idhayam – 11

idhayam – 11

அத்தியாயம் – 11

மறுநாள் வேலைக்கு கிளம்பிய மகனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வதென்று தெரியாமல் கையை பிசைந்ததபடி மாடிபடியின் அருகே நின்றிருந்தார் மஞ்சுளா.

அவன் கம்பெனி செல்ல தயாராகி வலது கையில் வாட்சை கட்டியபடி  கீழே இறங்கி வரவே கண்களில் பயத்துடன் நின்ற தாயை புருவம் உயர்த்தி பார்த்தான். அவனின் மனதிற்கு ஏதோ தவறாக தோன்றியது.

இந்த இரண்டு வருடத்தில் அவரை இவ்வளவு பதட்டத்துடன் அவன் பார்த்தில்லை. திடீரென்று தாயின் கலக்கத்தை உணர்ந்து, “என்னம்மா விஷயம்” என்று விசாரிக்கும்போது தான் ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்தவரை பார்த்தான்.

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மகனை கண்ட ஜெகனின் பார்வையில் பாசம் வெளிப்படையாக தெரிந்தது. அவன் சம்பாரித்து வாங்கி கட்டிய வீட்டில் ஜம்பமாக வந்து அமர்ந்திருந்தவரை பார்த்தவனின் கோபம் தலைக்கு ஏறியது.

அவரைப் பார்த்த மறுநொடியே, “இந்தாள் எதுக்கு உள்ளே வந்தான்” என்று கோபத்தில் வீடே அதிரும்படி கத்தியவன், “ஏய் செந்தில்” என்று வாசலில் நின்ற செக்யூரிட்டியை பெயர் சொல்லி அழைக்க, “ஆதி” அவனின் குரல் வாசலுக்கு கேட்டு செக்யூரிட்டி வரும் முன்னே மகனை அடக்கினார் மஞ்சுளா.

“என்னம்மா நினைச்சிட்டு இருக்கீங்க” என்று இத்தனை வருடம் இல்லாமல் தாயிடம் குரலை உயர்த்தினான் மகன். அவனின் இந்த கோபத்தைக் கண்டு வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார் ஜெகன்நாதன்.

அவனின் எதிரே வந்து நின்றவர், “இப்போ எதுக்குடா இந்த குதி குதிக்கிற” என்று சாதாரணமாக கேட்டவரை முறைக்க முடியாமல் சோபாவில் அமர்ந்திருந்த ஜெகன்நாதனை முறைத்தான் மகன்.

“எதுக்கு குதிக்கிறேனா? என்னம்மா இப்படி கேட்கிறீங்க? இவர் செய்த காரியத்தால் நான் பட்ட அவமானம் எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று தாயிடம் சரிக்கு சரி சண்டை போட்டவனுக்கு ஜெகனைப் பார்க்கும் போதெல்லாம் முள்ளின் மேல் நிற்பதுபோல இருந்தது.

“அவர் என் புருஷன் இந்த வீட்டு வர அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. இதுக்குமேல் நீ ஏதாவது பேசின என்னை உயிரோட பார்க்க முடியாது” என்று அவனிடம் கூறிய மஞ்சுளாவை பார்த்தவனுக்கு கோபம் எல்லை கடந்தது.

அங்கிருந்தால் கண்டிப்பாக தாயைக் காயப்படுத்தி விடுவோம் என்ற உண்மை அறிந்து, “என்னவோ பண்ணுங்க..” என்ற ஆதி அங்கிருந்த பூஜாடியை தூக்கி தரையில் போட்டு உடைத்துவிட்டு கோபத்துடன் சென்றான்.

அவன் சென்றபிறகு கணவனின் அருகே வந்த மஞ்சுளா, “அவன் முன்ன மாதிரி இல்லங்க. இப்போ எல்லாம் ரொம்ப மாறிட்டான். ஆன உங்களோட விசயம் மட்டும் அவன் மனசில் அப்படியே இருக்கு” என்று பொறுமையுடன் கூறிய மனையாளை நிமிர்ந்து பார்த்தார் ஜெகன்.

