ishq wala love 3

ishq wala love 3

அத்தியாயம் 3:

         வாழ்க்கையை யுத்தம் என்று எடுத்துக் கொண்டால் , யுத்தத்தில் வெற்றிக்கான  வாய்ப்பு வருவதற்காக  காத்திருப்பவன் முட்டாள்… வாய்ப்புக்களை உருவாக்குபவனே புத்திசாலி.. ஹா ஹா ஹா.. நான் புத்திசாலி…! நான் வெற்றியாளனும் கூட..!

               – Yaar விக்ரம் மேத்தா

     தங்களது அலைப்பேசியில் வந்திருந்த எழிலைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கோப்பை பார்த்துக்கொண்டிருந்தனர் டாமும், விக்ரமும்..

      ‘பெயர் எழில்மதி ….நெகி..நெகி…ஷி இஸ் ஜெர்ரி’ விக்ரம்.

       உயரம் 5.2… அவளை தனது ஒரவிழிகளால் அளந்த டாம் ‘இந்த ரெண்டு அடி சாண்ட்ல்ஸ்சை கழட்டி வைச்சுட்டா அந்த உயரம் தான்..’

        நிறம் இண்டியன் வொயிட்… இதற்கு தலையை மொத்தமாக அவளை நோக்கி திருப்பிய விக்ரம் அவளது நிறத்தை ஆராய்ந்தான். ‘ம்ம்..கலப்பிடம் இல்லா பால் நிறம். தமிழர்களுக்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாத நிறம். இவளுடைய முன்னோர்களில் யாரோ ஒருவர் கண்டிப்பாக வட இந்திய கிராஸ் ஒவராக இருக்கனும்…’என்று தனக்குள் நினைத்தவாறே எழிலை பார்த்துக்கொண்டிருந்தான்.

                விக்ரம் எழில்மதியை குறுகுறுவென்று பார்க்கவும், ‘என்ன இவன் செயின் அக்குறவன் மாதிரியே பாக்குறான். சரி சிரிச்சுவைப்போம்.’ என்று நினைத்தவள் அவனை நோக்கி மெலிதாக சிரித்து வைத்தாள்.

            எழிலுக்கு இடதுபுறம் டாம் அமர்ந்திருந்ததால்,  அவளது சிறப்பான, ஒரே பார்வையில் அனைவரையும் வீழ்த்தக்கூடிய இடது கன்னக்குழி டாமை பார்த்து கண் சிமிட்டியது. அதில் சிறிது ஜெர்க் ஆனவன் தலையைக் குலுக்கி கொண்டு அலைப்பேசியில் கவனமானான்.

         வயது 32…’ஹோலி கிறிஸ்ட்.. இவளுக்கு முப்பத்திரண்டு வயசுன்னு யார்கிட்டாயவது சொன்னா என்னை தான் தொரத்தி தொரத்தி அடிப்பானுங்க.யுனிஃபார்ம் போட்டு ஹை ஸ்கூலுக்கு கூட அனுப்பலாம். கேள்வி கேட்காம நம்புவானுங்க’  அவளது உயரம் மட்டுமில்லாது அவளது குழந்தை தனமான முகமும் அவளது வயதை மிகவும் குறைத்து காட்டுவதில் நீயா? நானா?என்று போட்டி போட்டுகொண்டிருந்தன.

     தொழில் மீனாட்சி மெமோரியல் ட்ரஷ்ட் இல் கடந்த நான்கு வருடங்களாக அதன் உரிமையாளர் லதாவிற்கு காரியதரிசியாக பணிபுரிந்து வருகிறாள் என்ற செய்தியை படித்த விக்ரம் அவளை பார்த்தான். அப்பொழுது தான் அவளது உடை அவனது கவனத்தை கவர்ந்தது.

          அடர் நீல நிற காட்டன் புடவை கட்டிருந்தாள். இவளிடம் தான் பாலிவுட் கதாநாயகிகள் டியூசன் போக வேண்டும் இத்துனூண்டு கேப் கூட தெரியாமல் எவ்வாறு மம்மிக்கு சுற்றுவது போல் சுற்றுவது என்று.. பாலிவுட்டை பொறுத்த வரை புடவை என்பதும் ஒரு கவர்ச்சி உடை தான். அதுவும் அடாது மழை விடாது பெய்ந்து கொண்டிருக்க முழுவதும் தொப்பலாக நனைந்த  வெள்ளை அல்லது மஞ்சள் நிற புடவை அணிந்து ஹீரோயின்கள்ஆட புடவையின் மகத்துவம் அதில் தான் தெரியும். அப்படிப்பட்ட உடையை இப்படி கூட கட்டலாம் என்று விக்ரமுக்கு இன்று தான் தெரியும்.

            ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவன் அடுத்து இருந்ததை படிக்க ஆரம்பித்தான்.

         கூடுதல் தகவலாக இரண்டு வருடங்கள் எழில் மனநல மருந்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்திருக்கிறாள். என்ற செய்தியை இருவரும் ஒரே நேரத்தில் படித்துவிட்டு ஒருவரையொருவர் அர்த்தம் பொதிந்த பார்வையை பறிமாறிக் கொண்டவர்கள், அடுத்து தாங்கள் செய்ய போகும் செயலை நினைத்து சிரித்துக்கொண்டனர்.

         எழிலின் புறத்தோற்றத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு அவளது குணம் பற்றி தெரியவில்லை.

         அவளை பொறுத்தவரை சரி என்பது மட்டுமே சரி. தவறு எப்பொழுதுமே தவறு தான். சூழ்நிலையை எல்லாம் கைகாட்டிவிட்டு தப்பிக்க முடியாது  அவளிடம்.

           “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்..” என்ற குரலை எழுதிய திருவள்ளுவர் மட்டும் அவள் கையில் கிடைத்திருந்தால் அவரிடமும் கூட சண்டைக்கு சென்றிருப்பாள். “அது எப்படிங்க சார் தப்பு சரியாகும். தப்பு எதுக்கு பண்ணாலும் அது தப்பு தானே சார்.” என்று ..

           அவள் அறியாமல் செய்த தவறையே அவள் மனதால் நியாயப் படுத்திக்கொள்ள முடியாமல் தான் தன்னையே பலவாறு குழப்பி குழப்பி மனநலத்தில் பாதிப்பை எற்படுத்தும் வரை இழுத்து சென்றாள். இதில் எப்படி அவளால் பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்க முடியும்.

         பள்ளி பருவத்தில் இருந்தே எழில் இப்படி தான் இவள் ஏதோ நக்கீரனின் கசின் சிஸ்டர் போல் தான் அவளது செயல்முறைகள் எல்லாம் இருக்கும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே தான் என்று ஆசிரியர் தொடங்கி மாணவர்கள் வரை அனைவரிடமும் பிரச்சினை இழுத்துக்கொண்டு வருவாள்.  

     பள்ளிபருவத்தில் என்ன என்னமோ பட்டப்பெயர்கள் வைப்பார்கள். இவளுக்கு அவள் உடன்படிப்பவர்கள் வைத்த பட்டப்பெயர் “நியாயபுலி”..

     அந்த அளவுக்கு அந்த சிறு வயதிலே நியாயம் தர்மம் என்று கொடி பிடிக்காத அளவுக்கு பேசுபவள். அதற்காக அவள் மிகவும் அடக்க ஒடுக்கமான பெற்றோர் கிழித்த கோட்டை தாண்டாத பிள்ளையா அப்படி என்று  கேட்டால் ஐ ஆம் சோ சாரி.. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவள் தந்தையிடம் பிரம்பால் அடி வாங்கும் ரகம். இந்த முப்பத்து ரெண்டு வயதிலும் கூட.

                 அவளது குறும்பு, விளையாட்டு,சின்ன சின்ன பொய்கள் எல்லாம் அவளது தந்தை சின்னதம்பி மற்றும் அவளது குடும்பத்தினரிடம் மட்டும் தான். மற்ற இடத்தில் எல்லாம் மிகவும் அடக்கி வாசிப்பாள்.

                மொத்ததில் எழில் ஒரு புரியாத புதிர். அப்படி இருப்பவளிடம் இந்த டாமும் விக்ரமும் இனிவரும் நாட்களில் செய்ய போகும் விசயங்களால் எழில் தனது குணத்தை மாற்றி கொள்வளா? இல்லை இவர்கள் இருவரையும் தனது வாழ்க்கையில் இருந்தே தூக்கி ஏறிவாளா?

               விதியை மதியால் வெல்ல விக்ரமும் டாமும் எழிலை கொண்டு விளையாடி பார்க்க நினைக்க.. விதி எழில் என்ற ரூபத்தில் அவர்களை என்ன செய்ய காத்திருக்கிறதோ?

       எழிலை ஏகபோக கடுப்பாக்கும் அந்த செயலை செய்து முடித்தனர் டாமும் விக்ரமும்.

            அவ்வளவு நேரமும்  தங்களது அலைப்பேசியிலே புதைந்து விடுபவர்கள் போல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒரே நேரத்தில் அலைப்பேசியை  அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு அமைதியாக காரின் ஜன்னல் வழி தெரிந்த சிங்கார சென்னையை பார்வையிட  ஆரம்பித்தனர்.

