gaanam04

கானம் 04

ஜேசனை நான்சியின் வீட்டிலிருந்து அவன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வருவதற்குள் அவன் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. மிகவும் பிரயத்தனப்பட்டு அவனை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். ஜேசன் புரிந்துகொள்ள மறுத்த நிதர்சனத்தை அவனது பாதுகாவலர்கள் மிக இலகுவாகப் புரிந்து கொண்டார்கள்.
 
“ப்ளடி இடியட், அந்த தாமஸ் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்.” ஜேசனின் குரல் கோபத்தில் வெடித்தது. கூட இருந்த அவன் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள். இப்போது எது பேசினாலும் அது அவர்கள் எஜமானனைக் கோபப்படுத்தும் என்று அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
 
“இந்த நான்சி என்னப் பண்ணுறா? இவ சொல்லலைன்னா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு இவ நினைச்சுக்கிட்டு இருக்காளா?” மீண்டும் உச்சஸ்தாயியில் வந்தது இளையவனின் குரல். உண்மையிலேயே நான்சி வீட்டின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தான் ஜேசன். ஒரு கண் என்பதைவிட பல கண்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். தாமஸின் மேல் ஜேசனுக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. மனிதர் நிச்சயமாக ஏதாவது ஏடாகூடம் பண்ணுவார் என்று அவன் எதிர்பார்த்தான். 
 
அன்று காலையில் நான்சி குடும்பம் சர்ச்சிற்குப் புறப்பட்டது முதல் ஜேசனுக்கு அனைத்துத் தகவல்களும் வந்தபடியே இருந்தன. ஜாக்சனின் மகன் பசைபோடாத குறையாக நான்சியோடு ஒட்டி உறவாடுகிறான் என்று கேள்விப்பட்ட போது ஜேசனின் ரத்தம் கொதித்தது. அத்தோடு நின்றுவிடாமல் குடும்பமே கிளம்பி நான்சி வீட்டுக்கு வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டவுடன் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கிளம்பி வந்துவிட்டான் ஜேசன். 
 
“அதான் எங்கூட வந்திடுன்னு கூப்பிடுறேனில்லை, வரவேண்டியதுதானே, எதுக்குத் தயங்குறா? எதுக்கு என்னையே விரட்டுறதுல குறியா இருக்கிறா?” கோபம் மேலிட மேலிட ஜேசனின் குரலில் ஸ்ருதி ஏறியது. 
 
“மேடம் பண்ணினது தப்புன்னு எனக்குத் தோணலை சார்.” மெய்ப்பாதுகாவலரில் ஒருவர் மெதுவாகச் சொன்னார்.
 
“வாட்?! எங்கூட வராம அவ அங்க என்னப் பண்ணப் போறா? அந்த ஜாக்சனோட பையனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாளா? என்ன மேன் பேசுற நீ?!”
 
“இப்போ அங்கத்தைய நிலைமை மிஸ்டர் தாமஸுக்கு சாதகமா இருந்துச்சு சார், அதான் மேடம் சட்டுன்னு உங்களைப் போகச் சொல்லிட்டாங்க.”
 
“தாமஸுக்கு சாதகமா இருந்துச்சா? எப்பிடி?!” இப்போதுதான் ஜேசன் நிதானத்துக்கு வந்திருந்தான். அவனுக்கு இன்னும் விஷயம் பிடிபடவில்லை.
 
“மேடம் இன்னும் மைனர் எங்கிறது மிஸ்டர் தாமஸுக்கு சாதகம்தானே சார்? அதை வெச்சு அவர் எந்த எல்லைக்கும் போகலாமில்லையா?” கேட்கப்பட்ட கேள்வியின் வீரியம் அப்போதுதான் உறைக்க ஜேசன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான். ஏதோவொரு வேகத்தில் அனைத்தையும் செய்துவிட்டான். ஆனால் இப்போதுதான் தான் செய்த வேலையின் தாற்பரியம் புரிந்தது. இளையவன் விஷயத்தைப் புரிந்துகொண்டு விட்டான் என்று தெரிந்தவுடன் கூட இருந்த இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் முகம் கவலையைக் காட்டியது.
 
