EVA18

ELS_Cover3-6067da84

18

அலுவலக லிஃப்ட்டிற்குள் நுழைந்தவள் இதயம் சொல்லத் தெரியாத சந்தோஷத்தில் படபடத்தது. ஆதனை பார்க்க ஆசையும் அச்சமும் போட்டிப்போட லிஃப்ட் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தில் அரும்பிய புன்னகையின் விதை களிப்பா கலவரமா?

யோசித்திருக்கும் போதே தளத்தை அடைந்தவள் தயக்கமும் ஆர்வமும் ஒன்றுசேரத் தன் கேபினை நோக்கி மிதந்தாள். கண்கள் இயல்பாக ஆதனின் அறையை நாட, அவன் படித்துக்கொண்டிருந்தான்.

காலை வேளைகளில் சஹானாவிற்கு முன்பே வந்துவிட்டால் வரவேற்பாக புன்னகையோ தலையசைப்போ தவறாமல் தருபவன் இன்று திரும்பியும் பார்க்காதது ஏன்? உண்மையாக கவனிக்கவில்லையா? பாசாங்கா? குழம்பித் தவித்தவள் மனம், அவன் பார்வைக்காக ஏங்க அலைபாயும் மனதை இழுத்துப்பிடித்துக் கடிவாளமிட்டாள்.

அன்றைக்கு செய்யவேண்டிய பட்டியலைக் கண்கள் பார்வையிட்டாலும் கருத்தில் அவனே!
முரண்டு பிடித்த மனம் திமிறிக்கொண்டு அவன் அறைக்கு ஓட, பெண்ணவள் கால்களும் பின் தொடர்ந்தன. கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை, ஒருமுறை ஏறெடுத்து பார்த்தவன் ஃபைலில் ஆழ்ந்தான்.

‘அடப்பாவி அவ்ளோதானா?’ மனம் அலற, கையைப் பிசைந்தபடி மௌனமாக சில நொடிகள் நின்றவள், அவன் கவனத்தை ஈர்க்க, லேசாகத் தொண்டையை செருமினாள்.

அவனோ சலனமின்றி அடுத்த பக்கத்தைப் புரட்டினான்.

சஹானா கடுப்புடன் ‘ம்ம்ம்க்கும்…’ என்று நீட்டி முழக்கியதில் செருமல் இருமலாக உரு மாற, தண்ணீர் கிளாஸை அவளிடம் நகர்த்தியவன் முகத்தில் மின்னலாய் தோன்றி மறைந்த விஷயம புன்னகையை ‘லொக் லொக்’கிற்கிடையில் அவள் கவனிக்கவில்லை.

வேகமாக அதை குடித்து, புறங்கையால் உதட்டைத் துடைத்துக் கொண்டவள், “எவ்ளோ நேரமா சும்மா நிக்குறது? கொஞ்சமான என்னனு கேட்டீங்களா?” என்று புகார் வாசிக்க,

“ஏன் சும்மா நிக்குற?”

“பொழுது போகல!”

“வாய்ப்பில்லையே! போன வெள்ளிக்கிழமையே நீ எனக்கு ரெவ்யூ அனுப்பி இருக்கணும்” என்றவன் ஸ்டாண்டிலிருந்து பென்சிலை எடுத்து கோப்பில் எதையோ குறித்துக் கொண்டான்.

‘எப்போ விடியும்? எப்போடா பார்ப்பேன்னு? தூக்கம் வராம தவிச்சு ஓடோடி வந்தா… இவர் பெரிய பிஸ்து, நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டாராம்! இதுலே ரெவ்யூ வேணுமாம் ரெவ்யூ! மண்ணாங்கட்டி!’ மனதுக்குள் அவனை அர்ச்சித்தவளின் கோபப்பார்வை துளைத்ததோ?

“இன்னுமா நிக்குற?” கண்ணை உயர்த்தினான்.

“ஏன் நிக்க கூடாதா? அப்படி ஏதாவது புது ரூலா?” அவள் கண்களைக் குறுக்க,

ஃபைலை மேஜையில் வைத்துவிட்டு எழுந்தவன், “நில்லு! யார் வேணாம்னா? லேப்டாப்பை எடுத்துட்டு வந்து நின்னுக்கிட்டே கூட வேலையை செய். எனக்கு ரெவ்யூ வரணும் அவ்ளோதான்” அலட்சியமாகச் சொல்லிவிட்டு கதவை நோக்கி நடந்தவன் முகத்தில் கள்ளச் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

அவன் சென்றுவிட கூட்ஸ் வண்டிபோல் ஆவேச பெருமூச்சுடன் இருக்கைக்குத் திரும்பியவள் கீபோர்டின் மேல் விரல் வழி தாக்குதலைத் துவக்கினாள்.

