டு போச்சு. உங்களுக்குமா? ராத்திரி வேலைல இப்படி முன்னபின்ன தெரியாதவன் கூட தனியா வர சொல்றான்!”
“முன்னப் பின்னத் தெரியாதவனா?” வெளிப்படையாகவே அதிர்ந்தவன், “நான் உனக்கு முன்னப் பின்னத் தெரியாதவனா? பலே!” கண்களை அகலவிரித்து அவளை நெருங்க,
பதறி இரண்டடி பின்னே சென்றவள், “கோவத்துல தெரியாம…” ‘டேய் பார்கவா உனக்கு இருக்குடா!’
ஆதனோ “மரியாதையா சைலெண்டா கிளம்பு இல்லை வைலெண்டா இழுத்துகிட்டு போகவேண்டி வரும்” எச்சரித்தான்.
ஏனோ அவன் மிரட்டல் அவளையும் உசுப்பிவிட, “கடத்திகிட்டு போறீங்கன்னு கூச்சல் போட்டா உங்க நிலைமை என்ன ஆகும்?”
“நீ இதுக்கெல்லாம் சரி வர மாட்ட. எங்க உங்கப்பா நம்பர். அவரையே கேக்கறேன்!” அவள் மொபைலை பிடுங்கி அவர் நம்பரை அவன் தேட, பாய்ந்து தடுத்தவள்,
“இல்ல இல்ல வரேன் போலாம். இதோ வந்துட்டேன் பாருங்க” அவனையும் சாலையையும் மாறி மாறிப் பார்த்தவள் சமாதானம் பேச, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், அவள் பையை எடுத்துக்கொண்டு தூரத்திலிருந்த காரை ரிமோட்டால் திறந்தான்.
“இதை எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க? ரயில்வே ஸ்டேஷன்ல காரை எங்க விடுவீங்க?”
“எதுக்கு ஸ்டேஷன்ல விடணும்?” காரை நோக்கி நடந்தான்.
ஓட்டமும் நடையுமாக அவனுடன் நடந்தவள், “எட்டு மணிக்கு ட்ரெயின். விளையாடாதீங்க!”
“மேடம் நாம கார்ல போறோம் ட்ரெயின்ல இல்ல”
“அதெல்லாம் வேணாம்! ” அரைநொடி நின்றவள் மறுபடி வேகமாக நடக்க,
“அய்யய்ய! உன்கூட ரோதனையா போச்சு. இங்க இருக்கக் காஞ்சிபுரத்துக்கு…”
அவளுக்காகக் கதவைத் திறந்துவிட்டு, டிக்கியில் அவள் பையை வைத்தான்.
காருக்குள் ஏறி அவள் சீட்டைச் சாய்த்துவிட்டவன் கிண்டலாக “பேசாம தூங்கிட்டு வா. அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது, ஊர் வந்ததும் எழுப்பறேன்” அதை நேராக்கிக் கொண்டவள்,
“அதெல்லாம் வேண்டாம். இவளோ சீக்கிரம் தூக்கம் வராது”
“உன் இஷ்டம்” என்றவன் காரை ஸ்டார்ட் செய்ய,
“ஆதன்…”
“ம்ம்?”
“நான் வேற ஸ்டேஷன்ல சாப்பிட்டுக்கலாம்னு பார்த்தேன். பசிக்குது…”
புன்னகைத்தவன், “எனக்கும். சாப்பிட்டு கிளம்பலாம்”
உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டவர்கள் இப்பொழுது நகரத்திற்குச் சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் புறநகரை நெருங்கிக்கொண்டிருந்தனர்.
ரேடியோவில்,
♪ மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே…
ரஹ்மான் பயணத்தை இதமாக்கிக் கொண்டிருக்க, மேகக் கூட்டத்தின் பின்னே ஒளிந்து ஒளிந்து கூடவே வரும் நிலவை ரசித்தபடி சாய்ந்திருந்த சஹானா, பார்வையை ஆதன் மீது திருப்பினாள். அவன் கண்களில் இருப்பதென்ன சாலைமீதான கவனமா இல்லை ஆழ்ந்த சிந்தனையா?
