imk2

imk2

3(௩)

காதலும் மோதலும்

சென்னையில் இருந்த ‘சுதந்திரா பாரத்’ கட்சி வளாகம் அன்று அமளிதுமளியாகி கொண்டிருந்தது.

‘சுதந்திரா பாரத்’ கட்சி மற்ற தேசிய கட்சிகளை விடக் கொஞ்சம் அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்டத்திலும் நாட்டின் முன்னேற்றத்திலும் இந்தக் கட்சிக்கு அதிக பங்கு உண்டு. ஆனால் இன்றளவில் அதெல்லாம் பழம்பெரும் கதையாகிப் போனது. நாளடைவில் நாட்டின் வளர்ச்சிக்காக என்ற வார்த்தைகள் மாறி எல்லாம் கட்சியின் வளர்ச்சிக்காக என்றாகி விட இந்தக் கட்சி மட்டுமல்ல… தற்போது நம் தேசத்தில் செயல்படும் மற்ற ஏனைய கட்சிகளும் அப்படிதான்.

இப்போது சுதந்திரா பாரத் கட்சி வளாகத்தில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்திற்கும் களேபரமுத்திற்கும் காரணம் வர போகும் நாடாளுமன்ற தேர்தல்தான்!

மக்களவை உறுப்பினர் பதவிக்காக சுதந்திர பாரத் கட்சியின் சார்பாக தமிழகத்தில் நிற்போர் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது. அதில் பெரும்பாலும் முன்னே நின்ற அதே பழைய ஆட்கள்தான். அதாவது நாற்பது அம்பதை தொட்ட பழம்பெரும் முகங்கள். அத்தகையோரின் முக்கிய தகுதி பணம் மற்றும் ஆள் பலம். இது இரண்டும் இருந்தால் தேர்தலில் நிற்க போதுமானது. குறைந்தபட்ச தகுதி தராதரம் பார்க்காமல் காலில் விழுவது!

ஆனால் இந்த தகுதிகள் எல்லாம் இல்லாத ஒருவன் ஆச்சரியத்துக்கு இடமாய் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தான். இன்னும் கேட்டால் அவன் குடும்பத்தில் உள்ள யாரும் அரசியல் பிரமுகர்களும் கிடையாது. அப்படி இருக்க இவன் எப்படி பெயர் பட்டியலில்… தமிழகத்தின் சுதந்திர பாரத் கட்சியின் தலைவர் மனோகரனுக்கே அது ஆச்சரியம்தான். ஏனெனில் நேரடியாய் டெல்லி தலைமையில் இருந்து அவன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அவன்தான் வி வி கே. ஆதித்தியா! முப்பது வயதைக் கூட எட்டாத ஓர் இளம் அரிசியல்வாதி. அரசியல் வட்டாரத்தில் அவன் பெயர் ஆதித்தியா. வீட்டில் விக்ரம்… முழுப் பெயர் விக்ரமாதித்யா! அதாவது நமக்கு ஏற்கனவே அறிமுகமான விஷ்வா ஆதியின் புதல்வன்.

தன் கல்லூரி நாட்களில் இருந்தே அவனுக்கு அரசியலில் மிகுந்த ஈடுபாடு. சிறிது சிறுதாக கட்சிப்பணிகள் செய்ய தொடங்கியவன் தன் கல்லூரி படிப்பு முடிந்த பின் மும்முரமாய் அரசியலில் இறங்கினான். அவன் அம்மா ஆதிக்கு துளியும் இதில் உடன்பாடில்லை. இதனால் அம்மாவுக்கு மகனுக்கும் பூசல்கள் ஏற்பட அவன் தந்தை விஷ்வாதான் பல நேரங்களில் அவர்களுக்கு இடையில் சமாதான புறாவை பறக்கவிட்டு பிரச்சனையை முடித்து வைப்பார்.

