CN6

CN6

நிலவு – 6

வாழ்வானது ஒன்றே

செயலாற்றுவது நன்றே

பயணத்தின் தொடக்கம் இதுவே

இன்னும் செல்வோம் நாம்

காற்றும் துணை என்றே…

சென்னை, கிண்டி – காந்தி மார்க்கெட்டில் உள்கூடி இருந்த தெருவில், தயானந்தனின் சொந்த வீடு அமைந்திருந்தது. சுமார் 750சதுரஅடி பரப்பளவில், கிழக்குத் திசையைப் பார்த்த சற்று பெரிதான வீடு.

நுழைவு வாயிலின் இருபுறமும் பத்துக்கு மூன்று அடியில், நீளவாக்கில் காலியிடம் விடப்பட்டிருக்க, அதனைத் தொடர்ந்து வாசலை ஒட்டிய சிறிய திண்ணை, இருபக்கமும் இருந்தது.

ஒரு பக்கத்து காம்பவுண்டு சுவர், வீட்டுச் சுவரோடு இணைந்திருக்க, மறுபக்க வீட்டுச் சுவருக்கும், காம்பவுண்டு சுவருக்கும் இடைப்பட்ட ஒருஅடிப் பாதையில், வீட்டின் பின்கட்டிற்கு செல்லும் வழியும், மாடிக்கு செல்லும் படிக்கட்டும் தென்பட்டது.

வெளிபுறத் தோற்றம் திருப்தியைக் கொடுக்க, அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவாறே, கேட்டினைத் திறந்து, தயானந்தன்  உள்ளே காலடி எடுத்து வைக்கும் நேரத்தில்,

“இன்னும் எவ்ளோ நேரம்டா, உனக்காக வெயிட் பண்றது? சீக்கிரம் வந்து தொல, சோம்பேறி” அதட்டலான குரலில், தன்னைத்தான் குறிப்பிடுகிறார்களோ என்று ஒரு நிமிடம் துணுக்குற்று, வீட்டின் உள்ளே தன்பார்வையை செலுத்தினான் தயானந்தன்.

நேர்த்தியான காட்டன் புடவையை உடுத்திய இளம்பெண், தன்முதுகைக் காட்டியபடியே திரும்பி நின்று கொண்டிருக்க, பேச்சுக்குரல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. தோளில் தனது கைப்பையை போட்டவள், மற்றொரு கையில் மதிய உணவு அடங்கிய பொதியை எடுத்துக் கொண்ட பொழுது, அவசர அவதியுடன் டி-ஷர்ட்டை மாட்டிக் கொண்டு, அதனை அரைகுறையாக இழுத்து விட்டுக் கொண்டும் வந்து சேர்ந்தான் அவனது தம்பி.

“எத்தன தடவ சொல்றது? தூங்கி எந்திரிச்ச மூஞ்சியோட என்னை டிராப் பண்ண வராதேன்னு, ஒருநாளாவது என் முன்னாடி, ப்ரெஷா வந்து நிக்கிறியாடா? அரகுற” இளம்பெண் மீண்டும் அதட்டல் போட, தம்பியானவன் தலைகுனிந்து நின்றான்.

“இப்டி மூஞ்சிய தொங்கப் போட்டே, ஊமைக்கோட்டானா இரு. எல்லாம் நம்ம அம்மாவ சொல்லணும், நீ என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடி ஜால்ரா தட்றாங்க இல்ல… அந்தக் கொழுப்பு… வந்து தொல, எனக்கு லேட் ஆகுது..!” இடைவிடாது பல்லைக் கடித்துக் கொண்டே வசைமாரிப் பொழிந்தவள், முன்னேறி வாசலுக்கு வந்தாள்.

அவளது பேச்சில் ஸ்தம்பித்து நின்ற தயா, அம்மாடி… இது பொண்ணா இல்ல பிசாசா..! இந்த திட்டு திட்டுது. எப்டி இவளை வச்சு சமாளிக்கிறாங்க? மனதோடு சொல்லிக் கொண்டவன், அவர்களை நோக்கிச் சென்றான்.

வெளியே வந்த பெண் படியிறங்கவும், தயா அங்கே வந்து நிற்கவும் சரியாக இருக்க, அவளின் முகம் பார்த்தே,

“இங்கே ரத்தினவேல்னு ஒருத்தர் இருந்தாரே, அவங்க மனைவி இருக்காங்களா?” புதிய மனிதரிடம் பேசும் தயக்கத்துடன் தயா, அந்த பெண்ணிடம் கேட்க,

“இருக்காங்க, என்ன விஷயம்? எதுக்காக அவங்கள பாக்கணும்? யார் நீங்க?” என்றவள், இடைவிடாமல் அடுத்தடுத்த கேள்விகள் கேட்டு அவனை திணறடித்தாள். அவளது நேரமின்மை, அவனிடம் பொறுமையை கடைபிடிக்க விடவில்லை.

