EVA2

EVA2
2
கம்பெனி எச்ஆர் மேலாளர் அறையில் அமர்ந்திருந்தாள் சஹானா.
அவளிடத்தில் காகிதங்களை நீட்டிய மேலாளர், “இது உங்க காண்ட்ரேக்ட், படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டீங்கன்னா, மீதி ஃபார்மெலிடீஸ் ஸ்டார்ட் பண்ணலாம்”
பொறுமையாகப் படித்தவள் அதிர்ச்சியும் குழப்பமுமாக, “மேடம் நான்… நான் வந்தது, டெவெலப்பர் பொசிஷனுக்கு இதுல பர்சனல் செக்ரட்டரி டு சிஈஓ (CEO)ன்னு இருக்கு. பாருங்க என்கிட்ட இருக்க லெட்டர்ல டெவலப்பர்ன்னு இருக்கு” ப்ரின்டவுட்டை காட்டினாள்.
“ஆனா சிஸ்டம்ல செக்ரெட்ரின்னு தான் இருக்கு பாருங்க” கணினித் திரையைக் காட்டிய மேலாளர், சஹானா மீண்டும் கேட்டுக் கொண்டதில் யாருக்கோ ஃபோன் செய்தாள்.
“மேடம் இது ஆதன் சாரோட நேரடி ஆர்டர். ஏதாவதுன்னா நீங்க அவர் கிட்டதான் பேசணும். பேசறீங்களா?”
‘சொதப்பிடுச்சுனு சொல்லிக்கிட்டு ஊருக்கு திரும்பினா மறுபடி கல்யாண பேச்சு வரும்’ அச்சம் தோன்ற உடனே சரியென்றாள்.
ஆதனைப் பார்க்கப் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தவள் இணையத்தில் படித்தவரை நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் CEO திரு. ரகுநாத் என்றிருக்க,
‘யார் இந்த ஆதன்? தம்பியா இருக்குமா இல்ல பையனா இருக்குமோ? வயசானவர்ன்னா கூட சமாளிக்கலாம்… சின்ன பையனுக்கு பெர்சனல் செக்ரெட்டரின்னா வீட்ல செருப்பு பறக்கும்!’
அரைமணி நேரமாக இதையே யோசித்திருந்தவள், சரியாக ஒன்பது முப்பதுக்குக் கதவைத் தட்டிவிட்டு திறந்தாள். அங்கோ சிறிய கண்ணாடி அறை, அதன் எதிரில் ஆதன் பெயரின் கீழே பதவியைச் சுமந்திருந்த கண்ணாடிக் கதவு.
‘எத்தனை கதவுடா!’ அலுப்பான பெருமூச்சுடன் கண்ணாடிக் கதவைச் சம்பிரதாயமாகத் தட்டி விட்டுக் கொஞ்சமாகத் திறந்தாள்.
உள்ளே கணினியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் பார்வையால் அவளை உள்ளே வரும்படி அழைத்தான்.
‘பையன்தான்! இவன் தானே இன்டெர்வியு பண்ணான்?’ அவனை நோக்கி யோசனையுடன் நடந்தாள்.
“ஹாய் சஹானா! உட்காருங்க. ஹவ் ஆர் யு?” ஆதனின் வசீகரமான புன்னகையில் பயம் தற்காலிகமாக ஒளிந்து கொண்டதில் “ஃபைன் சார்” என்றாள்.
“எக்ஸாம் நல்லா எழுதினீங்களா?”
மெல்லத் தலையசைத்தவள் பார்வை ஏனோ அவன் மேஜை விளிம்பைத் தாண்டவில்லை.
“அட்மின் கால் பண்ணாங்க, என்ன குழப்பம்?”
நீண்ட மூச்சொன்றை விட்டவள், “சார் நான் செலக்ட் ஆனது டெவெலப்பர் பொசிஷன்க்கு… இங்க செக்ரெட்டரின்னு சொல்றாங்க… அதான்…” என்றாள் மேஜை விளிம்பை மீறாப் பார்வையோடு.
