அத்தியாயம் – 14
அன்று ரக்சிதாவிற்கு பிறந்தநாள்..
கீர்த்தி அவளுக்கு பிடித்த பருப்பு பாயசத்தை வைத்து முடித்தும் இரு மகள்களையும் அழைத்து அதை அத்தைகளின் வீட்டில் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார்.
தாயின் பேச்சை தட்டாமல், “அம்மா பெரியத்தை வீட்டில் கொடுக்கவா? இல்ல சின்ன அத்தை வீட்டில் கொடுக்கவா” என்று தீவிரமான முக பாவனையுடன் கேட்டாள்.
“ரக்சி நீ பெரிய அத்தை வீட்டில் கொடுத்துட்டு வா. சஞ்சனா போய் சின்ன அத்தை வீட்டில் கொடுத்துவிட்டு வரட்டும்” என்று கூறிய கீர்த்தி சமையல் வேலையில் கவனத்தை திருப்பிவிட்டாள்.
அவர் பெரிய அத்தை என்றதும், ‘சக்தி இந்நேரம் காலேஜ் கிளம்பி இருப்பாரோ’ என்ற சந்தேகத்துடன் அபூர்வாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் ரக்சிதா.
அவள் வருவதைக் கவனித்தபடியே மாடியிலிருந்து கீழிறங்கி வந்த அபூர்வா, “பர்த்டே பேபிக்கு ட்ரஸ் சூப்பராக இருக்கு” என்று சொல்லியபடி ரக்சிதாவின் கையில் கிப்ட் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் அண்ணி” என்று வாங்கிக் கொண்டாள் ரக்சிதா. அவள் கொஞ்சநாளாக தன்னை அண்ணி என்று அழைப்பதை கவனித்த அபூர்வா அதை தவறென்று சொல்லவில்லை.
அவள் கொண்டு வந்த பாயசத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அவளின் பிறந்தநாள் பற்றி ஞாபகப்படுத்தவே இருவரும் வந்து மனமார அவளை வாழ்த்திவிட்டு செல்ல இவளின் விழிகளோ சக்தியை தேடியது.
அவள் பார்வை சென்ற திசையை நோக்கிய அபூர்வா, “சக்தி வீட்டில் இல்ல ரக்சிதா. காலையில் கிளம்பி எங்கோ ஃப்ரெண்டைப் பார்க்க போனான். இன்னும் வரல” என்றவுடன் அவளின் மலர்ந்த முகம் சட்டென்று வாடிப் போனது.
அவளின் மனநிலை உணர்ந்த பெரியவள், “இதுக்கு எல்லாம் வருத்தபடாதே ரக்சி. அவன் ஏதோ டிஸ்டப்டா இருக்கான். சீக்கிரமே பழைய சக்தியாக மாறி உன்னோட பேசுவான்” என்று அவளின் கையில் அழுத்தம் கொடுக்க அவளும் சரியென்று தலையசைத்துவிட்டு வீட்டிற்கு சென்றாள்.
ரக்சிதா சென்றதை உறுதி செய்துகொண்டு வேகமாக மாடி ஏறிய அபூர்வா தன் தம்பியின் அறைக்குள் நுழைந்தாள். வீட்டில் இருந்துகொண்டே வெளியே சென்றதாக தமக்கையின் மூலம் நம்ப வைத்துவிட்ட சக்தி நிம்மதியுடன் விழி மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்.
அவனைக் கண்டதும் அபூர்வாவிற்கு கோபம் வந்துவிட அடிப்பதற்கு எதையோ தேடியவளின் கையில் கடைசியில் கிடைத்தது தலையணை மட்டுமே!
“ஏன்டா இப்படி எல்லாம் பண்ற? வீட்டில் இருந்துகிட்டே அவகிட்ட இல்லன்னு சொல்ல சொல்ற? உன்னை எல்லாம் என்ன தான் பண்றதோ” என்றவள் தம்பியைப் போட்டு கோபத்தில் புரட்டி எடுத்தாள்.