***

“பார்த்தால் பசிதீரும்ன்றது இதுதானா?” ஆதனின் குரலில், டிஃபன் பாக்ஸை வெறித்திருந்த சஹானா திரும்பினாள்.

“என்கூட சாப்பிட வா” என்றவன் சென்றுவிட, ‘மாட்டேன்!’ மனதிற்குள் உரக்க கத்தியவள், செலுத்தபட்டவள் போல அவன் பின்னே சென்றாள்.

கண்ணாடி சுவரின் அருகேயிருந்த மேஜையில் எவர்சில்வர் டிஃபன் பாக்ஸை பிரித்து வைத்துக்கொண்டிருந்தவன், சத்தமின்றி வந்து நின்றவளுக்கு பார்வையால் எதிர் சோஃபாவை காட்டினான்.

நடுப்பகல் உச்சி வெய்யிலை வடிகட்டி மிதமான இதமான அளவில் அறைக்குள் அனுப்பிய கண்ணாடி சுவரின் வெள்ளை பிளிண்ட்ஸும், ஏசியும் சென்னையை ஊட்டி என்றன.

“எதுக்கு இப்போ உர்ன்னு இருக்க? சீக்கிரம் சாப்பிடு, உன்கூட கொஞ்சம் பேசணும்” என்றவன் அவள் மௌனத்தைத் தாங்க முடியாமல், “ஹேய்! சும்மா சீண்டினா இப்படியா முகத்தைத் தூக்கி வச்சுப்ப? அய்யய்ய…” என்று கேலி செய்யக் கோவமாக நிமிர்ந்தவள்,

ஜீன்ஸ் டிஷர்டில், கண்ணை உறுத்தாத அழகுடன் கள்ளமில்லாமல் சிரிப்பவனின் வசீகரத்தில் தன் வைராக்கியம் மென் துகளாய் காற்றில் கரைவதைக் கண்டாள்.

“எதுக்கு இந்த விளையாட்டு…” துவங்கியவள் அவன் பார்வையைத் தவிர்த்து, “காலைலேந்து பேசணும்னு…” என்று குரலை தாழ்த்த,

“அப்போ பேசு” என்றவன், சாப்பிடத் துவங்க,

சட்டென அவள் முகம் சிவக்க, வெட்கத்தை பதட்டமெனத் தவறாகப் புரிந்து கொண்டவனோ,

“ஹேய் எந்த டென்ஷனும் வேணாம். என்கிட்டே நீ எப்போவும் போலவே இருக்கலாம். போன வாரம் நீ பார்த்த அதே ஆதன் தான் நான். நிச்சயமானதால எனக்கொண்ணும் கொம்பு முளைச்சுடல” என்றவன் அவள் கிளுக் சிரிப்பில்,

“என்ன கொம்பு வச்சு பார்த்துட்டியோ?” என்று நக்கலாக கேட்க அவளோ ஆமென்று தலை அசைத்ததில், புருவம் விரிந்தவன் சிரித்துவிட்டான்.

சின்ன சின்ன சீண்டல்களும், அதனைத் தொடர்ந்த அலுவலக பேச்சுக்களும் துணை சேர்க்கச் சாப்பிட்டு முடித்தனர்.

ஆதன் மொபைலை பார்த்தபடி சாய்ந்து அமர, சஹானா தயக்கத்துடன் துவங்கினாள்.

“பாஸ்”

“எஸ்”

“அது…”

“எது?”

“ஆண்டிக்கு…”

“எந்த ஆண்டி?”

“உங்கம்மா! மீனாக்ஷி ஆண்டி…”உரக்க சொன்னவள், தாழ்ந்த குரலில் “அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு தெரியுது. பெரியவங்க மனசை எதுக்கு கஷ்டப்படுத்தி…பேசாம நாம…”

குறுக்கிட்டவன், “ஆதிரா உபயமா? இங்க பாரு அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன். புரிஞ்சுப்பாங்க. நீ கண்டதையும் யோசிக்காத” கடுமையாக சொல்ல,

மறுத்து பேச வாயெடுத்தவள், அவன் “விடு சஹா!” என்று கடிந்துகொண்டதில் மௌனமானாள்.

இறுகிய சூழ்நிலை நிலவ திடீரென்று ஆதன் அவளை அறை கதவைச் சாத்திவிட்டு வரும்படி சொல்ல, வேண்டா வெறுப்பாக எழுந்தவள் கதவைச் சாத்திவிட்டு வந்து அமர்ந்தாள்.