தலை கவிழ்ந்து, கையைப் பிசைந்தபடி தன் முன்னே அமர்ந்திருந்தவளைச் சிலநொடிகள் அமைதியாகப் பார்த்தவன்,
“நான் தான் உங்களை எனக்குச் செக்ரெட்டரியா மாற்ற சொன்னேன்” என்றதில் வேகமாக அவன் முகத்திற்கு உயர்ந்த அவள் பார்வை அவன் கண்களில் ஒருநொடி கரைந்து மீண்டும் மேஜை விளிம்பில் தஞ்சம் கொண்டது.
நொடி நேரச் சிலிர்ப்பில் அவன் பேச்சில் சில வார்த்தைகள் கருத்தில் பதிய மறுத்தன.
“…ஏன்னா உங்களை மாதிரி கரண்ட் டெக்னிகல் நாலெட்ஜ் இருக்க யங்ஸ்டர் கூடவே இருந்தா எனக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்”
‘இவ்வளவு பெரிய கம்பெனில விஷயம் தெரிஞ்சவங்களுக்கா பஞ்சம்? ஆள் பார்த்தாலே அறிவாளித்தனம் அப்பட்டமா தெரியுது… ஆமா அதென்ன யங்ஸ்டர்? இவனுக்கே வயசு முப்பது கூட இருக்காது’
உள்ளே பல கேள்விகள் எழ, அமைதியாய் இருந்தவள், அவன் தொண்டை செருமலில், மெல்லிய குரலில்,
“கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிச்சுட்டு எப்படி செக்ரெட்டரி… எனக்கு இந்த வேலை பத்தி எதுவுமே தெரியாது…” அவள் திக்கித் திணற, முகம் இறுகியவன்,
“நீங்க எதிர் பாக்குற வேலைக்கு இந்த கூச்ச சுபாவம், பயமெல்லாம் சரி வராது சஹானா.
நீங்களே இன்டெர்வியூல சொன்னீங்களே உங்களால பொதுவெளில பேசி பழக முடியாது, புது மனுஷங்ககிட்ட பழகவும் சிரமப்படுவீங்க, டீமா வேலை செய்யவும் முடியாதுன்னு.
உங்களுக்கு இருக்கிற சோஷியல் ஃபோபியா இந்த துறைக்கு சரிவராது. அப்படி இருந்தும் உங்க டெக்னீகல் ஸ்கில் வச்சும், உங்க ப்ராஜெக்ட் பார்த்தும் தான் உங்களை இங்க அக்செப்ட் பண்ணோம்.
இப்போ கூட உங்களுக்கு வேர்க்குது, கை நடுங்குது! இத்தனைக்கும் நான் புது ஆள் இல்ல. ஏற்கனவே மீட் பண்ணோம் இன்டெர்வியுல” என்றவன்,
அவள் முன்னே டிஷ்யு டப்பாவை நகர்த்த, தயக்கத்துடன் அதை எடுத்து நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை ஒற்றிக்கொண்டவள் மறந்தும் அவன் முகத்தைப் பார்க்கவில்லை.
“டெவலப்பர் வேலைனா டீம் வொர்க் முக்கியம், பல கிளைன்ட்ஸ் கிட்ட தைரியமா பேசணும், சில சமயம் வேற ஊருக்கு போகவேண்டி வரும். இதெல்லாம் உங்களால முடியுமா?”
“முடியாது தான்… ஆனா எனக்கு இந்த வேலை தெரியாது. என் ஆசையும் வேற”
“அதுனால என்ன கத்துக்கிட்டா ஆச்சு” சர்வசாதாரணமாக சொன்னவன் தீர்க்கமான குரலில்,
“என்னை பொறுத்தவரை இந்த வேலை உங்களுக்கு சரியான சாய்ஸ்ன்னு சொல்வேன். ஒரு வருஷம் இந்த வேலை பாருங்க, இங்க சூழல் பழகும், உங்க தயக்கமும் பயமும் குறையும் அப்புறம் உங்களுக்கு இங்க பொருத்தமான வேலைக்கு நானே சிபாரிசு பண்றேன்” என்றான்.
