Un Viahigalil Vizhuntha Naatkalil – 12

முத்துவும் அவரது மனைவி மரகதமும் ஆனந்தின் அருகில் அமர்ந்திருக்க, எதிரே தவசியும் சங்கரியும் சுப்த்ராவுடன் அமர்ந்து ஐயர் கூறியவுடன் தட்டை மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்தனர்.

ஆனந்த் அவளுக்காக வாங்கியிருந்த ஒரு அழகிய நெக்லக்ஸை அவளுக்குக் கொடுக்க, ஜீவா இருவருக்கும் வாங்கியிருந்த மோதிரத்தை அவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னான்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, வாணி மட்டும் ஜீவாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதை ஜீவாவும் கவனிக்க , அனைவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த சமயம், வாணிக்கு கண்ணால் சைகை காட்டி விட்டு எழுந்து வீட்டின் பின் புறம் சென்றான்.

யமுனாவும் சுபியும் பார்க்காத போது அவளும் எழுந்து சென்றாள். பின் புறம் யாரும் இல்லை. கிணறைத் தாண்டி சென்று தோட்டத்தை அடைந்தாள். சுற்றிப் பார்க்க யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘ஒரு வேளை அவன் இங்கு வரவில்லையோ’ திரும்பிப் போக அவள் எத்தனிக்க, அங்கிருந்த மரத்தின் பின்னாலிருந்து வெளிவந்தான் ஜீவா.

சிறிது பயந்தவள் பின் சுதாரித்துக் கொண்டு , “ என்ன ஜீவா, இப்படி தனியா கூட்டிட்டு வந்துட்டீங்க? யாராவது பாத்தா பிரச்சனை ஆயிடப் போகுது , வாங்க போகலாம் “ இதைச் சொல்வதற்காகவே வந்தவள் போல திரும்பி நடக்க,

“ நில்லு இதயா .. உன்ன இந்தப் புடவைல நான் மட்டும் தனியா ரசிச்சுப் பார்க்கணும்னு தோணிச்சு அதான் வர சொன்னேன். “ அவள் போவதைப் பார்த்து ரசனையுடன் சொல்ல, அவளும் நின்றாள்.

நடந்து சென்று அவளை அடைந்தவன், அவளைத் தன் புறம் திருப்பினான். அவள் தலை குனிந்து நிற்க , அவளது தாடையைப் பற்றி முகத்தை நிமிர்த்தினான் .

அவள் முகத்தில் முன்பிருந்த அந்த மகிழ்ச்சி குறைவதாகத் தோன்றியது.

“ என்ன இதயா? ஏன் ஒரு மாதிரி இருக்க, இங்க வந்தது உனக்குப் பிடிக்கலனா வா போய்டலாம். “ அவளையும் இழுத்துக் கொண்டு நடந்தான்.

சற்று நின்றவள், “இல்லை ஜீவா, எனக்கு பயமா இருக்கு!” தயக்கமாகவே சொல்ல,

“ என்ன பயம்?!”

“ முன்னாடி எங்க வீட்டைப் பத்தி நெனச்சு மட்டும் தான் பயந்தேன், இப்போ உங்க வீட்டைப் பார்த்ததுக்கு அப்புறம் சுத்தமா எனக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போன மாதிரி இருக்கு.” வருத்தத்தினாள்.

“எதனால இந்த பயம் உனக்கு? எங்க அம்மா தங்கச்சிங்க எல்லாரும் நல்லா பேசலையா , அம்மா எதாச்சும் சொன்னாங்களா?”

“ ச்சே ச்சே அவங்க எல்லாம் நல்லாத் தான் பழகறாங்க, உங்க அம்மா தான் இந்த புடவையே கட்ட சொல்லிட்டு போனாங்க, ஆனா உங்க குடும்பம் , பணம் இதெல்லாம் பாத்து தான் பயமா இருக்கு,உங்க அளவு எங்களுக்கு வசதி இல்ல, உங்க அப்பா எப்படின்னு தெரில ஆனா அவரு இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரோனு தோனுச்சு “ மனதில் இருப்பதைக் கொட்டினாள்.

