EVA4

EVA4
4
அறைக்குள் நுழைந்த ஆதனின் அனல் பார்வை சஹானா மீது பாய அவளோ அதை அறியாமல் தரையை பார்த்து கண்களை சுருக்குவதும், முகத்தை சுழிப்பதும், உதட்டை கடிப்பதுமென சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ?” என்றவனின் குரலில் நிமிர்ந்தவள் துளியும் யோசிக்காமல், “வாஷ்ரூம் போகனும்” என்றாள்.
கோவத்தை அடக்க முயற்சித்து கொண்டிருந்தவனோ, “போ!” என்றதும் அவள் வேகமாக நடக்க,
“லேப்ட்டாப்ப கொடுத்துட்டு போ!” அவன் கத்தியதில் குடுகுடுவென வந்தவள் மேஜையில் லேப்டாப்பை வைத்துவிட்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள்.
தன் இருக்கையில் அமர்ந்தவன், சஹானா தயார் செய்திருந்த மீட்டிங் மினிட்ஸ் நோட்சை படிக்க துவங்கினான். சில நிமிடங்களில் கோவமாக லேப்டாப்பை நகர்த்தியவன் கண்ணாடி சுவர் வழியே நகரின் சாலையை வெறிக்க துவங்கினான்.
கீழே தெரிந்த போக்குவரத்து நெரிசல் போல தன் மனதிலும் கோவம், சிரிப்பு, வெறுப்பு என உணர்ச்சி நெரிசலை உணர்ந்தான்.
“ஆதன்” அழைத்தபடி வந்த சஹானா, “மீட்டிங் நோட்ஸ் உங்களுக்கு ஈமெயில் பண்ணவா?” என்றாள் ஆர்வமாக.
திரும்பி பாராதவனோ தீவிரமான குரலில், “பேசாம பிரிண்டவுட் எடுத்து பிரேம் போட்டு இந்த சுவர் முழுக்க மாட்டிவை! பின்னாடி வர சந்ததிகள் உன் திறமையை மெச்சிப்பாங்க!” என்று சொல்ல,
அவன் கிண்டலை உணராது உச்சி குளிர்ந்தவள், “தேங்க்ஸ் ஆதன்! அவ்ளோ பக்காவா இருக்கா? நீங்க படிச்சிடீங்களா?” குதூகலமானாள்.
புருவம் முடிச்சிட திரும்பியவனோ, “அந்த கண்றாவிக்கு தேங்க்ஸ் வேறயா?” எறிந்துவிழ,
“கண்றாவியா…”
“பின்ன?”
“எதுனா தப்பு இருக்கா?” அவள் அப்பாவியாய் கேட்க,
“தப்பு இருக்காவா? படி நீ டைப் பண்ண காவியத்தை நீயே படி” அவன் பற்களை கடிக்க
லேப்டாப்பை திறந்தவள் தொண்டையை செருமிக்கொண்டு கம்பீரமாகவே படிக்க துவங்கினாள்.
“ஹலோ ஜென்டில் மென்… நம்ம மீட்டிங்கோட முக்கியமான காரணம் என்னன்னா… நீங்க எல்லாரும் முட்டாள் பீசுங்க” முதல் வரியை படித்தவள் கண்கள் விரிந்து மிரட்சியுடன் ஆதனை பார்க்க, அவனோ அவளை அழுத்தமாக பார்த்திருந்தான்.
“அது…” அவள் தடுமாற, கையை காட்டி அவளை நிறுத்தியவன், “படி” ஆணையிட்டான்.
“நான் ஒருவாட்டி செக் பண்ணிட்டு…”
“படின்னேன்!”
“இந்த மாச புது க்ளிண்ட்… பெரிய கூமுட்டை! நேரம் காலம் இல்லாம ஈமெயில் பண்ணி என்னைத்தானே படுத்துறான்! இந்த இத்துப்போன ப்ரபோசல் அப்புறம் வரக்கூடாதா?’ என்றிருக்க கண்களை கசக்கி கொண்டு மீண்டும் படித்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
“சாரி நான்…” சஹானா தயங்க,
“மேல படி” என்றவன் முகத்தில் கடுமை கூட, சோர்வாக மூச்சுவிட்டவள் தோள்களை தொங்கவிட்டு, உணர்ச்சியின்றி படிக்க,
“ம்ம்ம் அதே மாதிரி நியூஸ் ரீடர் ஸ்டைல்ல படி” அவன் மிரட்ட,
‘செத்தேன்!’ நொந்தவள், அப்படியே தொடர்ந்தாள்.