“விசயத்த, அவங்ககிட்டதாங்க சொல்ல முடியும், அவங்கள கூப்பிடுங்க” தன்மையாகவே இவன் பதில் சொல்ல,

“ஹலோ மிஸ்டர்… நீங்க பாக்க வந்திருக்கிறது எங்கம்மாவ… என்கிட்டே சொல்லுங்க!” உத்தரவு போடும் குரலில் அவள் கேட்க,

“அப்போ, நீங்க ரத்தினவேல் சாரோட பொண்ணா? உங்கம்மா எங்கே?” அப்பொழுதும், தான்வந்த விடயத்தை பகிராமல், தயா கேள்வியிலேயே நிற்க,

“எனக்கு டுயூட்டிக்கு லேட் ஆகுது, வந்த வேலை என்னன்னு சீக்கிரம் சொல்றீங்களா?” வந்தவனை விரட்டி விடும் படியாகவே, அவனை வாசலிலேயே நிற்க வைத்து பேசினாள்.

“அக்கா, அவர உள்ளே கூப்பிட்டு பேசுவோம். அப்பா பேர் சொல்லிட்டு வந்திருக்காரு, சொந்தக்காரரா இருந்தா அம்மா கோச்சுக்கப் போறாங்க” தம்பியானவன் தணிவாகச் சொல்ல, பணிக்குச் செல்ல தாமதமாகிறது என்ற தன்எண்ணத்திலேயே நின்று கொண்டு, அவசரத்தில் பதில் அளித்தாள்.  

“உன் அம்மா, என்னைக்குதான் கோபப்படாம பேசியிருக்கு, யார் என்னன்னு தெரியாம, வீட்டு வாசல் வரைக்கும் வந்தவன, விசாரிக்கிறத விட்டுட்டு, உள்ளே உக்காரவச்சு காஃபி, டிபன் குடுக்க போறியா?” சட்டென்று பேசிய பெண்ணவளின் அலட்சியப் பேச்சில், அவளை நன்றாக நிமிர்ந்து பார்த்தான் தயானந்தன்.

நல்ல திருத்தமான முகம், அதை மிஞ்சும் வண்ணம் அவளிடம் தெறிக்கும் அதட்டலான பேச்சுகள், யாருக்கும் அடங்கமாட்டேன் என, தன்பார்வையாலேயே சொல்லும் அலட்சியப் பார்வை, திமிரான முகபாவம் என அவளை எடைபோட்டவனுக்கு, அவள் மீது ஏக கடுப்பு வந்திருந்தது. 

இதுவரை இப்படியான ஒரு அடாவடிப் பெண்ணை தயா, தன்வாழ்நாளில் பார்த்ததில்லை. அவன் இதுவரை பழகிய பெண்கள் எல்லாம் அமைதியின் திருவுருவாய் இருப்பவர்கள். இவனின் பாட்டியும் இவனை எப்பொழுதும் அதட்டியதில்லை. அந்த வகையில் அவளை, தயா ஆச்சரியம் கலந்த வெறுப்புடன் பார்த்தான்.

அக்காவும் தம்பியும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, தயாவும் தனது அலசலை முடித்து வந்திருந்தான். எப்படியும் தன்னைவிட அந்தப் பெண், சிறிய வயதுதான் என்று பார்க்கும் பார்வையிலேயே அறிந்து கொண்டவன், அவள், தன்னை ஒருமையில் பேசியதை ஏனோ விரும்பவில்லை.

மரியாத கிலோ என்ன விலைன்னு கேட்கும் போல..! அவங்க வீட்டு மனுசங்கள அதட்டுற மாதிரியே, என்னையும் பேசி வைக்குது மனதில் வந்த வார்த்தை வெளியே வரத் துடிக்க, மிகுந்த பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்.

அவனுக்குப் பொறுமை பறந்து கொண்டிருந்தது. சென்னைக்கு வந்தவன், பேருந்து நிலையத்திலேயே, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன், ஒரு தேநீரை தன் வயிற்றுக்கு ஈன்று விட்டு, நேராக இங்கே வந்துவிட்டான். பசியும் அசதியும் ஒருசேர கண்ணைக்கட்ட, சென்னையின் சூழ்நிலையே அவனுக்கு பொருந்தாத தன்மையாகப் பட்டது.