“ஏய் பிசாசு என்னை எதுக்கு அடிக்கிற? அவ மட்டும் தான் உனக்கு செல்லமா? ஏன் உன் தம்பியைப் பற்றி யோசிக்கவே மாட்டாயா” அவனும் சரிக்கு சரி அவளின் அடியை இரண்டு கரங்களால் தடுத்தபடி கோபத்துடன் கேட்டான்.
“ஏன் சக்தி நீ இப்படி நடந்துக்கிற பாவம்டா சின்ன பொண்ணு” என்றவள் அடிப்பதை நிறுத்திவிட்டு தம்பியின் அருகே அமர்ந்தபடி கூறினாள். தாய் மடியைவிட தமக்கையின் மடி சுகமானது என்று நினைத்தானோ? தன் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு மடியைத் தேடினானோ அது அவனுக்கே தெரியவில்லை.
அபூர்வாவின் மடியில் தலைவைத்து படுத்த சக்தி, “அக்கா எனக்கு ரக்சிதாவை சின்னத்தில் இருந்து பிடிக்குமென்று உனக்கே தெரியும் இல்ல” என்றான் மெல்லிய குரலில்.
தன் தம்பியின் தலையை வருடிவிட்டபடியே, “ஆமா இப்போ அதுக்கு என்ன” என்று சாதாரணமாக கேட்டாள்.
“அவ இப்போ எல்லாம் ரொம்பவே மாறிட்டா அக்கா” என்றான்.
“அவ என்ன மாறிட்டா எனக்கு புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுடா சக்தி” அவளுக்கு அவன் சொல்வது புரியவில்லை
“ரக்சிதா என்னை லவ் பண்றா அக்கா” என்றவன் கோபத்துடன் கூறவே, “அதுக்கு என்னடா ரஞ்சித் உனக்கு தாய் மாமாதானே? அப்போ அவள் உன்னை விரும்புவது ஒண்ணும் தவறில்லையே” என்றவள் தன் தம்பிக்கு புரியும்படி கூறினாள்.
அவளின் விளக்கம் கேட்டு பட்டென்று அவளின் மாடியிலிருந்து எழுந்து, “எனக்கு இந்த காதலில் நம்பிக்கை இல்ல அக்கா. இன்னைக்கு பஸ்ஸ்டாப்பில் ஒருத்தனோடு நின்று பேசும் பொண்ணுங்க, நாளைக்கே வேற ஒருத்தனோடு பைக்கில் போறாங்க..” என்றவன் சொல்ல அவனை தடுத்து ஏதோ சொல்ல வந்தவளை பேசவிடாமல்,
“எனக்கு காதல் வரும் என்ற நம்பிக்கை இல்ல அக்கா. அதுவும் சின்ன வயதில் இருந்து கூடவே வளர்ந்த ரக்சிதாவின் மீது வருமென்று கண்டிப்பா என்னால ஒத்துக்கவே முடியாது” என்றவன் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
தன் தம்பியின் பேச்சில் இருந்தே அவனின் மனநிலையை தெளிவாக உணர்ந்தாள் அபூர்வா. நம்ம கண்ணால் பார்க்கும் விஷயங்களை மூளை பதிவு போல ரெகார்ட் செய்துவிடும் அதற்கான சூழ்நிலை நம் வாழ்க்கையில் வரும்போது அந்த நிகழ்வுகளின் தாக்கத்தை பொறுத்து சிலர் முடிவெடுப்பார்கள்.
சிலர் பாசிட்டிவ்வாக யோசிக்கும் சில விஷயங்கள் மற்றொருவருக்கு நெகவ் மட்டுமே காட்டும். சக்தி இப்போது இரண்டாவது சொன்ன நிலையில் இருக்கிறான்.
அவன் ரோடு, பஸ்ஸ்டாண்டு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் பார்த்த பெண்களின் பிரதி பிம்பம் அவனின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. காதல் என்ற பெயரில் தினமும் ஒரு பையனோடு சுற்றும் பெண்கள் சிலரைப் பார்த்து அவனாக நம்பிக்கையின்மையை வளர்த்திக்கொண்டான்.