தரையை வெறித்திருந்தவள் மௌனமாகவே இருக்க,
ஆதன், “நேரம் கிடைக்கும் போது ஏதாவது புது ஐடியா இருந்தா அதை டெவெலப் பண்ணுங்க எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். நான் உங்க இடத்துல இருந்தா இந்த வாய்ப்பை பயன்படுத்திப்பேன். அதுக்கு மேல உங்க இஷ்டம்” கணினியின் திரைக்குப் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
சிலநொடி யோசித்ததில் அவன் வார்த்தைகளை வழிமொழிந்த மூளை, “சரி சார், அக்செப்ட் பண்றேன்” என்று சொல்ல வைத்தது.
“சிரிச்சுக்கிட்டு சொல்லலாமே?”
நிமிர்ந்தவள் மனம் ஆதனின் ஸ்நேக புன்னகையில் லேசானது.
‘எப்படி சிரிச்சுகிட்டே இருக்க முடியுது?’ அவள் வியக்க,
“அப்போ இன்னிக்கே ஜாயின் பண்றீங்களா இல்ல டைம் வேணுமா?”
‘என்னையா கேட்கறே?’ என்பதுபோல் விழித்தவளைப் பார்த்தவன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, காற்றை விழுங்கியவள், “இன்னிக்கே சேர்ந்துக்கறேன் சார்” என்றாள் முழுமனதுடன்.
“வெரி குட்”
ஆதன் அவள் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களைச் சொல்ல, சொன்னபடி செய்தவள், ஒரு மணிநேரத்தில் மீண்டும் அவன் முன்னே வந்து நின்றாள்.
தன் அறைக்கு எதிரிலிருந்த கண்ணாடி கேபினை அவளுக்கென்று காட்டியவன்,
“எது வேணும்னாலும் நான் ஆபிஸ் மெஸெஞ்சர்ல மெசேஜ் பண்ணுவேன், இல்ல கால் பண்ணுவேன்.
இனிமே என் அப்பாயின்மென்ட்ஸ் மத்த வேலைகள் எல்லாம் நீங்கதான் மெயின்டெய்ன் பண்ணனும். இன்னிக்கி முதல் நாள்ன்றதால ஃபிரியா இருங்க” என்றவன் தன் அறைக்குத் திரும்பி விட்டான்.
கழுத்தில் புதிதாய் குடியேறிய ஐடி கார்ட் கயிறை பிடித்தபடி கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த மழை மேகங்களிடம் ‘அவர் சொன்ன மாதிரி நான் ஆசைப்பட்ட வேலைக்கு போயிருந்தா என்ன ஆயிருக்கும்?’ கேட்கத் தூரத்து இடி முழக்கம் பதிலாய் வந்தது.
‘அதே தான்!’ தலையை உலுக்கிக்கொண்டவள்,
“வேலைல சேர்ந்துட்டேன்டா ஆல் ஓகே நான் நார்மலா இருக்கேன் பயப்படாதே
சைட் அடிக்க டீம் மேட் யாருமில்லை எனக்கு தனி கேபின். சோ உன் லவ் ஐடியா பிளாப்” பார்கவிற்கு மெசேஜ் அனுப்பி வைத்தாள்.
இரவு வீட்டிற்குள் விசிலடித்தபடி நுழைந்த ஆதனுக்கு சல்யூட் வைத்த ஆதிரா.
“அம்மா சார் வந்துட்டார்” என்று குரல் கொடுத்துவிட்டு, கிட்டாருடன் வெளியே செல்ல, அவளை வினோதமாகப் பார்த்தவன் முன்னே வந்து நின்றார் சமையல்காரர் தயாளன்.
“தம்பி டின்னருக்கு என்ன சமைக்கட்டும்?”
“என்ன அங்கிள் என்னை கேட்கறீங்க? அம்மா இல்ல?”
“இருக்காங்க தம்பி, அக்கா தான் இனிமே உங்களை கேட்டுத்தான் எதுவும் செய்யணும்னு சொன்னாங்க”
புருவம் சுருக்கியவன் தாமதமாகவே அவர் முகத்திலிருந்த கிண்டல் புன்னகையைக் கவனித்தான்.
