ID-2

ID-2

காதலின் வலி

விந்தியா வனிதாவையும் சிந்துவையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சிவாவின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். சிவாவை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ என்று கவலை ஒரு புறமும்,‘வனிதாவின் பிரச்சனையை எப்படித் தீர்க்கப் போகிறோம் என்ற கவலை மறுபுறமும் அவளை வேதனையுற செய்து கொண்டிருந்தது.

ஆனால் வனிதாவின் கவலையோ முற்றிலும் வேறு. விந்தியாவை நோக்கி அவளின் கேள்வியை எழுப்பினாள்.

அக்கா…

ம்ம்ம்ம்…” என்றாள் சிரத்தையின்றி.

நீ இன்னுமும் மாமாவை மறக்கலையா?” விந்தியா பதறிக் கொண்டு வனிதாவை நோக்கினாள்.

என்னடி உளர்ற?” என்றாள் விந்தியா கோபத்தோடு.

எனக்குத் தெரியும் அக்கா… மாமா கல்யாணம் ஆன முதல் நாளிலேயே உங்க காதலை பற்றிச் சொல்லிட்டாரு

நெற்றி பொட்டில் கை வைத்துக் கொண்டு, சிவாவுக்கு அறிவே இல்லை’ என்று நினைத்து கொண்டாள்.

வனிதா… தேவையில்லாததைப் பற்றி யோசித்து மனசை போட்டு குப்பிக்காதே

அப்போ அந்த போட்டோ?” விந்தியாவின் பார்வையில் வீசிய கோபத்தைக் கண்டு வனிதா மெளனமானாள். ஆட்டோ நேராகப் போலீஸ் குவாட்டர்ஸ் வாசலில் நின்றது. சிவா சப்இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.

அந்த வேலை அவனுடைய சிறு வயது கனவு. பெரும் முயற்சிக்குப் பின் நிறைவேறியது.

சரோஜா விந்தியாவைப் பார்த்ததும் ஆவலோடு வரவேற்றாள். சரோஜாவின் அண்ணணை விந்தியாவின் தாய் மாதவி மணந்து கொண்டாள். மாதவியின் அண்ணன் தனசேகரனை சரோஜாவுக்கு மணமுடித்தனர்.

இது இரு வழி உறவுமுறை. இவர்களின் ஒரே மகன் சிவா.

விந்தியா உள்ளே நுழையும் போது வனிதா தயங்கி நின்று,

என்னைக் கூப்பிடவேயில்லை?” என்றாள்.

நீ என்ன விருந்தாளியாஇது உன்னுடைய வீடு” என்று சொல்லி அவளை இழுத்து வந்தாள்.

சிந்து உள்ளே நுழைந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த தன் தாத்தாவின் மடியில் ஏறிக் கொண்டாள்.

தனசேகரன் விந்தியாவைக் கண்டவுடன் அளவில்லா ஆனந்தத்தோடு வரவேற்றார். அத்தை,மாமா இருவரும் விந்தியா தன் குடும்பத்தை ஒற்றை ஆளாய் தாங்குகிறாளே என்று எண்ணத்தில் பச்சாதாபத்தையும் பாராட்டடையும் மாறி மாறி பொழிந்தனர்.

வனிதாவிற்குப் பொறாமை கனலாய் எரிந்து கொண்டிருந்தது.

அங்கே மாட்டப்பட்டிருந்த சிவாவின் சிறு வயது புகைப்படம் தேங்கியிருந்த பழைய எண்ணங்களை வடிய விட்டது. சிவாவிற்கும் விந்தியாவிற்கும் கிட்டதட்ட ஒரே வயது. பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தது மட்டுல்லாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.

பலரும் அவர்களைக் காதலர்கள் என்று பறைசாற்ற அது அவர்களின் மனதிலும் ஆழமாய்ப் பதிந்து போனது. போதாக்குறைக்கு அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தனர்.

படிப்பை முடித்ததும் சிவா தன் கனவின் பின்னோடு செல்ல விந்தியா தன் குடும்பத்திற்காக பணத்தின் பின்னோடு ஓடினாள். கடைசியில் சிவாவின் போலீஸ் கனவு நிறைவேறியதும் விந்தியாவைப் பெண் கேட்க வந்தனர். அப்பொழுதுதான் வனிதாவின் ஆசை தெரிய வர விந்தியா கதையை மாற்றினாள்.