தன் மகனின் கோபத்தைக் கண்டு ஆடிப்போன ஜெகன், “எப்படி மஞ்சு இவனை சமாளிக்கிற. எனக்கு கொஞ்ச நேரத்தில் கோழையே நடுங்கிப் போச்சு” என்றவரின் அருகே அமர்ந்தவர்,

“அவனை விடுங்க. எங்கே போனாலும் சாயந்திரம் வீட்டுக்குத்தான் வருவான்” என்று கூறிவிட்டு, “நீங்க எப்படி இருக்கீங்க. பசங்க எல்லாம் என்ன பண்றாங்க. இன்னும்  குற்றாலத்தில் தான் இருக்கீங்களா?” என்று விசாரித்தார்.

அப்போது தான் தன்னிலை உணர்ந்த ஜெகன், “ம்ம் எல்லோரும் நல்லா இருக்காங்க. அங்கேயே தான் இருக்கேன். என்ன  நீங்க இருவரும் தான் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை காலி பண்ணிட்டு இரவோடு இரவாக வந்துட்டீங்க..” வருத்தத்துடன் கூறிய கணவனை ஏறிட்ட மஞ்சுளாவின் கண்கள் கலங்கியது.

அவரிடம் உண்மையை சொல்ல மனமில்லாமல், “சில கசப்பான அனுபவத்தை மறக்க நினைச்சபோது ஆதி வேலை கிடைச்சிருக்குன்னு வந்து நின்றான். அதன் அவனோட கிளம்பி வந்துட்டேன்” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.

இத்தனை வருடங்கள் இல்லாமல் இன்று தான் செய்தது தவறோ என்ற சந்தேகத்துடன் சமையலறை நோக்கி செல்லும் மனையாளை இமைக்க மறந்து பார்த்தார் ஜெகன்நாதன்.

தாயிடம் சண்டை போட்டுவிட்டு ஆபீஸ் உள்ளே நுழைந்தவனுக்கு எல்லோரும் காலை வணக்கம் சொல்ல எதுவும் பேசாமல் கேபினுக்குள் நுழைந்தான்.

அங்கே அவனுக்காக காத்திருந்த ரேவதியைக் கூட கவனிக்காத ஆதி, “இவரால் நான் இழந்தது கொஞ்சமான நஞ்சமா? என்னோட இழப்பு எனக்குதானே தெரியும். அன்னைக்கு அந்த மனுஷன் நாக்கை பிடிங்கிட்டு சாகிற மாதிரி ஒரு கேள்வி கேட்டானே..” என்றவன் கோபத்துடன் அங்கிருந்த பூஜாடியை எடுத்துபோட்டு உடைத்தும் அவனின் கோபம் அடங்க மறுத்தது.

அறைக்குள் நுழைந்த மறுநொடிய ஏதேதோ பேசியபடி ஜாடியை தூக்கிப்போடு உடைக்கும் அவனை விநோதமாக பார்த்தபடி பயத்துடன் எழுந்து நின்ற ரேவதி, “ஆதி என்னாச்சு” என்றாள் திக்கி திணறியபடி.

அவளின் குரல்கேட்டு திரும்பிய ஆதி, “ஏய் நீ யாரு? உன்னை யாருடி என் கேபினுக்குள் விட்டது” என்று உறுமியத்தில் அவளுக்கு கைகால்கள் வெடவெடக்க, “ஆதி நான் ரேவதி. சிவாவோட தங்கச்சி. உனக்கு என்னாச்சுடா ஏன் என்னையே யாருன்னு கேட்கிற” என்றவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள்.

ஓரளவுக்கு அவனின் கோபம் கட்டுக்குள் கொண்டுவரப்படவே அங்கிருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு வாட்டர் கேனை ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்த சேரை இழுத்து நடுவில் போட்டு அமர்ந்தான்.

ரேவதி மெல்ல அவனுக்கு அருகே சென்று தோளில் கை வைக்க, “ஏய் கையேடு” என்று அவளின் கைகளை உதறிவிட்டு, “நீ இங்கிருந்து முதலில் கிளம்பு” என்றான் மிரட்டலாக.

அவளோ செல்லாமல் அவனின் அருகே ஒரு சேரை இழுத்துபோட்டு அமர்ந்து, “என்னாச்சு” என்று மெல்ல கேட்க நிமிர்ந்து பார்த்த ஆதிக்கு அப்போது மனதில் இருப்பதை யாரிடமோ கொட்ட வேண்டும் போல இருந்தது.

“அப்பா ஊரில் இருந்து வந்ததும் அம்மா என்னை எடுத்தெறிந்து பேசிட்டாங்க ரேவதி. அதை தாங்க முடியல” என்றவனின் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.