            அவர்கள் அலைப்பேசியை வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்த  சில நொடிகளில், எழிலின் அலைப்பேசி முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாவில் அறிவிப்புகள் வந்திருப்பதற்கான ஒலி எழுப்ப, இவர்கள் முன்பு அலைபேசியை எடுக்கலாமா? கூடாதா? என்ற தயக்கத்துடன் டாமையும் விக்ரமையும் மாற்றிமாற்றி பார்க்க, அவர்களோ அங்கு கண்சிமிட்டினால் கூட இந்த சிங்கார சென்னையை சுனாமி வந்து சுருட்டி சென்று விடும் போல் அழுத்தமாக பார்த்தவாறு அமர்ந்திருதார்கள்.

               கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் எப்படி வேண்டுமனாலும் இருந்துக் கொள்ளலாம். ஆனால் வாங்கும் இடத்தில் இருப்பவர்கள் அடங்கி தான் இருக்க வேண்டும். தங்களது அலைப்பேசியை பார்ப்பதற்கு கூட “இதனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை தானே” என்று கேட்டுக் கொண்டு தான் செய்யவேண்டும்.  

இது தான் இங்கு அவர்களுக்கு சொல்லி தரப்படும் முதல் பாலப்பாடம். எனவே தான் எழில் டாமையும், விக்ரமையும் பார்த்தாள். அவர்கள் கண்டுக்கொள்வது போல் தெரியவில்லை. அதனால் தனது அலைப்பேசியை எடுத்து முகப்புத்தகத்தில் வந்த அறிவிப்பை அழுத்தி பார்த்தவள்,

          தோர் தி சன் ஆப் ஓடின் தனது சுத்தியலை பயன்படுத்தி மொத்த மின்னல் சக்தியையும் ஒன்றாய் திரட்டி இவள் கைகளில் செலுத்தியதை போல் பதறி தனது கையில் வைத்திருந்த தனது அலைப்பேசியை ஐயோ என்ற அலறலுடன் கீழே விட்டாள்.

             அந்த அலறலில் வண்டி சடன் பிரேக்கிட்டு நிற்க, டாமும் விக்ரமும் நமட்டு சிரிப்பை வாய்க்குள் மறைத்தவர்கள் ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துகொண்டனர்.

       “ஏன்ன ஆச்சு ஜெர்ரி?” என்று போலியான பதட்டத்துடன் விக்ரம் வினவ, டாமின் இடதுகை அவளது தலையை தடவி விட்டுக் கொண்டிருக்க அவனது வலதுகை தனக்கு முன்பிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்துக் கொண்டிருந்தது.

                   டாமின் தலை வருடலில் சுயநினைவிற்கு வந்தவளுக்கு அவர்கள் இருவரும் செய்து வைத்திருக்கும் செயல் கண்முன்னே வர கோவம் கோவமாக வந்தது.

                   எழிலுக்கு எவ்வளவு முயன்றும் எரிச்சலை அடக்க முடியாமல் போக தனது தலையை தடவிக்கொண்டிருந்த டாமின் கையை சட்டென்று தட்டிவிட்டு விட, அவளிடம் விசாரித்துக்கொண்டிருந்த விக்ரமும் என்னவோ எதோ என்று வண்டியை நிற்பாட்டி விட்டு தனது இருக்கையில் இருந்து தலையை திருப்பி பார்த்துக்கொண்டிருந்த ஒட்டுநரும் அதிர்ந்து விட்டனர்.

                     தி கிரேட் டாம் ஜகாப்ஸின் கையை ஒருத்தர் அதிலும் சாதாரண நிலையில் இருக்கும் ஒரு பெண் அலட்சியமாக தட்டிவிடுவதா… அவனை உதாசீனம் படுத்துபவர்களுக்கு அவனது தண்டனை எப்படி பட்டதாக இருக்கும் என்று நன்கு அறிந்த இருவருக்கும் பக்கென்று இருந்தது எழில்மதியை நினைத்து..  

                       அடுத்து என்ன செய்ய போகிறானோ என்பதைப் போல் இருவரும் டாமை நோக்கி பய பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். எழிலுக்கு இன்னும் புரியவே இல்லை. எப்படி பட்டவனை தான் உதாசீனம் செய்திருக்கிறோம் என்று..

    அவள் கீழே குனிந்து தனது அலைப்பேசியை எடுத்து நிமிர, டாம் அவளது தலையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் அவள் என்னவேன்று உணரும் முன்பே தனது நெஞ்சோடு அவளது முகத்தை அணைத்திருந்தான்.

                “இந்த தவறை எப்பொழுதும்… ஏன் உன் கனவில் கூட செய்யாதே மட்டி..விளைவுகள் ரொம்ப மோசமானதாக இருக்கும்.”  என்று பல்லை கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாக கூறியவன், உடனே அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ளிவிட்டான்.

