ISSAI,IYARKAI & IRUVAR 1.2

PhotoGrid_Plus_1603258679672-eacc0e57

இசை… இயற்கை மற்றும் இருவர்!

 அத்தியாயம் – 1


பூஜை அறை

சற்று நேரத்தில் பின், அனைவரும் பூஜை அறையில் கூடி இருந்தனர்.

பூஜை அறை! பெரிதாக இருந்தது. மூன்று பக்க சுவர் முழுவதும் வெளிறிய பழுப்பு நிறத்திலான டைல்ஸ். அதில் ஆங்காங்கே மாடங்கள் போன்ற அமைப்பு. அதில் சிறு சிறு அகல்விளக்குகள். 

ஒரு பக்கச் சுவரை ஒட்டி மூன்று படிக்கட்டுகள். அடர் பழுப்பு நிறதில்லான டைல்ஸ். அதில் முதல் அடுக்கில், அலங்காரம் மற்றும் மாலையுடன் கடவுளின் சிலைகள். அடுத்த அடுக்கில் பூஜைக்குத் தேவையான பொருட்கள்.

மேலிருந்து, இந்த மூன்று பக்கத்திற்கும் வெளிச்சம் தெரியும் வண்ணம், அலங்கார விளக்குகள்.

ஒரு பெரிய குத்துவிளக்கு, எண்ணெய் ஊற்றித் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அகர்பத்தியிலிருந்து வரும் புகை, அங்கிருந்த கடவுளின் சிலைகளையெல்லாம் தழுவி வந்ததில், அந்த அறையின் முழுவதும் ஒரு அற்புத மணம் பரவியது.

“மீனா” என்று கிருஷ்ணாம்மா சொன்னதும், மீனாட்சி விளக்கு ஏற்றினார். பின், கற்பூரம் ஏற்றித் தீபாராதனைக் காட்டினார்.

கிரி மற்றும் கிரியின் மனைவி, இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு, சாப்பிடச் சென்றனர்.

தீபாராதனைத் தட்டில் இருந்த திருநீர் எடுத்து… கௌசி, கலை மற்றும் சங்கரின் நெற்றியில் ஒரு சின்ன கீற்று வைத்துவிட்டார், மீனாட்சி.  பின், மீனாட்சியுடன் சேர்ந்து மூவரும் வெளியே சென்றனர்.

அங்கே நின்று கொண்டிருந்த பாவையை, அவர் மறந்துவிட்டார் போல!

அப்படிச் சொல்லக் கூடாது! அவளைப் பற்றி, அவர் நினைக்கவே மாட்டார் என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்!!

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாவையைப் பார்த்து, “போம்மா, போய் வேண்டிக்கோ” என்று அவளது வேணிம்மா சொன்னதும், ‘ம்ம்’ என்று தலையாட்டிவிட்டுச் சென்றவள்… கடவுளின் முன் மண்டியிட்டு வேண்டினாள்.

பின், தீபாராதனை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்ளும்போதே, வேணிம்மா வந்து திருநீர் வைத்துவிட்டார்.

சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

இருவரும் சேர்ந்து சாப்பிட வந்தனர்.

சாப்பாடு மேசையில்

முதலில் மீனாட்சி, தன் அம்மாவிற்குத் தேவையானதைக் கவனித்தார்.

“நான் பார்த்துகிறேன் மீனா. நீ பிள்ளைங்களை கவனி” என்றதும், மீனாட்சி மற்றவர்களுக்குப் பரிமாறினார்.

இங்கேயும் மற்றவர்கள் என்பது, கிரி… கிரி மனைவி… கலை… கௌசி… சங்கர் மட்டுமே!

மறந்தும் பாவைக்குப் பரிமாற மாட்டார்!!

மீனாட்சி அவர்களுக்குப் பரிமாறி முடித்ததும், பாவை தனக்குத் தேவையானதை எடுக்க ஆரம்பித்தாள்.

சாப்பிடும்போதே…

“கிரி, பாவைக்கு ஒரு வரன் வந்திருக்குடா” என்றார் கிருஷ்ணாம்மா.

“ம்ம்” என்றார் கிரி.

“எதுக்குப் பாட்டி? நான் இருக்கிறேன்-ல! ஏன் வெளியில பார்க்கிறீங்க? ஆறு மாசமா கேட்டுக்கிட்டு இருக்கேன். யாரும் அதைப் பத்தி யோசிக்கிறதே இல்லை” என்று சங்கர் ஆதங்கப்பட்டன்.

