gaanam08
gaanam08
கானம் 08
ஜேசன் சட்டென்று முன்னே நடந்துவிட அவனைப் பின் தொடர்வதா இல்லையா என்றுப் புரியாமல் அப்படியே நின்றிருந்தாள் நான்சி. எதையுமே தெளிவாகச் சொல்லாமல் மொட்டையாக ‘இந்தப் பெயருக்கு என் வீட்டு வாசலில் கூட இடமில்லை’ என்று சொன்னால் என்னவென்று கொள்வது?!
அப்போதுதான் அவள் தன்னைத் தொடரவில்லை என்பதை ஜேசனும் உணர்ந்திருப்பான் போலும். சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான். புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தால் முதலில் உயர்ந்தன. அப்போதும் அவள் அமைதியாக நிற்கவே அவன் கண்கள் அவளைக் கேள்வி கேட்டன. பெண் அசைந்து கொடுக்கவில்லை. அப்படியே நின்றிருந்தது.
“ஆன்டனீ!” சத்தமாக ஜேசன் குரல் கொடுத்த அடுத்த நொடி ஆன்டனி அங்கு ஆஜரானான்.
“உங்கிட்ட நான் வாங்கி வெக்கச் சொன்ன ‘பொக்கே’ எங்க?” எரிச்சல் மூண்ட குரலில் ஜேசன் கேட்கவும் ஆன்டனிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் ஜேசன் அப்படியேதும் அவனிடம் வாங்கச் சொல்லி இருக்கவில்லை.
‘மலர்கள் வேண்டும் என்று இவர் எப்போது சொன்னார்?!’ ஆன்டனி தலையைப் பிய்த்துக் கொண்டான்.
“இல்லை, உங்க மேடம் பொக்கே குடுத்து வரவேற்றாத்தான் உள்ள வருவாங்க போல இருக்கு!” புருவம் ஒன்று கோபத்தால் அனாயாசமாக ஏறி இறங்க அவன் சொன்ன போது ஆன்டனிக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவசரமாக நான்சியிடம் வந்தவன்,
“உள்ள வாங்க மேடம்.” என்றான் புன்னகை முகமாக. ஜேசனின் பேச்சும் செயலும் கொஞ்சம் இதமாக இருந்த போதிலும் அவன் அவளை நேரடியாக உள்ளே அழைக்காதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது பெண்ணுக்கு. ஆனாலும் எதையும் கண்டு கொள்ளாது உள்ளே போனாள் பெண். வீடு மிகவும் அமைதியாக இருந்தது.
“ஆன்டனி…” என்று அழைத்தாள் மெதுவாக. ஜேசனும் அப்போது அங்குதான் நின்று கொண்டிருந்தான். அவள் தன்னிடம் பேசாமல் ஆன்டனியிடம் பேசியதை அவன் ரசிக்கவில்லைப் போலும். அவன் முகத்தில் அவ்வளவு அதிருப்தி!
“சொல்லுங்க மேடம்?”
“ஆன்ட்டி… எங்க? அவங்க இங்க வரலையா?”
“உள்ளதான் இருக்காங்…” ஆன்டனியை மேலே பேசவிடாமல் தடுத்தது ஜேசனின் கோபப் பார்வை.
“ஆன்ட்டி இருக்கட்டும் நான்சி, அவங்களை உனக்குத் தெரியாது, ஆனா உனக்கு நல்லாத் தெரிஞ்ச அங்கிள் ஒருத்தர் இருந்தாரே, அவரு எங்க நான்சி?” அந்த வார்த்தைகள் அமிலத்ததைத் தூவியது. வேலை எடுத்து நெஞ்சில் பாய்ச்சியது போல இருந்தது நான்சிக்கு.
“சொல்லு நான்சீ… எங்கப்பா எங்க? மிஸ்டர் ராபர்ட் எங்க நான்சீ?” ஜேசனின் குரல் உச்சஸ்தாயியில் ஒலிக்க அந்த இடமே அதிர்ந்து போனது. ஆன்டனி கூட இப்படியொரு கூச்சலை ஜேசனிடமிருந்து எதிர்பார்க்கவில்லைப் போலும். ஆச்சரியத்தோடு அங்கேயே நின்றுவிட்டான். இளையவன் போட்ட சத்தத்தில் இதுவரை உள்ளே ஏதோ வேலையாக இருந்த லியோ கூட சட்டென்று வெளியே வந்தான். நான்சியின் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிந்தது. அப்போது பார்த்து ஏதோவொரு ஒலி கேட்கவும் அனைத்தையும் மறந்துவிட்டு ஜேசன் உள்ளே ஓடினான்.