‘புரிஞ்சுது!’ “டின்னர் தானே… எல்லாருக்கும் கேழ்வரகு கஞ்சி போடுங்க போதும்” என்றவன் தன் அறைக்குச் செல்ல எத்தனிக்க,
“ஐயோ கஞ்சியா?” சமையற்கட்டிலிருந்து வந்த தாயின் குரலில் சிரிப்புடன், “ஆமா எல்லாருக்கும் கொஞ்சம் கொழுப்பு கூடி இருக்குல? உங்களுக்கும் கஞ்சி தான் அங்கிள்” என்றான்.
“ஏன் தம்பி எனக்கும்?” பாவமாக விழித்தார்.
“நீங்க மசால் தோசைக்கு ரெடி பண்ணுங்க தயா” மீனாக்ஷி குரல் கொடுத்தபடி வர, தயாளன் தப்பித்தோம் பிழைத்தோமென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
“எதுக்கு இப்போ என்னை வச்சு விளையாடுற?” செல்லமாக முறைத்தவன், “அப்பா எங்க?”
“சார பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வேணுமாமே அதான் காத்துக்கிட்டு இருக்கார்” என்று கிண்டலாகச் சிரித்ததில், வெட்க புன்னகையுடன் தலையைக் கோதிக்கொண்டவன்,
“இதுக்குத்தானா” அசடு வழிந்தான்.
“அதுக்கே தான்! யாருடா அது?” மீனாக்ஷி சிரிக்க,
“என் செக்ரெட்டரி மா” என்றவன், “தெரியாத மாதிரி கேக்கற? உங்க ரெண்டு பேருக்கும் தெரியாம என்ன நடக்க போகுது கம்பெனில?” சோஃபாவில் அமர்ந்துகொண்டான்.
“தெரியாமத்தான் நடக்குது” என்று வந்த ரகுநாத். “டேய் உனக்கு எதுக்குடா செக்ரெட்டரி?” என்று சிரிக்க, பெற்றோர்களை முறைத்தவன்,
“நான் தனியா என்ன பண்ணுறது டேட்? எனக்கு ஹெல்ப் வேணும்ல, உனக்கு புகழ் அங்கிள் இருக்கார்ல உதவிக்கு?”
“எனக்கு வயசாகி போச்சு, எல்லாம் மறந்து போகுது அதான் அவர் கூட இருக்கார், உனக்கென்னடா? அதான் கூடவே அந்த ஈவா இருக்கே! அதைவிடவா ஒரு புத்திசாலி அசிஸ்டன்ட் வேணும் உனக்கு?”
“எனக்கு போர் அடிக்குது!” என்றவன், “இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்று புருவம் சுருக்க,
“போர் அடிக்க செக்ரெட்டரியா இல்ல, சைட் அடிக்க செக்ரெட்டரியா?” மீனாட்ஷி வம்பிழுத்தார்.
“அம்மா! எனக்கு சஹானா கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோனிச்சு… வேலைல… வேலைல… அப்படி பாக்காத” பதற, சிரிப்புகள் ஓயச் சிலநொடிகளானது.
ஆதன் விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு “ஒரு காரணமாத்தான் அவளை அப்பாயிண்ட் பண்ணேன். டைம் வரும்போது சொல்றேன். ப்ளீஸ்” என்றபிறகு அதை பற்றி எவரும் விவாதிக்கவில்லை.
குளித்துவிட்டு இரவு உடையுடன் நேராக லேபிற்குள் நுழைந்த ஆதன், கணினி திரையின் நின்றபடி, “ஈவா ரிப்போர்ட்!” என்றான்.
அருகே இருந்த இயந்திரத்தின் அன்றைய செயற்பாடுகளைக் குறித்த அறிக்கையை அவன் கணினித் திரையில் ஓடவிட்ட ஈவா,
“பீ இன்னிக்கி எல்லா டாஸ்க்கும் பண்ணிட்டான். ஆனா எனக்குதான் டேட்டா தராம வம்பு பண்ணினான். அதான் கோவத்துல கொஞ்சமா கடிச்சுட்டேன்”
ஈவாவின் குரல் வந்ததும், மெல்ல உருண்டு அவன் காலில் பட்டு நின்றது கோலிக்குண்டு அளவிலான ‘பீ’ என்ற இயந்திர வண்டு.
