EVA5

ELS_Cover3-1ac79a60

5

காலையில் மீட்டிங்கில் சந்தித்த மனிதர்கள் வட்டமாக சஹானாவை சூழ்ந்திருக்க, நடுவே அரக்கத்தனமான சிரிப்புடன் அமர்ந்திருந்தான் ஆதன்!

அவன் கையை நீட்ட, மாய ஈர்ப்பில் அவனை நோக்கி மிதந்து சென்றவள் கழுத்தை பிடித்தவனின் கருவிழிகள் ரத்த சிவப்பாக மாறின! அலறிக்கொண்டு கண்விழித்தவள் வியர்வையில் தொப்பமாக நனைந்திருந்தாள்.

கனவின் தாக்கத்தால் அடுத்துவந்த நாட்களில் ஆதனை பார்க்கக்கூட பயந்தவள் முடிந்தமட்டும் மெசேஜ் ஈமெயில் ஃபோன் என்று மட்டுமே உரையாடலை வைத்துக்கொண்டாள்.

தன்னை பார்ப்பதை தவிர்ப்பவளை, கண்ணாடி கதவின் வழியே பார்த்திருந்த ஆதன், வேண்டுமென்றே வேலையொன்றை காரணம் காட்டி தன் அறைக்கு அழைக்க, மெசேஜிலேயே பதில் தந்தவளை வலுக்கட்டாயமாக வரும்படி வறுபுறுத்த, வேறுவழியின்றி அவன் அறைக்கு சென்றவள், இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சஹா நான் சொல்ற இந்த ரிப்போர்ட்டை இன்னிக்கி எப்படினா ரெடி பண்ணி ஈமெயில் பண்ணியாகணும்” என்றதில் நிமிர்ந்தவள் மனதில் கனவில் கண்ட ஆதனின் கொடூரமான கண்கள் வந்துபோக, குப்பென்று வேர்த்து நாற்காலியை பிடித்து தன்னை சமன் படுத்திக்கொண்டாள்.
அதை உணராதவன் மீண்டும் அழைக்க, மறுக்க நினைத்தவள் அவனை நோக்கி மெல்ல நடக்க,

“என்ன சஹா அவசரம்னு சொல்றேன்… ஆடி அசஞ்சு வந்தா?” கடுகடுத்ததில் வேகமாக தன்னருகில் அவன் இழுத்துப்போட்ட நாற்காலியில் அமர்ந்தவள், நிமிராமல் லேப்டாப்பில் அவன் சொல்ல சொல்ல டைப் செய்ய துவங்கினாள்.

ஒருகட்டத்தில் சோர்ந்தவள், ‘இன்னும் எவ்வளோ இருக்கு?’ என்பதுபோல ஆதனை கெஞ்சுதலாக பார்க்க,

டிக்டேட் செய்வதை நிறுத்தியவன், “என்ன சஹா பிரேக் வேணுமா?” என்று கேட்க, வேகமாக தலையாட்டியவளை கண்டு சிரித்தவன், மீண்டும் அதையே கேட்க, தான் இரவு ஒன்பதிற்குள் ஹாஸ்டலுக்கு திரும்ப வேண்டுமென்று சஹானா உறுதியாக நின்றாள்.

“என்ன சஹா குழந்தை மாதிரி பண்ணற? இது முடிய எப்படியும் பத்து பதினோரு மணியாகும். நானே உன்னை டிராப் பண்ணறேன். சரி பீஸ்ஸா ஆர்டர் பண்ணவா?” அவன் மொபைலை பார்த்தபடி கேட்க,

“ப்ளீஸ் அதெல்லாம் வேணாம்! நான் லேட்டா போனா வீட்டுக்கு ஃபோன் போகும். பார்கவ் ஃபிரெண்டுக்கு தெரிஞ்சவங்க ஹாஸ்டெல் வேற, நான் எப்போ கிளம்பறேன், வரேன்னு வீட்டுக்கு ரிப்போர்ட் போகும். சோ நான் கிளம்பனும்” அவள் எழ,

முறைத்தவன், “சந்தைக்கு போனும் ஆத்தா வைய்யும்னு… விளையாடாதே சஹா! இங்க எத்தனை பொண்ணுங்க வேலை பண்றாங்க, அவங்கள்லாம் லேட் ஆனா கம்பெனி கேப்ல தானே வீட்டுக்கு போறாங்க?”