“உள்ள வாங்க மேடம்.” ஆன்டனி அழைக்கவும் அவனோடு கூட நடந்தது பெண். ஜேசனின் வலி அவள் நெஞ்சைப் பிழிந்தெடுத்தது. என்னப் பேசுவது, என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் ஆன்டனியை பின்தொடர்ந்தாள். அவளை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் போனான் ஆன்டனி.
அந்த வீட்டுக்கு நான்சி பலமுறை வந்ததுண்டு. ஜேசனை சந்திப்பதற்காக வருபவள் வரவேற்பறையில் வைத்து அவனைப் பார்ப்பாள், பேசுவாள். அதன்பிறகு போய்விடுவாள். அதைத்தாண்டி அந்த வீட்டை அவளுக்குத் தெரியாது. ஆன்டனி அழைத்துக்கொண்டு போன அறை மிகவும் விசாலமாக இருந்தது. படுக்கை அறை போலும். பெரிய படுக்கை ஒன்று போடப்பட்டிருந்தது. ஜேசனும் அந்த அறையில்தான் அப்போது நின்று கொண்டிருந்தான். படுக்கையில் யாரோ படுத்திருப்பது போலத் தெரிந்தது பெண்ணுக்கு.
“ஓகே மாம்.”
“….”
“சரி மாம்.” ஜேசன் யாருடனோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. ஆனால் கட்டிலில் படுத்திருப்பது யாரென்று நான்சிக்கு தெரியவில்லை.
‘ஜேசன் படுத்திருப்பவரை மாம் என்று அழைக்கிறானே! அப்படியென்றால்?!’ சட்டென்று சந்தேகம் தோன்ற ஆன்டனியை திரும்பிப் பார்த்தாள் நான்சி. அவன் ஆமென்பது போலத் தலையை ஆட்டினான். நான்சி அவசரமாகத் தோளில் கிடந்த பையை நிலத்தில் போட்டுவிட்டு கட்டிலுக்கு அருகே போனாள். அங்கே ஜேசன் நிற்பது அதன்பிறகு அவள் கண்களுக்குத் தெரியவில்லை.
“ஆன்ட்டி!” விரைந்து போனவள் கட்டிலின் மறுபுறமாகச் சென்று படுத்திருந்த கிரேஸின் கையைப் பிடித்துக் கொண்டாள். பெரிய சைஸ் கட்டில் என்றாலும் யாரையும் பொருட்படுத்தாது அதன் மீதமர்ந்து, நகர்ந்து கிரேஸின் இடது கரத்தைப் பற்றிக் கொண்டாள். வலது கரம் ஜேசன் வசமிருந்தது.
“ஆன்ட்டி! என்னாச்சு? உங்களுக்கு என்னாச்சு? ஆன்டனி! ஆன்டிக்கு என்னாச்சு?” இதுவரைப் பேசா மடந்தையாக இருந்த பெண் இப்போது காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்தது. ஜேசனிடம் எதுவும் கேட்கத் துணிவில்லாததால் ஆன்டனியிடம் தகவல் கேட்டாள் பெண். அப்போதுதான் கிரேஸை ஒழுங்காகப் பார்த்தாள் நான்சி. அவர் உடம்பின் வலது புறம் சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. வாய் சற்றே கோணியிருந்தது. ஜேசன் பற்றியிருந்த வலது கரம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தொய்ந்து கிடந்தது.
உண்மை லேசாகப் புரிய ஜேசனை பார்த்தாள் பெண். அவன் முகம் இறுகிக் கிடந்தது. இவளைப் பார்க்காமல் ஜன்னல் வழி தெரிந்த தொலைவானை வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஆன்டனியை அவள் திரும்பிப் பார்க்க அவன் நீ யூகிப்பது சரிதான் என்பது போல நின்றிருந்தான். நான்சி இப்போது திணறிப்போனாள். ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் குடும்பத்தின் மீது விழுந்திருக்கும் இடிகளை அவளால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அத்தனைக்கும் மூலகாரணம் அவள்! அந்த எண்ணம் அவள் இதயத்தை நொறுக்கியது. பாவச்சுமை அவள் கழுத்தை நெறித்தது.