ரக்சிதாவின் காதல் மனதை புரிந்து கொள்ள அவனின் மனம் தயாராக இல்லை. சிறிய வயதில் இருந்தே உடன் வளர்ந்தவள் மீது தனக்கு காதல் வர சான்ஸ் இல்லை என்ற தம்பியை நினைத்ததும் அவனின் பிம்பம் அவளின் மனதில் தோன்றிவிட, ‘அதெல்லாம் சும்மா சக்தி. காதல் காற்று மாதிரி எப்போ நம்ம மனசிற்குள் வரும்னு யாராலும் சொல்ல முடியாது’ மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
அதே நேரத்தில் ராகவ் வீட்டிற்குள் நுழைந்த சஞ்சனாவை பார்த்தும், “என்னடா கண்ணா அத்தை வீட்டுக்கு வரும்போது இப்படி தயங்கி தயங்கி வர” என்று சிரித்தபடியே கேட்ட கயல்விழியைக் கண்டதும் அவளின் பயம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
“இல்ல அத்தை ராகவ் இருந்தா என்னை வம்பிற்கு இழுப்பான் அவனோட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என்று சிணுங்கியவளைக் கண்டு கலகலவென்று சிரித்தார் கயல்விழி.
“என்ன அத்தை நீங்களும் சிரிக்கிறீங்க” என்று அவள் அதற்கும் காலை தரையில் உதைத்துக்கொண்டு சிணுங்கினாள்.
“சஞ்சு என்னைக்கும் சண்டைபோடாமல் நம்ம ஒருத்தரை புரிஞ்சிக்கவே முடியாது. நானும் உன் மாமாவும் அடிக்கடி சண்டைபோடுவோம். சில மாசம் பேசாமல் கூட இருப்போம். அப்போ எல்லாம் அவங்களோட வீம்பாக பேசாமல் இருந்தாலும் மனசு அவங்களை மட்டும் தேடும். என்னைக்கும் சண்டை போடாமல் எதுவும் நடக்காது. நிறைய சண்டை போடு. அதுக்காக பிரியனும் என்ற முடிவுக்கு வரவே கூடாது” என்று சஞ்சுவிற்கு கயல்விழி கற்றுகொடுக்க அவளும் புன்னகையுடன் தலையாட்டினாள்.
“அம்மா என்னம்மா இவகிட்ட சண்டை போட சொல்லி கொடுக்கிறீங்க? ஏற்கனவே இவளுக்கு சண்டை போடறது அல்வா சாப்பிடற மாதிரி அவ்வளவு பிடிக்கும். இதில் நீங்களும் இவளுக்கு சப்போர்ட் போட்டா அவ்வளவு தான்” என்று சஞ்சனாவை வம்பிற்கு இழுக்கவே அங்கு பிரசன்னமானான் ராகவ்.
“முதலில் இவனோட சண்டை போடு. அப்புறம் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட சண்டை போடலாம்” என்ற கயல்விழி வேலையில் கவனத்தை திருப்பிவிட்டார்.
அவள் சமையல் மேடையில் அமர்ந்திருப்பது கண்டதும், “வந்தும் வானரம் அதோட இடத்தில் செட்டில் ஆகிருச்சு போல” அவளின் முகத்தை பார்த்து குரங்கு போல செய்து காட்டினான்.
“என்னை குரங்குன்னு சொல்றீயா” என்றவள் பக்கத்தில் இருந்த இட்டிலி மாவை எடுத்து அவனின் தலையில் தலைகீழாக கவிழ்த்துவிட்டாள்.
முகம் முழுவதும் மாவுடன் நின்ற மகனைப் பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்த கயல்விழி, “ஐயோ மகனே இப்போதான் நீ ராஜா மாதிரி இருக்கிற” என்றதும் கொலைவெறியுடன் சஞ்சனாவைப் பார்த்தான்.
“அத்தை நான் வந்த வேலை திவ்யமாக முடிந்தது” என்றவள் அங்கிருந்து கிளம்ப, “ஏய் பிசாசே நில்லுடி” என்று அவளை துரத்திக்கொண்டு ஓடினான் ராகவ்.