அவனின் வலியை உணராத அவளோ, “ஓ அப்பா வந்ததுக்கு தான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணினாயா?” என்று சாதாரணமாக கேட்டபோது நிமிர்ந்த பார்த்த ஆதிக்கு ஏனென்றே தெரியாமல் அவளின் நினைவு வந்தது.

இத்தனை நாள் இல்லாமல் இன்று அவளை தேடியது அவனின் உள்ளம். தன்னுடைய வலியை அவளிடம் சொல்லி அவளின் மடியில் படுத்து இளைப்பாற நினைத்த ஆதிக்கு அவனின் மனம் புரிந்தது. ஒவ்வொரு முறையும் கோபம் என்று சொல்லி அவளை சந்திக்க சென்றால் தன் கோபத்தை ஒரு புன்னகையில் மருந்து கொடுக்கும் அவளின் பளிங்கு முகம் மனதிற்குள் வந்து சென்றது.

அவன் அவளின் நினைவுகளில் சஞ்சரித்தபடி அமர்ந்திருக்க, “நான் அடுத்த டிகிரியை இங்கேயே பண்ணலாம்னு இருக்கேன் ஆதி. சிவா அண்ணா வந்ததில் இருந்து நீ என்னை பார்க்கவே வரலன்னு தான் உன்னைப்  பார்க்க நானே வந்தேன்” என்றவளின் குரல் அவனின் செவிகளுக்கு எட்டவே இல்லை.

அவன் கவனிக்கிறானா என்றுகூட தெரியாமல் தன் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ரேவதி. அவள் உண்மையாக காதலித்து இருந்தால் ஆதியின் மனம் அவளுக்கு புரிந்திருக்குமோ என்னவோ ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்!

அதன்பிறகு வந்த நாட்களில் தாயுடன் பேசுவதை அளவாக குறைத்துக் கொண்டான். ஜெகன் மெல்ல அவனின் தொழில் பற்றி விசாரித்து அவனுடன் ஆபீஸ் வருவதாக சொல்ல அவன் மறுத்துவிட்டான். ஆனால் அவன் இயல்பாக தாயிடம் கூறும் விஷயத்தை மஞ்சுளா அப்படியே கணவனிடம் ஒப்பிக்க தொடங்கினார்.

அன்று வெகுநேரம் சென்றபிறகே வீட்டிற்கு வந்த மகனை நினைத்து மனதிற்குள் கவலை கொண்டார் மஞ்சுளா. ஜெகன்நாதன் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து தாயோடு பேசுவதை முற்றிலும் தவிர்த்தான். அவன் வேண்டுமென்றே இரவு லேட்டாக வர தொடங்கியிருந்தான்.

“ஆதி சாப்பிட்டியா?” மகனை அக்கறையுடன் விசாரிக்க, “என்னைப்பற்றி கவலைபட்டு நீங்க உங்க நிம்மதியை கெடுத்துக்காதீங்க அம்மா. என்னோட ஹெல்த்தை கவனிச்சுக்க எனக்கு தெரியும்” என்றவன் நில்லாமல் வேகமாக மாடியேறி சென்றுவிட்டான்.

தன் அறைக்குள் நுழைந்த ஆதி குளித்துவிட்டு பால்கனியில் வந்து அமர்ந்தான். அவனின் மனம் அவளைத் தேடி அலைபாய்ந்திட, ‘அவளை பார்க்க போலாமா’ என்ற எண்ணம் அவனின் மனதிற்குள் தோன்றியது.

‘ஏன் நடந்தது எல்லாம் மறந்து போச்சா?’ என்று மனம் அவனிடம் கேள்வி கேட்க அவனோ அமைதியாக இருந்தான்.

அவனின் பார்வை வானத்தை இலக்கின்றி வெறிக்க, ‘நீ  சொந்த ஊரைவிட்டு எங்கோ வந்து உட்கார்ந்திருக்க அவள் மட்டும்தான் காரணம் என்பதை மறக்காதே’ என்றது அவனின் ஒரு மனம்.

‘அவளால் தான் ஆதியோட திறமை இன்னைக்கு இத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்கு. அவளால் ஏற்பட்ட அவமானம் தான் இன்னைக்கு ஆதியை பலபடி மேல உயர்த்தி இருக்கு’ என்றது அவனின் இன்னொரு மனம்.

