idhayam – 30

அத்தியாயம் – 30

குற்றாலத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் மிகவும் கலைநயத்துடன் கட்டபட்டிருந்த வீட்டை பார்ப்பவர்கள் கண்டடிப்பாக பத்துநிமிடம் நின்று ரசித்துவிட்டு செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் நுணுக்கமாக கட்டப்பட்டிருந்தது அந்த வீடு.

வீட்டின் வாசலில் ஹார்ன் சவுண்டு கேட்டவுடன் பயத்துடன் கேட்டின் கதவுகளை திறந்த வாட்ச்மேனை கோபத்துடன் முறைத்தவள், “எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டாயா முத்து. நீ கொஞ்சம் வேகமாக வந்து கதவை திறந்தால் என்ன” என்று வார்த்தையில் கண்டிப்புடன் முடித்தாள்.

நடுத்தர வயது பெண் என்ற போதும் அவளின் கம்பீரம் துளியும் குறையாமல் இருக்க, “இனிமேல் கவனமாக இருக்கிறேன் அம்மா” என்றதும் அவள் காரை நிறுத்திவிட்டு வேகமாக படியேறிச் சென்றாள்.

பட்டுபுடவையில் கம்பீரமாக நடந்து வந்தவளின் பார்வையில் மட்டும் கனல் இருப்பதைக் கண்ட ஜெகன், “என்னாச்சு மேனகா” என்று கேட்டபடி அவளின் அருகே வந்தார்.

அவரை ஏறயிரங்க பார்த்த மேனகா, “நீங்க சீக்கிரமே ஆபீஸ் கிளம்பிட்டீங்க போல” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

அவரும் ஒப்புதலாக தலையசைக்க, “அந்த மீட்டிங் வேலையை நான் முடிச்சிட்டேன். நீங்க மற்ற வேலைகளை கவனிங்க” என்று கணவனுக்கு கட்டளையிட்டபடி படியேறிச் சென்றாள்.

அவளின் பின்னோடு சென்ற ஜெகன், “மேனகா” என்று அழைத்திட அவரின் பக்கம் வேகமாக திரும்பியவள் என்ன என்பது போல பார்த்தார்.

“என்ன இவ்வளவு கோபமாக இருக்கிற” என்றவர் அக்கறையுடன் விசாரிக்க, “அங்கே நம்ம புள்ளையை வரும் வழியில் வேறொரு கம்பெனி வாசலில் பார்த்தேன். அவனுக்கு அப்படியொரு நிலைமை தேவையா? நம்ம இத்தனை கம்பெனி நடத்தும்போது அவன் எதுக்கு வெளியே வேலைக்கு போகணும்” என்று ஆதங்கத்துடன் தொடர்ந்தாள்.

“அதோட மட்டும் நிற்காமல் ரோட்டில் பசங்களோட சண்டை போடறேன்” என்று கூறிய மேனகா கணவனின் தோள் சாயவே அவரும் பரிவுடன் அவளின் கூந்தலை வருடிவிட்டார்.

“ஆதியோட குணம் தெரிஞ்சும் நீ ஏன் மேனகா அவனோட பாசத்தை வீணாக எதிர்ப்பார்க்கிற” என்று மெல்லியகுரலில் கேட்க பட்டென்று நிமிர்ந்து கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

“எனக்கு ஆண்குழந்தை என்றால் அவ்வளவு பிடிக்கும். ஆனால் எனக்கு பிறந்ததோ இரண்டும் பெண் குழந்தை. அதுக்காக அவனை இழக்க சொல்றீங்களா? அவனும் எனக்கு ஒரு பிள்ளைதானே? நாளைக்கு நம்ம இல்லாத காலத்தில் அவன் நம்ம பொண்ணுங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்க மாட்டானா?” என்று ஏக்கத்துடன் மனக்கோட்டை கட்டிய மனைவிக்கு எப்படி புரிய வைப்பதென்று அவருக்கு புரியவில்லை.

மேனகா சின்ன வயதில் இருந்தே தனியாக வளர்ந்தவள். அது மட்டும் இல்லாமல்  அத்தனை சொத்துக்கும் ஒரே ஒரு பெண்வாரிசு. அவள் பெண்ணாக பிறந்தது அவங்க வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.