“எனக்கு இதெல்லாம் சரிவராது. ஏதாவதுன்னா எனக்காக என் அண்ணாதான் திட்டு வாங்குவான்” அவள் குர்தாவின் நுனியை பிடித்துகொண்டாள்.

“நான் வேணும்னா உங்க வீட்ல பேசறேன், உன் அண்ணா நம்பர் தா” என்றவனுக்கு,

“ஐயோ! வேற வம்பே வேண்டாம்! நீங்க யாரு என்னன்னு கேள்வி வரும்” என்ற சஹானாவின் பதற்றம் வினோதமாக தோன்றியது.

“இதுல என்ன இருக்கு சஹா? நான் உன் பாஸ்ஸுன்னு சொன்னா போச்சு”

“சொன்னா போச்சு!” அவள் தரையை காலால் உதைத்து புருவம் சுருக்க,

“என்ன சஹா உன் பிரச்சனை?” மேஜையை அடித்து எழுந்தவன், “சும்மா டைம் வேஸ்ட் பண்ணாத, நம்பர் தா. நானே பேசி பெர்மிஷன் வாங்கறேன்” அவன் மொபைலை எடுத்து டைல் செய்ய தயாராக,

“உங்களுக்கு புரியல” நகத்தை கடித்தவள், “நான்… நான் இங்க என்னவா வேலை பாக்குறேன்னு வீட்டுக்கு தெரியாது”

“எதே! தெரியாதா? என்ன சொல்ற நீ?”

“நான் படிச்சது வீணாகுதேன்னும், அதுக்கேத்த வேலை பாத்தா நல்ல வரன் அமையும்னும்லாம் மஸ்கா போட்டுத்தான் பார்கவ் வீட்ல அனுமதியே வாங்கித்தந்தான். இப்போ போயி நான் செக்ரெட்டரி வேலை பாக்குறேன்னு சொன்னா அவ்ளோதான் அடுத்த நிமிஷமே மாமா வந்து நிப்பாரு” அவள் நகத்தை விடாமல் கடித்தாள்.

நெற்றியில் தட்டிக்கொண்டவன், “நீயும் உங்க கதையும்! ஆமா இங்க உன் தாய்மாமா எங்கிருந்து வந்தார்?” கடுப்பாக.

“தாய் மாமா இல்ல, என் பெரியப்பா பொண்ணோட மாமனார்!” அவள் திருத்த,

பெருமூச்சுவிட்டவன், “யாரோ! அவர் ஏன்?”

“அவர்தானே சென்னைல இருக்கார்”

“அப்போ அவங்க வீட்ல தாங்காம ஹாஸ்டெல் எதுக்கு? பேசாம நான் உன்னை அங்கேயே கொண்டுபோய் விட்டுடறேன்”

“வேற வினையே வேண்டாம்!” என்னவோ சொல்லவந்தவள் அதை தவிர்த்து, “நான் வேலைக்கு போறத எந்த உறவு காரங்களுக்கும் இப்போதைக்கு சொல்லக்கூடாதுன்னு அப்பா சொல்லிருக்கார்” என்றாள்.

“என்ன நான்சென்ஸ் சஹா இது?” ஆதன் அலுத்துக்கொள்ள,

“பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பினா ஏதாவது பேச்சுவரும்னு…”

“உன் சொந்தகாரங்க எல்லாரும் முட்டா பீசுங்களா?” பற்களை கடித்தான்.

‘எப்படிடா கண்டுபிடிச்ச?’ நினைத்துக்கொண்டவள், “என்ன நக்கலா? எங்க குடும்பத்தைப்பத்தி தப்பா பேசாதீங்க!” போலியாக கடிந்துகொண்டாள்.

“இதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு இந்த ஒர்க் இன்னிக்கி முடிக்கணும்!” அவன் தீர்மானமாக சொல்ல, கண்களை கசக்க துவங்கியவளை கண்டு கோவம் பொங்க எழுந்தவன் வேகமாக அறையை விட்டு சென்றுவிட்டான்.

ஹாஸ்டெலுக்கு வந்தவள் மனமோ விடாமல் அடித்துக்கொண்டது.

ஆதனுக்கு கால் செய்ய அவனோ ஏற்காமல் உடனுக்கு உடன் கட் செய்ய, செய்வதறியாது விழித்தவள், “சாரி பாஸ்” என்று மெசேஜ் அனுப்பி வைத்தாள்.