“எக்ஸ்கியூஸ் மீ.” அந்தக் குரலில் சட்டென்று அனைவரும் திரும்பி வாசலைப் பார்த்தார்கள். ஒரு இளம் நர்ஸ் நின்றிருந்தாள்.
“மேடமுக்கு பாத் குடுக்கணும், நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே இருக்கீங்களா?”
“யா, ஷ்யூர்.” சட்டென்று சொல்லிவிட்டு ஜேசன் எழுந்து வெளியே போக அவனைத் தொடர்ந்து ஆன்டனியும் போய்விட்டான். எதையோ தொலைத்த குழந்தைப் போல நான்சி மட்டும் திருதிருவென விழித்தபடி கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள்.
“மேடம், நீங்களும் கொஞ்ச நேரம் வெளியே இருக்கீங்களா?” அழகான புன்னகையோடு அந்தப் பெண் கேட்க நான்சி கிரேஸை பார்த்தாள். மிகவும் சிரமப்பட்டு ஒரு புன்னகையை உதிர்த்தவர் அவள் பற்றியிருந்த இடது கையை லேசாக அசைத்தார்.
“ப்ளீஸ் மேடம்.” மீண்டும் அந்தப் பெண் சொல்ல கண்ணால் சைகை காட்டினார் கிரேஸ். மனமே இல்லாமல் எழுந்து வெளியே போனது பெண்.
எப்போதும் அவளுக்காகக் காத்திருக்கும் அந்த ஆளுயர ஜன்னலின் பக்கத்தில் நின்றிருந்தான் ஜேசன். அவனை நெருங்கக் கூடத் தைரியம் இல்லாமல் சற்று அப்பால் நின்றுவிட்டாள் நான்சி. ஆனால் இவள் வருகையை அவன் உணர்ந்திருப்பான் போலும். திரும்பிப் பார்த்தான்.
“என்னோட வீடு எப்பிடி இருக்குன்னுப் பார்த்தியா நான்சி?” அவளை நோக்கி அவன் வீசிய நேரடிக் கேள்வியின் வீரியம் தாங்காமல் நான்சி விசும்பினாள்.
“அழாத நான்சி, எல்லாத் தப்புக்கும் அழுகைதான் தீர்வுன்னா எல்லாரும் அழ ஆரம்பிச்சுடுவாங்க.”
“ஜே!” நான்சி இப்போது வெடித்து அழுதாள். சற்றுநேரம் அமைதியாக இருந்தான் ஜேசன். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவுமில்லை, யாரையும் யாரும் தேற்றவும் முயற்சிக்கவில்லை.
“ஜே…” மீண்டும் நான்சியே ஆரம்பித்தாள்.
“ஜே க்காக என்ன வெச்சிருக்க நான்சி?” அந்த நிதானமான கேள்வியில் நான்சியின் நெற்றி சுருங்கியது.
“புரியலை ஜே?”
“நான் நிறைய இழந்துட்டேன் நான்சி, ஆனா அது கூட என்னை அவ்வளவு பாதிக்கலை, ஆனா இந்த உலகத்துக்கு முன்னாடி இவ்வளவு அசிங்கப்பட்டு நிற்கிறேனே, அதுக்கு ஏதாவது செய்யணும்னு உனக்குத் தோணலையா?”
“….”
“அப்பதான் உன்னால எதுவும் செய்ய முடியலை, இப்பவும் உன்னால எதுவுமே செய்ய முடியாதா?!”
“ஜே!” பெண் திகைத்து நிற்க ஜேசன் அதற்கு மேல் பேசாமல் வெளியே போய்விட்டான்.
“லியோ, காரை எடு.” அவன் குரல் கம்பீரமாக வெளியே உத்தரவிடுவது கேட்டது. நான்சி சிலைபோல சில நிமிடங்கள் நின்றிருந்தாள்.
***
அன்று முழுவதும் நான்சி சதா சிந்தனையிலேயே இருந்தாள். பெரிதாக வீட்டிலிருக்கும் யாரோடும் எதுவும் பேசவுமில்லை. இப்போதெல்லாம் அவள் அவ்வளவு வீட்டில் இருப்பவர்களோடு பேசுவதில்லை என்றாலும் இந்த மௌனம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தது. தன் தமக்கையைப் பார்த்துவிட்டு அமீலியா கூட ஒதுங்கிப் போனாள். ஆனால் பாட்டியிடம் தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.