“உங்கம்மாவ வெளியே கூப்பிடுங்க, நான் வந்த வேலைய முடிச்சிட்டு கிளம்புறேன்” முகத்தில் அடித்தாற்போல் பெண்ணிடம் பேசிவிட்டு, திண்ணையில் அமர்ந்து விட்டான்.

வேறுவழியின்றி, வீட்டின் உள்ளே குரல் கொடுத்து, தன்அன்னையை, பெண் அழைக்க,

“என்னடி, இன்னுமா இவனை திட்டி முடிக்கல? மிச்சம் மீதிய நைட் வந்து கொட்டலாம், கிளம்பு நீ!” உள்ளே இருந்து, மகளை விரட்டியபடியே வெளியே வந்தார், ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி.

மகளின் முகச்சாயலும், அவளை விட சற்று குறைவான நிறத்திலும் வந்து நின்றவர், தயாவை கேள்வியாக நோக்க,

“உன்னதான் பாக்க வந்திருக்கிறாராம். என்ன விசயம்னு உன்கிட்ட மட்டுந்தான் சொல்வாராம்” பொடிவைத்து அழுத்திப் பேசிய, இளம்பெண்ணின் பேச்சில் தன்னை, இவன் நம்பவில்லை என்ற பாவனையே ஓங்கி நின்றது.

“கொஞ்சம் நேரம் சும்மா இருடி!” என மகளை அடக்கியவர்,

“என்ன விஷயமா தம்பி, வந்திருக்கீங்க? யாரு நீங்க?” அவரும் கேள்விக்கணையைத் தொடுக்க, தயாவிற்கு மனதளவில் ஆயாசம் வந்தே விட்டது.

‘கேள்விக்கு பொறந்த குடும்பம் போல, வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குராங்களே தவிர, என்னை பேச விட மாட்டேங்குறாங்க’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன்,

“நான், விருப்பாச்சி, அறிவுநம்பி சாரோட பையன்” என்றவன் தனது பெயரையும் பூர்வீகத்தையும் சொல்லி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காண்பித்தான்.

தந்தையுடன் அவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இவர்கள் இப்பொழுது குடியிருக்கும் வீட்டிற்கான பத்திரத்தின் ஜெராக்ஸ் காபி, அதோடு இவர்களை வாடகைக்கு அமர்த்தும் பொழுது எழுதப்பட்ட, வாடகை ஒப்பந்தப் பத்திரம் என அனைத்தையும் அவர்கள் எதிரில் வைத்தான்.

“எங்க அப்பாவும் உங்க வீட்டுக்காரரும் சேர்ந்து வாடகப்பணம் போடுறதுக்காக, எங்கம்மா பேர்ல ஓபன் பண்ணின பாங்க் பாஸ்புக்கோட ஜெராக்ஸ் இது. நாமினி பேரா எங்கப்பா பேர் இருக்கும்” வரிசையாக தயா அடுக்கிகொண்டே வீட்டு வாசலில் கடைவிரித்து விட, அந்த வீட்டுப் பெண்மணிக்கே, அவனை வெளியே நிற்க வைத்திருந்தது சங்கடத்தை வரவழைக்க,

“உள்ளே வாங்க தம்பி…” ஒருவழியாக வீட்டிற்குள் தயாவை அழைத்துச் சென்று, அமரவைத்தார்.

“இப்போ சொல்லுங்க தம்பி என்ன விசயமா வந்திருக்கீங்க?

“நீங்க…” என்று பதிலுக்கு தயா இழுக்க,

“நான் மஞ்சுளா… நீங்க தேடிவந்த ரத்தினவேலு சாரோட சம்சாரம். இது, என் பையன் பாஸ்கர். இவ என் சின்னப் பொண்ணு மிதுனா” தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்,

‘பச்ச மிளகாய முழுங்கினவளுக்கும், பொழபொழ பொதி மூட்டைக்கும் நல்லபேரா தேடி வச்சவங்க, நல்லவிதமா பேசக் கத்துக் குடுத்திருக்கலாம். பாட்டி மட்டும் இந்த இடத்துல இருந்திருக்கணும், இந்த பொண்ணோட வாய்க்கு பூட்டப் போட்டுட்டுதான் அடுத்த வேல பார்த்திருக்கும்’ வந்த வேலையை மறந்துவிட்டு, தன் எண்ணப்போக்கை அவர்களின் மேல் நிலைநிறுத்திய தயானந்தன், நொடியில் மீண்டு வந்தான்.