“சொந்த செக்யுரிட்டி சாப்ட்வேர் உருவாக்கினா வருஷத்துக்கு… கோடிக்கு மேல சேமிக்கலாம். சேமிச்சு என்ன பிரயோஜனம்? பசியில இருக்க செக்ரெட்டரிக்கு ஒன்னார்ரூபா சமோசாவும் ஒரு கப் காபியும் தான் தர. கருமி! கஞ்ச பையா!” கண்களை மூடிகொண்டவள் கைகள் நடுங்கியது.
சிரிப்பை அடக்க திணறிய ஆதன் கண்ணாடி சுவரின் பக்கம் மீண்டும் திரும்பி விட, அதை கோவமென்று புரிந்துகொண்டவள்,
“சமோசா நல்லாத்தான் இருந்துது… ஆதன் சாரி..”
“படி சஹா!” திரும்பாமலே அவன் குரல் உயர்த்தவும் வேறு வழியின்றி தொடர்ந்தாள்.
“என்னடா விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம்லாம் சொல்லிக்கிட்டு இருக்க? ஐயோ தூக்கம் தூக்கமா வருதே!
இப்போ நாம வெற்றிகரமா முடிச்ச… க்ளைன்ட் ரெவியூ ரொம்பவே திருப்திகரமா இருக்கு. இதெல்லாம் நான் கேட்டேனா? எனக்கு திருப்தியா இல்லையே, பசிக்குதே, நான் வேற பயத்துல ஒழுங்கா தின்னாம வந்துட்டேன்… உப்ப் இந்த வெயில்ல சில்லுனு நன்னாரி சர்பத் குடுக்காம இப்படி சுட சுட காஃபீ கொடுக்குறாங்க கிறுக்கு பசங்க!” அதற்கு மேல் படிக்க முடியாமல் நிறுத்தி விட்டவள் வேகமாக, “ப்ளீஸ் நான் ஏதோ தெரியாம…”
குறுக்கிட்டவன், “மொத்தத்தையும் படிச்சு முடிக்கிறவரை நிறுத்தக்கூடாது படி!” மிரட்ட, உடல் மொத்தமும் சில்லிடுவதை உணர்ந்தவள், படிக்காமல் அவனை கெஞ்சுதலாய் பார்க்க, அவன் பார்வையின் கடுமை கூடியது.
“ஆதுமா நீ என்னடா இவ்ளோ அழகா இருக்க? மீட்டிங்கிலேயே நீ மட்டும் தான் ஸ்மார்ட் ஆதுமா!” என்றவள் உறைத்தேவிட, ஆதனோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கைமுஷ்டியை இருக்க, அதில் சஹானா இன்னும் பதறிவிட்டாள்.
“ம்ம்” அவன் உருமலில், படபடப்போடு தொடர்ந்தாள்.
“இருந்தாலும் உனக்கு இவ்ளோ தைரியமாகாது! எப்படி எல்லாரையும் தைரியமா பாத்து பேசுற? எனக்கு வயத்துல புளியை கரைக்குது, ஆஹா லெஃப்டுல அந்த நீல கோட்டு இங்கேயே பாக்குறானே.
ஆதுமா! ப்ளீஸ் முடியல, தூக்கம் தூக்கமா வருது, வேணும்னா இன்னொரு மீட்டிங் வச்சு இதெல்லாம் சொல்லிகிறியா, நான் பாவம்ல? எவ்ளோதான் டைப் பண்ணுவேன். ப்ளீஸ் டா செல்லம்” சஹானா மூச்சடைக்க எழுந்தே நின்று விட்டாள்.
‘தொடரு’ என்ற அவன் பார்வையின் மிரட்டலில், வேறுவழியின்றி பதற்றம் குறையாமலேயே தொடர்ந்தாள்.