ஈவாவின் தாக்குதலில் பிய்ந்த சில வொயர்கள் எட்டிப்பார்த்தன.
“ஈவா! வா இங்க!” ஆதன் மிரட்டலில் எங்கிருந்தோ மேசையின் மீது குதித்தது பச்சை ஈவா!
“என்ன ஈவா இது?”
“பீ தான் பாஸ் டேட்டா தராம, செகியூரிட்டி ஸிஸ்டெம என் மேல ஏவிவிட்டான்! நான் வைரஸா பாஸ்?” ஈவா முறையிட, கடுப்பானவன்,
“நான் அதை கேக்கல நீயேன் இப்படி பச்சை கலர்ல வந்து நிக்குற?” பீயை மேஜை மீது வைத்துவிட்டு ஈவாவை பார்க்க,
“அது பீ யை துரத்திக்கிட்டு போனப்போ கார்டன்ல பெயிண்ட் குள்ள விழுந்துட்டேன் பாஸ். அப்போதான் அவனை கடிச்சேன்” என்ற ஈவாவை நோக்கி ஆதன் தன் உள்ளங்கையை நீட்ட,
“நோ பாஸ்” ஈவா மெல்லப் பின்னோக்கி நடந்தது,
“வா ஈவா” கோவத்தை மீறி ஈவாவின் செய்கையில் சிரிப்பு வந்தாலும், தன் முகத்தை ஸ்கேன் செய்து ஈவா அவன் உணர்ச்சியைப் புரிந்து கொண்டு விடும் என்று நன்கு அறிந்தவன், கோவமாகவே மறுபடி அழைத்தான்.
ஈவா “இனிமே எதையும் கடிக்க மாட்டேன் பாஸ்” முன் இரண்டு கால்களைக் காற்றில் உயர்த்தி சொல்ல,
“இந்த மாசம் எத்தனையாவது தடவ இதை சொல்ற ஈவா?” கையை இழுத்துக்கொள்ளாமல் ஆதன் கேட்க,
“முப்பத்தி நாலாவது வாட்டி பாஸ்” என்று உளறிவிட்டது ஈவா. சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டவன்,
“வா ஈவா உன்னை சுத்தம் பண்ணனும்”
அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த ஈவா அவன் கையில் வேகமாக ஏறிக்கொண்டது.
“பீ ஒரு தற்காப்பு ஆயுதம் ஆனா அதை உங்கிட்டேந்து காப்பாத்துறதே எனக்கு வேலையா போச்சு” அலுத்துக்கொண்டவன்,
“இனிமே அதை ஓனர் தவிர யார் தொட்டாலும் ஷாக் கொடுக்க வைக்கணும். குறிப்பா நீ தொட்டா உன் சிஸ்டெம் ஆஃப் ஆக வைக்கப்போறேன்” மிரட்டியபடி எலியைச் சுத்தம் செய்யத் துவங்கினான் ஆதன்.
“நீங்க அப்படி பண்ணா அது ஆஃப் இல்ல பாஸ் ஆப்பு! நான் ஜஸ்ட் அவனை கண்காணிக்கிறேன் பாஸ். அவனால உங்களுக்கு தொந்தரவு வரக் கூடாது பாருங்க” என்றது ஈவா.
“ஆஹான்! நம்பிட்டேன். நீ நிறைய சினிமா பாக்குற. உனக்கு இனிமே சினிமா பாக்க அனுமதி இல்லை. நாளைக்கு ஆதிரா கிட்ட பீ யை கொடுத்து டெஸ்ட் வேற பண்ண நினைச்சேன். நீ உன்னாலான உதவியை செஞ்சுட்ட” பரபரவென ஈவாவை வேண்டுமென்றே அவன் துடைக்க,
“பாஸ் நீங்க கோவமா இப்படி தேச்சா என் சிந்தெடிக் ஸ்கின் பிஞ்சுடும். கோவம் உங்க கல்லீரலை பாதிக்கும் சோ கூல் டவுன்” என்றது அக்கறையாய்.
