EVA19

ELS_Cover3-71c7695a

19

மீனாக்ஷியுடன் பேசிவிட்டு மொபைலை மேசையில் வைத்த சஹானா தன் விரலிலிருந்த ஸ்மார்ட் மோதிரத்தை பிரஞையின்றி திருப்பிக்கொண்டிருந்தாள். 

ஆதனுக்கு தெரியாமல் தன்னை சந்திக்கவரும்படி அவர் அழைத்தது உறுத்திக் கொண்டே இருந்தது. 

எதற்காக இப்படி ரகசிய சந்திப்பு? அவளைப் பிடிக்கவில்லை என்பதை சொல்லி, அவளை கொண்டே  கல்யாணத்தை நிறுத்தும்படி கேட்கப் போகிறாரோ?

மனம் கண்டபடி யோசித்து தலைவலி பிளக்க நெற்றிக்கு முட்டுக்கொடுத்து சாய்ந்தவள், பலநிமிட போராட்டத்திற்குப் பிறகு, ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையில் அலுவலக பணியாக வெளியே சென்றிருந்த ஆதனுக்கு, சொந்த விஷயமாக அன்று சற்று சீக்கிரமாகப் புறப்பட அனுமதி கேட்டு மெசேஜ் செய்தாள். 

சில நிமிடங்களில் ஆதன், “ஓகே சஹா யூ கேரி ஆன். என் ரூம் லாக் பண்ணிடு. நான் ரிடர்ன் ஆக ஃபைவ் ஆகிடும்” பதில் மெசேஜ் அனுப்பிவைத்தான்.

மாலை ஆதன் அறையைப் பூட்ட அவன் அறையை நோக்கி சென்றவள் தன் பின்னல் கேட்ட, “ஹாய் சஹானா!” என்ற குரலில் திரும்பினாள்.

ஊன்றுகோலை ஊன்றியபடி மெல்ல நடந்து வந்துகொண்டிருந்த விஹான் இயல்பாக புன்னகைதான்.

“ஆதன்?” அவன் அவளை இப்பொழுது நெருங்கி வர, அனிச்சையாகப் பின்னோக்கி நடந்தவள், “அவர் அஃபிஷியல் ஈவென்ட்க்கு போயிருக்கார்” என்றாள் பதற்றத்தை மறைத்து.

விஹான் முகம் லேசாக வாடியது. 

சஹானா பேன்ட் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுப்பதை கண்டவன், “ப்ளீஸ் நான் வந்துருக்கேன்னு அவனுக்கு சொல்லாதே. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்” கண்சிமிட்டினான்.

சரியென்று தலையைதவள்  அவனை ஆதனின் அறையில் உட்காரவைத்து அலுவலக கேட்ரிங்கில் பழச்சாறு ஆர்டர் செய்தாள்.

நேரமாவதை எப்படி சமாளிப்பது என்று அவள் யோசித்திருக்கும் போதே விஹான், “எங்கேயோ கிளம்பிட்டு இருந்த போலிருக்கே…யூ ஸ்டார்ட்” கேட்க,

“எப்படி…”

“உன் டேபிள் மேல பேக் ரெடியா இருக்கே” விஹான் மேஜையிலிருந்த டைம்ஸ் வகையறா பத்திரிக்கை ஒன்றை எடுத்து அதை காட்டி, “நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் யூ ஸ்டார்ட்” என்றவன் மேலும் வற்புறுத்த வேறுவழியின்றி மீனாக்ஷியை காண புறப்பட்டாள். 

பழச்சாறு வரும்வரை பத்திரிகையைப் படித்தபடி காத்திருந்த விஹான், மறுநொடியே அறைக்கதவைச் சாத்திவிட்டு ஆதன் அறையைத் துழாவத் துவங்கினான்!  

***

மீனாக்ஷியை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய சஹானாவின் முகம் வாடியிருந்தது. 

“ஹாய் இடியட்”

கையில் ஒரு மெல்லிய ரிமோட் போன்ற கருவியுடன் வரவேற்ற ஈவாவை கவனியாமல் சென்றவள் கட்டிலில் துவண்டாள்.