“ பணத்தை நான் எப்பவுமே பெருசா நினச்சது இல்ல இதயா, எங்க அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர் தான் ஆனா கண்டிப்பா நான் பேசி சம்மதிக்க வைப்பேன். நீ எதுக்கும் கவலைப் படாத டா.. எல்லாம் நல்லா நடக்கும். என் தங்கச்சி கல்யாணத்துக்கு அப்பறம் நான் எங்க அப்பா கிட்ட பேசிடுவேன் . நிச்சயமா என் பொண்டாட்டி நீ மட்டும் தான். அதுல மாற்றமே இல்ல..” அவள் கன்னத்தைப் பிடித்துக் கூற,

அவளது மனம் அவனை முழுமையாய் நம்பி சிறு தெளிவு பெற்றது.

மீண்டும் அவளை மேலிருந்து கீழ் வரை கண்களால் பருகினான். அவனது பார்வையின் வீச்சு தாளாமல் தலை குனிய ,

“ ப்ளீஸ் ஜீவா ..” இதயா சிணுங்க,

“ என்ன ப்ளீஸ்.. நான் என்ன பண்ணேன்..” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்க,

வேண்டுமென்றே அவன் செய்வதால் சிறிது எரிச்சலுற்றவள் ,

“ நீங்க ஒன்னும் பண்ணல.. எதுக்கு இங்க இருக்கணும், வாங்க போலாம்” இடுப்பில் கை வைத்துக் கொண்டு நிற்க,

அவள் எதிர்பாராத நேரத்தில் அவளைத் தூக்கிச் சென்று அங்கிருந்த மரத்தில் அவன் கட்டியிருந்த ஊஞ்சலில் அமர வைத்தான்.

அவன் தூக்கியதில் சிறிது அதிர்ந்தாலும் , அந்த ஊஞ்சலைக் கண்டதும் ஆச்சரிய மகிழ்ச்சி அவளிடம்!

“ வாவ்.. சூப்பரா இருக்கு ஜீவா…” அந்த கயிற்றில் கட்டி இருந்த சிறு மரப் பலகையில் அமர்ந்த வாறு ரசித்து அவனிடம் சொல்ல,

“ இது நான் சுபிக்கும் யமுனாக்கும் தான் செஞ்சு குடுத்தேன். அவங்க ரெண்டு பேரும் லீவ்ல இங்க வந்து விளையாடுவாங்க.. உனக்கும் இதைக் காட்டனும்னு தான் கூட்டிட்டு வந்தேன்.”

“ சோ ஸ்வீட் … லவ்…..” நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்த,

“ என்ன என்ன… என்ன சொல்ல வந்த ..”அவன் அவளைத் தூண்ட,

“ ஒண்ணுமில்ல…”

“சொல்லு சொல்லு “ அவளை வேகமாக ஊஞ்சலில் ஆட்ட,

அதற்குள் பின்னால் சத்தம் கேட்டது,

“ அண்ணா…. “ யமுனா தான் வந்து கொண்டிருந்தாள்.

உடனே ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் இதயா.

யமுனா அருகில் வந்து , “ கொஞ்சம் கேப் கிடைக்கக் கூடாதே… ம்ம்ம் சரி சரி வாங்க , அப்பா கூப்டறாரு “ அவசரப் படுத்த,

“ ஐயையோ.. என்ன ஆச்சு “ வாணி பதற,

அவள் பயத்தை உணர்ந்த யமுனா, வேண்டுமென்றே சீண்டினாள்.

“ ம்ம் ரெண்டு பேரும் இப்படி ஓரங்கட்டிடீங்கல்ல அதான் பாத்துட்டு என்னைப் போய் கூட்டிட்டு வர சொன்னாரு” ஜீவாவைப் பார்த்து கண்ணடிக்க ,

கையை உதறினாள் வாணி.

“ ஹே குட்டி பிசாசு அவ ஏற்கனவே பயந்து போயிருக்கா, ஏன் இன்னும் ஏத்தி விடற” அவள் தலையில் அடிக்க,

“ அட லூசு பொய்யா … ஏன் டி என்ன படுத்தற…” அவளைப் பிடித்துத் தள்ள,

“ சரி சரி .. சும்மா எல்லாம் சொல்லல, நிஜமாவே பெரியப்பா அண்ணா வ கூப்பிட்டாங்க , ஏதோ பேசனுமாம்.”

“ சரி வாங்க “ மூவரும் அங்கிருந்து சென்றனர்.

