அத்தியாயம் – 32
அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஆதியுடன் தனிமையில் பேச ஒரு இடம்தேடி மலைஅருவிக்கு செல்லும் பாதையில் குறுக்கே சிறிதுதூரம் நடந்தால் செங்கொன்றை மரத்தின் கிளைகள் பறந்து விரிந்து காணப்பட்ட இடத்தை இருவரும் சேர்ந்து தேர்வு செய்தனர்.
அடுத்தடுத்த சந்திப்புகள் அந்த செங்கொன்றை மரத்தின் அருகே அழகுற நிகழ்ந்தது. இருவரும் படிப்பிலும் சரி, தங்களின் கடமையிலிருந்து சிறிதும் தவறாமல் காதலிக்க தொடங்கினர்.
அன்று அபூர்வா பேசியபிறகு அவனின் மனம் தெளிவடைய யாருக்காகவும் அவளை இழக்கக்கூடாது என்ற எண்ணம் அவனின் மனதில் பதிந்துபோனது. அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாக சென்றபோது ஒருவரையொருவர் மனதளவில் நெருக்கமாகினர்.
மாலைநேரத்தில் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு அவனை தேடி அந்த இடத்திற்கு அபூர்வா செல்ல ஆதி தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவன் மரத்தின் அருகே நின்று என்ன செய்கிறான் என்ற சிந்தனையோடு அவனை நெருங்கி சென்றாள்.
அவளின் கொலுசு சத்தம்கேட்டு பட்டென்று திரும்பிப் பார்க்க, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஆதி” என்றவளின் பார்வையில் ஆர்வம் அதிகமாக இருந்தது.
அவன் சட்டென்று நகர மரத்தில் சிறிது இடம் செதுக்கபட்டு அதில் “ஆதித்யாவின் அபூர்வா” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே செங்கொன்றை மரத்தின் பூவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவளின் முகம் பூவாக மலர்ந்திட அவளின் மீது சாய்ந்து நின்றவன், “அபூர்வா” என்று கிசுகிசுப்பாக அழைத்தான்.
அவனின் மூச்சுக்காற்று அவளின் மேனியை சிலிர்க்க வைக்க, “என்ன” என்றாள் மெல்லிய குரலில்.
“நான் செதுக்கு இருப்பது உண்மைதானே” அவளிடம் கேட்க, “ம்ம்” என்றவள் அவனின் தோளில் சாய்ந்துகொள்ள இடையோடு கரம்கோர்த்து இறுக்கியணைத்தான் ஆதி.
எங்கோ அருவி கொட்டும் சத்தம் மாலைநேர தென்றலோடு மலையருவியின் சாரலும் கலந்து வரவே மேற்குதிசையில் மறையும் சூரியனின் கதிரொளி பட்டு வானம் சிவக்க தொடங்கியது. இரண்டு இதயங்களும் தங்கள் இருக்கும் சூழ்நிலை மறந்து மயக்கத்தில் நின்றிருக்க இருவரின் இதயத்துடிப்பும் மெல்ல கேட்டது. எங்கிருந்தோ கூவிய குயிலின் ஓசையில் காதலர்களும் மனம் பறிபோனது.
அவள் விழிதிறந்து அவனை இமைக்காமல் நோக்கிட அவனும் அவளின் பார்வையை சலைக்காமல் எதிர்கொண்டான். ஆதியின் செல்போனில் இருந்து கசிந்தபாடல் இருவரின் மனதையும் இதமாக நனைத்தது..
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே
லலலல லலலல லலலல லலலல (சோலைப் பூவில்)
சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது
லலலல லலலல லலலல லலலல (சோலைப் பூவில்)
பாடலின் வரிகளில் இருந்த உண்மையை இருவரின் பார்வையும் பிரதிபலிக்க மெல்ல இருள்பரவ தொடங்கிய வேலை அவனைவிட்டு விலகினாள் அபூர்வா.
“ஏய் அபூர்வா பாடலை கேட்டுட்டு அமைதியா போனால் என்ன அர்த்தம்” என்றவன் அவளின் கரம்பிடித்து போகவிடாமல் தடுத்தான். அவளின் கன்னங்கள் செம்மையுற, “அதுதான் பாட்டில் வந்துச்சு இல்ல போ” என்று வெக்கத்துடன் தலைகுனிந்தாள்.