சஹானாவின் முகத்தைப் பார்த்தபடி ஆதன் யோசனையில் ஆழ, சங்கடமாய் உணர்ந்தவள், தாங்கமுடியாமல், என்னவென்று மெல்லிய குரலில் கேட்க,

“ஒரு உதவி…”

“ம்ம்?”

“ஒருவேளை தேவைன்னா ஈவாவை கொஞ்ச நாள் உன்கூட வச்சுக்க முடியுமா?”

அதில் அதிர்ந்தவள் “நானா?” என்று விழிகள் விரிய,

“வற்புறுத்தல. ஆனா வேற யார்கிட்டேயும் நான் ஈவாவை கொடுக்க முடியாது…சரி விடு பரவால்ல. மேனேஜ் பண்ணிக்கறேன்” என்றான் உணர்வின்றி.

கல்யாண கனவுகளில் தான் இருக்க, ஆதனும் அதைப் பற்றித்தான் பேசப்போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்த்தவளுக்கு அவன் ஈவா என்றதில் கொஞ்சம் ஏமாற்றம் தோன்றினாலும், தான் கேட்காமலே எப்போதும் துணையாய் நிற்பவன் தன்னிடம் உதவி கேட்கத் தயங்குவது வலித்தது.

“தாராளமா பாத்துக்குறேன். எப்போ தேவையோ சொல்லுங்க” என்றாள் வேகமாக.

சட்டென்று ஆதனின் முகத்தில் நிம்மதி பரவியது. “தேங்க்ஸ்” என்றவன், “ஏன் என்னன்னு கேட்க மாட்டியா?” புருவம் முடிச்சிட்டு கேட்க,

“கேட்கணுமா?” அவள் விழித்தாள்.

அதில் புன்னகைத்தவன் “தோணினா கேட்கணும். தோணிச்சா?”

“தருண் எதாவது தொந்தரவு கொடுப்பான்னு நினைச்சு ஈவாவ பாதுகாப்புக்கு கொடுக்கறீங்களா?” மறுப்பாகத் தலையசைத்தவன்,

“நோ நோ! ஈவாக்கு பாதுகாப்பா தான் உன்னை இருக்க ரிக்குவெஸ்ட் பண்றேன்” என்றான்.

“வாட்! அதுக்கு நான் பாதுகாப்பா? கிண்டல் பண்ணாதீங்க பாஸ்!” கையை முகத்தின் முன்னே வீசி சிரித்தவள், “நானே பயந்தாங்குளி! இதுல நான் போயி ஈவாக்கு பாதுகாப்பா? கிண்டல் தானே”

“சீரியஸாதான் கேக்கறேன் சஹா. உன்னால என்ன முடியும் முடியாதுன்னு எனக்கு இப்போ ஓரளவுக்குத் தெரியும். ஈவா கொஞ்ச நாளைக்கு உன்கூட இருந்தா பெட்டர். ஏன்னா…” என்று அவன் நிறுத்தம் தர,

“பரவால்ல காரணம் வேண்டாம். எப்போ வேணுமோ ஈவாவை அனுப்புங்க பாத்துக்குறேன்” என்றவள், “ஆனா ஹாஸ்டல்ல எப்படி? நீங்க ஈவா பத்தி யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னீங்களே”

“அது தான் நெக்ஸ்ட் சொல்ல வந்தேன். எங்க நீ பேசவிட்டாத்தானே?” வம்பிழுத்தவன், “இனிமே ஹாஸ்டல் வேண்டாம், கல்யாணம் வரை நம்ம பிளாட்ல தங்கிக்கோ. பார்கவ் கிட்ட சொல்லிட்டேன் அவன் உங்கப்பாக்கிட்ட சொல்லிடுவான். இன்னிக்கி நைட்லிருந்து நீ அங்க தங்கிக்கோ”

இமைகள் படபடத்தவள், “ஐயோ அதெல்லாம் வேணாம்” நெற்றியை பிடித்துக்கொண்டு, ஏன் அனாவசிய தொந்தரவு என்று மறுக்க, ஆதன் வெகுநேரம் வாதிட்டுச் சம்மதிக்க வைத்தான்.

மாலை அலுவலகம் முடிந்ததும் அவளை விடுதியிலிருந்து தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றான்.

அழகிய இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த பிளாட்டில், வாயில் கதவைத் திறந்ததும் வலப்புறம் திறந்த சமயலரை ஹாலை பார்த்தபடி இருக்க, இடப்புறம் இரண்டு படுக்கை அறைகள் குளியளறைகளுடன் இருந்தன.