ஆன்டனி, லியோ… இவர்கள் இருவரும் ஜேசனின் மெய்ப்பாதுகாவலர்கள் என்று சொல்வதை விட அவனின் இரண்டு கரங்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஒரு முதலாளிக்குக் காட்டும் விசுவாசத்தை விட அந்த இளைஞன் மேல் அவர்கள் இருவருக்கும் அவ்வளவு பாசம் இருந்தது. இந்தச் சின்னஞ்சிறு வயதில் அவன் சாதித்திருக்கும் உயரம் பார்த்து அவர்கள் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். இன்று அவன் நிலைமையைப் பார்த்து வருந்துவதும் அவர்கள்தான்.
 
லியோவின் அலைபேசிக்கு ஏதோவொரு குறுஞ்செய்தி வர சட்டென்று எடுத்து அதைப் பார்த்தவன் மலைத்துப் போனான். எதுவோ சரியில்லை என்று ஆன்டனி லியோவை கூர்ந்து பார்க்கத் தனது அலைபேசியை நீட்டினான் லியோ. இப்போது ஆன்டனி திடுக்கிட்டுப் போனான்.
 
“என்னாச்சு?” இருவரின் உடல்மொழியிலும் வித்தியாசத்தை உணர்ந்த ஜேசன் குழப்பத்தோடு கேட்டான். அவன் கேட்டு முடிக்கும் போது அவனது அலைபேசி அலறியது. ஜேசனின் மானேஜர் அழைத்துக் கொண்டிருந்தார்.
 
“ஹலோ.”
 
“ஜே! வாட் இஸ் கோயிங் ஆன்? என்ன நடக்குது ஜே? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?” பதட்டமாக வந்து வீழ்ந்த வார்த்தைகளில் ஜேசன் முழுதாக நிலைகுலைந்தான்.
 
“என்னாச்சு? எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷனா பேசுறீங்க?!”
 
“ஜே, உங்களுக்கு விஷயம் இன்னும் புரியலை, உங்க வீடியோ ஒன்னு சோஷியல் மீடியாவுல வைரலாகிக்கிட்டு இருக்கு, என்னால இங்க உட்கார முடியலை, காலுக்கு மேல கால் வந்த வண்ணம் இருக்கு, நீங்க இப்போ எங்க இருக்கீங்க? என்ன நடக்குது ஜே?” மானேஜர் மீண்டும் பதறியபடி பேச ஜேசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தனது வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகிறதா? தான் விளையாடும்போது சம்பவிக்கும் அற்புதமான நிகழ்வுகளைப் பலர் பல தளங்களில் போடுவதுண்டு. அதை அவன் எப்போதும் பொருட்படுத்துவதில்லை. மானேஜர் இத்தனைக் கலவரப்படும் அளவிற்கு அப்படி என்ன நடந்துவிட்டது?!
 
ஜேசனின் குழப்பத்தைத் தீர்த்து வைப்பவன் போல லியோ தனது அலைபேசியை ஜேசனின் புறமாகத் திருப்பினான். இளையவனின் கண்கள் தெறித்து விழுந்துவிடும் போல விரிந்தன. நான்சியின் கையை ஜேசன் பிடித்து வலுக்கட்டாயமாக இழுக்க அவனை மறுத்து நான்சி தன்னை விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள்.
 
“எங்கூட வந்திரு நான்சி.” ஜேசனின் பலாத்காரக் குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்டது.
 
“இல்லை ஜே, என்னை விடுங்க, இங்கேயிருந்து முதல்ல போங்க நீங்க.” நான்சியின் மறுப்புக் குரலும் வீடியோவில் தெளிவாகக் கேட்டது. 
 
“ஜே! ஜே!” அழைப்பில் இருந்த மானேஜர் எத்தனையோ முறை அழைத்த போதும் இளையவன் சுயநினைவுக்குச் சட்டென்று வரவில்லை. அவன் பாட்டில் அழைப்பைத் துண்டித்து விட்டு அமைதியாக அமர்ந்துவிட்டான். உலகமே இருண்டது போல இருந்தது ஜேசனுக்கு. தாமஸ் இத்தனைத் தூரம் இறங்கி அடிப்பார் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தன் வாழ்க்கையை, எதிர்காலத்தைப் புரட்டிப் போடும் இத்தகைய இழி செயலை தாமஸ் செய்யத் துணிவார் என்று அவன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. 
 
நிமிடங்கள் செல்லச் செல்ல காணொளியைப் பார்த்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் எகிறிக்கொண்டிருந்தது. ஜேசனின் எதிர்காலம் அவன் கண் முன்னாலேயே சரிவதைப் போல ஒரு பிரமைத் தோன்ற வெறிபிடித்தவன் போல எழுந்தான் இளையவன். இப்படியொரு எதிர்வினையை அவனிடம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஆன்டனியும் லியோவும் அவனை இருபுறமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள்.
 