எதிர்ப்படும் வாகனங்களின் ஹெட்லைட் ஆதன் முகத்தில் விட்டுவிட்டுப் பட, அவன் பக்கவாட்டு தோற்றம் எங்கோ என்றோ பார்த்த ஏதோ ஒரு ஐரோப்பியச் சிற்பத்தை நினைவுபடுத்தத் தன்னையும் மீறி மனம் அவனிடம் பறப்பதைப் போல் உணர்ந்தாள்.
‘எப்போவோ நீ விட்ட ஒரே ஒரு அரைக்கு பரிகாரமா? உன் மனசுல என்னதான் ஓடுது? வேண்டாம் ஆதன் யாரும் தராத பாதுகாப்பு உணர்வைத் தராதே. காதல் எல்லாம் என்னை மாதிரி ஆளுங்களுக்கு வெறும் கனவு. வேண்டாம். என்னை என் போக்குல விட்டுடு…’ உள்ளுக்குள் தொலைந்தவள்,
அவன் “அவளோ அழகாவா இருக்கேன்?” என்றதில் மலங்க மலங்க விழித்தாள்.
“அதுசரி இவ்வளவு நேரம் பாக்க என்ன இருக்கு?” அசடுவழிய நெளிப்பவளை மேலும் சீண்டாது, “ரிலேக்ஸ் சும்மா கிண்டல்” மீண்டும் சாலையில் கவனமானான்.
“நான் பாக்குறேன்னு உங்களுக்கு எப்படி…” அவள் கையைப் பிசைய,
“பக்கத்திலேயே உக்காந்து பாத்துகிட்டே இருந்தா தெரியாதா? நான் உன்னை பார்த்தது கூட தெரியாம அப்படி என்ன ஆராய்ச்சி என் முகத்துல?” தாடையை தடவிக் கொண்டவன்,
“ஷேவ் பண்ண நேரம் கிடைக்கல. மூணு நாள் தாடி வித்தியாசமா இருக்கோ?” என்றவன் மனத்திலோ, முதல் முறையாகச் சஹானாவின் பெற்றோரைச் சந்திக்கப் போகும்போது தன்னை ஒழுங்காகத் தயார் செய்து கொள்ளவில்லையோ என்று யோசனை எழுந்தது.
சஹானா “இல்ல இல்ல! இதுவும் அழகா. ஹேண்ட்ஸமா தான்…” என்ன சொல்கிறோமென்று குழம்பிக் குனிந்துகொண்டாள்.
“ம்ம் நம்பறேன். வேறவழி!” கிண்டல் செய்கிறானா, ஒப்புக்கொள்கிறானா?
சிலநொடி நீடித்த மௌனத்திற்குப் பின் சஹானா, “உங்க வீட்ல கேக்கலையா எதுக்கு ஊருக்கு போறேன்னு?”
“கேட்டாங்களே, சொன்னேன்”
“என்ன சொன்னீங்க?”
“பிரென்ட் வீட்டுக்கு கூப்பிட்டிருக்கான்னு சொன்னேன்”
“பிரெண்டா? காஞ்சிபுரத்துலயா?” அவள் புருவம் முடிச்சிட,
“ஆமா பார்கவ் அங்கதான இருக்கான்?” என்றவன் கார் புறநகரைத் தாண்டிவிட வேகமெடுத்தான்.
“விளையாடறீங்க தானே?”
“இல்லை பாஸ் உண்மையை தான் சொல்றார்” பதறியவளின் ‘வீல்’ அடங்கும் முன்,
“ஹாய் ஜூனியர்” என்று இருவர் இருக்கைகளுக்கும் நடுவிலிருந்து கார் டேஷ்போர்டிற்கு தாவியது ஈவா!
அவள் டக்கென்று சுதாரிக்க, ஆதனோ “ஹே உன்னை சைலண்ட்டா இருக்கணும்னு சொன்னேன்ல?” ஈவாவை கடிந்துகொண்டான்.