சமையல் பாத்திரங்கள் முதல், பிரிட்ஜ், டிவி, மைக்ரோவேவ் ஓவன், வாஷிங் மெஷின் என பலதரப்பட்ட சாதனங்கள் இருந்தன.

“ஒருத்திக்கு அதுவும் கொஞ்ச நாளைக்கு இவ்ளோ ஐடெம்ஸ் ஓவரா இல்லையா பாஸ்?”

“ இதுவே போதுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்”

“ஆதன்!”

“லுக் சஹா நீ என் பொறுப்புன்னு ஆனா அப்புறம் நான் தானே உனக்கு வேண்டியதை பார்த்துக்கணும்?” புருவத்தை உயர்த்தி சொன்னவன் பிரிட்ஜை திறந்து, உள்ளே இருந்த பொருட்களை பார்வையிட்டான்.

“ரெண்டு நாளைக்கு தேவையான காயெல்லாம் இருக்கு, அட! தோசைமாவு கூட கொண்டுவந்து வச்சுட்டார் போல இருக்கு தயா அங்கிள்” என்றபடி உள்ளே இருந்த பழச்சாற்றை கண்ணாடி கிளாஸ்களின் ஊற்றி ஒன்றை அவளிடம் தந்து,

“வெல்கம் சஹா” என்று புன்னகைத்தான்.

“தேங்க்ஸ்” பெற்றுக்கொண்டவள் ஒரு மிடறு பருகிவிட்டு, “இருந்தாலும் எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்? சோப்பு பேஸ்ட் கூடவா வாங்கி வைக்கணும். டூ மச்சா இல்லையா?” அவனைச் செல்லமாய் முறைக்க,

பேச்சை மாற்ற ஆதன் “இன்னிக்கி நானும் உன்கூட சாப்பிடலாமா?” என்று சமையல் மேடையில் சாய்ந்து கொண்டான்.

அவனையே சிலநொடிகள் இமைக்காது பார்த்தவள், “தாராளமா. இது உங்க வீடு என்னை கேட்கணுமா?” புன்னகைக்க,

“நம்ம வீடு!” திருத்தியவன், கிளாஸை மேடையில் வைத்துவிட்டு, “கிரேட்! நான் போய் பிரெஷ் ஆகிட்டு வரேன். வழக்கமா நான் ஒன்பது மணிக்குத்தான் சாப்பிடுவேன். சோ டேக் யுவர் டைம்” என்றவன் மேலும் சிலவற்றை அவளுக்குக் காட்டிவிட்டு கிளம்பினான்.

குளித்துவிட்டு பால் காய்ச்சி, அங்கிருந்த அழகிய சிறிய பூஜை மாடத்தில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டாள்.

பார்கவுக்கு ஃபோன் செய்தவள் அவனுடன் பேசிக்கொண்டே, தன்னுடைய உடைகளையும் உடைமைகளையும் படுக்கை இருந்த அறையின் அலமாரியில் அடுக்கிவைத்து, சமையல் வேலையைத் துவக்கினாள்.

ஆதன் நுழையும் போதே “ப்பா! வாசனை செம்மயா இருக்கே என்ன பண்றே?” என்று ஆர்வமாகச் சமையலறையை எட்டிப் பார்க்க,

“சிம்பிள் தான்” என்றவள், “நீங்க உட்காருங்க வந்துடறேன்” என்று மீதி சமையலை கவனிக்க,

பெரிய மேஜை, நாற்காலி மற்றும் சிறிய அலமாரி கொண்ட இரண்டாவது படுக்கை அறைக்குள் சென்ற ஆதன் தன் பெட்டியிலிருந்து லேப்டாப் மற்றும் சிலவற்றை எடுத்து மேஜையில் வைத்தான்.

அலமாரியிலிருந்து மேலும் சில உபகரணங்களை எடுத்து, அனைத்தையும் இணைத்து, லேப்டாப்பை திறந்து, பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஈவாவை மேஜை மீது வைத்து இரண்டையும் ஆன் செய்தான்.