“ஹேய் ஜுனியர் என்ன உர்ர்ன்னு இருக்க? பாஸ்கிட்ட வாங்கி கட்டிகிட்டியா?” வம்பிழுத்த ஈவாவிற்கு பதில் தராமல் கண்களை மூடிக்கொண்டவள் விழியோரம் நீர் துளிர்த்து, தலையணையை அடைய,

“ரொம்ப வாங்கி கட்டிகிட்டியா என்ன?”

“தலைவலிக்குது வேற ஒன்னுமில்ல” என்றாள் ஈனஸ்வரத்தில். 

“இல்ல. பொய்!” என்றது ஈவா.

“பொய் சொல்றதுக்கு நான் என்ன உன் பாஸா?” சட்டென கோவம் கலந்த குரலில் முணுமுணுத்தவள் குப்புற படுத்து முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.

“பாஸ் பொய் சொல்லமாட்டாரே” சஹானாவைத் தாண்டி, தாவி அவள் முகத்திற்கு நேராக குதித்த ஈவா, “டடா! எப்படி ஸ்மூத்தா லேண்ட் ஆனேன் பாத்தியா?” முன் கைகளை விரித்துப் பெருமையாகக் கேட்க அவளோ உணர்வற்ற பார்வையை எங்கோ செலுத்த,

“இதான் இஞ்சி தின்ன குரங்கு மூஞ்சியா?” என்றது கிண்டலாய்.

அது சரியாக வேலை செய்ய,

“குரங்கா! நானா? நீ குரங்கு! உன் பாஸ் குரங்கு!” கோவமாக எழுந்து அமர்ந்தவள், ஒருமுறை கட்டிலை ஓங்கி அடித்து, பெருமூச்சுடன் சமயலறைக்கு சென்று, காப்பி பில்டரில் தன் கோவத்தைக்  காட்டத் துவங்கினாள்.

அங்கும் அவளை விடாமல் தொடர்ந்த ஈவா அடுப்புக்கு அருகில் சென்று பில்டர் பின்னாலிருந்து எட்டிப்பார்த்து குழந்தை போல்,

“ஈவா எங்க காணும்?

இதோ!

ஈவா எங்க காணும்?

இதோ!” என்று விளையாட,

அதையே சிலநொடிகள் பார்த்தவள், குனிந்து வளைந்து தரையை பார்க்க, 

“என்ன பிரச்சனை ஜூனியர்?” அக்கறையுடன் அவள் கைமேல் தன் ஒற்றை பிஞ்சுக் காலை வைத்துக் கேட்க,

“ஒண்ணுமில்ல ஈவா…” சோர்வாக சொன்னவள், ஈவாவின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்து,  பிரிட்ஜில் சாய்ந்துகொண்டாள்.

“பாஸ் கூட சண்டையா? எதாவது மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்கா? அவரை கேட்டியா? நான் கேட்கவா?” 

“கேட்டு மட்டும் என்ன ஆகப்போகுது? விடு நான் கொஞ்சம் தூங்கறேன்” அடுப்பை அணைத்துவிட்டு  அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள். 

“சிம்பிளான எந்த விஷயத்தையும் சொதப்புறது தானே உங்க ஸ்பீஷீஷோட ஸ்பெஷாலிட்டி! ஸ்டுபிட் ஹியுமன்ஸ்!” அலுத்துக்கொண்டே தன் இடத்திற்குச் சென்றது ஈவா.

***

ஆதன் விஹான் கேட்டுக்கொண்டபடி ஷாப்பிங் மால் ஒன்றில் இறக்கிவிட்டு வீட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருந்தான். கண்கள் சாலையிலிருந்தாலும் மனமோ மாலை நடந்த நிகழ்வை நூறாவது முறை அலசிக்கொண்டிருந்தது.

சஹானா கிளம்பியிருப்பாள் என்று தெரிந்தும் அவள் இருக்கையைப் பார்த்தபடி தன் அறைக் கதவைத் திறந்த ஆதன் அங்கே விஹானை எதிர்பார்க்கவில்லை, அதுவும் அலமாரியை குடைந்தபடி!