“சந்தேகமா கேட்டாளே அதான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணேன்” நியாயப் படுத்திய ஈவா, “எப்படி இருக்கே ஜுனியர்?” என்றது சஹானாவைப் பார்த்து.
தன்முன்னே அழகாகப் பொம்மைபோல் கண் இமைத்தபடி பார்த்து நலம் விசாரிப்பது இயந்திரம் என்றால் எவர் நம்புவர்? “நல்லா இருக்கேன் தேங்க்ஸ். நீ எப்படி இருக்கே ஈவா” என்றவளுக்கு இன்னும் உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அளவு குறைந்திருந்தது.
“ஜம்முன்னு இருக்கேன்!” என்றது ஈவா.
“ஆதன்…பார்க்கவும் நீங்களும் என்ன திட்டம்போடறீங்க எனக்கு புரியலை பயமா இருக்கு. அப்பா ரொம்ப கோவக்காரர் அதான்…”
“பயப்பட எதுவுமில்ல, ஜஸ்ட் வீகென்ட் ஒரு அவுட்டிங் போலாம்னு கூப்பிட்டான் அவளோதான்”
“அவுட்டிங்கா? அவனா? உங்க கூடவா?” நம்பமுடியாமல் அவள் விழிக்க,
“இவ்வளவு சந்தேகமேன்? உன்ன வீட்ல டிராப் பண்ணும்போது நீயே அவனை கேளு நானும் கூட இருப்பேன்ல?” என்றான் கூலாக.
“என்ன நீங்க வீட்டுக்கு வரீங்களா ஐயோ!”
“என்ன நீ எல்லாத்துக்கும் குய்யோ முய்யோன்னு? வீட்டுக்குத்தான வரேன்னு சொன்னேன்?” அவன் அவளை ஒரு நொடி பார்க்க,
“எங்க வீட்ல என்னனு சொல்லுவேன்?”
“உண்மையை சொல்லு”
“புரியாம பேசாதீங்க! என்னனு சொல்ல முடியும்? அப்பா அம்மா இவர்தான் என்னோட மாஜி லவ்வர் அவன் கூட தான் சென்னைலேந்து கார்ல தனியா வரேன் அதும் அர்த்த ராத்திரின்னு சொல்லவா?”
“அர்த்த ராத்திரி இல்ல இப்போ மணி ஒன்பது தானே? பத்து பத்தரைக்கு ரீச் ஆயிடுவோம்”என்றவனை கண்களைச் சுருக்கி சுடுவதைப் போல் முறைத்தவள்,
“அர்த்த ராத்திரின்ற வார்த்தையை வச்சுதான் கவலை படப்போறாங்க இல்ல? இந்த காதலன், தனியா கார்ல வர்றது, இதெல்லாம் அவங்களுக்கு பிரச்சனை இல்லைல?” அவள் நக்கலாகக் கேட்க,
“மாஜி காதலன் மா. சொல்றதை சரியா சொல்லணும்” அவன் திருத்த,
கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தோளில் அடித்தவள், “இதுக்கெல்லாம் காரணமான என் அறிவுகெட்ட அண்ணனை சொல்லணும்!” முணுமுணுத்துக்கொள்ள,
“நானும் சொல்லணும், பார் உன் தங்கை என்னை அடிச்சு கொடுமை படுத்துறான்னு” என்றான் அவன் அப்பாவியைப் போல்.
ஈவா திடீரென்று “பாஸ் டார்கெட் கிளம்பிட்டான். நமக்கு சரியா இருபத்தி மூணு கிலோமீட்டர் பின்னாடி வாரான்” என்றது,
“யாரு வாரா ஈவா?” அவள் ஆர்வமாக, ஆதன் குறுக்கிட்டு “அது வேற பிரென்ட் சஹா. ஈவா ஸ்லீப்!”