“குட் ஈவினிங் பாஸ்” அழகாய் கண் திறந்த ஈவா சுற்றி பார்வையிட்டு, தனது ஜிபிஎஸ் மூலம் இருப்பிடத்தை உணர்ந்து,

“எதுக்கு இங்க வந்துருக்கோம் பாஸ்? என் சார்ஜிங் ஸ்டேஷன்லாம் கொண்டு வந்துருக்கீங்க?” என்று அவன் அருகில் சென்று லேப்டாப் மீது ஏறி நிற்க,

அதை எடுத்துப் பக்கதில் வைத்தவன், “இங்க சஹா கூட நீ கொஞ்ச நாள் இருக்கணும். உனக்கு தேவையான எல்லா செட்டப்பும் இந்த ரூம்ல ரெடி. விஹான் ஊருக்கு போறவரை தான். டோன்ட் வொரி. நான் வந்து வந்து போவேன்” என்றபடி லேப்டாப்பில் எதையோ டைப் செய்யத் துவங்க,

“சஹா கூடவா? பாஸ் அவ ஒரு இம்சை! தலைவலி! வைரஸ்!” ஈவா அலுத்துக்கொள்ள,

“அவ காதுல விழுந்தா அவ்ளோதான் நீ” ஆதன் சிரிக்க,

“எல்லாம் விழுந்துது!” உள்ளே நுழைந்த சஹானா ஈவாவை செல்லமாக முறைத்து, ”வாடி வா! என்கூட தானே இருக்க போறே வச்சுக்கறேன்” மிரட்டியவள், ஆதனிடம் “என்ன பாஸ் இது, மினி லேபா மாத்திட்டங்களா?” என்று கண்கள் விரிந்தாள்.

சற்று முன்புவரை வெறுமையாய் இருந்த டேபிள் மீது இப்பொழுது, ஓரத்தில் ஈவாவின் சார்ஜிங் கண்ணடி வீடு, லேப்டாப், மானிடர் மற்றும் சிலபல பெயர் தெரியா சாதனங்கள் புதிதாய் தோன்றி இருக்க, வியப்புடன், “எங்க இருந்துது இவ்வளவும்?” கேட்க,

“கப்போர்டுல வச்சுருந்தேன்” என்றான்.

“ஈவாவை பாத்துக்க நான் இங்க வர ஒத்துப்பேன்னு அவ்ளோ நம்பிக்கையோ?”

“ஒத்துக்கலைன்னா யார் விட்டா?”

“சரி தான்” சிரித்துவிட்டவள், “ஆமா இத்தனை பரிவாரங்களோட தான் ஈவா எங்கேயும் நகருமா?” கிண்டலக கேட்க,

அவனோ சீரியசாக, “நோ நோ! இதெல்லாம்…கொஞ்சம் தேவை…” சொல்லிக் கொண்டிருந்தவன் அழைப்பு மணி ஒலிக்கப் பேச்சை நிறுத்தி, “இங்க யார் வாரா?” என்று முகம் இறுக,

“தயா அங்கிள் தான் வந்திருப்பார்” என்றவள் முன்னே நடக்க, அவளைத் தடுத்தவன் தானே எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தான்.

சஹானா சொன்னதுபோல ஆதன் வீட்டு சமையல் காரர் தயாளன் தான் வந்திருந்தார் கையில் பையுடன்.

ஆதன் கேட்கும் முன்னே, “வீட்டுக்கு டின்னர் கொடுத்து அனுப்புறேன்னு சொன்னேன் அதான்” என்றவள் அவரை உள்ளே அழைத்து உணவைப் பேக்செய்து கொடுத்து அனுப்பினாள்.

“எதுக்கு தேவையில்லாத இழுத்து விட்டுக்கறே? நானே சும்மா விளையாட்டுக்கு எனக்கும் சமைக்க சொன்னா, நீ என்னடான்னா இப்படியா பண்ணுவ?” ஆதன் முறைக்க,

உணவுகளை மேஜைக்கு எடுத்துவரத் துவங்கியவள் “என்ன பாஸ் நீங்க? முதல் முதலா சமைக்கிறேன். அதான் ஆசையா கொடுத்து அனுப்பினேன்” என்றாள்.

“என்னது முதல் முதலா சமைக்கிறியா?” ஆதன் போலியாய் அதிர,

“பாஸ் எதுக்கும் நான் எல்லாத்தையும் பார்த்து அனலைஸ் பண்றேன். அதுவரை ஒரு ஸ்பூன்கூட சாப்பிடாதீங்க! ஷி ஈஸ் டேஞ்சரெஸ்!” என்ற ஈவா இரண்டு காலில் நின்று முன் கால்களை கைகளாய் நீட்டி உணவை நெருங்க,

“அடிங்க! நான் டேஞ்சரா? எடுடா அந்த துடைப்ப கட்டையை இன்னிக்கி உன்னை ஒரு வழி பண்ணல…” சஹானா அதை கரண்டியால் அடிக்க, ‘நங்!’ என்ற ஒலியில் அவளும் ஆதனும் காதைப் பொத்திக் கொண்டனர்.