“கன்ட்ரோல் யுவர் செல்ஃப் சார், நிலைமை ரொம்ப மோசமாகிக்கிட்டுப் போகுது, இன்னும் இன்னும் அதை நீங்கச் சிக்கல் ஆக்கிடாதீங்க, ப்ளீஸ்.” எத்தனையோ கெஞ்சல்களுக்கு மத்தியில்தான் அந்த இளஞ்சிங்கத்தை அவர்களால் அடக்க முடிந்தது.
 
“நான்சி!” தான் இனிமேல் பார்க்கவே முடியாத நான்சியை அந்த இடமே அதிரும் வண்ணம் ஆங்காரமாகக் கத்தி அழைத்தான் ஜேசன்.
 
“உங்கப்பா கடைசியில என்னை ஜெயிச்சுட்டாரு நான்சி! என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாரு நான்சி! உன்னோட ஜேசன் இன்னையோட இல்லாமப் போயிட்டான் நான்சி!” கண்களில் கண்ணீர் பெருக வாய்விட்டு அழுதவனைப் பார்த்து இயற்கை கூட அழுதது. ஹோவென்று மழையொன்று வெளியே பொழிய ஆரம்பித்தது.
 
***
அடுத்த நாள் இங்கிலாந்தின் அனைத்துப் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி அனைத்தினதும் பேசுபொருளாக ஜேசனே இருந்தான். காட்டுத்தீ போல அந்தக் காணொளி அனைவரையும் போய் சேர்ந்திருந்தது. எதுவும் செய்ய இயலாமல் இரவு முழுவதும் அவனும் அவனைச் சார்ந்தவர்களும் கைகட்டி நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீடியா சுதந்திரம் இளையவன் வாழ்க்கையின் மீது தாமஸ் வைத்த நெருப்பை ஊதிப் பெரிதாக்கிவிட்டிருந்தது.
 
ஜேசனோடு இத்தனை நாளும் பெருமையோடு கை கோர்த்திருந்த பெரிய பெரிய விளம்பர கம்பெனிகள் அவனோடான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டன. நகரங்களின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவனது விளம்பர பேனர்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டன. தனிப்பட்ட முறையில் ஒரு சில அலைபேசி அழைப்புகள் அக்கறையோடு வந்தபோதும் பகிரங்கமாக அனைத்து வீரர்களும் சமூக வலைதளங்களில் அவனை விட்டு விலகி நின்றார்கள். இதுநாள்வரை அவனைத் தொடர்ந்து வந்த பல விசிறிகள் அவனோடான உறவை முறித்துக் கொண்டார்கள். 
 
ஜேசனின் பெயர் பதிக்கப்பட்ட உடைகள், பொருட்கள் என அனைத்தும் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டன. இலவசமாக அவற்றை வழங்க உற்பத்தியாளர்கள் முன்வந்த போதும் வாங்குவதற்கு விசிறிகள் மறுத்தார்கள். ஓர் ஒற்றை இரவிற்குள் தனது வாழ்க்கை அஸ்தமனமானதை ஜேசன் நெஞ்சம் வெடிக்கும் வலியோடு பார்த்திருந்தான். விஷயம் அத்தோடு முடியவில்லை.
ஜேசனின் விஸ்வரூபத்தின் மேல் தாமஸுக்கு எப்போதுமே ஒரு இனம்புரியாத பயம் உண்டு. இள ரத்தம் வேறு. அவனால் பகிரங்கமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகத் தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஏதாவது ஆபத்து வரும் என்று அஞ்சியவர் விஷயத்தை மேலும் பெரிதுபடுத்தினார். போலீஸில் ஜேசன் மீது புகார் கொடுத்தார் தாமஸ். 
 
இருபத்தியிரண்டு வயது கொண்ட அனுபவமற்ற அந்த இளம் வாலிபனை அதற்கு மேல் ஆன்டனியும் லியோவும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். எந்த நிமிஷமும் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் அந்த எரிமலை தன் சுடு தணலை தாமஸ் மீது எறியும் வாய்ப்பு இருந்ததனால் அவனைக் கண்காணித்தபடியே இருந்தனர். போலீஸ் வரை விஷயம் போயிருப்பது ஜேசனின் மானேஜர் மூலம் இவர்களுக்கு முன்னமே தெரிய வந்திருந்தது. ஜேசனின் லாயர் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருந்தார். விளையாட்டு உலகில் அவன் சகாப்தம் முடிவடைந்து போனாலும் ஜேசனை இந்த வழக்கிலிருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் அவன் தரப்பு அனைவரும் தீவிரமாக இறங்கி இருந்தார்கள்.
 