சட்டென்று அவளை அருகே இழுத்த அவளின் இதழ்களில் தன் இதழ்பதித்தான். அவளின் இதழ்களில் ஊறிய தேனை அவன் விடாமல் பருகிட இவளோ அவனின் விழிகளை பார்த்தபடி அவனின் செயலுக்கு உடன்பட்டு நின்றாள்.
இருவருக்கும் சுவாசக்காற்று தேவையென்று நுரையிரல் அறிவிப்பை வெளியிட சிரித்தபடி நிமிர்ந்த ஆதியின் கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் வெடுக்கென்று அவனின் பிடியிலிருந்து விடுப்பட்ட வில்லில் இருந்து பாயும் அம்பின் வேகத்துடன் ஓடுவதைக் கண்டு அவன் சத்தமாக சிரித்தான்.
ஆதி அபூர்வாவை காதலிக்கும் விஷயம் யாரோ மூலமாக மேனகாவிற்கு உண்மை தெரிந்துபோனது. உடனே டிடைக்டிவ் ஏஜென்சி மூலமாக அபூர்வாவை பற்றிய விவரங்களை திரட்ட சொன்ன ஒரு வாரத்தில் அவளின் கரங்களுக்கு வந்தது.
அபூர்வாவின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்தது அதன்பின் தம்பியே அவளை தன் மகளாக எடுத்து வளர்க்கும் உண்மை வெட்டவெளிச்சமானது. அவளோடு பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. சக்தி கூட அவளின் உடன்பிறந்த தம்பியல்ல என்று அத்தனை விவரத்தையும் படித்து அறிந்துகொண்ட மேனகாவின் மனம் பாறையென இறுகியது.
தன் மகனுக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து வைப்பதா? ஆதியே விரும்பினாலும் அவர்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளின் மனதில் வலுப்பெற்றது. மறுநாளே அவளை சந்திக்க சென்றாள் மேனகா.
இந்த விஷயம் தன் கணவனுக்கு தெரியக்கூடாது என்று ஜெகனிடமிருந்து கூட உண்மையை மறைத்தாள் மேனகா. அவளின் சுயநலமான புத்தி அவளை இப்படியொரு நிலைக்கு தள்ளியது. ஆதியின் மீது வைத்த கண்மூடித்தனமான பாசம் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாற தொடங்கியது.
மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது..
ஆதித்யா காலை தாயிடம் சொல்லிவிட்டு ஒரு நிறுவனத்திற்கு இண்டர்வியூ சொல்லும் வழியில் அபூர்வாவை கண்டதும், “பொம்முக்குட்டி” என்றான் செல்லமாக.
அவனின் அழைப்பில் கோபத்தோடு திரும்பிய அபூர்வாவின் விழிகள் வியப்பில் விரிய சட்டென்று சிரித்தவள், “நான் என்ன குழந்தையா?” என்று இடையில் கையூன்றி அவனை வம்பிற்கு இழுத்தாள்.
பள்ளிக்கூட யூனிபார்ம் இரட்டை ஜடையில் இருந்தவளின் உருவத்தை அவனின் மனம் பொக்கிஷமாக சேகரிக்க, “நீ எனக்கு குழந்தைதான். இந்த ஸ்கூல் போகும் குழந்தை என்னைக்கு வளர்ந்து நான் என்னைக்கு உன்னை கல்யாணம் பண்ணி என் குழந்தையையும் உன்னைப்போல ஸ்கூலுக்கு அனுப்பவதற்குள்” என்றவனின் தலையை சுழற்றி மயக்கம்போட்டு விழுவது போல செய்ய அவளோ கலகலவென்று சிரித்துவிட்டாள்.
“ஆதி என்ன இது காலையில் ஸ்கூல் போகவிடாமல் இப்படி வம்பு பண்றீங்க” என்று அவள் சிணுங்கினாள்
அவளை குறும்புடன் பார்த்த ஆதி, “வம்பு பண்றதோட முழு அர்த்தம் உனக்கு தெரியல பொம்முக்குட்டி. சீக்கிரமே அத்தான் உனக்கு கத்து தரேன்” என்றவன் அவளை பார்த்து கண்சிமிட்ட அவளின் கன்னங்கள் சிவந்துபோனது.