“முட்டா பீஸே சொன்னேன்ல டைட்டேனியம்னு. பாரு ஒரு கரண்டி உன்னால சொட்டை” ஈவா ஏளனமாகச் சொல்ல, பதறி அவள் கரண்டியை திருப்பிப் பார்க்க, ஆதனும் ஈவாவும் சிரிக்க,

ஈவா, “என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ? இடியட்!” என்று பரிகசித்து.

ஆதன், “ஈவா! இனிமே சஹாவை இப்படி பேச கூடாது!” என்று கடுமையாக உத்தரவிட,

“ஏன்?” ஈவா அவன் பக்கம் திரும்பியது.

“ஏன்னா இனிமே சஹா என் வைஃப்! சோ பார்த்து பேசு!” எச்சரித்தான்.

“இன்னும் கல்யாணம் ஆகலை! எப்படியும் உங்களுக்குத்தான் வைஃப். எனக்கு ஜுனியர் தான்”

“ஹேய்!” கோவமாக அவன் எழ,

“ஓ ஓ …கூல் பாஸ். அது எதோ தமாஷ் பண்ணுது. நீங்க சாப்பிடுங்க ஆறிடும்” அவனை சமாதானம் செய்தவள், ஈவாவை “யார் உன்னை இப்படி வாயடிக்க வச்சது? சரியான ஓட்ட வாய்! உன்னை செஞ்சவனும் லொடலொட்டையா தான் இருப்பான்!” சிரிப்புடன் பழித்தாள்.

ஈவா ஆதனை பார்க்க, சஹானா அவன் புன்னகையில் உறைந்து உதட்டைக் கடித்துக்கொண்டு “சாரி” என்று அசடு வழிந்தாள்.

அவனுக்கு பரிமாறி அமர்ந்தவளைக் கண் இமைக்காது பார்த்தவன், “எதுக்கு இவ்ளோ வெரைட்டி? பாயசம், கோபி ஃப்ரை, போறாததுக்கு சப்பாத்திக்கு மூணு சைட் டிஷ்!” என்று கேட்டாலும் அவள் தனக்காகப் பார்த்துப் பார்த்து சமைத்திருந்ததில் உள்ளூர சந்தோஷமாகத் தான் உணர்ந்தான்.

சாப்பிட்டு முடித்தவர்கள் ஹாலில் அமர்ந்துகொள்ள, ஈவாவிற்கு ஏதோ வேலை சொல்லி அறைக்கு அனுப்பி வைத்த ஆதன், டிவியை ஆன் செய்ய, நேரம் கிட்டத்தட்ட பத்தரையை நெருங்கியதைக் கவனித்தவள், அவனிடம் அதை சுட்டிக்காட்டத் தயங்க,

அவனோ கிரிக்கெட்டை வைத்துவிட்டு சோஃபாவின் அடிப்பாகத்தை வெளியே இழுத்து அதை மெத்தையாக விரிவாக்கிக் கால் நீட்டி வாகாக சாய்ந்துகொண்டான்.

‘அடப்பாவி நேரமாச்சே கிளம்புவேன்னு பாத்தா நீ என்னடான ஆனந்தமா சாஞ்சுகிட்டே’ நெளிந்தவள், செய்வதறியாது விழிக்க,

“சஹா ரொம்ப ஹெவியா இருக்கு சாப்பிட்டது. கொஞ்சம் லைட்டா மோர் பெருங்காயம் தரியா?”

“இதோ” என்றவள் சமையலறையில் வேலைசெய்தபடி ஆதனை பார்த்தாள்.

குஷனை கட்டிக்கொண்டு கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு கமெண்ட் கொடுத்துக்கொண்டு காற்றில் கையை வீசி வீசி மேட்சில் ஆழ்ந்திருப்பவனைப் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது.

“இன்னுமா கலக்கற?” அவன் திரும்ப, தடுமாறியவள், “இதோ ஆச்சு அது…” என்று பதற, எழுந்து வந்தவன்,

“என்னது இது வெறும் தண்ணிய கலக்கிட்டு இருக்க?” என்றதில் குனிந்து டம்ளரைப் பார்த்தவள் வெறும் நீரில் உப்பும் பெருங்காயமும் சேர்த்து கலக்கி கொண்டிருந்ததை அப்பொழுது தான் கவனித்தாள்.

அவள் அசடு வழிய, “கவனம் எங்க மேடம்?” கிண்டலாகக் கேட்டவன், அதில் தயிரை சேர்க்க வேகவேகமாக மோர் தயாரித்து ஆதனிடம் கொடுத்து, விட்டால் போதுமென்று அறைக்குள் புகுந்துகொள்ள, சிரித்துக்கொண்டவன் டிவி முன்பு அமர்ந்தான்.