அங்குதான் சிவாவின் கோபம் விந்தியாவின் மீது பாய்ந்தது.

அம்மா அப்பாக்கிட்ட நம்ம இரண்டு பேரும் நண்பர்கள்னு சொன்னியா?”

ம்… சொன்னேன். அதுதானே உண்மை! சுற்றி இருக்கிறவங்க நம்மைக் குழப்பிட்டாங்க. நம்ம வயசும் அப்படி யோசிக்க வைச்சிடுச்சு” என்று சிறிதும் சலனமில்லாமல் பதிலுரைத்தாள்.

சோ… நான் வனிதாவை கல்யாணம் செஞ்சிக்கணும்… அப்படித்தானே மிஸ். விந்தியா?” இந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

நீ பெரிய தியாகச் செம்மலா இருந்துட்டு போ… ஐ டோன்ட் கேர். ஆனா, என்னோட வாழ்கையையும் சேர்த்துத் தியாகம் செய்ய நீ யாருடி?”

அப்படி இல்ல சிவா… நான் உனக்காகத்தான்…” என்று அவள் ஏதோ சொல்ல தொடங்க, சிவா விந்தியாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

நான் உன் கூட இருக்கேன்டி. உன் குடும்பத்தோட எல்லாத் தேவைகளையும் பூர்த்திச் செய்ய உனக்குத் துணையா இருக்கேன்

விந்தியா கைகளை உதறிக் கொண்டாள்.

என் குடும்பத்துக்காக யாரும் எந்த உதவியையும் செய்ய வேண்டாம். உன்னோட துணை எனக்குத் தேவையும் இல்லை... நான் அத்தனை பலவீனமானவளும் இல்லை

அப்படின்னா சரி ஆனால், கனவிலும் உன் தங்கையைத் திருமணம் செய்துப்பேன்னு நினைக்காதே” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே விந்தியா அங்கிருந்து அகன்றாள்.

அது அவனை நிராகரிக்க அல்ல. அவளையும் மீறிக் கொண்டு வந்த கண்ணீரை மறைக்க.

அவன் பிடிவாதம் அவன் பெற்றோரின் வேண்டுதலுக்கு முன் பொய்யாய் போனது. விதி அவனை வனிதாவோடே இணைத்து வைத்தது.

வனிதாவுக்கும் சிவாவுக்கும் திருமணம் முடிந்த அன்று சிவா விந்தியாவிடம், இனி என் கண் முன்னே வராதே…” என்று கோபமாக உரைத்தான்.

அந்தச்சமயத்தில் ஆபிஸில் அவளுக்குக் கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பு சிவாவை விட்டு அவள் வெகுதூரம் செல்ல ஏதுவாய் இருந்தது. மீண்டும் மூன்று வருடங்களுக்கு பிறகு தன்னை அவன் சந்திப்பது அவனுக்குத் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

இப்படி எண்ணிக் கொண்டு சமையலறையில் இருந்த சரோஜாவிடம் விடைபெற சென்றாள்.

அத்தை என்று சரோஜாவின் கைகளைப் பிடித்தாள்.

என்னடா?” என்று செல்லமாகச் சரோஜா அவள் தலையைத் தடவினாள்.

வனிதா ஏதோ விவரம் புரியாம நடந்துக்கிட்டா… நீங்க அவளை மன்னிச்சிடுங்க” என்று பணிவாக உரைத்தாள்.

தப்பு அவளுடையது மட்டுமில்லை…  என்னுடையதும்தான்… நான் அவகிட்ட கொஞ்சம் பொறுமையாய் நடந்து கொண்டிருக்கணும். அம்மாவாக இல்லாம மாமியாராக நடந்துக்கிட்டேன்…என்று சரோஜா வருத்தப்பட்டாள்.

அப்போ நீங்க கோபமா இல்லையா?”

இல்லம்மா… ஆனா சிவா என் மேலே ரொம்ப கோபமா இருக்கான்… முகத்தைப் பார்த்து பேசியே ஒரு மாசமாயிடுச்சு…

ஏன் அத்தை?”

அவன் மனைவிகிட்ட சண்டைப் போட்டு துரத்திட்டேன்னு…” சொல்லிக் கொண்டே புடவை முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

விந்தியா சரோஜாவை தேற்றினாள்.