அவன் அதை ரசனையோடு பார்க்கும்போது தூரத்தில் பஸ் வருவதை கண்ட ஆதி, “இன்னைக்கு ஒரு கம்பெனிக்கு இண்டர்வ்யூ போறேன் அபூர்வா” என்றான்.
“நீங்க போய் அட்டன் பண்ணுங்க. கண்டிப்பாக வேலை கிடைக்கும். ஆல் தி பெஸ்ட்” என்றாள்.
அவன் தலையசைத்துவிட்டு அருகே வந்து நின்ற பஸில் ஏறிக்கொள்ளப் பஸ் வேகமெடுத்து புள்ளியாக மறைய அவளின் அருகே சரக்கென்ற சத்தத்துடன் வந்து நின்றது ஒரு கார்.
அந்த கார் வந்து நின்ற வேகத்தில் ஒரு நொடி பயந்துவிட்ட அபூர்வா நிமிர்ந்து பார்க்க காரிலிருந்து இறங்கிய மேனகா கோபத்துடன் அவளை நெருங்கி வந்தாள்.
அவளின் தோற்றத்தை கண்டவுடன், ‘ஆதியின் சித்திதானே இவங்க. என்னை பார்க்க ஏன் வராங்க’ என்ற சிந்தனையோடு இமைக்க மறந்து அவரையே நோக்கினாள்.
அவளை நேரில் சந்திக்க வந்த இடத்தில் ஆதியும், அபூர்வாவும் பஸ் ஸ்டாப்பில் நின்று பேசுவதைக் கண்டவுடன், ‘ஒரு அனாதைக்கு இவ்வளவு தைரியமா?’ என்றவர் மகன் அங்கிருந்து கிளம்புவதற்காக காத்திருந்தார்.
அவன் அங்கிருந்து நகர்ந்ததும் அவளின் அருகே சென்று காரை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கிய மேனகா கோபத்துடன் அவளை நோக்கி சென்றாள்.
பள்ளி உடையில் நின்றவளை ஏறயிறங்க பார்த்து, “ஸ்கூல் படிக்கும்போதே ஆம்பிள்ளையை தேடுற” என்று அவளை எடுத்த எடுப்பில் அசிங்கமாக பேசினார். அவர் பேசிய வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த மறுநொடியே சுள்ளேன்று கோபம் உச்சிக்கு ஏறியது அபூர்வாவிற்கு!
“யார் ஆம்பிள்ளை தேடி அலையறாங்க? நீங்க மரியாதை இல்லாமல் பேசறீங்க. நீங்க மரியாதை கொடுத்தால் அது உங்களுக்கு நல்லது” விரல்நீட்டி அவரை எச்சரித்தாள் அபூர்வா.
அது அவரின் தன்மானத்தை சீண்டிவிடவே, “உன்னைத்தான் சொல்றேன். என் பையன் பின்னாடி இப்படி திரியற. என் பையன் பின்னாடி சுத்தும் உன்னை அப்படி சொல்லாமல் வேற எப்படி சொல்றது. எந்தவிதமான தகுதியும் இல்லாத ஒரு அனாதைகிட்ட பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறேன்” அவரும் வார்த்தைகளை சிதரவிட அதைகேட்டு அதிர்ச்சியுடன் அவரை நோக்கினாள் அபூர்வா.
அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட, “எனக்கு அப்பா, அம்மா எல்லோரும் இருக்காங்க. தேவை இல்லாமல் என்னை அனாதை என்று சொல்லும் வேலை வெச்சுக்காதீங்க” அவள் கோபத்துடன் கூறினாள்.
அவளின் இந்த பேச்சில் மேனகாவின் மனம் அடிவாங்கிவிட, “அவங்க உன்னை எடுத்து வளர்த்தவங்க. உன்னை பெத்தவங்க போய் சேர்ந்து பதினாறு வருசமாச்சு” உண்மையை போட்டு உடைக்க அது அபூர்வாவின் மனதை வெகுவாக பாதித்தது.