நகத்தைக் கடித்தபடி படுக்கையில் உட்கார்ந்தவள், அவ்வப்போது எட்டி எட்டி பார்க்க, அவனோ கிரிக்கெட்டே கதியென்று இருந்தான்.

ஒரு பக்கம் அலுப்பில் உறக்கம் கண்களைத் தழுவ மறுபக்கம் ஆதன் இருப்பது சொல்லத்தெரியாத பதட்டத்தைத் தர, செய்வதறியாது அமர்ந்திருந்தாள். சுமார் அரை மணிநேரம் கழிய, அறை கதவைத் தட்டும் ஓசையில் நிமிர்ந்தாள். ஆதன் நின்றிருந்தான்.

“எனக்கு கொஞ்சம் ஈவா கூட ஒர்க் இருக்கு. நான் பூட்டிக்கிட்டு கிளம்பிக்கறேன் நீ தூங்கு” என்றவன் அவள் அறைக் கதவை சாத்திவிட்டு அடுத்த அறைக்குள் சென்றுவிட,

“என்ன பிரச்சனையா இருக்கும் ஈவாக்கு? எதுக்கு பாதுகாப்பு?” யோசித்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.

காலை அவள் கண்விழித்தபோது, மொபைலில் பல மெசேஜுக்கள்.

ஆதிரா,

“குட் மார்னிங்”

“சூப்பர் டின்னர்!”

“எல்லாருக்கும் பிடிச்சது”

“நீ எழுந்ததும் மெசேஜ் அனுப்பு அம்மா உன்கிட்ட பேசணுமாம்” என்று அனுப்பி இருந்தாள்.

ஆதன்,

“நான் கிளம்பலை. சோ எழுந்ததும் என்னையும் எழுப்பிடு. குட் நைட்” என்று அனுப்பி இருந்தான், அவன் மெசேஜ் வந்த நேரம் அதிகாலை நாலு!

“அடப்பாவி தூங்கவே இல்லையா!” நெற்றியில் அடித்துக்கொண்டவள், மெல்ல அந்த அறைக்கு செல்ல, அவனோ ஹாலில் சோஃபாவில் படுத்திருந்தான்.

சிலநிமிடங்கள் அவன் தூங்கும் அழகை ரசித்தவள் அவன் அசைய, வேகமாக அறைக்குள் ஓடினாள்.

குளித்துவிட்டு ஓசைப்படாமல் சமையலறைக்குச் சென்றவள், முடிந்தவரை அதிக சத்தம் எழுப்பாமல். டிகாக்ஷன் போட்டுவிட்டு, அவன் அருகில் சென்று சிலமுறை அவனை மென்மையாக அழைத்தாள்.

அவனோ ஆழ்ந்து உறங்க, தயக்கத்துடன் அவன் தோளைத் தட்டிஅழைத்தாள். 

“இம்சை! தூங்க விடு!” ஆதன் சுருண்டுகொள்ள, ‘இம்சையா!’ முறைத்தவள், “ஆதன்!” என்று சற்று உரக்க அழைக்க, கண்களை லேசாகத் திறந்தவன்,

“ஹே சஹா எப்போ வந்த?” கண்களைக் கசக்கிக் கொண்டு எழ,

“நான் எங்க வந்தேன்? நீங்கதானே வந்தீங்க!” அவள் முறைப்பு மாறாமல் சொல்ல,

“ஸ்ஸ் ஆமா…ப்ச் சாரி. குட்மர்னிங்!” புன்னகைத்தவன் அவள் முகத்தில் தெரிந்த மாறுதலில், “என்ன கார்த்தாலேயே கடுகடுன்னு? ஈவா கூட சண்டையா?” சோம்பல் முறித்தான்.

“நான் இம்சையா?” அவன் உதட்டைப் பிதுக்க,

“வாட்?” முகம் சுருக்கியவன், “ஹே சீ நான் ஈவான்னு நினைச்சு…அதுதான் என்னை எழுப்பும் எப்போவும்” எழுந்து நின்றவன், “கோவப்படறதுக்கு முன்னாடி யோசிக்கணும். இங்க இருக்கிறதை எப்போவாது உபயோகிக்க பழகுங்க மேடம்” அவள் நெற்றியில் ஒற்றை விரலைத் தொட்டு கிண்டலாகச் சொல்லிவிட்டு, அறைக்குள் சென்றான். 