அதிகம் அதிராமல் நடக்கும் குணமுடைய ஆதனின் காலடிகளை அலுவலக காரிடார் தரை மேலும் மழுப்பியிருந்தது. கதவின் லாக்கில் தன் கார்டை வைத்துத் திறந்தவன், திறந்த வேகத்தில்,

அதில் பதறி கையிலிருந்த பைலை தவறவிட்டிருந்த விஹான், அதிர்ச்சியை வெளிக்காட்டாது “ஹாய் மேட் சர்ப்ரைஸ்!” என்று புன்னகைதான். 

“ஹேய்!” பதில் புன்னகையுடன் தரையிலிருந்த பைலை எடுத்து விஹான் கையில் தந்து “ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?” ஏதும் நடக்காததுபோல் அவனை லேசாக அணைத்துப் புன்னகைத்த ஆதன் “ஒரு ஈவென்ட் இருந்தது. சாரிடா ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?” என்றபடி சென்று உட்கார,

“தட்ஸ் ஃபைன் மேட்” என்ற விஹான், பற்களைக் கடித்தபடி பைலை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டுத்  திரும்பும்போது போலி புன்னகையுடன் அவன் எதிரில் அமர்ந்தான். 

“நீ வரும்போது சஹானா இருந்தாளா?” கிட்டத்தட்ட அப்படியே மீதமிருந்த ஜூஸ் கிளாசை பார்த்தபடி ஆதன் கேட்க, 

“யா! எங்கேயோ கிளம்பிட்டு இருந்தா” என்றவன் எதோ நினைவு வந்தவனாய், “நான் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன் சோ டோன்ட் பாதர் ஹர் மேட்” மீதமிருந்த மாதுளை ஜூசை குடிக்க,

“ஸ்டில் எனக்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கணும். நீ காத்து கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுருந்த சீக்கிரம் வந்திருப்பேன். சாரிடா” ஆதன் மீண்டும் வருத்தம் தெரிவிக்க,  

விஹானோ “லீவிட் மேட்! இங்க கான்சலேட் வந்தேன் அப்படியே உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு…அவ்ளோதான்” உள்ளுக்குள் பரவியிருந்த ஆத்திரத்தைப் புன்னகையால் மறைத்தான்.

மிக அருகில் பலத்த ஹார்ன் ஒலிகேட்க, சிந்தை கலைந்த ஆதன் ஈவாவை அழைத்து, “சொல்லுடா” என்றான்.

“நீங்க தான கால் பண்ணீங்க பாஸ்? நீங்க தான் சொல்லணும்” என்று நக்கலடிக்க,

“அப்படியா யுவர் ஹைனஸ்…சரி நீங்க வைங்க”   

“நோ பாஸ்! நிறைய நிறைய வச்சுருக்கேன் அப்டேட்ஸ்”

“வந்தியா வழிக்கு? சொல்லு என்ன அப்டேட்?”

“மொதல்ல யார் வேணும்? சஹானாவா? விஹானா? ராபின் பைலா?”

“ராபின்? ஹேய் இதானே நீ முதல்ல சொல்லி இருக்கணும். என்னாச்சு?” கோவம் தெளித்த ஆர்வத்துடன்  ஆதன் கேட்க,

“ஆல்மோஸ்ட் அச்செஸ் பண்ணேன் ஆனா மறுபடி செக்யுரிட்டி சிஸ்டம் என்னை வெளியே தள்ளிவிட்டுடுச்சு! கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல பைல்ஸ் உங்க கைல!” ஈவா பெருமையாகச் சொல்லி முடிக்கும் முன்பே,

“வாவ் ஈவா! உன்னை செஞ்சதுலேந்து இன்னைக்கு தான் உருப்படியா முதல் தடவ ஒரு நல்ல விஷயம் சொல்லியிருக்க. கேளு! என்ன அப்க்ரேட் வேணும் கேள்”