“எதுக்கு கிரானி நான்சி இப்பிடியிருக்கா? அப்பிடி என்னதான் அங்க நடந்திருக்கும்?!”
“நான்சி உங்கிட்ட எதுவும் சொல்லையா அமீ?”
“இல்லையே கிரானி, சொல்லியிருந்தா உங்கக்கிட்டச் சொல்லாம இருப்பேனா?”
“ஒருவேளை, அந்தப் பையன் நான்சிக்கிட்டக் கடுமையா நடந்திருப்பானோ?”
“உங்கப் பையன் பார்த்த வேலைக்கு அந்தப் பையன் வேற எப்பிடி நடப்பான் சொல்லுங்க?”
“அதுவும் சரிதான்.”
“ஏன் கிரானி? உங்க மருமக உங்க மகன்கிட்ட இதைப்பத்தியெல்லாம் எதுவும் பேச மாட்டாங்களா?!”
“என்னோட மருமக பேசமாட்டா சரி, உன்னோட அம்மாவா இருந்துக்கிட்டு அவ ஏன் இவ்வளவு அடங்கிப் போறான்னுதான் எனக்குப் புரியலை!” பாட்டி பேச்சோடு பேச்சாகப் பேத்தியின் காலை வார அமீலியா ஒரு தினுசாக வயதானவரைப் பார்த்தாள். இந்த உரையாடல் பாட்டியின் அறையிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தது. சட்டென்று அறைக்கதவு திறக்க இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அறையின் வாசலில் நான்சி நின்றிருந்தாள்.
“நான்சி!” அமீலியா ஆச்சரியப்பட,
“உள்ள வா நான்சி.” என்றார் பாட்டி. இருவருமே அவளை அப்போது அங்கு எதிர்பார்க்கவில்லை.
“உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்கோம்.”
“என்னைப்பத்திப் பேச என்ன இருக்கு கிரானி?” ஒரு சலிப்போடு சொன்னவளை மற்றைய இருவரும் வருத்தத்தோடு பார்த்தார்கள்.
“என்னாச்சு நான்சி? அந்தப் பையனைப் பார்த்தியா?”
“பார்த்தேன் கிரானி.”
“உம்மேல கோபப்பட்டானா?” பாட்டி அவசரமாகக் கேட்கப் பெண் சிரித்தது.
“ஜே என்னைக்குமே எம்மேல கோபப்பட்டதில்லையே கிரானி.”
“அப்ப ஏன்டா இவ்வளவு டல்லா இருக்கே?”
“அந்தக் குடும்பத்துக்கு என்னால நடந்திருக்கிற இழப்புகளோட பார்த்தைத் தாங்க முடியலை கிரானி.” சொல்லிவிட்டு நான்சி கண்ணீர் வடித்தாள். அமீலியாவின் கண்கள் கூட இப்போது கலங்கியது.
“என்னோட அப்பா எங்க நான்சின்னு ஜே கேட்டப்போ நான் நொறுங்கிப் போயிட்டேன் கிரானி.”
“ஆண்டவன் இது இது இப்பிடித்தான் நடக்கணும்னு எழுதி வெச்சிருக்காரு நான்சி, அதை யாராலயும் மாத்த முடியாது.”
“….”
“நடந்ததை நினைச்சு வருத்தப்படாதே, இனி என்னப் பண்ணப் போறேன்னு மட்டும் யோசிம்மா.” பாட்டி இதமாக எடுத்துச் சொல்ல நான்சி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“கிரானி… நான் சில முடிவுகள் எடுத்திருக்கேன்.”
“சொல்லு.” முதியவரின் குரலில் இப்போது எந்த உணர்ச்சியும் இல்லை. புயல் வரப்போகிறது என்று புரிந்திருக்கும் போலும். நான்சியும் எதுவும் பேசவில்லை. கையிலிருந்த காகிதம் ஒன்றைப் பாட்டியிடம் நீட்டினாள்.
“என்ன இது?”
“உங்க மகன்கிட்ட இதைக் குடுத்திடுங்க.”
“இதை நீயே உங்கப்பாக்கிட்டக் குடுக்கலாமே?” அந்த ‘அப்பா’ என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்தார் முதியவர்.
