Idhayam – 34

அத்தியாயம் – 34

சிறிதுநேரத்தில் அவளுக்கு உணவை தயார் செய்து அவளின் அறைக்கு எடுத்து வந்தான் ஆதி. அவன் வந்து பார்க்கும்போது குளித்துவிட்டு வந்து சோர்வுடன் தரையில் அமர்ந்திருந்தாள்.

அதுவரை வாடியிருந்த அவளின் பளிங்குமுகம் இப்போது புதுமலர் பூத்தது போல அழகாக இருப்பதைக் கண்டு, “ம்ம் மேடம் குளிச்சிட்டு வந்தாச்சு போல” என்றான் சிரிப்புடன்.

அவள் தலையை மட்டும் அசைக்க, “இட்லி சுட்டு சட்னி அரைத்தேன் போதும் இல்ல” அவளை சாப்பிடும்படி பார்வையால் கூறவே பசியுடன் சாப்பிட அமர்ந்தவள் அவனுக்கு ஊட்டிவிட்டு அவளும் சாப்பிட்டாள்.

வழக்கத்திற்கு மாறாக நான்கு இட்லி அதிகமாகவே சாப்பிட்ட அபூர்வா, “உன் கைப்பக்குவம்  சூப்பர் ஆதி. இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டேன்” என்று எழுந்து கைகழுவ சென்றாள்.

வானில் திடீரென்று இருள் சூழ்ந்துவிட காற்று லேசாக அடிக்க தொடங்கியது. எங்கோ ஒரு மரத்தில் அமர்ந்திருந்த குயில் ‘கூ..கூ’என்று கூவியதை கேட்டபடி, “மழை வருகிற மாதிரி இருக்குது” என்றவளிடம், “நீ வா ஹாலில் உட்கார்ந்து பேசலாம்” என்று அவளை அழைத்து சென்றான்.

சிறிதுநேரம் அவளிடம் குடும்பத்தைப் பற்றி பேசிகொண்டிருந்த ஆதியின் பார்வை இயல்பாக சாமி அறையை பார்க்க அங்கே இருந்த போட்டோ அவனின் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தது. ராதிகாவின் சாயலில் அபூர்வாவின் முகம் இருப்பதைக் கண்டு வியந்தான்.

“இந்த போட்டோவில் இருக்கும் மூவரும் யாரு” என்று அவன் சாதாரணமாக கேட்க அவனின் பார்வையை தொடர்ந்து தன் பார்வையை செலுத்தியவளின் விழிகளில் விழுந்தது சக்திவேல் – ராதிகாவின் புகைப்படம்.

“என்னோட அப்பா – அம்மா ஆதி” என்று சலனமே இல்லாமல் சொன்னவளை சட்டென்று திரும்பிப் பார்த்த ஆதியின் பார்வையில் கேள்வி இருப்பதை புரிந்துகொண்டு,

“அவங்க நான் குழந்தையா இருக்கும் பொழுதே இறந்துட்டாங்க. இப்போ இருக்கும் அப்பாவும் அம்மாவும் என்னை பெற்றவங்களுக்கும் மேலே. என் முகம் கொஞ்சம் வாடினாலும் இந்த காரணம் தான் என்று முகத்தை வைத்தே சொல்லிருவாங்க” என்று அவள் தாய் – தந்தையின் நினைவில் கூறிட அவளை இமைக்கமறந்து பார்த்தான் ஆதி.

எவ்வளவு பெரிய விஷயத்தை சர்வசாதாரணமாக சொல்கிறாள் என்ற எண்ணத்துடன், “என்னைவிட நீ ரொம்ப பாவம்”என்றான் இரக்கத்துடன்.

அவனின் குரலில் வேறுப்பாட்டை உணர்ந்து பட்டென்று நிமிர்ந்த அபூர்வா, “இந்த இரக்கத்துக்கு அவசியம் இல்ல ஆதி. என் அப்பா அம்மா இருந்து என்னை வளர்த்தி இருந்தால் நான் இவ்வளவு நல்ல வளர்ந்திருப்பேனா என்பது சந்தேகம் தான்” அவனின் கரங்களை பிடித்து தன் கைக்குள் வைத்துகொண்டாள்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் ஆட்சி செய்ய, “அவங்க மனசு நோகும்படி நம்ம எந்தவொரு காரியத்தையும் செய்யக்கூடாது ஆதி” என்றாள் குரலில் உறுதியுடன்.