மறுமுனையில் தன் படுக்கை அறையில் ஆதன் ஈவாவிடம் சொல்ல சொல்ல, தானே லேப்டாப்பில் டைப் ஆகி கொண்டிருந்தது. பலமுறை மீனாக்ஷி அழைத்தும் உணவை மறுத்தவன், இளைப்பாற கண்களை மூடி சாய்ந்துகொள்ள, மனதில் கண்கலங்கியபடி நின்றிருந்த சஹானாவின் முகம் இம்சித்து.

ஈவாவே செய்யக்கூடிய வேலையை சஹானாவை வைத்து வம்படியாக செய்யவைக்க முயன்றது ஏனென்ற விடையில்லா கேள்வியை தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

ஒருவழியாக நள்ளிரவுக்கு மேல் வேலையை முடித்தவன், உறங்க படுத்துக்கொள்ள, மீண்டும் சஹானாவின் கலங்கிய கண்களே நினைவிற்குவர, போராடியே உறங்கினான்.

மறுநாள் ஆதனின் கோவத்தை தணிக்க மார்கத்தை யோசித்துக்கொண்டிருந்த சஹானாவிற்க்கோ, தன்னை திரும்பியும் பாராமல் புயலென தன் அறைக்குள் சென்றவனின் செய்கை மேலும் பயத்தை தூண்ட, எஞ்சியிருந்த நகங்களையும் பற்களுக்கு தாரைவார்த்தாள்.

அவனாக அழைக்கும் வரை பொறுமை காக்க நினைத்தவள், அவ்வப்போது எட்டி எட்டி அவன் அறையை பார்க்க அவனோ மும்முரமாக யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

உணவு இடைவேளையின் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று அவள் காத்திருக்க, ஆதனோ கிளம்பி சென்றுவிட்டான்.

வந்துவிடுவானென்று அவள் காத்திருக்க, உடல் நலக்குறைவால் விடுப்பில் செல்வதாகவும், அவனது இரண்டுநாள் மீட்டிங்ஸ் அனைத்தையும் வேறொரு நாளுக்கு மாற்றும்படியும் அவன் மெசேஜ் வர, ‘சாரி. கெட் வெல் சூன்’ என்று பதில் அனுப்பி வைத்தவள் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

மறுநாள் காலையே ஆதனின் அழைப்புவர, “இப்ப எப்படி இருக்கு” அவசரமாக வினவியவளுக்கு,

சோர்வாக “இன்னிக்கி சில அப்ரூவல்ஸ் அனுப்பனும்” என்றவனின் குரல் ஆதங்கத்தை தந்தது.

“சஹா நீ நம்ம ஆஃபிஸ் கேப்ல வீட்டுக்கு வந்துடு, ஃபைல்ஸ உன் கேபினுக்கு அட்மினை கொண்டுவர சொல்றேன்” என்றதில், “வீ..வீட்டுக்கா?” திடுக்கிட்டவள், “நான் வேணும்னா ஸ்கேன் பண்ணி உங்களுக்கு ஈமெயில் பண்ணவா? நீங்க பிரிண்ட் எடுத்து சைன் பண்ணி அனுப்பறீங்களா?”

“என்ன சஹானா அதெல்லாம் முடிஞ்சா சொல்ல மாட்டேனா? இதுல டைரெக்ட்டா கையெழுத்து போடணும். நீ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அரைமணிநேரத்துல…” என்றவன் பேசமுடியாமல் இரும துவங்க, மறுக்க நினைத்தவள் அவன் சொன்ன நேரத்திற்கு அவன் வீட்டு வாயிலின் முன் நின்றாள்!

பிரம்மாண்ட கேட்டை தயக்கத்துடன் சிலநொடி பார்த்திருக்க கேட் தானாக திறந்தது.

“தேங்க்ஸ்” என்று மெல்லிய குரலில் சொன்னபடி அவள் உள்ளே நுழைய, அங்கோ யாருமில்லை!

சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தவளை, “அது ஆட்டோமேட்டிக் பாப்பா” என்றபடி கையில் பையுடன் எதிரே வந்த முதியவர், “நீ தான் தம்பியோட கார்யதரிசியா?” என்று கேட்க, தலையாட்டியவள், “ஆதன் சார்…” என்று இழுக்க,

“வா வா. சஹானா ரைட்?” என்று புன்னகையுடன் வந்தாள் ஆதிரா.