தாமஸ் என்ற மனிதரின் பின்னால் ஜாக்சன் மற்றும் ஸ்டீவ் என்னும் இரண்டு கறுப்பு ஆடுகள் இருக்கின்றன என்று இவர்களுக்குப் புரியவில்லை. தாமஸ் இரண்டே அடியோடு விட்டுவிட நினைத்த பிரச்சனையை அவர்கள் நான்கு அடியாக மாற்றியதும் இவர்களுக்குத் தெரியாது. சம்பவம் நடந்த அடுத்த நாளே போலீஸ் ஜேசனை கைது பண்ணி இருந்தார்கள். பாலியல் பலாத்காரம் என்ற பிரிவின் கீழ் குற்றம் பதிவு பண்ணப்பட்டிருந்தது. சாட்சியாகக் காட்டப்பட்ட வீடியோ ஆதாரம் மிகவும் தெளிவாக இருந்ததனால் ஜேசனின் லாயரால் எதுவும் செய்ய இயலவில்லை. பெருமுயற்சியின் பிறகு பெயில் கிடைத்திருந்தது. 
 
வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை அப்போதுதான் பார்த்தான் ஜேசன். போலீஸ் கஸ்டடியில் இருந்த அந்த இரண்டு நாட்களும் இளையவன் துடித்துப் போனான். இத்தனைக்கும் அவனை யாரும் அங்கு மரியாதைக் குறைவாகவோ கேவலமாகவோ நடத்தவேயில்லை. சொல்லப் போனால் அவன் விசிறிகள் கூட ஒரு சிலர் அங்கிருந்தார்கள். விசாரணையின் போது கூட அனைத்து ஆஃபீஸர்களும் மிகவும் மரியாதையாக அவனை நடத்தினார்கள். ஜேசனின் லாயர் எப்படியாவது நான்சியை இந்த கேஸில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பிரயத்தனங்கள் செய்தார். நான்சியின் வாக்குமூலம் ஒன்று மட்டுமே ஜேசனை சூழ்ந்திருக்கும் சிக்கலைச் சற்றேனும் குறைக்கும் என்பது அவர் முடிவு.
 
ஆனால், தாமஸ் அதற்கு எந்த வகையிலும் உடன்படவில்லை. தனது மகள் பதினெட்டு வயது நிரம்பாத மைனர் என்பதால் அவளுடைய எதிர்காலத்தை முன்னிட்டு அவளை போலீஸ், கோர்ட் என்று இழுக்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். அத்தோடல்லாது தனது மகளின் மனநிலை இதனால் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் வாதாடினார். 
 
எதுவும் செய்ய முடியாத நிலையில் பெயில் கிடைத்ததே பெரிய விஷயம் என்று ஜேசனை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள். பாதியாகிப் போயிருந்தான் இளையவன். மகனின் அறையை எட்டிப் பார்த்தார் கிரேஸ். இலக்கில்லாமல் எங்கேயோ வெறித்தபடி பார்த்திருந்தான் ஜேசன்.
 
“ஜே…” இதமான அந்த அழைப்பில் திரும்பினான் ஜேசன். மலர்ந்த புன்னகையோடு உள்ளே வந்தார் கிரேஸ்.
 
“ஏதாவது சாப்பிடலாமே ஜே.”
 
“பசிக்கலை மாம்.”
 
“எதுக்காக இப்போ இப்பிடி உடைஞ்சு போயிட்டே ஜே?” அம்மாவின் கேள்விக்கு முதலில் ஒரு கசப்பான சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. 
 
“இன்னும் என்ன மாம் எனக்கு மிச்சமிருக்கு?”
 
“அப்பிடியெல்லாம் பேசக்கூடாது, ஒரு விளையாட்டு வீரனுக்கு இது அழகில்லை ஜே.”
 
“எல்லாமே முடிஞ்சு போச்சு மாம்.”
 
“நிச்சயமா இல்லை, நீ இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு, அம்மா நான் சொல்லுறேன் ஜே.”
 
“போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ்… இன்னும் என்ன மாம் இருக்கு?” 
 