“ஏன்டா நொய் நொய்ன்னு இவ்ளோ கேள்வி கேக்குறீங்க அந்த சின்ன பையன? ஆதுமா என்னை அப்படியே கைத்தாங்கலா தூக்கிட்டுப்போயி உன் ரூம் சோஃபால விட்டுடுவியாம் நான் கொஞ்சமா தூங்கிபேனாம். என் புஜ்ஜி குட்டில…” இரு கைகளால் வாயை பொத்தி கண்களை மூடிக்கொண்டாள் சஹானா.
முழுவதும் கட்டுப்பாட்டை இழந்த ஆதன் வயிற்றை பிடித்துக்கொண்டு உரக்க சிரித்துவிட்டான்.
“அது வந்து நா…”
“மைண்ட் வாய்சுன்னு நினைச்சு எல்லாத்தையும் டைப் பண்ணி வச்சுருக்க. நான் இதெல்லாத்தையும் படிக்காம வந்த எல்லாருக்கும் மீட்டிங் மினிட்ஸ்சுன்னு அனுப்பியிருந்தா என்ன ஆகியிருக்கும்?”
“என்னை தப்பா… இல்ல உங்களை தப்பா… இல்ல நம்மளை தப்பா…” வார்த்தைகளை விழுங்கினாள்.
“என்ன இதெல்லாம் சஹா? நான் உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். காலேஜ் படிச்ச பொண்ணு ஒரு மீட்டிங் நோட்ஸ்ல மனசுல வந்ததுலாம் எழுதுறோம்னு பிரக்ஞை கூட இல்லாம டைப் பண்ணுவியா?” கடுகடுத்தவன், “இதுல ஆதுமா, செல்லக்குட்டி புஜ்ஜுக்குட்டி வேற! ” என்றதில் விக்கித்து நிமிர்ந்த சஹானாவின் உடல்நடுங்கியது.
“எனக்கு செல்ல பெயர் வேற வச்சுருக்கியா? ஏது நான் உன்னை சஹான்னு கூப்பிடறதுக்கு பழிக்கு பழியோ?” அவன் புன்னகையுடன் கேட்க, அசடு வழிந்தவள் வாய் திறக்கும் முன்பே,
“ஆதன்!” ரகுநாத்தின் குரலில் இருவரும் திரும்ப, அங்கே புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தவர், அறையை சுற்றி பார்வையை செலுத்தினார்.
பெரிய பெரிய கோப்புகளை தாங்கிய அலமாரிகள் மறைந்து, இரண்டு பெரிய புத்தக அலமாரிகள் இருக்க, மேஜையில் லேப்டாப் தவிர எதுவுமில்லை. அறையின் ஒரு பக்க கண்ணாடி சுவரையொட்டி சில செடிகள் இருக்க, மற்றொரு கண்ணாடி சுவரின் அருகே சோபாவும் அதன் பின்னே சிறிய கேபினட் மீது காஃபீ மேக்கரும் அதன் கீழே பொருத்தப்பட்ட சிறிய பிரிட்ஜும் இருந்தன.
‘பலே! இந்த இடத்தையே மாத்தி வச்சுருக்கானே படவா!’ மகனை மெச்சியபடி ஒரு பார்வை பார்த்தார்.
சஹாவிடம் ஆதன் கண்ஜாடை செய்ய, அவசர புன்னகையுடன் விடைபெற்றவள், தன் கேபின் வந்து நெற்றியை பிடித்து அமர்ந்துவிட்டாள்.
‘மானமே போச்சு! புண்ணாக்கு மாதிரி சொதப்பி வச்சுருக்கேன்! சீப்பா நினைச்சிருப்பான். என்ன பண்ணுவேன் ஆண்டவா!’ தன்னை நொந்து கொண்டிருந்தாள்.
லேப்டாப் திரையை பார்த்தபடி ஆதனை நெருங்கிய ரகுநாத், “வாவ் அதுக்குள்ள மீட்டிங் மினிட்ஸ் ரெடியா? பலே!” அதை படிக்க எத்தனிக்க, பாய்ந்து லேப்ட்டாப்பை மூடினான் ஆதன்.