நாம் வந்த வேலை முடிந்தது என்று எண்ணிக்கொண்டு உடனடியாகக் கிளம்ப த்தனித்தாள். சாப்பிட்டுவிட்டு போகும்படி வற்புறுத்தியும் வேண்டாம் என்று காரணங்களைச் சொல்லி வனிதாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.

வனிதாவிடம் இனியாவது பொறுப்போடு இருக்கும்படி புத்திமதி உரைத்தாள். பின்பு சிந்துவினை தூக்கி முத்தமிட்டுவிட்டு புறப்பட்டாள்.

கடைசியாகத் தன் பர்ஸிலிருந்த சிவாவின் போட்டோவை நீட்டினாள்.

இதை ஞாபகார்த்தமாக வச்சிக்கல… தூக்கிப்போட மனசில்லாமல் இது என்னோட பர்ஸயே தங்கிடுச்சு” என்று சொல்லி வனிதாவின் கையில் திணித்துவிட்டு புறப்பட்டாள்.

ஆனால் அவள் கிளம்பும் முன் சிவா வீட்டு வாசலில் கம்பீரமாய் பைக்கில் வந்து இறங்கினான்.

போலீஸ் உடையில் அவனுடைய கம்பீரம் பன்மடங்கு அதிகமாய் தோன்றியது. அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே இருந்த அவனுடைய கூர்மையான பார்வை விந்தியாவினை நோக்கின.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் விந்தியாவின் கண்கள் கலங்கின. விழிகளுக்குள் தேங்கிய நீரை வெளியே வரவிடாமல் துடைத்துக் கொண்டாள்.

அவன் பாராமுகமாய் போய்விடுவானோ என்று அவள் மனம் நினைத்துக் கொண்டது. வெகு நாட்களுக்குப் பின் விதி அவர்களை நேரெதிரே சந்திக்க வைத்தது.

7

தோழமை

விந்தியாவை நோக்கி சிவா நடந்து வந்தான். அவன் பார்வை அவள் மீதே பதிந்திருந்தது.

எப்ப வந்த விந்தியா?” என்று ரொம்பவும் இயல்பாகக் கேட்டான் சிவா.

அவன் திடீரென்று அவள் முன்னாடி வந்து நின்றதினால் கொஞ்சம் திகைப்போடு நின்றிருவந்தவள், சில நொடிகள் கழித்து அவன் கேள்வியைப் புரிந்தவளாய்,

வியாழக்கிழமை” என்றாள்.

மூன்று வருடத்தில ஒருமுறை கூட வந்து போக நேரமில்லையா உனக்கு?” என்று சிவா கொஞ்சம் கோபம் கலந்த குரலோடு கேட்டான்.

வந்து வந்து போகிற செலவை யார் சமாளிக்கிறது?” என்று விந்தியா அவள் நிலைமையைச் சொன்னாள்.

அப்போ உறவுகளைவிட செலவு பத்திதான் கவலை?” என்று சிவா அவளைக் குத்திக்காட்ட,அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விந்தியா ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

என் கஷ்டம் உனக்கு எப்படி புரியும்?’ என்று அவள் மனதில் நினைக்க அதை உணரந்தவனாக அவனும் புன்னகை புரிந்தான்.

புறப்படுவதாக விந்தியா அவசரப்படசிவா அவளைக் கட்டாயபடுத்தி உள்ளே அழைத்துக்கொண்டு வந்தான். சிந்து ஓடி வந்து அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டாள். சிந்துவை தூக்கி கொண்டு ஆசையாய்க் கொஞ்சினான். பிறகு விந்தியாவை நோக்கி,

விந்து நம்ம இரண்டு பேரும் இன்னைக்கு ஒன்றாகச் சாப்பிடறோம்… ஓகே வா?” என்றான் ஆர்வமாக.

கிளம்பணும் சிவா” என்று தயங்கினாள்.

கொன்னுடுவேன்” என்று மிரட்டிவிட்டு உடை மாற்ற அறைக்குள் செல்ல வனிதாவும் பின்னோடு சென்றாள்.

அவன் கழட்டிய தொப்பியை வாங்க முற்பட்டாள். அந்த தொப்பியை மேஜை மீது வைத்து விட்டு வனிதாவின் கையினைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.