“பிடிக்கலை கிரானி, யாரையும் பார்க்கப் பிடிக்கலை, உங்க மகன்கிட்ட இதை நீங்களே குடுத்திடுங்க.” சொன்னவள் எழுந்து வெளியே போய்விட்டாள். நாகரிகம் கருதினாரோ என்னவோ, பாட்டி அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஆனால் அமீலியா பாட்டியின் கரத்திலிருந்ததை அவசரமாக வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். தாமஸுக்குத்தான் இரண்டு வரி எழுதி இருந்தாள் நான்சி. ஆனால் மொட்டையாகக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
உங்கள் வீட்டை விட்டுப் போகிறேன். இனியாவது என் விஷயத்தில் தலையிடாமல் தள்ளி இருங்கள்.
இவ்வளவுதான் எழுதி இருந்தாள் பெண். படித்த அமீலியா திடுக்கிட்டுப் போனாள்.
“என்ன கிரானி இது? என்ன இப்பிடி எழுதியிருக்கா நான்சி?!”
“இது நான் எதிர்பார்த்ததுதான் அமீ, அந்தப் பையனுக்கு நியாயம் பண்ணணும்னு அவ நினைக்கிறா.”
“அதுக்கு அப்பா சம்மதிக்கணுமே?!”
“அந்த சம்மதத்தை அவ எதிர்பார்க்கலையே!”
“அப்பா கட்டாயம் பிரச்சினைப் பண்ணுவாங்க.”
“ம்… பார்க்கலாம்.” பாட்டி இப்போது மெதுவாகச் சிரித்தார்.
“போக வேணாம்னு நீங்க சொன்னா நான்சி கேட்பா கிரானி.”
“அவ முடிவெடுத்துட்டா அமீ, இனி யாரு என்ன சொன்னாலும் அவ கேட்கமாட்டா, நான்சியை பத்தி உனக்குத் தெரியாதா?” பாட்டி சொல்ல இப்போது இளையவளும் அமைதியாகிவிட்டாள். அவர் சொல்வது உண்மைதானே? நான்சி அமைதியான பெண்தான். ஆனால் அந்த அமைதிக்கும் ஒரு எல்லை உண்டு. சாது மிரண்டால் காடு தாங்காது!
நான்சி அதன்பிறகு அந்த வீட்டில் அதிக நேரம் தங்கவில்லை. தன் உடமைகள் என்று நினைத்த ஒன்றிரண்டு பொருட்களை எடுத்து ஒரு பையில் போட்டவள் வெளியே கிளம்பிவிட்டாள்.
“நான்சி, நீ எங்கப் போறே?” கேள்வி கேட்ட தாய்க்கும் அவள் பதில் சொல்லவில்லை. அமைதியாக வெளியேறிவிட்டாள். நான்சி ஜேசனின் வீட்டுக்கு வந்த போது ஆன்டனி வாசலில் ஏதோ வேலையாக நின்றிருந்தான்.
“ஆன்டனி.”
“சொல்லுங்க மேடம்.”
“லியோ எங்க?”
“உள்ளதான் இருக்கான், கூப்பிடவா மேடம்?”
“உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் கொஞ்சம் பேசணும்.” நான்சி சொல்ல அவளை விநோதமாகப் பார்த்தான் ஆன்டனி.
“என்னாச்சு மேடம்? ஏதாவது பிரச்சினையா?”
“லியோவையும் கூப்பிடுங்க, எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன்.”
“ஓகே மேடம்.” லியோவும் வந்துவிட நான்சி சிறிது நேரம் அவர்களிடம் பேசினாள். பேசினாள் என்று சொல்வதை விட இதை இதை, இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டளைப் போட்டாள் என்று சொன்னால் சரியாக இருக்கும். பெண் பேசி முடித்த போது அந்த மெய்ப்பாதுகாவலர்கள் இருவரது முகமும் மலர்ந்து போனது.
“டன் மேடம்.” என்றார்கள் உற்சாகமாக. நான்சி தான் கொண்டு வந்திருந்த பையோடு வீட்டினுள் நுழைந்த போது ஜேசன் அவனது தாயின் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவன்,
“நான்சி!” என்றான் ஆச்சரியமாக. பையோடு அவளை அவன் அங்கே எதிர்பார்க்கவில்லை.
“என்னாச்சு? வீட்டுல ஏதாவது ப்ராப்ளமா? பையையும் தூக்கிக்கிட்டு எங்கக் கிளம்பிட்ட?!”