அங்கே அனைவரும் உணவருந்த தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஜீவாவைக் கண்டதும் , தவசி அவனுக்குச் சைகை காட்ட,

“ எல்லாரும் சாப்டுங்க , தம்பி எல்லாருக்கும் பரிமாறுப்பா “ பரிமாற நின்றவனிடம் சொல்லிவிட்டு ஜீவாவைத் தள்ளிக் கொண்டு சென்றார்.

தனியறைக்குச் சென்றதும் கதவைச் சாத்திவிட்டு அவனிடம் பேசினார்.

“ என்னப்பா என்ன விஷயம்? ஏன் பதட்டமா இருக்கீங்க?” ஜீவா பரபரப்பானான்.

“ ஒண்ணுமில்ல ஜீவா. எல்லாம் நல்ல விஷயம் தான். வரதனோட பையன் சேரனுக்கு நம்ம யமுனா வை ரொம்ப பிடிச்சுப் போச்சு. நிச்சயம் பண்ணக் கூட தயாரா இருக்கான். நான் தான் வீட்டுல பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். “ சற்று இடைவெளி விட,

“ ரொம்ப சந்தோஷமப்பா. நம்ம யம்முக்கும் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன். அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்பறம் சொல்லிக்கலாம் ப்பா. அதோட சித்திகிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். “ அவன் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிய,

இப்போது அந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னால், இவன் வேண்டாமென மறுக்கக் கூடும் என்று அறிந்து வரதன் கூறிய மற்றொரு விஷயத்தை சொல்லாமலே விட்டார். முதலில் அதைக் கூறத் தான் அவனைத் தனியாக அழைத்ததே!

அவனிடம் நீ திருமணம் செய்தால் தான் உன் தங்கைக்கும் மனம் ஆகும் என்று சொன்னால் , இந்த திருமணமே ஒரு வியாபாரம் என்று ஒதுக்கி விடக் கூடும். இந்த வரனை விட்டால், யமுனாவிற்கும் வேறு நல்ல இடம் கிடைக்காது. ஏனெனில் அவரது நண்பனின் குடும்பத்தைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். தெரியாத இடத்தில் பெண்ணைக் கொடுத்து விட்டு அவளின் நிலையை அறிய முடியாமல் இருப்பதை விட, நண்பனிடம் ஒப்படைப்பது அவருக்கு நிம்மதியாய் இருந்தது. வரதனுக்கும் அதே நினைப்பு இருக்கவே தான் தன் மகளுக்கு நண்பனின் மகனைக் கேட்டார்.

அதுவும் இல்லாமல் யமுனாவின்  திருமணம் எப்படியும் இன்னும் இரண்டு வருடம் கழித்துத் தான் நடத்தப் போகிறோம், அவளுக்கும் சேரனைப் பிடித்து விட்டால்,ஜீவாவும் சம்மதிப்பான் . எனவே  சற்று பொறுமையாகவே இதைப் பற்றி ஜீவாவிடம் கூறிக் கொள்ளலாம் என நினைத்தார்.

தம்பி மகளின் மனதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியவர், சொந்த மகனின் மனதைப் பற்றி யோசிக்காமல் விட்டார்.

ஜீவாவின் முகத்தில் இப்போது நிம்மதி இருந்தது. இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆனதை நினைத்து பூரித்து இருந்தான். அதைக் கெடுக்க அவர் விரும்பவில்லை.

ஜீவாவும் பின்பு சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு வந்து சேரன் குடும்பத்தையும் ஆனந்தின் குடும்பத்தையும் ஸ்பெஷலாக கவனித்தான்.

சேரனுக்கு ஏதோ சொல்லவேண்டும் போல இருந்ததால் , ஜீவாவை அழைத்துக் கேட்டான்.

“ உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா !”

“ சொல்லுங்க சேரன்” சிரித்த முகமாகவே கேட்டான்.

“ ஜீவா, எனக்கு உங்க தங்கை கிட்ட கொஞ்சம் பேசணும்” தயங்கி தயங்கி சொல்ல,

“ ம்ம் … அது…!” சற்று தயங்க,

“ எனக்கு அவங்க விருப்பம் தெரிஞ்சுக்கணும் , ஏன்னா பெரியவங்க என்ன வேணா முடிவு பண்ணலாம், அவங்களுக்கும் விருப்பம் இருக்கன்னு தெரிஞ்சுக்கணும். ஏன்னா ஆரம்பத்துலையே கேட்டுக்கறது நல்லது இல்லையா..” தெளிவாக அவன் பேசியது ஜீவாவைக் கவர்ந்தது.

“ எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு சேரன். கண்டிப்பா என் தங்கைக்கும் பிடிக்கும். நீங்க சீக்கிரம் சாப்ட்டுட்டு வாங்க , நான் அவ கிட்ட சொல்றேன்!”

ஆனந்த் எதிர்புறம் அமர்ந்திருக்க, அவனிடம் சென்றான்.

“ மாப்பிள நல்லா சாப்டு டா..!” ரெண்டு லட்டு அதிகமாக அவனுக்கு வைத்தான்.

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா, நாக்கைத் துருத்திக் காட்டி மிரட்ட,

“ போதும் மச்சான். “ பதறினான் ஆனந்த்.

“ ஏன் டா?”

“ உன் தங்கச்சி ஏற்கனவே என்ன சிக்ஸ் பேக் வை ன்னு சொல்லி டார்ச்சர் பண்றா. இதுல நீ லட்டா திணிச்சா நான் ஸ்கூல் பேக் மாதிரி ஆயிடுவேன்”  அவளைக் கண்டு பயந்த வாறே சொல்ல,

“ ஹா ஹா.. இப்போவே நீ ஹவுஸ் அர்ரெஸ்ட்டா… !” நக்கல் செய்தான் ஜீவன்.

“ ரொம்ப காலமா!!” வருத்தப் படுவதைப் போல பாவனை செய்ய,

“ அனுபவி டா…” சிரித்துக் கொண்டே சொல்ல,

“ உனக்கு அதே கதி கிடைக்க … இந்தா பிடி சாபம் “ அவன் கொடுத்த இரண்டு லட்டை திருப்பி அவனிடமே கொடுத்தான்.

“ என் ஆளு சாப்பாட்டு விஷயத்துல நோ ரெஸ்ட்ரிக்ஷன், அவளே குடுத்துருவா “ காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொல்ல,

“ ம்ம்ம் குடுத்து வெச்சவன் ..” பெரு மூச்சு விட்டான் சுபியைப் பார்த்துக் கொண்டு.

யமுனாவும் வாணியும் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வாணியை சற்று அதிகமாவே கவனித்தான் ஜீவா.

“ லட்டு .. “ ஜீவா வாணியைச் செல்லாமாக அழைக்க,

அதிர்ந்து அவனைப் பார்த்தனர் இருவருமே !

“ லட்டு வேணுமா ன்னு கேட்டேன் , அதுக்கு ஏன் ரெண்டு பேரும் இப்படி ரியாக்ஷன் குடுக்கறீங்க” இதயாவைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே சொல்ல,

“ நடத்து நடத்து …. பெரியப்பாக்கு விஷயம் தெரியற வரைக்கும் நீ ஜாலி மேன்.. அப்புறம் காலி மேன்..” யமுனா கிண்டல் செய்ய,

“ உன் வாய அடக்க தான் அங்க ஒருத்தருக்கு நல்லா சாப்பாடு போட்டு வளத்துட்டு வரேன்… உன்கிட்ட ஏதோ பேசணுமாம். சாப்ட்டு கெளம்பு… அப்போ பாக்கறேன் உன் வாய !”

“ அவர் வாயத் திறக்கறாரான்னு மொதல்ல பாக்கலாம் “ வாணி எடுத்துக் கொடுக்க,

தோழிக்கு சப்போர்ட் செய்யும் இதயாவை எதார்த்தமாக தன் உதட்டைத் தடவிய படியே பார்க்க,

அவளுக்குப் புறை ஏறியது.ஜீவா அவளின் தலையில் தட்டி  தண்ணீர் எடுத்துக் கொடுக்க, போதும் உண்டது என்று எழுந்து விட்டாள்.

‘சாரி சாரி “ என்று அவளின் பின்னால் ஜீவா செல்ல,

சேரனின் தாய் அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். வாணி அந்த நிமிடமே அவருக்கு எரிச்சலைக் கிளப்பியிருந்தாள்.

வீட்டுக்குப் போவதற்குள் அவளை அடக்கி வைக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.