‘ஆஸ்திக்கு ஆண்பிள்ளை மட்டுமே வேண்டும்’ என்று ஆசைப்பட்டு பெற்ற பிள்ளை பெண்ணாக பிறந்ததில் எல்லோரும் அவளை வெறுத்து ஒதுக்குவதைக் கண்டு தனக்கு பிறப்பது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று நினைத்தாள்.

அவளின் திருமணம் விமர்சியாக நடக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக கல்யாணம் நின்றுவிட ஜெகன்நாதனை அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்படி அவசரமாக நடந்த திருமணம், அடுத்தடுத்து பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் கண்டு அவள் மனம் நொந்து போனாள்.

அடிக்கடி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று வரும் ஜெகன் ஆதியை பற்றிய விசயங்களை அவளிடம் பகிரவும் மெல்ல மெல்ல ஆதியைத் தன் மகனாகவே பாவிக்க தொடங்கிய மேனகா அவனுக்காக என்று சொத்துகளை காக்கும் பொறுப்பை கையில் எடுத்தாள்.

அவள் பெற்ற பிள்ளைகளுக்கு அவன் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தனக்கு பிறகு சொத்தை கையாள அவனே சரியானவன் என்று தனக்குள் முடிவெடுத்த மேனகா அவனையே சுற்றி வந்தாள்.

ஆனால் அதற்கு எல்லாம் எதிர் துருவமாக வளர்ந்தான் ஆதி. அவனுக்கு ஜெகன் – மேனகா இருவரையும் கண்டாலே பிடிக்காது. தன் தாய்க்கு தகப்பன் செய்த துரோகம் அவனின் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது.

அதெல்லாம் நினைத்தபடி நின்றிருந்த ஜெகன், “ஆதி சீக்கிரமே மாறிவிடுவான் மேனகா” என்று ஆறுதல் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினார்.

தன் மகன் தன்னைபோல பணத்தின் பின்னோடு செல்ல மாட்டான் என்று உறுதி மனதில் இருந்தது. தன்னுடைய சுயநலமான புத்தி அவனின் வாழ்க்கையை சீரழிப்பது தெரிந்து மகனை அவனின் போக்கில் விட்டார்.

மேனகா இந்தமாதிரி புலம்பும் சமயத்தில் அவளுக்கு தகுந்த பதிலை சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவார். மேனகாவின் இந்த குணம் அவனின் வாழ்க்கைக்கு எதிராக திரும்பும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.   

அன்றும் வேலை தேடி அலைந்துவிட்டு சோர்வுடன் செங்கொன்றை மரத்தை நாடு வந்தவன் எதிர்கால சிந்தனையோடு அமர்ந்திருந்தான். அவனின் கனவுகள் அனைத்தும் நிறைவேறுமா என்ற எண்ணத்துடன் வானில் மிதந்து சென்ற மேகங்களின் மீது பார்வை பதித்தான்.

சனிகிழமை மதியத்துடன் வகுப்புகள் முடிந்துவிட ஆர்த்தியோடு பேசியபடி வீட்டை நோக்கி நடந்தனர். அப்போது தான் அந்த மரத்தைப் பற்றி அவளிடம் கேட்கவேண்டுமென்று அவளுக்கு தோன்றியது.

“ஏண்டி நீ ஏன் நம்ம ஸ்கூலில் இருக்கும் மஞ்சள் கொன்றை மரத்தின் அடியில் உட்கார்ந்து இருக்கிற? உனக்கு வேற இடமே கிடைக்கவில்லையா? அத்தனையும் பூவாக கொட்டி கிடக்கிறது. அதற்கு கீழே உட்கார்ந்து இருப்பதில் உனக்கு என்னதான் திருப்தியோ” என்று அவள் சலித்துக் கொண்டாள்.

அவளின் கேள்வியில் அபூர்வாவின் இதழ்களில் புன்னகை அரும்பிட, “அந்த பூமரம் மேமாதத்தில் மட்டும் பூக்கும். அப்புறம் வருடம் முழுக்க பூக்கவே பூக்காது.” என்றபடி சென்றவளின் ரசனை அவனின் மனத்தைக் கவர்ந்தது.