ஆதனின் திடீரென்ற தாராளத்தைச் சரியாகப் பயன் படுத்திக்கொண்ட ஈவா பெரிய பட்டியலிட,

“பாத்தியா இதானே வேணான்றது? ஒரே ஒரு அப்க்ரேட் தான்! மீதி எல்லாம் பைல்ஸ் என் கைக்கு வந்த அப்புறம் தான்”   

“இப்படி எதாவது சொல்லித்தான் சஹா மூடையும் கெடுத்தீங்களா?” ஈவா கிண்டலாகக் கேட்க,

“என்ன?” புரியாமல் புருவம் சுருக்கியவன் இப்பொழுது காரைத் தன் வீடு இருக்கும் சாலைக்குத் திருப்பினான்.

“வந்ததுலேந்து உர்ருன்னு இருக்கா, நீங்கதான் எதோ சொதப்பி இருக்கீங்க. பொய்யெல்லாம் சொல்றீங்க வேறயாம்! என்கிட்டே சொல்லவேல்ல பாத்தீங்களா?” ஈவா வம்பிழுத்தது.

“உளறாதே என்ன சொல்றே பீ கிளியர்!” என்றவன் குரலில் சட்டெனத் தெரிந்த மாற்றத்தில்,

“உங்க வீட்டிலிருந்து வந்ததுலேந்து என்னமோ கோவமா அழுதுகிட்டே இருக்கா பாஸ். பேசி பாத்தேன், விளையாட்டு காட்டினேன், கோவம் கூட மூட்டினேன். நோ யூஸ்! அவ மூடை மாத்த முடியல” கடகடவென ஒப்பித்தது.

வீட்டு வாசலில் காரை நிறுத்த நினைத்தவன் நிறுத்தாமல் சஹானாவின் ப்ளாட்டை நோக்கி காரை செலுத்தினான்.

தன் வீட்டிற்கு செல்வதை சொந்த வேலையென்று ஏன் சொல்ல வேண்டும்? உண்மையை சொன்னால் வேண்டாமென்றா சொல்லப் போகிறான்? குழப்பமும் கோவமும் பொங்கிவர, ஆக்சிலரேட்டரை அழுத்தியவன் சில நிமிடங்களில் அவள் பிளாட் பார்கிங் தளத்தில் காரை நிறுத்திவிட்டு அவள் வீட்டிற்கு விரைந்தான்.

தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் நுழைந்தவன், சஹானாவின் அறை வாசலில் பிரேக்கடித்து நின்றான்.

தட்ட ஓங்கிய கையை காற்றில் நிறுத்தி, “சஹா!” என்று அழைத்தான் பதில் வரவில்லை.

“சஹா நான் உள்ள வரேன்” என்றவன் கதவைத் திறக்க, அவளோ கட்டில் அருகில் முட்டியில் முகம் புதைத்து விசும்பிக்கொண்டிருந்தாள்.

“ஹேய் என்ன ஆச்சு?” கேட்டபடி ஆதன் அவள் தோளைத் தொட, அதைத் தட்டிவிட்டு நிமிர்ந்தவள் கண்களும், கண்ணீர் நனைத்த கன்னங்களும் மின்னின.

“என்ன சஹா இது? என்ன ஆச்சு? ஏன்டா?” அவள் கண்களைத் துடைத்தவன், “ஈவா வாட்டர்!” குரல் கொடுக்க,

சஹானாவோ “ஒன்னும் வேண்டாம்!” என்றாள் கோபமாக.

“ப்ச் என்ன ஆச்சுன்னு சொன்னா தானே தெரியும்? அம்மா ஏதான சொன்னாங்களா? அப்பா? ஆதிரா?” அவள் தாடையைப் பிடித்து உயர்த்திக் கேட்டதில் ஒருநொடி அவள் கண்கள் வியப்பில் விரிந்து தரையைப் பார்த்தன.  