“இந்த வீட்டை விக்கிறதுக்கு முடிவு பண்ணியிருக்கோம். இந்த ஏரியால, வீட்டு புரோக்கர் யாரவது இருந்தா அறிமுகப்படுத்தி விடுங்க…” தயா, தான்வந்த காரணத்தை கூறி, பதிலுக்கு அவர்கள் முகம் பார்த்து நிற்க,

“அம்மா என்ன பேசணுமோ பேசி அனுப்பு, பாஸ்கி என்னை விட்டுட்டு வந்து, புரோக்கர் சங்கர் வீட்டுக்கு, சார கூட்டிட்டுப் போ!” சொல்லியபடியே மிதுனா, தனது அவசரத்தில் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டாள்.

பாஸ்கர் திரும்பி வரும் இடைப்பட்ட நேரத்தில், மஞ்சுளா தயானந்தனின் குடும்ப நிலவரத்தை கேட்டறிந்து கொண்டு, நல்ல முறையில் பேசினார்.

“இந்த வீட்டுக்கு வந்து இருபது வருசமாச்சு தம்பி. உங்கப்பாவுக்கும் என் வீட்டுக்காரருக்கும் கணக்கு வழக்கு பாக்குறதுல நல்ல பழக்கம் இருந்தது. அவரோட கிராமத்து வரவு செலவு கணக்கை எல்லாம், பாஸ்கர் அப்பாதான்  நேர்பண்ணி குடுப்பாங்க…

நாங்க வருமானத்துக்கு கஷ்டப்பட்ட காலத்துல, முடிஞ்ச வாடகைய குடுத்தா போதும்னு சொல்லி, இந்த வீட்டை எங்களுக்கு வாடகைக்கு விட்டாரு. நாங்களும் அவர் ஆரம்பிச்சு குடுத்த பாங்க அக்கவுண்ட்ல மாசாமாசம் வாடக பணத்தை போட்ருவோம்” என பழைய கதைகளை மஞ்சுளா நினைவு கூற,

“இது முழுக்க முழுக்க அம்மாவுக்காக வாங்கின வீடுன்னு அப்பா சொல்வாங்களாம். அதான் வீடும், பாங்க் அக்கவுண்ட்டும் அம்மா பேர்லயே பதிஞ்சு வச்சுட்டாங்கன்னு அம்மா சொல்லியிருக்காங்க” தனக்கு தெரிந்த விவரங்களை தயாவும் பகிர்ந்து கொண்டான்.

“பாங்க் பாஸ்புக் எங்ககிட்டதான் இருக்கு தம்பி, வாடக பணத்த வருசத்து ஒருதரம் உங்கம்மா கையெழுத்து போட்ட செக்புக் கொண்டு வந்து, உங்கப்பா எடுத்திட்டு போவாரு. அந்த சமயம் வீட்டுக்கு வந்து, எல்லாரையும் பார்த்திட்டு போவாரு. அவர் காலமான பிறகு, உங்கம்மாவும் இந்த வீடு இருக்குறதையே மறந்துட்டாங்க போல…

ஆரம்பத்துல பாஸ்கர் அப்பா, லெட்டர் போட்டு விசாரிச்சுட்டு இருந்தாரு. அவர் தவறின பிறகு, அதுவும் நின்னு போச்சு. யார் மூலமா எப்படி குடுத்து விடறதுன்னு எனக்கும் சரியா தெரியல…

மாசாமாசம் என் பொண்ணும் கரெக்டா, பாங்க்ல வாடகைய போட்டு விட்ருவா..! பணமெல்லாம் அப்படியே இருக்கு…. இந்த பையன ஒருதடவ விலாசத்த வாங்கிட்டுபோய், விசாரிச்சிட்டு வாடான்னு சொல்லிட்டே இருக்குறேன், அவன் எதையும் காது குடுத்து கேக்குறதில்ல…” மஞ்சுளாவின் நீளமான விளக்கத்தில், அவனுக்கு தூக்கம் வந்தாலும் முயன்று கேட்டு தலையாட்டி வைத்தான்.

அந்த சமயத்தில், அந்த வங்கி புத்தகத்தை தயாவிடம் கொடுக்க, எப்படியும் தனது அன்னையில்லாமல் பணத்தை எடுக்க முடியாது என்பதால், அவர்களிடமே இருக்கட்டும், மறுமுறை வரும் பொழுது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு பாஸ்கருடன், தான் வந்த வேலையைப் பார்க்க சென்று விட்டான் தயானந்தன்.