     அவனது விசை அதிகமான தள்ளலில் எழில் வேகமாக பின்சென்று சீட்டில் முட்டிக்கொள்ளும் முன் அவளை தனது நெஞ்சில் தாங்கினான் விக்ரம் மேத்தா…

          இந்த தடி தாண்டவராயன்களை பார்த்து எற்கனவே சொல்ல தெரியாத, புரியாத பயத்தில் இருந்த எழிலுக்கு இப்பொழுது டாம் நடந்து கொண்ட முறை அவளது பயத்தை அதிகரித்தது. அந்த பயத்தை கண்ணில் தேக்கியவாறே விக்ரமின் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து பார்க்க அவனும் அவளது தலையை தனது நெஞ்சோடு அணைத்து “ஓன்னுமில்ல ஜெர்ரி…” என்று கூறி விடுவித்தான்.

           எழிலுக்கு ‘யாருடா நீங்க? எங்கேயிருந்து டா வந்திங்க? அந்த நாய் எதோ கோவமா நெஞ்சோட அணைச்சுக்குறான்… இந்த நாய் என்னனா ஆறுதல் படுத்துறேன்னு நெஞ்சோட அணைச்சுக்கிறான்… டேய் இந்த சின்னதம்பி பெத்த மகளே எதுவும் கரடி பொம்மைனு நினைச்சுகிட்டானுகளா. இவனுங்க பொண்டாட்டி மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு என்னை கட்டி பிடிக்குறானுங்க.. அது மட்டுமில்லாது fb, insta எல்லாம் இப்ப எடுத்த போட்டோ எல்லாத்தையும் என்னை tag பண்ணி போட்டு இருக்கானுங்க.. என்ன நினைச்சுட்டு இருக்கானுங்க இவனுங்க என்னை பத்தி…’ என்று ஒரு நொடியில் ஒராயிரம் விசயத்தை மனதில் நினைத்தவள் சண்டை போடுவதற்கு வாய் திறப்பதற்கும்

 எழிலின் அலைபேசி அவளை தொல்லை செய்வதற்கும் சரியாக இருந்தது.

              “எலி அம்மா.. தாத்தா கூப்பிடு.. எலி அம்மா.. தாத்தா கூப்பிடு…” என்று மழலையின் குரல் மிழற்ற, ஸ்கீரினில் ஒரு பெரிய மனிதர் கம்போடு கோப முகமாக நிற்க எழில் கண்ணெல்லாம் குறும்பை தேக்கி, நாக்கை வெளியே நீட்டி அவரை வம்பிழுப்பது போல் அந்த புகைப்படம் இருந்தது. அதில் சின்னு அப்பா காலிங்… என்று பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

       அந்த குழந்தையின் அழைப்பில் தங்களை போன்று அதுவும் எழிலை எலி என்று அழைப்பதில் விக்ரம் வாய்விட்டு சிரித்துவிட, கோவமாய் இருந்த டாமுக்கு கூட சிரிப்பு வந்துவிட்டது.

               ஆனால் எழிலோ இவர்கள் இருவரது கேலி கிண்டலையோ, அல்லது தமிழ் தெரியாதவர்களுக்கு எப்படி தனது தங்கை மகளின் குரல் புரிந்து சிரிக்கிறார்கள் என்றோ கண்டுக்கொள்ளாமல் தனது கையிலிருந்த அலைப்பேசியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

                 “அலாரம் வைச்சாச்சும் சரியா இரண்டு மணிக்கு ஹோட்டலுக்கு வந்திரு பாப்பா..வந்த இடத்தில் அப்பாவை கோவப் படுத்தி பிரம்பு தூக்க வைச்சுராதே…”  என்ற குரல் காதிற்குள் எதிரொலித்து கொண்டிருந்தது.

 

                        எழில் அலைப்பேசியை வெறித்துக் கொண்டிருக்கும் போதே அந்த அழைப்பு துண்டிக்கப்பட தற்காலிகமாக தப்பித்தோம் என்று அவள் இவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிடுவதற்குள், தனது தந்தையிடமிருந்து புலனம் குறுஞ்செய்தி வந்ததிற்கான அறிவிப்பு வர அதை திறந்தவளின் இதயம் நின்று துடித்தது. காரணம் இந்த இரண்டு கடோத்கஜன்களும் தங்களது அக்கவுண்ட்டில் எழிலை டேக் செய்து போஸ்ட் செய்திருந்த புகைப்படம்..  டாம் எழிலை கட்டி அணைத்திருக்க இவர்கள் இருவரையும் எழிலின் பின்னிருந்து விக்ரம் அணைத்திருக்க என்று இருந்த புகைப்படம்..                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!