“ம்ம் இந்த மரம் மட்டும்தான் லிஸ்டில் இருக்கா இல்ல மாமரம் புளியமரம்னு இன்னும் ஏதாவது மரத்தின் சிறப்பை சொல்ல மறந்துட்டியா” என்று அவளை கிண்டலடித்தாள் ஆர்த்தி.

அவளின் கேள்வியில் யோசிப்பது போல பாவனையோடு வானத்தைப் பார்த்த ஆபூர்வா, “பூக்களில் குறிஞ்சிபூ ரொம்ப பிடிக்கும் ஆர்த்தி” என்றவள் பெருமூச்சுடன், “அந்த பூவை இன்னும் ஒரு முறைகூட நான் நேரில் பார்த்ததில்லை” என்றாள் வருத்தத்துடன்.

அவளின் பேச்சை திசை திருப்ப எண்ணி, “இன்னும் இரண்டு நாளில் உன்னோட பிறந்தநாள் வருகிறதே என்ன பிரோகிராம் எல்லாம் போட்டு வெச்சிருக்கிற” என்றாள்.

“தாத்தா பாட்டியுடன் கைலாசநாதர் கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வருவேன் அவ்வளவுதான்” என்று சொன்னபடி இருவரும் ஆதியைக் கடந்து சென்றனர்.

அதுவரை அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட ஆதி, ‘ம்ம் நல்ல ரசனைதான்’ என்று மனதிற்குள் அவளை மெச்சிக்கொண்டு அவளின் பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம் என்று திட்டமிட தொடங்கினான்.

அவளின் பிறந்தநாள் அன்று காலைபொழுது அழகாக விடிந்தது.

அவள் குளித்துவிட்டு கீழே வரும்போது அவளுக்கு வரிசையாக எல்லோரிடமிருந்தும் போன் வந்தவண்ணமிருக்க, “இவ்வளவு பாசம் இருந்தால் நேரில் கிளம்பி வரலாம் இல்ல” என்றார் காமாட்சி.

அவர் நோடித்துக்கொண்டு செல்வதைக் கண்ட சிவரத்தினம், “அவங்களுக்கு வேலை இருக்கும் காமாட்சி. இன்னும் ஒரு வருடம் இவ நம்மகூட இருப்பா அப்புறம் மதுரைக்குப் போயிட்ட அவங்க கூடத்தானே பிறந்தநாள் கொண்டாட போறா” என்றார் பேத்தியின் கூந்தலை பாசத்துடன் வருடியபடி.

“தாத்தா சொல்வதும் சரிதானே பாட்டி” என்ற அபூர்வா அவரின் தோளில் தலை சாய்த்தாள்.

அவளின் வகுப்பு தோழிகள் எல்லோரும் வர வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடிவிட்டு கோவிலுக்கு கிளம்பும்போது வீட்டிற்குள் பூவுடன் நுழைந்த சிறுவனைக் கண்டாள்.

“டேய் கண்ணழகா நீ மட்டும் இன்னும் விஷ் பண்ண வரலன்னு நினைச்சேன் வந்துட்ட” என்று அவளை தூக்கி சுத்தி கீழே இறக்கிவிட்டாள்.

அவள் கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டிவிட, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே” தன் கையில் ஒரு லெட்டரையும் ஒரு குட்டி பூவையும் அவளிடம் நீட்டினான்.

“தேங்க்ஸ்” என்று அவன் நீட்டிய பூவை வாங்க கைநீட்டிய அபூர்வாவின் முகம் சிந்தனையில் சுருங்கிட, ‘இந்த பூ குறிஞ்சிபூ தானே’ அவனின் கையிலிருந்த ஒற்றை பூவின் மீது பார்வையை பதித்தாள்.

கோவிலுக்கு செல்ல கிளம்பிய தாத்தாவும், பாட்டியும் ஹாலுக்கு வர அங்கே திகைப்புடன் நின்ற பேத்தியின் அருகே வந்து, “நம்ம போலாமா?” என்று கேட்டனர்.