எந்தநேரம் தன்னைப்பற்றியும், தன் நலனை பற்றி மட்டுமே சிந்திக்கும் குடும்பம் தன்னுடையதல்ல என்ற உண்மை அவளை உடைய செய்தபோது, ‘இவங்க சொன்னது உண்மையாக இருந்தாலும் நான் உடைந்து போனால் என் குடும்பத்தால் அதை தாங்க முடியாது. இப்போ நம்பிக்கையாக போகும் ஆதியும் துவண்டு போவான்’ என்று தனக்குள் நினைத்தபடி சட்டென்று நிமிர்ந்தாள்.
“இப்படியொரு பெண்ணை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நினைக்காதே. நீயே ஒதுங்கி போயிட்ட உனக்கு நல்லது இல்லன்னா நானே உன்னை அவனிடமிருந்து பிரிப்பேன் ஞாபகம் வெச்சுக்கோ” என்றவர் அவளை விரல்நீட்டி எச்சரித்தார்.
ஆதியைவிட்டு விலக சொன்ன மறுநொடியே, “என்னை இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள் சொல்லி பேசுவதற்கு முன்னாடி நீங்க அதை யோசிச்சு இருக்கணும். நான் கல்யாணம் பண்ணினால் ஆதியைத்தான் பண்ணுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது..” என்றவள் சவால்விட அதில் சற்று ஆடித்தான் போனார் மேனகா.
சின்னப்பெண் மிரட்டிவிட்டால் விலகி போய்விடுவாள் என்று அவர் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு அங்கிருந்து வந்திருக்க அவள் தனக்கு சவால்விடுவது அவரின் மனதிலிருந்த பணத்திமிரை சீண்டி பார்த்தது.
“நான் பணத்தை வைத்து எதையும் சாதிப்பேன். உனக்கு ஒரு பிரச்சனை வந்தால் உன்னை சுற்றி இருக்கிற எல்லோரும் உன்னைவிட்டு ஓடிபோயிருவாங்க அதை நினைவில் வைத்து பேசு” என்று அவர் அவளை மட்டம்தட்டி பேசிட நிமிடத்திற்கு நிமிடம் அவளின் கோபம் அதிகரித்தது.
“என் காதலுக்கு முன்னாடி உங்க பணத்தை வைத்து ஒன்றும் பண்ண முடியாது. எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை என் தாத்தா பார்த்துகொள்வார்” என்றவள் தலைநிமிர்ந்து கர்வத்தோடு கூறிய அபூர்வா கூட்டத்தை விலக்கிவிட்டு அங்கிருந்து செல்வதைக் கண்ட மேனகாவின் முகத்தில் தோன்றி மறைந்த விஷம புன்னகையின் பின்னோடு இருக்கும் மர்மம் அறியாமல் அவள் வீடு நோக்கி சென்றாள்
என்னதான் அபூர்வா அவரிடம் தைரியமாக பேசிவிட்டு வந்தபோதும் அவர் சொன்ன விஷயம் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவளின் மனம் விரும்பியது. அது பொய்யாக இருந்துவிட்டால் போதுமென்ற எண்ணத்தோடு தெய்வங்களை வேண்டியபடி வீடு வந்து சேர்ந்தாள்.
பேத்தியை பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு தோட்டத்திற்கு வந்த சிவரத்தினம் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தார். காமாட்சி அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றார்.
வீட்டின் கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு சிவரத்தினம் வேகமாக திரும்பிப் பார்த்தார். சற்றுநேரத்திற்கு முன்னே ஸ்கூல் போகிறேன் என்று சொல்லிவிட்டு போன பேத்தி சோர்ந்து வருவதை கண்டு, “என்னடா கண்ணா உடம்பு சரியில்லையா?” என்று அக்கறையோடு விசாரித்தபடி வேகமாக அவளை நெருங்கினார்.
அவரின் பேச்சில் உண்மையான பாசம் வெளிபடுவதை உணர்ந்த அபூர்வாவின் கண்களில் கண்ணீர் பெருகிட, “தாத்தா என்னோட அப்பா – அம்மா இறந்து போயிட்டாங்களாம். ரோஹித் – மதுமிதா உன்னோட அப்பா அம்மா இல்லன்னு சொல்றாங்க தாத்தா” என்று அழுகையோடு தாத்தாவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள் அபூர்வா.