“அப்போ அதுதான்! சரி யார் என்ன சொன்னா?” என்றவன் அப்பொழுது ஈவா கொண்டுவந்த தண்ணீரை வேகமாகக் குடிக்க,   

“தண்ணி அவளுக்கு இல்லையா?” ஈவா கேட்டேவிட,

“அவளுக்கு எதுக்கு? நான் தானே பதறியடிச்சு ஓடிவந்தேன் பாரு மூச்சுவாங்குது!” சஹானாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னவன் கால் கிளாஸ் பாக்கி வைத்த தண்ணீரை அவளிடத்தில் நீட்டி, “வேணுமா?” என்று கேட்க,

“தேவையில்லை!” கோவமாக எழுந்தவள் அறையை விட்டு வெளியே செல்ல, அவன் ஈவாவிடம், “பாத்தியா ரூம்லருந்து வெளியே வர வச்சுட்டேன்!” கிசுகிசுத்தவன் அவளைப் பின்தொடர்ந்தான்.

பால்கனி கதவைப் பிடித்தபடி நிற்பவளை மொபைலில் படம்பிடித்தவன், “செம்ம போஸ்!” என்று சொல்ல, அவனைத் திரும்பிப் பார்த்தவள் அவன் செய்வதைக் கண்டு முறைக்க,

“கோவமா இருந்தாலும், இங்க நின்னு கோவபட்டா உன்மேல ஈவினிங் வெயில் பட்டு, ஒரு பக்கம் ஃபுல்லா தகதகன்னு மின்னும்னு தெரிந்துதானே இங்க வந்து நின்ன? கள்ளி!” நக்கலாக உதட்டைச் சுழித்தவன் மேலும் சில புகைப்படங்களை எடுக்க, அழுகை முற்றிலும் இப்பொழுது ஓய்திருந்தது.

“ஆமா! அது ஒன்னு தான் குறை! மனசை உடைச்சுட்டு பேச்சை பாரு! மின்னுராங்களாம் மின்னு!” சஹானா பல்லைக் கடிக்க,

“மனசை உடைச்சுட்டாங்களா! எவன்டா அது நா இருக்கும்போது என் சஹா மனசை உடைகிறது!” ஆதன்  ச்லீவை மடித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்க்க, 

“அதானே!” ஈவா அவள் தோளில் எங்கிருந்தோ தாவ, அதைக் கையில் எடுத்தவள்,

“என்ன நொதானே! உங்க பாஸை விட தனியா வேற பிரக்ருதி வேணுமா என்ன மனசை உடைக்க?” அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி பழிக்க,

“ஓ மை காட்! நானா? நான் என்ன செஞ்சேன்?” ஆதன் போலியாக அதிர.

“என்ன செய்யல?” அவனை நேராகப் பார்த்து முறைத்தாள்.

அவனோ சோபாவில் வாகாகச் சாய்ந்துகொண்டு “இதோ பார் என்ன ஏதுன்னு முகத்துக்கு நேரா சொல்லு அதைவிட்டு” என்று சலித்துக்கொள்ள,

“முகத்துக்கு நேரா நீங்க மட்டும் சொல்றீங்களா என்ன?” சஹானா ஈவாவை அவன்மீது ஏறிய,

“ஹேய்!” சரியான நேரத்தில் அவன் விலக,

“இடிய……ட்!” கத்தியபடி காற்றில் எதிர்பாராமல் பறந்த  ஈவா, கைகளை இருபுறமும் விரித்துச் சுதாரித்து ஆதன் மீது மோதாமல் மேஜை மீது மிக மிக மென்மையாக இறங்கியது. 

அதை ஒருகணம் கோவம் மறந்து வியந்து பார்த்தவள், மீண்டும் கோவமாக ஆதனிடம், 

“பிடிக்கலன்னு முகத்துக்கு நேரா சொல்றதுக்கு என்ன? நானா உங்களை வற்புறுத்தினேன் என்னைக் கல்யாணம் செஞ்சுகோங்க, எங்க வீட்ல பேசுங்கன்னு? நீங்களா வந்து எல்லாம் செஞ்சுட்டு இப்போ கல்யாணத்தை நிறுத்த எல்லா வேலையும் செய்றீங்களே!” என்று கத்த,

“வாட் நான்சென்ஸ்!” என்று எழுந்தவன் உயரம் சஹானாவை இன்று அச்சுறுத்தியது.

