IM 13

மயூரவள்ளியின் கண்களில் படும்படி விவேக் அவன் அறைக் கதவை பலத்த ஓசையுடன் மூடிவிட்டு உள்ளே சென்றான்.

ஏரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது எண்ணையை ஊற்றியது போலிருந்தது அவன் செயல்.

அதற்கு மேலும் மயூரி அங்கே நில்லாமல்

விஷ்ணுவின் பைக் அருகே சென்று தாங்க மாட்டாமல் கதறி அழ, அவள் தோள் தட்டி சமாதானம் செய்தான் அவள் நண்பன்!

அவள் அழுகை தொடர, ஆதரவாய் தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“வள்ளி இந்த பிரச்சனை எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்…அழாதே” என்பதை தவிர வேறு எதையும் சொன்னானில்லை!

“மனசுக்கு கஷ்டமா இருக்கு விஷ்ணு. அவனுக்கு முன்னமே எல்லாம் தெரியும் தானே டா! இப்ப வந்து என்னை விட தம்பி தான் முக்கியமான்னு கேட்டா என்ன அர்த்தம். எனக்கு யார் முக்கியமுன்னு அவனுக்கு தெரியாதா விஷ்ணு?”

பைக்கில் விஷ்ணுவுடன் தன் ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அறிவுரை எதுவும் சொல்லத் தோன்றவில்லை அவனுக்கு.

அமைதியாக அவள் புலம்பல்களை கேட்டுக் கொண்டிருந்தான்.

இன்று நடந்ததை அவனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அதை பற்றி அவளிடம் பேசத் தோன்றவுமில்லை.

கண்ணீர் கசிய தொடங்கிய கண்களை அவள் துடைத்துக் கொண்டது அவன் வாகனத்தின் கண்ணாடியில் தெரிந்தது.

‘இங்க இருந்திட்டு நாளைக்கு போயேன் வள்ளி!’

தன் உயிர்த்தோழி படும் அவஸ்தையை காண சகிக்காமல் வீட்டில் வைத்து சொல்லித் தான் பார்த்தான், ஆனால் அவள் கேட்கவில்லை.

“இல்ல என்னால் இனி இங்க இருக்க முடியாது!” என்று கூறியபடி கிளம்பிவிட்டு இப்போது விடாமல் நடந்து முடிந்தவற்றையே அவள் உதடுகள் பேசிக் கொண்டிருந்தது.

இன்பம் துன்பம் எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை, அதை மயூரியும் அறிவாள்.

ஆனால் அவளுக்கென்று விதித்த இந்த வாழ்வில் அவற்றின் சதவீதத்தில் சமநிலை இல்லாமல் வைத்திருக்கிறான் அவளை படைத்தவன்.

பெற்றோருடன் நிம்மதியாய் இருந்தாள், திடீரென்று ஒரு நாள் அது முடிவுக்கு வந்தது.

இப்போது விவேக்குடன் தன் எதிர்காலம் உறுதியாகிவிட்டது என்ற நிலையில் இப்படி ஒரு முறிவு. நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு. இந்த அளவுக்கு போக அவளும் ஒரு காரணமா, தெரியாமல் குழம்பினாள்.

இத்தனை நாளும் தன் பழைய விஷயங்களை பற்றி எண்ணிப் பார்க்காத மனம் இப்போது இந்த சோகத்துடன் சேர்த்து அந்த காயத்தையும் கீரி விட ஆரம்பித்தது.

மயூரியின் தந்தையும் விஷ்ணு விவேக்கின் தந்தையுமான கனகவேலும் கல்லூரி காலம் முதல் நண்பர்கள். உயிராய் பழகிய நண்பனின் பெயரை கூட மறந்து போகும் சில மானிட பிறவிகளுக்கு நடுவில், இவர்கள் இருவரும் கல்லூரியில் விதையாய் போட ஆரம்பித்த தங்கள் நட்பை காலப்போக்கில் ஆலமரமாய் வளர விட்டனர்.