அன்று மதியம் வீட்டு புரோக்கர் மற்றும் போட்டோகிராஃபருடன் வந்து, தங்கள் வீட்டை பகுதி பகுதியாக புகைப்படம் எடுக்கும் போதுதான், அந்த வீட்டை நன்கு சுற்றிப் பார்த்தான். வீடு வாங்க விரும்புகிறவர்கள், முதலில் புகைப்படத்தில் வீட்டைப் பார்த்து விட்டு, அதில் திருப்தியானால் மட்டுமே, நேரில் பார்த்து விலை பேச வருவர்.

சற்று பெரிய ஹால், அதன் ஒரு பக்கம் இரண்டு சிறிய  படுக்கையறைகள், மறுபக்கம் சமையலறையும் அதன் பின்னே வராண்டாவும் இணைந்திருந்தது. கிணற்றில் பம்பு செட் போடப்பட்டு இருக்க, குளியலறையும், கழிவறையும் தனித்தனியாக இருந்தது. அங்கிருந்து சற்று தள்ளி வைக்கபட்டிருந்த பலவகையான பூந்தொட்டிகள் கண்ணுக்கு குளிர்ச்சியைக் கொடுத்தன.

பார்வைக்கு பளிச்சென தெரிந்த வீட்டை பார்க்கும் யாரும், வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் என்று எண்ணத்தில் மகிழ்ந்தவன்,

“வீட்டை ரொம்ப நீட்டா வச்சுருக்கீங்க… ஹவுஸ் ஓனர் கவனிக்கலனாலும் ரொம்ப நல்லா மெயிண்டன் பண்றீங்க” மெச்சுதலுடன் மஞ்சுளாவிடம் சொன்னவன், வீட்டுப் புரோக்கரிடம், வீட்டைப் பற்றிய விவரங்களை அளித்து விட்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்தான்.

மரகத்ததிடம் சென்று வந்த தகவல்களை பரிமாறிக் கொண்டவன், “என்னை, உங்க கைக்குள்ளேயே வச்சு, வெளியுலகம் தெரியாம வளர்த்துருக்கீங்கம்மா… சின்ன பொடுசுகூட என்ன விவரமா இருக்குனு, சென்னைக்கு போயி பார்த்தாதான் தெரியுது..!” தயா, தனது உலக அறிவின் தன்மையை, தானே தாழ்த்திக் கொண்டு சொல்ல,

“சென்னையில் ஒருநாள், உனக்கு உலக ஞானத்த குடுத்திருச்சாண்ணே… ரொம்ப புல்லரிச்சுபோய் பேசுற…” அண்ணனை கேலி செய்தாள் சிந்து.

“ஆமாடா… அங்கே எல்லாம், இந்த வாய்பூட்டு வேலைக்காகாது. அந்த புரோக்கர் கூட ஒருநாள் சுத்துனதுல, நான் நிறைய தெளிவாயிட்டேன். அம்மாஞ்சியா இருந்தா, நம்மள அம்மிகல்லுல நசுக்கிட்டுப் போயிருவாங்க, சிந்து!” தன் அனுபவத்தை தங்கைக்கு பாடமாக எடுத்தான் தயா.

ஒரு வாரம் அமைதியாக கழிய, பணம் கொடுத்த வேலாயுதம், மீண்டும் தன் மகனுடன் வந்து அமர்ந்து கொண்டார். தங்களுக்கு கஷ்டம் தரும் முடிவினை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று அவர்களின் தோரணையிலேயே புரிந்து கொண்டான் தயானந்தன்.

“ஆனந்தா… உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல, இப்போ ஊர், உலகம் எல்லாம் நெறைய மாறிப்போச்சுயா. அதுக்கு தகுந்தாப்புல தேவைகளும் கூடிபோயி, காசுபணத்தையும் அளவில்லாமா சம்பாதிக்க வேண்டியிருக்கு” பெரிய மனிதர் சுற்றி வளைக்க,

“இப்போ எங்ககிட்ட இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறீங்கய்யா… நாங்க என்ன செய்யனும்” நேருக்கு நேராய் தயா கேட்க,

“அப்படி கேளு தம்பி..! எங்கப்பா அந்த காலத்து ஆளு, பேசத் தெரியாம பேசிட்டு இருக்காரு. இப்போ இந்த வீட்ட அடமானமா நாங்க வச்சிருக்கிறதால, எங்களுக்கு என்ன லாபம் சொல்லு? அசல் கொடுக்கும் போதுதான், நீங்க வட்டியும் குடுக்கப் போறீங்க…