“உண்மைதான், நிதர்சனம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும், இல்லேங்கலை… அதுக்காக எல்லாம் முடிஞ்சு போனதா நினைக்காதே ஜே.”
 
“அப்பா எப்பிடி இருக்காங்க?”
 
“வருத்தப்பட்டாங்க, உனக்கு இப்பிடியெல்லாம் ஆகிடுச்சேன்னு இல்லை, நீ எதுக்காக எல்லாத்துக்கும் இப்பிடி அவசரப்படுறேன்னு வருத்தப்பட்டாங்க, எதுக்காக நிதானமே இல்லாம எல்லாக் காரியத்தையும் பண்ணிச் சிக்கலாக்கிக்கிறேன்னு வருத்தப்பட்டாங்க.”
 
“……”
 
“ஒரேயொரு மாசம், இன்னும் ஒரேயொரு மாசம் நீ பொறுமையா இருந்திருந்தா அந்த தாமஸால இவ்வளவு ஆட்டம் போட்டிருக்க முடியுமா சொல்லு?”
 
“அவங்க அங்க நான்சிக்கு கல்யாணம் பேசுறாங்க.”
 
“பேசட்டுமே! அவங்களால பேச மட்டுந்தானே முடியும், எந்த சர்ச் ல பொண்ணுக்குப் பதினெட்டு வயசாகாம கல்யாணம் பண்ணச் சம்மதிப்பாங்க?”
 
“……”
 
“எல்லா விஷயத்திலயும் கொஞ்சம் நிதானம் வேணும் ஜேசன், உன்னோட அவசர புத்திக்கு நீ குடுத்திருக்கிற விலை ரொம்ப ஜாஸ்திப்பா.” மகனின் தலையை அம்மா தடவிக் கொடுக்கக் கண் கலங்கினான் இளையவன்.
 
“அழாதே ஜே! நீ சாதிக்கப் பிறந்தவன், இதோட எல்லாம் முடிஞ்சு போயிடாது, வர்றதை மன உறுதியோட தைரியமா ஃபேஸ் பண்ணுவோம், நீ ராபர்ட்டோட பையன், நிமிர்ந்து நில்லு ஜே! வெற்றி மேல வெற்றி வந்தப்போ எவ்வளவு சந்தோஷப்பட்டோம், இப்போ நமக்குச் சோதனைக் காலம், இதுவும் கடந்து போகும், நாம தைரியமா இதையும் கடக்கலாம் ஜே! வருத்தப்படாதே!” மனதளவில் அவனைத் தூக்கி நிறுத்த நினைத்த‌ அன்னையின் மடியில் தலைசாய்த்து ஜேசன் குலுங்கிக் குலுங்கி அழுதான். மனம் முழுவதும் வேதனை மண்டிக் கிடந்தாலும் அவை எதையும் வெளியே காட்டாமல் மகனுக்குப் பக்கபலமாக நின்றார் அன்னை.
 
அடுத்து வந்த இரு வாரங்களில் கோர்ட், கேஸ் என்று அலைந்து திரிந்தான் ஜேசன். எல்லா நிகழ்ச்சி நிரல்களில் இருந்தும் அவன் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் எந்தப் பயிற்சியும் இருக்கவுமில்லை, எந்த விளையாட்டிலும் அவன் பங்குபெறவுமில்லை. அணியுடனான ஒப்பந்தம் முடிய இன்னும் இரண்டு வருட காலம் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கழித்துக் கொண்டு வாராவாரம் அவன் சம்பளம் கைக்கு வந்தது. அதனால் அப்போதைக்கு வருமானத்திற்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.
 
எல்லா இடங்களுக்கும் தாமஸே நான்சி தரப்பில் ஆஜரானார். வீடியோ ஆதாரத்தோடு ஜாக்சன் மற்றும் ஸ்டீவ், நான்சி வீட்டுப் பண்ணைக்கு அன்று வேலைக்கு வந்திருந்த தொழிலாளர்கள் என பலர் சாட்சி சொல்ல, ஜேசன் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
 
ஜேசன் நான்சி மீது பாலியல் பலாத்காரம் செய்ய முனைந்தார் என்ற குற்றச்சாட்டு முறையடிக்கப்பட்டு உடல் முறைகேட்டுக்கு (ஃபிஸிகல் அப்யூஸ்) துணிந்தார் என்று கோர்ட் முடிவு செய்தது. அதற்கு மேல் ஜேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குழுவால் எதுவும் செய்ய இயலவில்லை. 
 
ஜேசனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!