ஒன்றாய் படித்து, வேலைக்காக இங்கே சென்னையில் அல்லோலப்பட்டு, ஒரே ஆபிஸில் வேலைக்கும் சேர்ந்து பின்னாளில் ஒரே இடத்தில் குடியேறும் அளவுக்கு வந்தனர்.

இந்த கதையெல்லாம் மயூரியிடம் அவள் பெற்றோர் சொன்னது. அடிக்கடி இந்த தலைப்பு வந்துவிடும் அவர்கள் வீட்டில், அதுவும் விஷ்ணுவும் இவளும் விவரம் புரியாத வயதில் போட்டுக் கொள்ளும் சண்டைக்கு பின் பெரும்பாலும் இந்த கதையை நியாபகமாய் அவளிடம் பேசிவிடுவார் மயூரியின் தந்தை.

“எங்களை மாதிரி நீங்க இரண்டு பேரும் பல வருஷம் நண்பர்களா இருக்கணும்ன இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தை பெரிசு பண்ணாம விடணும்”

அந்த வயதில் தந்தை பேசியது அவளுக்கு அநியாயமாய் பட்டிருக்கிறது. மற்ற அப்பாக்களை போல்

 ‘எப்படி என் பெண்ணை நீ கிண்டல் செய்யலாம்’ என்று கேட்க மாட்டேன் என்கிறாரே என்று தன் அன்னையிடம் புலம்பி  வைப்பாள் குட்டி மயூரி.

இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கிறாள், அப்பா செய்தது எத்தனை சரி என்று! விஷ்ணுவும் அவள் வாழ்க்கையில் இல்லையென்றால் இன்று தன் நிலை!

அவளின் நிலைக்கு சற்றும் குறையாமல் இருந்தது அமுதாவின் நிலை. அமுதாவை அவர் மனம் மாத்திரமில்லாமல் உடலும் பாடாய் படுத்தியது. அந்த வீட்டிற்குள் இருக்க அவருக்கும் பிடித்தமில்லை. விஷ்ணு இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க அன்றிரவே அவன் நண்பனின் வீட்டிற்கு சென்றுவிட்டான். பெண்களுக்கு அப்படி முடியுமா! கனகவேலிடம் தங்கள் தலைமகன் செய்த காரியத்தை சொல்லி அழ அமைதியாக கேட்டாரே ஒழிய அவனிடம் ஒரு கண்டனக் குரல் கூட எழுப்பவில்லை அவர்.

அந்த குறையும் சேர்ந்துக் கொண்டது அமுதாவுக்கு.

“உங்களுக்கு அவன்கிட்ட இதை பத்தி கேட்க கூட தோணலையா? என்ன தான் நினைச்சி வச்சியிருக்கான்னு கேளுங்களேன். இப்படி ஒரு பொண்ணு மனசை உடைச்சி போடுறது எத்தனை பெரிய பாவக் காரியம் தெரியுமா! என்னங்க, ஏன் அமைதியா இருக்கீங்க!”

“சொன்ன வாக்கை மதிக்கிறவனா இருந்தா சொல்லலாம். கல்யாணம் செய்ய நிச்சயித்த பொண்ணை வேணாம்னு சொல்ல இவனுக்கு என்ன உரிமை இருக்கு! இவன் கிட்ட இனி பேச போறதில்லை நான். வள்ளிக்கு வேற ஒரு வாழ்க்கையை அமைச்சு தரலாம் விடு. நீ கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காதே அமுதா!”

“அப்படியெல்லாம் என்னால விட முடியாதுங்க. நம்ம வள்ளி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும். அதை உங்களால் மட்டும் தான் நடத்தி காட்ட முடியும். ஏதாவது செய்ங்க”

மனைவியின் கண்ணீரை காண மனம் வலித்தது கனகவேலுக்கு.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அந்த வீடே மயான அமைதியை கொண்டிருந்தது. உணவு மேஜையின் மீது தலைவைத்து

படுத்திருந்தார் அமுதா, வழக்கமான காலை பரபரப்பு ஏதுமின்றி!