உனக்கும் எனக்கும் என்னடி சம்பந்தம்? உன் இஷ்டத்துக்குப் போற உன் இஷ்டத்துக்கு வர்ற. என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு?” இப்படி அவன் போட்ட சத்தத்ததில் எல்லோருமே மிரண்டு போயினர்.

தனசேகரனிடம் சிந்துவை தந்து சிவா வெளியே கூட்டிப் போகச் சொன்னான். வனிதா கதறி அழத் தொடங்கினாள்.

நடிக்காதடி… என் கோபம்தான் அதிகமாகுது

தப்புதான் மாமா… ஏதோ புத்தியில்லாம…

அதான் உனக்கு இல்லையே… கோபப்பட்டு அம்மா வீட்டுக்கு போயிட்ட. சரி… இரண்டு நாள்… இலைன்னை ஒரு வாரம்… ஓரேடியா என்னைப் பத்தி கவலையில்லாம குழந்தையோட போய் அங்க ஒரு மாசம் தங்கிட்ட

அவனின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வனிதா விசும்பினாள்.

விந்தியா கணவன் மனைவி சண்டை என்று நாகரிகத்தோடு பேசாமல் அமைதியாக நின்றாள்.

நீ பேசாம உங்க அம்மா வீட்டில நிரந்தரமா இருந்திடு” என்றான்.

வேண்டாம் சிவா… கொஞ்சம் பொறுமையா பேசு” என்றாள் சரோஜா.

அம்மா… நீங்க சும்மா இருங்க” என்று சரோஜாவையும் அடக்கினான்.

வனிதா அவன் மன்னிப்பானா என்பது போல் பரிதாபமாகப் பார்த்தாள். சிவாவின் கோபம் குறையாமல் அது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போக விந்தியாவின் பொறுமை உடைந்தது.

சிவா… இதான் உனக்கு லிமிட். அவதான் தப்ப உணர்ந்திட்டா இல்ல… அவள போட்டு டார்ச்சர் பண்ற?

நான் டார்ச்சர் பண்றேனா?”

ஆமாம் நீதான்… என்னதான் இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாது சிவா உனக்கு

உங்க தங்கச்சி செய்த காரியத்துக்குக் கொஞ்சுவாங்களாக்கும்…” என்றான் சிவா முறைப்போடு.

இருவரும் நேருக்கு நேராய் நின்று பேசிக் கொண்ட விதமே வனிதாவிற்குப் பயத்தை ஏற்படுத்தியது.

கொஞ்சங்கூட நாகரீகமே இல்லாம எல்லார் முன்னாடியும் பொண்டாட்டிய திட்டற…

முதல்ல நீ உன் தங்கச்சிக்கு நாகரிகத்தைக் கத்துக்கொடு. சின்னச்சின்னப் பிரச்சனைக்கெல்லாம் அம்மா வீட்டுக்குப் போறதுதான் நாகரிகமா?

அவ சின்னப் பொண்ணு… புரியாம செஞ்சிட்டா

கல்யாணமாகி மூணு வருஷம் முடிஞ்சி போச்சு. அவளுக்கே ஒரு பொண்ணு இருக்கு… மறந்திட்டியா?

மறக்கல… ஆனா அவ எனக்கு சின்னப்பொண்ணுதான்…

அப்போ சரி… உன் செல்ல தங்கச்சியை நீயே அழைச்சிட்டுப் போய்ச் சீராட்டு” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

சரோஜாவுக்கு விந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனக் குழப்பமாய் இருந்தது. அவர்கள் பேச்சு தடுத்து நிறுத்தும் நிலையில் இல்லை.

விந்தியா சிவாவை கோபமாய்ப் பார்த்துக் கொண்டே,

அவ்வளவுதானே… வா வனிதா” என்றாள்.

இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் கண்ணீர் உறைந்து போக நின்றாள். வனிதாவின் கைகளைப் பிடித்து விந்தியா இழுத்துச் செல்ல,

கைய விடுக்கா… நான் தப்புச் செய்தேன்… அவரு என் மேல கோபப்பட்டார்… அதுக்குப் போய் நீ இப்படி நடந்துக்கிறது ஒன்னும் சரியில்ல” என்று கைகளை உதறினாள்.

வனிதாவின் செயல் ஒரு வித நிசப்தத்தை ஏற்படுத்தியது. உடனே விந்தியா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிடவும், சிவாவும் அதே சமயத்தில் சிரித்தான். சரோஜாவுக்கும் வனிதாவுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் குழம்ப இவர்கள் விடாமல் சிரித்துக் கொண்டனர். சிவாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

அவ வந்திருந்தா கூட்டிட்டே போயிருப்ப இல்ல?” என்றான் சிவா.