“அது… கொஞ்சம் கரெக்ஷன் இருக்கு, சஹா புதுசுல்ல அதான் கொஞ்சம்…” ஈஈ என்று அசடு வழிந்ததில், புன்னகைத்தவர், “பரவால்லபா. பொறுமையா எனக்கு ஈமெயில் அனுப்பு” என்றார்.
இருவரும் பொதுவாக பேசத்துவங்க, சஹானா அவ்வப்போது அவன் அறையை நோக்கி பார்வையை வீசினாள்.
அவர்களோ தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தனர்.
“உங்கம்மா சொன்னா கேக்க மாட்டேங்குறா எப்போ பார்த்தாலும் இங்க சூரணத்தை சாப்பிடு அந்த கஷாயத்தை குடின்னு படுத்தி எடுக்குறா” ரகுநாத் குறைபட,
“உனக்குத்தான் ஹீமோகுளோபின் பத்தலை ரத்தசோகை கூடவே ஆர்த்ரிட்டிஸ் வேற. மீனுக்கு ஆதங்கம் இருக்கும்ல?”
“அட போப்பா!’ என்றவர் டக்கென ”ரொம்ப தேங்க்ஸ் பா” என்று புன்னகைத்தார்.
“என்ன டேட் தேங்க்ஸ்லாம்?”
“வற்புறுத்தி உன்னை பொறுப்பேத்துக்க வச்சேன்னு ரொம்ப குற்றவுணர்ச்சி… என்னை தூங்கவே விடுறதில்ல. இன்னிக்கி நீ எத்தனை அழகா தெளிவா மீட்டிங்கை நடத்தின! உன்னை நினைச்சா பெருமையா இருக்குபா” உணர்ச்சிபொங்க சொன்னவர் குரல் உடைந்தது.
அவர் கையை பற்றி கொண்டவன், “என் கடமைய தான பண்றேன்? இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகாத, கூல் டவுன்” என்றான் பரிவாக.
“கண்ணா! நீ ஆசை பட்டபடியே நாம கம்பெனில ரோபோடிக்ஸ் டிவிஷன் ஸ்டார்ட் பண்ணலாம்பா. உன் பிளானை ரெடி பண்ணி எனக்கு அனுப்பு” என்றதில், அவரை அணைத்துக்கொண்டவன்,
“தேங்க்ஸ் டேட்! லவ் யு சோ மச்!” என்று குதிக்க, ஆதனின் சந்தோஷ சிரிப்பை கண்ணாடி வழியே பார்த்திருந்த சஹானாவிற்கும் காரணம் தெரியாமலே முகம் மலர்ந்தது.
“கேக்கனும்னு நினைச்சேன் எப்படிபா ரூமையே தலைகீழா ஆக்கிவச்சுருக்க? உன் லேப்க்கும் இந்த ரூம்க்கும் சம்மந்தமே இல்லயே?” என்றவர் பார்வையை கவனித்த ஆதன், “அது சஹாவோட ஐடியா பா” என்றான்.
சஹானா ஆதனுக்கு ‘சஹா’வானதை கவனிக்க தவறவில்லை ரகுநாத். “ம்ம். ஆமா நீயே ஸ்மார்ட் காபி மேக்கர் செஞ்சு வச்சுருக்கியே அதையேன் இங்க வைக்கல?”
“காரணமா தான்” என்றவனை மேலும் எதுவும் கேளாமல், வேறு விடயங்களைப்பற்றி சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தவர், சஹானாவை வார இறுதியில் வீட்டிற்கு விருந்திற்கு வரும்படி அழைத்துவிட்டு கிளம்பினார்.
ஆதனின் அழைப்பு வர அவனிடம் சென்ற சஹானா, அவன் கொடுத்த பேப்பர்களை ஸ்கேன் செய்ய துவங்கியவளிடம்,
“உங்கப்பா பிஸ்னஸ் பன்றாருன்னு சொன்னியே என்ன பிஸ்னஸ் சஹா?” கேட்க,
“பட்டுப்புடவை” என்றவள் கவனம் பேப்பரிலேயே இருந்தது.