“அம்மா டிபன் ரெடியா? எனக்கு ஆபிசுக்கு லேட் ஆகுது”

குரல் யாருடையது என்று தெரிந்தாலும் தலைநிமிர்ந்து அவனை பார்க்கவில்லை அமுதா!

“அம்மா”

“டிபனெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு உடம்பு சரியில்லை அதனால் எதுவும் செய்யலை. வெளியே பார்த்துக்கோ!”

நிமிராமலே மூத்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அமுதா.

என்ன நினைத்தானோ விவேக் தன் தாயின் தோளில் கை வைத்தான்.

“அம்மா எனக்கு மட்டும் கஷ்டம் இல்லைன்னு நினைக்கிறீங்களா மா. யாருமே என்னை புரிஞ்சிக்கலைன்ன நான் என்ன தான் செய்றது!”

“நிறுத்து விவேக்! ஒரு பொறுப்பான ஆளா பேசு! என்ன டா புரிஞ்சுக்கணும்! யார் யாரை புரிஞ்சிக்கணும்! இத்தனை வருஷமா நம்ம வீட்டில் இருந்தாளே ஒரு அப்பாவி பொண்ணு அவளை நீ புரிஞ்சிகிட்டையா? இப்படி உன் செய்கையால் நோகடிச்சிட்டியே டா எங்க எல்லாரையும்!”

கனகவேலுக்ககு இத்தனை நாளும் அடங்கியிருந்த வெறுப்பு வெளிவர தொடங்கியது.

“நான் இந்த கல்யாணம் நடந்தே தீரணும்னு சொன்னா என்ன டா செய்வே! உன்னால என்னை மீறி என்ன செஞ்சிட முடியும்?”

“அப்பா அர்த்தமில்லாம பேசிகிட்டிருங்கீங்க. யாருக்காகவோ பார்த்துட்டு நீங்க பெத்த புள்ளையை விட்டு கொடுத்து பேசுறது நல்லா இருக்கா! இதுக்கு மேல் என் நேரத்தை இங்க உங்ககிட்ட வீணாக்க நான் விரும்பலை. கிளம்புறேன்!”

“நீ ஆரம்பிச்சி வச்ச இந்த பிரச்சனைக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ… விவேக்”

தந்தை கூப்பிட்டதை காதில் வாங்காமல் அவன் வண்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் என்ன செய்வது என்று அறியாமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“எப்ப டா வீட்டுக்கு வருவே? இது என்ன சத்திரமா சாவடியா, ஆளாளுக்கு வசதிப்படும் போது வந்து தங்கிட்டு போக? இத்தனை குழப்பம் நடந்திட்டிருக்கு நீ பாட்டுக்கு எங்கையோ போய் தங்கிகிட்டா என்ன டா அர்த்தம்! இன்னிக்கு மட்டும் நீ ஒழுங்கா வீடு வந்து சேரலை உன் சாமானெல்லாம் தூக்கி வெளியே போட்டிருவேன் பார்த்துக்கோ”

விஷ்ணுவுக்கு பேசும் வாய்ப்பே தராது அந்த போனில் கோபமாய் பேசி முடித்தார் அமுதா.

அவருக்கும் வெடித்து சிதற வேண்டும் யாரிடமாவது.

அன்னையின் மனநிலை புரிந்தவன் விஷ்ணு என்பதால் அதை தவறாகவும் எடுத்தானில்லை.

மயூரவள்ளிக்கு பகல் பொழுது முழுவதும் மருத்துவமனை பணிகள் மட்டுமே சிந்தனையில் நிரம்பியிருந்தன. அதனால் கொஞ்சம் தப்பித்தாள்.

ஆனால் இரவு படுக்கையில் வந்து விழுகையில் கட்டாயம் விவேக்கின் முகம் நினைவில் வரும்.