“ஏன் ஜே? ஏதாவது ப்ராப்ளம் ன்னா உங்க வீட்டுல எனக்கு இடம் கிடையாதா?”
“சில்லி மாதிரிப் பேசாதே, இப்ப என்ன ப்ராப்ளம் உனக்கு? உன்னோட அப்பன் என்ன சொல்றாரு? இன்னமும் என்னப் பண்ண மீதமிருக்கு அந்தாளுக்கு?” என்றான் கோபமாக.
“அவரா எதுவும் சொல்லலை ஜே, நானாத்தான்…”
“நீ என்னப் பண்ணினே?”
“வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.”
“வாட்?! வொய்?!”
“இந்தக் கேள்விக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல நான் பதில் சொல்லட்டுமா?”
“புரியலை எனக்கு, நீ என்ன சொல்றே? நீ இங்கதான் வந்திருக்கேன்னு அந்த மனுஷனுக்குத் தெரிஞ்சா…” ஜேசன் முழுதாக முடித்திருக்கவில்லை. அதற்குள்ளாக தாமஸின் குரல் வாசலில் கேட்டது. இளையவனின் உடல் இறுகிப் போக நான்சி தன் கண்களை ஒரு நொடி மூடித்திறந்தாள்.
“ஜே… நீங்க வெளியே வராதீங்க, நான் பார்த்துக்கிறேன்.”
“என்ன நடக்குது நான்சி இங்க? ஏன் என்னை மேல மேல கஷ்டப்படுத்துற நீ?”
“ப்ளீஸ் ஜே, இந்த ஒரேயொரு தடவை மாத்திரம் என்னைப் பொறுத்துக்கோங்க, எது நடந்தாலும் வெளியே வராதீங்க.” நிதானமாகச் சொன்னவள் வாசலுக்கு விரைந்து போய்விட்டாள். அந்த வீட்டினுள் இருந்து வந்த தன் மகளைப் பார்த்த போது தாமஸுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
“நான்சி!” என்றார் கர்ஜனையாக. அவர் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது.
“சொல்லுங்க.” என்றாள் இளையவளும் விறைப்பாக.
“நீ இங்க என்னப் பண்ணுறே?”
“என்னமோப் பண்ணிட்டுப் போறேன், அதான் உங்களுக்குத் தகவல் சொல்லிட்டேனே, அதுக்கப்புறமும் எதுக்கு இங்க வந்து கலாட்டாப் பண்ணுறீங்க?”
“நான் கலாட்டாப் பண்ணுறேனா? இதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லை? நீ எம் பொண்ணு.”
“அந்த ஞாபகம் உங்களுக்கு இதுக்கு முன்னாடி இருந்திருக்கா? இல்லை இப்பத்தான் இருக்கா?”
“இருக்கப் போகத்தான் மான, ரோஷத்தைப் பத்திக் கவலைப்படாம இந்த வாசல்ல வந்து நிற்கிறேன்.” தாமஸின் குரல் உயர்ந்தது.
“நான் யாரையும் இங்கக் கூப்பிடல்லையே.”
“நீ கூப்பிடல்லைன்னாலும் நான் வருவேன், எம் பொண்ணுக்காக நான் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவேன்.” ஆங்காரமாக வந்தது தாமஸின் குரல். அந்த வார்த்தைகளில் பெண்ணுக்கும் கட்டுக்கடங்காத கோபம் கொப்பளித்தது.
“ஆமா! நீங்க எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவீங்க, அதால மத்தவங்க எவ்வளவு பாதிக்கப்படுவாங்க எங்கிறதைப் பத்தி உங்களுக்குக் கவலையில்லை, யாரோட வாழ்க்கை நாசமானாலும் நீங்க அதைப்பத்திக் கவலைப்படப் போறதுமில்லை.”
“யாரைப் பத்தியும் நான் எதுக்குக் கவலைப்படணும்? யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன? என்னோட வழியில வராத வரைக்கும் நான் நல்லவந்தான்.”
“உங்க வழியா? எது உங்க வழி? இங்க யாரு உங்க வழியில வந்தா?” நான்சியின் கண்கள் இப்போது ஜொலித்தது.
“எம் பொண்ணு வழியில அவன் வந்தான், உன்னோட வாழ்க்கையில அவன் வந்தான்.” பேச்சு இப்போது ஜேசனை நேரடியாகத் தாக்கியது.