ஒரு மனம் அவனுக்கு சார்பாக பேச மற்றொரு மனமோ அவனுக்கு எதிராக பேசிட அவனுக்கு தலைவலி வின் வின் என்றது. இதற்கு மேல் தன்னால் பொறுமையாக இருக்க முடியாது என்ற உண்மை உணர்ந்தவன், ‘நான் யாரையும் தேடி போகல. போகவேண்டிய அவசியமும் எனக்கு இல்ல’ என்றவன் எழுந்து சென்று படுக்கையில் விழுந்தான்.

என்னதான் வீம்பாக முடிவெடுத்தாலும் விடிந்தால் அவளின் பிறந்தநாள் என்ற எண்ணம் வந்து அவனின் நிம்மதியை இழக்க செய்தது. அதன்பிறகு அவனுக்கு எங்கே தூக்கம் வந்தது. விடிய விடிய அவன் விழித்திருக்க ஏதேதோ எண்ணத்தில் உழன்றது அவனின் மனம்.   

காலையில் வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆபீசிற்கு கிளம்பிய மகனை நோட்டம் விட்டபடி தன் வேலையைத் தொடர்ந்தார் மஞ்சுளா. தாயின் பார்வை தன்னை தொடர்ந்துவதை உணராமல் தன் வேளைகளில் கவனமாக இருந்தான் ஆதி. அப்போது மாடியிலிருந்து இறங்கிய ஜெகநாதனின் பார்வை மகனின் மீதே நிலைத்தது.

அவன் டைனிங் டேபிளை நோக்கி செல்ல, “குட் மார்னிங் ஆதி” என்றார் கம்பீரமான குரலில். அவனோ எதுவும் பேசாமல் சாப்பிட அமரவே இருவருக்கும் பரிமாறினார் மஞ்சுளா.

தன் கணவனிடம் கண்ணைக் காட்டிய மஞ்சுளா, ‘அவனிடம்  என்ன காரணம்னு கேளுங்க’ என்று கணவனிடம் கூறினார். அவன் தாயின் செயல்களை கவனித்தாலும் காரணம் என்னவென்று அவர்களே கூறட்டும் என்று அமைதி காத்தான்.

“ராஜியை ஏன் ஆதி வேலைக்கு வேண்டான்னு சொன்னா” என்று குரலை சரி செய்தபடி மகனிடம் பேச்சைத் தொடங்கினார் ஜெகன்நாத்.

“அவளோட பிகேவியர் எனக்கு பிடிக்கல” பல்லைக்கடித்துக்கொண்டு ஒரு வரியில் பதில் சொன்னவன், “அம்மா சட்னி ஊத்துங்க” என்றான்.

மஞ்சுளா மகனை முறைத்தபடியே, “இதிலேயே குறியாக இரு. கால காலத்தில் ஒரு கல்யாணத்தை பண்ணுவோம்கிற எண்ணமே வருவதில்லை” என்று நோடித்துகொண்டு அங்கிருந்து நகர்ந்தவரை பார்வையால் பின் தொடர்ந்தான் ஆதி.

“அம்மா உங்களுக்கு என்னதான் பிரச்சனை” என்று நேரடியாக கேள்வியைத் தொடுத்தவன் தன் சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினான்.

“உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தாலே அவளோட பிரச்சனை முடிஞ்சிரும்” என்றவர் சொல்ல சட்டென்று நிமிர்ந்து தந்தையைப் பார்த்தவன், “கல்யாணம் தானே பண்ணிட்டா போச்சு” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு கையைக் கழுவிக்கொண்டு எழுந்த மகனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார் ஜெகன்.

தன்னிடம் மட்டும் இல்லாமல் யாரிடமும் பிடி கொடுக்காமல் பேசிய மகனின் மனதில் என்ன இருக்கிறதென்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவர் விசாரித்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் அவன் எந்த பெண்ணோடும் பேசியதில்லை என்று கொல்கத்தாவில் இருந்தவர்கள் கூறினார்கள்.

தன் மகனின் நிலையை வெளியே விசாரித்து தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோமே என்ற எண்ணத்துடன் மகனின் மீது பார்வை பதித்தவர், “ஆதி இந்த வருடம் உன் கல்யாணத்தை முடித்திவிடலாம் என்று இருக்கோம். நீ இந்த பொண்ணுங்க போட்டோவில் ஒன்றை செலக்ட் பண்ணு” என்று இடது கரங்களில் இருந்த பெண்களின் போட்டோவை மகனிடம் கொடுத்தார்.