அவனிடம் பேசிப் பார்க்கலாமா என்ற எண்ணமும் அடிக்கடி தோன்றும். எல்லாவற்றையும் கடந்து அவள் உறங்குவது தான் அந்த நாளின் அவளுடைய பெரும் சாதனை.

அப்படி அவள் உறங்கிவிட்ட ஒரு இரவில் மூன்று ஜீவன்கள் அவளுக்காக உறக்கம் துறந்து, என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர்.

“அப்பா அண்ணன்கிட்ட பேசினா எல்லாம் சரியா வரும்னு எனக்கு தோணுது விஷ்ணு. ஆனா அப்பா தான் கோவப்படறார். நீ என்ன டா நினைக்கிற?”

“இப்ப அண்ணன் யார் பேச்சையும் கேட்குற முடிவில் இல்ல மா. அது எனக்கு நல்லா தெரியும். கொஞ்ச நாள் இதை ஆறப் போடுங்க. எங்கே போயிட போறாங்க இரண்டு பேரும்!”

“இவன் செஞ்சதை சாதாரணமா விடக்கூடாது விஷ்ணு! இப்படி ஒரு பிள்ளையை வளர்த்திருக்கேன்னு நினைச்சா எனக்கே கஷ்டமா இருக்கு டா! அவ மேல பாசமா மாறிட்டான்னு நினைச்சி தான் இந்த கல்யாணத்தை செய்யலாம்னு நினைச்சோம், இப்படி செஞ்சிட்டானே!”

அமுதா நிறுத்துவதை போலில்லை!

“அதையே நினைச்சிட்டு இருக்காதே மா! என்ன செய்யலாம்னு பார்க்கலாம்! இப்ப போய் படுக்க போங்க!”

அவன் சோபாவை விட்டு எழுந்த நேரம் வீட்டின் அழைப்பு மணி அடித்தது! மணி பதினொன்றுக்கும் மேல். விஷ்ணு போய் கதவை திறக்க விவேக் நின்றிருந்தான்.

இவன் அவனை பார்க்க, அவனோ தன் தம்பியை பார்க்க பிடிக்காதவன் போல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

தன் அண்ணன் உள்ளே வர வழி விட்டு நின்றவனை தாண்டி சென்றவன் வழக்கத்திற்கு மாறாக நிறைய தடுமாறினான்!

விஷ்ணுவிற்கு புரிந்தது, அதற்கான காரணம்!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவேலுக்கு எங்கிருந்து தான் அத்தனை ஆத்திரம் வந்ததோ, கோபமாய் எழுந்து வந்தார்.

“விவேக் குடிச்சிருக்கியா!”

தலைகுனிந்துக் கொண்டான் தப்பு செய்தவன்.

“கேட்குறேனில்ல” மகனின் சட்டை காலரை பிடித்தார். அவர் வழக்கத்தில் இல்லாதவற்றை இன்று செய்திட அமுதாவும் பதறியபடி எழுந்து அவர் அருகில் வந்தார்.

“என்னங்க கையை எடுங்க, என்னது இது!”

“சும்மா இரு அமுதா! விவேக் என்னை நேரா பாரு!”

“அப்பா அவன் குடிச்சிருக்கான், நீங்க பேசுறது எதுவும் அவனுக்கு இப்ப புரியப் போறதில்லை, விடுங்க”

விஷ்ணு தந்தைக்கும் அண்ணனுக்கும் நடுவில் வந்து அவர்களை விலக்கிவிட,

“நீ ஏன் டா எப்ப பார்த்தாலும் என் விஷயத்தில் தலையிடுறே! உன்னால தான் எனக்கு எல்லா பிரச்சனையும்!”

சொன்னவன் தம்பியை பிடித்து தள்ள, பதிலுக்கு விஷ்ணு அவனை அடிக்க, அந்த வீட்டில் அன்றிரவு சண்டைக்காட்சிக்கு பஞ்சமில்லாமல் போனது.