இத்தகைய சூழ்நிலையில் அவன் கட்சியில் தொண்டன் என்ற நிலையிலிருந்து உயர்ந்து இளைஞர் அணி செயலாளர் பதவியை எட்டினான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று கட்சியின் வேட்பாளராக தேர்தலில் நிற்கும் தகுதியை பெற்றான் எனில் அது சாதாரணமாய் நடந்துவிடவில்லை. கிட்டதட்ட எட்டு வருட போராட்டத்திற்கு பின் அந்த இடத்தை அடைந்திருக்கிறான். ஆனால் அந்த நொடி அவனுக்கிருந்த சந்தோஷத்தை மொத்தமாய் துவம்சம் செய்தது, அப்போது வந்த அவனுடைய கைப்பேசி அழைப்பு!

எதிர்புறத்தில் அவன் தந்தை விஷ்வாதான் பேசினார். தமிழச்சிக்கு விபத்து என்ற செய்தியையும் மகாபலிபுரத்தில் அவள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை பெயரையும் தெரிவிக்க, அவனுக்கு தலையில் இடியே இறங்கியது. அதற்குப் பிறகு அவன் அங்கே ஒரு நொடி கூட நிற்கவில்லை. கட்சி வளாகத்திலிருந்து அவசரமாய் அவன் வெளியேற,

“ஆதி… உன்னை தலைவர் கூப்பிடிறாரு” என்று ஒருவன் பின்னோடு வந்து அழைத்தான்.

“நான் அவசரமா போகணும்… அப்புறம் வந்து பேசிக்கிறேன்” என்று விக்ரம் அங்கிருந்து விரைவாய் தன் பைக்கில் பறந்துவிட்டேன்.

அவன் கை கால்கள் அந்த பைக்கை இயக்கிக் கொண்டிருந்தாலும் அவன் மனமோ தமிழச்சிக்கு எதுவும் ஆகிவிட கூடாதே என்று தவித்து கொண்டிருந்தது.

இன்று அவளுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதனால் எல்லாம் அவள் மீது கொண்டுள்ள காதல் இல்லையென்று ஆகிவிடுமா?

பள்ளிப்பருவத்தில் உண்டான ஈர்ப்பு. அப்படியே ஈர்ப்பாக முடிந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அந்த உணர்வு காதல் என்ற படிநிலையை எட்டியது அவர்கள் சென்னையை விட்டு காஞ்சிபுரத்தில் குடிபெயர்ந்தபோது!

அவன் உள்ளம் அவளுக்காக ஏங்கிய நாட்கள்…. அந்த பிரிவு காதல் என்ற உணர்வை ஆழமாய் விதைக்க நண்பனை பார்க்கும் சாக்கில் காரணகாரியங்களே இல்லாமல் அடிக்கடி காஞ்சிபுரம் சென்றுவந்தான். அவளைப் பார்க்க வேண்டி!

அவன் எண்ணம் யாருக்கும் பிடிபடவில்லை எனினும் தமிழச்சிக்கு அவன் மனநிலையை ஒருவாறு புரிந்து போனது. அதுவும் கோவில் குடமுழுக்கு விழாவில் விஷ்வா புரிந்த காதல் லீலைகளில் இன்னும் தெளிவாய் அவன் மனதைப் புரிந்து கொண்டவள் பட்டென அவன் கரத்தை பிடித்து கூட்டத்தில் இருந்த ஒதுக்குப்புறமாய் இழுத்து வந்தாள்.

அவன் கிட்டத்தட்ட அவள் கைபிடிக்குள் பறந்து கொண்டிருந்தான். பரவச நிலையை அடைந்தான்.

ஆனால் அவன் எண்ணத்தை உடைப்பது போல் அவன் கரத்தை விடுத்துத் தள்ளி நின்றவள், “இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துகாதீங்கன்னு நான் உங்ககிட்ட பலமுறை சொல்லி இருக்கேன் இல்ல” கண்டிப்போடு சொல்ல,

“ஹ்ம்ம்… சொல்லி இருக்கே” என்று அவன் இயல்பாய் தோள்களை குலுக்கினான்.

“அப்புறம் ஏன்?”

“எனக்கு பிடிச்சிருக்கே… உன்கிட்ட இப்படி விளையாடறது” என்று சொல்லி அவன் விஷமமாய் புன்னகைத்தான்.

”எனக்கு பிடிக்கல” என்றவள் முகம் கோப நிலையில் இருந்து மாறவில்லை .