மெல்ல எழுந்து அவளின் அருகே வந்த ஆதி அவளை மெல்ல அணைத்தபடி, “உன் மனசும் எனக்கு புரியுது அந்தமாதிரி முடிவுக்கு நான் வரமாட்டேன். உன் குடும்பத்தை விட்டுட்டு என் பின்னாடி வான்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் உன்னை என்னிடமிருந்து பிரிக்க நினைத்தால் அதை பார்த்துட்டு நான் அமைதியாகவும் இருக்க மாட்டேன்” என்றான் தெளிவான குரலில்.

அவனை பொறுத்தவரை அபூர்வாவின் அப்பா – அம்மாவின் மீது நன்மதிப்பை வைத்திருந்தான். அவர்களின் காதலுக்கு இருவரும் குறுக்கே நிற்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினான். அவளை தன்னிடமிருந்து பிரிக்க நினைத்தால் அதற்கு தான் சம்மதிக்க மாட்டேன் என்று தெளிவாக கூறினான்.

காற்றில் கலந்து வந்த ஈரப்பதமும், மண்வாசனையும் வெளியே மழை வருவதை இருவருக்கும் உணர்த்திட மெல்ல நிமிர்ந்து வாசலைப் பார்த்தான் சாலையின் அருகே இருந்த செங்கொன்றை மரத்தின் மீது அவனின் பார்வை படிந்தது.

அவன் மெளனமாக இருப்பதைக்கண்டு அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனின் பார்வை சென்ற திசையை நோக்கி தன் பார்வையை செலுத்திய அபூர்வா, “செங்கொன்றை மரம் உனக்கு அவ்வளவு பிடிக்குமா ஆதி” என்றாள்.

அவள் அமர்ந்திருந்த போதும் வயிற்றுடன் சேர்த்து அவளை அணைத்துக்கொண்ட ஆதி, “எத்தனை மழை வந்தாலும் என் நெஞ்சிற்குள் எரியும் உன் மீதான காதல் தீ அணையாது பெண்ணே. என் காதலை அப்படியே பிரதிபலிக்கும் இந்த செங்கொன்றை மலர்கள்” என்றவன் கவிதை போல தன் மனதில் தோன்றியதை கூறினான்.

அவனை பார்த்து பளிச்சென்று புன்னகைத்தவள், “நீ நல்ல ரசனைகாரன் தான்” என்றாள் கண்சிமிட்டியபடி.  

அவளை நோக்கி குனிந்தவன், “அபூர்வா  உனக்கு இப்படி அடிக்கடி ஆகுமா? ஏதாவது மாத்திரை போட்டால் வலி குறையுமா” என்று தவிப்புடன் அவளின் மீது பார்வை பதித்தவனின் மீது அவளுக்கு காதல் ஊற்றேடுத்தது.

“இந்த நேரங்களில் மாத்திரை யூஸ் பண்ணாமல் இருந்தால் ரொம்ப நல்லது” அவனின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்து அவள் பதில் சொன்னாள்.

அப்போதும் அவனின் முகம் தெளிவடையாமல் இருப்பது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது. தன்னிடம் அவன் ஏதோ சொல்ல நினைப்பதும் பிறகு சொல்ல முடியாமல் அவன் தவிக்கும் தவிப்பை அவனின் கண்கள் அவளுக்கு காட்டிக் கொடுத்தது.

சில ஆண்களின் கண்களில் உணர்ச்சி வெளிப்படையாக தெரியும். அதே போலதான் ஆதியின் விழிகளும்! அவன் மனதில் என்ன நினைத்தாலும் உடனே அவனின் கண்கள் அதை மற்றவருக்கு பிரதிபலித்துவிடும்.

“என்னாச்சு ஆதி” சிந்தனையோடு அவனை பார்க்க அதுவரை அவளிடம் எப்படி விஷயத்தை தொடங்குவது என்று தெரியாமல் தடுமாறியவன்  சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் பார்த்தான்.