“பட்டுபுடவைனா எப்படி?” தன் மொபைலை மேஜையில் வைத்து அவளை பார்க்க,
“சொந்த தறி இருக்கு, கடையும் வச்சிருக்கார்”
“ஒ! எங்க? எந்த ஊர்?”
“காஞ்சிபுரத்துல தான். காருண்யா சில்க் எம்போரியம்ன்னு” அவள் சொன்னதில் புருவம் விரிந்தவன்,
“என்ன? அந்த… இரு இரு அந்த மொத்த கடையும் உங்களோடதா?” ஆதன் அவளை நெருங்கி கேட்க, ஆமென்று தலையசைத்தாள்.
எதுவும் சொல்லாது அவளை சில நொடிகள் வியப்புடன் பார்த்தவன் முதல்முறை அவள் தோற்றத்தை பார்வையிட்டான்.
எளிமையான காட்டன் குர்தா, காதில் பெரிய வெள்ளி வளையம், தோள்வரை நீண்ட போனிடெயில், எந்த ஒப்பனையுமின்றி துடைத்து வைத்த முகம். பூசினாற்போல இருந்தவள் எளிமையின் எடுத்துக்காட்டாக இருந்தாள்.
‘இவ்ளோ சிம்பிளா எப்படி?’ யோசித்தவன் கண்முன்னே, டாம்பீகமாக திரியும் சில உறவுக்கார பெண்கள் வந்து செல்ல, ‘இப்படியும் இருப்பாங்க போல’ என்று எண்ணி கொண்டான்.
“சொந்தமா பெரிய பிசினெஸ் இருக்கும் போது, நீ அந்த பிசினெஸ் பாத்துக்கலாம்ல ?”
பேப்பர்களை மேஜையில் வைத்தவள், “நானா?” வெறுமையாக புன்னகைத்து, “என்னையெல்லாம் படிக்க வச்சதே பெரிசு இதுல நானும் பிசினெஸ் பாத்துக்க வரேன்னு சொன்னா அவ்வளவு தான் முடிஞ்சுது என் ஜோலி! வேற எதாவது ஸ்கேன் பண்ணனுமா?”
“இல்ல” ஆழ்ந்து மூச்சுவிட்டவன், “ஏன்? அப்பாவுக்கு ஒத்தாசை தானே?”
“எங்க குடும்பதுல பொண்ணுங்க படிக்கிறதே பெரிசு, ஸ்கூல் முடிச்சதும் கொஞ்ச வருஷத்துல கல்யாணம் தான். ஆம்பள பசங்க மட்டும்தான் காலேஜ் எல்லாம். எங்கண்ணாவே விழுந்து விழுந்து சி ஏ படிச்சான், அதுவும் முதல் தடவையே செம்ம மார்க்ல பாஸ் பண்ணான். ஆனா எங்கப்பா தான் எங்கயும் போகவிடாம குடும்ப வியாபாரத்தை பாருன்னு பிடிச்சு வச்சுருக்கார்” படபடவென கொட்டிவிட்டவள் மெளனமாக.
‘எல்லா ஆம்பளைங்களுக்கு இது ஒரு தொல்லையா? சுத்தம்! ஆகமொத்தம் எவனும் தன் லட்சியத்துக்குன்னு எதுவும் செய்ய முடியாது போலாயிருக்கு’ எண்ணிக்கொண்டவன், “ம்ம் ஏன் இப்படி பெண்களை அடக்கி… ஏதாவது காரணம் இருக்கா?” அவளை கூர்ந்து பார்க்க,
“தெரியல… எல்லாரையும் விட எங்கப்பா கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண்டிப்பு. எங்கம்மா ஜாடிக்கேத்த மூடி, அவர் அப்படின்னா எங்கம்மா சந்தேக சாம்பிராணி!
கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல எங்கம்மா காஞ்சீபுரத்தை தாண்டினது இல்ல தெரியுமா? உலகமே அவங்களுக்கு எங்க வீடுதான். சொல்லப்போனா எனக்கு தெரிஞ்ச வரை ஊரு விட்டு ஊரு வந்து ஸ்கூல் காலேஜுன்னு படிச்சது நான் தான்!