“அண்ணா உனக்காக தான் தூங்காம வெயிட்டிங்” என்றவள், அந்த பெரியவரிடம், “அங்கிள் நீங்க எங்க கிளம்பறீங்க” என்று முறைக்க,

“இல்ல பாப்பா ரொம்ப போர் அடிக்குது, அதான் காலாற நடந்து மார்க்கெட்க்கு போலாம்னு” என்றவரை,

“அதான் வெளில போகக்கூடாது, வேலையும் செய்யவேணாம்னு அப்பா சொன்னார்ல? இப்படி பண்ணீங்கன்னா பூட்டி வச்சுடுவேன் சொல்லிட்டேன்”” செல்லமாக மிரட்டிவிட்டு,

“சஹானா நீ வீட்டுக்குள்ள போ, நான் வந்துடறேன்” வீட்டிற்கு பக்கத்திலிருந்த சிறிய இரண்டடுக்கு வீட்டிற்குள் அழைத்து சென்றவள், தலை மட்டும் தெரியும்படி எட்டிப்பார்த்து, “நான் ஆதன் சிஸ்டர் ஆதிரா” உரக்க சொல்லிவிட்டு சென்றாள்.

பெருமூச்சு விட்ட சஹானா வலைப்பக்கமிருந்த வீடு வாயிலில் நின்று எட்டி பார்க்க, “வா மா வா வா! ஏன் அங்கேயே நிக்குற?” மலர்ந்த முகத்துடன் வந்தார் மீனாக்ஷி.

பயம்கலந்த புன்னகையுடன் உள்ளே நுழைய எத்தனித்தவளை, “வலது கால வச்சு” என்றபடி வந்த ஆதிரா, தாயின் முறைப்பில், “முதல் தடவை வரியா அதான்” என்று சமாளிக்க, சங்கடமாக உணர்ந்தவள், வலது காலை முதலில் வைத்தே நுழைந்தாள்.

மீனாக்ஷி, “என்னடி அங்கிளை ரெஸ்ட் எடுக்க சொன்னியா?” மகளை கேட்க, ஆமென்றவளை ஆதனை அழைக்க அனுப்பிவைத்த மீனாட்சி,

“உட்காரு மா, வந்துடுவான். நீ என்ன குடிக்கிற? மோர் தரவா? கொஞ்ச நேரத்துல லன்ச் ரெடியாகிடும் சாப்டுடலாம்” என்றார் வாஞ்சையாய்.

“தேங்க்ஸ் மேடம். மோர் போதும். நான் ஆபீஸ்ல சாப்டுக்கறேன்” சஹானா தரையை பார்த்தபடி சொல்ல,

“அதெல்லாம் இல்ல! முதல் தடவ வந்துருக்க, சாப்பிடாம எப்படி? சாப்பிட்டே ஆகணும், இதுக்காக சண்டே வராம இருந்துடாதே. அன்னிக்கி கண்டிப்பா விருந்துக்கு வரணும். அப்புறம் மேடம் கீடம்லாம் வேண்டாம் இது வீடு. ஆன்ட்டின்னு வேணா கூப்டு” என்றவர் சமயலறைக்கு சென்றுவிட,

கையை பிசைந்தபடி இருந்தவளோ பார்வையை ஹாலை சுற்றி ஓடவிட, காலடி ஓசைகள் கேட்க ஹாலின் நடுவே இருந்த படிக்கட்டின் புறம் பார்வையை திருப்பினாள்.

துள்ளிக்குதித்து வந்த ஆதிராவிற்கு பின்னே இயல்புக்கு மாறாக சோர்ந்த முகத்துடன் வந்தான் ஆதன்.

அவனை கண்டதும் சஹானா எழுந்து நின்றுவிட, ‘உட்காரு’ என்று செய்கை செய்தவன் நடையில் வழக்கமான வேகமில்லை.

“எப்படி இருக்கீங்க? உடம்புக்கு என்ன?” சஹானா ஆதங்கத்துடன் கேட்க,

“ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு எதையான நோண்டிகிட்டு கிடந்தா?” என்ற ஆதிரா, ஆதனின் முறைப்பில்,
“நீங்க பேசிட்டு இருங்க, உனக்கு கஷாயம் ரெடியான்னு பாக்குறேன்டா” என்று நழுவி விட்டாள்.