அவள் தீர்க்கமாக அவனின்  பார்வையை எதிர்கொள்ள, “நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்” அவளின் கரங்களை பிடித்தபடி நெருங்கி அமர்ந்தான்.

என்றும் இல்லாத திருநாளாக தன்னை சந்திக்க அவன் வீடு வரை வந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது. எந்தவிதமான காரணமும் இல்லாமல் அவன் தன்னை சந்திக்க வந்திருக்க மாட்டான் என்று அவனைப்பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்த அபூர்வா அவனே பேசவேண்டும் என்று  அமைதியாக இருந்தாள்.

“நான் சென்னை போகலாம்னு இருக்கேன் அபூர்வா” தொடங்கியவன் அதற்கான காரணத்தை அவளிடம் அவன் தெளிவாக கூறினான். சிறிதுநேரம் அவள் அமைதியாக இருக்கவே அவனுக்கு கவலையாக இருந்தது. நாலாபுறமும் அலாசி ஆராய்ந்த அபூர்வாவிற்கு அவனின் முடிவு சரியென்று தோன்றியது.

அவனின் கரங்களைப்பிடித்து தன் கைக்குள் வைத்துகொண்டு, “இதை சொல்ல எதுக்கு தடுமாற்றம்?” என்று மென்மையாக கேட்டவளை அவன் வியப்புடன் பார்த்தான்.

தன் பிரிவை அவள் தாங்கி கொள்வாளா என்ற தயக்கம் அதுவரை அவனின் மனத்தை அழுத்தியது. அவளின் வெளிப்படையான பேச்சில், “உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே” என்றான் அவளை கூர்மையாக பார்த்தபடி.

அவனின் கலக்கம் உணர்ந்து, “நீங்க பிரிந்து போவது எனக்காக என்றபோது நான் ஏன் வருத்தப்படணும்?” என்று ஒரு வார்த்தையில் அவனின் வருத்தத்தை போக்கினால் அவனின் உயிர் காதலி.

“என்னை புரிஞ்சிகிட்டதுக்கு தேங்க்ஸ் பொம்மு” என்றபோது வாசலில் யாரோ நடந்துவரும் சத்தம்கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

மழை நின்றிருக்க கையில் குடையுடன் வீடு வந்து சேர்ந்த பாரிஜாதம் இருவரும் ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டு பெருமூச்சுடன், “இரண்டு பேரும் பேசிட்டு தான் இருந்தீங்களா?” என்று கேட்டார்.

அவர் ஒப்புதலாக தலையசைக்க அப்போது அபூர்வா வேறு உடையில் அமர்ந்திருப்பதை கண்டு அவரின் புருவங்கள் சந்தேகத்துடன் படிந்து மீண்டது. இருவரும் கைகோர்த்து அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவரின் மனதில் நெருடியது.

பாரிஜாதம் பார்வை தவறாக தங்கள் மீது படிவத்தை உணராமல், “சரி அபூர்வா நான் கிளம்பறேன். இந்த வார இறுதியில் சென்னை கிளம்ப இருக்கேன்” என்று அவளிடமிருந்து விடைபெற்று திரும்பியவன்,

“அக்கா இவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துகோங்க. ரொம்ப சோர்வா இருக்கிற. அப்புறம் காலையில் இட்லியும், சட்னியும் அரைத்து சாப்பிட கொடுத்தேன். பாத்திரம் எல்லாம் ஜிங்கில் அப்படியே கிடக்கும் கொஞ்சம் கழுவிடுங்க” என்றவன் அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும் அபூர்வாவின் அருகே வந்த பாரிஜாதம், “ஆதி உன்னிடம் ஏதாவது” என்று தொடங்கும்போதே,

“அக்கா ஆதி அப்படிப்பட்டவர் இல்ல. நீங்க இல்லன்னு என்னை ரொம்ப கவனமாக பார்த்துகிட்டார்” என்றவள் எழுந்து அறைக்கு சென்றாள்.

ஆதியை அவள்  மரியாதையுடன், ‘அவர்’ என்று அழைப்பதைக் கேட்டு, “லவ் பண்றாங்களா?” தனக்குதானே கேட்டபடி சமையலறை நோக்கி நகர்ந்தார் பாரிஜாதம்.