அந்த போட்டோவில் இருந்த பெண்களை எல்லாம் பார்த்த ஆதி, “இந்த பொண்ணுங்க எல்லோருக்கும் சொத்து எவ்வளவு தேறும்” என்று நிதானமாக கேட்டான் மைந்தன்.

“எல்லாமே நம்ம ஸ்டேட்ஸ்க்கு ஏற்ற பொண்ணுங்க தான்” என்றார் மீசையை முறுக்கியபடி.

“ம்ம் வரதட்சணை வாங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு தான் வந்திருக்கீங்க இல்ல” ஒரு மாதிரியான குரலில் வினாவினான். அவனின் குரலில் இருந்தது என்னவென்று பிரித்தறிய முடியாமல் தடுமாறினார் ஜெகன்.

அவர் அமைதியாக இருப்பதைக் கண்டு, “விலை கொடுத்து வாங்கற பொண்ணுங்க எனக்கு வேண்டாம். என் மனசுக்கு பிடிச்சவளை நானே ஒரு நாள் கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்தறேன் அவளை மட்டும் கல்யாணம் பண்ணி வைங்க போதும்” என்று தாயிடம் சொல்லிவிட்டு அவர் கொடுத்த போட்டோவை டேபிளின் மீது வீசிவிட்டு சென்ற மகனை எப்படி சாளிப்பது என்று அவருக்கே புரியவில்லை.

“டேய் உனக்கு வயதாகிறது” என்றவர் நினைவுபடுத்த, “சோ வாட்” என்று அசராமல் கேட்டவனை என்ன செய்வதென்று அவருக்கே தெரியவில்லை.

“ஏன்டா இப்படி எல்லாம் பண்ற” என்று கேட்க, “நீங்க பண்றது எல்லாமே சரி நான் பண்றது தான் குத்தமாக இருக்குதா?” என்று கோபத்துடன் தந்தையை முறைத்தவன் அவரின் அருகே வந்து சேரை இழுத்துப்போட்டு கொண்டு அமர்ந்தான்.

“இங்கே பாருங்க உங்க ஸ்டேட்ஸ் பற்றி எனக்கு கவலையில்ல. இத்தனை நாளும் பணம் பணம் என்று பணத்து பின்னாடி போனவர் இப்போ அந்த பணத்துக்காக இன்னொரு பொண்ணையும் கல்யாணம் பண்ணிகிட்டீங்க. அதெல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியாக இருக்கேன் என்றால் அப்போவே புரிஞ்சிருக்கும் எனக்கு அம்மா உயிர் எவ்வளவு முக்கியம்னு.” என்று சிந்தாமல் சிதறாமல் தந்தையை மிரட்டிய ஆதியின் கண்கள் ரௌத்திரத்தில் சிவந்தாலும் அவனின் உதடுகள் புன்னகையில் தவழ்ந்தது.

“உங்களோட இந்த அதட்டல் உருட்டலுக்கு எல்லாம் மசியாறவன் நான் இல்ல. என் வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. அம்மா மட்டும் இல்லன்னா நீங்க இப்படி அதிகாரமாக உட்கார்ந்து என்னை கேள்வி கேட்க முடியாது.” என்று நிதானத்துடன் கூறியவனை முறைத்தார் ஜெகன்.

“இன்னொரு முறை தகப்பன் ஸ்தானத்தை காட்டுகிறேன்னு ஏதாவது சரிக்கு சரியாக பேசுனீங்க நான் ஆதியாக பேச மாட்டேன். என்னை கண்டிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். எனக்கு சரிக்கு சரி அமர்ந்து பேசும் தகுதியைக்கூட நான் உங்களுக்கு தரல” என்று கூறியவன் அங்கிருந்து எழுந்து சென்றான். தன் மகன் மிரட்டிவிட்டு சென்றதில் மிரண்டபடி அமர்ந்திருந்தார் ஜெகன்.

மஞ்சுளா அவர்களின் நடுவே வராமல் ஒதுங்கி நின்றுவிட தாயிடம் கோபத்தை காட்ட முடியாமல் அவரிடம் காட்டிவிட்டு எழுந்து செல்ல நினைத்தவனை தடுத்தது தாயின் குரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!