“முடியாது பாஸ். நான் ட்ரேக் பண்ணனும்” என்ற ஈவா “அப்போ தருணை உங்க பிரென்ட் லிஸ்ட்ல சேர்க்கணுமா?” என்றதில், சஹானாவிற்கு தூக்கிவாரி போட நெஞ்சை பிடித்துக்கொண்டாள்.
“ஈவா! உன்னை தூங்க சொன்னேன்!” ஆதன் கத்த,
“என்ன ஆதன் சொல்றா ஈவா? அவன் எங்க இருக்கானு உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கு தலைவெடிக்கும் போல இருக்கு. தருண் எங்க வரான்? காஞ்சிபுரத்துக்கா? அவங்க சொல்லவே இல்லையே! ஐயோ என்ன இதெல்லாம்” கார் ஏசியையும் மீறிச் சஹானாவின் உடல் மெல்ல வியர்க்கத் துவங்கியது.
“நீ ஓவரா யோசிக்காத. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்”
“ப்ளீஸ்.ஒருநிமிஷம்….நிறுத்துங்க” என்றவள் கண்களில் நீர் கோர்க்க,
“இருட்டுல…என்னமா என்னாச்சு? வாஷ்ரூம் போணுமா? இரு பெட்ரோல்பிங் வரட்டும்”
“ப்ளீஸ்!”
அவள் குரலில் தெரிந்த மாறுதலில், வண்டியை நெடுஞ்சாலை கடைகளைச் சற்று தாண்டி நிறுத்தினான்.
கதவைத் திறந்தவள், இறங்கித் திரும்பி நிற்க,
“அழறா பாஸ்!” என்றது ஈவா
“தெரியும்! ” ஈவாவை பார்த்தவன், “கடவுளே! என்ன பண்ணுவேன்.எல்லாம் உன்னாலதான் அறிவுகெட்ட முண்டமே!” அவன் கத்த,
அதுவோ “அப்புறம் என்னை திட்டலாம் போயி சமாதானம் பண்ணி கூட்டிகிட்டு வாங்க” என்றது.
“எப்படி சமாதானம் பண்ணுவேன். ச்சே அவ தான் தருண் பேரைக் கேட்டாலே நடுங்குறால. லூசே சும்மா இருக்கலாம்ல?”
“போயி சமாதானம் பண்ணுங்க பாஸ் ரொம்ப அழற மாதிரி தெரியுது”
“எப்படி பண்ணுவேன். ஒன்னு புரியலையே!” அவன் ஸ்டியரிங்கில் முட்டிக்கொள்ள,
“கட்டி புடிச்சு”
“என்னது?” அவன் அதிர,
“கட்டிபுடிக்க தெரியாதா பாஸ்? கட்டி புடிக்கிறது!” காற்றைக் கட்டிக்கொண்டது ஈவா.
“ஹேய்! உன்ன” எதுவும் சொல்ல முடியாமல் கதவைத் திறந்து இறங்கியவன், கண்களை மறுபடி மறுபடி துடைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தவளைத் தேற்ற வழிதெரியாமல் அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.
“நான் இருக்கேன்ல? ஏன் பயப்படறே? அப்படி விட்டுடுவேனா சொல்லு? அவன் வரான்னு தெரிஞ்சுதான் நானும் வரேன் உன்கூட” என்றவனை நம்பமுடியாமல் பார்த்தவள், பேசும் முன்பே,
“தயவுசெய்து வா கார்ல பேசிக்கலாம், ரோட்ல எல்லாரும் பாக்குற மாதிரி என்னமா நீ? வா” கார் கதவைத் திறந்து அவளை அமரவைத்தவன், தானும் ஏறிக்கொண்டான்.
“இங்க பார் சஹா நான் பார்கவ் கிட்ட பேசித்தான் பிளான் பண்ணேன். இங்க பாரு. பாரேன் ப்ளீஸ்” அவள் கன்னத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன், “அவனால உன்னை எதுவும் பண்ண முடியாது. எதாவது முயற்சி செஞ்சான்னா அவனை தொலைச்சு கட்டிடுவேன் தொலைச்சு.என்னை நம்பி வா”
அவள் கண்ணீரைத் துடைக்க அவன் டிஷ்யூவை தேட ஈவா எடுத்துத் தந்தது, சஹானாவின் கண்களை மென்மையாகத் துடைத்தவன், ஈவாவிடம் “எல்லாம் உன்னால! மூடிக்கிட்டு வர்றதுக்கு என்ன? நான் சொல்ற எதையாவது கேக்குறியா நீ?”