“சொல்லிக் கொடுத்தவன் கிட்டயேவா?” அதன் தலையில் செல்லமாகத் தட்டி “சார்ஜ் பண்ணிக்கிட்டு ஏரியா ரவுண்ட்ஸ் கிளம்பு” என்றவன், ஈவா கடித்துக் குதறி வைத்திருந்த இயந்திரத்தைச் சரிசெய்யத் துவங்கினான்.
***
ஆதன் சஹானாவை எந்த வேலையும் செய்ய வைக்கவில்லை. சிலவற்றை தானே பார்த்துக்கொண்டான் எஞ்சியிருந்த வேலைகளை அவன் வீட்டு லேபிலிருந்தபடி கம்ப்யூட்டரை கண்ட்ரோல் செய்யும் ஈவா செய்தது.
யாருடனும் பேசி பழகும் எண்ணமும் தைரியமும் சஹானாவிற்கு இல்லை, அன்று சஹானா வேறு வழியின்றி அவன் அறைக்கு சென்றாள்.
ஏதோ ஒரு வேகத்தில் அவன் அறைக்கு வந்துவிட்டவள், இதழ்களுக்கு மேல் முத்து முத்தாக வேர்க்க, அதை துடைத்தபடி மௌனமாக தயக்கத்துடன் நின்றுவிட, ஆதன் அவளை பார்வையால் வினவினான்.
“சும்மாவே இருக்க என்னமோ போலயிருக்கு. ஏதாவது வேலை இருந்தா… நீங்களே எல்லா வேலைகளையும்…” திக்கி திணறி புகார் வாசித்தவளை,
அவன் “இதை சொல்ல ஒரு வாரம்?” என்று நக்கலாக கேட்க, அசடு வழிய தலை கவிழ்ந்தாள்.
“நீயா வந்து கேட்பேன்னு பொறுமையா இருந்தேன்”
“கொஞ்சம் பயமா…”
கண்களை உருட்டியவன், “என் கிட்ட என்ன பயம் சஹா? நான் உன்னை மாதிரி மனுஷன் தானே?”
“அதுக்கில்ல சார்… நீங்க பிசியா…”
“மொதல்ல சார்னு கூப்பிடாத. இது கார்ப்ரேட்! இங்க எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்படணும். கால் மீ ஆதன்” என்றான் கடுமையாக,
“சாரி”
“நீ டெஸ்க்கு போ. என் கேலேண்டர் ஆக்ஸஸ் தரேன். நீ என்ன செய்யணும்னு மெசேஜ் பண்றேன். நாளைக்கு நான் சொல்ற அட்ரஸ்க்கு பொக்கே டெலிவரி சொல்லிடு, ஒயிட் ஆர்கிட்ஸ்(orchids)” என்றவன், நீ போலாம் என்பதை போல் திரும்பிக்கொள்ள,
தன் இருக்கைக்கு வந்தவள் ஒரு கிளாஸ் தண்ணீரை வேகமாக குடித்தாள்.
அவள் செய்கையை கண்ணாடி கதவின் வழியே பார்த்திருந்தவன் சிரித்துக்கொண்டதை சஹானா கவனிக்கவில்லை.
அவன் சொன்னது போலவே ஆர்கிட் பூக்களாலான பூங்கொத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்தாள்.
ஆதனின் நிரம்பி வழிந்த முழு மாத அப்பாயின்மெண்ட்ஸை பார்வையிட்டவள் வியப்பில் புருவம் விரிந்தாள். தனக்கெதிரே இருந்த கண்ணாடி கதவின் வழியே உள்ளே பார்க்க, கோப்புகளை படித்துக்கொண்டிருந்த ஆதனின் மீது பரிவு வந்தது.
சஹானா அந்த வாரம் முழுவதும் அவ்வப்போது வரும் வேலைகளை விரைவாக செய்து முடித்துவிட்டு மீதி நேரத்தை கழிக்க போராடி கொண்டிருந்தாள். ஆதனோ அதற்கு மாறாக ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்றுகொண்டிருந்தான்.
