Ila Manasai thoondivittu poravare 11

Ila Manasai thoondivittu poravare 11

3263

அத்தியாயம் 11

சுள்ளென சுட்டெரிக்கும் சூரியன், கொஞ்சமாக சாந்தம் அடைந்திருந்த மாலை வேளை,

“ஏ புள்ள சுப்பு. உன்ன பார்க்க ஆள் வந்துருக்கு” என ஓடி வந்தார் பவுனு.

ஸ்டோர் ரூமில் விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த சுப்புவின் முகம் பூவாய் மலர்ந்தது.

“ஆத்தா!” வாய் ஆசையாக முணுமுணுத்தது.

“ஆத்தா இல்ல புள்ள. உன் ஒன்னு விட்ட மாமனாம். பேரு கூட மாயாண்டின்னு சொன்னாரு”

“மாயன் மாமா வந்துருக்காரா? ஆத்தா வரலியா?” குரலில் ஏகப்பட்ட வருத்தம். வெளியே வர எழுந்தவளை,

“நீ எங்கன வர புள்ள? அக்கா சொல்லிருக்குல்ல ஆம்பளைங்க மொகத்தப் பார்க்க கூடாதுன்னு! உள்ளாறயே உட்காரு. அக்கா பேசிட்டு இருக்கு. இப்போ வந்துரும்” என அதட்டி அமரவைத்தார்.

வெளியே, மாயாண்டியுடன் முனியனும் நின்றிருந்தான்.

“சுப்பு ஆத்தாக்காரி வரலியா அண்ணே?”

பட்டுதான் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அழைத்து போக அவர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்புடன் இவர் இருக்க, கையில் தட்டுடன் மாயாண்டி மட்டும் வந்து நின்றது கோபத்தைக் கிளப்பி இருந்தது பட்டுவுக்கு.

“என்ன தங்கச்சி செய்யறது, ஊரெல்லாம் விஷ காய்ச்சல் சுழண்டு அடிச்சுட்டு இருக்கும்மா. எஸ்டேட்டுக்குள்ள வரதுக்கோ, வெளிய போறதுக்கோ தடை போட்டுட்டாங்க. புள்ள குத்த வச்சிட்டான்னு கேள்வி படவும் இவளுக ரெண்டு பேரும் கண்ண கசக்கிட்டு நிக்கறாளுக. அதான் ஊர் கட்டுப்பாட்ட மீறி நான் மட்டும் ஓடியாந்தேன்”

விஷ காய்ச்சல் எனவும், சட்டென தூரமாக நகர்ந்து நின்றுக் கொண்டார் பட்டு.

“அதான் மாமன் சீரா சீலையும், பூவும் , பழமும் கொண்டு வந்தேன். எடுத்துக்க தாயி. புள்ளைக்கு உன் கையால கட்டி அழகு பாரு. ஊருல எல்லாம் நல்லா ஆனதும் நாங்க வந்து சுப்பு புள்ளைய கூட்டிக்கறோம். அது வரைக்கும் பார்த்துக்க ஆத்தா” என தட்டை நீட்டினார்.

முன்னே வந்து தட்டை வாங்கிக் கொண்ட பட்டு, மீண்டும் தூரமாக போய் நின்றுக் கொண்டார்.

“நிலவரம் சரியாக இன்னும் எம்புட்டு நாளாகும் அண்ணே?”

“அது யாருக்கு தெரியும்? எல்லாம் ஆண்டவன் விட்ட வழி. இந்தாம்மா இந்த பையையும் எடுத்துக்க. வூட்டுக்கு போட்டுக்க மாத்து துணி குடுத்து அனுப்புனா அன்னம்” கையில் இருந்த மஞ்சள் பையை நீட்டினார். பட்டு வாங்கிக் கொண்டார்.

அந்த நேரம் தான் எட்வர்டின் ஜீப் உள்ளே நுழைந்தது.

வாசலில் இவர்களைப் பார்த்ததும் தயங்கி நின்றான் அவன். பின்னால் வந்த பரசு,

“யாரு புள்ள இது?” என கேட்டான்.