இந்த காலத்துல வட்டிக்கு வட்டி போட்டு, வசூல் பண்றாங்க தம்பி! நான் அதையெல்லாம் உங்ககிட்ட எதிர்பார்க்கல… நீங்க குடியிருக்கிற வீட்டுக்கு வாடகையா, நாங்க கேக்குற தொகைய குடுங்க… இல்ல, கடன அடைக்கிற வரைக்கும் இந்த வீட்டை காலி பண்ணி, எங்ககிட்ட ஒப்படைங்க, நாங்க வாடகைக்கு விட்டுக்குறோம்” சிதறாமல் தங்களது ஆசைகளை தெளித்து விட்டு, அவர்களை இரண்டுங்கெட்டான் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டான் அந்த இளைஞன்.

அவர்களின் சொந்த வீட்டிற்கு, அவர்களிடமே வாடகையை எதிர்பார்த்தவன், தயானந்தன் தற்போது ஈட்டும் வருமானத்தில் முக்கால் வாசித் தொகையை, மாத வாடகையாகக் கேட்டிருந்தான். அவன் சொன்ன தொகை, தயாவின் குடும்பத்தாருக்கு மலைப்பைத் தந்தது.

“அரண்மனை மாதிரி வீடு, நல்லா அழகா அமைப்பா இருக்கு, அதுக்கு தக்குன வாடகை வந்தாதானே, இந்த வீட்டுக்கும் மதிப்பு” அவர்கள் வீட்டை பற்றி அவர்களிடமே புகழந்து பேசி, அனைவரின் வாயையும் அடைத்து விட்டான்.

இறுதியில் ஒருமாத கால அவசாகம் கேட்ட தயானந்தன்,  அந்த நாட்களுக்குள் கடனை அடைக்கிறேன் அல்லது வீட்டைக் காலி செய்கிறேன் என்கிற உத்திரவாத்தை கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தான்.

மறுநாளே சென்னைக்கு வந்தவன், புரோக்கர் சங்கரை தொடர்பு கொண்டு, தங்களது வீட்டை உடனே விற்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூற, அவரும் மார்க்கெட் விலையை விட, சற்று குறைவாக விலையைச் சொன்னால், விரைவில் கிரயத்தை முடித்து விடலாம் என்ற யோசனையை கூற, அதற்கும் தலையசைத்தான்.

சங்கரின் யோசனைபடியே விலை குறைத்துக் கூற, உடனே விற்பனை படிந்து, வீட்டை வாங்க ஆட்களும் வந்தனர். அவர்கள் வைத்த கோரிக்கை, வீட்டை காலிசெய்து கொடுக்க வேண்டும் என்பதே! இருபது வருடமாக குடியிருப்பவர்கள் அத்தனை எளிதில் வீட்டை காலிசெய்ய சம்மதிக்க மாட்டார்கள்.

அவர்களுக்கென்று ஒரு கணிசமான தொகை கொடுத்தே, குடித்தனக்காரர்களை காலி செய்ய வைப்பது, இந்த காலத்தில் வாடிக்கையாக உள்ளது. அதனை மனதில் வைத்தே வீட்டை வாங்குபவர் கூற, இவையெல்லாம் தெரியாமல் தயானந்தனும் சரியென்று ஒப்புக் கொண்டான்.

எளிதாக முடிந்து விடும் என நினைத்து வீட்டை காலி செய்து கொடுக்குமாறு மஞ்சுளாவிடம் சொல்ல, அவரோ தனது குடும்ப சூழ்நிலையைச் சொல்லி பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“இருபது வருஷமா குடியிருக்குற வீடு தம்பி, எப்டி அவ்வளவு ஈஸியா காலி பண்ணச் சொல்றீங்க? என் பொண்ணுக்கு கல்யாணம் முடியுற வரை, எனக்கு பெரிய வீடு வேணும், என் பையனுக்கு வேலை கிடைச்சாதான், எங்களால இதவிட அதிக வாடகையில வீடு மாத்த முடியும்.

குறைஞ்ச வாடகையில வாழ பழகிட்டோம் தம்பி. திடீர்னு அகலக்கால் வைக்க, எங்களுக்கு வருமானம் இல்ல… பொண்ணு சம்பாத்தியத்துல, கடனுக்கு வட்டி கட்டி, மூணு வேல சாப்பிடவே, வண்டிய இழுத்து ஒட்டிட்டு இருக்கோம். இதுல நீங்களும் இப்படி சொல்லி, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் குடுக்காதீங்க” தங்களது பற்றாக்குறையை மூச்சு விடாமல் பறை சாற்ற,

தயானந்தனும் பதிலுக்கு தனது நிலையை விளக்கினான். தனது கடன், தனது வீட்டின் நிலமை என அனைத்தையும் சொன்னாலும் மஞ்சுளா அசரவில்லை.