அவளின் சிந்தனை கலைந்துவிட பட்டென்று திரும்பிய அபூர்வா, “போலாம் பாட்டி” என்று சொல்லி அந்த குட்டி பையனின் கையில் இருந்த கடிதத்தையும் அந்த பூவையும் வாங்கிக் கொண்டாள். அவர்கள் கோயிலுக்கு போய்விட்டு வரும் வழியில் குட்டி பையன் கொடுத்த கடிதத்தை திறந்து படித்தாள்.

வானம் பொன்னிறமாக சிவக்கும் வேளையில்

நீ வழக்கமாக செல்லும் பாதையில்

செங்கொன்றை மரத்தின் நிழலில்

உனக்காக காத்திருப்பேன் பெண்ணே..” என்ற வரிகள் படித்தும் அவளுக்கு திக்கென்றது.

முன்னே பின்னே அறியாதவன் அழைத்ததும் காதல் என்ற பெயரை சொல்லி அவனிடம் மயங்க அவளின் மனம் இடம்கொடுக்கவில்லை. யாரென்று தெரியாமல் தன்னை பின்தொடரும் அவனின் நோக்கம் அறிய கண்டிப்பாக அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்றது அவளின் மற்றொரு மனம்.

மூவரும் கோயிலுக்கு சென்று வீடு திரும்பியதும் சிவரத்தினம் – காமாட்சி இருவரும் சென்று ஓய்வெடுக்க அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பின்வாசலின் வழியாக அவன் கடிதத்தில் சொல்லியிருந்த இடத்திற்கு நோக்கி நடக்க தொடங்கினாள் அபூர்வா.

அவன் சொன்ன இடத்தை சென்று சேரும்போது மாலைபொழுதில் ஆகிவிட சிந்தனையோடு செங்கொன்றை மரத்தின் அருகே செல்ல  அங்கிருந்த கண்ணின் மீது சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்தான்.

அவனின் நேர்கொண்ட பார்வையும் அவன் நின்றிருந்த தோற்றமும் கண்டு அவள் இமைக்க மறந்து அவனையே பார்த்தாள். கிழக்கும் மேற்கும் சந்திக்கும் நேர்கோட்டில் சூரியனின் வெளிச்சம்பட்டு பூக்கள் பொன்னிறமாக ஜொலித்தது.

அவளின் மீது சூரிய ஒளி பரவிட பொன்னால் செய்யபட்ட சிலை ஒன்று தன் எதிரே நிற்பது போன்றொரு பிரம்மையை உருவாக்கியது. அவன் கையில் இருந்த குறிஞ்சிபூவை அவளை நோக்கி நீட்டினான்.

அவனை நேரில் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருந்தால் அவளுக்கு பயம் கொஞ்சம் குறைந்தது. அதுமட்டும் இல்லாமல் அன்று கடிதம் கொடுத்தும், இன்று குட்டிபையனிடம் கடிதத்தை கொடுத்தவனும் இவனே என்று அவன் சொல்லாமல் உணர்ந்தாள் பெண்ணவள்.

தன்னை எதற்கு நேரில் வர சொன்னான் என்று அவளுக்கு ஓரளவு தெளிவாக புரிந்தது.

அவள் அவனை கேள்வியாக நோக்கிட, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே அபூர்வா” என்றான்.

அவள் பதில் பேசாமல் அவன் கொடுத்த பூவை வாங்க கைநீட்டும்போது, “ஐ லவ் யூ” என்றான் புன்னகையோடு.

அபூர்வா அவனை அதிர்ச்சியோடு பார்க்க, “அபூர்வா என்னை நம்பி இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் வந்திருக்கிற. உன் மனசு எனக்கு புரிகிறது..” என்றான் தன்மையாகவே.