தன் எதிரே வந்த அக்காவை கூட கவனிக்காமல், “ஐயோ யாராக இருந்தாலும் வழிவிடுங்க. இன்னைக்கு இந்த குரங்கு கையில் மாட்டினேன் என்னை உண்டு இல்லன்னு பண்ணிருவான்” என்று கூச்சலிட்டு ஓடிய சஞ்சனாவை கேள்வியாக நோக்கியபடி திரும்பியா ரக்சிதா ராகவ் ஓடிவந்த கோலத்தைக் கண்டதும் தன்னை மறந்து சிரிக்க தொடங்கிவிட்டாள்.
தலையில் இருந்து மாவு சொட்ட சொட்ட சிவப்பு நிற சட்டை முழுவதும் மாவினால் நனைந்திருக்க முகத்தை துடைத்துக்கொண்டு உக்கிரமாக ராகவ் ஓட்டிவந்த காட்சியை கண்டு, அதுவரை அவளின் மனதை அழுத்திய விஷயம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
“டேய் ராகவ் இது என்னடா கோலம். அத்தை உன்னை இட்லி ஊத்த சொன்னா நீ தலையில் தலைகீழாக கவிழ்த்துட்டு வந்து நிற்கிற” என்று அவள் வயிற்றை பிடித்துகொண்டு சிரிக்க தொடங்கினாள் ரக்சிதா.
“எல்லாம் உன் தங்கச்சி பண்ண வேலைதான். அம்மா சண்டை போடுன்னு சொல்லி கொடுத்தாங்க இவ என் தலையில் மாவை கொட்டிட்டு ஓடிபோயிட்டா. அவ மட்டும் தனியாக சிக்கட்டும் அப்போ தெரியும் இந்த ராகவ் யாருன்னு” என்று கூறியவனின் உடை முழுவதும் மாவு மட்டும் இருந்தது.
அவனை பார்க்கவே பாவமாக இருக்க, “ராகவ் கோவிலுக்கு போகணும் என்னை கொஞ்சம் கூட்டிட்டு போறீயா?” என்றவள் உரிமையுடன் கேட்க தன் நின்ற கோலத்தை ஒரு முறை குனிந்து பார்த்தான்.
“ஒரு இரண்டு நிமிஷம் வெயிட் பண்ணு ரக்சிதா. நான் குளிச்சிட்டு வந்துவிடுகிறேன்” என்றவன் அவனின் அறைக்குள் சென்று மறைய கயல்விழியை தேடி சமையலறைக்கு சென்றவள் அவருடன் பேசிகொண்டிருக்க ராகவ் குளித்துவிட்டு வந்தான்.
அவன் வந்தும், “அத்தை நானும் ராகவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரோம்” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே வர சக்தி தன் பைக் எடுப்பதைக் கண்டவள், ‘வீட்டிற்குள் இருந்துட்டே பொய் சொல்ல சொல்லிருக்க இல்ல சக்தி. நான் அவ்வளவு வேண்டதவளா போயிட்டேனா?’ என்ற கேள்வியுடன் மனம் வலித்தது.
அதை வெளிகாட்டி கொள்ளாமல் ராகவுடன் கோவிலுக்கு சென்றவளை பார்த்த சக்தி, ‘ஸாரிடி எனக்கு வேற வலி தெரியல’ என்றவன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான்.
சக்தி தெரிந்தே தன்னை தவிர்ப்பதை அவளின் மனம் தெளிவாக உணர்ந்தாலும் ஏனோ அவனையே தேடியது அவளின் மனம். அவள் மெளனமாக வருவதைக் கவனித்த ராகவ், “என்ன ரக்சி ரொம்ப அமைதியாக வர மாதிரி தெரியுது” அவளிடம் பேச்சுகொடுத்தான்.