சட்டென கோபம் வந்து… அருகிலிருந்த அவனது தோளில் ஒரு அடி அடித்தார், கிருஷ்ணாம்மா.

“ம்மா, இப்படிக் கோபப்பட்டு அடிக்காதீங்க. வளர்ந்த பையன்” என்று மீனாட்சி கண்டனம் தெரிவித்தார்.

“அதான், அவ பிடிக்கலைன்னு சொல்லிட்டாள? அப்புறம் ஏன் இவன் இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்றார் கண்டிப்புடன்!

பாவைக்கு ஒருமாதிரி அசௌகரியமாக இருந்தது. தலையை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“ம்மா, நீங்க சொல்லுங்க” என்றார் கிரி.

“அதான்டா! ஒரு வரன் வந்திருக்கு. பையன் பேரு சிவபாண்டியன். குடும்பம் சென்னையிலதான் இருக்கு. கூடப் பிறந்தது ஒரு தங்கச்சி. அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சாம்.  ஜாதகப் பொருத்தம் பார்க்கக் கொடுத்திருக்கேன்” என்றார்.

“ம்ம்ம்” – அவ்வளவுதான் கிரியின் எதிர்வினை! யாரவன்? என்ன வேலை பார்க்கிறான்? எங்கிருக்கிறான்? என்று எந்தக் கேள்வியும் இல்லை.

இருந்தும் கிருஷ்ணவேணி விவரங்கள் சொல்ல ஆரம்பித்தார்.

“பார்ட்டி… மேரேஜ் லான்(lawn) வச்சி பையனோட அப்பா பிசினஸ் பண்றாரு! பையன் போட்டோகிராபர்”

“போட்டோகிராபரா??” என்ற ஒரு கேள்வி மீனாட்சியிடம் இருந்து!

“சாதாரண போட்டோகிராபர் இல்லை மீனா! நேச்சர் போட்டோகிராபர்” என்று ஆரம்பித்த கிருஷ்ணாம்மா, சிவபாண்டியன் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். பாவையும் கேட்டாள்.

அவர் சொல்லி முடித்ததும்,

கௌசியும்… கலையும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். கிரி மற்றும் அவரது மனைவி ஒருபுறம் பேசிக் கொண்டிருந்தனர். மீனாட்சி சமயலறைக்குச் சென்றுவிட்டார்.

இப்பொழுதும், பாவையின் பார்வை மொத்தமும் கௌசி மீதுதான் இருந்தது.

யாரும் பார்க்காத நேரத்தில், பாவையைப் பார்த்துக் கொண்டே, சங்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஆறு வயதில் இந்த வீட்டிற்குள் வந்தாள். அன்றிலிருந்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள். மற்றவர்களைப் போல் அல்லாமல், பாவையுடன் நன்றாகப் பேசுவான். கவனித்தும் கொள்வான்.

பருவ வயதிற்குப் பிறகு… சங்கரது கவனிப்பு, காதலாக மாறியது.

ஆறு மாதத்திற்கு முன்னால், கௌசிக்கும் கலைக்கும் திருமணம் நடந்ததும், கிருஷ்ணவேணி பாவைக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்.

அது தெரிந்ததும், பாவையைத் தனியே அழைத்து… சங்கர், தன் காதலைச் சொன்னான்.

அவனிடம் எதுவம் சொல்லாமல், வேணிம்மாவிடம் சென்று ‘அவனது காதல்’ பற்றிச் சொல்லிவிட்டாள். மேலும், அதில் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்றும் சொன்னாள்.

அன்று வீட்டில் பெரிய வாக்குவாதம் நடந்தது. கடைசியில், ‘யாருக்கும் ‘உன் விருப்பத்தில்’ விருப்பமில்லை. ஆதலால், இதை மறந்துவிடு’ என்று சங்கரிடம் சொல்லி, அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், சங்கர் தன் காதலை மறக்கவில்லை! காதலிப்பதை நிறுத்தவில்லை! ஒரு தலைக் காதல் தொடர்ந்தது!! 