அபூர்வாவின் வீட்டிலிருந்து ஆதி வருவதை இரு ஜோடி கண்கள் நோக்கியது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரி வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம மேனகாதான். அந்த பார்வையில் தீபொறி பறப்பதை உணராமல் அந்த காரைக் கடந்து சென்றான்.

தங்கள் பேசி வைத்திருந்த பிரிவு தற்காலிகமாக என்று அவன் நினைத்திருக்க அதை நிரந்தமாக்கும் முயற்சியில் இறங்கினாள். 

மாலைநேரம் நெருங்கும் வேலையில் வீடு திரும்பிய சிவரத்தினத்தின் காரை வழிமறித்து நிறுத்தி கீழ் இறங்கிய மேனகாவைப் பார்த்தும், ‘இவ எதுக்கு இப்போ இங்கே வர’ என்ற சிந்தனையோடு காரைவிட்டு இறங்கினார்.

காமாட்சி கணவனை பின்தொடர்ந்து இறங்கிட, “வீட்டில் இல்லாத நேரம் என் பையனை அங்கே வரவழைச்சு ஆசைகாட்டி வளைக்க சொல்லி உங்க பேத்திக்கு சொல்லி கொடுத்துட்டு போயிருக்கீங்க போல” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

அவள் எதைபற்றி பேசுகிறாள் என்று புரியாதது சிவரத்தினம் நின்றிருக்க, “என் பேத்தி அப்படிபட்ட பொண்ணு இல்லம்மா” என்றார் காமாட்சி வேகமாக.

மனையாளின் பேச்சில் அர்த்தம் புரிந்துவிட அவரின் ரத்தம் நெருப்பாக கொதித்தது.

காமாட்சியை ஏளனமாக பார்த்த மேனகா, “நீங்க அந்தப்பக்கம் காரில் கிளம்பியதும் என் மகனை வரவழைத்துவிட்டு வேலைக்காரியை வெளியே அனுப்பிய வேகத்தை பார்த்தேனே” என்று நக்கல்வழிய கூறியவளை பார்வையால் எரித்த சிவரத்தினம்,

“மேனகா வார்த்தையை அளந்து பேசு” என்று அவர் எச்சரிக்க, “பேத்தியை விட்டுகொடுத்து வாங்கி திங்க நினைக்கிற நீயெல்லாம் பெரிய மனுஷனா” என்று எரிச்சலோடு கூறியவள் தொடர்ந்தாள்..

“என் சொத்து எல்லாம் என் மகனுக்கு வரும்னு தெரிந்தே நீங்க எல்லாம் அவனை வளைக்க பிளான் பண்றீங்க. அப்போதானே உன் அனாதை பேத்தி என் வீட்டில் மகாராணி மாதிரி வாழ வைக்க குடும்பமே சேர்ந்து திட்டம் போடுறீங்க” என்று ஏளனத்துடன் அவள் சொல்லி முடிக்கவும் சிவரத்தினத்தின் கோபம் எல்லை கடந்தது.

“உன் பேச்சை இத்தோடு நிறுத்திக்கோ” என்ற சிவரத்தினம் கோபத்துடன் காரை நோக்கி செல்ல காமாட்சி அவசரமாக கணவனை பின்தொடர்ந்தார்.

அவரின் கோபத்தை கிளறிவிட்ட மேனகா, ‘இனி நம்ம தலையிட தேவையில்ல. இவரே இருவரையும் பிரித்துவிடுவார்’ தன்  திட்டம் வெற்றியடைந்ததை நினைத்து சிரித்தபடி காரில் ஏறிச்சென்றார்.

அடுத்த அரைமணிநேரத்தில் கார் வீட்டிற்குள் நுழைய பாரிஜாதம் வேகமாக வெளியே வந்து எட்டிப் பார்த்தார். சிவரத்தினம் முகம் கோபத்தில் கனலாக ஜொலிக்க கண்டு, “என்னங்க ஐயா இவ்வளவு கோபமா வரீங்க” என்று விசாரித்தாள்.

“அபூர்வாவைப் பார்க்க ஆதி வந்தனா?” என்று கேட்டதும் அவர் ஒப்புதலாக தலையசைக்க, “அப்போ நீ எங்கே கிளம்பி போன” என்று அவரின் மீதும் எரிந்து விழுந்தார்.