அவனின் பேச்சில் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட, “அப்புறம் எதுக்கு என்னை இவ்வளவு தூரம் வர வைக்கணும்? அதுமட்டும் இல்லாமல் எனக்கு பிடிச்ச பொருட்களை கொடுத்து காதலை சொன்னால் மட்டும் நான் ஏத்துக்குவேன்னு நினைக்கிறீங்களா” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

அவளின் பேச்சும் தன் முன்னே அவள் நின்றிருந்த தோரணையும் அவனுக்கு பிடித்தது.

“ம்ம் பரவல்ல நல்ல பேசற அபூர்வா. ஒருத்தருக்கு பிடிச்ச பொருட்களை கொடுத்து மனசை விலைக்கு வாங்க முடியாது” என்றதும் அவள் ஏதோ பேச வர அவளை கரம்நீட்டி தடுத்தான்.

“என்னைபற்றி உன்னிடம் சொல்லணும். என் பெயர் ஆதித்யா. அப்பா அம்மா ஜெகன்நாதன் – மஞ்சுளா. அப்பா இரண்டாம் திருமணம் பண்ணிகிட்டார். நான் இப்போ படிப்பை முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கேன்” என்று நான்கு வரியில் தன்னை பற்றி கூறியவன்,

“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அபூர்வா. உன்னிடம் இருக்கும் சில குணங்கள் என் மனசுக்கு ஆறுதலை கொடுக்குது. என் மனதில் இருக்கும் காயங்களுக்கு மருந்தாக உன் புன்னகை இருக்கு. உன்னோடு கடைசிவரை பயணிக்க விரும்பறேன்” என்று தன் காதலை தக்கமில்லாமல் அவளிடம் வெளிபடுத்தினான்.

அவளின் புருவங்கள் சிந்தனையோடு சுருங்க, “அதுக்கு எதுக்கு உங்க அப்பாவைப் பற்றி எல்லாம் என்னிடம் சொல்றீங்க” என்று நேரடியாகவே அவனிடம் கேட்டாள்.

“நானும் எங்க  அப்பா மாதிரி இரண்டு திருமணம் பண்ணிக்குவேன் என்று ஊருக்குள் எல்லோரும் சொல்றாங்க. அது இப்போ உனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்னைக்கோ ஒருநாள் யாரோ ஒருவர் உன்னிடம் வந்து என்னைபற்றி சொன்னால் நீயும் அதை நம்பிட்டு வந்து அதே கேள்வியை கேட்கக்கூடாது இல்ல அதன் முன்னாடியே சொல்றேன்.” என்று விளக்கம் கொடுத்தவன் நிறுத்தி மீண்டும் அவளின் முகம் பார்த்தான்.

அவளின் அருகே சென்றவன், “நான் உன்னை காதலிக்கிறேன். என் வாழ்க்கையில் இன்னைக்கு நான் எடுக்கும் முடிவு எப்போதும் மாறாது. திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது உன்னோடுதான். உன்னை தவிர என் வாழ்க்கையில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை..” என்று அவளின் விழிகளை பார்த்தபடி தன் சொல்ல அவனின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டாள் அபூர்வா.

சட்டென்று அவளிடமிருந்து விலகி நின்றவன், “என்னை நம்பி இவ்வளவு தூரம் வந்ததுக்கு தேங்க்ஸ். நீ உன் பதிலை யோசித்து சொல்லு” என்றான்.

குறிஞ்சிமலர் தன் கரங்களில் இருப்பதை கவனித்த ஆதியின் உதடுகளில் புன்னகை அரும்பிட, “குறிஞ்சிமலர் கொடுத்து காதலை சொல்லும்போதே உனக்கு புரியலையா? என் காதல் அபூர்வமானதென்று” மெல்லிய குரலில் கூறி அவளிடம் பூவை நீட்டினான்.

அவனின் கண்களில் தெரிந்த உண்மையான காதலில் அவளின் மனம் அவனிடம் பறிபோனது. தன் பிறந்தநாளில் அவனிடம் மனதை தொலைத்துவிட்டு அவன் கொடுத்த பூவை வாங்கிகொண்டு, “சீக்கிரமே பதில் சொல்றேன்” என்று கூறிவிட்டு அவனைவிட்டு விலகி நடந்தவளின் மனதில் அவனின் தோற்றம் ஆழமாக பதிந்துபோனது.