“சுப்புவோட ஒன்னு விட்ட மாமனாம். சீர் குடுத்துட்டு போக வந்துருக்காரு”

“அப்போ கூட்டிட்டு போகலியா?” இதை கேட்டது சாட்சாத் எட்வர்ட் தான்.

“இல்லீங்க துரை. ஊருல விஷ காய்ச்சலாம். யாரும் ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்”

அவ்வளவு சோகம் பட்டுவின் குரலில்.

“ஓ!” அவ்வளவுதான் அவனின் பதில். உள்ளே சென்று விட்டான்.

“அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன் தாயி. சத்தான ஆகாரமா குடும்மா புள்ளைக்கு” மாயாண்டியும் கிளம்பிவிட்டார். அவர் பின்னாலேயே முனியனும் கிளம்பி விட்டான்.

“என்னா புள்ள நம்ம ஒன்னு நினைச்சா ஆண்டவன் ஒன்ன நினைக்கிறான்!” பரசு குசுகுசுவென கேட்டான் பட்டுவிடம்.

“தலை எழுத்துன்னு ஒன்ன, பொறந்தப்பவே ஆண்டவன் எழுதிருப்பான். நீயும் நானும் ஆடுனாலும் ஓடுனாலும், அவ தலையில என்ன  எழுதி இருக்கானோ அது தான் நடக்கும். போய் சோலிய பாரு மாமோய்”

தட்டையும், பையையும் எடுத்துக் கொண்டு பங்களாவினுள் நுழைந்தார். டீ கலந்து எட்வர்டுக்கு கொடுத்தவர், பவுனுவும் சுப்புவும் இருந்த ஸ்டோர் ரூமுக்குள் பிரவேசித்தார்.

அவர் நுழைந்தவுடனே பிடித்துக் கொண்டாள் சுப்பு.

“அக்கா, ஆத்தா ஏன் என்னை கூட்டிப் போக வரல?” கேட்பதற்குள் உதடு துடிக்க அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

பட்டு விஷயத்தை சொல்லி முடித்தும், இன்னும் தேம்பியவாறே இருந்தாள் சுப்பு.

“அழாத புள்ள. இந்த மாதிரி நேரத்துல அழக்கூடாது. தோ பாரு, உன் மாமன் சீலை வாங்கி குடுத்துருக்காரு. எம்புட்டு அழகா இருக்கு பாரேன். உன் நிறத்துக்கு ஏத்த மாதிரி கடல் நீலத்துல இருக்கு” அவளைத் திசை திருப்ப முயன்றார் பவுனு.

“ஒன்னும் வேணாம்! எனக்கு ஆத்தாதான் வேணும். எங்க ஆத்தாவ கட்டிப் புடிச்சு தூங்கற மாதிரி இந்த சீலைய கட்டிப் புடிச்சு தூங்க முடியுமா? ஆத்தா வேணும்!” மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அழுதாள்.

“மூச்! வாய மூடு புள்ள! இதுக்கு மேல பொலம்புன கொமட்டுலயே குத்துவேன்” பட்டுவின் மிரட்டல் வேலை செய்தது. தேம்பல் மெல்லிய விசும்பலாக மாறியது.

“யக்கா, இந்த புள்ள வயசுக்கு வந்ததும் கலர் கொஞ்சம் கூடி போன மாதிரி இல்ல. தோலு வேற மினிமினுங்குது” அதிசயித்தார் பவுனு.

“பன்னிக்குட்டி கூட வயசுக்கு வந்தா மினுமினுனுதான் இருக்கும்” நொடித்துக் கொண்டார் பட்டு.

நாளுக்கு நாள் மெருகேறும் சுப்புவின் அழகில் பயம் அப்பியது அவருக்கு.

“போங்கக்கா! நான் பொறந்தப்போ மாநிறமா நல்லா கொளு கொளுன்னு இருப்பேனாம். அதுக்கப்புறம் வெயில்லயே அலைஞ்சி கொஞ்சமா கருத்துட்டேன். இங்கன தான் வூட்டுக்குள்ளயே கிடக்கேன்ல, அதான் வெளுத்துருப்பேன்” விசும்பிக் கொண்டே கதையளந்தாள் அவள்.