தாத்தாவின் குரல்கேட்டு எழுந்து வந்த அபூர்வா, “தாத்தா என்னாச்சு” என்ற பேத்தியின் குரல்கேட்டு கணவனை நகர்த்திவிட்டு வீட்டிற்குள்  நுழைந்த காமாட்சியின் பார்வை பேத்தியை அளவிட்டது. அவள் குளித்து உடை மாற்றி இருப்பது அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது.

மேனகா சொன்னபோது பேத்திக்கு வக்காலத்து வாங்கிய காமாட்சியின் நம்பிக்கை நொடியில் உடைத்தெறிந்த பேத்தியின் மீது கட்டுகடங்காத கோபம் வர, “ஏண்டி இப்படி பண்ணி மானத்தை வாங்கற” என்று சொல்லி பேத்தியை பளார் என்று அறைந்துவிட்டார். ஒரு நிமிடம் அவள் இருந்த நிலையைப்பற்றி அவர் யோசிக்க மறந்தார்.

இடதுகரத்தில் கன்னத்தில் கைவைத்தபடி நிமிர்ந்த அபூர்வாவின் கண்கள் கலங்கியிருந்தது. அவள் உதடுகள் துடிக்க நின்றிருந்த கோலத்தைக் கண்டு பேத்தியை வந்து அணைத்துக் கொண்ட சிவரத்தினம், “காமாட்சி” என்று மனைவியை அதட்டினார்.

“சும்மா நிறுத்துங்க சின்ன வயதில் இருந்து நீங்க அவளுக்கு கொடுத்த செல்லம்தான் எல்லாத்துக்கு காரணம்” என்று கணவனிடம் சண்டையிட்டவரின் அருகே சென்றவள், “பாட்டி ஏன் மேல் என்ன கோபம்” என்றாள் புரியாத பாவனையோடு.

அதில் அவரின் கோபம் உச்சிக்கு ஏறிவிட, “ஆதியோட சித்தி வந்து தாத்தாவை என்ன கேட்டான்னு தெரியுமா” என்றவர் நடந்ததை அவளிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்து பேத்தியை அடிக்க கை ஓங்கிட சிவரத்தினம் பேத்தியை காப்பாற்ற வந்தார்.

“நான் இருக்கும் நிலையில் எப்படி முடியும்னு கொஞ்சம் கூட நீங்க யோசிக்கல இல்லல்ல” என்றபிறகே காமாட்சி தன் தவறை உணர்ந்தார்.

அவள் வெடித்து அழுக  தான் அவசரப்பட்டு அடித்தது நினைவு வரவே, “என்னை மன்னிச்சிடு செல்லம்” என்று பேத்தியை இழுத்து மார்புடன் அணைத்து கொண்டார் காமாட்சி.

“உங்க தாத்தா யாரிடமும் தலைகுனிந்து நின்று நான் பார்த்து இல்லடா. ஆனால் அவரை இன்னைக்கு அவள் பேசிய பேச்சு” என்றவர் கண்ணீரோடு பேத்திக்கு தன் நிலையை உணர்த்தினார்.

சிறிதுநேரம் அமைதியாக இருந்த அபூர்வா ஆதி வந்ததில் இருந்து செல்லும் வரை நடந்ததை விவரமாக கூற பெரியவர்கள் மனம் நிம்மதியடைந்தது. சிவரத்தினம் மடியில் சின்னவள் படுத்துக்கொள்ள மெல்ல அவரின் கூந்தலை வருடிவிட்டவரின் மனதில் யோசனை படர்ந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் இயல்பாக கழிந்துவிட அரையாண்டு தேர்வு  எழுத அன்று ஸ்கூலுக்கு கிளம்பினாள் அபூர்வா.

அவள் ஸ்கூல் கிளம்பிய பிறகு நிதானமாக யோசித்தவருக்கு மேனகாவின் மீது கேஸ் கொடுக்க எந்தவிதமான காரணமும் கிடைக்காமல் போனது. ஆனால் இன்றைய நிலை நீடித்தால் கண்டிப்பாக தன் பேத்தியை அவளின் பேச்சு கொன்றுவிடும் என்று உணர்ந்தவர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தார்.