“என்ன உளர்ற? நான் ஏன் கல்யாணத்தை நிருத்தப்போறேன்? பைத்தியமா உனக்கு!” கோவமாக அவளை அவன் நெருங்க, ஏனோ அவனை கண்ணோடு கண் பாராமல் அவன் சட்டை காலரை பார்த்தவள்,

“எங்கப்பா கிட்ட என்ன பேசினீங்க? சொல்லுங்க! கல்யாணத்துக்கு மண்டபம் வேண்டாம் ரிசெப்ஷனே வேண்டாம் அது இதுன்னு. இதுக்கு நேரடியா கல்யாணமே…” அவளை முடிக்க விடாமல் அவள் தோளைப் பிடித்து உலுக்கிய ஆதன்,

“மரமண்டை! லூசுதானா நீ?” என்று கத்த,

“ஆமா! லூசே தான் உங்களை போய்…உங்கம்மா கேக்குறாங்க 

‘என்ன பிரச்சனை உங்களுக்குள்ள எதுக்காக அவன் இப்படியெல்லாம் செய்றான். கல்யாணத்துக்கு ஊரைக் கூட்டாதே, ரிசெப்ஷனெல்லாம் தேவையில்லை, கோவில்ல சிம்பிளா பண்ணிக்கலாம் போதும், தம்பட்டம் அடிக்காதீங்கன்னு சொல்றான். என்ன பிரச்சனை? நீ அவனை சம்மதிக்கவை. குடும்ப கௌரவம் என்ன ஆகும்? இப்படி பையனுக்கு ரகசிய கல்யாணம் செஞ்சு வச்சா என்ன நினைபாங்கன்னு’ உங்கம்மா என்னை காச்சு காச்சுன்னு காச்சுறாங்க! என்னை ஊர் அறிய கல்யாணம் செஞ்சுக்ககூட உங்களுக்கு அசிங்கமா….” 

அவளைத் தொடர விடாமல் கைகாட்டி நிறுத்தியவன் கண்கள் ரத்தமெனச் சிவந்திருக்க, எதிர்த்துப் பேச நினைத்தவள் மௌனமானாள்.

பெருமூச்சுவிட்டவன்  பேன்ட் பேக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு,  தலையைக் கோதி கொண்டான். பல்லைக்கடித்துக் கோவத்தைக் கட்டுப்படுத்த போராடியவன், “யார் என்ன கேட்டாலும் நீ…நீ இப்படி என்னை கேட்டு இருக்க கூடாது சஹானா!” கோவமும் வலியுமாகச் சொன்னவன், “ஈவா கதவை சாத்திக்கோ!” என்றுவிட்டு வேகமாக வெளியேறினான்.

நின்று திட்டி இருந்தால் கூட வலித்திருக்காது, அவன் ஒட்டுதலின்றி சஹானா என்றதில் தெரிந்த முதல் அந்நிதித்துவம், பார்வையில் தெரிந்த வெறுப்பு உடலைத்தாண்டி உள்ளதைப் பொசுக்க பால்கனி கதவருகிலே துவண்டு விழுந்தாள்.

விரைந்து அவளை நெருங்கிய ஈவா, “SOS Sahana” என்று ஆதனுக்கு மெசேஜ் அனுப்ப, அப்பொழுதான் பார்கிங் தளத்தை லிப்டில் அடைந்த ஆதன் மறுபடி அவள் ப்ளாட்டிற்கு விரைந்தான்.

உள்ளே நுழைந்தவன் நெற்றியில் அடித்துக்கொண்டு, “உன்னை என்ன சஹா செய்வேன்!” அவளை தாங்கலாகப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தான்.

“ஈவா அங்க டிரால எலக்ட்ரால் இருக்கும் எடுத்துட்டுவா” என்றவன், அவள் கையைப் பற்றிக்கொண்டு காத்திருக்க, ஈவா கொண்டுவந்த ஏலேக்ட்ரோலைட்டை கொஞ்சமாக அவளுக்குப் புகட்டினான்.