அவள் மெளனமாக வருவதைக் கவனித்தவன், “ஏய் பக்கி கேக்கிறேன் இல்ல வாயைத் திறந்து பதில் சொல்லுடி” என்று அவன் போட்ட அதட்டலில் தன்னிலைக்கு மீண்டவள், “இப்போ உனக்கு என்னடா பிரச்சனை” என்று தன் பங்கிற்கு அவனிடம் எரிந்து விழுந்தாள்.
“பின்ன எதுக்கு பிறந்தநாளும் அதுவுமா முகத்தை தூக்கி வெச்சிருக்க” என்று அவன் அவளிடம் சண்டைபோட, “எல்லாம் அந்த சக்தியால் தான்” என்றாள் அவள் எரிச்சல் மறையாத குரலில்.
“அண்ணா என்னடி பண்ணினான்” அவன் குழப்பத்துடன் கேட்க, “அவன் இன்னும் ஒரு பிறந்தநாள் விஷ் கூட பண்ணல. ஏன் என்னிடம் பேசின முத்தா உதிர்ந்து போகும்? வீட்டில் இருந்துகிட்டே இல்லன்னு சொல்ல சொல்றான். இவனுக்கு என்ன தைரியம்” என்று பொரிந்து தள்ளியவளின் கோபம் உணர்ந்து கோவிலின் முன்னே வண்டியை நிறுத்தியவன்,
“ம்ம் என்னிடம் சண்டை போடுவதற்கு பதிலாக உள்ளே போய் அந்த பிள்ளையாரிடம் சண்டைபோடு” என்றவன் சிரிக்காமல் சொல்ல, “அவரிடம் எதுக்கு சண்டை போடணும்” என்று புரியாமல் கேட்டவளை என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் ராகவ்.
“அவருதான் பக்கா பிரம்மச்சாரி. இப்போ சக்தியை தன் சிஷியனாக சேர்த்துட்டாரா என்று கேட்டுட்டு இரு நான் வண்டியை நிறுத்திட்டு வரேன்” என்று அவன் அங்கிருந்து சென்றுவிட சாமிக்கு போட பூ, பழம், தேங்காய் வாங்கிகொண்டு திரும்பியவள் தன் எதிரே வேகமாக வந்து நின்ற வண்டியைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் முகம் பூவாக மலர்ந்தது
அவளின் எதிரே தன் பைக்கை கொண்டு வந்து நிறுத்தியது சாட்சாத் நம்ம சக்தி தான். அவன் பைக் சீரான வேகத்தில் செல்ல அபூர்வா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவனை என்னோவோ செய்ய பாதி தூரத்தில் வண்டியை நிறுத்தியவன் அவளுக்காக ஒரு பரிசு பொருளை வாங்கிகொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான்.
அவள் புன்னகையுடன் நிற்க, “விஷ் யூ மேனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே” என்று வாழ்த்தி அவளிடம் பரிசை நீட்டிட அவளின் கரங்கள் நீண்டு அவன் கொடுத்த பரிசு பொருளை வாங்கிக் கொண்டது.
அப்போதும் அவள் அவனை இமைக்காமல் பார்க்க, “அதுதான் விஷ் பண்ணிட்டேன் இல்ல கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருடி பார்க்க சகிக்கல” அவன் வார்த்தைகளை கடித்து துப்பிட இவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“ம்ம் இப்போ கொஞ்சம் பரவல்ல” என்று சொல்லிவிட்டு, “சுடிதாருக்கு மேசா ஏதாவது பூ வை வெறும் தலையுடன் திரியாதே” என்று திட்டுவிட்டு வண்டியில் கிளம்பியவனை நினைத்து தனக்குள் சிரித்தபடி அங்கிருந்த பூக்கார பெண்ணிடம் மல்லிகை பூவை வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள்.
அதற்குள் ராகவ் வந்துவிட, “என்ன நான் வண்டியை நிறுத்த போகும்போது உர்ன்னு இருந்தவ இப்போ தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி ஜொலிக்கிற” என்று கேட்க, “சக்தி வந்து பிறந்தநாள் விஷ் பண்ணினான்” என்று சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தவளை அவன் நம்பாத பார்வை பார்த்தான்.