idhayam – 31

அத்தியாயம் – 31

நாட்கள் ரேக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

அவள் படிப்பில் கவனமாக இருக்கவே விடுமுறை நாள் என்பதால் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போகலாம் என்ற எண்ணத்துடன்  பாட்டியோடு கிளம்பினாள். அவள் சென்று சாமியைக் கும்பிட்டுவிட்டு பிரகாரத்தை சுற்று வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள்.

“என்ன அபூர்வா ஒரு மாதிரியா இருக்கிற” என்று கேட்டபடி அவளின் நெற்றியில் திருநீறு வைத்திவிட, “அம்மா என்னம்மா பண்றீங்க வீட்டுக்கு போகலாமா?” என்ற ஆதியின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்க்க  தாயுடன் பேசியபடி கொண்டிருந்தான். அவனைப் பார்த்தும் அவளின் முகம் பூவாக மலர்ந்தது.

“என்னடா உனக்கு இவ்வளவு அவசரம்” என்று மகனை கடிந்துகொண்டு இருவரும் வாசலை நோக்கி செல்வதை கண்டு அவள் முகம் வாடிப்போனது. என்ன செய்வதென்று தெரியாமல் பித்துபிடித்தவள் போல வாசலையே பார்த்துகொண்டிருந்தாள்.

“என்னைக்கு ஷஷ்டி விரதம்னு தெரியல” என்றவர் பேத்தியின் பக்கம் திரும்பி, “நீ இங்கேயே இரு நான் போய் ஐயரிடம் பேசிட்டு வரேன்” என்றதும் சரியென்று தலையசைத்தாள்.

பாட்டி அவளைவிட்டு நகர்ந்த மறுநொடியே அவளின் அருகே வந்து அமர்ந்த ஆதி, “என்ன மேடம் கண்டுக்காமல் போறானேன்னு  மனசு தவிச்சது போல” என்று கண்ணடித்து குறும்புடன் கேட்டான்.

அவனின் கண்கள் செய்த மாயத்தில் மாது மயங்கிய போதும், “அதெல்லாம் இல்ல” என்றாள் பட்டென்று.

“அப்படியா” என்றவன் நம்பாமல் கேட்க, “ஆமா..” என்றாள்.

“சரி என்னதான் முடிவெடுத்த சொல்லு” என்று நேரடியாக அவன்  விஷயத்திற்கு வரவே அதுவரை அவனின் முகத்தைப் பார்த்து வம்பு பேசிய அபூர்வாவின் தலை தானாக கவிழ்ந்தது.

அவளின் செயலை கண்டு அவன் கேள்வியாக புருவம் உயர்த்தியபடி, “என்ன அபூர்வா என்னை பிடிக்கலயா?” என்று கேட்டதும் மறுப்பாக தலையசைத்தாள்.

தன்னை பிடிக்கவில்லை என்று  அவள் சொன்னதும் பட்டென்று அந்த இடத்தைவிட்டு எழுந்தவன், “ஸாரி” என்று சொல்லிவிட்டு நகர அவனின் கரங்களை எட்டுபிடித்த அபூர்வா மெல்ல நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

அவளின் ஓரவிழி பார்வை ஓராயிரம் கதைகள் சொல்ல, “என்ன” என்றான் புரியாத பாவனையோடு.

“இப்படியே உன் கைகோர்த்து கடைசிவரை வர ஆசையா இருக்கு ஆதி..” என்று அவனின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து தன் காதலை வெளிபடுத்தினாள்.

அவளின் கரங்களை இறுக்கமாக பிடித்துகொண்ட ஆதியின் பார்வை பிரகாரத்தை சுற்றிவந்தது. அவர்கள் நிற்கும் இடம் மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்ற தைரியத்தில், “தேங்க்ஸ்” என்றவன் அவளின் நெற்றில் அழுத்தமாக முத்திரை பதிக்க அவளின் உடல் சிலிர்த்தது.

அவளின் முகம் அந்திவானமாக சிவந்துபோக, “என்ன இப்படி பண்றீங்க” பயத்துடன் சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.