அவள் ஆசுவாசமடையும் வரை காத்திருந்தவன், “உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்ணுவேன் சஹா?” என்றான் வலியுடன்.

“அதான் சஹானா…ன்னு சொல்லிட்டு போனீங்களே ஏன் வந்தீங்க?” என்று கோவமாகக் கேட்டவள் அவள் சட்டை ஓரத்தை ஏனோ கெட்டியாகப் பற்றிக்கொண்டாள். லேசாக அதில் புன்னகைத்தவன்,

“பின்ன? நீ புண்ணாக்கு மாதிரி பேசினா, நானும் கேட்டுக் கிட்டு இருக்கணுமா?” என்றவன் இதழ் லேசாகக் கிண்டலாக வளைய, சற்று விலகியவள்,

“என்னை பிடிக்கலையா? ஏன் இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைகிறீங்க? என்னை மாதிரி ஒருத்தியை உங்க வைஃப்ன்னு சொல்லிக்க ஒருவேளை கௌரவ குறைச்சலா…”

“வில் யூ ஷட் அப்!” அவன் அவளை விளக்கிவிட்டு எழுந்து நின்றுவிட்டான்.

“ஆதன்…” அவள் கண்கள் கலங்க,

“முட்டாள் தானா நீ?  சும்மா கேனைத்தனமா பேசிகிட்டே போறே! ஒரு விஷயம் தெரிலைனா என்ன ஏதுன்னு கேக்கணும் அதைவிட்டு நீயா கண்ட அர்த்தம் பண்ணிப்பியா? அப்புறம் மனுஷனுக்கு என்ன வேல்யு?” அவன் முகம் இறுக, அவளோ மௌனமாக மெத்தை விரிப்பை விரல்களாய் கீறியபடி குனிந்து கொண்டாள்.

சிலநொடிகள் மௌனம் நீள ஆதன், “எதுக்காக இப்படி சொன்னேன்னு நீயே கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்தா, உனக்கே தெரிஞ்சு இருக்கும் சஹா!” என்றான் வேதனை கலந்த கோவத்துடன்.

ஏனோ நிமிர்ந்து அவனைப் பார்க்கத் தைரியமின்றி நகத்தால் மெத்தையைத் தொடர்ந்து கீறிக்கொண்டிருந்தாள்.

“ஆபீஸ் மீட்டிங் கூட்டத்தையே உன்னால இன்னும் சமாளிக்க முடியல, என் பின்னாடி வந்து ஒளிஞ்சுக்கற இதுல ஆயிரகணக்குல கூட்டத்தைக் கூட்டினா கல்யாணத்துல தாலி கட்டுவேனா இல்லை இப்படி கையில எலக்ட்ராலைட், குளுகோஸ்ன்னு வச்சுக்கிட்டு சுத்துவேனா? சொல்லு. சந்தோஷமா உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் அது தப்பா?

சொல்லு! அந்த கூட்டத்துல உன்னாலதான் நிம்மதியா இருக்கமுடியுமா? கல்யாணத்துல நீ முக்கியமா இல்லை ஊருக்கு ஷோ காட்டுறது முக்கியமா?

சும்மாவே கல்யாணத்துல முனுக்குன்னா குறை பேசுவாங்க, இதுல கல்யாண பொண்ணுக்கு இப்படி அப்படின்னு கதைக்கட்டிவிட்டா நம்ம ரெண்டு பேர் குடும்பமும் எவ்ளோ வருதப்படுவாங்க? உன்னை யாரவது தப்பா சொல்லிட்ட்டா நான் சும்மா இருப்பேனா? அனாவசியமான டென்ஷன் வேண்டாம். 

நமக்கு முக்கியமானவங்க கூட இருந்து வாழ்த்தினா போதும்னு பார்த்தேன். கோவில்ல பண்ணிகிட்டா இன்னும் மனசுக்கு நிம்மதியா இருக்கும்.