“ஆமாடி, நீ பேரழகி ஆகிதான் கோட்டைய புடிச்சு கொடிய நாட்டப் போற. அடுப்படியில வேகற நமக்கு அழகு என்னத்துக்குடி? சோறு ஆக்க தெரிஞ்சா பத்தாதா?” கேட்டார் பட்டு.

“சோறு ஆக்க தெரியுதோ இல்லையோ, இப்ப எனக்கு ஆத்தா வேணும்” மீண்டும் ஆரம்பித்தாள் அவள்.  

“உங்க ஆத்தாவ இந்த பவுனுதான் மடியில கட்டி வச்சிருக்கா! இன்னும் கொஞ்ச நேரத்துல வெளிய அவுத்து விடுவா, புடிச்சுக்க! எவடி இவ, கூறுகெட்ட கூவையா இருக்கா! நீ வாடி பவுனு, கிளம்பலாம். சோறு வடிக்கனும்” கிளம்பி விட்டார்கள் இருவரும்.

வெளி ஹாலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த எட்வர்டுக்கு அவர்கள் பேசியது எல்லாம் மிக நன்றாக கேட்டது. அமைதியாக அருந்தியவன், கணக்கு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தான்.

இரவு சுப்பு தூங்கும் வரை காத்திருந்த எட்வர்ட், அடுப்படிக்குள் நுழைந்தான். முகத்தில் கண்ணீர் கரையுடன், சீராக மாமன் கொடுத்த சேலையை அணைத்தவாறு படுத்திருந்தாள் சுப்பு. அருகில் சென்று சத்தம் செய்யாமல் அமர்ந்தவன், அவளையே பார்த்தப்படி இருந்தான்.

படக்கென கண்ணைத் திறந்தவள், அவனைப் பார்த்ததும் புன்னகைத்தவறே எழுந்து அமர்ந்தாள்.

“நான் பக்கத்துல இருக்கேன்னு எப்படி தெரியும் ப்ளேக்கி?”

“உங்க மேல உள்ள வாசம் தான். நீங்க பாவிக்கற புட்டா மாவு(பவுடர்) எவ்வளவு வாசம் தெரியுமா துரை! நீங்க அங்க நிக்கறப்போ இங்க வாசம் வரும்” அனுபவித்து சொன்னாள் சுப்பு.

இவ்வளவு நேரம் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் மெல்ல வடிந்தது எட்வர்டுக்கு.

“உனக்கும் வேணுமா ப்ளேக்கி?”

“ஐயய்யோ வேணாம் துரை. எனக்கு இருக்கற வாசமே போதும். ரொம்ப வாசமா இருந்தா பூச்சி பொட்டு கடிச்சிரும்” அவசரமாக மறுத்தாள்.

அவள் தலையாட்டி அவசரமாக மறுத்த செய்கையில் வாய் விட்டு சிரித்தான் எட்வர்ட். சிரிக்கும் போது தெரிந்த அவன் கன்னக் குழியைத் தொட உயர்ந்த கரங்களை மடக்கி மடியில் வைத்துக் கொண்டாள் சுப்பு.

“இனிமே நீங்க இப்படி சிரிக்க வேணாம் துரை” கோபமாக கூறினாள்.

“ஏன் ப்ளேக்கி? நான் சிரிச்சா உனக்கு என்ன கஸ்டமா இருக்கு?” ஆச்சரியமாக கேட்டான் அவன்.

“கஸ்டமா தான் இருக்கு. நீங்க சிரிக்கறப்போ, இந்த குழிய தொட்டுப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு. துரைதான் விட மாட்டிக்கறீங்களே!” அவன் கன்னத்தருகே ஆட்காட்டி விரலை கொண்டு போனவள், தொடாமல் அப்படியே விரலை வைத்திருந்தாள்.

முகத்தை சிரிப்பது போல வைத்துக் கொண்ட எட்வர்ட், தானாகவே அவள் விரலில் தன் கன்னக் குழியை மோதினான். பின் சட்டென முகத்தை நகர்த்திக் கொண்டான்.

“இப்போ சந்தோஷமா ப்ளேக்கி?” என அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

“ஐ, நான் கன்னக் குழிய தொட்டுட்டேன். தேங்சூ துரை” குதூகலமானாள் சுப்பு.