“இல்ல” என்றது அசட்டையாக
“ரொம்ப பேசுற ஈவா நீ!”
“நான் பாட்டுக்கு டைப் பண்ணி காட்டிகிட்டு கிடந்தேன். எனக்கு பேச சொல்லிக்கொடுத்து இப்போ பேசறே பேசறேன்னு தினமும் திட்டறீங்க!” குழந்தையைப் போல ஈவா கோபித்துக்கொள்ள, சஹானாவிற்கு விநோதமாக இருந்தது.
“சரி தான்! உன்னை செஞ்சு பேசவச்ச என்னை….என்னை …” அவன் பற்களைக் கடிக்க,
“இப்போ கிழட்டினா வண்டி ஓட்ட முடியாது பாஸ்” என்றது
“என்னத்த?”
“செருப்பை பாஸ். செருப்பால தானே அடிச்சுக்கணும்னு சொல்ல வந்தீங்க?” ஈவா சொல்லவும் சஹானா சிரித்துவிட்டாள்.
கண்களில் நீருடன் சிரிப்பவளை ஒரு நொடி பார்த்தவன், “பொழச்சுப்போ! சஹா சிரிச்சதாலே நீ தப்பிச்ச இல்லை இந்த ஹைவேல தூக்கி போட்டிருப்பேன்” என்றவனும் சிரித்துவிட்டான்.
மெதுவாகக் காரைக் கிளப்பினான். பயணம் தொடர்ந்தது.
சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய, “ஆதன்…”
“ம்ம் என்னமா?”
“நீங்க எப்படி வீட்டுக்கு, என்னனு அறிமுக படுத்திவைக்கிறது? தருண் வேற…அவன் கிட்ட எப்படி…”
“ஏன்?”
“இல்ல அவனுக்கு உங்களை தெரியுமே பாத்திருக்கானே முன்னாடி” அவள் உதட்டைக் கடிக்க,
“அவ்வளோ ஞாபக சக்தியா அவனுக்கு? ம்ம்ம் பேசாம மரு வச்சுக்கிட்டு வரவா?” சிரிக்காமல் கேட்டவனை என்ன செய்வதென்று விளங்வில்லை,
“விளையாடுறீங்களா?”
“இல்லையே. மோரோவர் நான் ஹோட்டல்ல தான் தாங்கிக்க போறேன். நீ கண்டதையும் யோசிக்காம சும்மா இரு அது போதும். நாங்க பாத்துக்கறோம்!”
அவன் எங்கோ தங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, “ஹோட்டல் எல்லாம் வேண்டாம். மைதானம் மாதிரி வீடு இருக்கு”
அவள் அழைப்பு அவனுக்கு இனிப்பதேன்? அவள் சங்கடப்பட வேண்டாம் என்றுதானே வெளியே தங்கிக்கொள்வதாய் பார்கவை வற்புறுத்தினான். அவள் மறுபடியும் அவனை வீட்டுக்கு அழைக்கத் தன்னையும் மீறி முறுவல் தவழ்ந்தது அவன் முகத்தில்.
தருணை பற்றிச் சஹானா துவங்க, அதெல்லாம் அவனும் பார்க்கவும் பார்த்துக்கொள்வார்கள் என்று விவரம் தர மறுத்துவிட்டான். மனம் பயத்தில் தாறுமாறாகத் துடித்தாலும் ஏனோ ஆண்கள் இருவரையும் நம்பி ஆசுவாசம் அடைந்தாள்.
பத்தே கால் அளவில் அவர்கள் வீட்டை அடைந்தார்கள். காரைக் காவலாளி தடுக்கும் முன்னே ஓடிவந்தான் பார்கவ்.