“யாரும் இல்லடி” என்று புன்முறுவலோடு கூறியவனை அவள் கோபத்துடன் முறைக்க, “ஸாரிடி இனிமேல் இப்படி பண்ணமாட்டேன்” என்றான் காதலோடு அவளையே பார்த்தபடி.

அதற்குள் வாசலிலிருந்து, “ஆதி இன்னுமா சாவியை தேடி எடுக்கற” என்ற தாயின் குரல்கேட்டு அவள் திடுகிட்டு விழிக்க அவனோ வாய்விட்டு சிரித்தான்.

அவனின் வலக்கரத்தில் இருந்த வீட்டு சாவியை அவளின் முகத்திற்கு நேர் காட்டி, “உன்னிடம் பேச அம்மாவிடம் சாவியை தொலைச்சிட்டேன்னு பொய் சொல்லிட்டு வந்தேன்” என்றவன் குறும்புடன் கண்சிமிட்டினான்.

“அடப்பாவி” என்று அவனின் முதுகில் பட்டென்று ஒரு அடிபோட, “ஏய் அடிக்கதடி” என்றவன் மீண்டும் அவளின் நெற்றியில் இதழ்பதித்து நிமிர்ந்தான்.

“ஆதி கோவில்” என்று மிரட்டலோடு சொல்ல, “ஹலோ மேடம் என் மனைவியை நான் முத்தம் கொடுப்பேன். யாரும் வந்து எனக்கு தடா போட முடியாது..” என்று தைரியமாக கூறியவனை அவள் விழிவிரிய பார்த்தாள்.

அவளின் கன்னத்தை மெல்ல வருடியவன், “என்ன சொல்ல வருவது தெளிவாக புரியுதா? உன் கழுத்தில் தாலிகட்டவும், இந்த நெற்றியின் வகிட்டில் குங்குமம்  வைக்கவும் எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு” என்ற ஆதி அவளின் கரத்தில் அழுத்தம் கொடுத்துவிட்டு அவளைவிட்டு விலகி சென்றான்.

அவனின் கம்பீரமான தோற்றத்தை மனதிற்குள் ரசித்தபடி அங்கேயே நின்றிருந்தாள் அபூர்வா. அவனின் வார்த்தைகளில் தெரிந்த அழுத்தமும், உறுதியும் அவளின் மனதில் நம்பிக்கையை வரவழைக்க அவளும் படிப்பில் கவனத்தை திருப்பினாள்.

அன்றைய நாளுக்கு பிறகு இருவரும் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. அவள் படிப்பில் கவனம் செலுத்த அவனோ வேலை தேடுவதில் மும்பரமாக இறங்கினான். நாட்கள் அமைதியாக நகர்கிறது என்ற எண்ணத்துடன் அபூர்வா இருக்க  ஆதியின் கோபத்தை அவள் நேரில் காண நேர்ந்தது.

ஞாயிற்று கிழமை டியுஷன் முடிந்து அவள் வீடு நடந்து வந்து கொண்டிருக்க ஒரு திருப்பத்தில் யாரோ ஒருவன் தலைதெறிக்க  ஓடிவர அவனை துரத்திக்கொண்டு கோபத்துடன் வந்த ஆதியைக் கண்டவுடன் அவளுக்கு பகீரென்றது.

ஆதியின் முகம் செந்தணலாக மாறியிருக்க கட்டுக்கடங்காத கோபத்துடன், “டேய் நில்லுடா” என்று கத்தியபடி வந்தனை கண்டு இவளுக்கு பயம் வந்தது.

அவன் இந்த கோபத்தில் சென்றால் கட்டாயம் கைகலப்பு ஆகிபோய்விடும் என்று அவளுக்கு புரிந்த மறுநொடியே, “ஆதி” என்று கத்தியபடி அவனின் கரத்தை எட்டிப்பிடித்து  நிறுத்தினாள்.

“ஏய் கையை விடுடி. இன்னைக்கு அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் அடங்கும்” தூரத்தில் ஓடியவனை பார்த்து பல்லைக்கடித்துக்கொண்டு கோபத்துடன் கையை உதற முயன்றான்.