“பிடிக்கலைன்னா அப்புறம் எதுக்கு நீ என்னை தேடினே”

“உங்களை நான் தேடினேனா… அப்படின்னு யார் சொன்னது?”

“யாராச்சும் எதுக்கு? உன் கண்ணுதான் அப்பட்டமா சொல்லுது… நீ என்னை தேடினேன்னு”

“அய்யோடா! இப்படி வேற ஒரு நினைப்பா உங்களுக்கு… அப்படியெல்லாம் எல்லாம் இல்ல”

“அப்போ ஒத்துக்கமாட்ட”

“என்ன ஒத்துக்கணும்?”

“நீயும் என்னை லவ் பண்றேன்னு” என்றவன் அழுத்தமாய் கேட்க,

“ஐயோ! புரிஞ்சிக்கோங்க விக்ரம்…. நானும் உங்களை லவ் பண்ணல… நீங்களும் என்னை லவ் பண்ணல… இட்ஸ் ஜஸ்ட் ஹேன் இன்ஃபேக்சுவேஷன்“ என்று முடித்தாள்.

அவன் கடுப்பாய் அவளை பார்க்க அவளே மேலும், “உண்மையா சொல்லணும்னா நீங்க அந்த ஃபீலோட என்கிட்ட பழிகிறதால எனக்கும் தேவையில்லாம அந்த மாறி தாட்ஸ் வருது… எதிலையும் சரியா கான்சன்டிரேட் பண்ண முடியல… நான் ரொம்ப டிஸ்டர்ப்டா ஃபீல் பண்றேன்… ஆனா இதெல்லாம்… கொஞ்ச நாள் பார்க்காம பேசாம இருந்தா சரியாயிடும்” என்றாள்.

சில நொடிகள் அவன் யோசனையாய் அவளை பார்க்க அவள் மௌனமாய் ஏறிட்டாள். அவன் பெருமூச்செறிந்து, “ஓகே… நீ சொல்ற மாறிதான்னா… நான் இனிமே உன்னை பார்க்க வரல… அப்படியே பார்த்தாலும் பேச மாட்டேன்” என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் வேகமாய் அகன்றுவிட்டான். அவன் இப்படி உடனடியாய் அவள் கருத்தை ஏற்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்கான எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை. அப்படியே பார்த்தாலும் அவளிடம் பேசாமல் தவிர்த்துவிடுவான். இப்படியாக ஏழு வருடங்கள் முடிவுற்ற நிலையில், இருவருக்கும் அவரவர்கள் கனவு பின்னோடு ஓடுவதற்கே நேரம் சரியாக இருந்தது.

ஆனால் ஆச்சரியமாக ஒரு நாள் தமிழச்சி வீட்டிலிருந்தே திருமணத்திற்காக பேச வந்தனர். நடக்காது என அவனுக்கு அவனே தேற்றி கொண்ட விஷயம் அவன் எதிர்பாராமல் அரங்கேறியது.

இந்தச் சிந்தனைகளோடு பைக்கை ஒட்டி வந்தவன் மருத்துவமனை வாசலில் வந்து நின்றான். அங்கே தன் தந்தையும் தாயும் கவலை தோய்ந்த முகத்தோடு நின்று கொண்டிருப்பதை பார்த்தவன் நடந்த விவரங்களை விசாரிக்க அவன் மனமும் வேதனையில் உழன்றது.

“ஆன்டிக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று அவன் கேட்க,

“எதுவும் டாக்டர் நம்பிகையா சொல்லல… சீரியஸ் கண்டிஷன்தான்” அவர்கள் சொல்லும் போதே இருவரின் முகத்திலும் சொல்லவொண்ணா வலி நிறைந்தது.

அவன் பெருமூச்செறிந்து, “தமிழச்சி” என்று கேட்க அவர்கள் அவளிருந்த அறையை அவனிடம் காண்பித்தனர். பதறிக் கொண்டு அந்த அறைக்குள் அவன் நுழைய அவன் பார்த்த கட்சி அவன் இதயத்தை உலுக்கிவிட்டது. அவன் பார்த்து பார்த்து ரசித்து அவளின் முகம் முழுக்க கீறல்கள் காயங்கள். அதோடு அவள் வலது கரத்தில் அசைக்க முடியாதளவுக்கு பெரிதாய் கட்டு போடப்பட்டிருந்தது.