அனாவசிய ஆடம்பரம் ரிசெப்ஷன் எல்லாம் வேண்டாம் சஹா. முறைப்படி எனக்கு நீ வேணும் வேற எதுவும் எனக்கு வேண்டாம். உனக்கு எப்படி என்னை புரியவைப்பேன். நான்…”

“சாரி பாஸ்” விசும்பலுடன் அவனை அணைத்துக்கொண்டாள் சஹானா.

“சொல்றதெல்லாம் சொல்லிட்டு, இது ஒன்னுத்த சொல்லிடுங்க எல்லாரும்!” ஈவா குரல் தர,

மறுப்பாக அதனிடம் கண்சாடை காட்டிய ஆதன், சஹானாவின் முதுகை வருடி, “சாரி பூரி எல்லாம் நீயே வச்சுக்கோ. ப்ளீஸ் இனிமே இப்படி நீயா யோசிச்சு என்னையும் வருத்தாதே எப்போ எந்த குழப்பம் சந்தேகம் வந்தாலும் முகத்துக்கு நேர கேக்கணும் புரியுதா?” என்று செல்லமாக மிரட்ட,

“ம்ம்” என்றவள் இன்னும் அவனை இறுக்கமாக அணைத்துக்கொள்ள,

“ஔச்! எல்லாமே அளவுக்கு அதிகம்தானா உன்கிட்ட?”போலியாக வலிப்பதுபோல் சொல்ல,

“சாரி!” பதறி விலகினாள்.

சிரிப்புடன் அவள் தலையைக் கலைத்தவன், “இன்னும் இந்த குட்டி மண்டைக்குள்ள என்னலாம் குடையுதோ எல்லாத்தையும் கேளு அரியர்ஸ் வைக்காதே” வம்பிழுக்க,

மூக்கை உரிந்தவள், “எனக்காக பார்க்க வேண்டாம் பெரியவங்க ஆசை படுறாங்க…” என்று துவங்க,

“காரணம் சொன்னா உன்னை வற்புறுத்துவாங்கனு தான் நான் தயங்கினேன், நீ சரிவர மாட்டே, நான் அவங்களை பாத்துகறேன். உன்னை வருத்தி எதுவும் எனக்கு வேண்டாம். ஷ் ஷ்! எதுவும் பேசாத! மூச்!” பேச முற்பட்டவளைத் தடுத்தவன், “ப்ளீஸ் சூட ஒரு காப்பி எனக்கு தந்துட்டு நீயும் குடிப்பியாம் செம்ம தலைவலி! ஓடு” அவளை அனுப்பிவைத்து, பின்னாலே, “ஏய் நில்லு!” என்றான்.

செல்ல முற்பட்டவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

“ரூமை பூட்ட சொன்னேன்ல? நான் இல்லாதபோது ஏன் விஹானை என் ரூம்ல வெயிட் பண்ண வச்ச? விசிட்டர்ஸ் ரூம்ல தானே உட்கார வச்சுருக்கணும்?” சட்டெனக் கோவமாகக் கேட்க,

அவன் கேள்வியைப் புரிந்துகொள்ளச் சிறுநொடி ஆனது சஹானவிற்கு.

“உங்க பெஸ்ட் பிரென்ட் அவரை எப்படி விசிட்டர் ரூம்ல…ஏன் பாஸ் ஏதாவது…”

“ஒண்ணுமில்ல விடு. இனிமே இப்படி பண்ணாதே. சரி காப்பி ப்ளீஸ்” என்றவன் மேலும் பேசாமல் ஈவாவிடம் ரகசியமாக, “விஹான் இனிமே சஹானா பக்கத்துல வந்தா எனக்கு உடனே சொல்லிடு அதே மாதிரி அவன் என் ஆபீஸ் பக்கம் வந்தாலும் சொல்லிடு” கட்டளை பிறப்பிக்க,

“ஏன் பாஸ்? என்னாச்சு?” ஈவா ஆர்வமாகக் கேட்க, அன்றைய நிகழ்வுகளை ஆதன் ஈவாவிடம் பகிரத் துவங்கினான்.