கண்ணியமான முறையில் ‘ அவளைத் திருமணம் செய்து வையுங்கள்’ என்று வீட்டில் உள்ளோரிடம் இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

சில நேரம் அமைதியாக கடந்து விடுவார்கள். பல நேரம் கோபம் கொண்டு, ‘இப்படி நடந்து கொள்ளாதே’ என்று கண்டிப்புடன் சொல்லுவார்கள்.

பாவை விருப்பமில்லை என்று சொன்ன பின்பும், ‘அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்று சொல்பவனைப் பார்த்து, வேணிம்மாவிற்கு கோபம் வரும். அப்படி வந்தால், சட்டென அடித்துவிடுவார்.

இன்றும் அதேதான் நடந்தது!

பாட்டியிடம் எத்தனை அடி வாங்கினாலும், பாவையின் மீதான காதல் ஆழமானது என்ற ரீதியில், சங்கர் காதலித்துக் கொண்டிருக்கிறான்.

சிறு நிமிடங்கள் கழித்து…

கலையும், கௌசியும் கிளம்பினார்கள். அடுத்து, சங்கர் எழுந்து சென்றான். பின், பாவையும் வேணிம்மாவும் சாப்பிட்டு முடித்து, அறைக்குச் சென்றனர்.

பாவை போவதையே கிரி, கிரியின் மனைவி, மீனாட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு ஏன் பாவையைப் பிடிக்கவில்லை?

முதலில் பாவை இந்த வீட்டுப் பெண் அல்ல! தன் அம்மாவின் தங்கை பேத்தி என்ற எண்ணம் அவர்களது மனதில் அழுத்தமாகப் பதிந்து இருந்தது. அதை அவர்களது பிள்ளைகளின் மனதிலும் பதித்து இருந்தார்கள். சங்கர் தவிர!!

கிருஷ்ணாம்மா மற்றும் அவர் கணவரின் சம்பாத்தியம்தான் இந்த வீடு!

கிருஷ்ணாம்மா இசைப் பின்புலம் ஏதுமில்லாமல், இசையை முறைப்படி கற்றுக் கொண்டு… இந்த நிலைக்கு வந்திருப்பவர். இந்தப் புகழ் அடைந்திருப்பவர்.

சுருக்கமாக, முதல் தலைமுறை இசைக் கலைஞர்!!

ஆனால், அடுத்த தலைமுறையான… மீனாட்சி இசையை முறையாகப் படித்திருந்தாலும், இசைத் துறையில் தன் அம்மாவைப் போல் காலூன்ற முடியவில்லை.

கிருஷ்ணவேணியின் கணவர் மிருதங்க வித்வான். புகழ் பெற்ற கலைஞர் இல்லையென்றாலும், ஓரளவு பெயர் பெற்றிருந்தார்.

தன் வாசிப்பை, மகன் கிரிக்கு முறைப்படி சொல்லிக் கொடுத்தார். எனினும், கிரியால் இசையில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

ஆக மொத்தத்தில், இரண்டாம் தலைமுறை இசைக் கலைஞர்கள் யாரும் கிருஷ்ணாம்மா அடைந்த புகழை அடையவில்லை. அவரின் இசை வாரிசாக யாரும் அறியப்படவில்லை! அதில் அவர்களுக்குப் பெரிய வருத்தம் உண்டு!!

இந்த இசைக் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையாக வந்தவர்கள்… சங்கர், கௌசி, கலை, ரதி!

இதில் சங்கர் மற்றும் கலை… மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொண்டார்கள். ஆனாலும், அதில் தனித்துவமாக ஜொலிக்க முடியவில்லை.

இப்பொழுது, இருவரும் சேர்ந்து இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கவனம் முழுவதுமே, அதை மென்மேலும் வளர்ப்பதுவே!

ரதி, மீனாட்சியின் மகள்! அவளுக்கு இசை மீது ஈடுபாடு இல்லை என்பதால், விடுதியில் தங்கி வேறு துறை சார்ந்த படிப்பில் கவனம் செலுத்துகிறாள்.

கடைசியாக, கௌசி! கௌசல்யா கிரிதரன்! இப்பொழுது கௌசல்யா கலையரசன்!!

இசையின் மீது அவளுக்கு இருக்கும் நாட்டம் அளப்பரியது. அந்த நாட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வண்ணம், அவளது குரல்! அது, அவள் இசை உலக பயணத்திற்கான வரம்!!