தமிழச்சி அப்போதுதான் மயக்கம் தெளிந்து எழுந்திருந்தாள். அப்படி எழுந்த நொடியிலிருந்து அவள் தன் தாயை எண்ணி கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க அப்போது விக்ரம், “தமிழச்சி” என்ற அழைப்போடு உள்நுழைந்தான். அந்தக் குரலை கேட்ட மாத்திரத்தில் அவள் முகம் கோபத்தை ஊற்றெடுத்தது.

அவள் மௌனமாய் அவன் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் தலைகவிழ்ந்தபடி அமர்ந்திருக்க அவள் தோளை ஆதரவாய் தொட்டவன், “என்ன தமிழச்சி நீ ? கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம் இல்ல” என்றான்.

அவள் அவன் கரத்தை தட்டிவிட்டு சீற்றமாய் நிமிர்ந்து,

“பார்த்து போயிருக்கலாமா… எப்படி? ரெண்டு கண்டைனர் லாரி… முன்னாடியும் பின்னாடியும்… எங்க காரை நடுவுல லாக் பண்ணிடுச்சு… கொஞ்சம் விட்டிருந்தா நானும் அம்மாவும் ஸ்மேஷ் ஆகியிருப்போம்… தெரியுமா?” என்றவள் கோபம் தெறிக்க கூற அவன்அதிர்ச்சியான பாவனையோடு, “அக்சிடன்டுன்னுதானே வெளிய அம்மா சொன்னாங்க” என்றான்.

“நான்தான் அப்படி சொன்னேன்… அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப டென்ஷனாகிடுவாரு” என்றாள்.

“யாருடி இப்படி பண்ணா ?” என்று அவன் குழப்பமாய் கேட்க,

“அதேதான் நானும் உன்னை கேட்கிறேன்” என்று அவனை சந்தேக பார்வை பார்த்தாள் அவள்!

“என்னை சந்தேகப்படுறியாடி?” என்றவன் கோபத்தோடும் வேதனையோடும் குரலைஉயர்த்த,

“கொஞ்சம் உன் மேலயும்தான் டௌட்” என்று அவள் உணர்வற்ற பார்வையோடு உரைத்தாள்.

“நான்சென்ஸ்… எல்லாம் போலீஸ் புத்தி… உன்னை இப்படியெல்லாம் யோசிக்க வைக்குது” என்றவன் உக்கிரமாய் அவளிடம் உரைக்க,

அவள் நிதானமாய் அவனை ஏறிட்டு, “ஏன்? உன்னோட அரசியல் புத்தி உன்னை இப்படியெல்லாம் செய்ய வைச்சிருக்கலாமே… ஹ்ம்ம்… நீதான் பதவிக்காக எதையும் செய்றவனாச்சே!” என்றாள்.

அவன் முகம் கடுகடுவென் மாற, “ச்சே ! உனக்கு என்னவோ எதோன்னு பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்தேன் பாரு… என்னை சொல்லணும்” என்று விரக்தியாய் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு அவன் வெளியே நடக்க,

“விக்ரம் ஒரு நிமிஷம்” என்று அழைத்தாள்.

“என்னடி?” என்றவன் கோபமாய் திரும்ப,

“அண்ணா எங்க இருக்கான்?” என்று கேட்டாள்.

அவன் முகம் சட்டென்று மாற அந்த மாறுதலை அவளிடம் காட்டி கொள்ளாமல், “என்னை கேட்டா?” என்றான் அலட்சியமாக!

“அப்போ உனக்கு தெரியாதா?” என்றவள் குழப்பமாக,

“தெரியாது” என்று அவன் ஒற்றை வார்த்தையில் முடித்தான்.

ஏனோ அவன் வார்த்தையில் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை.

“நீ பொய் சொல்ற விக்ரம்” என்றாள்.

“ஆமான்டி பொய்தான் சொல்றேன்… நீ போலீஸ்காரிதானே… முடிஞ்சா கண்டுப்புடிசிக்கோ” என்றான்.