“கலங்கார்த்தால ரொமான்டிக்கா எதாவது சொல்லுவான்னு பார்த்தா மூளை இருக்கானு கேக்குறான்!” பல்லைக் கடித்தவள்,

காலை உணவைத் தயார் செய்ய, பிரெஷ் ஆகி வந்தவன், ”ஹே நான் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு சாப்பிட்டுப்பேன். சோ எனக்கும் சமைக்காத”

“காஃபீயாவது குடிச்சுட்டு…”

“இல்ல இல்ல நேத்து ராத்திரி இங்க இருந்ததுக்கே அம்மாகிட்ட டோஸ் விழும்” செருப்பை போட்டுக்கொண்டவன், “இப்போவும் நேரம் ஆனா டென்சன் ஆகிடுவாங்க. சாரி மா. சரி நான் அரவுண்ட் எயிட்டுக்கு கீழ வந்துட்டு கால் பண்றேன் வந்துடு” என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிவிட,

அவனுக்காக ஆசையாகத் தான் தயாரித்து வைத்திருந்த காஃபீ கோப்பையை ஏமாற்றத்துடன் பார்த்தாள். 

அவள் தயாராகிச் சாப்பிட அமர, அருகே வந்த ஈவா, “சஹா ஏன் சோகமா இருக்க?” மேஜை மீது ஏறி அவளை உன்னிப்பாகப் பார்த்துக் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவள் ஈடுபாடேயின்றி இட்லியைச் சாப்பிட,

“என்னால உன் எக்ஸ்பிரஷனை படிக்க முடியும். நீ சோகமா இருக்க, கொஞ்சம் கோவமாவும் இருக்க” ஈவா அவள் அருகில் வர, அதையே சிலநொடிகள் பார்த்தவள்,

“உனக்கென்ன ஆபத்து ஈவா? நிஜமா நான் போயி உனக்கு பாதுகாப்பா?”  

“பேச்சை மாத்ரே” என்ற ஈவா, “மனுஷங்க நீங்க ஏன் கேள்விக்கு பதில் சொல்லாம மறுக்காம, தப்பிக்க வேற எதையோ பேசுறீங்க?” 

சஹானா வெற்று புன்னகையுடன் “என்ன பண்றது எங்களுக்கு அவ்வளவுதான் தைரியம்”சலித்துக்கொள்ள, 

“வேஸ்ட்! நீங்க தான் சிச்சுவேஷனை காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்க. மைண்ட்ல தோண்றதை பேசுங்க, செய்ங்க சிம்பிள்!”

“ஆஹான்! அட்வைஸ் பண்ற அளவுக்கு நீங்க பெரிய மனுஷியோ?” அதன் தலையில் செல்லமாய் தட்ட,

“எனக்கு வயசு இல்லை. உங்களுக்கு இருக்க கட்டுப்பாடுகள் எனக்கு பொருந்தாது. எனக்கு உணர்ச்சிகள் இல்லை அதுனால நான் பெரிசா சின்னதான்ற மாதிரி யோசனையோ காம்ப்ளெக்சோ இல்லை. நான் ஈவா அவ்ளோதான்” என்றது.

“சரி தான். இப்படி இருக்க முடிஞ்சா நல்லா இருக்கும். மனுஷியா பிறந்து…மொக்கை!”

அவள் மொபைல் ஒலிக்க, “ஸ்ஸ் அவர் வந்துட்டார் போல இருக்கே” வேகமாகப் பாதி உணவில் எழுந்தவள் அவன் அழைப்பை ஏற்று ஐந்து நிமிடங்களில் வருவதாய் சொல்லிவிட்டு தயாரானாள்.

அவளருகே ஓடிய ஈவா, வெள்ளி நிற மோதிரம் ஒன்றை நீட்டி “இதை போட்டுக்கோ” என்றது.

“இது எதுக்கு எனக்கு?” அவள் தயங்க,

“பாஸ் தான் கொடுக்க சொன்னார். நேத்து ராத்திரி முழுக்க உட்காந்து இதை ப்ரோக்ராம் பண்ணி இருக்கார் நீ வேண்டாம்னா கோபப்படுவார் பரவாயில்லையா?”ஈவா நக்கலாக மிரட்ட, 

“கொடு கொடு” என்று வாங்கிக் கொண்டவள், “இதுல என்ன ப்ரோக்ராம்?”

“அது ஸ்மார்ட் ரிங். பாஸ் அப்புறம் உனக்கு என்னனு விவரமா சொல்லுவார். சரி நீ கிளம்பு” என்ற ஈவா ஓடிவிட, சில முறை அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவள் இடது கை ஆள்காட்டி விரலில் அணிந்துகொண்டாள்.

***