அவளின் இசை அறிவு, இனிக்கும் குரல், இசையின் மீதான ஈடுபாடு… அவளை கிருஷ்ணாம்மாவின் இசை வாரிசாக உருவெடுக்க வைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில்தான், கிருஷ்ணாம்மா பாவையை சென்னைக்கு அழைத்து வந்தார்.  அதுமட்டுமின்றி, கௌசல்யாவிற்குக் கற்றுக் கொடுப்பது போல், பாவைக்கும் கர்நாடக இசையைக் கற்றுக் கொடுத்தார்.

கௌசல்யா போன்று… அதே இசை அறிவு… அதே இனிக்கும் குரல்… அதே ஈடுபாடு… பாவைக்கும் உண்டு!!

அன்றைக்கு அவர்களின் உறுத்தலுக்கான காரணம், இதுதான்! இதுமட்டும்தான்!!

இப்படியே சென்றால், கிருஷ்ணாம்மாவின் வாரிசு யார் என்ற கேள்வி வருமோ? இல்லை, இருவருமே கிருஷ்ணம்மாவின் இசை வாரிசாக அறியப்படுவார்களா? பாவை, கௌசல்யாவை விட முன்னேறிச் சென்று விடுவாளோ? – இப்படி நிறைய கேள்விகள், அவர்களுக்குள்!

சுருக்கமாகச் சொன்னால், சுயநலம்! பேரும், புகழும் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற சுயநலம்!!

‘பாவைக்கு யாருமில்லை’ என்று வளர்த்தது சரி! ஆனால், அவளுக்கும் ‘ஏன், இசையைக் கற்றுத் தர வேண்டும்?’ என்ற சிறு கோபம் கூட உண்டு, இவர்களுக்கு!

வேணிம்மா அறை

சாப்பிட்டு முடித்து வந்தவர்கள், சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பின், “பாவை ஒரு பாட்டு பாடு” என்று சொல்லி, வேணிம்மா படுத்துவிட்டார்.

அவர் சொன்னதும், ஒரு ஜமுக்காலத்தை எடுத்து விரித்தாள். வீணையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

வீணையை மீட்ட ஆரம்பித்தாள்.

பின், “மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்” என்று பாட ஆரம்பித்தாள்.

“காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்

கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்…

மாடு மேய்க்கும் கண்ணே – நீ போகவேண்டாம் சொன்னேன்” என்று பாடிய போது,

பாடல் வரிகளிலிருந்த மெய், உயிர்மெய் எழுத்துக்களில் … அவள் அழுத்தம் தந்த விதத்தில்… கேட்போரின் உயிர், மெய் இரண்டும் சிலிர்க்கும்! நிச்சயம் சிலிர்க்கும்!!

“காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்…

போக வேணும் தாயே – தடை சொல்லாதே நீயே…” என்று குழந்தையாக மாறி பாடியதால், குரலில் அத்தனைச் சுட்டித்தனம்! அத்தனைக் குறும்பு! இருந்தும் சுருதி சுத்தம்!

அதுதானே பாவை! அந்தத் திறமைதானே ‘அவர்களுக்கு’ உறுத்துகிறது!

அந்தக் குரல் வளத்தை, கண் மூடி ரசித்துக் கேட்க ஆரம்பித்தார், அவளின் வேணிம்மா.

பாவைக்கும் இசையைப் பயிற்று வைப்பது, தன் குடுத்பத்தினருக்கு உறுத்த ஆரம்பித்ததை, கிருஷ்ணாம்மா கண்டு கொண்டார்.

வெளிப்படையாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாவையின் மீது… கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் கிருஷ்ணாம்மா, அதை வளரவிடவில்லை. ‘இப்படி பேசாதீர்கள்’ என்று கண்டித்தார்.

அதன்பின் யாரும், அதுபோன்ற கடும் சொற்களை பிரயோகிக்கவில்லை.

ஏனென்றால், பாவை என்ற பெண்ணின் மனது,  அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! ஆனால், கிருஷ்ணாம்மா அவர்களின் பொக்கிஷம்! மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்பிற்கும் உரியவர்!!

எனவே அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டனர். அதே சமயத்தில், பாவையிடம் பேசவும் இல்லை.

சுருக்கமாக, ஒதுக்கிவிட்டார்கள்! ஒதுங்கிக் கொண்டார்கள்!!