“என்ன மாதிரி சூழ்நிலையில் இருக்கோம்… நீ என்னடான்னா இப்படி பேசிட்டு இருக்கே” என்றவள் கேட்கும் போது வீர் அறை வாசலில் வந்து நிற்க, விக்ரம் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

தமிழச்சி முகம் வாட அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள். வீர் அவள் தலையை தடவி கொடுக்க குற்றவுணர்வால் அவள் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.

*******

தமிழச்சி தன் இரண்டாவது முயற்சியில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியும் முடித்து வேலைக்குச் சேர இருந்த சமயம் வீரின் தந்தை மகேந்திரபூபதி, “உன் பொண்ணுதான் ஐபிஎஸ் முடிச்சிட்டா இல்ல… இப்பவாச்சும் நம்ம சொந்தத்தில ஒரு நல்ல பையனா பார்த்து அவ கல்யாணத்தை முடி” என்றார். பழுத்தபழமாய் இருந்தாலும் அவரிடத்தில் ஓர் முதிர்வோடு கூடிய கம்பீரம்.

“இப்பதானே ஜாயின் பண்ணி இருக்கா… அதுக்குள்ளயா?” என்று வீர் தந்தையின் வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியாக,

“மாமா சொல்றதும் சரிதான்” என்று செந்தமிழ் இடையில் பேசினார்.

“நீயுமா தமிழ்?!” என்று தன் மனைவியை வியப்பாய் பார்த்தவர்,

“புரிஞ்சிகோங்க வீர்… வயசாகுதுல்ல… எல்லாம் காலகாலத்தில பண்ணிடனும்” என்றார்.

“அப்படி பார்த்தா உன் பையனுக்குதான் வயசாகுது…. அவனுக்கு பண்ணு… ஊர் ஊரா… கோவில் கோவில்லா சுத்தி வந்துட்டு இருக்கான்” என்று அவர் சற்றே கோபமாய் சொல்ல தமிழும் சீற்றமானார்.

“ரொம்ப ஓவரா பேசாதீங்க… அவன் ஒண்ணும் வேலைவெட்டியில்லாம சுத்தல” என்றதும் வீர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

வீர் ஏதோ பேச ஆரம்பிக்கும் போதே இடையில் புகுந்த மகேந்திரன், “நீங்க இரண்டு பேரும் சண்டையை போடறதை நிறுத்திட்டு என் பேரன் பேத்தி ரெண்டு பேருக்கும் நல்ல வரனா பாத்து கல்யாணத்தை முடிங்க” என்று அவர் தெளிவாக சொல்ல,

“அதுக்குள்ள சிம்மாக்கு என்ன மாமா அவசரம்?” என்றார் தமிழ்!

“அப்போ என் பொண்ணுக்கும் மட்டும் அவசரமா பண்ணனுமா? நெவர்” என்று வீர் திட்டவட்டமாக மறுக்க, மகேந்திரன் தலையில் அடித்து கொண்டார். இவர்கள் சண்டை எப்போதுதான் ஓயுமோ? என்று!

தமிழ் அப்போது கணவனிடம், “எல்லா வீட்டிலையும் பொண்ணுக்குதான் முதல்ல வரன் பார்ப்பாங்க” என்க,

“எல்லா வீட்ல பண்றதையே ஏன் நம்ம வீட்லயும் பண்ணனும்… இங்க நம்ம பையனுக்கு முதல்ல பார்க்கலாம்” என்று வீர் விதண்டாவாதம் செய்ய,

“மாமா நீங்களாச்சும் உங்க புள்ளைக்கு சொல்லுங்க” என்று தமிழ் தன் மாமனாரை துணைக்கு அழைக்க அவருக்கு மகனை பற்றி நன்றாக தெரியும். வீர் யார் சொல்லியாவது கேட்கும் ரகமா?

இந்த எண்ணத்தோடு அவர், “இந்த விளையாட்டுக்கு நான் வரல… நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்லி தப்பித்து கொண்டார்.

வீர் தான் பிடித்து பிடியிலேயே நிற்க தமிழுக்கு அலுத்துப் போனது.