சஹானா, “ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்கிட்டிங்களா? சாரி எல்லாமே என்னாலதான்?” முகம் வாட, அவள் எதிர் சோஃபாவில் அமர்ந்தவன்,

“அதெல்லம் ஒண்ணுமில்ல, சரியாயிடும். நான் கேட்டதெல்லாம் கொண்டுவந்துட்டியா? அந்த செக்யுரிட்டி சாஃப்ட்வேர் பீட்டா டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் எனக்கு ஈமெயில் அனுப்பச்சொல்லி கேட்ருந்தேன், ஏன் இன்னும் வரலைன்னு அந்த டீமுக்கு மெயில்…”

குறுக்கிட்ட மீனாட்சி “அந்த பொண்ணு கொஞ்சம் ஆசவாசமாகட்டும்பா, இப்போ தானே வெயில்ல வந்திருக்கா?” சஹாவிடம் மோர் கிளாசையும், மகனிடம் கஷாயத்தையும் கொடுத்தார்.

அதை வாங்கிகொண்டவள் தயக்கத்துடன் கிளாஸ் விளிம்பை விரலால் வருட,

“குடி சஹா” என்றவனோ குக்கர் விசில் சத்தத்தில், “நாம லைப்ரரி போயிடலாம் இங்க இருந்தா டிஸ்டர்ப் ஆகும்” என்று முகம் சுழித்தான்.

“வீடுன்னு இருந்தா குக்கர் மிக்சின்னு சத்தம் வரத்தான் செய்யும்” என்ற மீனாட்சி, இருவரிடமிருந்தும் காலி கிளாஸ்களை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

ஆதன் சஹானாவை வேறொரு அறைக்கு அழைத்து செல்ல, உள்ளே நுழைந்தவளோ ப்ரம்மித்து நின்றுவிட்டாள்!

இரண்டு தள உயரம் கொண்ட அரையில் கூரையை முட்டும் வரை வரிசை வரிசையாய் புத்தகங்கள்! அலமாரியுடன் இணைக்கப்பட்ட ஏணி, ரயில் தண்டவாளம்போன்ற கம்பியில் பொருத்தப்பட்டு அறையை சுற்றி இழுக்க கூடிய வசதியுடன் இருக்க, ஒரு புறம் பெரிய கண்ணாடி ஜன்னலும் அதனை ஒட்டி சிறிய சோஃபாவொன்றும் இருந்தது.

அறையின் நடுவே டெஸ்க்கும் அதன் பின்னே பிரம்மாண்டமான தேக்கு நாற்காலியும் இருக்க, அதற்கெதிரே இரண்டு நாற்காலிகளும், சற்று தொலைவில் சாய்வு நாற்காலி ஒன்றும் இருந்தன.

கண்கள் விரிய நூலகத்தை பார்த்துக்கொண்டிருந்தவளை நெருக்கி நின்ற ஆதன், “பிடிச்சிருக்கா?” என்று கேட்க, அவன் அருகாமையை உணராதவளோ ஆர்வமாக ஆமென்று தலையசைத்தாள்.

“நீ வேணும்னா எதையாவது எடுத்த படிச்சுக்கிட்டு இரு, நான் வந்துடறேன்” என்றவன் மொபைலை பார்த்தபடி வெளியே சென்றுவிட, சஹானா மெல்ல புத்தகங்களை பார்வையிட துவங்கினாள்.

பலவகை நூல்கள் நூலகம் போல முறையாக பிரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

மெல்ல புத்தகங்களை வருகியபடி நடந்தவளின் விரல்கள் ஒரு புத்தகத்தின் முதுகில் ஒருநொடி தயங்க,

“அந்த புக் நல்லா இருக்கும்” என்று குரல் வந்தது.

“தேங்க்ஸ்” என்றபடி திரும்பியவள் அறையில் யாருமில்லாததால், மெல்லிய நடுக்கத்துடன், “யா யாரு?”

“உன் சீனியர்!”

தூக்கிவாரி போட நெஞ்சை பிடித்துக்கொண்டவள் அறையை சுற்றி மீண்டும் பார்க்க, யாரும் தென்படவில்லை!

“மேலயே தேடுற? கிழ பாரு” என்ற மிரட்டல் குரலில், இதயம் தொண்டை வழியே வெளியே குதித்துவிடும் போல இருக்க, கண்களை சாசர்போல விரித்தவள், உடல் நடுங்க,

“யாரு?” அருகிலிருந்த தடியை தற்காப்பிற்கு எடுத்துக்கொண்டாள்.