அதுவும் தாத்தா பாட்டி புண்ணியத்தால. இப்போகூட பார்கவும் தாத்தா பட்டியும்தான் அப்பா அம்மா கிட்ட பேசி எனக்கு பெர்மிஷன் வாங்கி தந்தாங்க. இல்லைனா இன்னும் அந்த பையனை காரணம் காட்டியே என்னை பூட்டி வச்சிருப்பங்க!”
அதிகமாக பகிர்ந்து கொண்டவள் உதட்டை கடித்துக்கொண்டாள்.
மௌனமாக தலையசைத்த ஆதன், கடைசி வரியில் முகம் இறுக்கியதை அவள் கவனிக்கவில்லை. முகத்தை இயல்பாக்கி கொண்டவன், “பார்கவ் உங்கண்ணா வா?” என்று கேட்க,
“ம்ம்” என்றவள், “வேற எதாவது?” வெளியே சென்றுவிடும் நோக்கில், கதவை பார்த்தபடி கேட்க, அதை உணர்ந்தவன், “இல்ல. நீ கிளம்பு. நான் கொஞ்சம் ஒர்க் முடிச்சுட்டு கிளம்பறேன்” என்றான்.
“ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன் சொல்லலாமா?” அவள் தயங்க,
“ம்ம்” என்றான் அவன்.
“எப்படி உங்களால அத்தனை தைரியமா போர்ட் மீட்டிங்ல பேச முடிஞ்சுது?”
‘யாரு நான்தானே? உதறினது எனக்குதான் தெரியும்’
“கிரேட் நீங்க! கத்துக்கணும் நான் நிறைய கத்துக்கணும் உங்ககிட்ட!” அவள் பெருமையாக சொல்ல,
‘விளங்கிடும்!’ எண்ணிக்கொண்டவன் புன்னகையை பதிலாக தந்துவைத்தான்.
இரவு பால்கனியில் மீனாட்சியின் மடியில் தலை வைத்து படுத்திருந்த ஆதன் தலையை கோதி கொண்டிருந்தவர்,
‘’அடிப்பாவி இப்போ சொல்றே! அவ்ளோ பெரிய குடும்பத்து பொண்ணையா செக்ரெட்டரியா வச்சுருக்க?”
“நான் என்ன தெரிஞ்சா பண்ணேன்? அவ எவ்ளோ சிம்பிளா இருக்கா தெரியுமா? பெரிய வீட்டு பொண்ணுன்னு எந்த ஒரு பந்தாவுமில்லை. உனக்கு தெரியுமா அவங்க வீட்ல பொண்ணுங்க…” துவங்கியவன் சஹானாவை பற்றி தனக்கு தெரிந்தவற்ற்றை சொல்ல,
“நிறைய இடத்துல பெண்களுக்கு இன்னும் பிடிச்சதை செய்யுற சுதந்திரம் கிடக்கிறது இல்ல பா. எனக்கு தெரிஞ்சே எத்தனையோ பொண்ணுங்க ஆசையெல்லாம் மூட்டைகட்டி பரணைல வச்சுட்டு குடும்பம் தான் உலகம்னு மனசை மாத்திரிக்கிறாங்க, சிலர் கட்டாயப்படுத்த படுறாங்க” என்றவர் அலுப்பாக.
“எங்க நாலு பேரோட பழகினா தான உனக்கு இதெல்லாம் தெரியும்? நீ பாக்குற ரெண்டே லேடீஸ் நானும் என் தங்கையும் தானே?
உறவுகாரங்க வீட்டு விஷேஷம் எதுக்கும் வரது இல்ல, இப்போ லேப், முன்னாடி படிப்பு. இத்தனை இண்ட்ரோவர்ட் (வெளி உலகத்திலிருந்து விலகியிருக்கும் குணமுடையவர்கள்) பையன் எப்படித்தான் கம்பெனியை சமாளிப்பியோனு பயந்தேன். ஆனா நீ வெளுத்து வாங்குறியாமே! உங்கப்பாக்கு பெருமை தாங்கல!” அவர் சிலாகிக்க, எழுந்து அமர்ந்தவன்,
“இதெல்லாம் ஜுஜுபி!” என்றான் மிடுக்காக.