பின்ன… ஆனா வரமாட்டேன்னு சொல்லிட்டாளேபோயும் போயும் உனக்காக சப்போர்ட் பண்ணிஎன் கைய உதறிட்டா பாரு… எல்லாம் விதி!” என்றாள் கொஞ்சம் வருத்தமான பாவனையில்.

என்னடா நடக்குது இங்க?” என்று புரியாமல் கேட்டாள் சரோஜா.

நான் சொல்றேன் அத்தை… உங்க பிள்ளை என்னைக் கோபப்படுத்திப் பார்க்க வனிதாவை திட்டி இவ்வளவு பெரிய டிராமா பண்ணிருக்கான்ராஸ்கல்

நான் நடிக்கிறேன்னு எப்படிக் கண்டுபிடிச்ச

நீ வனிதாவை திட்டுக்கிட்டே என் முகத்தைப் பார்த்தியே… அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்… உன்னை எனக்குத் தெரியாதாடா?”

நீ உன் தங்கச்சி கை பிடிச்சு இழுத்துட்டு போகும்போதே நினைச்சேன்டி… நீ என்னைக் கண்டுபிடிச்சிட்டன்னு

ரொம்ப நாளைக்குப் பிறகு சண்டை போட்டுக்கிட்டோம்… இல்ல?” என்று இருவரும் சிரித்தபடி பழைய நட்புகாலத்தை நினைவுப்படுத்திக் கொண்டனர்.

இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்துக் கொண்டதை வேறு யாரும் யூகிக்கக் கூட முடியவில்லை. இந்தக் கலாட்டாவுக்குப் பின் இருவரும் வெகு நேரம் பழைய இனிமையான நாட்களை நினைவுப்படுத்தியபடி சாப்பிட்டனர்.

இருபது வருட நட்பின் புரிதல் அத்தனை சாதரணமானதாக இல்லை. அந்த ஆழமான நட்பு வனிதாவிற்குப் பொறாமையை ஏற்படுத்தியது. சிவா விந்தியாவிடம் உரிமையோடு பேசிக் கொண்டிருந்த விதம் வனிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

விந்தியா வாசலை தாண்டிய பிறகுதான் வனிதா பெருமூச்சுவிட்டாள்.

சிவா விந்தியாவைப் பைக்கில் அழைத்துச் செல்வதாகச் சொல்ல விந்தியா பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். இருந்தும் விடாமல் கூடவே சென்று விந்தியாவை ஆட்டோவில் ஏற்றினான்.

ஆட்டோ கிளம்பும் சமயத்தில் விந்தியா கடைசியாக அவனை நோக்கி ஒரு கேள்வி கேட்டாள்.

உனக்கு என் மேல் கோபம் இல்லையே?”

ஏன் இல்லை… நிறைய இருக்கு… ஆனால் அந்தக் கோபத்தைக் காண்பிக்க இப்போ உன் முன்னாடி நிக்கிறது உன்னை லவ் பண்ண சிவா இல்ல… உன்னோட நண்பன் சிவா” என்றான் அழுத்தமாக.

விந்தியா கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனாள். அவளுக்குள் இருந்த குற்றவுணர்வும் தயக்கமும் அவன் பேசியதை கேட்டு முழுமையாய் மறைந்து போனது.

இவர்கள் பேசிக் கொள்வதை வீட்டின் வாசலில் நின்று வனிதா பார்த்து கொண்டிருந்தாள். அவர்களின் நட்பு வானமும் பூமியும் போல என்றுமே ஒன்றுக்கொன்று பிரியாமல் கூடவே துணை வரும். ஆனால் அவரவர்களுக்கான எல்லைகளில் நின்றபடி.

வெகு தூரத்தில் வானமும் பூமியும் சேர்ந்திருப்பது போல் தோன்றுவது வெறும் பிம்பம். வனிதா அந்தப் பிம்பத்தை உண்மையென்று நினைத்து கொண்டாள்.

அவர்கள் வாழ்வில் கிடைத்த உண்மையான தோழமை பலருக்கு கிடைப்பபதற்கு அரிது.

error: Content is protected !!