“அதை எதுக்கு எடுக்குற? அது புக் எடுக்க” என்ற குரலில் வேகமாக அறையின் கதவை நோக்கி நடுங்கியபடி நடந்தாள் .

காலில் ஏதோ தட்டுப்பட, குனிந்தவள் அவளை அண்ணாந்து பார்த்த சுண்டெலியை கண்டு பயத்தில் வீலென்று அலறி, தடியால் ஓங்கி அடிக்க, அதுவோ தப்பித்து எகிறிகுதித்து ஓடிச்சென்று கதவின் முன்னே நின்றுகொண்டு,

“ஹே! முட்டாள் எதுக்கு என்னை அடிக்கிற! நான் உன் சீனியர்!” என்று கத்தியது.

“ஐயோ! பேய்புடிச்ச எலி!” அலறியவள் பதற்றத்தில் மீண்டும் அடிக்க, அது நழுவிவிட, அங்கிருந்த அலங்கார கண்ணாடி மேஜை சிதறியது!

“ஓஹ காட்! நீ நிஜமாவே லூசு தான். ஹேய்! நோ நோ! கீழ போடு அந்த தடியை!” மிரட்டியபடி எலி அவளை நோக்கி வேகமாக ஓடி வர,

“ஆண்டவா! காப்பாத்துங்க! பேய் பேய்!” அலறியவள் அறையை சுற்றி ஓட, நொடியில் அவள் முன்னே வந்த எலி,

“இடியட்!” என்று அவள் மேல் பாய வீலென்று அலறியவள் மயங்கி விழுந்தாள்!

அவளை நெருங்கிய ஈவா, ஆதனுக்கு ‘sos லைப்ரரி’ (அவசரம்) என்று சிக்னல் அனுப்பியது.

வேகமாக கதவை திறந்துகொண்டு வந்த ஆதன், தரையில் சிதறியிருந்த கண்ணாடி சில்லுகளுக்கிடையே விழுந்து கிடைந்த சஹானாவை கண்டு அதிர்ந்தான்.

அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றவன் கேள்வியாய் ஈவாவை பார்க்க அதுவோ, “என்னை பேய் பிடிச்ச எலின்னு கத்திகிட்டே விழுந்துட்டா. இடியட்!” என்றது.

“நீ ஏன் ஈவா இவளுக்கு முன்னாடி வந்த?” கடிந்துகொண்டபடி சஹானாவை எழுப்ப முயற்சிதவன் “ஈவா போயி தண்ணி கொண்டுவர சொல்லு” என்றதில், அது சமையலறைக்கு ஓடியது.

லேசாக மயக்கம் தெளிந்து துவண்டிருந்தவளை கைத்தாங்கலாக அமரவைத்து, அவளை தன் மீது சாய்த்து பிடித்துகொண்டவன், அவளை கவலையுடன் பார்க்க,

மெல்ல கண்திறந்தவள் “ஆதன்… இங்க பேய் பேய்” அலறி, அவனுள் ஒடுங்கி கொள்ள,

“பேயெல்லாம் இல்ல சஹா. ரிலாக்ஸ்” ஆறுதலாக அவள் முதுகை வருடிக்கொடுத்தான்.

“இல்ல என் கிட்ட பேசிச்சு, எலிக்குள்ள இருக்கு” என்றவள் அவன் சட்டையை இறுக்கமாக பற்றிக்கொள்ள,

“என்னடா ஆச்சு?” பதற்றத்துடன் வந்த மீனாட்சியிடமிருந்து தண்ணீர் கிளாஸை வாங்கிக்கொண்ட ஆதன் சஹானாவிற்கு நீரை புகட்ட, வேகமாக பருகியவள்,

“ஆன்ட்டி இங்க பேய் இருக்கு ஆன்ட்டி. எலிக்கு பேய் பிடிச்சுருக்கு!” திக்கி கொண்டே மீனாட்சியை பார்க்க, அவரோ குழப்பமாக மகனை பார்த்தார்.

“ஏய் என்னை நான் பேயின்னு சொல்லாதேன்னு சொன்னேன்ல!” ஆதனின் தோள்மீது குதித்து அமர்ந்த ஈவா சஹானாவை மிரட்ட, அவளோ அலறியபடி பின்னோக்கி நகர்ந்தாள்.