“உள்ள பார்க் பண்ணிக்கோங்க” காரை நிறுத்த பார்கவ் காட்டிய கேரேஜில் ஏற்கனவே மூன்று கார்கள் அதில் ஒன்று பிரிட்டீஷ்காலத்து கிளாஸிக் வகையைச் சார்ந்தது! மியூசியத்தில் வைக்கலாம், சாலையில் ராஜாவைப் போல் உணர வைக்கும் பளபளக்கும் அடர் சிவப்பு அற்புதம்!
‘சாவி கிடைச்சா ஒரு ரவுண்ட் ஓட்டிப்பாக்கலாம். கேட்டுபாப்போமா?” ஆதனின் சபலத்தைத் தூண்டியது. இன்னும் இரண்டு கார்களைக் கூடத் தாராளமாகவே ஏற்றுக்கொள்ளும் கேரேஜ். அதில் ஓரமாக ராயல் ஏபீல்டு.
வெளியே பார்வையை ஓடவிட்டவன் கண்கள் அகலமாக விரிந்தன.
பிரம்மாண்டமாய் விரிந்து இரண்டு தளத்திற்கு உயர்ந்து நின்ற வீடு கொஞ்சம் தமிழ்நாடும் பிரிட்டிஷும் சேர்ந்து செய்த ஆங்கிலோ இந்தியக் குழந்தை சாயல். பிரிட்டிஷ் தாக்கம் கொஞ்சம் தூக்கலாகவே பட்டது ஆதனுக்கு.
வெள்ளை வெளேரென்று இரவிலும் கண்ணைப்பறித்து. இது சஹானா சொன்னது போல மைதானமே தான். முன்னாலிருந்த காலி இடங்களில் கிரிக்கெட் ஆடலாம்!
ஆதன் கையைக் குலுக்கி வரவேற்று, தங்கையின் பையை எடுத்துக்கொண்ட பார்கவோ, அவன் அருகில் புன்னகையுடன் தன்னை பார்க்கும் சஹானாவோ இந்த வீட்டின் வாரிசுகள் என்றால் நேற்றுவரை பொய் என்றிருப்பான்.
எளிமையான உடைகள் ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு நட்பாகப் பழகும் குணம். வாய்ப்பே இல்லை அண்ணன் தங்கை இருவரும் ம்யூஸிய பிறவிகள், அந்த அடர் சிவப்பு கிளாஸிக் அற்புதத்தைப் போல!
“ட்ராபிக் ரொம்ப இருந்ததா? சாரி என்னால தான் உனக்கு சிரமம் நான் வந்திருப்பேன் பாட்டிக்கு டிஸ்க் வலி அதான் டாக்டர் பிசியோ தெரபின்னு…” பார்கவை குறுக்கிட்ட ஆதன்,
“பரவால்ல அதுனால என்ன. எனக்கும் இந்த குட்டி ட்ரிப் மாறுதலா இருக்கும் அதான் நீ கூப்பிட்டதும் ஓடியே வந்துட்டேன்”
ஒருமையில் இருவரும் பேசிக்கொள்வதை ஆச்சரியமாகப் பார்த்தாள் சஹானா.
ஆதன் தன் ஒற்றை பையை எடுத்துக்கொண்டு டிக்கியை சாத்தி காரை லாக் செய்ய, “ஈவா!” பதறினாள் சஹானா.
“எஸ் எஸ்!” என்றவன் காரைத் திறந்து எதையோ எடுக்க,
“ஈவா யாரு?” பார்கவ் சஹானாவைப் பார்க்க, சிரித்தவள் ஆதனின் கையைச் சுட்டிக்காட்ட,
“எலியா!” ஆர்வமானான் பார்கவ். “எலி வளக்கறியா, வினோதமான டேஸ்ட்பா உனக்கு” ஆதன் கையில் குழந்தைபோல அமர்ந்து தன்னை பார்த்திருந்த வெள்ளை எலியைக் கொஞ்ச வேண்டும் போல் மனம் துடித்தது.