‘இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடியபடி எட்டிப்பார்த்தாள் ஆதிரா.
“என்னடி நக்கலா?” அண்ணனின் முறைப்பை கண்டுகொள்ளாதவள்,
“யார்கூடவும் பழக பிடிக்காத பாஸ், யாரை பாத்தாலும் பயப்படுற செக்ரெட்டரி! வாவ் எப்படி செம்ம காம்பினேஷன். கம்பெனி என்ன ஆகப்போகுதோ ஆண்டவா!” அவள் அண்ணாந்து வானத்தை பார்க்க,
“வாய் வாய்” எழுந்தவன் தங்கையை துரத்தியபடி ஓட,
“புடிங்க பாஸ்!” என்று அவனை பின்தொடர்ந்து ஓடியது ஈவா.
மூச்சுவாங்க கட்டிலில் சாய்ந்து படுத்தவன் மனம் சஹானாவின் ‘ஆதுமா செல்லக்குட்டி’ க்களை மீண்டும் மீண்டும் நினைத்து சிலிர்க்க வைத்தது.
“பாஸ்! கண்ணெல்லாம் ஃபோகஸ் இல்லாம, முகத்துல ஒரு புது எக்ஸ்பிரஷன். இது என்ன உணர்வு பாஸ்? சொன்னா சேவ் பண்ணிப்பேன்” அவன் மார்பில் அமர்ந்திருந்த ஈவா கேட்க,
“ப்ளே பிளேலிஸ்ட் 3” என்றான் அவன்.
“என்ன வென்று சொல்வதம்மா வஞ்சி அவள்…” என்று துவங்கிய எஸ்பிபியின் பாடலை கண்களை மூடி ரசித்தவன், ஈவாவின் பிராண்டலில் கண் திறந்தான்.
“ப்ச் என்ன ஈவா?”
“மஞ்சள் நிற தவளை எங்க இருக்கும் பாஸ்?” என்றது அவன் முகத்திற்கு அருகே வந்து.
“வாட்! மஞ்சள் தவளையா?” அவன் புருவம் சுருக்க,
“நெஞ்சில் நிறை தவளை. அப்படின்னா அந்த ஹீரோ வளக்குற பெட் தவளையா பாஸ்? பாட்டு பூரா தவளை தவளைன்னே பாடுறாரே” அடுத்த கேள்வியை கேட்க, ஒரு நொடி குழம்பியவன் சிரித்துவிட்டான்.
“ஈவா ஈவா! மஞ்சள் நிறத்தவளைன்னு அர்த்தம் பண்ணிக்கணும், மஞ்ச கலர் தவளை இல்லை” மீண்டும் சிரித்தவன்,
“நெஞ்சில் நிறைந்தவளை… அப்படின்னா… உனக்குத்தான் தமிழ் புல்லா பீட் பண்ணேனே? நீ இப்படி தப்பு தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டா எப்படி நம்பர் ஒன் ஏஐ அசிஸ்டன்ட் ஆக முடியும்? (செயற்கை நுண்ணறிவு (AI- Aritificial Inteligence) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு )
ஈவாவோ, “நான் கேட்டது ஜோக் பாஸ்! ஜோக்கு சொன்னா சிரிக்கணும் இப்படி ஆராய்ஞ்சு மொக்கை போடா கூடாது” என்றது.
“இனிமே ஆதிரா கூட சேர்ந்த உன்ன…” ஈவாவை பிடிக்க முயன்றபடி மிரட்ட, அருகிலிருந்த மேஜைக்கு தாவிய ஈவா, “சாரி பாஸ்! குட்நைட்” அடுத்தநொடி அவன் கையில் அகப்படாமல் ஓடி ஒளிந்தது!
மீண்டும் பாடலில் லயித்தவன் கண்களை மூடிக்கொள்ள, மறுமுனையில் சஹானா பாதி தூக்கத்தில் பதறி கண்விழித்தாள்!
***