“ரிலாக்ஸ் சஹா! இது ஈவா! என் அசிஸ்டன்ட். ரோபோ” என்றவன் ஈவாவிடம் “நீ, ‘நான் பேயில்லை’னு மறுபடி மறுபடி சொல்லுறதுக்கு நான் ஒரு ரோபோட்ன்னு சொல்லியிருக்கலாம்ல?” என்று கடிந்துகொண்டதில்,

“பாஸ்! நான் யாருன்னு சொல்லக்கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க? செக்யூரிட்டி ரூல் நம்பர் ஒன்!” ஈவா கிண்டாலாக நினைவூட்டியது.

அதற்குள் சஹானாவை மெல்ல எழுப்பி நிற்கவைத்த மீனாட்சி, “அது பொம்மை எலிமா. அத பாத்தா பயந்த?” ஆறுதலாக அவளை பற்றி அருகிலிருந்த சோஃபாவிற்கு அழைத்துச்செல்ல,

“மா! கீழ கண்ணாடி சிதறியிருக்கு பாத்து!” கத்திய ஆதன், “என்ன ஈவா இது?” மீண்டும் ஈவாவை முறைக்க, அதுவோ திமிராக “பாஸ்! உடைச்சது நான் இல்லை உங்க சஹா தான்!” என்றது.

மனிதர்கள் போலவே இயல்பாய் பேசுவது எலி வடிவிலான இயந்திரம் என்று நம்பமுடியாமல் ஈவாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த சஹானாவிடம், “வாட் ஈஸ் திஸ் சஹா?” என்று ஆதன் பாய,

“அது எலின்னு பயந்து அடிக்க போயி…” சஹானா தொடராமல் தலைக்கவிழ்ந்தாள்.

“விடு பா, கிளீன் பண்ணிக்கலாம்” என்ற மீனாட்சி, வெளியே செல்ல,

ஆதனின் கோவமோ குறைந்த பாடில்லை.

ஈவாவை கையெலெடுத்தவன் “நான் தான் உன்னை லேபுலேயே இருந்து ‘பீ’ யை மானிடர் பண்ண சொன்னேன்ல? இங்க எதுக்கு வந்த?” அதை முறைத்தவன், சஹானாவின் புறம் திரும்பி,

“ஆமா நீ இப்படித்தான் வாயில்லா ஜீவனை அடிப்பியா? ஈவாவா இல்லாம நிஜ எலியா இருந்தா என்ன ஆயிருக்கும்?” என்று கடிந்துகொள்ள, குற்றவுணர்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தவள் மனமோ, அப்படி ஆகியிருந்தால் என்று நினைக்கவே அஞ்சியது.

“சாரி” என்றவள் கையை பிசைய, கோவம் குறையாத ஆதனோ ஈவாவிற்கு வேலை சொல்லி லேபிற்கு அனுப்பிவைத்தான்.

செய்வதறியாது தரையை வெறித்திருந்தவளை பார்த்தவன், கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, “உட்காரு” என்றதில் அமர்ந்தவள், மௌனமாகவே இருக்க,

“எப்போவும் பயமும் பதட்டமாகும்னு இருக்குறது உனக்கு நல்லதில்லை சஹா. நீ கொஞ்சம் கூல் டவுன் ஆகணும். உன்னோட இந்த ஃபோபியாக்கு மனோதத்துவ டாக்டரை பார்த்தியா இல்லையா?” நாற்காலியில் சாய்வாக அமர்ந்தவன் கேட்க,

“இல்ல… இதெல்லாம் என்னன்னு டாக்டரை… அதுவும் மனோதத்துவ டாக்டரைலாம் பார்த்தா அப்புறம் யாரும் சம்மந்தம் பண்ண வரமாட்டாங்கன்னு அம்மா அப்பா சொல்லிட்டாங்க. எல்லாம் தானா சரியா போயிடும்னு…”

“நான்சென்ஸ்! இதெல்லாம் ட்ரீட்மெண்ட் எடுக்காம விட்ற விஷயமா? ஒவ்வொரு தடவையும் யாரையாவது பார்க்கும்போது உனக்கு எப்படி வேர்க்குது படபடன்னு வருதுன்னு நானே கண்கூடா பாக்குறேனே. எங்கம்மாவை தங்கையை பார்த்ததுக்கு கூட நீ நடுங்கி நின்னதை நான் கவனிக்கலைன்னு நினைக்கிறியா?” ஆதன் கடுகடுக்க,

“பெரியவங்களை மீறி நான் என்ன பண்ணமுடியும்”

“எப்போ ஆரம்பிச்சுது இதெல்லாம்? பிறவிலிருந்தா?”