“இத பிடி” பையைச் சஹானாவிடம் கொடுத்தவன், ஆதன் பேசும்முபே “கடிக்குமா?” ஈவாவை தொடப் போக,
ஈவா “ஹாய் பார்கவ்” என்றதில்,
பார்கவ், “ஹே பேசறது! பொம்மையா? அச்சு அசல் எலிமாதிரி இருக்கே” அதன் தலையை ஒற்றை விரலால் தொட்டுப் புன்னகைத்தான்.
முதன் முதலில் சஹானா ஈவாவை இதேபோல் தொட்டதும், பேயென்று அவள் அடித்த கூத்தையும் நினைத்துச் சிரித்துக் கொண்ட ஆதன்,
“ரோபோ! இட்ஸ் ஓகே. எடுத்துக்கோ ஒன்னும் செய்யாது. ஈவா என் அசிஸ்டன்ட்” என்று நீட்ட, சற்று தயங்கி வாங்கிக்கொண்ட பார்கவ்,
“செம்ம கியூட்ல?” அவன் தங்கையைப் பார்க்க,
“அழகுதான் ஆனா பேச ஆரம்பிச்சா அவளோதான். ஹே ஈவா என்னை மட்டும் அவ்வளோஓட்டறே? எங்க அண்ணனை ஒன்னும் சொல்ல மாட்டியா?”
உரிமையாகப் பார்கவின் தோளில் சஹானா சாய்ந்திருக்க, முதல் முறை பார்கவ் மேல் பொறாமை எழுந்தது ஆதனுக்கு. ஆதிராவும் இப்படித்தானே தன்னிடம் என்று நினைத்து அதை ஒதுக்கிக்கொண்டான்.
“ஆதன் நான் சொன்ன மாதிரி நீ என் பிரென்ட் ஆனா இவளோட கூட வேலை பண்றே. இவகிட்டயும் சொல்லிட்ட தானே என்று கேட்டுமுடிப்பதற்குள்.
“எதே கலீகா? இவர் அந்த கம்பெனியோட ஓனர் டா” சஹானா விழிக்க
“வழில கொஞ்சம் டெங்ஷன்ல இவகிட்ட சொல்ல மறந்துட்டேன்” ஆதன் உதட்டைக் கடிக்க,
பார்கவ் “சுத்தம்! இது மனப்பாடம் பண்ணாலே பொய் சொல்லத் தெரியாம உளறும். இப்போ சொல்லிக்குடுத்தா இவ ஆரம்பிக்கும்போதே சாயம் வெளுத்திடும்!”
“என்னடா புரியறமாதிரி சொல்லு” சஹானாவிற்கு விளங்கவில்லை.
“சஹா, நீ எங்க விளையாட்டுல ஒப்புக்கு மாதிரி நினைச்சுக்கோ. என்னைப் பத்தி எது கேட்டாலும் நீ பேசவே கூடாது. நாங்கதான் பேசுவோம்!” ஆதன் அவசரமாகச் சொல்ல,
“ஆமா அம்மா தனியா வந்து போட்டு வாங்குவா, சமாளிக்க தெரியலைனா பேசமா தூங்கற மாதிரி போர்வையை மூஞ்சிக்கு மேல போட்டுக்கோ”
“ஒரு மண்ணும் புரியல!” காலை உதைத்துக் கத்தியவளைப் பார்க்கையில்,
‘கண்டிப்பாகச் சொதப்பப் போகிறோம்’ என்று ஆண்கள் கண்களால் பேசிக்கொண்டனர்.
ஈவாவை வாங்கிக்கொண்ட ஆதன் அதைத் தூங்கச்சொல்ல, “நோ பாஸ். டார்கெட் இப்போ…”
“தூங்கு! இல்ல கொன்னுடுவேன்” கோவத்தை உணர்த்த ஈவா உடனே அமைதியானது.
மறுபடி வேகமாகச் சஹானாவிற்குச் சொல்லிக்கொடுத்தவர்கள் கடவுளை வேண்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
***