ரோட்டில் போகும் சிலர் அவர்கள் இருவரையும் ஒருமாதிரி பார்த்துவிட்டு செல்வதை கவனித்த அபூர்வாவிற்கு கோபமாக வந்தது. அவன் கோபம் அப்போதும் குறையாமல் இருக்க, “ஆதி எல்லோரும் தப்பா பார்க்கிற மாதிரி இருக்குடா. எனக்கு ஏதோ மாதிரி இருக்கு வா போலாம்” என்று அழுகையை அடக்கிய குரலில் கூற அவனின் கோபம் பட்டென்று தணிந்தது.

அவளின் முகத்தை ஏறிட்ட ஆதியின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி வெளிப்படையாக தெரிந்தது. அவளின் கண்கள் கலங்கி சிவந்திருக்க அவளின் பளிங்கு முகமோ அவமானத்தில் சிவந்திருப்பது கண்டு அவளின் சொல்லுக்கு கட்டுபட்டு அவளின்  பின்னோடு சென்றான்.

அவன் காதலை சொன்ன அதே செங்கொன்றை மரத்தை நோக்கி விறுவிறுவேன்று வேகமாக நடந்த அபூர்வாவின் முகத்தை வைத்து அவனால் எதுவும் கணிக்க முடியவில்லை. ஆனால் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது.

அந்த இடத்தை அடைந்ததும், “நீ ஏன் ஆதி இவ்வளவு கோபப்படற” என்று கேட்டபடி அவனைவிட்டு இரண்டடி நகர்ந்து மரத்தின் மீது சாய்ந்து நின்றாள் அபூர்வா.

“அவன் சொன்னான் அபூர்வா எங்க அப்பாவோட பணத்திற்கு ஆசைபட்டு அந்த மேனகா சொல்லும் பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன்னு. நான் காதலிக்கிறேன்னு சொன்னதுக்கு அந்த பொண்ணை உதறிட்டு நீயும் உங்க அப்பா மாதிரி பணத்திற்காக வேறொரு பொண்ணு பின்னாடி போயிருவன்னு சொன்னான்” என்றவனின் குரலில் கோபத்துடன் சேர்த்து ஆதங்கமும் வெளிப்பட்டது.

அவனின் மனம் தெளிவாக அவளுக்கு புரிந்துபோக, “ஆதி அவனால் உன்னை வேற எதிலும் தோற்கடிக்க முடியாமல் இப்படி உங்க அப்பாவையும், சித்தியையும் பேசி உன் கோபத்தை தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைக்கிறான் அது ஏன்டா உனக்கு புரியவே மாட்டேங்குது” என்று தலையிலடித்துக் கொண்டாள் அபூர்வா.

அவளின் பேச்சில் இருந்த உண்மை புரிய சட்டென்று நிமிர்ந்த ஆதி அவளை கேள்வியாக நோக்கிட, “நீ எல்லாத்துக்கு கோபபட்ட உன் வாழ்க்கையும் வீணாக போகும். உன் கோபத்தால் ஒரு நிலையில் இருக்கும் உன் மனதில் நிம்மதி குறைந்து உடம்பும் தளர்ந்து போகும்  ஆதி” அவள் மௌனமாகிவிட ஆதி அவளின் அருகே வந்தான்.

அவளின் முகத்தை ஒருவிரலால் நிமிர்ந்தி அவளை பார்த்தான். அவனின் பார்வை இதயம் வரை ஊடுருவிச் செல்ல, “நீ கோபபட்டு அவன் சொல்வது உண்மைன்னு நிரூபிக்கிற ஆதி. என்னைக்கும் பொறுமையை இழக்காமல் இருடா. இந்த கோபம்  உன் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்” என்று மெல்லியகுரலில் குரலில் கூறியவள் அவனை அணைத்து அவனின் நெஞ்சில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.

அவள் வார்த்தைகளால் சொல்லாத விஷயத்தை ஒரு செயலில் அவனுக்கு உணர்த்திவிட்ட அபூர்வாவின் மனதை உணர்ந்த ஆதி,

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
” என்று பாரதியின் பாடலை முணுமுணுத்த ஆதி அவளை இடையோடு கரம்கோர்த்து இறுக்கியணைத்தபடி அவளிடம் சரணடைய அவளின் கண்கள் கலங்கியது.