“இல்ல டென்த் படிக்கும்போது…” துவங்கியவள், உடைந்திருந்த கண்ணாடி சிதறல்களை சுத்தம் செய்யவந்த பெண்ணின் வருகையால், “டாக்குமெண்ட்ஸ் பாக்கறீங்களா?” என்று வேகமாக பேச்சை மாற்றினாள்.

“ம்ம் தா” என்றவன் கோப்புகளில் கவனத்தை திருப்ப, சஹானாவிற்க்கோ ஈவா மீதே யோசனையிருந்தது.

“அந்த ஈவா ரோபோவா? எப்படி மனுஷங்க மாதிரியே பேசுது?” ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட்டவள் அவனையே பார்க்க, அவனோ காதிலேதும் விழாததுபோல அமைதியாக படித்துக்கொண்டிருந்தான்.

முகம் வாடியவள் பார்வையை ஜன்னலுக்கு வெளியே தெரிந்த தோட்டத்திற்கு திருப்பினாள்.

“ஈவா ஒரு ஆர்டிபிஷியல் இன்டெலிஜெண்ட் மிராக்கிள்! வெறும் இயந்திரம்னு சாதாரணமா சொல்ல முடியாது” ஆதனின் குரலில் திரும்பியவள் ‘புரியலைன்னு சொன்னா என்ன நினைப்பாரோ’ என்று புரிந்ததுபோல தலையாட்டினாள்.

“வெறும் இயந்திரம் இல்லை. நுண்ணறிவுள்ள விஞ்ஞான அதிசயம் ஈவா!” பெருமிதத்துடன் சொன்னவன், “ரொம்ப பயந்துட்டியா?” என்று பரிவாக கேட்க,

“ம்ம் ரொம்ப. எலி பேசுதேன்னு உடம்பெல்லாம் நடுங்கி போச்சு… ஆமா எப்படி மனுஷங்க மாதிரியே பேசுது, உணர்ச்சியோட குரல் வரவே இன்னும் பயந்துட்டேன்” என்றாள்.

“இப்போதான் தமிழ் பேச கத்துக்கிட்டு இருக்கு அதுக்கே இப்படி” சிரித்துக்கொண்டவன், “உன்னிப்பா கேட்டா தெரிஞ்சுருக்குமே அது ஆதிரா குரலன்னு! ஈவா குரல் ஆதிரா வச்சுதான் கிரியேட் பண்ணேன்” பேப்பரில் பார்வையை ஓடவிட்டபடி சொல்ல,

“சர்வசாதாணரமா சொல்றான்?’ வியந்தவள், “ரொம்ப தத்ரூபமா எப்படி எலிமாதிரியே இருக்கு”

“அதெல்லாம் சிலிகான், சிந்தெடிக் ஃபைப்பர்ஸ்! ஆன்டெனா இருந்ததே” அவன் பார்வையை ஒருநொடி அவள் மீது பதித்துக்கேட்க.

“ஆன்டெனாவா?” புருவம் சுருக்கியவள் கண்ணைமூடி நினைவுகூர முயற்சிக்க,

“சும்மா கலாச்சேன்!”கண்சிமிட்டி சிரித்தவன் “ஈவா மீசைல சென்சார்ஸ் எல்லாம் இருக்கு” என்றதில் கடுப்பானவள்,

“அப்போ உங்க மீசைலயும் சென்சார்ஸ் இருக்கோ?” கோவமாக கேட்டுவிட்டு உதட்டை கடுத்துக்கொள்ள,

உரக்க சிரித்தவன், “இருக்கே! ஆனா அதுக்கு தேவையானதை உணர மட்டும்!” அவளை கூர்ந்து பார்க்க அவன் பேச்சின் பொருள் விலங்காவிடினும் கண்களில் மாற்றம் தெரிய, ஏனோ உடல் சில்லிடுவதை உணர்ந்தவள் பார்வையை மீண்டும் தோட்டத்திற்கு திருப்பினாள்.