“அப்பிடி உங்களுக்கு யாரு சொன்னது? யாரும் இங்க என்னோட வழியில வரலை, நானாத்தான் அவங்களைத் தேடிப் போனேன்.”
“இதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா நான்சி?” தாமஸ் இப்போது அருவருப்பில் முகம் சுளித்தார்.
“நான் எதுக்கு வெட்கப்படணும்? மனுஷங்களை மதிக்கத் தெரியாத மனுஷன் நீங்க, மத்தவங்க மனசை நோகடிச்சுப் பார்க்கிற புத்தி உங்களோடது, இதுக்கெல்லாம் நீங்கதான் வெட்கப்படணும்.”
“இருந்துட்டுப் போகட்டும், நம்ம குடும்பம்னா என்ன, அதோட அருமை, பெருமைத் தெரியாத பொண்ணைப் பெத்து, வளர்க்கத் தெரியாம வளர்த்தது என்னோட தப்புத்தான், இப்ப இங்க இருந்து நீ கிளம்பு முதல்ல.”
“எதுக்கு?”
“இந்த வீட்டுல உனக்கென்ன வேலை நான்சி?!”
“உங்க வீட்டுல மட்டும் எனக்கென்ன வேலை?”
“என்னோட வீட்டுல உனக்கு இருக்கப் பிடிக்கலைன்னா வேற எங்கேயாவது போ, ஆனா இந்த வீடு உனக்கு வேணாம்.”
“அதைச் சொல்ல நீங்க யாரு?”
“நான்சி!” தாமஸ் அந்த நொடி லேசாக நிலை குலைந்தார்.
“போதும்! நீங்கப் பண்ணின எல்லாமே போதும்! உங்களைக் காயப்படுத்திடக் கூடாது, உங்கக் குடும்ப கவுரவத்தைக் காப்பாத்துற கடமை எனக்கும் இருக்குன்னு நான் யோசிச்சு யோசிச்சு மத்தவங்களை எல்லாம் நோகடிச்சது போதும், இதுக்கு மேலயும் என்னால பொறுக்க முடியாது, இனிமேல் நான்சி எங்கிற பொண்ணு உங்களுக்கில்லை, அவ செத்துப் போயிட்டான்னு நினைச்சுக்கோங்க.” பெண் முடிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் வாகனம் ஒன்று ஜேசன் வீட்டின் முன்பாக வந்து நின்றது.
அதுமட்டுமல்லாமல் இன்னமும் இரண்டொரு வாகனங்கள் வந்து நிற்க அதிலிருந்தும் சிலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் மீடியாவை சேர்ந்தவர்கள் என்பது பார்த்த போதே தெரிந்தது. இதை தாமஸ் எதிர்பார்க்கவில்லை.
“எனி ப்ராப்ளம் ஹியர்?” காரை விட்டு இறங்கி வந்த போலீஸ் கேட்க, அதற்கு மேல் அங்கு நிற்காமல் தாமஸ் கிளம்பிவிட்டார். இன்னும் அங்கே தான் தாமதித்தால் தன் நிலைமை மிகவும் இறங்கிப் போகும் என்பது அவருக்குத் தெரியும். நான்சியின் கண்களிலிருந்து இப்போது கரகரவென கண்ணீர் வடிந்தது. இப்படியொரு நிலைத் தன் தந்தைக்கு வந்துவிடக் கூடாது என்று அவள் எத்தனைப் பொறுமையாக இருந்தாள். அவள் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்துவிட்டதே!
“மேடம்… என்னாச்சு?” போலீஸின் கேள்விக்கு நான்சி நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னாள். ஆனால் மீடியா சம்பந்தப்பட்டவர்களிடம் எதையும் சுருங்க அவள் சொல்லவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது முதற்கொண்டு அன்று வரை நடந்ததை விவரமாகச் சொல்லி முடித்திருந்தாள்.
ஒன்றிரண்டு காமெராக்கள் நான்சியின் கண்ணீர் முகத்தை க்ளோசப்பில் உள்வாங்கிக் கொண்டன. அன்றைய மாலை நேர பத்திரிகையின் முதற்பக்கப் பரபரப்புச் செய்தி கொட்டை எழுத்தில் தயாராகிக் கொண்டிருந்தது.
செய்யாத குற்றத்திற்காக ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார் ஜேசன் ராபர்ட்! கண்ணீர் குரலில் ஜேயின் காதலி வாக்குமூலம்!