“உங்க குடும்பத்துக்கு சம்பாரிச்சு குடுக்க, நீங்க இருக்கீங்க தம்பி… இங்கே என் பையன் இன்னும் படிப்பு முடிக்கல, அவன் தலையெடுக்குற வரைக்கும் பொண்ண நம்பித்தான் நாங்க காலத்த ஓட்டனும். நீங்க என்ன சமாதானம் சொன்னாலும், என் பொண்ணு கல்யாணமும் என் பையனுக்கு வேலையும், கிடைக்கிற வரைக்கும் எங்களால இந்த வீட்ட காலி பண்ணிக் குடுக்க முடியாது” சொன்னதையே மீண்டும்மீண்டும் சொல்லி, தயாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டார் மஞ்சுளா.

இவர்கள் பணத்தை எதிர்பார்த்துதான், இப்படியெல்லாம் பேசுகின்றனரோ என்று சங்கர் கணித்துக் கூற, அப்படியும் கேட்டு விட்டான் தயானந்தன்.

“உங்களுக்கு கணிசமா ஒரு தொகை கொடுக்க, ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் மனசு வைங்க. வீட்டுல உங்க புள்ளைங்க கூட கலந்து பேசிட்டு, நல்ல பதிலா சொல்லுங்க” கெஞ்சிக் கேட்கும் பாவனையில் அமைதியாக தனது கடைசி அஸ்திரத்திரத்தை தொடுத்தே விட்டான்.

“நான் சொல்றதுதான், எங்க வீட்டுல இறுதி முடிவு. காசு கொடுத்து எங்கள கடன்ங்காரங்களா ஆக்காதீங்க தம்பி! ஒரு காலத்துல என் குடும்பம் சந்தோஷமா வாழவச்சவரோட  பிள்ளை… நீங்க, இப்டி சொல்றத, நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல” ஆணித்தரமாய் உறுதியாக நின்று விட்டார் மஞ்சுளா.

இத்தனை உறுதியுடன் குடியிருக்கும் வீட்டை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம், அந்த வீட்டிற்கு இதுவரைக்கும் கொடுத்து வரும் சொற்ப வாடகையே!

இன்றைய கால கட்டத்தில் பெரும் தொகையாக வசூலிக்க வேண்டிய இடத்தில், தயானந்தனின் தந்தை நிணயித்த சொற்ப வாடகையே, இதுநாள் வரையிலும் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

மிதுனாவின் தந்தை இருந்தவரை, தானாகவே முன்வந்து இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வாடகை தொகையை சற்று உயர்த்திக் கொடுத்து விடுவார். அவர் காலமான இத்தனை வருடங்களில் அந்த முறை பின்பற்றப் படாமல் சுமார் ஏழு வருடமாக குறிப்பிட்ட சொற்ப தொகையை மாத வாடகையாக கொடுத்த வந்தனர்.

இப்பொழுது வீடு மாறினால், மாத வாடகையே பெரும் பணத்தை ஏப்பம் விட்டு விடும் என்ற காரணமும், மகள் வேலைக்கு சென்று வருவதற்கு ஏதுவாக, இந்த வீடு அமைந்திருக்கின்றது என்ற எண்ணமும் சேர்ந்து, மஞ்சுளாவிற்கு அத்தனை எளிதில் அந்த வீட்டை விட்டுச் செல்ல எண்ணம் வரவில்லை.  

தயானந்தன் கொடுப்பதாக சொல்லும் தொகையை விட, வீட்டின் பரப்பளவும் அதன் வாடகையும் மஞ்சுளாவை கட்டிப் போட, வீட்டை காலி செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடித்து சாதித்து விட்டார்.

தன்மையாக, அமைதியாக, சற்று கடினமாகவும் பேசிய தயானந்தனால், மிதுனாவிடம் அந்த நேரத்தில் பேச வேண்டும் என்று தோன்றவில்லை.

வீட்டின் முழுப் பொறுப்பும் முடிவுகளும் அவளிடம் மட்டுமே முற்றுப் பெரும் என்பதை தயானந்தன் அறியாத சமயம் அது. அதோடு வயதுப்பெண்ணிடம் தானாக எப்படிப் போய் பேசுவது என்ற தயக்கமும் வந்துவிட, அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தான்.