ஆதியின் மனம் அன்றுதான் அவனுக்கே தெளிவாக புரிந்தது. அவளால் தன் மனக்காயம் ஆறிவிடும் என்று நினைத்தவனுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. அவளை தன் இதயமென்ற கோவிலில் தெய்வமாக வடித்துவிட்ட உண்மை.

“காதல்” என்ற வார்த்தை அவரவர் அகராதியில் ஆயிரம் அர்த்தமுண்டு. ஆனால் ஆதியின் அகராதியில் அவளே சகலமும் என்று அவளிடம் சரணடைந்தான் அந்த காதலன்.

அவளும் அவனிடம் மட்டுமே தன் மனதை பறிகொடுத்து அவனை மட்டுமே தன் வாழ்க்கையாக நினைத்தாள். இருவரின் காதலும் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. இருவரும் இருக்கும் இடம் மறந்து வெகுநேரம் நின்றிருக்க எங்கிருந்தோ  கேட்ட குயிலின் சத்தத்தில் இருவரின் மனமும் நடப்பிற்கு திரும்பியது.

அவள் வேகமாக அவனைவிட்டு விலகி நிற்க, “இனிமேல் கோபபட மாட்டேன்” என்றான் அவளின் முகத்தில் பார்வை பதித்தபடி.

பிறகு இருவரும் அங்கிருந்த கல்லின் மீது ஒருவரையொருவர் பார்த்தபடி அமர, “யார் என்ன சொன்னாலும் உன்னோட மனசுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று! அதனால் தேவையில்லாத கோபம் வேண்டாம் ஆதி” என்று கூற அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

அவர்களின் பேச்சு அவனின் படிப்பு வேலை என்று திசை திரும்பிட, “அபூர்வா நீ என்ன படிக்க விருப்படற” என்று கேட்டதும் அவளின் முகம் மலர்ந்தது.

“நான் ஆர்கிடெக்ட் ஆகபோறேன் ஆதி” என்றாள் சீரியசான குரலில்.

“ஏன் அந்த படிப்பு உனக்கு பிடிக்கும்” என்றான்.

“எனக்கு கட்டிடகலை ரொம்ப பிடிக்கும் ஆதி. நம்ம முன்னோர்கள்  கோவில் என்ற பெயரில் எவ்வளவு பெரிய விஷயங்களை ரொம்ப சாதாரணமாகவே செஞ்சிருக்காங்க தெரியுமா? ஒவ்வொரு கோவில் பின்னாடியும் எவ்வளவு அறிவியல் எவ்வளவு நுணுக்கமான தோளில் நுட்பமெல்லாம் இருக்குன்னு தெரியுமா” என்று அவள் கேட்க அவனோ தெரியாது என்பது போல உதட்டை பிதுக்கினான்.

“ஒவ்வொரு கோவிலில்  இருக்கும் சிற்பங்கள் ஆயிரம் கதை சொல்லும். ஒரு கட்டிடத்தை கட்டுபவன் ரசித்து கட்டலாம். ஆனால் அதன் வடிவமைப்பை செய்யும் கலைஞர் மனதில் தோன்றும் வடிவங்கள் எவ்வளவு நுணுக்கம் இருக்கும். எந்தவிதமான தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்தில் எப்படி இவ்வளவு பெரிய கோவில்களை அவங்களால் அமைக்க முடிந்தது. அதுவும் முறையான திட்டத்துடன்” என்று தனக்குள் தோன்றிய கேள்வியை அவனிடம் கேட்டாள்.

“அதுக்கு என்னதான் கட்டிடம் கட்ட ஆயிரம் திறமையான மனிதர்கள் அமைந்தாலும் திட்டமிடல் சரியாக இருக்கணும் இல்ல. இந்த கோவிலில் இருக்கும் நுணுக்கமான சில விஷயம் சின்ன வயதில் இருந்தே மனதில் பதிந்து போய்விட்டது. நானும் ஒரு ஆர்கிடெக்ட் ஆகணும் என்ற எண்ணம் வந்தது” என்று ஒவ்வொரு விஷயத்தையும் அவள் ரசித்து கூறினாள்.