இத்தனை வருடமாக அவளுக்கு இந்த உண்மை தெரியவே கூடாது என்று குடும்பமே அவளின் மீது பாசத்தை பொழிய யார் சொல்லி இவளுக்கு உண்மை தெரிந்தது என்ற குழப்பத்துடன் பேத்தியை அணைத்துக் கொண்டவரின் கண்கள் கலங்கிட, ‘ஆண்டவா என் பேத்தி அழுகைக்கு யார் காரணம்னு தெரியலையே’ என்று மனதிற்குள் புலம்பினார்.
சட்டென்று தன்னை சுதாரித்து நிமிர்ந்தவர், “யாருடா கண்ணா உன்னிடம் இப்படி சொன்னது?” என்று கேட்க பேத்தி ஆதியை காதலித்த விஷயம் முதல் மேனகா தன்னை மிரட்டிய விஷயம் வரை அணைத்தையும் தாத்தாவிடம் கூறிய அபூர்வா, “என்னால ஆதியை இழக்க முடியாது தாத்தா..” என்று மீண்டும் அழுக தொடங்கினாள்.
அவளின் காதல் விஷயம் தெரிந்த மறுநொடியே அவளின் மீதிருந்த கோபம் குறைந்துவிட, “இங்கே பாரு நீ உண்மையை பேசும்போது எதுக்கு கவலைபடற. நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படி வேலைக்கு போ. ஆதியே முறைப்படி பெண்கேட்டு வரும்போது என் தங்கத்தை ஆதியோடு சேர்த்து வைக்கிறேன். தாத்தாகிட்ட சொல்லிட்ட சோகத்தை எல்லாம் மறந்து சிரிக்கணும்..” என்று பேத்திக்கு நம்பிக்கை கொடுக்கும் வழியில் பேசினார்.
“தாத்தா இந்த விஷயம் ஆதிக்கு தெரிய வேண்டாம். அவன் இன்னைக்கு ஒரு இண்டர்வ்யூ அட்டன் பண்ண போயிருக்கான். அது மட்டும் இல்லாமல் முன்கோபம் ஜாஸ்தி தாத்தா. அதனால் இந்த பேச்சை இத்தோடு விட்டுவிடுவோம்” என்று சொல்லிவிட்டு சிரித்த முகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
அவரின் கோபம் முழுவதும் மேனகாவின் மீது திரும்பியது. அவளிடம் தன் பேத்தி இட்ட சவாலில் அவள் ஜெய்க்க தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். ஒரு பிரச்சனையின் ஆரம்பம் எங்கு இருக்கிறதோ அங்கேதான் முடிவும் இருக்கிறது என்று இத்தனை வருட வாழ்க்கையில் அனுபவத்தால் உணர்ந்திருந்தார்.
சிவரத்தினத்திற்கு ஓரளவு ஆதியைப் பற்றி தெரியும். தந்தை செய்த தவறுக்கு அவன் சிலுவை சுமக்குபடி ஆனதே தவிர அவன் தப்பானவன் அல்ல என்றும், காதலை சொல்லும்போதுகூட தன் சூழ்நிலையை வெளிப்படையாக கூறி இருக்கிறான் என்பது அவரின் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்தது.
இந்த காலத்தில் காதல் என்ற வார்த்தை பொய்யானது என்று அவர் நினைத்திருக்க தன் பேரனை போலவே நேர்மையாக காதலை சொன்ன ஆதியை அவருக்கு பிடித்துப்போனது. ஆண்டவன் மீது பாரத்தை போட்டுவிட்டு, ‘என் பேத்திகாக அவன் எதையும் செய்வான்’ என்ற எண்ணம் அவரின் மனதில் எழுந்தது. அது கொடுத்த நம்பிக்கையில் ஆதி – அபூர்வாவின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார் பெரியவர்.
ஆனால் அவரையும் பகடை காயாக மாற்றிவிட போகிறாள் மேனகா என்ற விஷயம் அவரும் அறியவில்லை.