“இப்போ சோகம் எல்லாம் பறந்து போச்சா? இல்ல இன்னும் அழுவியா?”

“சோகமா தான் இருக்கு துரை. ஆத்தா கையால சாப்புடனும், அது களியா இருந்தாலும் பரவாயில்ல. சின்னாத்தா கையில கிள்ளு வாங்கனும், வலிச்சாலும் பரவாயில்ல. தங்கச்சிங்க கூட விளையாடனும், களைச்சாலும் பரவாயில்ல” குரல் கம்மியது.

இன்னும் அவளை நெருங்கி அமர்ந்தான் எட்வர்ட். இரு கைகளாலும் அவளின் கன்னக் கதுப்புகளை மென்மையாக வருடிக் கொடுத்தான். அவனின் ஆதரவான செயலில் இன்னும் கண் கலங்கியது அவளுக்கு.

“ஸ்ஸ்ஸ் ப்ளேக்கி. அழக்கூடாது. சீக்கிரம் எல்லாம் சரியா போயிரும், போக வைப்பேன்!” அவன் குரலில் இருந்த உறுதி அவளுக்குப் புரியவில்லை.

அவளை தன் மடியில் மெல்ல சாய்த்து தட்டிக் கொடுத்தான். அவனின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தேம்பியவள் அப்படியே கண்ணயர்ந்தாள். விடிய விடிய சுப்புவை அப்படியே மடி சாய்த்து அமர்ந்திருந்தான் எட்வர்ட்.

மறுநாள் மூன்று நாள் ஆகியிருக்க, பட்டுவே சுப்புவுக்கு மஞ்சள் நீர் ஊற்றி தீட்டுக் கழித்தார். முகத்துக்கு மஞ்சள் இட்டு, பெரிய பொட்டிட்டு, கன்னத்திலும் திருஷ்டி பொட்டு வைத்து, சேலையை அவள் உடம்பில் சுற்றி இருந்தார் பட்டு. பார்க்கவே பெரிய மனுஷி போல பாந்தமாக இருந்தாள் சுப்பு.

“இன்னிக்கு ஒரு நாள் சேலையில இரு புள்ள. உங்காத்தா குடுத்து விட்டுருக்கற பாவாடை தாவணிய நாளையில இருந்து போட்டுக்கலாம்.”

“அக்கா இத சுத்திக்கிட்டு கஸ்டமா இருக்குக்கா. வேகமா நடக்க முடில.”

“எதுக்கு வேகமா நடக்கனும்ங்கறேன்? இனிமே நிலம் பார்த்து மெதுவா நடந்து பழகு. ஓட்டமா ஓடறதெல்லாம் இன்னியோட நிறுத்திப்புடு சொல்லிட்டேன்.”

‘எந்த கோட்டைய புடிக்க இந்த ஓட்டம்னு தெரியல. யாருக்கு தெரியும் கொலுசு வாங்கி குடுத்த மவராசன், கோட்டையையும் வாங்கி குடுப்பாரா இருக்கும்’ மெல்ல முனகிக் கொண்டார் பட்டு.

“சரிக்கா”

“துரை கிட்ட முன்ன மாதிரி தத்து பித்துன்னு பேசாம, அவரு கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு வந்துரனும். சும்மா முன்னாடி முன்னாடி போய் நிக்க கூடாது. புரியுதா புள்ள?”

“சரிக்கா”

சேலை முந்தானையை எடுத்து கையில் வத்து விளையாடிக் கொண்டிருந்தவள் கையிலேயே ஒன்று போட்டார் பட்டு.

“மாராப்ப மூடு புள்ள!” முந்தியை இழுத்து அவள் இடுப்பில் சொறுகினார் பட்டு.

“கூசுதுக்கா” நெளிந்தாள் சுப்பு.

“கூசும் கூசும்! அத தான் நானும் சொல்ல வரேன். யார் கையும் உன் மேல பட விடக்கூடாது. முக்கியமா ஆம்புளைங்க கை. புரியுதா?” தாயாக சொல்லிக் கொடுத்தார்.