அன்று ஆதனின் கையெழுத்துக்காக சில கோப்புகள் வர, அதை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு செல்ல எழுந்தவளை கடந்து சென்ற ஆதன், இயல்பாய் ஒரு புன்னகையை உதிர்க்க, அவள் முகத்திலிருந்த தயக்கத்தை கவனித்தவன்,
“என்ன சஹா? ஏதாவது வேணுமா?”
வேலை பளுவை சமாளிக்க ஆதனுக்கு உதவுவது வழக்கமான மாலை நேர காபி மட்டுமே என்று இடைப்பட்ட காலத்தில் புரிந்து கொண்டவள், அவன் காபியை தாமதப்படுத்த மனமில்லாமல் தயக்கத்துடனே,
“சில டாகுமெண்ட்ஸ்… நீங்க பார்க்கணும்” என்றாள்.
“ஓஹ் ஓகே! நீ ரூம்ல இரு வந்துடறேன்”
விறுவிறுவென சென்றவன் அதே வேகத்தில் தன் அறைக்கு திரும்பினான்.
காலி கப்பை மேஜையில் தொம்மென வைத்தவன் “அந்த டாகுமெண்ட் கொடு சஹா” என்று எரிச்சல் பட,
“காஃபி எடுத்துக்கலயா?” ஒரு வேகத்தில் கேட்டுவிட்டவள் ஏன் கேட்டோமென உதட்டை கடித்துக்கொண்டாள்.
அவனோ “மூட் போச்சு” என்று நெற்றியை பிடித்து கொண்டான்.
“என்னாச்சு ஆதன்…”
அவள் தன்னை பெயர் சொல்லி அழைத்ததும், தோழியை போல தோன்ற,
“முடியல சஹா, கடுப்பா இருக்கு” என்றான் பெருமூச்சுடன்.
என்ன சொல்வதென்று புரியாமல் சஹானா மௌனமாகவே இருக்க,
“நான் CEOன்றது காரணமா இல்லை முதலாளி பையன்றது காரணமா, இல்ல பையன்றதே காரணமா? எதுக்கு இப்படி நடந்துக்கறாங்க?”
அவன் கேள்வி விளங்காமல் சஹானா விழிக்க,
“நிம்மதியா பேன்ட்ரிக்கு போக முடியல, சும்மா சும்மா வந்து வந்து வழிஞ்சு பேசினா” தலையை உலுப்பி கொண்டவன், “ஃபைல் கேட்டேனே” ஏனோ மீண்டும் எரிந்து விழுந்தான்.
“யார்…”
பதிலேதும் சொல்லாதவன் கோவமாக டேபிளின் புட் ரெஸ்ட்டை எட்டி உதைத்தான்!
அதிர்ந்து இரண்டடி பின்னே சென்றவள், நீண்ட மூச்சொன்றை விட்டு, “என்னாச்சு… யாரு?”
“யாருன்னு சொல்ல? ஒரு கூட்டமே இருக்கே! அந்த அட்மின் டிபார்ட்மென்ட்ல புதுசா சேர்ந்திருக்குற பொண்ணுங்க கேங் தான்” என்றான் கடுப்பாக.
சட்டென டேபிளிருந்த அவன் கப்பை எடுத்துக்கொண்டவள்,
“ஆஃபீஸ் அசிஸ்டன்ட் யாருகிட்டயான சொல்லிருக்கலாம்ல? விடுங்க நானே இனிமே உங்களுக்கு காஃபி டி கொண்டு வரேன், நீங்க இதுக்கெல்லாம் இனிமே போகவேண்டாம்”
முதல் முறை அவனிடம் திக்காமல் குரலை உயர்த்தி பேசியவள், அறையை விட்டு கோவமாக வெளியே சென்றாள்.
‘ஆட்டுக்குட்டிக்கு வீரம் வந்துருச்சே! பரவால்ல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கா’ கடுப்பை மறந்து புன்னகைத்தவன், தானே கோப்புகளை எடுத்து படிக்க துவங்கினான்.
பேண்ட்டரி எனப்படும் அலுவலக இளைப்பாறும் அறையை முற்றுகையிட்டிருந்த இளம்பெண்கள் பட்டாளத்தை கண்டவள் வெலவெலத்து நின்றுவிட்டாள்.
***