‘இந்த மனுஷனை கட்டிகிட்டு’ என்று தமிழ் வாய்க்குள் முனக,

வீர் தன் மனைவியை கூர்ந்து நோக்கி, “இப்ப என்ன சொன்ன?” என்று அழுத்தி கேட்டார்.

“நான் எதுவும் சொல்லல… ஆளை விடுங்க” என்று சொல்ல அப்போது எதேச்சையாக அங்கே வந்த தமிழச்சி, “என்னை டாபிக் போயிட்டு இருக்கு” என்று தானே வந்து தலையை கொடுத்தாள்.

“உனக்கு வரன் பார்க்கிறதை பத்திதான் பேசிட்டு இருக்கோம்” என்று மகேந்தரன் விஷயத்தை பளிச்சென்று உரைக்க தமிழச்சி அதிர்ந்து, “தாத்த்த்தா” என்று பல்லை கடித்தாள்.

“இப்ப ஏன் தாத்தாவை முறைக்கிற… இதெல்லாம் ஃப்யூச்சர்ல்ல நடக்க போறதுதானே!” என்றார் தமிழ்.

“நான் இன்னும் போஸ்டிங் ஆர்டர் கூட வாங்கல… அதுக்குள்ளயா?” என்றவள் தன் தந்தையை அதிர்ச்சியாய் பார்த்து, “இதுக்கு நீங்களும் உடந்தையா டேட்? ” என்று கோபம் கொண்டாள்.

“இல்லடா… நானும் ஒன் இயர் போகட்டும்தான் சொல்றேன்… உங்க அம்மாதான் அடம் பிடிக்கிற” என்று வீர் தன் மகளை சமாதானம் செய்தார்.

“இப்ப பார்க்க ஆரம்பிச்சா அது எப்படி இருந்தாலும் ஃபிக்ஸாக ஒன் இயர் ஆயிடும்ல… என்ன மாமா நான் சொல்றது” என்று தமிழ் தன் மாமனார் முகத்தை பார்க்க, “தமிழ் சொல்றது சரிதான்” என்றார் அவரும்!

தமிழச்சி வீரிடம் பார்வையாலேயே வேண்டாம் என மறுக்க அவர் மனைவியை முறைக்க, “இப்ப ஏன் முறைக்கிறீங்க… மாப்பிள்ளை பார்கிறேன்னுதானே சொன்னேன்… கல்யாணம் பண்ணி வைக்கிறேனா சொன்னேன்… எல்லாம் உங்க பொண்ணுக்கு ஏத்த நல்ல வரனா பார்க்க ஒரு வருஷமாயிடும்” என்றார்.

“அம்மா சொல்றதும்” என்று வீர் மகளிடம் பேச எத்தனிக்க, “நோ… மாப்பிளை எல்லாம் பார்க்க கூடாது” என்று அழுத்தமாய் உரைத்தாள்.

“ஏன்? நீ ஏற்கனவே யாரையாவது முடிவு பண்ணி வைச்சிருக்கியா?” என்று தமிழ் மகளை ஆழ்ந்து பார்த்து கேட்க, “தமிழ்” என்று வீர் ஆவேசமாய் கத்தினார்.

“நீங்க ஏன் இப்போ கத்திறீங்க… இந்த இடத்தில உங்க மகதானே கோபப்படணும்” என்று தமிழ் சொல்ல அப்போதே வீர் கவனித்தான். தன் மகளின் மௌனத்தை!

என்னதான் மகள் தந்தைக்கு நெருக்கமாயிருந்தாலும் அவள் ஆசைகளையும் எண்ணங்களையும் தாயால்தான் நன்குணர்ந்து கொள்ள முடியும்.

தமிழச்சி இன்னும் தன் மௌனத்தை கலைக்காமல் நிற்க, “எனக்கு அம்மா இல்லை… என் கல்யாணத்தில என் விருப்பத்தைக் கேட்க கூட ஆளில்ல…. ஆனா உனக்கு அப்படி இல்ல” என்று செந்தமிழ் மகளிடம் பரிவாய் சொல்லி கொண்டிருக்கும் போதே வீருக்கு கோபம் ஏகபோகமாய் ஏறியது.