“சரிக்கா”  

“இப்போ நான் உனக்கு சொல்லிக் குடுத்தத எல்லாம் வெளிய யாருக்கும் சொல்லக்கூடாது”

“வெளிய யாருக்கும் சொல்ல மாட்டேன்கா. துரைக்கு மட்டும் சொல்லவா? அவரு வீட்டு உள்ள தானே இருக்காரு”

“அடியே கேணை கிறுக்கி! உன் நல்லதுக்கு சொன்னா, என்னை ஆத்துல எறக்க வழி பாக்குறியா?” வஞ்சகமில்லாமல் கொட்டு கிடைத்தது.

அவள் மேல் கோபம் வந்தாலும் இழுத்துப் பிடிக்க முடியவில்லை பட்டுவினால். எட்வர்ட் கொடுத்த லட்டுக்களை தன் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்த அவளின் குணம் வேறு யாருக்கு வரும்.

அன்றிலிருந்து ஸ்டோர் ரூம் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது. இரவு எப்பொழுதும் போல டீ தட்டை தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் சுப்பு.

சேலை கட்டி, ஒற்றை ஜடையில் கனகாம்பர பூ வைத்து, கொலுசு சப்திக்க அன்ன நடையிட்டு வந்தவளை ஆச்சரியமாகப் பார்த்தான் எட்வர்ட்.

“என்னாச்சு ப்ளேக்கி? காலுல இருந்த சக்கரத்த கலட்டி வச்சிட்டியா? இவ்வளவு மெதுவா வர” கிண்டலாக கேட்டான்.

“அதுவா துரை, இந்த சீலைல எனக்கு நடக்க தெரியல. அதோட நிலம் பார்த்து மெதுவா நடக்கனும்னு…” உதட்டைக் கடித்து வார்த்தைகளை நிறுத்தினாள் சுப்பு.

“நடக்கனும்னு?” கேட்டான் எட்வர்ட்.

“ஒன்னும் இல்ல துரை.”

தலையைக் குனிந்தவாறே டீயை ஊற்றிக் கொடுத்தாள்.

அமைதியாகவே அவள் செயல்களைப் பார்த்திருந்தான் எட்வர்ட். டீயை ஊற்றிக் கொடுத்துவிட்டு எழுந்துக் கொண்டாள் சுப்பு.

“நான் உள்ளுக்குப் போறேன் துரை”

“நில்லு ப்ளேக்கி!” குரலில் சிறிது கோபம் எட்டிப்பார்த்தது.

“எதுக்கு இப்ப உள்ளுக்குப் போற?”

“உங்க முன்னுக்கு வந்து சும்மா சும்மா நிக்கக் கூடாதுன்னு…” மீண்டும் உதட்டைக் கடித்து வார்த்தைகளை நிறுத்தி திரு திருவென முழித்தாள் சுப்பு. அவளின் திருதிருத்த முகத்தைப் பார்த்தவனுக்கு, கோபம் ஓடிப் போயிருந்தது.

“வா ப்ளேக்கி, இங்க வந்து உட்காரு” அவள் எப்பொழுதும் அமரும் அவன் காலடியைக் காட்டினான்.

உட்கார்ந்தவள், அவனை நிமிர்ந்து என்னவென பார்த்தாள்.

“உங்க அக்கா சொன்ன மாதிரி நீ மத்தவங்க கிட்ட மட்டும் நடந்துக்க ப்ளேக்கி. என் கிட்ட எப்பொழுதும் இருக்கற மாதிரியே இரு”

“அக்காதான் சொன்னாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும் துரை?” முட்டைக் கண்ணை விரித்துக் கேட்டாள் சுப்பு.

“இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் அவங்கள தவிர வேற யார் சொல்லிக் கொடுப்பாங்க! ” குரலில் எரிச்சல் இருந்தது.

“நீங்க ரொம்ப புத்திசாலி துரை. அதான் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்” சொன்னவள் கப்பென கையைக் கொண்டு வாயை மூடிக் கொண்டாள்.

கையால் வாயை மூடியவாறே,

“நான் தத்து பித்துன்னு பேசறனா துரை?” என கேட்டாள்.