‘இப்படிப் பேசாதீர்கள்’ என்று சொன்னவரால், ‘இப்படிப் பேசுங்கள்’ என்று சொல்ல மனம் வரவில்லை.

காரணம்? அது, பாவையின் மனதில் இந்தக் குடும்பத்தினரின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். தான் இல்லாமல் போனால், அவர்கள் பழகும் விதம் மாறும். அன்று… அந்த ஏமாற்றத்தை, அவளால் தாங்க முடியுமா?? அப்படி ஒரு நிலை பாவைக்கு வேண்டாம் என்று நினைத்தார்.

ஆகவே, அவர்களின் நிலைப்பாட்டை அப்படியே விட்டுவிட்டார்.

எனினும், அவர் கௌசல்யா மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

எனவே, கௌசல்யா-தேன்பாவை இருவரும் சேர்ந்தே அரங்கேற்றம் செய்யும்படி ஏற்பாடு செய்தார். தனக்குப் பிறகு, இந்தக் குடும்பத்திற்கும் பாவைக்கும் இடையே பாலமாக, கௌசல்யா இருப்பாள் என்று நினைத்தார்.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

ஆகவே, கௌசல்யா, கலை மற்றும் ரதி நிலைப்பாடுகளையும் அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால், இன்றைய நிலையில் இவர் கவலை இதுவல்ல! தன் உடல்நிலை காரணமாக, இப்பொழுதெல்லாம் கௌசல்யா-தேன்பாவை கச்சேரி பற்றிய விடயங்களைப் பார்ப்பது கிரிதான்.

கிரிக்கு… நிறைய சபா உறுப்பினர்கள், நிகழ்ச்சி நடத்துபவர்கள், இசைக்கலைஞர்களுடன் பழக்கம் உண்டு. அதை வைத்துக் கொண்டு, எங்கும் எதிலும் கௌசியை முன்னிறுத்துவது போல் இருக்கிறது.

கிரியம் கௌசியும் சேர்ந்து கொண்டு, பாவைக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்வது தெரிகின்றது. ‘என்ன பாடல் தேர்வு செய்ய வேண்டும்?’ என்பதில் ஆரம்பித்து… கச்சேரி மேடை வரை கௌசி ஆதிக்கம் செலுத்துவது புரிந்தது.

மேலும், கச்சேரியின் வருமானத்தில் பாவையின் பங்கை சரியாகத் தருவதில்லை.

இப்பொழுதெல்லாம், பாவையைக் கௌசல்யாவுடன் சேர்ந்து பாட வைத்தது தவறோ? என்ற எண்ணம் வேணிம்மாவிற்கு வருகிறது.

அது, பாவையின் பாட்டுச் சுதந்திரத்தைக் குறைக்கிறது… அவளின் தனித்துவத்தை மறைகிறது… என்ற உண்மைகள் புரிய ஆரம்பித்ததுதான், அவர் கவலைக்கான காரணம்!

இதற்கு தீர்வு? தெரியவில்லை.

முதலில், ‘உனக்கு, இந்த வீட்டில் உரிமை இல்லை’ என்று உதாசீனப் படுத்துபவர்களை விட்டுவிட்டு, அவள் செல்ல வேண்டும்.

அதற்கு, விரைவில் பாவையின் திருமணம் நடக்க வேண்டும்.

‘எப்படியாவது இந்த வரன் அமைந்திட வேண்டும்’ என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார். திருமணம் முடிந்து, அவளுக்கென்று உரிமையுள்ள இடத்தில், இனிமேலாவது அவள் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டார்.

‘அவளுக்கென்று உரிமையுள்ள இடம்’ என்று நினைக்கும் போதே, அவரது முகத்தில் அப்படியொரு திருப்தி! மகிழ்ச்சி! நிறைவு! நிம்மதி!

அந்த நான்கும்… கூடவே பேத்தியின் குரலும் சேர்ந்து கொண்டதில், கண்கள் மூடினார்.  ‘தேன்குரலாள்… இந்தத் தேன்பாவை’ என்று முணுமுணுத்துக் கொண்டே, உறங்க ஆரம்பித்தார்.


Dears,

நாளைக்கு ஒரு சின்ன பதிவு உண்டு. அது இரண்டாவது அத்தியாயம் அல்ல! கதையின் நாயகி, நாயகன் பற்றிய விவரிப்புகள். 

A small description about lead roles(thenpaavai & sivapaandiyan). So, please don’t miss it!