அவளின் பேச்சு அவளின் மனதை தெளிவாக அவனுக்கு படம்பிடித்து காட்டிட, “நீ கண்டிப்பா ஒரு ஆர்கிடெக்ட் ஆகணும் அபூர்வா. நான் ஆரம்பிக்கும்  கன்ஸ்ட்ரக்ஷனில் நீதான் ஆர்கிடெக்ட், உன்னைவிட்டு நானும் என்னைவிட்டு நீயும் என்னைக்கும் பிரியும் நிலை வரவே வராது” என்றான் முகத்தை சீரியசாக வைத்துகொண்டு.

அதுவரை பேசிய விஷயங்கள் அவளுக்கு மறந்துபோய்விட, “அப்படியே பிரியும் நிலை வந்துவிட்டால் என்ன பண்றது ஆதி” என்று குறும்புடன் கண்சிமிட்டி குறும்புடன் கேட்டாள்.

“என்னடி என்னை பிரிஞ்சுபோக நினைக்கிறீயா” என்று அவளை இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“அதெல்லாம் இல்ல நீ சொல்லு அப்படியொரு நிலை வந்தால் நம்ம என்ன பண்றது” அவனின் மார்பில் தலைசாய்த்து கொண்டாள்.

“நம்மள பிரிக்க நினைப்பது நமக்கு தெரிய வந்தால் ஒருவரையொருவர் அந்த சிக்கலில் இருந்து மற்றவரை வெளியே கொண்டுவர எந்த முடிவு வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..” என்று அவன் சொல்ல அவளோ குழப்பத்துடன் அவனின் முகத்தை ஏறிட்டாள்.

“என்னடி புரியலயா” என்று அவன் செல்லம் கொஞ்சியபடி கேட்க அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.

“எனக்கே ஒரு பிரச்சனை வருதுன்னு வை. அதிலிருந்து என்னை காப்பாற்ற நீ என்ன முடிவு வேண்டுமென்றாலும் எடுக்கலாம். ஆனால் எடுக்கும் முடிவு நமக்கு சிறிதுகாலம் பிரிவை கொடுத்தாலும் நம்ம லட்சியத்தில் நம்ம முன்னேறனும். நீ உன்னோட படிப்பையோ இல்ல நான் என்னோட இலட்சியத்தையோ விட்டு சிறிதும் விலகக்கூடாது” என்று அவளின் நெற்றியில் செல்லாக முட்டினான்.

காதல் வந்த மறுநொடியே திருமணம் செய்ய வேண்டும், வீட்டில் எல்லோரும் சம்மதிக்க வேண்டும் என்று ஆயிரம் கனவுகள் காணும் காதலர்களுக்கு இடையே இவர்கள் இருவர் மட்டும் தனித்து தெரிந்தனர்.

அவள் கட்டிடங்களை திட்டமிட்டு உருவாக்க ஆர்கிடெக்ட் படிக்க நினைத்தாள். அவனோ கட்டிடத்தை கட்டுவதற்கு படிப்பை முடித்திருந்தான். இருவரும் இணைந்து வருங்காலத்தை பிரிவு என்ற அஸ்திவாரத்தைகொண்டு காதல் என்ற கால கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

அவன் சொல்ல வரும் விஷயம் அவளுக்கு புரிந்துவிட, “என்னைவிட்டு நீயோ உன்னைவிட்டு நானோ வேறொரு  நபரை கைபிடிக்கும் நிலை வந்தால் நம்ம காதலை மத்தவங்களுக்கு சொல்லிவிட வேண்டும் அப்போவே அந்த நிமிசமே புரிஞ்சுதா” என்றவள் அவனிடம் கேட்க அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

இருவரும் தங்களின் வாழ்க்கையை பிரிவை வைத்து அழகாக திட்டமிட அவர்கள் பிரிய போவதை நினைத்து மனம் வருந்தியபடி அவர்களைப் பார்த்து பலமாக சிரித்தது விதி.