அவள் வாயிலிருந்து கையை விலக்கியவன்,

“நீ இப்படி பேசறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால இப்படியே இரு ப்ளேக்கி” கரகரத்த குரலில் சொன்னான்.

“அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. அத செய்யாத இத செய்யாதன்னு, எனக்கு கஸ்டமா இருக்கு துரை. மூனு நாளுல, இத்தனை நாளா இருந்த பழக்கத்த மாத்துன்னா எப்படி மாத்தறது?” படபடவென பொரிந்தவள் அடுப்படிக்கு ஓடினாள். திரும்பி வரும் போது கையில் ஸ்ட்ரோபரி ஜாமும் அவள் டீ கப்பும் இருந்தது.

எப்பொழுதும் போல் அவன் அருகில் அமர்ந்து, டீயை ஊற்றிக் கொண்டாள். ஜாம் பாட்டிலில் விரலை விட்டு, அந்த விரலை வாயில் திணித்துக் கொண்டாள். கண்ணை மூடி ரசித்து அவள் சாப்பிடுவதைப் பார்த்தவனுக்கு முகத்தில் தானாக சிரிப்பு வந்து அமர்ந்துக் கொண்டது.

“ஐ மிஸ்ட் யூ ப்ளேக்கி!”

“துரை என்ன சொன்னீங்க?”

“சவுண்ட் வைன்னு சொன்னேன்”

“இல்லையே, சவுண்டுன்னு வார்த்தை வரவே இல்லையே”

“அதெல்லாம் கரெக்டா கண்டுபிடிச்சுக் கேளு”

ஈ என இளித்தவள், எழுந்து சென்று சவுண்ட் வைத்துவிட்டு வந்தாள்.

அன்று என்னவோ வீட்டு ஞாபகத்தில் உறக்கம் பிடிக்கவில்லை அவளுக்கு. புரண்டு புரண்டு படுத்தவள், எழுந்து அமர்ந்துக் கொண்டாள். ஹாலில் காற்றாடி போட்டு அமரலாம் என வந்தவள், அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த எட்வர்டைப் பார்த்தாள்.

“துரை, தூக்கம் வரலியா?”

அவளுக்கு பதில் அளிக்காமல் எதிர் கேள்வி கேட்டான் அவன்.

“நீ தூங்கலியா ப்ளேக்கி?”

“எனக்கு உறக்கம் பிடிக்கல இன்னிக்கு”

“சரி வா” அவளை அழைத்தவன், பியானோவை நோக்கி சென்றான். அங்கிருந்த நாற்காலியில் அவன் அமர, அவன் காலடியில் அவள் அமர்ந்தாள்.

விரல்களை சொடுக்கிட்டவன், பியானோ கட்டைகளின் மேல் இரு கையையும் வைத்தான். அதன் பின் லாவகமாக அவன் விரல்களில் இசை நீந்தி விளையாடியது. பீத்தோவனின் மூன்லைட் சொனாதா( Beethoven – Moonlight Sonata) அந்த பங்களா முழுவதும் நிறைந்து வழிந்தது. கண் மூடி இருக்க, விரல்கள் மட்டும் துள்ளி விளையாடியது. இசையில் அமிழ்ந்திருந்த எட்வர்ட், எத்தனை யுகம் கழித்து கண் திறந்தானோ தெரியாது. மனதில் அப்படி ஒரு நிம்மதி. குனிந்து சுப்புவைத் தேட, அவள் அவன் காலடியிலேயே சாய்ந்து சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

நிர்மலமான முகத்துடன் நிம்மதியாக தூங்கும் அவளை ஆசையாக பார்த்திருந்தான் எட்வர்ட். பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன், அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டான். தரையின் ஜில்லிப்பில் படுத்திருந்தவள், சூடான அவன் நெஞ்சில் நன்றாக ஒட்டிக் கொண்டாள். ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் முகத்தில், சிரிப்பு பெரிதாக மலர்ந்தது. அவள் படுக்கும் இடத்தில் அவளை கிடத்தியவன், இடுப்பு வரை போர்த்தி விட்டு, நெற்றியில் இதழ் பதித்து எழுந்தான்.

“குட் நைட் மை ஏஞ்சல்”

(தூண்டுவான்)

error: Content is protected !!