அவர் விழகள் இடுங்க மனைவியை பார்க்க அப்போது தமிழச்சி முந்திக்கொண்டு, ”ஏன் அப்படி சொல்றீங்க… என் டேடுக்கு என்ன? அவர்தான் பெஸ்ட்… கேட்காமலே உங்களுக்கு இப்படி ஒருத்தர் கிடைச்சிருக்காரு… அதை வைச்சி பார்த்தா… நீங்க ரொம்ப லக்கி” என்றாள்.

வீர் தன் மீசையை நீவி கொண்டு மனைவியை பார்க்க, “அதென்னவோ உண்மைதான்… நான் சல்லடை போட்டு தேடினாலும் உங்க அப்பா மாறி ஒருத்தருக்கு கிடைச்சிருக்கவே மாட்டாரு” என்றார்.

வீர் புருவத்தை நெறித்தபடி தன் மகளின் காதோரம், “உங்க அம்மா என்னை பாராட்டிறால திட்டிறாலா?” என்று சந்தேகமாய் வினவ அவளும் தெரியாது என்பது போல் தோள்களை குலுக்க,

“பொண்ணுகிட்ட அப்புறமா ரகசியம் பேசிக்கலாம்… முதல்ல நான் கேட்டதுக்கு அவளை பதில் சொல்ல சொல்லுங்க வீர்” என்று அழுத்தி கேட்டார் செந்தமிழ்!

தமிழச்சி அந்த நொடியே தரையை பார்த்து யோசனையாய் நிற்க வீர் அவள் தோளை தொட்டு, “ஏன் பொண்ணுக்கு இப்படி எல்லாம் தலைகுனிஞ்சி பழக்கம் இல்லையே… இப்ப என்ன புதுசா?” என்று சொல்லவும் அவள் தந்தையை நிமிர்ந்து தவிப்பாய் பார்க்க, “சொல்லுடா” என்று கேட்டார்.

“ஆதிமாவோட சன்” என்றதும் வீர் அதிர்ச்சியாய் மகளை பார்க்க… செந்தமிழுக்கு அத்தகைய அதிர்ச்சி இல்லை.

அப்போது வீரின் தந்தை மகேந்திரன் அதிர்ச்சியாகி, “விக்ரமா?” என்று கேட்டார்.

“ஹ்ம்ம்” என்று தமிழச்சி தலையசைக்க,

“என்ன பேசுற?… நம்ம குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது… நம்ம குடும்பத்தோட பெருமை புகழெல்லாம் தெரிஞ்சி நீ எப்படி இப்படி” என்று அவர் தொடர்ச்சியாய் வசைபாட,

வீர் அவரை நிறுத்தி, “அப்பா ப்ளீஸ்… இது அவளோட விருப்பம் விட்டுருங்க” என்று ஒரே வார்த்தையில் முடித்தார். “தேங்க்ஸ் டேட்” என்று தமிழச்சி தந்தையை கட்டி கொள்ள செந்தமிழ் முகம் கோபமாய் மாறியது.

‘எல்லாத்தையும் பண்ணது நானு… தேங்க்ஸ் மட்டும் அவங்க அப்பாவுக்கு’ என்று உள்ளுர பொருமிக் கொண்டார். இது எப்போதும் நடப்பதுதான். செந்தமிழ் மகளுக்கு எது செய்தாலும் கடைசியில் ஸ்கோர் பண்ணிவிடுவது வீர்தான்.

வீர் தமிழச்சியின் விருப்பம் விக்ரம் என்று அறிந்த மறுகணமே அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதில் முனைப்பாய் ஈடுபட்டார். ஆதியும் விஷ்வாவும் கூட விக்ரமுக்கு சரியான வேலையில்லை என்று தயங்க, வீருக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. மகளின் விருப்பமே தலையாயதாக இருந்தது.

சொந்த பந்தம் என்று யாருடைய வார்த்தையும் வீர் காதில் போட்டுக் கொள்ளாமல் உறுதியாய் நின்று விக்ரம் தமிழச்சி திருமணத்தை முடித்து வைத்தார்.

அன்று அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது தான்! ஆனால் இன்று யோசிக்கும் போது அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவை தான் எடுத்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்ற அவள் மனம் குற்றவுணர்வில் ஆழ்ந்தது.

error: Content is protected !!