மிகுந்த நிராசையுடன் மஞ்சுளாவின் வாதத்திற்கு, எதிர்வாதம் புரிய முடியாமல் தோல்வியைத் தழுவினான் தயானந்தன். நிறங்களின் வகைகளை பிரித்து அறிபவனுக்கு, மனிதர்களின் வகைகளை பிரித்தறிய தெரியாமல், அந்த நேரத்தில் மிகுந்த குழப்பத்தில் தவித்து விட்டான்.

வெளியுலகை எட்டிப் பார்க்க ஆரம்பத்திருக்கும் சிட்டுக்குருவியின் மனநிலையில் இருந்தவனின் மனம், மிகப்பெரிய ஏமாற்றம் என்னும் கடினப்பாறையை சுமக்க நேரிட, மனிதர்களின் மேல் பொல்லாத கோபங்கள் எழுந்து வெறுப்பை வரவைத்தது.

கிராமத்தில் கடன் தொகை கழுத்தை இறுக்கி, அவனை வீதியில் நிற்க வைக்க, அங்கேயே வேறு வீட்டிற்கு மாறிவிடலாம் என்றாலும், அவனது சொற்ப வருமானத்தில் வீட்டு வாடகை என்ற புதிய சுமையை ஈடுசெய்ய முடியாதபடி இருந்தது.

இப்பொழுது வருமானம் அதிகம் ஈட்டும் வேலையை, தேடிக் கொள்ள வேண்டிய தலைவலியும் சேர்ந்து கொண்டது.   சென்னை வீட்டை விற்கும் முயற்சியும் மஞ்சுளாவின் வீம்பால் கை நழுவிப் போக, மிகுந்த மன உளைச்சலுக்குள் சிக்கி விட்டான்.

தமக்கைகளிடம் பணத்தை புரட்டி கொடுக்கலாம் என்றால், விவசாயத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்தித்து இருந்தவர்களிடம், எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பது? தேவைப்படுவதோ பெருந்தொகை, அதனை வாய் விட்டுக் கேட்பதற்கும் பெரும் சங்கடம் ஏற்பட்டது. 

வீட்டு மருமகன்களிடம் பணத்திற்காகப் போய் நிற்பதை மரகதமும் கௌரவக் குறைச்சலாக நினைக்க, மகனை அவர்களிடம் கேட்கச் செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டார். பூர்வீக வீட்டை விற்பதற்கும் அவர் தடை விதித்து விட்டார்.

தாயின் வார்த்தையை மீறிச் செயல்பட்டால், பாட்டியை இழக்க நேர்ந்ததைப் போல், அன்னையையும் பறிகொடுக்க நேரிடுமோ என்ற துன்ப எண்ணமே, அவனை மேற்கொண்டு எந்த முயற்சியையும் செய்ய விடாமல் தடுத்து விட்டது. 

திரும்பிய பக்கம் எல்லாம், வாழ்க்கைப் பாதைக்கு தடைகளாக நிற்கும், கரும் பாறைகளை தகர்த்தெறியவே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

வெளியுலக மனிதர்களின் பொய் முகங்களில் பழகிக் கொள்ள ஆரம்பித்தவனுக்கு, அவர்களின் பகல் வேசங்களை ஜீரணித்துக் கொள்ளவே மிகுந்த சிரமப்பட்டான். அதன் பலன் தோல்வியில் தத்தளித்தவன், கோபத்தை தத்தெடுக்க ஆரம்பித்திருந்தான்.

கோபம் ஒரு மனிதனை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும் வல்லமை வாய்ந்தது. தயானந்தனின் கோபம் அவனது அமைதியை துடைத்து விட்டு, வேகத்தை வசமாக்கியது. அவனின் செயல்பாடுகளை, அவனின் குணத்தை முற்றிலும் மாற்றியமைத்து, புதியதொரு பாதையில் பயணிக்க வைத்தது.

தயானந்தனின் கோப அவதாரம் அவனுக்கு நன்மை அளித்ததா? சகாயம் செய்ததா? பிரச்சனைகளுக்கு தீர்வைத் தந்ததா? அடுத்த பதிவில் காண்போம்!!!

 

வாழ்க்கை வாழ்வதற்கு

இருக்கும் வழிகளை

விட சில பேரின்

செயல்களால் நாம்

அனுபவிக்கும் நீங்காத

வலிகளே இங்கு அதிகம்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!